Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Posts Tagged ‘Border’

Conflict between Georgia and South Ossetia

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 10, 2008

தெற்கு ஒஸ்ஸெட்டியாவில் சண்டையை நிறுத்தும்படி ஜோர்ஜியா தமது துருப்பினருக்கு உத்தரவிட்டுள்ளதாகக் கூறுகிறது

ஜோர்ஜியா, தெற்கு ஒஸ்ஸெட்டியாவிலுள்ள தமது படையினருக்குப் போரை நிறுத்தும்படி ஆணையிட்டிருப்பதாக திப்லிசியிலுள்ள ரஷ்யத் தூதரகத்துக்குத் தெரிவித்துள்ளது.

அத்துடன் போரை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பாக உடனடியாகப் பேச்சுவார்த்தைகளை தொடங்கத் தாங்கள் தயார் என்று ரஷ்யாவுக்குத் தெரிவித்துள்ளதாகவும் ஜோர்ஜியா அறிக்கை வெளியிட்டுள்ளது.

ஜோர்யியப் படைகள் தெற்கு ஒஸ்ஸெட்டியாவிலிருந்து விலகிவிட்டன என்றும், தற்போது அந்த நகரம் ரஷ்யப் படைகளின் முழுக் கட்டுப்பாட்டில் உள்ளது எனவும் ஜோர்ஜியா கூறுகிறது.

ஆனால் பெரிய பீரங்கிகள் விலகியதைத் தாங்கள் கண்டிருந்தாலும், ஜோர்ஜியப் படைகள் இன்னமும் அப்பகுதியில் உள்ளன என்று சீனா கூறுகிறது. கூடவே ஜோர்ஜயிப் படைகள் முழதாக விலகாது போர்நிறுத்தப் பேச்சுக்கு வாய்ப்பில்லை என்றும் ரஷ்யா கூறியுள்ளது.

இதற்கிடையே ஜோர்ஜியாவின் தலைநகர் திப்லிசியின் புறநகர் பகுதியிலுள்ள படை விமானத் தளம் மீது ரஷ்ய விமானம் குண்டுவீசியதாக ஜோர்ஜியா கூறியுள்ளது.

படைக் குவிப்பு செய்வதாக அப்காஸிய அதிகாரிகள் கூறுகின்றனர்






ஜோர்ஜியாவிடமிருந்து பிரிந்துபோன இன்னொரு பகுதியான அப்காஸியாவின் அதிகாரிகள் தாங்கள் முழு அளவில் படைகளைக் குவிப்பதாகத் தெரிவித்துள்ளனர். தமது வட பகுதி நகரான கொடோரிப் பள்ளத்தாக்கிலிருந்து ஜோர்ஜியப் படைகளை விரட்ட சுமார் ஆயிரம் துருப்பினரை அனுப்பியுள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

அப்பகுதியில் இருக்கும் ஐ.நா. பாதுகாப்புக் கண்காணிப்புப் படையினரை விலக்கிக்கொள்ளும்படி ரஷ்யா ஐ.நா.வைக் கேட்டுள்ளது.

அப்பகுதிக்கு ரஷ்யா ஆயிரக்கணக்கான படைகளை அனுப்பியுள்ளது என ஜோர்ஜியா முறைப்பட்டுள்ளது.

அமெரிக்கா ரஷ்யாவைக் கடிந்துள்ளது

ஜோர்ஜியாவுடன் நடக்கும் மோதலில் ரஷ்யா எடுத்துள்ளது அளவு மிஞ்சிய ஆபத்தான நடவடிக்கை என அமெரிக்க அதிபர் தரப்புக் கடிந்துள்ளது.

