Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Plant’ Category

Handicraft products from Betelnut – Tea Cups, Paper Plates from areca tree

Posted by Snapjudge மேல் மார்ச் 5, 2008

இளமை பக்கம்

பாக்கு பட்டையிலும் பணம் கொழிக்கும்!

ஜி.மீனாட்சி,

இயற்கையாகக் கிடைக்கும் ஒரு பொருளை மதிப்பு மிக்க பொருளாக மாற்றினால் வெற்றி நிச்சயம் என்பதற்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கிறார் -கோவை துடியலூரைச் சேர்ந்த கே.மல்லிகா.

உபயோகிக்க ஏற்றதல்ல என்று வீணாக்கப்படும் பாக்கு மரப் பட்டைகளில் (மட்டைகள்) இருந்து விதவிதமான தட்டுகள், கப்புகள், சூப் கோப்பைகள் என்று இயற்கை வழி பொருட்களைக் கடந்த 10 ஆண்டுகளாகத் தயாரித்து சாதனை படைத்து வருகிறார் இவர்.

மல்லிகா இந்தத் தொழிலுக்கு வந்தது எதிர்பாராதது. அதை அவரது வார்த்தைகளிலேயே கேட்போம்:

“”நான் எம்.எஸ்ஸி பட்டதாரி.

திருமணமாகி புகுந்தவீடு வந்தபின், ஏதாவது ஒரு தொழில் செய்யவேண்டும் என்று விரும்பியபோது,

எங்கள் தோட்டத்தில் வீணாகும் பாக்கு மரப் பட்டைகளை உபயோகித்து ஏதாவது செய்தால் என்ன என்று யோசிக்க ஆரம்பித்தேன். பாக்கு மரப் பட்டைகளிலிருந்து தட்டுகள், கப்புகள் செய்யும் இயந்திரம் மைசூரில் கிடைப்பதாய்ச் சொன்னார்கள். அங்கிருந்து முதலில் இயந்திரத்தை வரவழைத்தோம். பின்னர் தயாரிப்பு முயற்சியில் இறங்கினோம்” என்று விவரிக்கிறார் மல்லிகா.

எந்த ஒரு வெற்றியுமே எடுத்த உடனேயே நம் வசப்படுவதில்லை. தொடர் முயற்சியும், ஆர்வமும் இருந்தால் மட்டுமே சாதனை சாத்தியமாகிறது. அது மல்லிகா விஷயத்திலும் நடந்தது.

எத்தனை முயற்சி செய்தும் வேண்டிய வடிவத்தில் தட்டுகளையோ, கப்புகளையோ தயாரிக்க முடியாமல் ஆரம்பத்தில் தடுமாறியிருக்கிறார் மல்லிகா.

“தட்டு’த் தடுமாறித்தான் தட்டு அவர் கைக்கு வசப்பட்டது.

துவக்கத்தில் இருந்த இரண்டு இயந்திரங்கள், 34 இயந்திரங்களாகப் பெருகின. சொந்தத் தோட்டத்துப் பாக்கு மரப் பட்டைகள் போதாதென்று, வெளியிலிருந்தும் விலை கொடுத்து வாங்க ஆரம்பித்தார். தொழில் வளர்ச்சிக்கு வங்கியிலிருந்து நிதி உதவி பெற்றார். 12 பணியாளர்களை வேலைக்கு அமர்த்தி தயாரிப்பை முடுக்கிவிட்டார்.

தரமான தயாரிப்புகள், சுத்தம் போன்ற நுட்பமான காரணங்களில் கூடுதல் கவனம் செலுத்தினார். நீல்கிரீஸ், கண்ணன் டிபார்ட்மெண்ட்டல் ஸ்டோர்ஸ் போன்ற நிறுவனங்கள் இவரது தயாரிப்பைத் தேடி வந்தன. திருமணங்கள், கோயில் விசேஷங்கள், பள்ளி, கல்லூரி நிகழ்ச்சிகளில் இவரது தயாரிப்புக்கு நல்ல வரவேற்புக் கிடைத்தது.

ஒரு கட்டத்துக்குப் பிறகு ஆர்டரின்பேரில் ஐரோப்பிய நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ய ஆரம்பித்தார்.

“”நான் இந்தத் தொழிலைத் தொடங்கும்போது போட்டியாளர்கள் அவ்வளவாக இல்லை. ஆனால் இப்போது நிறையப் பேர் இத்தொழிலில் ஈடுபட ஆர்வம் காட்டுகிறார்கள். பாக்கு மரப் பட்டைகளுக்கான தட்டுப்பாடு, தயாரித்த பொள்களைச் சந்தைப்படுத்த முடியாமை போன்ற பல காரணங்களால் ஏராளமானோர் இத் தொழிலைவிட்டே போய்விடுகிறார்கள்….” என்று நடைமுறைச் சிக்கல்களைக் கோடிட்டுக் காட்டும் மல்லிகா, தயாரிப்பு முறை பற்றிப் பகிர்ந்து கொள்கிறார்:

“”பச்சையாகக் கிடைக்கும் பாக்கு மரப் பட்டைகளை விவசாயிகளிடமிருந்து வாங்கி, வெயிலில் காயவைத்துக் கொள்கிறோம். காய்ந்த மட்டைகளில் ஒட்டியிருக்கும் தூசி, மண் போன்றவற்றைத் தண்ணீரில் பலமுறை அலசிக் கழுவுகிறோம். மீண்டும் அந்த மட்டைகளைக் காயவைத்து, இயந்திரத்தில் உள்ள அச்சில் பொருத்தி வேண்டிய பொருட்களைத் தயாரிக்கிறோம். தயாரிப்புக்கென உபயோகிக்கப்படும் இயந்திரங்கள் முற்றிலும் பணியாளர்களால் இயக்கப்படுகிறது” என்கிறார்.

தட்டுகள், கப்புகள் தயாரித்தது போக எஞ்சியிருக்கும் பாக்கு மரப் பட்டைகளை, அடுப்பு எரிக்கப் பயன்படுத்தலாம் அல்லது உரம் தயாரிக்க உபயோகிக்கலாம்.

பாக்கு மரப் பட்டை கப் ஒன்று 40 பைசாவிலிருந்து, ஒரு ரூபாய்க்குள் கிடைக்கிறது. தட்டின் அளவுக்கேற்ப, ரூ.1.50-ல் இருந்து ரூ.2 வரை விலை போகிறது.

திருமணம் போன்ற விசேஷங்களில் “பஃபே’ விருந்துகள் பிரபலமடைந்து வரும் நிலையில், பாக்கு மரப்பட்டை தட்டுகளுக்கு நல்ல வரவேற்பு உள்ளது.

“”உபயோகித்தவுடன் தூக்கி எறியும் பிளாஸ்டிக் கப்புகளைவிட பாக்கு மரப் பட்டை கப்புகள், தட்டுகள் சுற்றுச்சூழலைப் பாதிக்காதவை. அத்துடன் இதில் பரிமாறப்படும் உணவு வகைகள் சூடு குறையாமல், சுவை மாறாமல் இருக்கும். தட்டுகளைப் பிடித்து சாப்பிடுபவரின் கைகளையும் சூடு தாக்குவதில்லை. முக்கியமாக, பாக்குமரப் பட்டையிலிருந்து தயாரிக்கப்படும் பொருட்கள், எளிதில் மட்கும் தன்மை உடையதாய் இருப்பதால், சுற்றுச்சூழலுக்கு எந்தக் கெடுதலும் ஏற்படுவதில்லை” என்று நன்மைகளைப் பட்டியலிடும் மல்லிகாவிடம், இத் தொழிலில் தீமைகளே இல்லையா என்று எதிர்க்கேள்வி எழுப்பினோம்.

“”குளிர்காலத்தில் இந்தப் பொருட்களில் ஒரு விதமான பூச்சி தாக்குகிறது. தயாரிக்கப்பட்டு 3 முதல் 6 மாதங்கள் வரை மட்டுமே இவை உபயோகிக்க ஏற்றவை என்பதால், நிறையத் தயாரித்து பாதுகாத்து வைக்க முடியாது. விற்பனையாகவில்லையென்றால் தேங்கிவிடவும் வாய்ப்பு உள்ளது. இப்படி ஒரு சில பிரச்னைகள் உள்ளன…” என்கிறார்.

