Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Sakthi Vikadan – Srivilliputhoor Andal Temple: Backgrounder, Details

Posted by Snapjudge மேல் ஜூலை 19, 2007

தலங்கள்… தகவல்கள்

ஆலயம் தரும் அபூர்வ சேதிகள்!

ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் திருக்கோயில்

ஸ்ரீவில்லிப்புத்தூரின் பெருமைகள் வராக புராணம்& ரகஸ்ய காண்டத்தில் ஒன்பது அத்தியாயங்களில் விவரிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீவராக அவதாரம் நிகழ்ந்த தலமாக ஸ்ரீவில்லிப்புத்தூர் கருதப்படுவதால், இதை ‘வராக «க்ஷத்திரம்’ என்பர். இதையட்டி, இங்கு ஸ்ரீவராகர் சந்நிதி திகழ்கிறது.

மதுரையிலிருந்து 74 கி.மீ. தூரத்திலும், விருதுநகரிலிருந்து 45 கி.மீ. தூரத்திலும் அமைந்துள்ளது ஸ்ரீவில்லிப்புத்தூர்.

ஸீ தமிழக அரசின் அதிகாரபூர்வமான சின்னமாகத் திகழ்வது ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் ஆலய ராஜ கோபுரம். இந்தக் கோபுரத்தை தமிழக அரசின் சின்னமாக ஏற்பது என்று அன்றைய சென்னை மாகாண முதல்வர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் தலைமையிலான அமைச்சரவை முடிவு செய்தது. ‘மதச்சார்பற்ற நாட்டில் குறிப்பிட்ட ஒரு மதத்தைச் சார்ந்த கோயில் கோபுரத்தை அரசு சின்னமாக அறிவிக்கக் கூடாது!’ என்று சிலர் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

அப்போதைய பிரதமர் நேருஜி இது குறித்து ஓமந்தூராரி டம் விளக்கம் கேட்டார். ‘இந்தக் கோபுரத்தை சமயச் சின்னமாகப் பார்க்காமல், திராவிடக் கட்டடக் கலையின் எடுத்துக்காட்டாகக் கொள்ள வேண்டும்!’ என்று விளக்கம் அளித்தார் ஓமந்தூரார். இதன் பின் ஸ்ரீவில்லிப்புத்தூர் கோபுரம் அரசின் சின்னமாக ஏற்கப்பட்டது.

வைணவ திவ்ய தேசங்கள் நூற்றியெட்டில் முதலாவது ஸ்ரீரங்கம். இது ஆண்டாளின் புகுந்த வீடு. கடைசித் தலம் ஸ்ரீவில்லிப்புத்தூர். இது அவளது தாய் வீடு. எனவே, ‘108 திவ்ய தேசங்களையும் மாலையாக அணிந்தவள்’ என்ற பெருமை ஆண்டாளுக்கு உண்டு.

பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவரான பெரியாழ்வார், குரோதன ஆண்டு, ஆனி மாதம், வளர்பிறை ஏகாதசியில், சுவாதி நட்சத்திரத்தில் ஞாயிற்றுக் கிழமை அன்று இங்கு அவதரித்தார். நள வருஷம், ஆடி மாதம், வளர்பிறை சதுர்த்தசியில் பூரம் நட்சத்திரத்தில் செவ்வாய்க் கிழமை அன்று இங்கு அவதரித்தவள் கோதை நாச்சியார் எனப்படும் ஆண்டாள். தவிர, வில்லிபாரதம் அருளிய வில்லிப்புத்தூரார், தருமபுரம் ஆதீனத்தை நிறுவிய குரு ஞானசம்பந்தர் ஆகியோரும் அவதரித்த புண்ணியத் திருத்தலம் ஸ்ரீவில்லிப்புத்தூர்.

சுமார் 1,300 ஆண்டுகளுக்கு முன்பு, பெரியாழ்வார் புஷ்ப கைங்கரியம் செய்யும் தனது நந்தவனத்தில் துளசி பாத்திக்கு அருகில், சர்வ லட்சணங்களும் பொருந்திய குழந்தை ஒன்றைக் கண்டெடுத்தார். குழந்தைக்கு கோதை என்று பெயர் சூட்டினார்.

பெருமாள் வழிபாட்டுக்காக தினமும் பெரியாழ்வார் தொடுத்து வைக்கும் மலர் மாலையை முதலில் கோதை சூடி மகிழ்வது வழக்கம். ஒரு முறை அதைக் கண்டு கோபம் கொண்ட ஆழ்வார் மகளைக் கடிந்து கொண்டார். அன்று இரவில் அவர் கனவில் தோன்றிய பெருமாள், ‘ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலையே எமக்கு உகந்தது!’ என்றருளினார். அது முதல் கோதைக்கு, ‘சூடிக் கொடுத்த சுடர்க்கொடி!’ என்று பெயர் உண்டாயிற்று.

திருமண வயதடைந்த ஆண்டாள், ‘அரங்கனைத் தவிர வேறு எவருக்கும் மாலையிட மாட்டேன்!’ என்றாள். பெரியாழ்வார் குழம்பினார். மீண்டும் அவரது கனவில் தோன்றிய பெருமாள், ‘ஆண்டாள் தெய்வப் பிறவி. அவளை ஸ்ரீரங்கத்துக்கு அழைத்து வா!’ என்று அருளி மறைந்தார். அதன்படி ஸ்ரீரங்கம் வந்த கோதை, காவிரிக் கரையை அடைந்ததும் காணாமல் போனாள். பெரியாழ்வார் கலங்கினார். கோதை தனக்குத் திருவடிச் சேவை செய்வதை பெரியாழ்வாருக்குக் காட்டினார் பெருமாள்.

