Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Wolves’ Category

A tourist in Himalayas – Urbanization, Environment protection, Traveler

Posted by Snapjudge மேல் ஜூன் 19, 2007

இமயமலைப் பகுதி மாநிலங்கள் வளமானவையா?

டி.எஸ்.ஆர். சுப்பிரமணியன்

உத்தரகண்ட் மாநிலத்தின் டேராடூன் மாவட்டத்தில், இமயமலைப் பகுதியில் உள்ள சிறு நகரான சக்ரதா என்ற இடத்தில் சமீபத்தில் சில நாள்கள் தங்கினேன். அது ராணுவ கன்டோன்மென்ட் பகுதி.

கடல் மட்டத்திலிருந்து 7,200 அடி உயரத்தில் இருக்கிறது. டேராடூன் நகரிலிருந்து ஜீப்பில் போக மூன்றரை மணி நேரம்.

தில்லியின் கடும் வெப்பத்திலிருந்து தப்பிக்க சக்ரதாவுக்குச் சென்றேன். வனத்துறையின் ஓய்வில்லத்திலிருந்து அந்த மலையைப் பார்க்க பார்க்கப் பிரமிப்பாக இருந்தது.

டோன்ஸ் நதியின் நீர்ப்பிடிப்புப் பகுதியான அங்கு மரங்கள் அடர்ந்த காடு நேர்த்தியாக இருந்தது. பருவநிலை மிக அற்புதமாக, ஆரோக்கியத்துக்கு ஏற்றதாக இருந்தது. சொர்க்கத்துக்கு அருகிலேயே வந்துவிட்டதைப் போன்று உணர்ந்தேன்.

உத்தரப் பிரதேசத்தின் மலைப்பகுதி வளர்ச்சியில் அக்கறை செலுத்தப்படவில்லை என்பதால் தனியாகப் பிரிக்கப்பட்ட மலை மாநிலம் இது. இமாசலத்தை ஒட்டியிருக்கிறது. இம் மாநிலம் உதயமாகி 8 ஆண்டுகள் இருக்கும். அதற்குள் அதன் வளர்ச்சி அல்லது நிர்வாகம் குறித்துக் குறை கூறுவது சரியல்ல. ஆனாலும் மாநிலத்தின் வளர்ச்சி எந்த நிலையில் இருக்கிறது என்று பார்ப்பது தவறல்ல.

ராணுவத்தின் தரைப்படைப் பிரிவின் கட்டுப்பாட்டில் சக்ரதா இருக்கிறது. இங்கு வெளிநாட்டவர் வரத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இப்பகுதியின் தலைவாயிலான கல்சி என்ற இடத்திலிருந்து சக்ரதா வரையுள்ள பகுதிக்குச் செல்வதாக இருந்தால் ராணுவத்தின் அனுமதியோடுதான் செல்ல முடியும்.

கல்சி என்ற இடத்தில்தான் டோன்ஸ் நதி, யமுனையில் சேர்கிறது. இந்த இடத்தில் மாமன்னர் அசோகர் பற்றிய பாறைக் கல்வெட்டு இருக்கிறது. இதை இந்தியத் தொல்லியல் துறை பராமரிக்கிறது. 19-வது நூற்றாண்டில் ஒரு ஆங்கிலேயர்தான் இதைக் கண்டுபிடித்தார். இந்தியாவின் இதுபோன்ற தொல்லியல் சின்னங்களையும், கலாசாரத்தையும் வெள்ளைக்காரர்கள்தான் ஆர்வமுடன் கண்டுபிடித்துள்ளனர், நம்மவர்கள் அந்த அளவுக்குக் கண்டுபிடிக்காதது ஏன் என்று தெரியவில்லை.

இப்பகுதியின் பாதி வனப்பகுதியை வனத்துறை நேரடியாகவும் மற்றதை சிவிலியன்களும் நிர்வகிக்கின்றனர். இந்த பாகுபாட்டை அங்கு வளர்ந்துள்ள மரங்களிலிருந்தே அறியலாம். வனத்துறையினர் பராமரிக்கும் பகுதியில் காடு நன்றாக செழித்து வளர்ந்திருக்கிறது.

இந்தப் பிராந்தியம் முழுவதிலும் வன விலங்குகளே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. காட்டு மான் அல்லது பன்றி மட்டுமே எப்போதாவது கண்ணில்பட்டதாக உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர். குஜ்ஜர்கள் வளர்க்கும் காட்டெருமைகளும் பசுக்களும்தான் கண்ணில்பட்டன. சில ஒப்பந்ததாரர்கள் மட்ட குதிரைகளை சரக்கு எடுத்துச் செல்வதற்காக வைத்துள்ளனர்.

இப்பகுதியில் ஜெüன்சார்-பப்பார் பழங்குடிகள் வசிக்கின்றனர். இவர்கள் பஞ்ச பாண்டவர்களின் வழித் தோன்றல்கள். ஹிந்து பண்டிகைகளை இவர்கள் தங்களுக்கென்றுள்ள தனி பஞ்சாங்கப்படி கொண்டாடுகின்றனர். மிகவும் அமைதியானவர்கள். இப்பகுதியில் கொலை, கற்பழிப்பு போன்ற குற்றங்கள் நிகழ்வதில்லை. மாடு மேய்வது தொடர்பான சிறு புகார்கள் அதிகம்.

வனப்பகுதியில் சில ஓய்வில்லங்கள் உள்ளன. சில மிகவும் வசதியாக, அழகாக உள்ளன. சில பராமரிப்பின்றி மோசமாக இருக்கின்றன. ஆனால் அற்புதமான வனத்துக்கு நடுவே இவை உள்ளன.

பிரிட்டிஷ்காரர்களின் ரசனையே அலாதி. இங்குள்ள ஒரு ஓய்வில்லத்தில் லேடி எட்வர்ட்ஸ் என்ற பெண்மணி 3 நாள்கள் தொடர்ந்து தங்கியிருந்திருக்கிறார். தங்களுடைய சொந்த நாட்டிலிருந்து 7 ஆயிரம் மைல்கள் தள்ளி வந்த நாட்டில், ஆளரவமே இல்லாத மலைப்பகுதி காட்டில் இயற்கையை ரசிப்பது என்பது சாதாரணமான விஷயம் அல்ல!

காட்டிலே ஒரு கிளையைக்கூட வெட்டக்கூடாது என்று 1996-ல் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இது வன வளத்தைக் காக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பு.

ஆனால் காடுகளை அறிவியல்ரீதியாக பராமரிப்பதென்றால், அவ்வப்போது மரங்களை வெட்டி அல்லது கிளைகளைக் களைத்து சீர்படுத்த வேண்டும். பழைய மரங்களை வெட்டிவிட்டு புதிய கன்றுகளை நட வேண்டும். “”காடுகளைப் பாதுகாக்க வேண்டியவர்கள்” அதில் அக்கறை காட்டாததால்தான் நீதித்துறை தலையிட நேர்ந்தது என்பதையும் நாம் நினைவில்கொள்ள வேண்டும்.

உத்தரகண்ட் மலைப்பகுதிக்கு கடந்த 40 ஆண்டுகளாகப் பலமுறை சென்று வந்துள்ளேன். குமான், கர்வால் என்ற இருவகை மலைப் பகுதிகளிலும் அதிகம் பயணம் செய்துள்ளேன்.

அப்பகுதியில் கிராமங்களும் சிற்றூர்களும் எந்த மாறுதலும் இல்லாமல் அப்படியே இருக்கின்றன. சாலை வசதி மட்டும் ஓரளவுக்கு மேம்பட்டிருக்கிறது. கிராமங்களில் செல்போன், ஜீன்ஸ் பேண்ட், கோக-கோலா மட்டுமே புதிய நாகரிகச் சின்னங்களாகக் கண்ணில்படுகின்றன. பெரும்பாலான மக்கள் பட்டினி இல்லாமல் ஏதோ ஒரு வேளையோ இரு வேளையோ சாப்பிடுகிறார்கள் என்பதைத் தவிர எந்தப் பொருளாதார முன்னேற்றமும் இல்லை.

தொடக்கப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி வசதிகளில் எந்த மாற்றமும் இல்லை. கிராமங்களிலிருந்து ஒரு மைல் சுற்றளவுக்குள் ஆரம்பப்பள்ளிக்கூடம் இருக்கிறது. ஆனால் கல்வியின் தரம் உயர்வாக இல்லை. பல குடும்பங்களில் சிறுவர்களை அதிகம் படிக்க வைப்பதில்லை.

அதற்கு அவர்கள் சொல்லும் காரணங்கள் மூன்று.

1. கல்வி பயில போய் வரும் போக்குவரத்துச் செலவு கட்டுப்படியாவதில்லை.

2. படிக்கப் போய்விட்டால் குடும்பச்செலவுக்கு வருவாய் குறைகிறது.

3. படித்து முடித்ததும் வேலையா கிடைக்கப்போகிறது?

ஓரளவு படித்த இளைஞர்கள் வேலைதேடி சமவெளியில் உள்ள நகரங்களுக்குச் செல்கின்றனர். அங்கு வீட்டு வேலை செய்கின்றனர் அல்லது ராணுவத்தில் சேர்கின்றனர்.

வனப்பகுதியில் காண்ட்ராக்டர் வேலையைச் செய்கிறவர் மட்டும் வியாபாரி போல, கொஞ்சம் காசு பார்க்கிறார். ஆனால் அதற்கு பொறுமையும், புத்திசாலித்தனமும் அவசியம்.

குடி தண்ணீர் இல்லாமல் மக்கள்படும் சிரமம் கொஞ்ச நஞ்சமல்ல. நல்ல தண்ணீருக்காக பெண்களும் குழந்தைகளும் குடங்களைத் தூக்கிக்கொண்டு 3 அல்லது 4 மைல்தூரம் கூட செல்கின்றனர். எல்லா கிராமங்களுக்கும் குடிநீர் தரும் திட்டம் 1980-களில் வெகு ஆடம்பரமாக தொடங்கப்பட்டது. ராஜீவ்காந்தி குடிநீர் திட்டம் என்று பெயர் சூட்டப்பட்டது. ஆனால் இன்னும் இக் கிராமங்களை அத்திட்டம் எட்டவில்லை.

தொழில் வளர்ச்சியும் அதிகம் இல்லை. காடுகளில் கிடைக்கும் பழம், இலை, பூ, மூலிகைகள் போன்றவற்றைப் பயன்படுத்தும் ஆலை எதுவும் ஏற்படவில்லை. டேராடூன் நகர்ப் பகுதியில் மட்டும் பெயருக்கு சில தொழில் நிறுவனங்கள் இருக்கின்றன.

சுற்றுலாப் பயணிகள் மலையின் அழகை ரசித்தபடியே சிலநாள்கள் தங்கிவிட்டுச் செல்ல கூடாரங்களை நிறுவலாம்; அங்கு சாலை, குடிநீர், கழிப்பிடம் போன்ற குறைந்தபட்ச வசதிகளை மட்டும் செய்துதரலாம் என்று இப்போது யோசனை கூறப்பட்டிருக்கிறது.

மலையேறும் சாகசத்தை நிகழ்த்த நினைப்பவர்களை ஈர்க்க இந்த சுற்றுலாத் திட்டம் பயன்படும். ஆனால் இதனால் நிரந்தர வருவாய் கிடைக்காது.

நாடு சுதந்திரம் அடைந்து 50 ஆண்டுகள் ஆனபிறகும், விவசாயியோ, கிராமவாசியோ தான் பிறந்த மண்ணிலிருந்துகொண்டே வளர்ச்சியின் பலனை அனுபவிக்கும் சூழலை ஏற்படுத்தத் தவறிவிட்டோம்.

முன்னேற வேண்டும் என்றால் சொந்த ஊரிலிருந்து வெளியேறி நகரங்களுக்குச் செல்ல வேண்டும் என்ற நிலைமையை நாடு முழுவதும் ஏற்படுத்திவிட்டோம்.

தேசியக் கொள்கைகளை வகுப்பதில் நாம் அடைந்துள்ள தோல்விக்கு இது நல்ல உதாரணம்.

மாநிலத்தின் அதிகாரிகளும் வனத்துறை அதிகாரிகளும் திறமையானவர்கள், நல்லவர்கள். மாநில முதல்வர் நாராயண் தத் திவாரி நல்ல அனுபவம் பெற்ற தேர்ந்த நிர்வாகி. அப்படியும் மாநிலத்தின் வளர்ச்சி சமச்சீரானதாகவோ, மெச்சத்தகுந்ததாகவோ இல்லை.

இந்த மாநிலத்தில் 70 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர், ஆனால் 80 வளர்ச்சிக் கோட்டங்கள் உள்ளன. இதனால் எம்.எல்.ஏ.க்களுக்கும் கோட்டங்களின் தலைவர்களுக்கும் இடையே, வருவாயைப் பகிர்ந்துகொள்ள போட்டி ஏற்படும். இது இப்பகுதி வளர்ச்சிக்கு உகந்ததல்ல. வளர்ச்சி கோட்டங்களையும் பேரவைத் தொகுதிகளுக்குச் சம எண்ணிக்கையில் இருக்குமாறு முதலிலேயே பிரித்திருக்க வேண்டும்.

மக்களின் வளர்ச்சிக்காக கோடிக்கணக்கான ரூபாய்களை மத்திய, மாநில அரசுகள் ஒதுக்கினாலும் அவற்றைப் பயனுள்ள வகையில் பயன்படுத்தும் போக்கு எங்குமே இல்லை. மக்கள் இன்னமும் விழிப்படையாமலேயே இருக்கின்றனர் என்பது உண்மையே.

எனவே ஆட்சியாளர்கள் இந்த நிலைமையை மாற்ற நடவடிக்கை எடுத்தே தீர வேண்டும். எல்லாம் வழக்கம்போலவே நடப்பதால் முன்னேற்றம் வந்துவிடாது. முன்னேற்றம் இல்லாவிட்டால் மோசமாகப் போய்விடும்.

(கட்டுரையாளர்: முன்னாள் மத்திய அமைச்சரவைச் செயலர்.)

———————————————————————————————————

வன வளம் காப்போம்!

ஆர்.எஸ். நாராயணன்

கடந்த இரு நூற்றாண்டுகளில் வன வளம் பெருமளவில் அழிக்கப்பட்டு வருகிறது. தாவரங்கள் மட்டுமன்றி, விலங்கினங்களும் கணிசமாக அழிந்து வருகின்றன. இவற்றுக்கெல்லாம் மனிதர்களே காரணம்!

அரசு தரும் ஒரு புள்ளிவிவரப்படி 1875-லிருந்து 1925 வரை 80 ஆயிரம் புலிகள், 1 லட்சத்து 50 ஆயிரம் சிறுத்தைகள், 2 லட்சம் ஓநாய்கள் வேட்டையாடிக் கொல்லப்பட்டன. 1925-க்குப் பின் இன்றுவரை கொல்லப்பட்டவை எவ்வளவு?~வனங்கள் சுத்தமாகிவிட்டன. பிரிட்டிஷ் ஆட்சியில் நடந்த வேட்டையை விட இன்றைய ஆட்சியில் வேட்டையின் விளைவால் காடுகளில் சிங்கம், புலி, நரி போன்ற விலங்குகளின் எண்ணிக்கை, கவலை தரும் அளவுக்குக் குறைந்துவிட்டது. ஐம்பதாண்டு முதிர்ந்த தேக்கு, சந்தனம், செஞ்சந்தனம், கருங்காலி, ரோஸ்வுட் எதுவும் இல்லை. ஒருகாலத்தில் காட்டில் ஒரு வீரப்பன் இருந்தான். இப்போது நாட்டில் இருந்து கொண்டே பல வீரப்பர்கள் வனத்தை அழித்து வருகிறார்கள். வனக்காவலர்களுக்கு லஞ்சம் கொடுத்தால் மரவியாபாரிகளுக்கு வைரம் பாய்ந்த மரம் கிடைக்கும். பன்மடங்கு வனச் செல்வங்கள் கொள்ளை போகும்போது, ஒருபக்கம் பழியை வனத்தில் வாழ்வுரிமை கேட்கும் பழங்குடிகள் மீது சுமத்தப்பட்டு வருகிறது.

இப்போது ஒரு புதிய பசி வந்துள்ளது. அதன் பெயர் “வளர்ச்சி’. வளர்ச்சி என்ற போர்வையில் வனத்தைச் சுரண்ட புதிய வரையறையைப் பெரும் பொருள்செலவில் கண்டுபிடித்துள்ளனர். மத்திய அரசின் வனம் மற்றும் சூழலியல் அமைச்சகம் சில மாதங்களுக்கு முன்பு “”வனம் என்றால் என்ன?” என்ற கேள்விக்கு ஒரு வரையறை விளக்கத்தை வழங்கும்படியும், இந்தியச் சூழ்நிலைக்கு ஏற்ப சட்ட நெளிவுசுளிவுகளிலிருந்து தப்பும் ஆலோசனைகளை வழங்கும்படியும், அதற்குரிய கட்டணத்தையும் கேட்டு பல்வேறு தொண்டு நிறுவனங்களுக்கு கோரிக்கைவிட்டிருந்தது. பதில் அனுப்பியிருந்த பல ஆய்வு நிறுவனங்களில் மிகக் குறைந்த கட்டணத்திற்கு அசோகா அறக்கட்டளை முன்வந்தது. அப்பணி முடிவுற்று அது தொடர்பான முடிவுக்கூட்டம் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் நடந்தது. அதில் “வனத்தின் வரையறை’ முன்வைக்கப்பட்டது.

வனம் என்றால் என்ன? இதற்கு ஐ.நா. அமைப்புகள் வழங்கும் அறிக்கைகள் உள்ளன. வனம் பற்றிய வரையறை வகைகள், பணிகள், நிர்வாகம், பாதுகாப்பு தொடர்பாக ஆலோசனை அறிக்கைகள் வனம் – மற்றும் சூழலியல் அமைச்சக நூலகத்தில் நிறையவே உள்ளன. இவ்வளவு இருந்தும் புதிய வரையறை இப்போது தேவைப்படுகிறது. ஓட்டைகள் பல போட்டு ஒழுகும் பானையில் மேலும் ஓர் ஓட்டை போட ஆலோசகர்களும் அலுவலர்களும் முயல்வது ஏன்? அவர்கள் அப்படி என்ன வரையறுத்தார்கள்?

“”வனம் என்பது அரசின் முழுக்கட்டுப்பாட்டில் உள்ள நிலப்பகுதி. உயிர்ச்சூழல், பல்லுயிர்ப் பாதுகாப்பு அடிப்படையில் சட்டரீதியாக வனம் என்று பதிவு செய்யப்பட்ட நிலம். இப்படிப்பட்ட நிலப்பிரிவு எல்லைகளுக்குட்பட்ட ஏரி, குளம், நதி போன்ற நீர்நிலைகள், மரங்கள், புல்வெளிகள், நன்செய், புன்செய் நிலங்கள், பாலைவனம், மண்ணியல் ஆய்விடம், பனி மண்டலங்கள்…..”

இந்தியாவின் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்காக – நீர் மின்திட்ட அணைகள், ராணுவக் கட்டுமானம், சுரங்கம், குடியிருப்பு மாற்றம், நெடுஞ்சாலை.. போன்ற திட்டங்களுக்கு முட்டுக்கட்டையாக – பல்வேறு நீதிமன்றங்களில் சுமார் 1300 வழக்குகள் – வளர்ச்சிக்கு வனங்களை ஒதுக்கிக் கொள்ள முடியாமல் உள்ளனவாம். இப்போது புரிகிறதா? நாட்டில் உள்ள நரிகள் ரொம்பவும் பொல்லாதவை. வளர்ச்சி என்ற போர்வையில் வனங்களைச் சுரண்ட பெரு முதலாளிகளுக்குப் பல புதிய வாய்ப்புகள் வழங்கவும், காலம்காலமாக வனமே வாழ்வு என்று வனங்களை நம்பி வாழும் ஆதிவாசிகளுக்குப் பச்சைத் துரோகமும் செய்ய இப் புதிய வரையறை உதவும்.

வழக்கில் சிக்கியுள்ள பகுதி 6 லட்சத்து 57 ஆயிரம் ஹெக்டேர்தான். இன்று மரம்வெட்டுவதற்காக வனம் என்று ஒதுக்கப்பட்ட காடுகளின் பரப்பு 3.1 கோடி ஹெக்டேர், காப்பிடம் என்று பதிவான நிலப்பரப்பு 1.5 கோடி ஹெக்டேர். ஆக மொத்தம் 4.6 கோடி ஹெக்டேர் நிலத்தின் சொந்தக்காரர், ஒரு மகாநிலப்பிரபுவாகத் திகழ்ந்துவரும் அரசு, 8 கோடி வனவாசிகளின் வாழ்வுரிமையைப் பறிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. வருவாய்த்துறைக்குக் கட்டுப்பட்ட புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து அனுபவப் பாத்தியதைக் கொண்டாடி சொந்தமாக்கிக் கொள்ளும் தந்திரம் நாட்டு நரிகளுக்கு உண்டு. அந்த உரிமை காட்டு நரிகளுக்கு இல்லை. டன் டன்னாக மரம் வெட்டிக் கொள்ளை அடிக்கப்படுவது ஒருபுறம். பாவப்பட்ட வனவாசிகள் தங்கள் ஆடு, மாடுகளை வனங்களுக்கு ஓட்டிச் சென்று மேய்க்க அவர்களுக்கு உரிமை இருந்தும் உரிமை மறுக்கப்படுகிறது. வனவாசிகள்தான் வனத்தை அழிப்பதாகப் பொய்க் குற்றச்சாட்டு சுமத்தப்படுகிறது. காடுகளில் உலர்ந்து விழும் விறகைப் பொறுக்குவதும், விதை, பழம் பொறுக்குவதும் மரங்களை வெட்டுவதும் ஒன்றாகிவிடுமா?

1970-களில்தான் காடுகளில் வனவிலங்குகள் காணாமல் போனதைக் கண்டுபிடித்தார்கள். மரக்களவுபற்றி கண்டுகொள்ளவில்லை. 1972-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட வனவிலங்குப் பாதுகாப்பு சட்டம் காரணமாக தேசியப் பூங்காக்கள், சரணாலயங்கள் உருப்பெற்றுக் காட்டு விலங்குகளை அவற்றின் இயல்பான சூழலில் காப்பாற்றி இனப்பெருக்கம் செய்யப்பட்டது. இப்படி வனவிலங்குகள் பாதுகாக்கப்பட்டதைப்போல் வனவாசிகளின் வாழ்வுரிமை பாதுகாக்கப்படவில்லை. இந்தக் காலகட்டத்தில்தான் உத்தராஞ்சல் மாநிலத்தில் தாசோலியில் வனவாசிகள் ஒன்றுகூடி சிப்கோ இயக்கத்தை உருவாக்கினர். இதை சர்வோதய இயக்கத்தைச் சேர்ந்த காந்தியவாதி சாந்தி பிரசாத் பட் தொடங்கிவைத்து தலைமையேற்று நடத்தினார்.

இமயமலைக் காடுகளில் சட்டபூர்வமாக மரங்களை வெட்ட வந்த ஒப்பந்தக்காரர்களை மரங்களை வெட்ட முடியாதபடி மரத்தை இரு கரங்களால் அணைத்துக் கொண்டு, “”முதலில் எங்களை வெட்டிவிட்டு மரங்களை வெட்டுங்கள்” என்று வனவாசிகள் கூறினர். மலைக்காடுகளில் மரங்களை வெட்டும்போது நிலச்சரிவும் வெள்ளமும் உருவாகும் என்ற உண்மை வனவாசிகளுக்கு நன்கு தெரியும். 1972, 73 ஆண்டுகளில் “சிப்கோ’ இயக்கம் தீவிரமானபோது சுற்றுச்சூழல் காப்பு இயக்கத் தலைவர்கள் சுந்தர்லால் பகுகுணா, வந்தனா சிவா ஆகியோர் அதில் பங்கேற்றனர். அதுபோன்ற இயக்கம் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் உருப்பெறவில்லை. குறிப்பாக கொடைக்கானல் அமைந்துள்ள பழனிமலைக்காடுகளில் வன அழிவு காரணமாக வடகிழக்குப் பருவமழை தீவிரமாகும்போது ஆண்டுதோறும் நிலச்சரிவு, வெள்ளம் ஏற்படுகிறது.

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி மீது எவ்வளவோ குற்றச்சாட்டுகள் உண்டு. அவர் கொண்டுவந்த நெருக்கடிகால ஆட்சி இந்திய ஜனநாயகத்தின் பொற்காலம் எனலாம். 1980-ல் நெருக்கடிகால வனப்பாதுகாப்புச் சட்டம் வந்தது. மாநில அரசுகள் தன்னிச்சையாகச் செயல்பட்டு வனத்துறை ஊழல்கள் – மரம் கடத்தல் – மலிந்திருந்த காலகட்டத்தில், மத்திய அரசு அனுமதி இல்லாமல் வனங்களில் மாநிலங்கள் கைவைக்க இயலவில்லை. பின்னர் ராஜீவ்காந்தி காலத்திலும் பழனிமலைப் பாதுகாப்பு உள்பட வனப்புனர் வாழ்வுக்கு நிறைய நிதி உதவிகள் வழங்கப்பட்டன. காலம் செல்லச் செல்ல நிதி உதவிகள் நிறுத்தப்பட்டன. வனவாசிகளின் வாழ்வுரிமை மேலும் மேலும் மறுக்கப்பட்டே வந்துள்ளது. வனத்தை வரையறை செய்யும்போது, வனவாழ் மக்களின் உரிமை அன்று சற்று கவனம் பெற்றது. இன்று முற்றிலும் மறுக்கப்படுகிறது. வனவிஷயத்தில் மட்டுமாவது வருவாய் நோக்கை மறந்துவிட்டு, உயிர்ச்சூழல் – சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்கு முதல் மரியாதை வழங்க வேண்டும். வனத்திலே பிறந்து, வனத்திலே வளர்ந்து, வனத்திலே வாழ்ந்து மடியும் வனவாசிகளை வெளியேற்றும் ஒரு பாவச்செயலை இனியும் தொடர வேண்டாம்.

“”இந்தப் பிரபஞ்சம் ஒரு மகாசக்தியின் படைப்பு. இப் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து உயிர்களையும் அவற்றின் நலன்களுக்காகவே இயற்கை என்னும் மகாசக்தி படைத்துள்ளது. எந்த உயிரினமும் அடுத்த உயிரின உரிமைகளைப் பறிப்பது பெரும்பாவம்” என்று ஈசோபநிஷதம் கூறுகிறது. காட்டில் உள்ள நரி ரொம்ப நல்லதுங்க. அதைக் காப்பாற்றுங்க!

——————————————————————————————————————————-
முசௌரி உணர்த்திய பாடம்!

டி.எஸ்.ஆர். சுப்பிரமணியன்

கடந்த வாரம் முசௌரி சென்றிருந்தேன். பிரிட்டிஷ்காரர்கள் இந்நாட்டுக்கு வந்தபோது, அவர்கள் விரும்பிக் குடியேறிய மலைவாசஸ்தலத்தில் முசௌரியும் ஒன்று. தில்லிக்கு வடக்கே 350 கி.மீ. தொலைவில் உள்ள இந்த ஊருக்கு டேராடூனிலிருந்து ஒரு மணி நேரத்தில் காரில் செல்லலாம்.

ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கான தேசிய பயிற்சி மையம் இங்குதான் இருக்கிறது. இதர மத்திய அரசு அதிகாரிகளுக்கு நிர்வாகத்தில் அடிப்படைப் பயிற்சி அளிக்கும் நிலையமும் இங்கு இருக்கிறது. இதை மலைகளின் ராணி என்றும் அழைக்கின்றனர்.

1998-ல் ஐ.ஏ.எஸ். தேர்வு பெற்ற அதிகாரிகளுக்கு, நிர்வாகச் சீர்திருத்தம் குறித்து உரை நிகழ்த்த சென்றிருந்தேன். 160 அதிகாரிகள் வந்திருந்தனர். அவர்களில் பாதிப்பேர் நேரடியாக ஐ.ஏ.எஸ். ஆனவர்கள். மற்றவர்கள் வெவ்வேறு மாநில அரசுகளால் ஐ.ஏ.எஸ். பயிற்சி பெறத் தேர்வு செய்து அனுப்பப்பட்ட அனுபவம் வாய்ந்த அதிகாரிகள். அமெரிக்காவைச் சேர்ந்த டியூக் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்களில் ஒருவராக நான் அங்கு சென்றிருந்தேன். ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்குப் பயிற்சி தர டியூக் பல்கலைக்கழகத்தின் உதவியை இந்திய அரசு நாடியிருந்தது.

டேராடூனிலிருந்து காரில் சென்றேன். “”அடடா, சுற்றுச்சூழல் எவ்வளவு பச்சைப் பசேல் என்று பார்க்க ரம்மியமாக இருக்கிறது” என்று அகாதெமியின் காரை ஓட்டிவந்த டிரைவரைப் பார்த்துக் கூறினேன். அவர் சொன்ன பதில் மிகவும் சுவாரசியமாக இருந்தது. 1980-களில் லக்னெüவில் உயர் பதவியில் இருந்த ஓர் அதிகாரி, முசௌரியில் மரங்களை வெட்டவோ, நகராட்சிக்குள் புதிய கட்டடங்களைக் கட்டவோ அனுமதிக்கவே முடியாது என்று கண்டிப்பாகக் கூறி அமல்படுத்தியதால் இந்தப் பிரதேசம் பிழைத்தது என்றார். அவர் சொன்ன அந்த அதிகாரி நான்தான்.

நைனிதாலிலும் முசௌரியிலும் மரங்களை வெட்டுவதிலும் கட்டடங்களைக் கட்டுவதிலும் கண்மூடித்தனமான வேகத்தில் சிலர் இறங்கிவிட்டனர் என்று எனக்குத் தகவல் வந்தது. உடனே அந்த தடை உத்தரவைப் பிறப்பித்தேன். நைனிதால், முசௌரியில் யாரும் மரங்களை வெட்டக்கூடாது, முசௌரி மலையில் யாரும் பாறைகளை வெட்டவோ, இதர கனிமங்களைச் சேகரிக்கவோ கூடாது என்று உத்தரவிட்டேன்.

“”மலைப்பகுதியின் வளர்ச்சியைத் தடுக்கிறேன், மக்களுக்கு நன்மை செய்ய முடியாமல் தடையாக இருக்கிறேன்” என்றெல்லாம் என்னைப்பற்றி குற்றம்சாட்டி எனக்கு எதிராக பலத்த எதிர்ப்பு எழுந்தது. நேரடியாகவும் மறைமுகமாகவும் என்னைப் பலர் மிரட்டினார்கள். அதில் கொலை மிரட்டலும் உண்டு. முதலமைச்சரைக்கூட தங்கள் பக்கம் இழுக்கப் பார்த்தார்கள். ஆனால் அவர் உறுதியாக என்னை ஆதரித்தார். 15 ஆண்டுகளுக்குப் பிறகு நான் போட்ட உத்தரவினால் ஏற்பட்டுள்ள நல்ல பலன்களை நானே பார்த்து பூரித்துப் போனேன்.

காலாகாலத்துக்கும் மக்கள் என்னை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக, தற்பெருமையாக இதை நான் கூறவில்லை. எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் நல்ல முடிவில் அதிகாரிகள் உறுதியாக இருக்கவேண்டும் என்பதற்காகக் கூறுகிறேன். ஊழல் அரசியல்வாதியும் முதுகெலும்பில்லாத அதிகாரிகளும்தான், மக்கள் எதிர்க்கிறார்கள் என்பதற்காக நல்ல முடிவுகளிலிருந்து பின்வாங்குகிறார்கள். இதை மேலும் ஒரு நல்ல உதாரணம் கொண்டு விளக்க விரும்புகிறேன்.

1960-களில் காமராஜர் ஆட்சிக்காலத்தில் மதிய உணவுத் திட்டம் கொண்டுவரப்பட்டது. 1970-களின் பிற்பகுதியில் அதுவே சத்துணவுத் திட்டமாக விரிவுபடுத்தப்பட்டது. இந்தத் திட்டத்துக்குத் தமிழகம்தான் முன்னோடி. தரக்குறைவான அரிசி, தானியங்களைப் பயன்படுத்துவார்கள், கணக்கில் தில்லுமுல்லு செய்து கோடிக்கணக்கில் மோசடி செய்வார்கள் என்றெல்லாம் இத் திட்டங்களை எதிர்த்தவர்கள் கூறினார்கள். ஆனால் ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் உறுதியாக இருந்ததால் இத்திட்டம் வெற்றிகரமாக அமல் செய்யப்படுகிறது. 30 ஆண்டுகளுக்குப் பிறகு அதன் பலனை மாநிலம் அனுபவித்து வருகிறது. சத்துணவு காரணமாக தமிழ்நாட்டு மாணவ, மாணவியரின் உடலும் – அறிவும் திடமாக இருக்கிறது. தகவல் தொழில்நுட்பப் படிப்பில் தமிழகம் முன்னிலையில் நிற்கிறது.

தமிழக அரசின் சிறந்த நிர்வாகத்தால் எத்தனையோ நன்மைகள் மாநிலத்துக்குக் கிடைத்தாலும் சத்துணவுத் திட்ட பலன் அவற்றில் முதன்மை பெறுகிறது. ஒரு கொள்கை முடிவால் சில ஆண்டுகளுக்குப் பிறகு கிடைக்கக்கூடிய நல்ல பலன்களை ஊகித்து மதிப்பிட முடியாது; ஆனாலும் சில நல்ல நிர்வாகத்துக்கு சில கடுமையான, உறுதியான முடிவுகள் மிகமிக அவசியம்.

ஐ.ஏ.எஸ். பயிற்சி நிறுவனத்தின் காரை ஓட்டிய அந்த டிரைவர், அந்த அகாதெமி மாணவர்களிடையே மிகவும் பிரபலமான குதிரைப் பயிற்றுனர் நவல் கிஷோர் என்பவரின் உறவினர். அதை அவர் சொன்னபோது என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை. பழைய விஷயங்கள் நினைவுக்கு வந்ததால் சிரிப்பும் பொத்துக்கொண்டு வந்தது. “என்னப்பா, இப்போதும் பயிற்சி மாணவர்கள் குதிரையை ஓட்ட ஆரம்பித்து கீழே விழுகிறார்களா?’ என்று கேட்டேன். ஆமாம் சார், ஆனால் ஒரு வித்தியாசம், பழைய மாணவர்களைப் போல இப்போதுள்ள இளைஞர்களுக்கு எலும்பு உறுதியாக இல்லை, அதிக நாள்கள் மருத்துவமனையில் படுத்துவிடுகிறார்கள் என்றார் அதே உற்சாகத்துடன்.

அந்தக் காலத்தில் மாணவர்கள் பழைய சாதம் சாப்பிட்டுவிட்டு தொலைவில் உள்ள பள்ளிக்கூடங்களுக்கு நடந்தோ, சைக்கிளிலோ போனார்கள். வீட்டு வேலைகளையும் தோட்ட வேலைகளையும் செய்தார்கள். கிணற்றிலிருந்து நீர் இறைத்துத் தந்தார்கள். இப்போது நொறுக்குத் தீனி தின்றுவிட்டு பஸ்ஸிலோ, மோட்டார் சைக்கிள்களிலோ பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்கிறார்கள். எனவே உடலில் வலு இல்லை. பள்ளிக்கூடத்தில் சத்துணவைப் போட்டு ஊருக்கே உரம் ஊட்டிய அந்த நாள் எங்கே, வீட்டிலேயே சாப்பிட்டு வலுவில்லாமல் இருக்கும் இந்த நாள் எங்கே?

எல்லோருக்கும் வரும் சந்தேகம் எனக்கும் வந்ததால் பயிற்சி அகாதெமியின் இயக்குநர் ருத்ர கங்காதரனிடம், “”இப்போதைய மாணவர்களின் தரம் எப்படி?” என்று கேட்டேன். “நான் கடந்த ஆறு ஆண்டுகளாக இயக்குநராக இருக்கிறேன்; இப்போது பயிற்சிக்கு வருகிறவர்கள், பழைய மாணவர்களுக்கு எந்தவிதத்திலும் குறைவில்லாது உலக ஞானத்திலும் அவர்களுடைய பாடத்திலும் சிறந்து விளங்குகின்றனர். கடுமையான பயிற்சிகளைக்கூட எளிதாக முடிக்கின்றனர். நகர்ப்புற, மேல்தட்டு மாணவர்களைக் காட்டிலும் கிராமப்புற மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது’ என்று பதில் அளித்தார்.

நான் ஏற்கெனவே கூறியபடி, டியூக் பல்கலைக்கழகம் சார்பில் சென்றிருந்தேன். என்னுடன் வந்த இதர பேராசிரியர்களில் பெரும்பாலானவர்கள் இந்தியர்களே. இந்த பல்கலைக்கழகம் ஹார்வர்ட், ஸ்டேன்ஃபோர்டு, யேல் பல்கலைக்கழகங்களுக்கு நிகரானது. இங்கு மட்டும் அல்ல, உலகின் முன்னணி பல்கலைக் கழகங்கள் பலவற்றில் இந்தியர்கள்தான் இப்போது பேராசிரியர்களாகவும் மாணவர்களாகவும் புகழ் பரப்பிக் கொண்டிருக்கின்றனர்.

இந்த அளவுக்கு அறிவில் சிறந்தவர்கள் இந்த நாட்டில் இருந்தும் மக்களில் பெரும்பான்மையானவர்கள் வறுமையில் உழல்வதும், அரசியல்வாதிகள் அப்பட்டமான சுயநலத்தில் மிதப்பதும், அதிகாரவர்க்கம் அவர்களுக்கு அடிபணிவதும் தாளமுடியாத வருத்தத்தைத் தருகிறது. நிர்வாகச் சீர்திருத்தம் எந்த அளவுக்கு அவசியம் என்பதை இது உணர்த்துகிறது.

முசௌரியில் பார்த்த சுற்றுலாப் பயணிகளில் பெரும்பாலானவர்கள் மத்தியதர வகுப்பைச் சேர்ந்தவர்கள். சாலைகளில் வாகன நெரிசல் அதிகம். முன்பைவிட கடைகளின் எண்ணிக்கை 10 மடங்கு அதிகமாகியிருக்கிறது. ஒவ்வொரு நூறு அடிக்கும் ஒரு தென்னிந்தியச் சிற்றுண்டியகமும் உடுப்பி ஓட்டலும் கண்ணில்பட்டன. தென்னாட்டு இட்லி, வடை, சாம்பார், மசாலா தோசை வட இந்தியர்களுக்கு மிகவும் பிடித்துப் போய்விட்டது.

(கட்டுரையாளர்: முன்னாள் அமைச்சரவைச் செயலர்)

Posted in Adventure, Analysis, Animals, Archeology, Ashoka, Ashokar, ASI, Asoka, Asokar, Backgrounder, Cantonement, City, dead, Deforestation, Dehradoon, Dehradun, Delhi, Economy, Education, Environment, Finances, Forests, Fox, Ganga, Ganges, Govt, Growth, guns, Haridwar, Hiking, Hills, Himachal, HP, Hunt, Hunting, Industry, infrastructure, Jobs, Kill, Kulu, Lives, Manali, Metro, Military, Mountains, Mussoori, Mussouri, Nature, Pollution, Protect, Protection, Rafting, Rishikesh, River, Rural, Sandalwood, Shot, Sports, State, Statistics, Stats, Tour, Tourism, Tourist, Transport, Traveler, Tree, Trees, Trekking, Tribals, UP, Urbanization, Uthar Pradesh, Utharakand, Utharakhand, Utharanchal, Utharkhand, Uttar Pradesh, Uttarakand, Uttarakhand, Uttaranchal, Uttarkand, Uttarkhand, UttarPradesh, Uttrakand, Veerappan, Village, Water, Welfare, Wild, Wolf, Wolves | Leave a Comment »