வெற்றிகரமான தொழில் முனைவோராய் வளர்ந்த பிறகு, பெண் தொழில் முனைவோர்களுக்காக “வுமன் பிஸினஸ் என்டர்பிரைசஸ் டெவலப்மெண்ட் அசோசியேஷன்’ என்ற அமைப்பைத் துவக்கி பல்வேறு தொழில் செய்யும் பெண்களை ஒருங்கிணைத்துள்ளார் மல்லிகா. இந்த பெண் தொழில்முனைவோர்கள் அவ்வப்போது ஒன்றுகூடி தொழில்துறைப் பிரச்னைகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கிறார்கள். இந்தியன் ஓவர்சீஸ் வங்கியுடன் இணைந்து பெண் தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டத்தையும் ஒருங்கிணைத்து நடத்தியிருக்கிறார்.

“”அடிப்படையில் நான் ஒரு விளையாட்டு வீராங்கனை. திருமணத்துக்குப் பிறகு பெண்களின் ஆர்வம் அப்படியே தேங்கிப் போகிறது. குடும்பம், குழந்தைகள் என்று அவர்களின் கவனம் வேறுபக்கம் திரும்பி விடுகிறது. பெண்கள் தங்கள் திறமைகளை வீணாக்காமல், குடும்பத்துக்கு ஒதுக்கிய நேரம் போக எஞ்சியிருக்கும் ஓய்வு நேரங்களில் ஏதாவது ஒரு தொழிலில் ஈடுபட வேண்டும். பொருளாதார ரீதியில் தங்களை பலப்படுத்திக் கொள்ள முன்வரவேண்டும்” என்னும் மல்லிகாவின் வார்த்தைகள், பெண் தொழில்முனைவோருக்கு நிச்சயம் உற்சாக டானிக்காக இருக்கும்.

Posted in areca, areca nuts, Arts, betelnuts, Biz, Business, Commerce, Cups, Exports, Forest, fruit, Green, Handicrafts, Handlooms, Ideas, nuts, Plant, Plates, Small, Tree | 1 Comment »

Titanium dioxide, titanium(IV) oxide or titania – Seashore Wealth

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 8, 2007

டாட்டா டைட்டானியம்

Thinnai – Tata, Sathankulam, Titanium Di Oxide Project: “நேற்று அரேபியா! இன்று தேரிக் காடு!! அசுரன், இரா.இரமேஷ், கு.காமராஜ்”

1. “Titanium – How it is made?” http://www.madehow.com/Volume-7/Titanium.html

2. “Titanium”, 2005 Minerals Yearbook, United States Geological Survey http://minerals.usgs.gov/minerals/pubs/commodity/titanium/

3. “Mineral Sands – Fact Sheet 10” www.doir.wa.gov.au/documents/gswa/GSD_Fact_Sheet_10.CV.pdf

4. ” Advancing Development of Kwale Project in Kenya” TIOMIN Resources Inc., June 2006 www.tiomin.com/i/pdf/Tiomin_Facts_Sheet.pdf

5. “Zircon Development in Coburn Mine, Western Australia” www.gunson.com.au/files/reports/ABN%20AMRO30.1.06.pdf

6. ” THE NEW MINERAL SANDS PLANT OF THE 3rd MILLENNIUM… HOW DIFFICULT-TO-TREAT FEEDSTOCKS CAN GET A NEW LEASE ON LIFE” J.M. ELDER, and W.S. KOW Outokumpu Technology Inc, Jacksonville, FL, www.outotec.com/28719.epibrw

7. “TITANIUM TETRACHLORIDE PRODUCTION BY THE CHLORIDE ILMENITE PROCESS”, Office of Solid Waste U.S. Environmental Protection Agency http://www.epa.gov/epaoswer/other/mining/minedock/tio2/

8. “Titanium Di Oxide”, www.tidco.com/images%5CTITANIUM%20DIOXIDE.doc

9. ” Project Profile on Titanium Tetrachloride / Titanium Dioxide ” – Mott MacDonald http://www.vibrantgujarat.com/project_profile/chemicals_petrochemicals_pharmaceuticals/chemicals-petrochemicals/titanium-dioxide23.pdf

10. “Opportunities in the Electrowinning of Molten Titanium from Titanium Dioxide” http://doc.tms.org/ezMerchant/prodtms.nsf/ProductLookupItemID/JOM-0510-53/$FILE/JOM-0510-53F.pdf?OpenElement

11. http://webmineral.com/data/

12. http://blonnet.com/2002/11/24/stories/2002112401310200.htm

கடற்கரையில் டைட்டானியப் புதையல்!

சிங்கநெஞ்சன்

1791ஆம் ஆண்டு~இங்கிலாந்தில் வில்லியம் க்ரீகர் எனும் புவி அறிவியல் ஆர்வலர், ஆற்றோரம் படிந்திருந்த மணலில் கறுப்பு நிற மணலை மட்டும் பிரித்து ஆராய்ந்தார். காந்தத்தால் ஓரளவு ஈர்க்கப்பட்ட அந்த கறுப்பு மணலில் இரும்பு ஆக்ûஸடு மட்டுமல்லாமல் வேறொரு உலோக ஆக்ûஸடும் சேர்ந்திருந்தது. அதுவரை அறியப்பட்ட உலோகங்களிலிருந்து அந்த உலோகம் வேறுபட்டிருந்தது – அதுதான் டைட்டானியம். அந்த கறுப்பு மணலின் பெயர் இல்மனைட்.

ஆனால் அதற்கு டைட்டானியம் என்று பெயர் வைத்தவர் மார்ட்டின் க்ளாப்ராத் எனும் ஜெர்மானிய வேதியியல் அறிஞர். 1795-ல் இவர் ரூட்டைல் எனும் மற்றொரு கனிமத்திலிருந்து டைட்டானியம் டை ஆக்ûஸடைப் பிரித்தெடுத்தார். டைட்டன் என்ற சொல்லுக்கு “வலிமையானவன்’ என்னும் பொருள் உண்டு.

டைட்டானியம் ஓர் உலோகத் தனிமம். இயற்கையில் ஆக்ஸிஜனுடன் சேர்ந்து டைட்டானியம் டை ஆக்ûஸடு எனும் சேர்மமாகக் கிடைக்கிறது. பூமியின் மேற்பகுதியில் அதிக அளவில் உள்ள தனிமங்கள் என்று பார்த்தால் டைட்டானியத்திற்கு 9-வது இடம். பெரும்பாலான தீப்பாறைகளிலும் சில வகை உருமாற்றுப் பாறைகளிலும், இப்பாறைகள் சிதைந்து அதன் விளைவாக உருவான படிவுப்பாறைகளிலும் டைட்டானியம் சிறிதளவு உள்ளது.

இந்த உலோகம் அலுமினியத்தைப்போல் இலேசானது. ஆனால் எஃகுவைப்போல் உறுதியானது. அதிக வெப்பம், வேதியியல் அரிமானங்களைத் தாங்கக்கூடியது.

இத்தனை சிறப்பு அம்சங்களைக் கொண்ட இந்த டைட்டானியம் உலோகத் தனிமத்தை டைட்டானியம் – டை – ஆக்ûஸடு எனும் அதன் சேர்மத்திலிருந்து பிரித்தெடுக்கும் முயற்சி வணிக ரீதியில் வெற்றி பெற்றது 1946}ல் தான். அதன்பிறகும் கூட டைட்டானியத்தின் உபயோகங்கள் முழுமையாக உணரப்படவில்லை.

1950-களிலும் 1960-களிலும் நடந்து கொண்டிருந்த பனிப்போரின்போது அன்றைய சோவியத் யூனியன், டைட்டானியத்தை போர் விமானங்களிலும் மற்றைய போர் தளவாடங்களிலும் பயன்படுத்தத் தொடங்கியது. அதன்பின்னரே டைட்டானியத்தின் போர்க்கால முக்கியத்துவம் முழுமையாக உணரப்பட்டது.

டைட்டானியம் கலந்த எஃகு தற்போது உயர் தொழில்நுட்ப விமானங்கள், போர் விமானங்கள், ஏவுகணைகள், விண்வெளி ஓடங்கள், மருத்துவ அறுவை சிகிச்சைக் கருவிகள், மின் சாதனங்கள் மற்றும் பல உயர் தொழில் நுட்ப சாதனங்களில் பயன்படுத்தப்படுகிறது. அரிமானத்தை எதிர்க்கும் ஆற்றல் உள்ளதால் கடல் நீரைக் குடிநீராக மாற்றப் பயன்படுத்தப்படும் சாதனங்களிலும் இந்த உலோகக் கலவை பயன்படுத்தப்படுகிறது.

டைட்டானியம் டை ஆக்ûஸடு பெரும்பாலும் பெயின்ட் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது. வெண்மை நிறத்தில் மாவுபோல் இருக்கும் டைட்டானியம் டை ஆக்ûஸடு நிறமியிலிருந்து தயாரிக்கப்படும் வர்ணப்பூச்சுகள் தரமானவை. சிறந்த ஒளிர்தன்மை, நிறைந்த உழைக்கும் திறம், தூய வெண்மை நிறம், ஒளியை உள்ளே புகவிடா தன்மை இவையெல்லாம் டைட்டானியம் – டை – ஆக்ûஸடு நிறமிக்கு உரித்தானவை.

சாதாரண ஈய வர்ணப் பூச்சுகளிலுள்ள நச்சுத்தன்மை டைட்டானியம் டை ஆக்ûஸடு பூச்சுகளில் இல்லை. இந்த நிறமிகள் ரப்பர் தொழில், பிளாஸ்டிக் தொழில், தோல் மற்றும் துணி உற்பத்தி, அழகு சாதனத் தயாரிப்பு மற்றும் காகித ஆலைகளில் பயன்படுத்தப்படுகின்றன. நாம் அன்றாடம் பயன்படுத்தப்படும் பற்பசைகளிலும் டைட்டானியம் – டை – ஆக்ûஸடு பயன்படுகிறது.

இல்மனைட் எனும் கரிய நிற கனிமம்தான் டைட்டானியம் டை ஆக்ûஸடு எனும் வெள்ளை நிற நிறமியின் மிக முக்கிய தாதுப்பொருள். ரஷியாவின் “இல்மன்’ மலை மற்றும் ஏரிப் பகுதிகளில் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டதால் இந்தக் கனிமத்திற்கு “இல்மனைட்’ என்று பெயரிடப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியில் கிடைக்கும் இல்மனைட் கருமணலில் 55 சதவிகிதம் டைட்டானியம் டை ஆக்ûஸடு உள்ளது.

“ரூட்டைல்’ எனும் கனிமத்தில் 92 சதவிகிதம் முதல் 96 சதவிகிதம் வரை டைட்டானியம் டை ஆக்ûஸடு உள்ளது.

பல லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் உருவாகிய பாறைகள் வெயிலில் காய்ந்தும் மழையில் நனைந்தும் வெப்பத்தில் விரிந்தும் குளிரில் சுருங்கியும் சிறிது சிறிதாகச் சிதைவுறத் தொடங்குகின்றன. இந்தச் சிதைவுறுதலின்போது பாறைகளில் உள்ள கனிமங்கள் உதிர்கின்றன. இவ்வாறு உதிர்ந்த கனிமத்துகள்கள் மழைநீரால் அரிக்கப்பட்டு சிற்றோடைகள் வழியே ஆறுகளை அடைகின்றன. ஆற்று வெள்ளத்தில் அடித்துக் கொண்டு வரப்படும் இக் கனிமங்கள் ஓரளவிற்கு ஆற்றங்கரைகளிலும் ஆற்றுப்படுகைகளிலும் வண்டல்களாகப் படிகின்றன. கணிசமான அளவு கனிமங்கள் கடற்கரையை ஒட்டியுள்ள கடலின் அடிப்பகுதியில் பல மீட்டர்கள் கனத்திற்குப் படிவங்களாகப் படிந்து போகின்றன.

கடற்கரையை ஒட்டியுள்ள கடலின் அடியில் படிந்த இப் படிவங்களில் உள்ள இல்மனைட், ரூட்டைல் போன்றவை அவைகளுடன் சேர்ந்து படிந்துள்ள குவார்ட்ஸ், ஃபெல்ஸ்பார் போன்ற கனிமங்களை விட அடர்த்தி அதிகமானவை. எனவே இவை அடர் கனிமங்கள் என்றே அழைக்கப்படுகின்றன.

கரையோரமுள்ள கடலின் கீழ் படிந்த மணலும், கடற்கரையோரமுள்ள மணலும் அலைகளில் சிக்கி முன்னும் பின்னும் அலைக்கழிக்கப்படும்போது அடர்த்தி மிகுந்த இல்மனைட் மற்றும் ரூட்டைல் போன்ற கனிமங்கள் கரையோரம் படிந்து அளவில் மிகுகின்றன. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் தொடர்ந்து இந்நிகழ்ச்சி நடைபெறுவதால் பல லட்சக்கணக்கான டன்கள் அளவிற்கு இக் கனிமங்கள் சேர்ந்து விடுகின்றன.

இதுபோன்று உருவாகும் படிவங்களை புவி அறிவியல் வல்லுநர்கள் ஒதுங்கு படிவங்கள் (ப்ளேசர் டெபாசிட்) என்று அழைக்கிறார்கள். தாய்ப்பாறைகளில் ஒரு சதவிகிதம் அளவிற்கே இருக்கும் இந்த அடர் கனிமங்கள் ஒதுங்கு படிவங்களில் 30 முதல் 35 சதவிகிதம் வரை இருப்பது இயற்கையின் விளையாட்டால் ஏற்பட்ட இனிய விளைவே ஆகும்.

இந்த ஒதுங்கு படிவங்கள் தென்தமிழகக் கடற்கரைப் பகுதிகளில் மட்டுமல்லாது, கடற்கரையை ஒட்டியுள்ள தேரி மணற்திட்டுப் பகுதிகளிலும் மிக அதிக அளவில் காணப்படுகின்றன. கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, ராமநாதபுரம் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டக் கடற்கரைப் பகுதிகள் இல்மனைட் மற்றும் ரூட்டைல் அடர் கனிமங்கள் கிடைக்கும் பகுதிகளாகக் கண்டறியப்பட்டுள்ளன. கேரளம், ஆந்திரம், ஒரிசா, கர்நாடகம் மற்றும் மகாராஷ்டிரக் கடற்கரைப் பகுதிகளிலும் ஒதுங்கு படிவங்கள் உள்ளன.

இந்தப் படிவங்கள் குறித்து பூர்வாங்க ஆய்வுகளை இந்திய புவி அறிவியல் ஆய்வுத்துறையினர் (ஜி.எஸ்.ஐ.) மேற்கொண்டனர். தொடர்ந்து மத்திய அணுக் கனிம ஆய்வு இயக்ககம் விரிவான ஆய்வுப்பணிகளை மேற்கொண்டது. இந்த ஆய்வு இந்தியக் கடற்கரையில் சுமார் 2,400 கி.மீ. நீளத்திற்கு நடத்தப்பட்டது.

தென் தமிழகக் கடற்கரைப் பகுதிகளில் சுமார் 9 மீட்டர் ஆழம்வரை இந்தக் கனிமங்கள் உள்ளதாக அணுக் கனிம இயக்கக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கடற்கரை மணலில் சுமார் 13 சதவிகிதம் முதல் 35 சதவிகிதம் வரை அடர் கனிமங்கள் உள்ளன. அணுசக்தித் துறையில் பயன்படும் தோரியம் அடங்கியுள்ள மானோசைட், தொழில்துறைகளில் பயன்படும் கார்னெட், சில்லிமினைட் மற்றும் ஜிர்க்கான் கனிம மணல்களும் இப் பகுதிகளில் கிடைக்கின்றன.

தென்தமிழகக் கடற்கரைப் பகுதிகளில் சுமார் 9.8 கோடி டன் இல்மனைட்டும் சுமார் 0.5 கோடி டன் ரூட்டைலும் உள்ளதாக அரசு அறிக்கைகள் கூறுகின்றன. இவை இயற்கை அன்னை நமக்கு அளித்துள்ள பெருங்கொடை. அந்த இயற்கை அன்னைக்கு ஊறு விளைவிக்காமல், இயற்கைச் சூழலுக்கு மாசு ஏற்படுத்தாமல் இந்த அரிய செல்வத்தை அதற்கென வகுக்கப்பட்ட விதிமுறைகளின்படி அளவோடு எடுத்துப் பயன்பெறுவதே அறிவுடைமை ஆகும்.

(கட்டுரையாளர்: புவி அறிவியலாளர்)

——————————————————————————————————————————–

டைட்டானியம் டை ஆக்ஸைடு-வரமா, சாபமா?

டி .எம். விஸ்வநாத்

டாடா நிறுவனத்தின் டைட்டானியம் டை ஆக்ஸைடு ஆலை – செய்தி ஊடகங்களில் பிரதான இடத்தைப் பிடித்திருக்கிறது. மாநிலம் தழுவிய அளவில் இந்த விஷயம் குறித்த வாதப் பிரதிவாதங்கள் அனல் பறந்து கொண்டிருக்கின்றன. ஒவ்வோர் அரசியல் கட்சியும் தனது குழுவை தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களுக்கு அனுப்பி அப்பகுதி மக்களின் கருத்துகளைக் கேட்டு வருகிறது. அப்பகுதி மக்கள் பதிலளித்தே மாய்ந்து போகிறார்கள். ஆனால் இவ்வாறு கட்சிகள் கருத்து கேட்பதால் அப்பகுதி மக்கள் ஒரு தெளிவுக்கு வந்து விட்டார்கள். பொட்டல் காடு என்று தங்களது நிலப்பரப்பை நினைத்துக் கொண்டிருந்தவர்களுக்கு அங்கு டைட்டானியம் டை ஆக்ûஸடு என்ற விலைமதிக்க முடியாத கனிமம் உள்ளது என்ற தெளிவுதான் அது.

எனவே இனிமேல் ரத்தன் டாடாவே நேரில் வந்து கேட்டாலும்கூட நிலத்திற்குக் கூடுதல் விலை கேட்க அப்பகுதி மக்கள் தயங்க மாட்டார்கள். டைட்டானியம் டை ஆக்ûஸடின் மதிப்பு அப்படி!

நமது பகுதிகளில் உள்ள மணலில் ஒருவித கருப்பு மணல் இருக்கும். இந்த மணலில் உள்ள ஒருவித கனிமம்தான் டைட்டானியம் டை ஆக்ûஸடு. மணலைச் சூடுபடுத்தி அதில் உள்ள கனிமங்களைப் பிரித்தெடுக்கும்போது ஒருவித வெள்ளை நிறப்பொடி கிடைக்கிறது. அதுதான் டைட்டானியம் டை ஆக்ûஸடு. இது வெப்பத்தைத் தாங்கக்கூடியது. சூரிய ஒளியில் உள்ள புற ஊதாக்கதிர்களைக் கிரகித்துக்கொள்ளும் தன்மை படைத்தது.

இக்கனிமம் “அலாய்’ உலோக வகையைத் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு மிகவும் பயனுடையது. குறிப்பாக, விமான என்ஜின்கள், ராக்கெட் மற்றும் ராணுவப் பயன்பாட்டுக்கு இன்றியமையாதது. அதுமட்டுமல்லாமல் நாம் பல் துலக்கப் பயன்படுத்தும் டூத் பேஸ்ட் மற்றும் முகத்தில் தடவும் லோஷன்களிலும் இந்த டைட்டானியம் டை ஆக்ûஸடு உள்ளது. இது ஒரு விஷயம்.

மற்றொரு விஷயம், மணலைச் சூடுபடுத்தி அதில் இருந்து டைட்டானியம் டை ஆக்ûஸடைப் பிரித்தெடுக்கும்போதே தோரியம் போன்ற பிற கனிமங்களும் கிடைக்கும். இந்த தோரியம் அணு உலைகளுக்கு எரிபொருளாகப் பயன்படுத்தக்கூடியது. எனவே டைட்டானியம் டை ஆக்ûஸடு தொழிற்சாலை என்பது சாதாரண விஷயம் அல்ல; நாட்டின் பாதுகாப்பு தொடர்பான விஷயமும் கூட. எனவேதான் இந்த விஷயத்தில் இவ்வளவு எதிர்ப்பு.

பலன்கள் என்கிற ரீதியில் பார்த்தால் – டாடா நிர்வாகம் சொல்லும் பலன்கள் இவைதான் – அதாவது, ஆண்டுக்கு 60 ஆயிரம் முதல் 70 ஆயிரம் டன் வரை டைட்டானியம் டை ஆக்ûஸடை நாம் இறக்குமதி செய்து வருகிறோம். இங்கு ஆலை அமைத்தால் ஆண்டுக்கு ஒரு லட்சம் டன் டைட்டானியம் டை ஆக்ûஸடை நாமே உற்பத்தி செய்ய முடியும்; இந்த ஆலையால் சுமார் ஆயிரம் பேருக்கு நேரடியாகவும், 3 ஆயிரம் பேருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு அளிக்க முடியும். மேலும் அப்பகுதிகளில் பள்ளி, பூங்கா, தண்ணீர் தொட்டி அமைத்தல் போன்ற “சமூக’ சேவைகளையும் செய்து அப்பகுதி மக்களுக்குத் தங்களால் உதவ முடியும் என்பது டாடா நிறுவனத்தின் வாக்குறுதிகள்.

ஆனால், சுற்றுச்சூழல் ஆய்வாளர்களின் பார்வை வேறுவிதமாக உள்ளது. சுமார் 10 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பைக் கையகப்படுத்தி அதில் உள்ள லட்சக்கணக்கான தென்னை, பனை மரங்களை வெட்டி வித்து, அப்பகுதிகளில் உள்ள மணலை எடுத்து அதில் இருந்து கனிமங்களைப் பிரித்தெடுத்து பின்னர் மீண்டும் அந்தக் குழிகளை நிரப்பினால், அதன் பிறகு அந்த நிலத்தை விவசாயத்திற்குப் பயன்படுத்த முடியுமா? அவ்வாறு பயன்படுத்த வேண்டுமானால் ரசாயன உரங்களைப் போட்டு அந்த நிலத்திற்கு மீண்டும் உயிர் கொடுக்க வேண்டும். அதற்கு ஆகும் செலவினங்களை யார் ஏற்பது? மேலும் அவ்வாறு ரசாயன உரங்களைப் பயன்படுத்தினால் நிலத்தின் தன்மை, விவசாயத்திற்கு உகந்ததாக இருக்குமா?

ஏனெனில் கனிமங்களைப் பிரித்தெடுத்தபின் அந்த மணல் கனிம வளங்கள் உறிஞ்சப்பட்ட வெறும் சக்கையாகத்தான் இருக்கும். மேலும் அதில் புவி ஈர்ப்பு விசையும் குறைந்துபோய் பலமிழந்து இருக்கும். அதில் தண்ணீரே நிற்காது. கனிம வளங்களோடு இருக்கும் மணல் பிரதேசத்தில் 4.5 என்ற அளவில் புவி ஈர்ப்பு விசை இருக்கும். கனிமத்தை எடுத்துவிட்டால் வெறும் 2 என்ற அளவில்தான் ஈர்ப்பு விசை இருக்கும். இதுமட்டுமல்லாது இதற்குப் பிறகு இந்த நிலங்களால் டாடா ஆலைக்கு எந்தவிதப் பிரயோஜனமும் கிடையாது. அப்படிப்பட்ட சூழலில் அந்த நிலத்தை மீண்டும் உரிமையாளர்களுக்கே திருப்பிக் கொடுக்கப்படுமா?

இதுதவிர, மணலில் இருந்து டைட்டானியம் டை ஆக்ûஸடைப் பிரித்தெடுக்கும்போது அதில் கதிர்வீச்சு ஏற்படும். அது ஆலைகளில் பணிபுரிவோருக்கும், ஆலையைச் சுற்றி வசிப்பவர்களுக்கும் உடல் ரீதியான பாதிப்பை உண்டாக்கும். கொல்லத்தில் உள்ள சவரா பகுதியில் கடந்த 80 ஆண்டுகளாக மணல் குவாரி செயல்பட்டு வருகிறது. இதனால் அங்கு ஆஸ்துமா, சரும வியாதிகள், மனநோய், பெண்களுக்கு கருச்சிதைவு ஆகியவை அதிக அளவில் ஏற்படுவதாக ஆய்வு விவரங்கள் தெரிவிக்கின்றன. மீன்வளம் மற்றும் உயிரினங்களின் வாழ்க்கை முறை தலைகீழாக மாறும் நிலை ஏற்பட்டுள்ளது. டைட்டானியம் ஆலையால் பாதிப்பு பன்மடங்காக இருக்கும்.

வேலைவாய்ப்பு என்கிற ரீதியில் பார்த்தாலும்கூட, இந்த ஆலை பெரும்பாலும் இயந்திரங்கள் மூலம்தான் இயக்கப்படும். ஏனெனில் மனித உழைப்பு என்பது குறைவுதான். எனவே வேலைவாய்ப்பு என்பதும் வெறும் கண்துடைப்பு நாடகம்தான். கடற்கரைப் பகுதிகளில் கடல் அரிப்பு மற்றும் கடல் நீர் நிலத்தடி நீரோடு கலப்பது போன்ற பிரச்னைகளும் ஏற்படும்.

நெய்வேலி நிலக்கரிச் சுரங்கத்தைச் சுட்டிக்காட்டி, டைட்டானியம் ஆலைக்கு ஆதரவாகப் பேசுபவர்கள், டைட்டானியம் டை ஆக்ûஸடு தயாரிப்பில் கதிர்வீச்சு அபாயம் உள்ளதை மறுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்ல, ஐரோப்பிய கமிஷனின் அறிக்கையின்படி முகத்தில் பூசும் லோஷன்கள் வாயிலாக டைட்டானியம் டை ஆக்ûஸடு உடலுக்குள் ஊடுருவுகிறது என்பது நிரூபணம் ஆகியிருக்கிறது. இந்த “டைட்டானியம் டை ஆக்ûஸடில்’ உள்ள நுண்பொருள் புற்றுநோயை உருவாக்கக்கூடியது என்றும் ஐரோப்பிய கமிஷன் அறிக்கை கூறுகிறது.

இதனையெல்லாம் நாங்கள் கருத்தில்கொண்டுதான் ஆலையை அமைக்கிறோம் என்று டாடா நிர்வாகம் சொல்லுமானால், டாடா நிர்வாகத்தின் செயல்பாடுகளைக் கண்காணிப்பது யார்? ஏனெனில் ஒரு மணல் குவாரியைக் கூட அரசால் ஒழுங்குபடுத்த முடியவில்லை. ஒதுக்கப்பட்ட பகுதிகளில் 3 அடி ஆழத்திற்கும் மேல் மணலை எடுக்கக்கூடாது என்ற விதிமுறை இருந்தாலும்கூட அது நடைமுறையில் உள்ளதா என்றால் இல்லை. பல இடங்களில் மணல் அள்ளுபவர்கள் ஒதுக்கப்பட்ட பகுதியையும் தாண்டி, அதுவும் பல மீட்டர் ஆழம் வரை மணலைச் சுரண்டி வருகிறார்கள். இதனால் பல ஆறுகளின் படுகைகள் வறண்டுள்ளன. இதனால் நிலத்தடி நீர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய சூழலில் ரூ. 2 ஆயிரத்து 500 கோடி செலவில் டாடா நிறுவனம் அமைக்கும் ஆலையில் எந்த அளவுக்கு மணல் அள்ளுகிறார்கள், எந்த அளவு இயற்கை வளம் சுரண்டப்படுகிறது என்பதைக் கண்காணிப்பது யார், அவ்வாறு முறைகேடுகள் நடந்தாலும்கூட அதனைத் தட்டிக்கேட்பது யார்? என்ற கேள்வி எழுகிறது.

நீண்டகாலத்திற்கு அப்பகுதி நிலங்களில் ஏற்படப்போகும் சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் சுகாதார ரீதியான பாதிப்புகளைப் பற்றி கணக்கிடாமல் டைட்டானியம் ஆலை அமைக்கப்படுமானால், அது தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மக்களுக்கு வரம் அல்ல; சாபமாகத்தான் அமையப்போகிறது!

(கட்டுரையாளர்: பத்திரிகையாளர்).

———————————————————————————————————————————————————-

டைட்டானியம் ஆலை யாருக்கு லாபம்?

வி. கிருஷ்ணமூர்த்தி

சென்னை, அக். 10: டைட்டானியம் ஆலை அமைக்க கையகப்படுத்தும் நிலங்களுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள விலைக்கும் அங்கு கிடைக்கும் கனிம வளத்தின் பண மதிப்புக்கும் இடையிலான இடைவெளி மிக அதிக அளவில் இருப்பதாக புகார் எழுந்துள்ளது.

மேலும், சாத்தான்குளம் பகுதியில் இருந்து எடுக்கப்படும் கனிம வளத்தைப் பயன்படுத்தி என்ன வகையான பொருள்கள் தயாரிக்கப்பட உள்ளன என்பது குறித்தும் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன.

திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடலோரப் பகுதிகளில் “டைட்டானியம் டை ஆக்ûஸடு’ ஆலைகளுக்கு தேவையான “இல்மனைட்’ உள்ளிட்ட கனிமங்கள் அதிக அளவில் உள்ளன. இதைக் கருத்தில் கொண்டு இங்கு “ரூடேல்’ அதிக அளவில் இருக்கும் இல்மனைட் கனிமத்தைப் பயன்படுத்துவதற்கான ஆலையை அமைக்க டாடா நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இதற்காக தமிழக அரசுடன் ஒப்பந்தம் செய்து இங்குள்ள சுமார் 9 ஆயிரம் ஏக்கர் நிலத்தை டாடா நிறுவனம் கையகப்படுத்த (வாங்க) உள்ளது.

ஏழை மக்களின் நிலத்தை டாடா நிறுவனத்துக்கு அளிக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்திய பல்வேறு அரசியல் கட்சியினர் சாத்தான்குளம் உள்ளிட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று பொதுமக்களின் கருத்துகளைப் பெற்று அதன் அடிப்படையில் அறிக்கைகளையும் அரசுக்கு அளித்தன.

அரசு சார்பில் மூத்த அமைச்சர்கள் அடங்கிய குழு இந்த பகுதிகளுக்கு நேரில் சென்று மக்களின் கருத்துகளைப் பெற்று அது தொடர்பான அறிக்கையை அரசுக்கு அளித்தது. இந் நிலையில் டாடா நிறுவனமே மக்களிடம் நேரடியாக நிலங்களை வாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றது.

இல்மனைட் பயன் என்ன?: தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் டைட்டானியம் டை ஆக்ûஸடு ஆலைக்குத் தேவையான இல்மனைட் அதிக அளவில் இருக்கிறது. இதிலிருந்து பெயின்ட் தயாரிக்க உதவும் “ரூடேல்’, “அனடேஸ்’ உள்ளிட்ட ரசாயனப் பொருள்கள் கிரிஸ்டல் வடிவில் கிடைக்கும் என ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

வெளிப்புற பூச்சுகளுக்கான பெயின்ட்களில் மிக அதிக அளவு பளபளப்பு தருவது, நீடித்து உழைக்கும் தன்மை ரூட்டேலில் அதிகம். தற்போது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இருந்து இறக்குமதி செய்தே பயன்படுத்தப்படுவதால் இதன் விலையும் அதிகம்.

இந்தியாவில் இதில் சின்தடிக் ரூடேல் கேரளத்தில் உள்ள ஒரு ஆலையில் மட்டும் தயாரிக்கப்படுகிறது. அதுவும் வெளிப்புறப் பூச்சுக்கான பெயின்ட்களில் பயன்படுத்தப்படுவதில்லை என்பதால் டாடா ஆலைக்கு முக்கியததுவம் அதிகரித்துள்ளது என்றும் அவர்கள் கூறினர்.

தோரியம் இல்லை: இல்மனைட்டில் அணுசக்தி உற்பத்திக்கு தேவையான தோரியம் இருப்பதாக கூறப்படுவது தவறு. தோரியம் மானசைட்டிலிருந்துதான் கிடைக்கும். இதைப் பிரித்தெடுக்கும் தொழில்நுட்பம் இன்னும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இடைவெளி அதிகமா? இந்த ஆலை அமைக்க கையகப்படுத்தப்படும் 9 ஆயிரம் ஏக்கர் நிலத்துக்கு ஏக்கருக்கு தலா ரூ. 50 ஆயிரம் வீதம் கிரயமாக வழங்க டாடா நிறுவனம் முன் வந்து அதற்கான பணிகளிலும் ஈடுபடத் தொடங்கிவிட்டது.

தமிழகத்தில் மொத்தம் 10 கோடி டன் இல்மனைட் இருப்பதாகவும், சாத்தான்குளம், குட்டம் உள்ளிட்ட பகுதிகளில் மட்டும் 65 முதல் 70 சதவீதம் இல்மனைட் இருப்பதாக தமிழக அரசின் மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.

இதில் இருந்து சுமார் 50 லட்சம் டன்கள் வரை ரூடேல் கிடைக்கும். இந்த பகுதியில் சில இடங்களில் ரூட்டேல், அனடேஸ் ஆகியவை தனியாகவும் கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளன.

உத்தேச சந்தை மதிப்பின் படி சர்வதேச சந்தையில் ஒரு டன் ரூடேல் ரூ. 40 ஆயிரம் எனக் கூறப்படுகிறது.

இந்தியாவில் ரூடேல் உற்பத்தியில் வேறு பெரிய நிறுவனங்கள் இல்லாததால் டாடா நிறுவனம் வைப்பதே இறுதி விலையாக இருக்கும். இதன் மூலம் ரூடேல் உற்பத்தியில் டாடா நிறுவனம் முற்றொருமை சக்தியாக உருவெடுக்கும்.

இந்த மதிப்பின்படி பார்த்தால் டாடா நிறுவனம் இந்த திட்டத்துக்காக ஒதுக்கியுள்ள மொத்த தொகையான ரூ. 2,500 கோடியில், நிலத்துக்காக ரூ. 50 கோடி மிகவும் குறைவான தொகை என கூறப்படுகிறது.

குறிப்பிட்ட ஆண்டுகள் வரையே இங்கு தாதுப் பொருள் எடுக்கப்படும் என்பதால் இங்கு மக்களிடம் குத்தகை அடிப்படையில் நிலங்களைப் பெற்று ஆலை திட்டம் முடிந்தவுடன் நிலத்தை அவர்களிடமே அளிக்கலாம் என்ற யோசனையும் தற்போது முக்கியத்துவம் பெற்று வருகிறது.

ஆனால், டாடா நிறுவனம் இறக்குமதி தரத்திலான “ரூடேலை’ தயாரித்தால் மட்டுமே, இந்த திட்டம் மதிப்பு மிக்கதாக இருக்கும் என ரசாயன ஆராய்ச்சி வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும், இங்கு எடுக்கப்படும் இல்மனைட்டிலிருந்து டைட்டானியம் ஆக்சைடு பிரித்தெடுக்கப்பட்டவுடன் எஞ்சியிருக்கும் இரும்பு ஆக்ûஸடு நிலத்தில் விடப்பட்டால் இப் பகுதி நிலங்கள் எந்த காலத்திலும் விவசாயத்துக்கு பயன்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்படும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

டைடானியம் ஆலை முற்றிலும் தனியார் நிறுவனமாக லாப நோக்கத்தில் செயல்பட உள்ளதால் இதற்கு நிலம் அளிப்பவர்களுக்கு உரிய பங்கு அளிக்கப்பட வேண்டும்.

இதற்காக கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு சந்தை விலையைவிட, அதில் கிடைக்கும் லாபத்தில் நிலத்தின் பங்களிப்பு அடிப்படையில் விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்பதே பல்வேறு தரப்பினரின் கருத்து.

Posted in ADMK, Alloy, Arms, cancer, carcinogen, Chemical, Chemistry, CPI, CPM, Discovery, DMK, Effects, Employment, Engg, Engineering, Explore, Factory, Fighter, Flights, Jobs, Manufacturing, medical, Medicinal, Mine, Mineral, Missiles, Nadar, Ocean, Planes, Plant, PMK, Project, Sathankulam, Science, Sea, Shore, surgery, TATA, Technology, titania, titanium, Titanium dioxide, Uses, Value, War, Weapons | 1 Comment »

Katcha Theevu – Issue & History: Indian Naval Strategy

Posted by Snapjudge மேல் மே 10, 2007

கச்சத்தீவைக் கை கழுவியதால்…?

தி. இராசகோபாலன்

காஷ்மீர், பாரதத் தாயின் முகமென்றால், கச்சத்தீவு கால்விரல் மெட்டி எனலாம்.

கச்சத்தீவின் நீளம் ஒரு கல்; அகலம் அரை கல். யாழ்ப்பாணத்திலிருந்து 70 கி.மீ., ராமேசுவரத்திலிருந்து 18 கி.மீ. கச்சத்தீவில் “டார்குயின்’ எனும் பச்சை ஆமைகள் அதிகம். கச்சம் என்றால் ஆமை என்பர். எனவே பச்சைத் தீவு நாளடைவில் கச்சத்தீவு ஆயிற்று. 1882ஆம் ஆண்டிலிருந்து எட்டுத் தீவுகளும் 69 கடற்கரை ஊர்களும் ராமநாதபுரம் சேதுபதிக்குச் சொந்தமாக இருந்தன. அந்த எட்டுத் தீவுகளில் கச்சத்தீவும் ஒன்று.

கிழக்கிந்திய கம்பெனியினர் ராமநாதபுரம் சேதுபதியிடம் ஒப்பந்தத்தின் அடிப்படையில், குத்தகை நிலமாக கச்சத்தீவைப் பெற்றனர். இலங்கையின் அமைச்சரவைச் செயலராக இருந்த பி.பி. பியரிஸ், “விக்டோரியா மகாராணியின் அரசறிக்கைப்படி கச்சத்தீவு இலங்கையைச் சேர்ந்ததன்று; அது ராமநாதபுரம் சேதுபதிக்குச் சொந்தம்” என உறுதிப்படுத்தினார். என்றாலும், இலங்கை அரசு 1955, 56-ல் தன்னுடைய கடற்படைப் பயிற்சிக்குத் தகுந்த இடமாகக் கச்சத்தீவைத் தேர்ந்தெடுத்து, தன்னுடைய பணியையும் அங்கு தொடங்கியது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலங்கையின் அத்துமீறலை நாடாளுமன்றத்தில் எழுப்பியபோது, இந்த விவகாரம் பற்றிப் போதிய தகவல்கள் இல்லை… இந்தச் சிறு தீவுக்காக இரு நாடுகளும் போராடும் என்ற கேள்விக்கு இடமில்லை.

இந்தப் பிரச்சினையில் இந்தியாவின் தன்மானம் கலக்கவில்லை; அதுவும் நம் பக்கத்து நாடான இலங்கையுடன்” எனப் பிரதமராக இருந்த நேரு பதிலுரைத்தார். காஷ்மீர் என்ற முகத்தில் ஒரு சிறு கவலை ரேகை படர்ந்தாலும், அலறித் துடிக்கின்ற மைய அரசு, கச்சத்தீவு என்ற கால்விரல் மெட்டியை இலங்கை அரசு கழற்றியபொழுது கண்டுகொள்ளவே இல்லை. இது முதற் கோணல்.

பின்னர், ஜே.வி.பி. என்ற சிங்கள தீவிரவாத இயக்கம், இந்தியாவுக்கு எதிரான பிரசாரத்தைத் தொடர்ந்து இலங்கையில் பரப்பி வந்தது. அதைக் குறைப்பதற்காக கச்சத்தீவை இலங்கைக்குத் தாரை வார்க்கக் கொள்கையளவில் இந்திய அரசு முடிவு செய்தது.

பின்னர் 1974ஆம் ஆண்டு இந்தியா அணுகுண்டை வெடித்தது. அதனால், சர்வதேச அரங்கில் இந்தியாவின் மீது கண்டனக் கணைகள் வீசப்பட்டன.

ஐ.நா. அவையில் இருந்த 15 உறுப்பினர்களைக் கொண்ட தாற்காலிகக் குழு மூலமாக, இந்தியாவைக் கண்டித்துத் தீர்மானம் நிறைவேற்ற பாகிஸ்தான் முயன்றது. அப்போது அந்தக் குழுவின் தலைமைப் பொறுப்பிலிருந்த இலங்கையின் ஆதரவோடு, இந்தியா அந்த முயற்சியை முறியடித்தது. இச் சூழ்நிலையில் இலங்கை அரசு கேட்டவுடன், நன்றிக்கடனாக இந்தியா கச்சத்தீவைக் கை கழுவ இசைந்தது.

கச்சத்தீவை இலங்கைக்கு வழங்க முன் வந்த இந்திய அரசு, எட்டு நிபந்தனைகளையும் விதித்தது. அதில் ஐந்தாவது விதி: “”இந்திய மீனவர்களும் வழிபாட்டுக்குச் செல்லும் பயணிகளும் கச்சத்தீவுக்கு இதுநாள் வரை வந்துபோனதுபோல் வந்து போவதற்கும், கச்சத்தீவைப் பயன்படுத்தவும் முழு உரிமை உடையவர்கள். இதற்காகச் சிங்கள அரசிடமிருந்து பயண ஆவணங்களோ, நுழைவு அனுமதிகளோ இவர்கள் பெற வேண்டியதில்லை.”

ஆனால், இந்த ஒப்பந்தம் நிறைவேறிய நாளிலிருந்து ராமேசுவரம் மீனவர்களுக்கும் இலங்கைக் கடற்படை வீரர்களுக்கும் தகராறு நடக்காத நாளே இல்லை. கச்சத்தீவை வழங்கியதால், ராமேசுவரத்து மீனவர்கள் வடிக்கும் கண்ணீரும் கடலைப்போல.

மைய அரசு, மேற்கு வங்கத்திற்குச் சொந்தமான “டின்பிகா’ எனும் தீவை, வங்கதேசத்திற்குக் குத்தகைக்குத் தரும்போது எடுத்துக்கொண்ட முன்னெச்சரிக்கையையும் அக்கறையையும் ஏன் கச்சத்தீவில் எடுத்துக்கொள்ளவில்லை என்பதுதான், நமது வருத்தம். டின்பிகாவை வங்க தேசத்திற்குக் குத்தகைக்குத் தந்தாலும், அதன் இறையாண்மை அல்லது ஆட்சியுரிமை இந்தியாவிடம்தான் இருக்கும். மேலும், எந்தக் காரணத்தைக் கொண்டும், அத்தீவை ராணுவத் தளமாகப் பயன்படுத்தக் கூடாது. “டின்பிகா’ ஒப்பந்தத்தில் கடைப்பிடித்த அணுகுமுறையைக் கச்சத்தீவில் கையாளாதது ஏன்?

கச்சத்தீவினால் ஏற்படக்கூடிய நன்மைகளைச் சிந்தித்துப் பார்த்தால், நாம் செய்த வரலாற்றுப் பிழை தெரியும். கச்சத்தீவின் நடுவிலுள்ள கல்லுமலை அருகேயுள்ள ஆழ்கிணற்றின் குடிநீரால், ராமேசுவரத்தின் தண்ணீர்ப் பிரச்சினையைத் தீர்க்கலாம். சித்தமருத்துவத்திற்குத் தேவையான “உமிரி’ போன்ற மூலிகைகள் ஏராளமாகக் கிடைக்கின்றன. கச்சத்தீவுக் கடலில் கிடைக்கும் இறால் மீன்கள் உலகத்தரம் வாய்ந்தவை.

கச்சத்தீவைச் சுற்றியுள்ள கடற்பகுதிகளில் நூறாண்டுகளுக்குத் தேவையான எண்ணெய் வளம் இருப்பதாக சோவியத் கடல் ஆராய்ச்சி நிபுணர்கள் கூறுகின்றனர். கச்சத்தீவு – குமரிமுனைக்கு இடைப்பட்ட கடலுக்கடியில் யுரேனியம், பிளாட்டினம் போன்ற விலை உயர்ந்த கனிமக்கூறுகள் கிடைப்பதாக நிலத்தடி ஆய்வாளர்கள் அறிக்கை தந்துள்ளனர். தாற்காலிகமாக இவற்றையெல்லாம் இழந்து நிற்கும் நாம், நிரந்தரமாகவே இழக்க வேண்டுமா? நீர்மூழ்கிக் கப்பல்களையும் போர்ப்படகுகளையும் செப்பனிடும் தளம் அமைப்பதற்கும், நீர்மூழ்கிக் கப்பல் படையினருக்குப் பயிற்சிக்களம் அமைப்பதற்கும், தகுதி வாய்ந்த இடமாகக் கச்சத்தீவு விளங்குகின்றது.

அணுப்படைத்தளம் அமைப்பதற்கேற்ற சூழலைக் கொண்டதாகவும், போர் விமானங்கள் தாற்காலிகமாக இறங்குவதற்குரிய திட்டாகவும் கச்சத்தீவு இருக்கிறது. ஏவுகணைத் தளமாகவும் இத்தீவைப் பயன்படுத்தலாம்.

கடலின் எச்சரிப்புக் கருவிகளாகப் பயன்படும் மிதவைகளுக்கு இங்கொரு மையம் அமைக்கலாம். ராணுவத்திற்குத் தேவையான தகவல்-தொடர்பு மையங்களையும், “ராடார்’ போன்றவற்றையும் நிர்மாணிக்கலாம். பாக் சந்தி, மன்னார் வளைகுடா ஆகியவற்றில் கப்பற்படை அரண் அமையும்போது கச்சத்தீவும் அதன் மையங்களில் ஒன்றாக அமையலாம்.

பிலிப்பின்ஸ் நாட்டின் எல்லையிலுள்ள “பால்மஸ் மியான்ஜஸ்’ எனும் தீவு, நெதர்லாந்து மக்களுக்குச் சொந்தமானது. ஆனால், நெதர்லாந்து மக்கள் நீண்டகாலம் புழங்காமல் இருந்த காரணத்தால், அந்தத் தீவை ஸ்பெயின் கைப்பற்றியது. பின்னர், அதனைப் பிரெஞ்சுக்காரருக்குத் தாரை வார்த்தது. ஆனால், நெதர்லாந்து மக்கள் உலக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து, இழந்த உரிமையை மீண்டும் பெற்றனர். அதுபோல, கச்சத்தீவில் உரிமையை ஏன் இந்தியா மீண்டும் பெறக் கூடாது?

ராமேசுவரத்தைச் சுற்றி வாழ்கின்ற மீனவர்களுக்கு அது மண் மட்டுமன்று; கண்ணும்கூட. கச்சத்தீவை நாம் கழற்றிவிட்டது முதற்கோணல்; முற்றிலும் கோணல் ஆகாமல் காக்க வேண்டியது, மானுடம் பேசுகின்றவர்களுடைய மகத்தான கடமை.

(கட்டுரையாளர்: தாகூர் கலை அறிவியல் கல்லூரியின் முன்னாள் முதல்வர்).

————————————————————————————————————
கடலுக்குள் செயற்கைப் பவளப் பாறை

பா. ஜெகதீசன்

சென்னை, ஆக. 8: தமிழகக் கடல் பகுதிகளில் மீன் வளத்தைப் பெருக்குவதற்காக “செயற்கைப் பவளப் பாறைகள்’ உருவாக்கப்பட்டு, கடலுக்கு அடியில் நிறுவப்படுகின்றன.

சென்னைக்கு அருகே உள்ள பழவேற்காடு கடல் பகுதியில் மீனவர்களின் பங்கேற்புடன் முதல்முறையாக இந்த செயற்கைப் பவளப் பாறைகளை நிறுவும் பணி அடுத்த சில நாள்களில் தொடங்குகிறது.

பருவமழை தவறிப் பெய்வது, 2004-ல் சுனாமி தாக்கியது, தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் நச்சுக் கழிவுகள் கலப்பது உள்ளிட்ட காரணங்களால், தமிழகக் கடல் பகுதிகளில் மீன் வளம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.

மிகச் சிறிய மீன்களைக் கூட பிடித்து விடும் திறன் படைத்த வலைகளை மீனவர்களில் ஒரு தரப்பினர் பயன்படுத்துகின்றனர். வளர்ந்து கொண்டிருக்கக் கூடிய நிலையில் உள்ள சிறிய மீன்கள், மீன் குஞ்சுகள், சிறிய இறால்கள் போன்றவை அத்தகைய வலைகளில் சிக்கி விடுகின்றன. இதனால் படிப்படியாக மீன் வளம் அந்தக் குறிப்பிட்ட பகுதிகளில் சுரண்டப்பட்டு, அடியோடு குன்றி விடுகிறது. இந்த நிலையை மாற்ற கடலுக்கு அடியில் செயற்கைப் பவளப் பாறைகளை உருவாக்க உத்தேசிக்கப்பட்டது.

வழி காட்டிய முல்லம்: பவளப் பாறைகள் அதிகம் இல்லாத பகுதிகளில் பழங்காலத்தில் மீன்களைத் தாற்காலிகமாகக் கவர்ந்து இழுக்க “முல்லம்’ என்கிற அமைப்பை மீனவர்கள் பயன்படுத்தினர்.

பனை ஓலையால் சுற்றப்பட்ட பனை வெல்லம், புன்னை மரம், வாகை மரத் துண்டுகள், தென்னங்கீற்றுகள் ஆகியவற்றைக் கொண்டு இந்த “முல்லம்’ அமைப்பு உருவாக்கப்பட்டது.

ஒரு குறிப்பிட்ட காலகட்டத்துக்குப் பிறகு, பழைய முல்லம் அமைப்புகளைப் பயன்படுத்த முடியாது. அதற்குப் பிறகு, புதிய முல்லம் அமைப்புகளைத் தயாரித்து பயன்படுத்த வேண்டும்.

பழங்கால முல்லம் அமைப்பை முன் மாதிரியாகக் கொண்டு, தற்போது செயற்கைப் பவளப் பாறைகள் உருவாக்கப்படுகின்றன. கான்கிரீட்டால் ஆன இந்த செயற்கைப் பவளப் பாறைகள் மூன்று வெவ்வேறு வகையான தோற்றங்களைக் கொண்டதாக வடிவமைக்கப்படுகின்றன.

தலா ஒரு டன் எடை: மூன்று அல்லது நான்கு பெரிய வளையங்கள் ஒன்றோடொன்று இணைந்ததைப் போன்ற வடிவத்திலும், முக்கோண வடிவிலான கூண்டில் 6 பெரிய குழாய்கள் பொருத்தப்பட்ட தோற்றத்திலும், ஏராளமான துளைகள் போடப்பட்ட பெரிய செவ்வகக் கூண்டு வடிவமைப்பிலுமாக 3 வகைகளில் இந்த செயற்கைப் பவளப் பாறைகள் உருவாக்கப்படுகின்றன.

இப்படி உருவாக்கப்படும் செயற்கைப் பவளப் பாறை அமைப்புகள் தலா ஒரு டன் எடை கொண்டவையாக இருக்கும். அந்த அளவுக்கு எடை இருந்தால் தான் கடல் நீரோட்டச் சக்தியைத் தாங்கும் திறன் இருக்கும். இந்த அமைப்புகள் சுற்றுச் சூழலைப் பாதிக்காதவையாகவும் இருக்கும்.

இவற்றைக் கடற்கரையில் இருந்து சுமார் 5 கி.மீ. தூரத்தில் கடலுக்கு அடியில் 20 அடி ஆழத்தில் ஆங்காங்கே போட்டு விடுவார்கள். முதலில் கடல் வாழ் நுண்ணுயிரிகளும், பாசிகளும் இந்த அமைப்புகளின் மீது படர்ந்து வளரும்.

இந்தப் பாசியை உண்ண இந்த அமைப்புகளை மீன்கள் நாடி வரும். இந்த மீன்கள் இந்த செயற்கைப் பவளப் பாறை அமைப்புகளில் கூட்டம், கூட்டமாகத் தங்கி, இளைப்பாறி, முட்டையிட்டு, இனப் பெருக்கம் செய்யும்.

மீன்களின் உறைவிடங்கள்: சிறிதுகாலத்தில் இந்த செயற்கைப் பவளப் பாறைகள் மீன் உற்பத்தி தளமாகவும், மீன்களின் உறைவிடங்களாகவும் மாறி விடும்.

இவை அமைந்துள்ள பகுதிகளில் மீன் வளம் அதிகரிக்கும். “முல்லம்’ போன்று தாற்காலிக அமைப்பாக இல்லாமல், பல ஆண்டுகளுக்கு இந்த செயற்கைப் பவளப் பாறை அமைப்புகள் நீடித்து உழைக்கும்.

இந்த செயற்கைப் பவளப் பாறை அமைப்புகள் இடம் பெற்றுள்ள கடல் பகுதிகளில் மற்ற இடங்களில் மீன் பிடிப்பதைப் போல, வலைகளை வீசக் கூடாது. மாறாக, தூண்டில் முறையைப் பயன்படுத்தி தான் மீன்களைப் பிடிக்க வேண்டும்.

தொண்டு நிறுவனத்தின் முயற்சி: சென்னைக்கு அருகே திருவள்ளூர் மாவட்டத்தில் பழவேற்காடு கடல் பகுதியில் இத்தகைய செயற்கைப் பவளப் பாறை அமைப்புகள் அடுத்த சில நாள்களில் நிறுவப்பட உள்ளன.

இதற்கான ஏற்பாடுகளை அம்பத்தூர் விஜயலட்சுமிபுரத்தில் உள்ள “பிளான்ட்’ தொண்டு நிறுவனம் செய்து வருகிறது. மீனவர்கள், நலிந்த பிரிவினர் ஆகியோருக்கு உதவும் பணிகளில் இந்த நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.

பழவேற்காடு பகுதியைச் சேர்ந்த மீனவர்களின் பெரிய படகுகளின் மூலம் இந்த செயற்கைப் பவளப் பாறைகள் கடலுக்குக் எடுத்துச் சென்று நிறுவப்படும். எந்தெந்தப் பகுதிகளில் இவற்றைக் கடலில் நிறுவ வேண்டும் என்பது தொடர்பாக மீனவர்கள், வல்லுநர்கள் உள்ளிட்டவர்களுடன் ஏற்கெனவே ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.

முதல் நாளில் பழவேற்காடு பகுதியில் 30 இடங்களில் இந்த செயற்கைப் பவளப் பாறைகள் கடலுக்குள் நிறுவப்படும். பிறகு, படிப்படியாக மேலும் 70 அல்லது 80 செயற்கைப் பவளப் பாறைகள் அதே பகுதியில் வெவ்வேறு இடங்களில் கடலுக்குள் நிறுவப்படும். இதற்கு கிடைக்கும் பலனைப் பொருத்து, பிற மாவட்டங்களின் கடல் பகுதிகளிலும் இத்தகைய அமைப்புகளை நிறுவ உத்தேசிக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு plant@plantindia.org என்கிற இணையதளத்தைத் தொடர்பு கொள்ளலாம்.

Posted in Army, Artificial, Batticaloa, Border, Boundary, Ceylon, defence, Defense, DK, DMK, Eelam, Eezham, Environment, ethnic, Extremism, Extremists, Fish, Fisheries, Fisherman, fishermen, Fishery, Gandhi, global, History, Indira, Indra, Industry, Jade, Jaffna, Jayalalitha, JVP, KACCHA THEEVU, Katcha Theevu, Liberation Tamil Tigers of Eelam, maritime, MDMK, Nature, Naval, Navy, Nehru, Ocean, Palk Straits, Plant, plantindia, Premadasa, Rain, Ramanad, Ramanadhapuram, Ramanathapuram, Rameswaram, Ramnad, Ramnadhapuram, Refugees, Sea, Sirimavo, Sri lanka, Srilanka, Strategy, Terrorism, Terrorists, TN, Tsunami, UN, VaiGo, VaiKo, Viduthalai Puli, Viduthalai Puligal, Viduthalai Pulikal, Violence, Vituthalai Puli, Vituthalai Pulikal, Waters | 8 Comments »