ஆனால், ஸ்ரீவில்லிப்புத்தூர் வந்துதான் கோதையை மணம் முடிக்க வேண்டுமென்று பெரியாழ்வார் வேண்டினார். அதன்படி ஸ்ரீவில்லிப்புத்தூரில் எழுந்தருளி ஒரு பங்குனி உத்திர நன்னாளில் கோதையை திருமணம் செய்து கொண்டார் பெருமாள் என்கிறது தல புராணம். இப்படி கோதை ஆண்டவனை ஆட்கொண்டதால் ஆண்டாள் எனச் சிறப்பிக்கப்பட்டாள்.

இப்போதும் சித்ரா பௌர்ணமி அன்று மதுரை தல்லாகுளத்தில் குதிரை வாகனத்தில் எழுந்தருளும் கள்ளழகர், ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலை மற்றும் பரிவட்டங்களை அணிந்த பிறகே வைகையில் இறங்குகிறார்.

மு. ராகவையங்கார், ஆண்டாளது காலத்தைக் கணிக்க உதவும் அபூர்வமான வானியல் நிகழ்ச்சிகளைச் சுட்டிக் காட்டியுள்ளார்.

வெள்ளி எழுதலும், அதே சமயம் வியாழன் உறங்குதலும் அபூர்வ நிகழ்ச்சி. 8&ஆம் நூற்றாண்டில் இம்மாதிரி நிகழ்ந்தது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். 731 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 18 ஆம் தேதி அதிகாலை 3.50 மணி முதல் 4.00 மணிக்குள் அந்த மார்கழி பௌர்ணமியே திருப்பாவை தோன்றியதாக கூறப்படுகிறது. கி.பி.716 ஆம் ஆண்டு திரு ஆடிப்பூரத்தில் ஆண்டாள் தோன்றியதாக வரலாறு கூறுகிறது. தன் பதினைந்தாம் வயதில் (கி.பி.731) ஆண்டாள் திருப்பாவை இயற்றினாள் என்பர்.

ஆண்டாள் பாடிய நாச்சியார் திருமொழியில் உள்ள வாரணமாயிரம் என்று தொடங்கும் முதல் பாடல் உட்பட 11 பாடல்களையும் கன்னியர் தினமும் பக்தியுடன் பாடினால் விரைவில் திருமணம் நிகழும்.

திருமலை ஐயங்கார் தன் அண்ணா வேங்கடம் ஐயங்காருடன் இணைந்து பெரியாழ்வாருக்குத் தனியே பெரிய சந்நிதி ஒன்றைக் கட்டினார். பெரியாழ்வாரின் திருமேனி சிதிலம் அடைந்தபோது அப்போதைய திருப்பதி ஜீயரது ஆணைப்படி பெரியாழ்வாரின் திருமேனியில் தங்கக் கவசம் சாற்றியவரும் திருமலை ஐயங்கார்தான். இதை இங்குள்ள கல்வெட்டுகள் கூறுகின்றன.

இது இரட்டைக் கோயிலாக அமைந்துள்ளது. வட கிழக்கில் மிகப் பழைமையான வடபத்ரசாயி கோயில். மேற்கில் ஆண்டாள் திருக்கோயில். இரண்டுக்கும் இடைப்பட்ட பகுதியில் இருப்பதே பெரியாழ்வார் உருவாக்கிய நந்தவனம். இங்கு ஆண்டாளுக்குத் தனிச் சந்நிதி ஒன்றும் அதன் முன்புறம் துளசி மாடம் ஒன்றும் உள்ளது. இங்கிருக்கும் மண்ணை எடுத்து நெற்றியில் இட்டுக் கொண்டாலோ, சிறிதளவு எடுத்துச் சென்று வீட்டில் பத்திரப்படுத்தினாலோ திருமணத் தடை நீங்கி செல்வம் சேரும் என்று பக்தர்கள் நம்புகின்றனர். மாடத்தின் அடியில் ஆண்டாளின் சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது.

பெரியாழ்வார் ஸ்ரீஆண்டாளுடன் வாழ்ந்த வீடு ‘வென்று கிழியறுத்தான் வீதி’யில் உள்ளது. கி.பி. 14&ஆம் நூற்றாண்டில் மாவலி பாணாதிராயர் என்பவரால் இந்த வீடு திருக்கோயிலாக மாற்றப்பட்டது (ஆண்டாள் கோயிலின் கருவறை உட்பட அர்த்த மண்டபம், மகா மண்டபம் ஆகியவற்றையும் மாவலி பாணாதிராயர் கட்டி யதாக கல்வெட்டுத் தகவல் கூறுகிறது). இதன் கருவறையில் ஸ்ரீஆண்டாள், ஸ்ரீரங்க மன்னார் மற்றும் கருடாழ்வார் எழுந்தருளி உள்ளனர்.

11 நிலைகளுடன் 11 கலசங்கள் கொண்ட ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ராஜ கோபுரம், 196 அடி உயரமுடையது.

ஆண்டாளின் திருக்கோயில் முழுதும் கருங்கற்களால் ஆனது. கருவறை விமானத்தில் திருப்பாவை பாசுரங்களின் கருத்துகளைப் பிரதிபலிக்கும் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இங்குள்ள கல்யாண மண்டபம், துவஜஸ்தம்ப மண்டபம், ஏகாதசி மண்டபம் ஆகியன சிற்ப வேலைப்பாடு மிகுந்தவை.

ஒரே கல்லாலான பெரிய தூண் துவஜஸ்தம்பம். இதன் இரு பக்கங்களிலும் வேணுகோபாலன், ஸ்ரீராமர், விஸ்வகர்மா, நடன தாரகை, சூர்ப்பணகையைத் தாக்கும் லட்சுமணன், சரஸ்வதி, அகோர வீரபத்திரர், ஜலந்தரர், மோகினி, சக்தி ஆகிய சிற்பங்கள் உள்ளன.

ராஜ கோபுரத்தின் வடபுறம் ஏகாதசி மண்டபம், பரமபத வாயில் ஆகியவை உள்ளன. ஏகாதசி மண்டபத்தில் கர்ணன், அர்ஜுனன், குகன், சாத்தகி, ஊர்த்துவமுக வீரபத்திரன், நீர்த்தமுக வீரபத்திரன், ரதி, மன்மதன் ஆகிய சிற்பங்கள் கலை நயம் மிக்கன.

கோயில் ராஜ கோபுரத்தின் முன்புறம் இருப்பது பந்தல் மண்டபம். உள்ளே இடப் பக்கம் திருக்கல்யாண மண்டபம். இதில் ராமாயண நிகழ்ச்சிகளை விளக்கும் ஓவியங்கள் உள்ளன. அடுத்துள்ள அறை அணி மண்டபத்தில் கொடிமரம், பலிபீடம் காணப்படுகின்றன.

உட் பிராகாரத்தில் தேக்குமர வேலைப்பாடுகளுடன் விளங்குகிறது மாதவிப் பந்தல். அடுத்து மணி மண்டபம். இங்கு கம்பம் ஒன்றில், ஆண்டாள் முகம் பார்த்த வெண்கலத் தட்டு (கண்ணாடி) காணப்படுகிறது. இதை தட்டொளி என்பர்.

மகா மண்டபத்தில் தங்கமுலாம் பூசப்பெற்ற ‘வெள்ளிக் கிழமை குறடு’ என்ற மண்டபம் ஒன்று உள்ளது. இதன் தூண்களில் திருமலை நாயக்கர் மற்றும் அவரின் மனைவியர் இருவரது சிலைகள் உள்ளன.

அர்த்த மண்டபத்தில் தங்கமுலாம் பூசப்பெற்ற மஞ்சத்தில் இடக் கையில் கிளியை ஏந்தி நிற்கும் ஆண்டாளுடன் ரங்க மன்னார் திருக்கல்யாண கோலத்தில் எழுந்தருளியுள்ளார். அருகில் கூப்பிய கரங்களுடன் கருடாழ்வார். கருவறையில் ஆண்டாள்& ரங்க மன்னார், கருடாழ்வார் (பெரிய திருவடி) ஆகியோர் சேவை சாதிக்கிறார்கள். திருவரங்கன், திருமணக் கோலத்தில் ராஜகோபாலனாக செங்கோல் ஏந்தி கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். மூல விக்கிரகங்களுக்கு முன்னால் தங்கத்தாலான கோபால மஞ்சத்தில் உற்சவர்களாக இந்த மூவரும் எழுந்தருளி உள்ளனர்.

ஸ்ரீவில்லிப்புத்தூர் உற்சவர்& ரங்கமன்னார், ராஜ மன்னார் ஆகிய பெயர்களில் அழைக்கப்படுகிறார். விரத நாட்கள் தவிர மற்ற நாட்களில், இவர் மாப்பிள்ளைக் கோலத்தில் காட்சி தருகிறார். அப்போது அந்தக் கால நிஜார் மற்றும் சட்டை அணிவார். அருகில் மணப்பெண் அலங்காரத்தில் ஆண்டாள்.

‘மன்னாருக்கு தொடை அழகு’ என்பர். ஆண்டாளின் மாலையை (தொடை& மாலை) அணிந்து கொண்டு அவர் காட்சி அளிப்பது உலகப் பிரசித்தம்.

ஸ்ரீநாச்சியார் திருக்கோயிலின் முதல் பிரகாரம் பெரியாழ்வாரது நெஞ்சகச் சுவராகக் கருதப்படுகிறது.அதில் 108 திவ்ய தேச மூர்த்திகளது திருவுருவம் வண்ணத்தில் வரையப்பட்டுள்ளது. இதன் தென்கிழக்கு மூலையில் பெரியாழ்வார் வழிபட்ட ‘ஸ்ரீலட்சுமி நாராயணர்’ உள்ளார்.

2&ஆம் பிராகாரத்தில் மகாலட்சுமியும், அனுமனும் அருள் பாலிக்கின்றனர். வைகுண்ட ஏகாதசியன்று இதன் வடக்கு வாசல் வழியே சொர்க்கவாசல் திறக்கப்பட்டு, பெரிய பெருமாள் சந்நிதியின் வடபுறம் சேவை நடைபெறும். இங்குள்ள கலைமகள் சிற்பத்தில் நாசியும், கால் பெருவிரல் நுனியும் ஒரே நேர்க்கோட்டில் அமைந்திருப்பது சிற்பக் கலையின் சிறப்புக்கு உதாரணம்.

நந்தவனத்துக்கும் வடபெருங் கோயிலுக்கும் இடையில் சக்கரத்தாழ்வார் சந்நிதி உள்ளது.

அந்நிய படையெடுப்பால் ஏற்படும் ஆபத்தைத் தவிர்க்க ஒரு முறை ஆண்டாள் திருவுருவை திருவனந்தபுரத்துக்கு எடுத்துச் சென்றனராம். அதுவரை அங்கு உக்கிரமாக விளங்கிய சக்கரத்தாழ்வார், ஸ்ரீஆண் டாள் வந்ததும் சாந்தம் அடைந்தாராம். பிறகு ஸ்ரீஆண்டாள் ஸ்ரீவில்லிப்புத்தூர் திரும்பியபோது சக்கரத்தாழ்வாரும் உடன் வந்ததாகக் கூறுவர். ஸ்ரீசக்கரத்தாழ்வார் மூன்று கண்கள் மற்றும் 16 கைகளுடன் திகழ்கிறார். இவரின் பின்புறம் யோகநரசிம்மர் விளங்குகிறார். ஸ்ரீசக்கரத்தாழ்வார் கிரக தோஷங்களைப் போக்குபவர்.

