Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Posts Tagged ‘Manifesto’

CPI(M) Election Manifeto released

Posted by Snapjudge மேல் மார்ச் 17, 2009

ஆட்சியில் பங்கு பெறுவோம்: காரத்

தில்லியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிடுகிறார் கட்சியின் பொதுச் செயலர் பிரகாஷ் காரத். உடன் கட்சியின் முன்னணித் தலைவர்கள் (இடமிருந்து) பிருந்தா காரத், சீதாராம் யெச்சூரி, எம்.கே. பாண்டே, முகமது அமின்.

புது தில்லி, மார்ச் 16: மத்தியில் மூன்றாவது அணி அதிக இடங்களைக் கைப்பற்றி ஆட்சியமைத்தால், அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இடம்பெறும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் கூறினார்.

மத்தியில் பாஜக, காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சிக்கு வருவதைத் தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுத்து வருவதாக கூறிய அவர், அதை விவரிக்க மறுத்து விட்டார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கையை தில்லியில் திங்கள்கிழமை வெளியிட்டு அவர் மேலும் கூறியது:

மூன்றாவது அணி ஆட்சியமைத்தால் வழக்கம்போல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிலிருந்து ஆதரவு தருமா? அல்லது அமைச்சரவையில் இடம்பெறுமா? என்று கேட்டதற்கு, அமைச்சரவையில் சேரும் வாய்ப்புகளை புறக்கணிக்க முடியாது என்றார்.

இதற்கு முன்னர் ஏற்பட்ட காங்கிரஸ் அல்லாத மத்திய அமைச்சரவையில் (தேவ கெüட மற்றும் ஐ.கே. குஜ்ரால்) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சி (ஆர்எஸ்பி) இடம்பெறவில்லை. ஆனால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இடம்பெற்றது.

மூன்றாவது அணியில் மேலும் சில கட்சிகள் சேரும் என்று குறிப்பிட்ட காரத், இந்த அணிக்கு யார் வருவார்கள், யார் வரமாட்டார்கள் என்பதை இப்போதே கூற முடியாது. மூன்றாவது அணி தலைமையில் மத்தியில் ஆட்சி அமைந்தால் அமெரிக்காவுடனான ராணுவ ஒப்பந்தம் ரத்து செய்யப்படும். அதேபோல இந்தியா – அமெரிக்கா இடையிலான அணுசக்தி ஒப்பந்தத்தில் நமது நாட்டை பாதிக்கும் விஷயங்கள் மாற்றப்படும்.

ஸ்விட்சர்லாந்து வங்கியில் கோடிக்கணக்கில் பணம் போட்டுள்ள இந்தியர்களின் பட்டியலை வெளிக் கொணர காங்கிரஸ் அரசு முயற்சிக்க வேண்டும். மூன்றாவது அணியில் ஒன்று திரண்டுள்ள கட்சிகள் அனைத்தும் ஒரு பொது நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு இணைந்துள்ளன. தில்லியில் மாயாவதி ஞாயிற்றுக்கிழமை அளித்த விருந்தில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா பங்கேற்கவில்லை என்றாலும், விருந்தில் பேசப்பட்ட விஷயங்கள் மற்றும் எடுக்கப்பட்ட முடிவுகளில் அவருக்கு முழு உடன்பாடு உள்ளது.

மதச்சார்பின்மையைக் காப்பது, கட்டுப்படுத்தப்பட்ட தாராளமயம், சுயசார்புடனான வெளியுறவுக் கொள்கை ஆகியன மூன்றாவது அணி ஏற்றுக் கொண்ட முக்கியமான கொள்கைகளாகும்.

குறைந்தபட்ச செயல்திட்டத்தை அமல்படுத்தும் ஒரு அணியாக மத்தியில் மூன்றாவது அணி ஆட்சியமைக்கும்.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு அளித்தபோதிலும், தொடர்ந்து எதிர்ப்பையும் மீறி பணக்காரர்களுக்கு சாதகமான கொள்கைகளையே மன்மோகன் சிங் செயல்படுத்தினார் என்று கடுமையாக சாடினார்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் பணக்காரர்கள் பெரும் பணக்காரர்களாகிவிட்டனர். குறைந்தபட்ச செயல்திட்டத்திலிருந்து விலகியதே இதற்குக் காரணம். நாட்டில் ஏழை, பணக்காரர்களிடையிலான இடைவெளி அதிகரித்ததற்கு மன்மோகன் சிங் அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகள்தான் காரணமாகும்.

இருப்பினும் கம்யூனிஸ்ட் கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்ததால்தான் தனியார் வங்கிகளின் முதலீட்டு வரம்பை 74 சதவீதமாக உயர்த்தாமல் விட்டனர். அதேபோல காப்பீட்டு நிறுவனங்களில் அன்னிய முதலீடு 49 சதவீதமாக உயர்த்துவது தடுக்கப்பட்டது.

பகுஜன் சமாஜ் கட்சி தனித்தே தேர்தலை சந்திப்பது புதிய விஷயமல்ல. இந்த முடிவை கடந்த செப்டம்பரிலேயே மாயாவதி கூறிவிட்டார். மூன்றாவது அணியில் உள்ள கட்சிகள் தேர்தலுக்குப் பிறகு ஒன்றிணைவது என்று ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது.

தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சியுடன் கம்யூனிஸ்ட் கூட்டு சேருமா? என்ற கேள்விக்கு பதிலளிக்க மறுத்துவிட்டார் காரத்.

சந்தர்ப்ப வசத்தால் பாஜகவுடன் கூட்டு சேர்ந்திருந்த தெலுங்கு தேசம் மற்றும் மதச் சார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் முந்தைய கூட்டணியிலிருந்து பாடம் கற்றுவிட்டன. அவை கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் நிச்சயம் இருக்கும்.

ஜார்க்கண்ட் விகாஸ் மஞ்ச் மற்றும் பிஜு ஜனதா தளம் கட்சிகள் தற்போது மூன்றாவது அணியில் இணைந்துள்ளது மேலும் வலுசேர்த்துள்ளது என்றார் காரத்.

பொது விநியோகத் திட்டம் நாடு முழுவதும் ஒரே சீராக அமல்படுத்தப்படும். பெட்ரோல், டீசல் மீதான வரிகள் குறைக்கப்படும். சில்லரை வணிகத்தில் அன்னிய நிறுவனங்கள் நுழைவது தடுக்கப்படும். காப்பீட்டுத் துறை தனியார் மயமாகாது. ஓய்வூதிய நிதியை பங்குச் சந்தையில் முதலீடு செய்வது தடுக்கப்படும். தேர்தல் ஆணையத்தில் சீர்திருத்தம் கொண்டு வரப்படும். கிரிமினல்கள் தேர்தலில் போட்டியிடுவதைத் தடுக்க சட்டம் கொண்டு வரப்படும். தேர்தலுக்கு தனி நிதியம் ஏற்படுத்தப்பட்டு அரசியல் கட்சிகளுக்கு தனியார் நிறுவனங்கள் நிதி அளிப்பது தடுத்து நிறுத்தப்படும். ஒட்டுமொத்த உற்பத்தியில் 6 சதவீதம் கல்வி வளர்ச்சிக்கு ஒதுக்கப்படும் என்பன உள்ளிட்ட பல முக்கிய அம்சங்கள் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

Posted in Economy, India, Politics | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , | 1 Comment »