அதிபர் புஷ் அவர்களோடு ஒலிம்பிக் போட்டிகள் நடக்கும் சீனாவில் இருக்கின்ற அமெரிக்கத் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான ஜேம்ஸ் ஜெஃப்ரி அவர்கள், ரஷ்யாவின் நடவடிக்கைகள் அடங்காமல் அதிகரிக்கும் பட்சத்தில் அவை அமெரிக்கா, ரஷ்யா இடையிலான நீண்டகால உறவுகளைக் கணிசமாகப் பாதிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

பிரெஞ்சு அதிபர் சர்க்கோசி அவர்களோடு தொலைபேசியில் பேசியிருந்த ஜெர்மனியின் சான்சல்லர் அஞ்செலா மெர்க்கல் அவர்கள், நிபந்தனைகள் எவையுமின்றி அப்பகுதியில் போர் உடன் நிறுத்தப்பட வேண்டும் என்றுள்ளார்.

போப்பாண்டவர் பெனடிக்ட் அவர்களும் போரை நிறுத்தும்படி கேட்டுள்ளார்.


ரஷ்ய தாக்குதலைத் தொடர்ந்து ஜார்ஜியாவில் யுத்த நிலை பிரகடனம்

ஜார்ஜியாவிலே பிரிவினை கோரும் தெற்கு அஸ்ஸெட்டியா பிராந்தியத்தின் அருகில் அமைந்துள்ள கோரி நகரில் ரஷ்ய விமானங்கள் தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், ஜார்ஜியாவில் யுத்த நிலையை பிரகடனம் செய்யும் அதிபரின் ஆணைக்கு அந்நாட்டின் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

ஜார்ஜியத் துருப்புகள் குவிக்கப்பட்டுவருகின்ற இராணுவ நிலைகளை இலக்குவைத்து ரஷ்ய விமானங்கள் தாக்கின என்றாலும், ஒரு தாக்குதலில் இரண்டு அடுக்குமாடிக் குடியிருப்புகள் சேதப்படுத்தப்பட்டிருந்தன.

இதில் பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டும் காயப்படுத்தப்பட்டும் இருக்கிறார்கள். தங்களது விமானங்கள் இரண்டு சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளன என்பதையும் ரஷ்யா உறுதிப்படுத்தியுள்ளது.

தெற்கு அஸ்ஸெட்டியாவின் தலைநகர் ஷின்வாலியைக் முற்றுகையிட ஜார்ஜியர்கள் செய்த முயற்சிக்குப் பின்னர், அந்நகரின் கட்டுப்பாட்டை ரஷ்யத் துருப்பினர் கைப்பற்றியுள்ளதாகவும் ரஷ்யா தெரிவித்துள்ளது.

அப்காஸியப் பிரிவினைவாதிகளும் ஜார்ஜியப் படைகள் மீது தாக்குதல்

ஜார்ஜியாவில் இருக்கின்ற மற்றுமொரு பிரிந்துபோன பிராந்தியமான அப்காஸியாவில் இருக்கின்ற பிரிவினைவாதிகள், கொடொரி கோர்ஜில் உள்ள ஜோர்ஜியப் படைகள் மீது தாம் வான் மற்றும் பீரங்கித் தாக்குதல்களை ஆரம்பித்துள்ளதாக கூறுகிறார்கள்.

கோர்ஜில் இருக்கின்ற ஜார்ஜியப் படைகளை அங்கிருந்து விரட்டுவதே தமது நோக்கம் என்று, அப்காஸியாவில் சுய-அரசாங்கத்தை பிரகடனம் செய்துள்ள ஆட்சியாளர்களின் வெளியுறவு அமைச்சர் கூறியுள்ளார்.

இந்த கோர்ஜ் பகுதிதான் அங்கு, ஜார்ஜிய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஒரே பகுதியாகும்.

ஜார்ஜியா நிலவரம்: புஷ் கவலை

அதிபர் ஜார்ஜ் புஷ்

ஜார்ஜியாவில் உருவாகியுள்ள நெருக்கடி குறித்து தான் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாக அதிபர் புஷ் கூறுகின்றார்.

ஒலிம்பிக் துவக்கவிழாவில் கலந்துகொண்டிருந்த அதிபர் புஷ் பீய்ஜிங்கிலிருந்து கருத்து வெளியிடுகையில், ஜார்ஜிய நிலப்பரப்பின் ஒருமைப்பாடு மதிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்ததோடு, குண்டுவீசுவதை ரஷ்யா நிறுத்தவேண்டும் என்று வலியுறுத்தினார்.