வடபத்ரசயனர் கோயிலின் தரைத் தளத்தில் ஸ்ரீலட்சுமி நரசிம்மர் அருள் பாலிக்கிறார். ஒரு காலத்தில் செண்பக வனத்தின் அடையாளமாக இங்கு விளங்கிய புற்றுக்கோயில், புனர் அமைப்பின்போது நீக்கப்பட்டு விட்டது. முதல் தளத்தின் கருவறையில் பள்ளி கொண்ட பெருமாள் அருள் பாலிக்கிறார். அவருடன் ஸ்ரீதேவி& பூதேவி, நாபிக்கமல பிரம்மா மற்றும் திருமாலின் திருப்பாதத்தின் அருகே வடபெருங்கோயிலை எழுப்பிய வில்லியும் கண்டனும் இடம்பெற்றுள்ளனர்.

கொடிமரத்துக்கும் ராஜ கோபுரத்துக்கும் இடையில் பெரியாழ்வார் மற்றும் ராமானுஜரின் சந்நிதிகள் உள்ளன.

தண்ணீர் பஞ்ச காலத்திலும்கூட இந்தத் திருக்கோயிலின் முன்புறமுள்ள நூபுர கங்கையில் நீர் வற்றுவது இல்லை. இந்த நீர் எங்கிருந்து வருகிறது என்பதை அறியவும் முடியவில்லை.

கருவறையில் விமலாக்ருதி விமானத்தின் கீழ் அரவணைப் பள்ளியில் ஸ்ரீதேவி& பூதேவி சமேதராக உள்ள வடபத்ர சாயியை மூன்று வாசல்களின் வழியாக தரிசிக்கலாம். தலைமாட்டில் பிருகு முனிவரும், கால்மாட்டில் மார்க் கண்டேயரும் வணங்கி நிற்கின்றனர். மேலும் பஞ்ச மூர்த்திகள், தும்புரு, நாரதர், சனத்குமாரர், கின்னரர், சூரியன், சந்திரன், மது& கைடபர் ஆகியோரும் காணப்படுகின்றனர்.

சம்ஸ்கிருதத்தில் வடபத்ரம் எனப்படும் ஆலிலையில் பள்ளி கொண்ட பரமன் ஆதலால், இவர் ‘வடபத்ர சயனர்’ எனப்படுகிறார்.

கள்ளழகருக்கு நூறு குடம் வெண்ணெயும், அக்கார வடிசலும் சமர்ப்பிப்பதாக தனது விருப்பத்தை ஆண்டாள் பாடினாள். அதை ஸ்ரீராமானுஜர் நிறைவேற்றினார். பின்னர் ஸ்ரீராமானுஜர் ஸ்ரீவில்லிப்புத்தூர் வந்தபோது ‘என் அண்ணன் அல்லவோ!’ என்று அசரீரி ஒலியுடன் ஆண்டாள் விக்கிரகம் முன்னோக்கி நகர்ந்து ஸ்ரீராமானுஜரை வரவேற்றது.

தினமும் விடியற் காலையில் பிராட்டியின் சந்நிதியில் காராம்பசு ஒன்று வந்து நிற்கும். தேவியின் திருப்பார்வை காரம்பசுவின் பின்புறம் விழும். தேவி தினமும் கண் விழிப்பது இப்படித்தான்.

ஆண்டாள் சூடிய மாலைக்குத் தனி மகத்து வமே இருக்கிறது. வேங்கடாசலபதியே இந்த மாலையை ஆசையுடன் அணிகிறாரே! வேங்கடேசன் மீது அளவற்ற பக்தி கொண்ட ஆண்டாள், அவரைத் துதித்து நாச்சியார் திருமொழியில் பாடினாள். இதனால் மகிழ்ந்த வேங்கடேசன், ஆண்டாள் அணிந்த மாலையை அன்புடன் ஏற்றுக் கொள்கிறார் என்கிறது புராணம். திருப்பாவையில் முதல் பத்தில் ‘அவன் திருநாமத்தைச் சொல்லு’ என்றும், இரண்டாவது பத்தில், ‘உயரியதான அவன் திருவடியை அர்ச்சனை செய்’ என்றும், கடைசி பத்து பாட்டுக்களில் ‘அவன் திருவடியில் உன்னை அர்ப்பணி’ என்றும் வலியுறுத்துகிறாள் ஆண்டாள்.

ஆண்டாளின் திருமணத்துக்கு பெருமாளை விரைவாகச் சுமந்து வந்தவர் கருடன். அதனால் அவர் இங்கு மாப்பிள்ளைத் தோழனாக பெருமாளின் அருகிலேயே இருக்கிறார்.

ஆண்டாளுக்குச் சாத்தப்படும் மாலை, மறு நாள் காலையில் வடபெருங்கோயில் உடையவருக்கு சாத்தப்படுகிறது.

இங்கு ஆண்டாள் உலா வரும்போது, ‘நாலாயிர திவ்யப் பிரபந்தம்’ பாடப்படுகிறது. செங்கோல் ஏந்தி அரசாளும் மதுரை ஸ்ரீமீனாட்சிக்கு வலத் தோளில் கிளி. அன்பால் இறையாட்சி புரியும் ஸ்ரீஆண்டாளுக்கு& இடத் தோளில் கிளி. இதைப் பிரசாதமாகப் பெறுவோர் பெரும் பாக்கியசாலிகள். இந்தக் கிளி தினமும் புதிதாகச் செய்யப்படுகிறது. கிளி மூக்கு& மாதுளம் பூ; மரவல்லி இலை& கிளியின் உடல்; இறக்கைகள்& நந்தியாவட்டை இலையும் பனை ஓலையும்; கிளியின் வால் பகுதிக்கு வெள்ளை அரளி மற்றும் செவ்வரளி மொட்டுகள்; கட்டுவதற்கு வாழை நார்; கிளியின் கண்களுக்கு காக்காய்ப் பொன். இப்படித் தயாராகிறது ஆண்டாள் கிளி. இந்தக் கிளியை உருவாக்க ஐந்து மணி நேரம் தேவைப்படுகிறது.

ஆண்டாளின் கிளிக்குச் சொல்லப்படும் கதை: ஸ்ரீஆண்டாள் சுகப்பிரம்மம் என்ற ரிஷியை கிளி ரூபத்தில் ரங்கநாதரிடம் அனுப்பியதாகவும், தூது சென்று வந்த கிளியிடம், ‘என்ன வரம் வேண்டும்?’ என்று ஆண்டாள் கேட்க, சுகப்பிரம்மம், ‘இதே கிளி ரூபத்தில் உங்கள் கையில் தினமும் இருக்க அருள் புரிய வேண்டும்!’ என்று வேண்டிக் கொண்டார் என்றும், அதனால் ஆண்டாளின் கையில் கிளி இடம் பெற்றிருப்பதாகவும் புராணம் கூறுகிறது.

தான் அணிந்து கொண்ட பூமாலையுடன், கோதை இங்குள்ள கிணற்று நீரில் அழகு பார்த்துக் கொள்வது வழக்கமாம். அதனால் இங்குள்ள கிணறு ‘கண்ணாடிக் கிணறு’ என அழைக்கப்படுகிறது.

ஸ்ரீஆண்டாள் கோயிலின் திருக்குளம், கோயிலில் இருந்து சில தெருக்கள் தாண்டி வாழைக்குளத் தெரு முனையில் அமைந்துள்ளது. இதன் மேற்கு கரையில் எண்ணெய்க் காப்பு நீராடல் உற்சவ மண்டபமும், கிழக்குக் கரையில் தீர்த்தவாசி மண்டபமும் உள்ளன.

காலநேமி எனும் அசுரனை அழித்ததால், மகா விஷ்ணுவின் சக்ராயுதம் களங்கம் அடைந்தது. அதைத் தூய்மையாக்க கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகளும் தங்களது தீர்த்தத்தை சக்ராயுதத்தின் மீது சொரிந்து புனிதமாக்கின. ஆண்டாள் நோன்பு இருந்தபோது உதவிய கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகளும் சங்கமிப்பதால் இது ‘திருமுக்குளம்’ எனப்படுகிறது.

திருவிழாவின்போது ஆண்டாள் தைலம் தயாரிக்கப்பட்டு ஆண்டா ளுக்கு எண்ணெய்க் காப்பு உற்சவம் நடத்தப்படுகிறது.நல்லெண்ணெய், பசும் பால், தாழம்பூ, நெல்லிக்காய், இளநீர் போன்றவற்றுடன் சுமார் 61 மூலிகைகளை உள்ளடக்கிய இந்தத் தைலத்தைக் காய்ச்ச 40 நாட்கள் ஆகின்றன. இரண்டு பேரால் காய்ச்சப்படும் இதன் கொள்ளளவு சுமார் 7 படி. இதை ‘சர்வ ரோக நிவாரணி’ என்பர்.

சித்திரை& நீராழி மண்டப விழா, வைகாசி& வசந்த சேவை, ஆனி& பெரியாழ்வார் உற்சவம், ஆவணி& திருப்பவித்ர விழா, புரட்டாசி& பிரம்ம உற்சவம், ஐப்பசி& தீபாவளி, கார்த்திகை& சொக்கப்பனை, தை& கம்பர் விழா, மாசி& தெப்பத்திருவிழா என்று ஆண்டு முழுவதும் ஸ்ரீஆண்டாளுக்கு விழாக் கோலமே!

சித்திரையில் நெசவாளர் தரும் புடவையை ஆண்டாளுக்குச் சாற்றுவர். அன்று, நெசவாளர்கள் ஆண்டாளை சேவிப்பர். சித்ரா பௌர்ணமி அன்று வாழைக்குளத் தெருவில் உள்ள தீர்த்தவாரி மண்டபத்தில், நெசவாளர்கள் வந்து தொழுவர்.

மார்கழி& எண்ணெய்க் காப்பு உற்சவத்தின் போது ஸ்ரீஆண்டாள், தினமும் காலையில், பல பெருமாள்களின் திருக்கோலத்தில் நீராட்ட மண்டபத்துக்கு எழுந்தருள்வார். அந்த உற்சவத்தின் ஆறு மற்றும் எட்டாம் நாட்களில் நடக்கும் சவுரித் திருமஞ்சனம் விசேஷமானது.

அப்போது ஒரு நாள், மூக்குத்தி சேவை நடைபெறும். ஆண்டாளின் மூக்கருகே, தங்க மூக்குத்தியைக் கொண்டு சென்றதும், அது தானாகவே ஆண்டாளின் மூக்குடன் ஒட்டிக் கொள்கிறது. மார்கழி உற்சவத்தன்று முக்குலத்தோர் வீதி வழியே இரவுப் புறப்பாடு நடக்கும். அன்று, ஆண்டாள் வாழைக்குளத் தெரு மண்டபத்திலிருந்து வந்த வழியே திரும்பிச் செல்வது வழக்கம்.

ஸ்ரீஆண்டாளின் மடியில் ஸ்ரீரங்க மன்னார் படுத்திருக்கும் ‘சயன உற்சவம்’ அருகில் உள்ள ஸ்ரீகிருஷ்ணர் கோயிலிலும், ஸ்ரீகிருஷ்ணரின் சயன உற்சவம் ஆண்டாள் கோயிலிலும் நடைபெறும்.

ஸ்ரீரங்கம் தலத்தில் நடப்பது போலவே இங்கும் ‘அரையர் சேவை’ நடைபெறுகிறது. அப்போது ஆழ்வார் பாசுரங்களைப் பக்தி சிரத்தையுடன், பாவம், லயம், இசை, சந்தத்துடன் பாடுகிறார்கள்.

மார்கழியில் சாற்று மறையின்போது ஆண்டாள் முன்பாக பதிமூன்று தீர்த்தக் காரர்களும், அரையர்களும், திருப்பள்ளி யெழுச்சி பாடக் காத்திருப்பர். மற்றொரு பக்கம் வேதபிரான் பட்டர்கள் நிற்பர். அப்போது அரையர்கள், தொண்டரடிப் பொடியாழ்வாரது பத்துப் பாசுரங்களைப் பாடித் திருப்பள்ளி எழுச்சி செய்கின்றனர். தொடர்ந்து பெரியாழ்வாருக்கும், சுவாமிக்கும் திருமஞ்சன சேவை நடைபெறுகிறது. பூசணிக்காய் மசியலும், பாசிப் பருப்புப் பொங்கலும் சுவாமிக்கு நிவேதனம் ஆகிறது.

மந் நாத முனிகள் பரம்பரையில் வந்த அரையருக்கு கோஷ்டி சேவா காலம் முடிந்த பிறகு, தீர்த்தம் வழங்கப் படுவது மரபு. அதன் பின்னரே அடியவர்களுக்குத் தீர்த்தமும், பிரசாதமும் வழங்குவர்.

மார்கழி மாதத்தில் 23&ஆம் நாளன்று வடபத்ரசாயிப் பெருமாள் முன்னால் திருப்பாவைப் பாசுரம் பாடி அரையர் சேவை துவங்குகிறது. ஆண்டாளைப் போலவே பாசுரம் பாடி அதன் பொருளை அபிநயத்தில் நடித்துக் காட்டுவர் அரையர். முதல் நாள் உற்சவத்தைப் பிரியாவிடை உற்சவம் என்பர். அதாவது பாவை நோன்பு நோற்க ஆண்டாள் விடை கேட்கிற மாதிரி அமைந்தது அது.

ஆடி ஐந்தாம் நாள் உற்சவம். அன்று இரவில் ஸ்ரீபெரிய பெருமாள், ஸ்ரீரங்க மன்னார், ஸ்ரீநிவாசர், ஸ்ரீசுந்தர்ராஜன், திருத்தண்கால் அப்பன் ஆகிய ஐந்து பெருமாள்களும் அன்று கருட வாகனத்தில் எழுந்தருள்வர். அப்போது ஆண்டாளும், பெரியாழ்வாரும் அன்ன வாகனத்தில் எழுந்தருள்வர்.

ஸ்ரீஆண்டாளின் அவதார தினமான ஆடிப் பூரம் அன்று தேர்த்திருவிழா நடைபெறுகிறது. தமிழகத்தின் மூன்றாவது பெரிய தேராகக் கருதப்படும் இதில், சுமார் 1000 தேவ&தேவியர், ரிஷிகள், முனிவர்கள் ஆகியோரது உருவங்களுடன் மகாபாரதம், ராமாயணக் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. இந்தத் தேரை வடம் பிடித்து இழுக்க 3,030 ஆட்களாவது வேண்டுமாம். பெரிய தேர், ஆலயக் கோபுரத்தின் உயரத்திலிருந்து முக்கால் பங்கு உயரம் உள்ளது. வானமாமலை ஜீயரால் வழங்கப்பட்ட இந்தத் தேர் நவாம்சம் பொருந்தியது.

தேர்த் திருவிழாவன்று ஸ்ரீஆண்டாளும், ஸ்ரீரங்கமன்னாரும் இந்தத் தேரில் எழுந்தருளி வீதி உலா வருவார்கள். திருத்தேர், நிலையை அடைந்ததும் கோயில் முகப்பில் இருக்கும் சிங்கம்மாள் குறட்டுக்கும் பின்னர் நந்தவனத்தில் உள்ள திருப்பூர மண்டபத்துக்கும் எழுந்தருள்வார்கள். அங்கு அவர்களுக்கு திருமஞ்சனம், திருஆராதனம் ஆகியவை நடைபெறுகின்றன.

ஆடிப்பூர உற்சவத்தின் ஏழாம் நாள் அன்று ஸ்ரீஆண்டாள் ஒரு காலைக் கிடத்தி, மறு காலை மடக்கி அமர்ந்திருப்பாள். அவள் மடியில் தலை சாய்த்துப் படுத்திருக்கும் கோலத்தில் ஸ்ரீரங்கமன்னார் நமக்கு சேவை சாதிப்பார்.

இந்தத் தேரைத் தவிர மேலும் இரண்டு தேர்கள் இங்கு உள்ளன. ஆடிப்பூர உற்சவத்தின் முதல் நாள்& பதினாறு கால்கள் கொண்ட சப்பரத் தேர் வீதி உலா வரும். தஞ்சையிலிருந்து கலைஞர்கள் வரவழைக்கப்பட்டு பனையோலை குருத்துக்களால் வடிவமைக்கப்படும் இந்த தேர், பக்தர்களுக்கு பதினாறு வகையான செல்வங்களையும் வழங்கக் கூடியது என்பது ஐதீகம்.

அடுத்தது& செப்புத்தேர். இதை ‘கோ ரதம்’ என்றும் அழைப்பர். பங்குனி மாதம் ஆண்டாள் திருக்கல்யாணம், ஆனி மாதம் பெரியாழ்வார் உற்சவம், புரட்டாசி மாதம் பெரிய பெருமாள் உற்சவம் ஆகிய நாட்களில் இந்தக் கோரதம் பவனி வருகிறது.

இந்த ஆலயத்தில் நடக்கும் பத்தாம் நாள் திருவிழா அன்று, ‘முத்துக் குறி’ எனப்படும் விசேஷமான நிகழ்ச்சியின்போது ஆண்டாளின் பிறந்த நாள் பலாபலன்களைச் சொல்வர்.

பங்குனி உத்தரத்தன்று ஸ்ரீரங்கமன்னார்& ஸ்ரீஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது. இதன் ஐந்தாம் நாளன்று பஞ்ச கருட சேவை நடைபெறும். ஸ்ரீபெரிய பெருமாள், ஸ்ரீநிவாசன், சுந்தரராஜன், திருத்தண்கால் அப்பன் ஆகியோர் ஆண்டாளை திருமணம் செய்யப் போட்டி இடுவர். இவர்களுடன் ஸ்ரீரங்கநாதரும் போட்டியில் கலந்து கொள்வார். முதலில் வரும் ஸ்ரீரங்கநாதரையே ஆண்டாள் திருமணம் முடிப்பாள். ஆண்டாளை திருமணம் முடிக்க வருபவர்களை பெரியாழ்வார் உபசாரம் செய்வதே பஞ்ச கருட சேவை.

பங்குனி திருக்கல்யாணத் தின்போது, திருப்பதி ஸ்ரீவேங்கடாசலபதி கோயிலிலிருந்து பரிவட்டமும் (பட்டு), ஆடிப்பூரத் தேரோட்டத்துக்கு, மதுரை அழகர் கோயில் கள்ளழகர் திருக்கோயிலிருந்து பட்டுப் புடவையும் அனுப்பி வைக்கப்பட்டு ஆண்டாளுக்கு சாத்துப்படி செய்வது வழக்கம்.

பெரியாழ்வார் இந்த ஆலயத்தின் முதல் தர்மகர்த்தாவாகப் போற்றப் படுகிறார். அவர் தர்மகர்த்தாவாக இருந்த போது, ஸ்ரீஆண்டாளிடம் வரவு& செலவை ஒப்புவிப்பாராம்! இந்த நிகழ்ச்சி, வருடம்தோறும் ஆடி மாதம் 7&வது நாளில் ஆலயத்தின் வடக்குப் பிராகாரத்தில் உள்ள மண்டபத்தில் ‘நெல் அளக்கும்’ வைபவமாக நடைபெறுகிறது.

ஆண்டாளுக்கும் ஸ்ரீரங்கமன்னாருக்கும் திருமஞ்சன நீராட்டின்போது கட்டியம் கூறும் உரிமையை நிரந்தரமாகப் பெற்றுள்ளவர்களை ‘வேத பிரான் பட்டர்’ என்கிறார்கள். பெரியாழ்வாரின் சகோதரர் ஆதிகேசவரின் அபிமான புத்திரரான நாராயணதாசரின் வழிவந்தவர்கள் இவர்கள்.

ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயிலின் விசேஷம் அரவணைப் பிரசாதம். பெருமாளுக்கும், ஆண்டாளுக்கும் இரவில் படைக்கப்படும் இதில் வடை, தேன்குழல் (முறுக்கு) அப்பம், புட்டு, வெண்பொங்கல், சர்க்கரைப் பொங்கல், பால் ஆகிய ஏழு வித பதார்த்தங்கள் இடம்பெறுகின்றன.

வடபத்ரசாயி கோயிலுக்கு அருகில் தெற்கு ரத வீதியில், திருமலை மன்னர் எழுப்பிய அரண்மனை ஒன்று உள்ளது. அதில் இன்று அரசு அலுவலகங்கள் மற்றும் நீதிமன்றங்கள் செயல்படுகின்றன.

ஸ்ரீஆண்டாள் நாச்சியார் குறித்து ஸ்வாமி வேதாந்த தேசிகன் இயற்றிய ‘கோதா ஸ்துதி’யில் 29 பாசுரங்கள் உள்ளன. 30 பாசுரங்களைக் கொண்ட ஆண்டாளின் திருப்பாவைக்கு இணையாக அமையக் கூடாது என்பதற்காக ஸ்வாமி வேதாந்த தேசிகன் இவ்வாறு அமைத்தாராம்.

திருமலை நாயக்கர், ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயிலின் நைவேத்திய நேரத்தைத் தெரிந்து கொள்ள ஸ்ரீவில்லிப்புத்தூரில் இருந்து மதுரை வரை ஒவ்வொரு மைல் தோறும் ஒவ்வொரு மணி மண்டபம் அமைத்திருந்தார். ஒவ்வொரு மண்டபத்திலும் இருக்கும் மணிகள் ஒலித்து நைவேத்திய நேரத்தை திருமலை நாயக்கருக்குத் தெரியப்படுத்தினவாம். அவற்றில் ஒன்று, மதுரை& ஸ்ரீவில்லிப்புத்தூர் சாலையில் சிதிலமடைந்து காணப்படுகிறது.

நாடகக் குழுவை நடத்தி வந்த கன்னையா, கடன் சுமை தாங்காமல் தற்கொலை முடிவுக்கு வந்தார். அவர் ஸ்ரீஆண்டாளை தரிசிக்க ஸ்ரீவில்லிப்புத்தூர் வந்தார். அன்றிரவு கனவில் தோன்றிய ஆண்டாள், தனது கதையை நாடகமாக்குமாறு அருளி மறைந்தாள்.

