Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Posts Tagged ‘SAARC’

Sri Lankan government continues offensive despite ceasefire offer; 15th SAARC South Asian summit kicks off in Colombo

Posted by Snapjudge மேல் ஜூலை 28, 2008


சார்க் மாநாடு கொழும்பில் ஆரம்பம்

சார்க் சின்னம்

தெற்காசிய நாடுகளின் பிராந்திய ஒத்துழைப்புக்கான சார்க் அமைப்பின் உச்சமாநாடு அதிகாரிகள் மட்டத்திலான கூட்டத்துடன் ஞாயிறன்று தொடங்கியுள்ளது.

அதிகாரிகளின் கூட்டத்துக்கு பின்னர் வெளியுறவு அமைச்சர்களின் கூட்டம் நடக்கும். அதன் பின்னர் சார்க் நாடுகளின் தலைவர்கள் பங்குபெறும் சந்திப்பு ஆகஸ்ட் மாதம் இரண்டாம் மற்றும் முன்றாம் தேதிகளில் நடைபெறவுள்ளன.

சார்க் நாடுகளுக்கிடையே உணவுப் பாதுகாப்புக் கையிருப்பு, சார்க் நிதியம் ஏற்படுத்துதல் மற்றும் மின்வலு பரிமாற்றம் குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட இருக்கிறது.

மாநாட்டின் நிகழ்ச்சித் திட்டம் குறித்து கொழும்பிலிருந்து எமது செய்தியாளர் கருணாகரன் வழங்கும் செய்திக் குறிப்பினை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.


வட இலங்கையில் மோதல்கள் நீடிக்கின்றன

இலங்கை சிப்பாய்

இலங்கையின் வடக்கே வவுனியா, மன்னார் களமுனைகளில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக இராணுவத்தினர் மேற்கொண்டு வரும் இராணுவ நடவடிக்கைகளில் 13 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் மாங்குளத்தில் இருந்து மன்னார் மாவட்டத்தில் உள்ள வெள்ளாங்குளத்தை நோக்கிச் செல்லும் வீதியை நோக்கி முன்னேறும் இராணுவத்தினர், மல்லாவிக்கு அருகில் தமது படை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.

முல்லைத்தீவு மாவட்டம் துணுக்காய் பிரதேசத்தில் உள்ள கல்விளான் பகுதியைச் சுற்றி வளைக்க முயன்ற இராணுவத்தினரை எதிர்த்து, குட்டிமூலை என்னுமிடத்தில் விடுதலைப் புலிகள் நடத்திய முறியடிப்புத் தாக்குதலில் 25 இராணுவத்தினர் கொல்லப்பட்டிருப்பதாகவும் மேலும் 40 படையினர் காயமடைந்துள்ளதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்திருக்கின்றனர்.

இந்த மோதல்களில் விடுதலைப் புலிகள் தரப்பில் 4 பேர் கொல்லப்பட்டிருப்பதாகவும் விடுதலைப் புலிகள் கூறியிருக்கின்றனர்.

முல்லைத்தீவு மாவட்டம் வவுனிக்குளம் களமுனையில் கொல்லப்பட்டு இராணுவத்தினரால் வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டிருந்த விடுதலைப் புலிகளின் 30 சடலங்களில் 19 சடலங்கள் ஞாயிறன்று சர்வதேச செஞ்சிலுவைக் குழுவினரின் ஊடாக விடுதலைப் புலிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக படைத்தரப்பினர் தகவல் வெளியிட்டிருக்கின்றனர்.

இதனிடையில் மாந்தை மேற்கு, துணுக்காய் பிரதேசங்களில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக இராணுவத்தினர் மேற்கொண்டு வரும் இராணுவ நடவடிக்கைகள் காரணமாக இடம்பெயர்ந்துள்ள பெரும் எண்ணிக்கையிலான பொதுமக்கள் கிளிநொச்சி மாவட்டத்தின் வன்னேரிக்குளம், அக்கராயன் போன்ற பிரதேசங்களை நோக்கி நகர்ந்து பாடசாலைகள், பொது இடங்கள் மற்றும் மரநிழல்களின் கீழ் தஞ்சமடைந்திருப்பதாகவும், இவர்களுக்கான அவசர நிவாரணப் பணிகள் பெரும் சிக்கல்களுக்கு மத்தியிலேயே மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

பாடசாலைகளில் இடம்பெயர்ந்து வந்தவர்கள் தங்கியிருப்பதனால், இப்பிரதேசத்தில் உள்ள பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகள் முழுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கல்வித்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.


மீன் பிடித் தடைகளை அகற்ற திருகோணமலை மீனவர்கள் முதலமைச்சரிடம் வேண்டுகோள்

முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன்

திருகோணமலை மாவட்டத்தில் மீன் பிடிப்பதில் விதிக்கப்பட்டுள்ள தடைகள் அகற்றப்பட வேண்டுமென அம்மாவட்ட மீனவர்கள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனைச் சந்தித்து முறைப்பாடு செய்துள்ளனர்.

மீன்பிடிக்க விதிக்கப்பட்ட நேரக் கட்டுப்பாட்டின் விளைவாக தாங்கள்
பெரும் சிரமங்களை அனுபவித்துவருவதாக இந்தப் பிரதேச மீனவர்கள் கவலை தெரிவித்துவருகின்றனர்.

தங்கள் நாளாந்த வாழ்க்கையினைக்கூட நடத்த முடியாது துன்பம் அடைவதாகவும் இவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

குறிப்பாக தற்போது விதிக்கப்பட்ட மீன்பிடிப்பதற்கான நேரக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுதாங்கள் சுதந்திரமாக மீன் பிடிக்க அனுமதிக்கப்பட வேண்டும் எனவும் இவர்கள் முதலமைச்சரைக் கோரியுள்ளனர்.

சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்துப் பேசி இதற்கான
தீர்வினைக் காண்பதாக முதலமைச்சர் இவர்களுக்கு
உறுதியளித்துள்ளார்.


Posted in Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »

LTTE announces unilateral ceasefire during SAARC summit – PM will raise fishermen issue during his visit to Sri Lanka

Posted by Snapjudge மேல் ஜூலை 22, 2008

விடுதலைப்புலிகள் போர் நிறுத்த அறிவிப்பு

விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன்
விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன்

பதினைந்தாவது சார்க் மாநாடு இலங்கையில் நடப்பதை முன்னிட்டு போர் நிறுத்த ஒப்பந்தத்தை அறிவிப்பதாக தாமாகவே முன்வந்து விடுதலைப்புலிகள் அறிவிப்பு. திங்கட்கிழமை இரவு விடுத்துள்ள அறிக்கையில் விடுதலைப்புலிகள் இதனை தெரிவித்துள்ளனர்.

உலக நாடுகளுடனும், தெற்காசிய பிராந்திய அயல் நாடுகளுடனும் நட்புறவை வளர்த்துக்கொள்ளவே தாம் விரும்புவதாகவும், இதற்கான புறநிலைகளை உருவாக்கி, ஒரு நட்புறவுப் பாலத்தைக் கட்டியெழுப்புவதிலும் இதயசுத்தியோடு இருப்பதாகவும் தமிழீழ மக்களினதும் நல்லெண்ணத்தை வெளிப்படுத்தி, பரஸ்பர நம்பிக்கையை வளர்த்துவிட விரும்புவதாகவும் தெரிவித்துள்ள விடுதலைப்புலிகள், இந்த நல்லெண்ண நடவடிக்கையாக, சார்க் மாநாடு நடைபெறுவதையிட்டு யூலை 26 முதல் ஆகஸ்ட் 04 வரையான காலப்பகுதியை இராணுவ நடவடிக்கைகள் அற்ற அமைதி நாட்களாகக் காத்து, ஒருதலைப்பட்சமாகப் போர்நிறுத்தத்தைக் கடைப்பிடித்து, மாநாடு வெற்றிபெற ஒத்துழைக்கப்போவதாக அறிவித்துள்ளனர்.

