Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Posts Tagged ‘CPI’

CPI(M) Election Manifeto released

Posted by Snapjudge மேல் மார்ச் 17, 2009

ஆட்சியில் பங்கு பெறுவோம்: காரத்

தில்லியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிடுகிறார் கட்சியின் பொதுச் செயலர் பிரகாஷ் காரத். உடன் கட்சியின் முன்னணித் தலைவர்கள் (இடமிருந்து) பிருந்தா காரத், சீதாராம் யெச்சூரி, எம்.கே. பாண்டே, முகமது அமின்.

புது தில்லி, மார்ச் 16: மத்தியில் மூன்றாவது அணி அதிக இடங்களைக் கைப்பற்றி ஆட்சியமைத்தால், அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இடம்பெறும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் கூறினார்.

மத்தியில் பாஜக, காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சிக்கு வருவதைத் தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுத்து வருவதாக கூறிய அவர், அதை விவரிக்க மறுத்து விட்டார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கையை தில்லியில் திங்கள்கிழமை வெளியிட்டு அவர் மேலும் கூறியது:

மூன்றாவது அணி ஆட்சியமைத்தால் வழக்கம்போல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிலிருந்து ஆதரவு தருமா? அல்லது அமைச்சரவையில் இடம்பெறுமா? என்று கேட்டதற்கு, அமைச்சரவையில் சேரும் வாய்ப்புகளை புறக்கணிக்க முடியாது என்றார்.

இதற்கு முன்னர் ஏற்பட்ட காங்கிரஸ் அல்லாத மத்திய அமைச்சரவையில் (தேவ கெüட மற்றும் ஐ.கே. குஜ்ரால்) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சி (ஆர்எஸ்பி) இடம்பெறவில்லை. ஆனால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இடம்பெற்றது.

மூன்றாவது அணியில் மேலும் சில கட்சிகள் சேரும் என்று குறிப்பிட்ட காரத், இந்த அணிக்கு யார் வருவார்கள், யார் வரமாட்டார்கள் என்பதை இப்போதே கூற முடியாது. மூன்றாவது அணி தலைமையில் மத்தியில் ஆட்சி அமைந்தால் அமெரிக்காவுடனான ராணுவ ஒப்பந்தம் ரத்து செய்யப்படும். அதேபோல இந்தியா – அமெரிக்கா இடையிலான அணுசக்தி ஒப்பந்தத்தில் நமது நாட்டை பாதிக்கும் விஷயங்கள் மாற்றப்படும்.

ஸ்விட்சர்லாந்து வங்கியில் கோடிக்கணக்கில் பணம் போட்டுள்ள இந்தியர்களின் பட்டியலை வெளிக் கொணர காங்கிரஸ் அரசு முயற்சிக்க வேண்டும். மூன்றாவது அணியில் ஒன்று திரண்டுள்ள கட்சிகள் அனைத்தும் ஒரு பொது நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு இணைந்துள்ளன. தில்லியில் மாயாவதி ஞாயிற்றுக்கிழமை அளித்த விருந்தில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா பங்கேற்கவில்லை என்றாலும், விருந்தில் பேசப்பட்ட விஷயங்கள் மற்றும் எடுக்கப்பட்ட முடிவுகளில் அவருக்கு முழு உடன்பாடு உள்ளது.

மதச்சார்பின்மையைக் காப்பது, கட்டுப்படுத்தப்பட்ட தாராளமயம், சுயசார்புடனான வெளியுறவுக் கொள்கை ஆகியன மூன்றாவது அணி ஏற்றுக் கொண்ட முக்கியமான கொள்கைகளாகும்.

குறைந்தபட்ச செயல்திட்டத்தை அமல்படுத்தும் ஒரு அணியாக மத்தியில் மூன்றாவது அணி ஆட்சியமைக்கும்.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு அளித்தபோதிலும், தொடர்ந்து எதிர்ப்பையும் மீறி பணக்காரர்களுக்கு சாதகமான கொள்கைகளையே மன்மோகன் சிங் செயல்படுத்தினார் என்று கடுமையாக சாடினார்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் பணக்காரர்கள் பெரும் பணக்காரர்களாகிவிட்டனர். குறைந்தபட்ச செயல்திட்டத்திலிருந்து விலகியதே இதற்குக் காரணம். நாட்டில் ஏழை, பணக்காரர்களிடையிலான இடைவெளி அதிகரித்ததற்கு மன்மோகன் சிங் அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகள்தான் காரணமாகும்.

இருப்பினும் கம்யூனிஸ்ட் கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்ததால்தான் தனியார் வங்கிகளின் முதலீட்டு வரம்பை 74 சதவீதமாக உயர்த்தாமல் விட்டனர். அதேபோல காப்பீட்டு நிறுவனங்களில் அன்னிய முதலீடு 49 சதவீதமாக உயர்த்துவது தடுக்கப்பட்டது.

பகுஜன் சமாஜ் கட்சி தனித்தே தேர்தலை சந்திப்பது புதிய விஷயமல்ல. இந்த முடிவை கடந்த செப்டம்பரிலேயே மாயாவதி கூறிவிட்டார். மூன்றாவது அணியில் உள்ள கட்சிகள் தேர்தலுக்குப் பிறகு ஒன்றிணைவது என்று ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது.

தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சியுடன் கம்யூனிஸ்ட் கூட்டு சேருமா? என்ற கேள்விக்கு பதிலளிக்க மறுத்துவிட்டார் காரத்.

சந்தர்ப்ப வசத்தால் பாஜகவுடன் கூட்டு சேர்ந்திருந்த தெலுங்கு தேசம் மற்றும் மதச் சார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் முந்தைய கூட்டணியிலிருந்து பாடம் கற்றுவிட்டன. அவை கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் நிச்சயம் இருக்கும்.

ஜார்க்கண்ட் விகாஸ் மஞ்ச் மற்றும் பிஜு ஜனதா தளம் கட்சிகள் தற்போது மூன்றாவது அணியில் இணைந்துள்ளது மேலும் வலுசேர்த்துள்ளது என்றார் காரத்.

பொது விநியோகத் திட்டம் நாடு முழுவதும் ஒரே சீராக அமல்படுத்தப்படும். பெட்ரோல், டீசல் மீதான வரிகள் குறைக்கப்படும். சில்லரை வணிகத்தில் அன்னிய நிறுவனங்கள் நுழைவது தடுக்கப்படும். காப்பீட்டுத் துறை தனியார் மயமாகாது. ஓய்வூதிய நிதியை பங்குச் சந்தையில் முதலீடு செய்வது தடுக்கப்படும். தேர்தல் ஆணையத்தில் சீர்திருத்தம் கொண்டு வரப்படும். கிரிமினல்கள் தேர்தலில் போட்டியிடுவதைத் தடுக்க சட்டம் கொண்டு வரப்படும். தேர்தலுக்கு தனி நிதியம் ஏற்படுத்தப்பட்டு அரசியல் கட்சிகளுக்கு தனியார் நிறுவனங்கள் நிதி அளிப்பது தடுத்து நிறுத்தப்படும். ஒட்டுமொத்த உற்பத்தியில் 6 சதவீதம் கல்வி வளர்ச்சிக்கு ஒதுக்கப்படும் என்பன உள்ளிட்ட பல முக்கிய அம்சங்கள் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

Posted in Economy, India, Politics | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , | 1 Comment »

Two days all India bank harthal on 24th and 25th Sept: Bank unions strike over wages, consolidation

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 25, 2008

இந்தியாவின் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்

இந்தியாவின் வங்கிகளில் வேலை நிறுத்தம்
இந்திய வங்கிகளில் வேலை நிறுத்தம்

இந்தியாவில் அரசாங்கத்தால் நடத்தப்படும் வங்கிகளைச் சேர்ந்த ஒன்பது லட்சம் ஊழியர்கள் மேற்கொண்டுள்ள இருநாள் வேலை நிறுத்தத்தின் முதல் நாளான இன்று பல பகுதிகளில் வங்கிப் பணிகள் பாதிக்கப்பட்டன.

பொதுத் துறையில் உள்ள வங்கிகளை தனியார்மயப் படுத்துவதை எதிர்த்தும், பொதுத் துறை வங்கிகளை ஒன்றோடு ஒன்று இணைப்பதை எதிர்த்தும் வங்கி ஊழியர்களின் கூட்டமைப்புகள் பல இணைந்து இந்த வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்திருந்தன.

இந்தியாவில் நடக்கும் வங்கிப் பரிவர்தனைகளில் 90சதவீத அளவு பொதுத் துறை வங்கிகளாலேயே கையாளப்படுகிறது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.


Posted in Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , | Leave a Comment »

Pazha Nedumaran: DMK & Tamil Nadu Politics of Alliances – Coalition Government & PMK

Posted by Snapjudge மேல் ஜூன் 25, 2008

மாற்று அணி காலத்தின் கட்டாயம்

பழ. நெடுமாறன்

அண்மையில் தனது கூட்டணியிலிருந்து பா.ம.க.வை தி.மு.க. வெளியேற்றி உள்ளது கொள்கை அடிப்படையிலான முடிவல்ல.

பா.ம.க.வைச் சேர்ந்த ஒருவர் தி.மு.க. தலைமையைத் தரக்குறைவாக விமர்சனம் செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் பா.ம.க.வுடன் உள்ள உறவை தி.மு.க. தன்னிச்சையாகத் துண்டித்துக் கொண்டிருக்கிறது. கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளும் கூடி இம் முடிவு எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

கட்சிகளுக்கு இடையே உள்ள உறவுகளை முறித்துக் கொள்வதற்கு இதுபோன்ற குற்றச்சாட்டுகளே போதுமானவை என்றால் தி.மு.க. தலைவரும் அவரது கட்சியைச் சேர்ந்த பிறரும் பல்வேறு கட்சித் தலைவர்கள் மீது சேற்றை வாரி இறைக்க ஒருபோதும் தயங்கியது இல்லை. தி.மு.க. தலைமையின் இழிசொல்லுக்கும், பழிக்கும் ஆளாகாத கட்சிகளோ, தலைவர்களோ இல்லை. அந்த அடிப்படையில் தி.மு.க. எந்தக்கட்சிகளோடும் கூட்டுச் சேர முடியாது.

மேற்கு வங்கத்திலும், கேரளத்திலும் கொள்கை அடிப்படையிலும், குறைந்தபட்ச செயல்திட்ட அடிப்படையிலும் இடதுசாரிக் கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சி புரிந்து வருகின்றன. கூட்டணியின் முக்கிய கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைப் பிற இடதுசாரிக் கட்சிகள் அவ்வப்போது விமர்சனம் செய்யாமல் இல்லை. மேற்கு வங்கத்தில் நந்திகிராம் பிரச்னையில் கூட்டணியில் உள்ள பிற கட்சிகள் அரசை வன்மையாகக் கண்டித்தன. அதைப்போல கேரளத்திலும் கூட்டணியில் உள்ள கட்சிகள் அரசுக்கு எதிராகப் போராட்டங்கள் நடத்தாமல் இல்லை. இதற்காகப் பிற கட்சிகளுடன் உள்ள உறவை மார்க்சிஸ்ட் கட்சி முறித்துக் கொண்டதில்லை.

1967ஆம் ஆண்டு முதல் இப்போதுவரை தமிழகத்தில் நடைபெற்று இருக்கிற பல்வேறு பொதுத் தேர்தல்களிலும் கொள்கை வழி நின்றோ, குறைந்தபட்சத் திட்ட அடிப்படையிலோ கூட்டணிகள் அமைக்கப்படவில்லை. சந்தர்ப்பவாத அடிப்படையில் பதவிப் பங்கீடு செய்து கொள்வதற்காகக் கூட்டணிகள் உருவாக்கப்பட்டன.

1967ஆம் ஆண்டு ஒருபுறம் சுதந்திரா கட்சியுடனும், மறுபுறம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடனும் கூட்டணி அமைத்தார் அண்ணா. காங்கிரஸ் கட்சியை வீழ்த்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காகக் கூட்டணி அமைக்கப்பட்டதாகக் கூறினார்.

1971ஆம் ஆண்டு அண்ணாவின் அருமைத் தம்பி கருணாநிதி, அண்ணன் வகுத்த காங்கிரஸ் எதிர்ப்புப் பாதையில் இருந்து மாறி காங்கிரசுடனேயே கூட்டணி வைத்துக் கொண்டார். ஜஸ்டிஸ் கட்சிக் காலம் முதல் தி.மு.க. காலம் வரை காங்கிரஸ் எதிர்ப்பிலேயே ஊறி வளர்ந்த ஒரு கட்சி, காங்கிரசுடன் கைகோர்க்கக் கொஞ்சமும் தயங்கவில்லை. காமராஜரை எப்படியும் தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக இந்திரா – கருணாநிதி கூட்டு உருவானது.

ஆனால், இந்த கூடாத நட்பு நெடுநாள் நீடிக்கவில்லை. 1976ஆம் ஆண்டு அவசர நிலைக்காலத்தில் கருணாநிதியின் ஆட்சியை இந்திரா பதவி நீக்கம் செய்தார். தி.மு.க.வுக்கு எதிராகக் கொடிய அடக்குமுறை ஏவிவிடப்பட்டது. கருணாநிதி செய்த ஊழல்களை விசாரிக்க “சர்க்காரியா கமிஷனை’ இந்திரா அமைத்தார்.

1977ஆம் ஆண்டு காங்கிரசை எதிர்க்க ஜனதா கட்சியுடன் கருணாநிதி கரம் கோர்த்தார்.

1978ஆம் ஆண்டு அக்டோபரில் மதுரைக்கு இந்திராகாந்தி வந்தபோது அவருக்கு எதிரான கொலை வெறித்தாக்குதல் நடத்த தி.மு.க. தயங்கவில்லை.

ஆனால், மறு ஆண்டே நிலைமை மாறியது. 1979 இறுதியில் அதே இந்திராவின் தலைமையில் உள்ள காங்கிரசுடன் கருணாநிதி கூட்டுச் சேர்ந்தார். “”நேருவின் மகளே வருக! நிலையான ஆட்சி தருக!” என முழங்கினார். 1984ஆம் ஆண்டில் காங்கிரஸ் கட்சியுடன் அ.தி.மு.க. கூட்டுச் சேர்ந்தது. 1989ஆம் ஆண்டு வி.பி. சிங் தலைமையில் மத்தியில் ஆட்சி அமைய தி.மு.க. ஆதரவு அளித்தது. 1991இல் காங்கிரசுடன் அ.தி.மு.க. கூட்டுச் சேர்ந்தது. 1998இல் பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டுச் சேர்ந்தது. 1999இல் பா.ஜ.க.வுடன் தி.மு.க. கைகோர்த்தது. 2003ஆம் ஆண்டில் மீண்டும் காங்கிரசுடன் தி.மு.க. கூட்டுச் சேர்ந்தது.

மத்தியில் ஆளும் கட்சி எதுவோ அதனுடன் கூட்டுச் சேர இரு கழகங்களும் தமக்குள் போட்டியிட்டன. 1979இல் சரண்சிங் தலைமையில் அமைந்த அமைச்சரவையில் இரு அ.தி.மு.க.வினர் அமைச்சரானார்கள். 1989இல் வி.பி.சிங் தலைமையிலான அமைச்சரவையில் தி.மு.க. அங்கம் வகித்தது. 1998ஆம் ஆண்டு பா.ஜ.க. அமைச்சரவையில் அ.தி.மு.க. அங்கம் வகித்தது. 1999ஆம் ஆண்டு பா.ஜ.க. அமைச்சரவையில் தி.மு.க. அமைச்சர்கள் பங்கேற்றனர். மீண்டும் 2003ஆம் ஆண்டில் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அமைச்சரவையில் தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள் பதவியேற்றனர்.

தில்லியில் ஆளுங்கட்சி எதுவோ அதனுடன் கூட்டுச் சேர்ந்து தமிழகத்தில் தாங்கள் நடத்தும் ஊழல் ஆட்சிக்குப் பாதுகாப்புத் தேடிக்கொள்ளவே இரு கழகங்களும் இவ்வாறு செய்தன. ஆனால் மத்திய ஆட்சிகளில் அங்கம் வகித்தும் காவிரி, முல்லைப்பெரியாறு, பாலாறு போன்ற ஆற்று நீர்ப் பிரச்னைகள் சேதுகால்வாய்த் திட்டம் எதனையும் தீர்க்க இரு கழகங்களாலும் முடியவில்லை.

தமிழ்நாட்டில் தற்போது தி.மு.க. அரசு சிறுபான்மை அரசே ஆகும். பலமான கூட்டணி அமைக்கப்பட்டிருந்தும் தி.மு.க.வுக்கு தனித்த பெரும்பான்மை கிடைக்கவில்லை. கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடுதான் ஆட்சி நடத்துகிறது. ஆனாலும் தனது ஏதேச்சாதிகாரப்போக்கை அது கைவிட மறுக்கிறது.

உள்ளாட்சித் தேர்தல்களில் தோழமைக் கட்சி வேட்பாளர்கள் கூட ஆளும் கட்சியினரின் வன்முறைத் தாக்குதல்களுக்கு இரையானார்கள். தேர்தல் முறைகேடுகள் பகிரங்கமாக நடத்தப்பட்டன. அ.தி.மு.க. ஆட்சியிலும் இவ்வாறே நடத்தப்பட்டன.

இரு கழகங்களின் ஆட்சியிலும் மணல் கொள்ளை வெளிப்படையாகவே தொடர்கிறது. கள்ளச்சாராயம் ஆறாகப் பெருகி ஓடுகிறது.

இரு கழக ஆட்சியிலேயும் காவல்துறை கட்டவிழ்த்து விடப்பட்டது. மோதல் சாவுகள், காவல் நிலையப் படுகொலைகள், தங்கு தடையின்றித் தொடர்ந்தன.

ஜனநாயக உரிமைகள் அப்பட்டமாகப் பறிக்கப்பட்டன. எதிர்க்கருத்துகளை நசுக்கும் முயற்சி தொடர்ந்தது.

இரு கழகங்களின் ஆட்சியிலேயும் சாதி மத மோதல்கள் தடுக்கப்படவில்லை.

எல்லையற்ற ஊழலும், லஞ்சமும், நிர்வாகச் சீர்கேடுகளும் தலைவிரித்து ஆடின. ஆடுகின்றன. அ.தி.மு.க. ஆட்சியில் முதலமைச்சருக்கு மிக நெருக்கமான குடும்பத்தின் தலையீடு நிர்வாகத்தில் இருந்தது.

தி.மு.க. ஆட்சியிலும் முதலமைச்சரின் சொந்தக் குடும்பத்தைச் சேர்ந்த அதிகார மையங்களின் தலையீடு அரசின் சகல மட்டங்களிலும் இருக்கிறது.

சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் மற்றும் பன்னாட்டுத் தொழிற்சாலைகளுக்குத் தேவையான நிலங்கள் விவசாயிகளிடமிருந்து பறிக்கப்படுவது இரு கழக ஆட்சிகளிலும் தொடர்ந்தது.

முக்கியமான பிரச்னைகளில்கூட கூட்டணிக் கட்சிகளை இரு கழகத் தலைமைகளும் ஒருபோதும் கலந்து ஆலோசிப்பது கிடையாது.

அரசின் தவறான நடவடிக்கை குறித்து கூட்டணிக் கட்சிகள் விமர்சிக்கவோ, எதிர்ப்புத் தெரிவிக்கவோ கூடாது. அவ்வாறு எதிர்க்கத் துணிந்த பிற கட்சித் தலைவர்களை முதலமைச்சரும், அக்கட்சியைச் சார்ந்த பலரும் பண்பாடற்ற முறையில் திட்டித் தீர்ப்பார்கள். கூட்டணிக் கட்சிகள் என்றால் கொத்தடிமைக் கட்சிகளாக இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இரு கழகத் தலைமையிடமும் இப்போதும் நீடிக்கிறது.

ஆட்சி அரியாசனத்தில் அமர்வதற்காகத் தங்களுக்குப் பல்லக்குத் தூக்கிகளாகக் கூட்டணிக் கட்சிகள் இருக்க வேண்டும் என இரு கழகத் தலைமைகளும் எதிர்பார்க்கின்றன.

1967ஆம் ஆண்டு முதல் நடைபெற்ற தேர்தல்கள் எல்லாவற்றிலும் கூட்டணிக் கட்சிகளின் உதவியின்றி இரு கழகங்களும் வெற்றி பெற்றதே இல்லை. தனித்துநின்று வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கையும் இரு கழகங்களுக்கும் எப்போதும் இருந்ததில்லை. ஆனால் தங்களின் தயவினால்தான் கூட்டணிக் கட்சிகளுக்குச் சில பதவிகள் கிடைக்கின்றன. தங்களின் கடைக்கண் பார்வை இல்லாமல் போனால் கூட்டணிக் கட்சிகள் இருந்த இடம் தெரியாமல் போய்விடும் என இரு கழகத் தலைமைகளும் இறுமாப்புடன் நினைக்கின்றன.

கடந்த 2006 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.வுக்கு பலமான கூட்டணி இருந்தும்கூட தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. 90 இடங்களே கிடைத்தன.

அ.தி.மு.க.வுக்கு 60 இடங்களுக்கு மேல் கிடைக்கவில்லை. இரு கழகங்களும் தனித்துப் போட்டியிட்டு இருக்குமானால் 10 முதல் 20 இடங்களுக்கு மேல் கிடைத்திருக்காது என்பது திண்ணம்.

கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக தமிழகப் பொதுவாழ்விலும் – சமுதாயப் பண்பாட்டுத் தளங்களிலும் மிகப்பெரிய சீரழிவை இரு கழகங்களும் ஏற்படுத்திவிட்டன.

இவற்றிலிருந்து தமிழகத்தை மீட்கும்பணி இமாலயப் பணியாகும். தாழ்ந்து கிடக்கும் தமிழகத்தைத் தூக்கி நிறுத்த வேண்டிய மகத்தான கடமை இன்று நம்முன் நிற்கிறது. அந்தக் கடமையைச் செய்ய முன்வருமாறு ஜனநாயகக் கட்சிகளை வேண்டிக் கொள்கிறேன்.

காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு போன்ற ஆற்றுநீர்ப் பிரச்னைகளிலும் நிறைவேற்ற முடியாமல் தத்தளிக்கும் சேதுக்கால்வாய் பிரச்னையிலும் தமிழகத்தின் நியாயமான உரிமைகள் நிலைநாட்டப்பட வேண்டுமானால் உறுதியுடன் போராடும் துணிவுகொண்ட மாற்று அணியால்தான் முடியும்.

ஜனநாயக நெறிமுறைகளை நிலைநிறுத்துவதிலும், ஊழலற்ற நிர்வாகத்தை ஏற்படுத்துவதிலும், பாசிச சர்வாதிகாரத்தை எதிர்த்து வீழ்த்துவதிலும் நம்பிக்கை கொண்ட கட்சிகள் தமக்குள் ஒன்றுபட்டு குறைந்தபட்ச திட்ட அடிப்படையில் மாற்று அணி உருவாக்க வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம் ஆகும்.

முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இதற்கான தேவை அதிகரித்துள்ளது. மக்களின் இந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றத் தவறினால் வரலாறு நம்மை ஒருபோதும் மன்னிக்காது.

Posted in DMK, Politics, Tamil, Tamil Nadu | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , | Leave a Comment »

BJP’s V Shanmuganathan: India & Neighbors – Border security & Foreign Relations

Posted by Snapjudge மேல் ஜூன் 20, 2008

எல்லையோர ஆபத்துகள்

வி. சண்முகநாதன்

அண்டை அயல் நாடுகளுடன் நட்புடனும் நல்லுறவுடனும் விளங்கவே இந்தியா முயன்று வருகிறது. இந்திய அரசு எந்த நாட்டுடனும் வலியப்போய் சண்டையைத் துவக்கியது கிடையாது. சமாதானத்தையே எப்போதும் விரும்பி வந்துள்ளோம்.

அண்மைக்காலமாக நமது நாட்டின் எல்லையோரத்தில் ஊடுருவல்கள் அதிகரித்து வருகின்றன. இந்திய எல்லைக் கோட்டுக்குள் சீனா மற்றும் பாகிஸ்தானிய ராணுவத்தினர் அத்துமீறி நுழைந்து துப்பாக்கிப் பிரயோகம் செய்து வருகின்றனர். எந்த நேரத்திலும் எதுவும் நிகழலாம். இன்று நமது எல்லைகள் பாதுகாப்புடன் இல்லை. விழிப்புணர்வுடனும் முழுத் தயாரிப்புடனும் செயல்பட வேண்டிய காலம் இது.

ஆயிரக்கணக்கான கி.மீ. நீளமுள்ள எல்லைக் கோட்டை நாம், பக்கத்து நாடுகளான பாகிஸ்தான், நேபாளம், சீனா, பர்மா, வங்கதேசம் ஆகியவற்றுடன் பகிர்ந்து கொள்கிறோம். பாகிஸ்தான் ராணுவத்தினர், நமது ஜம்மு – காஷ்மீர் மாநில எல்லைக்குள் அன்றாடம் புகுந்து அராஜகம் செய்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.

இந்தியாவுக்கும் நேபாளத்துக்கும் கலாசார சிறப்புடன் கூடிய நட்புறவு நீண்ட காலமாக இருந்து வந்துள்ளது. சமீபத்திய தேர்தலுக்கு முன்பும் பின்பும் மாவோயிஸ்டுகளின் பேச்சும் செயலும் இந்தியாவுக்குச் சாதகமானதாக இல்லை. இந்தியாவையும் இந்திய நலன்களையும் மாவோயிஸ்டுகளின் தலைவராகிய பிரசண்டா தாக்கி வருகிறார்.

இந்திய – சீன எல்லைக்கோடு 4,056 கி.மீ. நீளம் கொண்டது. இரு நாடுகளும் “லைன் ஆப் ஆக்சுவல் கண்ட்ரோல்’ பற்றி இறுதி வடிவம் கொடுக்கப் பல அமர்வுகளாகப் பேச்சு நடத்தி வருகின்றன. “அக்ஷய் சீன்’ என்று அழைக்கப்படும் 38,000 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பை 1962-ஆம் ஆண்டு சீனா கையகப்படுத்திக் கொண்டுவிட்டது. காஷ்மீரின் வடபகுதியை ஆக்கிரமித்த பாகிஸ்தான், அதில் 5,180 சதுர கிலோ மீட்டர் நிலப்பகுதியை சீனாவுக்குத் தாரைவார்த்துக் கொடுத்தது. அக்ஷய் சீன் பகுதியையும் திபெத்தையும் இணைத்து சாலைப் போக்குவரத்து மேற்கொண்டுவிட்டது.

கடந்த ஆண்டு மட்டும் சீன ராணுவத்தினர் அருணாசலப் பிரதேசத்துக்குள் 270 முறை ஊருவியுள்ளனர். எல்லையோரம் வாழும் மக்கள் தங்கள் ஆடு, மாடுகளை எல்லைப்பகுதியில் மேய்ப்பதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது.

அருணாசலப் பிரதேச எல்லையை ஒட்டிய இந்தியப் பகுதிக்குள் ஒரு புத்தர் ஆலயம் இருந்தது. உள்ளூர் மக்கள் புத்தரைத் தரிசித்து வழிபாடு நடத்தி வந்தனர். சமீபத்தில் அந்த புத்தர் சிலையை அகற்றியாக வேண்டும் என்று சீனக் கமாண்டர் கூறினார். “”புத்தர் சிலை இந்திய எல்லைக்குள் உள்ளது. அதை அகற்றும் பேச்சுக்கே இடமில்லை” என்று நமது ராணுவத்தினர் கூறியுள்ளனர். சீனர்கள் இந்திய எல்லைக்குள் புகுந்து புத்தர் சிலையை வெடிவைத்துத் தகர்த்து விட்டனர். பிரதமர் மன்மோகன் சிங்கின் அருணாசலப் பிரதேச வருகையை சீனா எதிர்த்துள்ளது.

சீனர்கள் தங்களது வளர்ந்துவரும் பொருளாதார வலிமையை ராணுவ பலமாக மாற்றி வருகின்றனர். நிலம், கடல், வான்வழி தாக்கும் தளங்களை சீனா அமைத்து வருகிறது.

இந்தியா தம் பக்கத்து நாடுகளால் ஏற்படக்கூடிய ஆபத்துகளைப் புரிந்து கொள்ள வேண்டும். துரிதமாகச் செயல்படக்கூடிய எல்லையோரத் தயாரிப்புகள் இருக்க வேண்டும். அத்துமீறல்களை அடியோடு நிறுத்தும் ஆற்றல் வேண்டும். எல்லையோரத்துப் பதற்றங்களைத் தடுக்கவும், நிறுத்தவும், பதிலடி கொடுக்கவும் இந்திய அரசுக்கு ஒரு ஸ்ட்ராடிஜி தேவை. யுத்த தந்திரங்களும் உபாயங்களும் மிகவும் முக்கியமானவை. பலம் வாய்ந்த ராணுவம், நவீன போர் தளவாடங்கள், கருவிகள் அவற்றை உபயோகப்படுத்தும் பயிற்சிகள் அனைத்தும் தேவை.

இந்தியாவிடம் சுமார் 15 லட்சம் ராணுவ வீரர்கள் உள்ளனர். சுகோய் போர் விமானங்கள் விமானப்படைக்கு வந்துள்ளன. கப்பல் படையில் ஐசந ஜலேஷ்வா என்ற போர்க் கப்பல் சேர்க்கப்பட்டுள்ளது. அதே சமயம் சிக்கிம், அருணாசலப் பிரதேசம், பர்மா எல்லைப் பகுதிகளில் போக்குவரத்துக்கு உகந்த சாலைகள்கூட இல்லை. துரிதமான சாலைகள், ரயில், விமான வசதிகளையும் ஏற்படுத்த வேண்டும்.

நமது ராணுவத்தினருக்கு பல இடர்ப்பாடுகள் உள்ளன. அவர்களது சங்கடங்களைத் தீர்க்க வேண்டும். முப்படையிலும் அதிகாரிகளின் எண்ணிக்கை போதுமானதாக இல்லை. போர் விமானங்களில் பல பழசாகிப் போய்விட்டன. போர்க் கப்பல்களின் எண்ணிக்கையும் குறைவு. எதிர்காலத்தில் ஏற்படும் சவால்களுக்கு உகந்த தயாரிப்பு தேவை. புதிய தளவாடங்கள் வாங்குவதில் வெளிப்படையான திட்டமும் செயல்முறையும் இல்லை. “”தெஹல்கா” மூலம் வெளியான ஊழல்களாலும் தவறான அணுகுமுறைகளாலும் புதிய முயற்சிகளில் தடுமாற்றம் தென்படுகிறது.

பாதுகாப்புத் தளவாடங்களை வாங்குவதிலும் மேலும் பல சிரமங்கள் உள்ளன. நாம் ஒரு “டாங்கு’ வாங்குவதற்கு ஆர்டர் கொடுத்து தயாராகி வருவதற்குள் புதுப்புது யுக்திகளுடன் கூடிய அதி நவீன ரக டாங்குகள் வந்துவிடுகின்றன. விஞ்ஞான, தொழில்நுட்ப வளர்ச்சிகளைக் கவனத்தில் கொண்டு முன்கூட்டியே திட்டமிட்டுச் செயல்பட வேண்டும். பாதுகாப்புத் துறைக்குப் போதுமான நிதி ஒதுக்கீடும் அவசியம். நடப்பு ஆண்டில் 1,05,600 கோடி ரூபாயை இந்திய அரசு பாதுகாப்புத் துறைக்கு ஒதுக்கியுள்ளது.

சீனாவும் பாகிஸ்தானும் அவர்களின் பாதுகாப்புத் துறைக்கு ஒதுக்கியதில் பாதி அளவுதான் இந்தியா ஒதுக்கீடு செய்துள்ளது.

இத்தகைய பல குறைபாடுகளுக்கு நடுவிலும் இந்திய ராணுவத்தினர் அடைந்து வரும் வெற்றிக்கு அவர்களது உறுதிமிக்க கட்டுப்பாடும், வீரம் செறிந்த தியாமும் தான் காரணம் என்பதை உலகம் அறியும்.

கார்கில் போரில் பெற்ற வெற்றி போற்றத்தக்கது. தொலைக்காட்சி மூலம் கார்கில் யுத்தத்தை உலகம் நேரடியாகப் பார்த்தது. பனிமலைச் சிகரங்களின் உச்சியில் இந்திய ராணுவத்தினர் தீரத்துடன் போரிட்டு வென்ற வீச சாகசங்களைப் பாராட்டாதவர்களே இருக்க முடியாது.

மலை உச்சியில் நடந்த சண்டைகளிலேயே “மாண்டே காஸினோ’ யுத்தம்தான் உலகப் பிரசித்தி பெற்றது.

இரண்டாம் உலகப் பெரும் போரின்போது அனைவரையும் வியப்பில் ஆழ்த்திய யுத்தம் மாண்டே காஸினோ.

கார்கில் மலைச் சிகரங்களில் இந்திய ராணுவத்தினர் ஆற்றிய மயிர்க்கூச்செறியும் யுத்தம் மாண்டே காஸினோவையும் வென்றுவிட்டது என்று உலகின் ராணுவ நிபுணர்கள் மதிப்பீடு செய்துள்ளனர்.

எல்லையில் இந்திய வீரன் துப்பாக்கி ஏந்தி இரவு பகலாகக் கண்விழித்து, வெற்றி வேட்கையுடன் போரிடுகிறான். அவனது தியாகத்துக்கு இணையாக இந்திய அரசும் மக்களும் துணை நிற்க வேண்டும். முழுத் தயாரிப்பும் முதலீடும் செய்ய வேண்டும்.

(கட்டுரையாளர்: பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர்).

Posted in India, Law, Order, Politics | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »

Food crisis and blame-game: DMK vs Communist Parties – Protests against price rise

Posted by Snapjudge மேல் ஏப்ரல் 23, 2008

வாங்கும் சக்தி உயர்ந்தால் விலைவாசி உயர்வு தெரியாது

சென்னை, ஏப். 17: சாதாரண மக்களின் வாங்கும் சக்தி அதிகரித்தால் விலை வாசி உயர்வு சுமையாக இருக்காது என்று முதல்வர் கருணாநிதி தெரிவித் தார்.
விலைவாசி உயர்வைக் கண்டித்து கம்யூனிஸ்ட், அதிமுக ஆகிய கட்சிகள் தமிழக சட்டப் பேரவையிலிருந்து வியாழக்கிழமை, வெளிநடப்பு செய்தன.
அதற்கு பதில் அளித்து முதல்வர் கருணாநிதி பேசியதாவது:

விலைவாசி உயரும்போது மக்களின் வாங்கும் சக்தி அதிகமானால் அதன் சுமை தெரியாது. ஒரு காலத்தில் பவுன் விலை ரூ. ஆயிரமாக இருந்தது. இன்று ரூ. 10,000 என்ற அளவிற்கு உயர்ந்துள்ளது.
சாதாரண மக்களை வாங்கும் சக்தி கொண்டவர்களாக மாற்றிவிட்டால் யாரும் வேதனைப்பட மாட்டார்கள். தேர்தலில் பயன்படுத்த மட்டும்தான் விலை உயர்வு என்ற பிரச்னை பயன்படும்.
எனவே வாங்கும் சக்தியை அதிகரிக்கும் பொருளாதாரக் கொள்கையை நாடு பின்பற்ற வேண்டும். அப்படி பின்பற்றினால் விலைவாசி உயர்வினால் பெரும் பாதகம் ஏற்படாது எது முக்கியம்?: மதவாத சக்திகள் ஆட்சியைக் கைப்பற்றக் கூடாது. அது தற்போது காங்கிரஸ் கட்சியால் மட்டுமே முடியும். மதவாத சக்தி வளர்ந்தால் பரவாயில்லை. விலைவாசி உயர்வைத் தடுக்காமல் இருந்த காங்கிரûஸ ஆள விடமாட்டோம் என்று கம்யூனிஸ்ட்டுகள் சொல்ல மாட்டார்கள். மதவாத மற்ற, மனித நேயமிக்க ஓர் ஆட்சி வரவேண்டும் என்பதில் யாருக்கும் இரண்டு கருத்துக்கள் இருக்க முடியாது.
மீண்டும் ஒரு அயோத்தி வர வேண்டாம்: மதவாதத்தில் இருந்து மக்களை மீட்க வேண்டும். மீண்டும் ஒரு அயோத்தி, மீண்டும் ஒரு ராம ரதம், மீண்டும் அத்வானியின் புயல் வேகச் சுற்றுப் பயணம் என்று நாட்டில் ஏற்பட்டால் நாடு காடாகி விடும். அப்படி ஏற்படாமல் நாட்டைப் பாதுகாக்க வேண்டிய பெரும் கடமை நமக்கும் இருக்கிறது.
அந்தக் கருத்துகளின் ஒற்றுமையில் தான் இந்தியா வாழ முடியும். வெல்ல முடியும். அப்படிப்பட்ட ஒற்றுமையை நாம் உருவாக்க வேண்டும்.
வெளிநடப்பு முறையல்ல: மத்திய அரசு தவறு செய்கிறது என்பதற்காக, மாநில அரசைக் கண்டித்து வெளிநடப்பு செய்தது முறையல்ல. வெளிநடப்பு ஜனநாயக முறை என்பதால் அதற்காக நான் வருத்தப்படவில்லை.
ஆளுங்கட்சியான திமுக வெளிநடப்பில் கலந்து கொள்ளக் கூடாது. நாம் அனைவரும் சேர்ந்துதான் ஓர் அணியை உருவாக்கி இருக்கிறோம். மதவாத சக்திகளுக்கு எதிரான இந்த அணியில் பிணி வந்துவிடக் கூடாது.
அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் பிளவு ஏற்படாமல் பார்த்துக் கொள் ளும் பெரும் பணியை நான் மேற்கொண்டேன். அந்த உண்மையை நான் சொல்லி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை. அந்த செய்திகள் பத்தி ரிகைகளில் வந்துள்ளன என்றார் முதல்வர் கருணாநிதி

Posted in Economy, Finance, Govt, India, Politics, Tamil Nadu | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , | 1 Comment »