அப்படியே செய்தார் கன்னையா. அந்த நாட கத்தைக் கண்டு மகிழ்ந்த ஒருவர், நாடகக் குழுவைச் சிங்கப்பூர் அழைத்துச் சென்றார். கன்னையாவுக்குப் பொருளும் புகழும் சேர்ந்தது. இதற்கு நன்றிக் கடனாக யானை, ஒட்டகம் மற்றும் அபிஷேகத்துக்குத் தங்கக் குடம் என்று பல காணிக்கைகளைச் செலுத்தினார் கன்னையா. அவர் அளித்த குடம், ‘கன்னையா குடம்’ என்றே குறிப்பிடப்படுகிறது.

கவிச்சக்ரவர்த்தி கம்பர் ஒரு முறை ‘மார்கழி நீராடல்’ உற்சவத்தைக் காண ஸ்ரீவில்லிப்புத்தூருக்குக் கிளம்பினார். ஆனால், குறித்த நேரத்துக்குள் அவரால் திருமுக்குளத்துக்கு வந்து சேர இயலவில்லை. ‘நீராடல் வைபவத்தை தரிசிக்க முடியாதோ’ என்ற ஆதங்கத்துடன் உற்சவ மண்டபத்துக்கு வந்து சேர்ந்த கம்பருக்கு ஆச்சரியம் காத்திருந்தது. அதுவரை விழா ஆரம்பமாகவில்லை. காரணத்தை கம்பர் கேட்டபோது, ‘‘எண்ணெய்க் காப்பு நீராடல் முடிந்ததும், ஸ்ரீஆண்டாளுக்கு வைர மூக்குத்தி சேவை நடைபெறும். அந்த மூக்குத்தியைக் காணோம்’’ என்று பதில் அளித்தனர் விழாக் குழுவினர்.

உடனே, கம்பர் தன் கையிலிருந்து மூக்குத்தி ஒன்றை எடுத்து அவர்களிடம் காட்டி, ‘‘இதுவா பாருங்கள்?’’ என்றார். எல்லோருக்கும் ஆச்சரியம். ‘ஸ்ரீஆண்டாளின் வைர மூக்குத்தி கம்பரிடம் எப்படி வந்தது?’ எனக் கேட்டனர். கம்பர், ‘‘திருமுக்குளம் கரை ஏறியபோது ஏதோ ஒன்று மின்னியதைக் கண்டு எடுத்து வந்தேன்!’’ என்றார். நீராடல் வைபவத்தைக் கம்பர் காண வேண்டும் என்பதற்காக ஸ்ரீஆண்டாள் நடத்திய திருவிளையாடலே இது என்று அனைவரும் உணர்ந்தனர்.

4 பதில்கள் to “Sakthi Vikadan – Srivilliputhoor Andal Temple: Backgrounder, Details”

  1. A Sundararaman said

    Very Interesting and enlightening article.
    I am from Rajapalayam and I used to visit Srivilliputtur very often during my childhood. Even for some two three months I lived just outside the temple. Felt very nostalgic while reading the article.

    Thanks a lot for giving me the opportunity to read and enlighten myself. May God Bless you

  2. ஸ்ரீ வில்லி புத்தூரைப் பற்றியும் கோதை ஆண்டாளைப் பற்றியும் படித்தேன்
    பெருமையாக சொல்லிக் கொள்ளலாம் நான் ஸ்ரீவில்லிபுத்தூர் என்னுடைய சொந்த ஊர் என்னுடைய அப்பா திரு ரங்கஸ்வாமி ஐயங்கார் அவர்களின் தகப்பனாரும் திரு ராமபத்ராச்சாரியார் என்கிற என்னுடைய பாட்டனாரும்
    ஸ்ரீவில்லி புத்தூர் ஆண்டாள் கோயிலில் பல வருடங்கள் தர்ம கர்த்தாவாக பணி புறிந்தவர் , ஸ்ரீவில்லிபுத்தூரிலேயே முதல் வக்கீல் என்று பெயர் பெற்றவர் என்னுடைய பாட்டனார்

    எங்களுக்கு குல தெய்வமே ஸ்ரீவில்லி புத்தூரின் அருகில் இருக்கும் திருவண்ணாமலை மேல் எழுந்தருளி இருக்கும் ஸ்ரீனிவாசன் தான்
    என்னுடைய இயற் பெயர் ஆர் கிருஷ்ணமாச்சாரி , ஏனென்றால் திரு ரங்கஸ்வாமி அவர்களுக்கும் கமலம்மாள் அவர்களுக்கும் எட்டாவது மகனாகப் பிறந்தவன் அடியேன்

    எனக்கு மிகவும் மனதுக்கு சந்தோஷமாய் இருக்கிறது இந்தக் கட்டுரையைப் படிக்கும்போது
    மேலும் திருவண்ணமலை மலைமேல் குடி கொண்டிருக்கும் ஸ்ரீனிவாசனை தரிசிக்கும்முன்னர் கீழே குளத்தருகே பிரும்மாண்டமாய் அமர்ந்திருக்கும் ஆதிவினாயகரையும் தரிசனம் செய்யுங்கள்,

    அன்புடன்
    தமிழ்த்தேனீ

  3. BASKAR,R said

    I am produe of our GOD sri.Andal in Srivilliputhur.

  4. BASKAR,R said

    THANKYOU FOR THE DETAILS OF OUR GOD ANDAL WITH RANGAMANNAR.
    I AM REALIY PROUD OF THIS DETAILS.
    PLEASE GIVE / SHOW THE TEMPLE PICTURES IN FUTURE.

    BASKI

பின்னூட்டமொன்றை இடுக