சார்க் மாநாடு வெற்றியாக அமைய வாழ்த்துவதோடு, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஸ், ஆப்கானிஸ்தான், சிறிலங்கா, நேபாளம், பூட்டான், மாலைதீவு, ஆகிய நாடுகளுக்கு தமது நல்லாதரவையும் தெரிவித்துக்கொள்வதாகவும் விடுதலைப்புலிகள் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

Posted in Govt, India, Law, Order, Politics | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , | Leave a Comment »

BJP’s V Shanmuganathan: India & Neighbors – Border security & Foreign Relations

Posted by Snapjudge மேல் ஜூன் 20, 2008

எல்லையோர ஆபத்துகள்

வி. சண்முகநாதன்

அண்டை அயல் நாடுகளுடன் நட்புடனும் நல்லுறவுடனும் விளங்கவே இந்தியா முயன்று வருகிறது. இந்திய அரசு எந்த நாட்டுடனும் வலியப்போய் சண்டையைத் துவக்கியது கிடையாது. சமாதானத்தையே எப்போதும் விரும்பி வந்துள்ளோம்.

அண்மைக்காலமாக நமது நாட்டின் எல்லையோரத்தில் ஊடுருவல்கள் அதிகரித்து வருகின்றன. இந்திய எல்லைக் கோட்டுக்குள் சீனா மற்றும் பாகிஸ்தானிய ராணுவத்தினர் அத்துமீறி நுழைந்து துப்பாக்கிப் பிரயோகம் செய்து வருகின்றனர். எந்த நேரத்திலும் எதுவும் நிகழலாம். இன்று நமது எல்லைகள் பாதுகாப்புடன் இல்லை. விழிப்புணர்வுடனும் முழுத் தயாரிப்புடனும் செயல்பட வேண்டிய காலம் இது.

ஆயிரக்கணக்கான கி.மீ. நீளமுள்ள எல்லைக் கோட்டை நாம், பக்கத்து நாடுகளான பாகிஸ்தான், நேபாளம், சீனா, பர்மா, வங்கதேசம் ஆகியவற்றுடன் பகிர்ந்து கொள்கிறோம். பாகிஸ்தான் ராணுவத்தினர், நமது ஜம்மு – காஷ்மீர் மாநில எல்லைக்குள் அன்றாடம் புகுந்து அராஜகம் செய்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.

இந்தியாவுக்கும் நேபாளத்துக்கும் கலாசார சிறப்புடன் கூடிய நட்புறவு நீண்ட காலமாக இருந்து வந்துள்ளது. சமீபத்திய தேர்தலுக்கு முன்பும் பின்பும் மாவோயிஸ்டுகளின் பேச்சும் செயலும் இந்தியாவுக்குச் சாதகமானதாக இல்லை. இந்தியாவையும் இந்திய நலன்களையும் மாவோயிஸ்டுகளின் தலைவராகிய பிரசண்டா தாக்கி வருகிறார்.

இந்திய – சீன எல்லைக்கோடு 4,056 கி.மீ. நீளம் கொண்டது. இரு நாடுகளும் “லைன் ஆப் ஆக்சுவல் கண்ட்ரோல்’ பற்றி இறுதி வடிவம் கொடுக்கப் பல அமர்வுகளாகப் பேச்சு நடத்தி வருகின்றன. “அக்ஷய் சீன்’ என்று அழைக்கப்படும் 38,000 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பை 1962-ஆம் ஆண்டு சீனா கையகப்படுத்திக் கொண்டுவிட்டது. காஷ்மீரின் வடபகுதியை ஆக்கிரமித்த பாகிஸ்தான், அதில் 5,180 சதுர கிலோ மீட்டர் நிலப்பகுதியை சீனாவுக்குத் தாரைவார்த்துக் கொடுத்தது. அக்ஷய் சீன் பகுதியையும் திபெத்தையும் இணைத்து சாலைப் போக்குவரத்து மேற்கொண்டுவிட்டது.

கடந்த ஆண்டு மட்டும் சீன ராணுவத்தினர் அருணாசலப் பிரதேசத்துக்குள் 270 முறை ஊருவியுள்ளனர். எல்லையோரம் வாழும் மக்கள் தங்கள் ஆடு, மாடுகளை எல்லைப்பகுதியில் மேய்ப்பதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது.

அருணாசலப் பிரதேச எல்லையை ஒட்டிய இந்தியப் பகுதிக்குள் ஒரு புத்தர் ஆலயம் இருந்தது. உள்ளூர் மக்கள் புத்தரைத் தரிசித்து வழிபாடு நடத்தி வந்தனர். சமீபத்தில் அந்த புத்தர் சிலையை அகற்றியாக வேண்டும் என்று சீனக் கமாண்டர் கூறினார். “”புத்தர் சிலை இந்திய எல்லைக்குள் உள்ளது. அதை அகற்றும் பேச்சுக்கே இடமில்லை” என்று நமது ராணுவத்தினர் கூறியுள்ளனர். சீனர்கள் இந்திய எல்லைக்குள் புகுந்து புத்தர் சிலையை வெடிவைத்துத் தகர்த்து விட்டனர். பிரதமர் மன்மோகன் சிங்கின் அருணாசலப் பிரதேச வருகையை சீனா எதிர்த்துள்ளது.

சீனர்கள் தங்களது வளர்ந்துவரும் பொருளாதார வலிமையை ராணுவ பலமாக மாற்றி வருகின்றனர். நிலம், கடல், வான்வழி தாக்கும் தளங்களை சீனா அமைத்து வருகிறது.

இந்தியா தம் பக்கத்து நாடுகளால் ஏற்படக்கூடிய ஆபத்துகளைப் புரிந்து கொள்ள வேண்டும். துரிதமாகச் செயல்படக்கூடிய எல்லையோரத் தயாரிப்புகள் இருக்க வேண்டும். அத்துமீறல்களை அடியோடு நிறுத்தும் ஆற்றல் வேண்டும். எல்லையோரத்துப் பதற்றங்களைத் தடுக்கவும், நிறுத்தவும், பதிலடி கொடுக்கவும் இந்திய அரசுக்கு ஒரு ஸ்ட்ராடிஜி தேவை. யுத்த தந்திரங்களும் உபாயங்களும் மிகவும் முக்கியமானவை. பலம் வாய்ந்த ராணுவம், நவீன போர் தளவாடங்கள், கருவிகள் அவற்றை உபயோகப்படுத்தும் பயிற்சிகள் அனைத்தும் தேவை.

இந்தியாவிடம் சுமார் 15 லட்சம் ராணுவ வீரர்கள் உள்ளனர். சுகோய் போர் விமானங்கள் விமானப்படைக்கு வந்துள்ளன. கப்பல் படையில் ஐசந ஜலேஷ்வா என்ற போர்க் கப்பல் சேர்க்கப்பட்டுள்ளது. அதே சமயம் சிக்கிம், அருணாசலப் பிரதேசம், பர்மா எல்லைப் பகுதிகளில் போக்குவரத்துக்கு உகந்த சாலைகள்கூட இல்லை. துரிதமான சாலைகள், ரயில், விமான வசதிகளையும் ஏற்படுத்த வேண்டும்.

நமது ராணுவத்தினருக்கு பல இடர்ப்பாடுகள் உள்ளன. அவர்களது சங்கடங்களைத் தீர்க்க வேண்டும். முப்படையிலும் அதிகாரிகளின் எண்ணிக்கை போதுமானதாக இல்லை. போர் விமானங்களில் பல பழசாகிப் போய்விட்டன. போர்க் கப்பல்களின் எண்ணிக்கையும் குறைவு. எதிர்காலத்தில் ஏற்படும் சவால்களுக்கு உகந்த தயாரிப்பு தேவை. புதிய தளவாடங்கள் வாங்குவதில் வெளிப்படையான திட்டமும் செயல்முறையும் இல்லை. “”தெஹல்கா” மூலம் வெளியான ஊழல்களாலும் தவறான அணுகுமுறைகளாலும் புதிய முயற்சிகளில் தடுமாற்றம் தென்படுகிறது.

பாதுகாப்புத் தளவாடங்களை வாங்குவதிலும் மேலும் பல சிரமங்கள் உள்ளன. நாம் ஒரு “டாங்கு’ வாங்குவதற்கு ஆர்டர் கொடுத்து தயாராகி வருவதற்குள் புதுப்புது யுக்திகளுடன் கூடிய அதி நவீன ரக டாங்குகள் வந்துவிடுகின்றன. விஞ்ஞான, தொழில்நுட்ப வளர்ச்சிகளைக் கவனத்தில் கொண்டு முன்கூட்டியே திட்டமிட்டுச் செயல்பட வேண்டும். பாதுகாப்புத் துறைக்குப் போதுமான நிதி ஒதுக்கீடும் அவசியம். நடப்பு ஆண்டில் 1,05,600 கோடி ரூபாயை இந்திய அரசு பாதுகாப்புத் துறைக்கு ஒதுக்கியுள்ளது.

சீனாவும் பாகிஸ்தானும் அவர்களின் பாதுகாப்புத் துறைக்கு ஒதுக்கியதில் பாதி அளவுதான் இந்தியா ஒதுக்கீடு செய்துள்ளது.

இத்தகைய பல குறைபாடுகளுக்கு நடுவிலும் இந்திய ராணுவத்தினர் அடைந்து வரும் வெற்றிக்கு அவர்களது உறுதிமிக்க கட்டுப்பாடும், வீரம் செறிந்த தியாமும் தான் காரணம் என்பதை உலகம் அறியும்.

கார்கில் போரில் பெற்ற வெற்றி போற்றத்தக்கது. தொலைக்காட்சி மூலம் கார்கில் யுத்தத்தை உலகம் நேரடியாகப் பார்த்தது. பனிமலைச் சிகரங்களின் உச்சியில் இந்திய ராணுவத்தினர் தீரத்துடன் போரிட்டு வென்ற வீச சாகசங்களைப் பாராட்டாதவர்களே இருக்க முடியாது.

மலை உச்சியில் நடந்த சண்டைகளிலேயே “மாண்டே காஸினோ’ யுத்தம்தான் உலகப் பிரசித்தி பெற்றது.

இரண்டாம் உலகப் பெரும் போரின்போது அனைவரையும் வியப்பில் ஆழ்த்திய யுத்தம் மாண்டே காஸினோ.

கார்கில் மலைச் சிகரங்களில் இந்திய ராணுவத்தினர் ஆற்றிய மயிர்க்கூச்செறியும் யுத்தம் மாண்டே காஸினோவையும் வென்றுவிட்டது என்று உலகின் ராணுவ நிபுணர்கள் மதிப்பீடு செய்துள்ளனர்.

எல்லையில் இந்திய வீரன் துப்பாக்கி ஏந்தி இரவு பகலாகக் கண்விழித்து, வெற்றி வேட்கையுடன் போரிடுகிறான். அவனது தியாகத்துக்கு இணையாக இந்திய அரசும் மக்களும் துணை நிற்க வேண்டும். முழுத் தயாரிப்பும் முதலீடும் செய்ய வேண்டும்.

(கட்டுரையாளர்: பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர்).

Posted in India, Law, Order, Politics | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »