Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Handicraft products from Betelnut – Tea Cups, Paper Plates from areca tree

Posted by Snapjudge மேல் மார்ச் 5, 2008

இளமை பக்கம்

பாக்கு பட்டையிலும் பணம் கொழிக்கும்!

ஜி.மீனாட்சி,

இயற்கையாகக் கிடைக்கும் ஒரு பொருளை மதிப்பு மிக்க பொருளாக மாற்றினால் வெற்றி நிச்சயம் என்பதற்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கிறார் -கோவை துடியலூரைச் சேர்ந்த கே.மல்லிகா.

உபயோகிக்க ஏற்றதல்ல என்று வீணாக்கப்படும் பாக்கு மரப் பட்டைகளில் (மட்டைகள்) இருந்து விதவிதமான தட்டுகள், கப்புகள், சூப் கோப்பைகள் என்று இயற்கை வழி பொருட்களைக் கடந்த 10 ஆண்டுகளாகத் தயாரித்து சாதனை படைத்து வருகிறார் இவர்.

மல்லிகா இந்தத் தொழிலுக்கு வந்தது எதிர்பாராதது. அதை அவரது வார்த்தைகளிலேயே கேட்போம்:

“”நான் எம்.எஸ்ஸி பட்டதாரி.

திருமணமாகி புகுந்தவீடு வந்தபின், ஏதாவது ஒரு தொழில் செய்யவேண்டும் என்று விரும்பியபோது,

எங்கள் தோட்டத்தில் வீணாகும் பாக்கு மரப் பட்டைகளை உபயோகித்து ஏதாவது செய்தால் என்ன என்று யோசிக்க ஆரம்பித்தேன். பாக்கு மரப் பட்டைகளிலிருந்து தட்டுகள், கப்புகள் செய்யும் இயந்திரம் மைசூரில் கிடைப்பதாய்ச் சொன்னார்கள். அங்கிருந்து முதலில் இயந்திரத்தை வரவழைத்தோம். பின்னர் தயாரிப்பு முயற்சியில் இறங்கினோம்” என்று விவரிக்கிறார் மல்லிகா.

எந்த ஒரு வெற்றியுமே எடுத்த உடனேயே நம் வசப்படுவதில்லை. தொடர் முயற்சியும், ஆர்வமும் இருந்தால் மட்டுமே சாதனை சாத்தியமாகிறது. அது மல்லிகா விஷயத்திலும் நடந்தது.

எத்தனை முயற்சி செய்தும் வேண்டிய வடிவத்தில் தட்டுகளையோ, கப்புகளையோ தயாரிக்க முடியாமல் ஆரம்பத்தில் தடுமாறியிருக்கிறார் மல்லிகா.

“தட்டு’த் தடுமாறித்தான் தட்டு அவர் கைக்கு வசப்பட்டது.

துவக்கத்தில் இருந்த இரண்டு இயந்திரங்கள், 34 இயந்திரங்களாகப் பெருகின. சொந்தத் தோட்டத்துப் பாக்கு மரப் பட்டைகள் போதாதென்று, வெளியிலிருந்தும் விலை கொடுத்து வாங்க ஆரம்பித்தார். தொழில் வளர்ச்சிக்கு வங்கியிலிருந்து நிதி உதவி பெற்றார். 12 பணியாளர்களை வேலைக்கு அமர்த்தி தயாரிப்பை முடுக்கிவிட்டார்.

தரமான தயாரிப்புகள், சுத்தம் போன்ற நுட்பமான காரணங்களில் கூடுதல் கவனம் செலுத்தினார். நீல்கிரீஸ், கண்ணன் டிபார்ட்மெண்ட்டல் ஸ்டோர்ஸ் போன்ற நிறுவனங்கள் இவரது தயாரிப்பைத் தேடி வந்தன. திருமணங்கள், கோயில் விசேஷங்கள், பள்ளி, கல்லூரி நிகழ்ச்சிகளில் இவரது தயாரிப்புக்கு நல்ல வரவேற்புக் கிடைத்தது.

ஒரு கட்டத்துக்குப் பிறகு ஆர்டரின்பேரில் ஐரோப்பிய நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ய ஆரம்பித்தார்.

“”நான் இந்தத் தொழிலைத் தொடங்கும்போது போட்டியாளர்கள் அவ்வளவாக இல்லை. ஆனால் இப்போது நிறையப் பேர் இத்தொழிலில் ஈடுபட ஆர்வம் காட்டுகிறார்கள். பாக்கு மரப் பட்டைகளுக்கான தட்டுப்பாடு, தயாரித்த பொள்களைச் சந்தைப்படுத்த முடியாமை போன்ற பல காரணங்களால் ஏராளமானோர் இத் தொழிலைவிட்டே போய்விடுகிறார்கள்….” என்று நடைமுறைச் சிக்கல்களைக் கோடிட்டுக் காட்டும் மல்லிகா, தயாரிப்பு முறை பற்றிப் பகிர்ந்து கொள்கிறார்:

“”பச்சையாகக் கிடைக்கும் பாக்கு மரப் பட்டைகளை விவசாயிகளிடமிருந்து வாங்கி, வெயிலில் காயவைத்துக் கொள்கிறோம். காய்ந்த மட்டைகளில் ஒட்டியிருக்கும் தூசி, மண் போன்றவற்றைத் தண்ணீரில் பலமுறை அலசிக் கழுவுகிறோம். மீண்டும் அந்த மட்டைகளைக் காயவைத்து, இயந்திரத்தில் உள்ள அச்சில் பொருத்தி வேண்டிய பொருட்களைத் தயாரிக்கிறோம். தயாரிப்புக்கென உபயோகிக்கப்படும் இயந்திரங்கள் முற்றிலும் பணியாளர்களால் இயக்கப்படுகிறது” என்கிறார்.

தட்டுகள், கப்புகள் தயாரித்தது போக எஞ்சியிருக்கும் பாக்கு மரப் பட்டைகளை, அடுப்பு எரிக்கப் பயன்படுத்தலாம் அல்லது உரம் தயாரிக்க உபயோகிக்கலாம்.

பாக்கு மரப் பட்டை கப் ஒன்று 40 பைசாவிலிருந்து, ஒரு ரூபாய்க்குள் கிடைக்கிறது. தட்டின் அளவுக்கேற்ப, ரூ.1.50-ல் இருந்து ரூ.2 வரை விலை போகிறது.

திருமணம் போன்ற விசேஷங்களில் “பஃபே’ விருந்துகள் பிரபலமடைந்து வரும் நிலையில், பாக்கு மரப்பட்டை தட்டுகளுக்கு நல்ல வரவேற்பு உள்ளது.

“”உபயோகித்தவுடன் தூக்கி எறியும் பிளாஸ்டிக் கப்புகளைவிட பாக்கு மரப் பட்டை கப்புகள், தட்டுகள் சுற்றுச்சூழலைப் பாதிக்காதவை. அத்துடன் இதில் பரிமாறப்படும் உணவு வகைகள் சூடு குறையாமல், சுவை மாறாமல் இருக்கும். தட்டுகளைப் பிடித்து சாப்பிடுபவரின் கைகளையும் சூடு தாக்குவதில்லை. முக்கியமாக, பாக்குமரப் பட்டையிலிருந்து தயாரிக்கப்படும் பொருட்கள், எளிதில் மட்கும் தன்மை உடையதாய் இருப்பதால், சுற்றுச்சூழலுக்கு எந்தக் கெடுதலும் ஏற்படுவதில்லை” என்று நன்மைகளைப் பட்டியலிடும் மல்லிகாவிடம், இத் தொழிலில் தீமைகளே இல்லையா என்று எதிர்க்கேள்வி எழுப்பினோம்.

“”குளிர்காலத்தில் இந்தப் பொருட்களில் ஒரு விதமான பூச்சி தாக்குகிறது. தயாரிக்கப்பட்டு 3 முதல் 6 மாதங்கள் வரை மட்டுமே இவை உபயோகிக்க ஏற்றவை என்பதால், நிறையத் தயாரித்து பாதுகாத்து வைக்க முடியாது. விற்பனையாகவில்லையென்றால் தேங்கிவிடவும் வாய்ப்பு உள்ளது. இப்படி ஒரு சில பிரச்னைகள் உள்ளன…” என்கிறார்.

வெற்றிகரமான தொழில் முனைவோராய் வளர்ந்த பிறகு, பெண் தொழில் முனைவோர்களுக்காக “வுமன் பிஸினஸ் என்டர்பிரைசஸ் டெவலப்மெண்ட் அசோசியேஷன்’ என்ற அமைப்பைத் துவக்கி பல்வேறு தொழில் செய்யும் பெண்களை ஒருங்கிணைத்துள்ளார் மல்லிகா. இந்த பெண் தொழில்முனைவோர்கள் அவ்வப்போது ஒன்றுகூடி தொழில்துறைப் பிரச்னைகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கிறார்கள். இந்தியன் ஓவர்சீஸ் வங்கியுடன் இணைந்து பெண் தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டத்தையும் ஒருங்கிணைத்து நடத்தியிருக்கிறார்.

“”அடிப்படையில் நான் ஒரு விளையாட்டு வீராங்கனை. திருமணத்துக்குப் பிறகு பெண்களின் ஆர்வம் அப்படியே தேங்கிப் போகிறது. குடும்பம், குழந்தைகள் என்று அவர்களின் கவனம் வேறுபக்கம் திரும்பி விடுகிறது. பெண்கள் தங்கள் திறமைகளை வீணாக்காமல், குடும்பத்துக்கு ஒதுக்கிய நேரம் போக எஞ்சியிருக்கும் ஓய்வு நேரங்களில் ஏதாவது ஒரு தொழிலில் ஈடுபட வேண்டும். பொருளாதார ரீதியில் தங்களை பலப்படுத்திக் கொள்ள முன்வரவேண்டும்” என்னும் மல்லிகாவின் வார்த்தைகள், பெண் தொழில்முனைவோருக்கு நிச்சயம் உற்சாக டானிக்காக இருக்கும்.

ஒரு பதில் to “Handicraft products from Betelnut – Tea Cups, Paper Plates from areca tree”

  1. amirhu said

    தங்களின் முயற்சி பாராடுதளுக்கு உரியது

பின்னூட்டமொன்றை இடுக