ஆனால் ரஷ்யா, தனது முன்னாள் சோவியத் ஒன்றியப் பகுதிகளின் நிலப்பகுதிகளை அபகரிக்கும் எண்ணம் கொண்டிருக்கிறது என்ற குற்றம்சாட்டின் மூலம் ரஷ்ய நடவடிக்கையை ஜார்ஜியா ஊதிப்பெரிதுபடுத்துகிறது என்று ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சர் செர்ஜி லவ்ரொவ் தெரிவித்துள்ளார்.

இதனிடையே ஜார்ஜியத் துருப்பினருக்கு இராக்கில் சண்டையில் ஈடுபடுதற்கு பயிற்சியளித்துவந்த அமெரிக்க இராணுவக் குழுவினர் ஜார்ஜியத் தளங்களிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.


Posted in Politics | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , | Leave a Comment »

BJP’s V Shanmuganathan: India & Neighbors – Border security & Foreign Relations

Posted by Snapjudge மேல் ஜூன் 20, 2008

எல்லையோர ஆபத்துகள்

வி. சண்முகநாதன்

அண்டை அயல் நாடுகளுடன் நட்புடனும் நல்லுறவுடனும் விளங்கவே இந்தியா முயன்று வருகிறது. இந்திய அரசு எந்த நாட்டுடனும் வலியப்போய் சண்டையைத் துவக்கியது கிடையாது. சமாதானத்தையே எப்போதும் விரும்பி வந்துள்ளோம்.

அண்மைக்காலமாக நமது நாட்டின் எல்லையோரத்தில் ஊடுருவல்கள் அதிகரித்து வருகின்றன. இந்திய எல்லைக் கோட்டுக்குள் சீனா மற்றும் பாகிஸ்தானிய ராணுவத்தினர் அத்துமீறி நுழைந்து துப்பாக்கிப் பிரயோகம் செய்து வருகின்றனர். எந்த நேரத்திலும் எதுவும் நிகழலாம். இன்று நமது எல்லைகள் பாதுகாப்புடன் இல்லை. விழிப்புணர்வுடனும் முழுத் தயாரிப்புடனும் செயல்பட வேண்டிய காலம் இது.

ஆயிரக்கணக்கான கி.மீ. நீளமுள்ள எல்லைக் கோட்டை நாம், பக்கத்து நாடுகளான பாகிஸ்தான், நேபாளம், சீனா, பர்மா, வங்கதேசம் ஆகியவற்றுடன் பகிர்ந்து கொள்கிறோம். பாகிஸ்தான் ராணுவத்தினர், நமது ஜம்மு – காஷ்மீர் மாநில எல்லைக்குள் அன்றாடம் புகுந்து அராஜகம் செய்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.

இந்தியாவுக்கும் நேபாளத்துக்கும் கலாசார சிறப்புடன் கூடிய நட்புறவு நீண்ட காலமாக இருந்து வந்துள்ளது. சமீபத்திய தேர்தலுக்கு முன்பும் பின்பும் மாவோயிஸ்டுகளின் பேச்சும் செயலும் இந்தியாவுக்குச் சாதகமானதாக இல்லை. இந்தியாவையும் இந்திய நலன்களையும் மாவோயிஸ்டுகளின் தலைவராகிய பிரசண்டா தாக்கி வருகிறார்.

இந்திய – சீன எல்லைக்கோடு 4,056 கி.மீ. நீளம் கொண்டது. இரு நாடுகளும் “லைன் ஆப் ஆக்சுவல் கண்ட்ரோல்’ பற்றி இறுதி வடிவம் கொடுக்கப் பல அமர்வுகளாகப் பேச்சு நடத்தி வருகின்றன. “அக்ஷய் சீன்’ என்று அழைக்கப்படும் 38,000 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பை 1962-ஆம் ஆண்டு சீனா கையகப்படுத்திக் கொண்டுவிட்டது. காஷ்மீரின் வடபகுதியை ஆக்கிரமித்த பாகிஸ்தான், அதில் 5,180 சதுர கிலோ மீட்டர் நிலப்பகுதியை சீனாவுக்குத் தாரைவார்த்துக் கொடுத்தது. அக்ஷய் சீன் பகுதியையும் திபெத்தையும் இணைத்து சாலைப் போக்குவரத்து மேற்கொண்டுவிட்டது.

கடந்த ஆண்டு மட்டும் சீன ராணுவத்தினர் அருணாசலப் பிரதேசத்துக்குள் 270 முறை ஊருவியுள்ளனர். எல்லையோரம் வாழும் மக்கள் தங்கள் ஆடு, மாடுகளை எல்லைப்பகுதியில் மேய்ப்பதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது.

அருணாசலப் பிரதேச எல்லையை ஒட்டிய இந்தியப் பகுதிக்குள் ஒரு புத்தர் ஆலயம் இருந்தது. உள்ளூர் மக்கள் புத்தரைத் தரிசித்து வழிபாடு நடத்தி வந்தனர். சமீபத்தில் அந்த புத்தர் சிலையை அகற்றியாக வேண்டும் என்று சீனக் கமாண்டர் கூறினார். “”புத்தர் சிலை இந்திய எல்லைக்குள் உள்ளது. அதை அகற்றும் பேச்சுக்கே இடமில்லை” என்று நமது ராணுவத்தினர் கூறியுள்ளனர். சீனர்கள் இந்திய எல்லைக்குள் புகுந்து புத்தர் சிலையை வெடிவைத்துத் தகர்த்து விட்டனர். பிரதமர் மன்மோகன் சிங்கின் அருணாசலப் பிரதேச வருகையை சீனா எதிர்த்துள்ளது.

சீனர்கள் தங்களது வளர்ந்துவரும் பொருளாதார வலிமையை ராணுவ பலமாக மாற்றி வருகின்றனர். நிலம், கடல், வான்வழி தாக்கும் தளங்களை சீனா அமைத்து வருகிறது.

இந்தியா தம் பக்கத்து நாடுகளால் ஏற்படக்கூடிய ஆபத்துகளைப் புரிந்து கொள்ள வேண்டும். துரிதமாகச் செயல்படக்கூடிய எல்லையோரத் தயாரிப்புகள் இருக்க வேண்டும். அத்துமீறல்களை அடியோடு நிறுத்தும் ஆற்றல் வேண்டும். எல்லையோரத்துப் பதற்றங்களைத் தடுக்கவும், நிறுத்தவும், பதிலடி கொடுக்கவும் இந்திய அரசுக்கு ஒரு ஸ்ட்ராடிஜி தேவை. யுத்த தந்திரங்களும் உபாயங்களும் மிகவும் முக்கியமானவை. பலம் வாய்ந்த ராணுவம், நவீன போர் தளவாடங்கள், கருவிகள் அவற்றை உபயோகப்படுத்தும் பயிற்சிகள் அனைத்தும் தேவை.

இந்தியாவிடம் சுமார் 15 லட்சம் ராணுவ வீரர்கள் உள்ளனர். சுகோய் போர் விமானங்கள் விமானப்படைக்கு வந்துள்ளன. கப்பல் படையில் ஐசந ஜலேஷ்வா என்ற போர்க் கப்பல் சேர்க்கப்பட்டுள்ளது. அதே சமயம் சிக்கிம், அருணாசலப் பிரதேசம், பர்மா எல்லைப் பகுதிகளில் போக்குவரத்துக்கு உகந்த சாலைகள்கூட இல்லை. துரிதமான சாலைகள், ரயில், விமான வசதிகளையும் ஏற்படுத்த வேண்டும்.

நமது ராணுவத்தினருக்கு பல இடர்ப்பாடுகள் உள்ளன. அவர்களது சங்கடங்களைத் தீர்க்க வேண்டும். முப்படையிலும் அதிகாரிகளின் எண்ணிக்கை போதுமானதாக இல்லை. போர் விமானங்களில் பல பழசாகிப் போய்விட்டன. போர்க் கப்பல்களின் எண்ணிக்கையும் குறைவு. எதிர்காலத்தில் ஏற்படும் சவால்களுக்கு உகந்த தயாரிப்பு தேவை. புதிய தளவாடங்கள் வாங்குவதில் வெளிப்படையான திட்டமும் செயல்முறையும் இல்லை. “”தெஹல்கா” மூலம் வெளியான ஊழல்களாலும் தவறான அணுகுமுறைகளாலும் புதிய முயற்சிகளில் தடுமாற்றம் தென்படுகிறது.

பாதுகாப்புத் தளவாடங்களை வாங்குவதிலும் மேலும் பல சிரமங்கள் உள்ளன. நாம் ஒரு “டாங்கு’ வாங்குவதற்கு ஆர்டர் கொடுத்து தயாராகி வருவதற்குள் புதுப்புது யுக்திகளுடன் கூடிய அதி நவீன ரக டாங்குகள் வந்துவிடுகின்றன. விஞ்ஞான, தொழில்நுட்ப வளர்ச்சிகளைக் கவனத்தில் கொண்டு முன்கூட்டியே திட்டமிட்டுச் செயல்பட வேண்டும். பாதுகாப்புத் துறைக்குப் போதுமான நிதி ஒதுக்கீடும் அவசியம். நடப்பு ஆண்டில் 1,05,600 கோடி ரூபாயை இந்திய அரசு பாதுகாப்புத் துறைக்கு ஒதுக்கியுள்ளது.

சீனாவும் பாகிஸ்தானும் அவர்களின் பாதுகாப்புத் துறைக்கு ஒதுக்கியதில் பாதி அளவுதான் இந்தியா ஒதுக்கீடு செய்துள்ளது.

இத்தகைய பல குறைபாடுகளுக்கு நடுவிலும் இந்திய ராணுவத்தினர் அடைந்து வரும் வெற்றிக்கு அவர்களது உறுதிமிக்க கட்டுப்பாடும், வீரம் செறிந்த தியாமும் தான் காரணம் என்பதை உலகம் அறியும்.

கார்கில் போரில் பெற்ற வெற்றி போற்றத்தக்கது. தொலைக்காட்சி மூலம் கார்கில் யுத்தத்தை உலகம் நேரடியாகப் பார்த்தது. பனிமலைச் சிகரங்களின் உச்சியில் இந்திய ராணுவத்தினர் தீரத்துடன் போரிட்டு வென்ற வீச சாகசங்களைப் பாராட்டாதவர்களே இருக்க முடியாது.

மலை உச்சியில் நடந்த சண்டைகளிலேயே “மாண்டே காஸினோ’ யுத்தம்தான் உலகப் பிரசித்தி பெற்றது.

இரண்டாம் உலகப் பெரும் போரின்போது அனைவரையும் வியப்பில் ஆழ்த்திய யுத்தம் மாண்டே காஸினோ.

கார்கில் மலைச் சிகரங்களில் இந்திய ராணுவத்தினர் ஆற்றிய மயிர்க்கூச்செறியும் யுத்தம் மாண்டே காஸினோவையும் வென்றுவிட்டது என்று உலகின் ராணுவ நிபுணர்கள் மதிப்பீடு செய்துள்ளனர்.

எல்லையில் இந்திய வீரன் துப்பாக்கி ஏந்தி இரவு பகலாகக் கண்விழித்து, வெற்றி வேட்கையுடன் போரிடுகிறான். அவனது தியாகத்துக்கு இணையாக இந்திய அரசும் மக்களும் துணை நிற்க வேண்டும். முழுத் தயாரிப்பும் முதலீடும் செய்ய வேண்டும்.

(கட்டுரையாளர்: பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர்).

Posted in India, Law, Order, Politics | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »