Chennai Events & Tamil Literary Happenings – Asokamithran meet in Adyar Club
Posted by Snapjudge மேல் மார்ச் 5, 2008
சொல்றாங்க..
நகர்வலம்: அசோகமித்திரன் வெட்டிய கேக்!
சாருகேசி
சென்னை அடையாறு காந்திநகர் கிளப், அந்த வட்டார பிரமுகர்களின் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே உரிய, பிரம்மாண்ட அமைப்பு என்று சென்ற வாரம் வரை நினைத்தது தவறு என்று புதன்கிழமையன்று புரிந்தது.
அப்படிப்புரிய வைத்தவர் வி.ஆர்.அனில்குமார். சிறுதொழில் அதிபர். தொழில் ஆலோசகர். சமஸ்கிருத மொழியில் பி.எச்டி. மேற்கொண்டிருப்பவர். “காந்திநகர் கிளப்பில் எங்கள் நூலகத்தின் இரண்டாம் ஆண்டு விழாவுக்கு அசோகமித்திரனைப் பேச ஏற்பாடு செய்ததற்கு நன்றி. நீங்களும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும்’ என்று கூறினார். முதலில் தயக்கமாக இருந்தாலும், பிறகு அசோகமித்திரன் பேச்சைக் கேட்க வேண்டும் என்ற ஆவலில் கிளப்புக்குப் போனேன்.
ஒரு பெரிய நீண்ட சதுர மேசையைச் சுற்றி நாற்காலிகளில் அங்கத்தினர் அமர்ந்து கொள்ள, எந்தவித பந்தாவும் இல்லாமல், வெகு இயல்பாக வரவேற்றார் செயலர். அப்படியே தலைவரும். கடந்த வருடத்தில் ஒவ்வொரு மாதமும் மூன்றாம் புதன்கிழமையன்று எந்தெந்த எழுத்தாளர் அல்லது பிரமுகர் எந்தப் புத்தகம் குறித்துப் பேசினார் என்பதை ஒரு சிறு பட்டியல் போல் வாசித்து, அவர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கினார் அனில் குமார். அவர்களில் ஸ்ரீகுமார் வர்மா, சயிதா ராதாகிருஷ்ணா (சிவாஜி கணேசன் வாழ்க்கை வரலாற்றை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர்), நரசய்யா
முதலியவர்கள் வந்திருந்தார்கள்.
அசோகமித்திரன் உடல்நலம் குன்றியிருந்தபோதும் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற வந்திருந்து, சிறிது அறிமுக உரைபோலப் பேசிவிட்டு, தமது சிறுகதை (மெüனம்), கட்டுரை (பேட்டி) இரண்டின் ஆங்கில மொழிபெயர்ப்பை வாசித்தார். சுதந்திரம் பெறுவதற்கு முன்னால், திருநெல்வேலியில் நடந்தது போல எழுதப்பட்ட “டூ மென்’ (மெüனம்), ஆங்கிலேயே ஆட்சிக் காலத்தைச் சேர்ந்த சிறுகதைகளின் தொகுப்பில் வெளியானது. அசோகமித்திரனே மொழிபெயர்த்தது. “பேட்டி’யும் அவருடைய மொழிபெயர்ப்புத்தான். இரண்டையும் அவரே படிக்கக் கேட்டபோது அதன் தாக்கம் புலப்பட்டது. உறுப்பினர்கள் அத்தனை பேரும் ரசித்துக் கேட்டார்கள். எங்கெல்லாம் கேலியும், நகைச்சுவையும் வெளிப்பட்டதோ அங்கெல்லாம் குபீரென்று சிரித்தார்கள். (இந்தச் சமயத்தில், மறைந்த தமிழ் எழுத்தாளர் சுப்பிரமணிய ராஜு சொன்னது நினைவுக்கு வந்தது: “அசோகமித்திரனின் படைப்பை எந்த மொழியில் வேண்டுமானாலும் மொழி பெயர்க்கலாம். கொஞ்சம்கூட நெருடாது. ஏனென்றால் அவர் கதைகளில் மனிதாபிமானமும் மனித உறவுகளும் மட்டுமே முக்கிய அம்சங்களாக இருக்கின்றன’)
காந்தி நகர் கிளப்பின் நூலகம் விரிவடைந்து வருகிறது என்றார் அனில் குமார். பொழுதுபோக்கு அம்சங்கள் மட்டும் அல்லாமல், தொழில்துறை பிரமுகர்கள் இப்படி நூல்கள் குறித்தும், படைப்புகள் குறித்தும் எழுத்தாளர்களை அழைத்துப் பேசச் சொல்லி மகிழ்வது ஆரோக்கியமான செயலாகப்படுகிறது.
நண்பர் (ரொட்டேரியன்) வி.ஆர்.அனில்குமார், கூட்ட முடிவில் இரண்டாம் ஆண்டு விழாவைக் கொண்டாடும் வகையில் “கேக்’ வெட்ட அசோகமித்திரனைக் கேட்டுக் கொண்டார்.
கேக், விரித்து வைக்கப்பட்ட புத்தகம் போலவே உருவாக்கப்பட்டிருந்தது!
“மெட்ராஸ் புக் கிளப்’ உறுப்பினர்கள், சென்ற வாரம் பாக்கியம் செய்திருந்தார்கள் என்று சொல்லலாம்.
ஏனென்றால் சொற்பொழிவாற்ற வந்தவர் டாக்டர் சித்ரா மாதவன். தொல்பொருள் ஆராய்ச்சி மற்றும் வரலாற்று நிபுணர். ஒருமுறை ஸ்ரீரங்கம் திருக்கோயில் பற்றி இவர் பேசக் கேட்டவர்கள், அவரைப் பல மேடைகளுக்குப் பேச அழைத்துவிட்டார்கள். தங்கு தடையற்ற ஆங்கிலப் பேச்சு மட்டுமல்ல; ஏராளமான தகவல்களை நக நுனியில் வைத்துக் கொண்டு சரளமாகப் பேசும் பாணி, எவரையும் கவர்ந்துவிடும்.
“தென்னாட்டுக் கோயில்களின் அமைப்பு’ பற்றி சித்ரா மாதவன் நிகழ்த்திய (படங்களுடன் கூடிய) சொற்பொழிவுக்குப் பிறகு, கேள்வி நேரத்தில் அவரை நோக்கி வீசப்பட்ட அத்தனை கேள்விகளுக்கும், அவர் அவ்வப்போதே அளித்த விடைகள் அவர் எவ்வளவு தெளிவாகச் சிந்தித்து வைத்திருக்கிறார் என்பதைக் காண்பித்தது.
குகைக் கோயில்கள் அமைப்பிலிருந்து துவங்கி, ஸ்ரீவில்லிப்புத்தூர் கோயில் வரை, கொடுத்த ஒரே மணி நேரத்தில் அவர் நிகழ்த்திய உரை, புக் கிளப் உறுப்பினர்களை அசரவே வைத்துவிட்டது.
சித்ரா மாதவனின் சமீபத்திய நூல், “விஷ்ணு டெம்பிள்ஸ் இன் செüத் இன்டியா’வில் “திவ்ய தேசங்கள்’ எனக் குறிப்பிடப்படும் திருக்கோயில்களும் இருக்கின்றன. அதிலும் சென்னை மற்றும் காஞ்சிபுரத்தையடுத்த கோயில்கள். பல அதிகம் அறியப்படாதவை.
ஒரு துண்டுச் சீட்டில்கூடக் குறிப்புகள் ஏதும் எழுதி வைத்துக் கொள்ளாமல், கி.வா.ஜகன்னாதனைப் பற்றி “கி.வா.ஜ. நினைவுச் சொற்பொழிவு’ ஆற்றினார் “கலைமகள்’ ஆசிரியர் கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன்; முன்னாள் “தினமணி’ ஆசிரியர் ஏ.என்.சிவராமனின் பேரர்.
தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதய்யரின் முதன்மைச் சீடர் கி.வா.ஜ.வின் வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சிகள் பலவற்றை ஒவ்வொன்றாக கீழாம்பூர் சொல்லி வந்தபோது, பிரமிப்பும், மகிழ்ச்சியும் உண்டாயிற்று.
கி.வா.ஜ.வின் திருமணத்தை உ.வே.சா. நிச்சயித்த நிகழ்ச்சி அவற்றில் ஒன்று. கி.வா.ஜ.வின் மனைவி ஆகப் போகிறவரின் வீட்டில் ஒரு வியாழக்கிழமை போய், தாம் ஞாயிறன்று அவர்கள் வீட்டுக்கு வரப்போவதாகத் தகவல் சொல்லிவிட்டு வரச் சொல்கிறார் ஆசிரியப்பிரான். சீடரும் அந்த வீட்டுக்குப் போய்த் தகவல் சொல்லுகிறார். “என்ன அருந்துகிறீர்கள்?’ என்று வீட்டுக்கார அம்மாள் கேட்க, “தண்ணீர் மட்டும் போதும்’ என்றாராம். “முதல்முதலாக எங்கள் வீட்டுக்கு வந்திருக்கிறீர்கள். காபியாவது சாப்பிட வேண்டும்’ என்று அவர்கள் வற்புறுத்தவே, “நான் காபி அருந்துவதில்லை. பால் ஒரு தம்ளர் கொடுங்கள்’ என்று கூறினாராம். ஞாயிறன்று தம்முடன் சீடர் கி.வா.ஜ.வையும் அழைத்துக் கொண்டு போனப் போது, அன்று பால் கொண்டு வந்து கொடுத்த அந்த வீட்டு உறவுக்காரப் பெண் (கி.வா.ஜ.வின் வருங்கால மனைவி) மற்றவர்களுக்கு காபி கொண்டு வந்து வைத்துவிட்டு, கி.வா.ஜ.வுக்கு மட்டும் பால் கொண்டு வந்து வைத்தாராம்! (“குறிப்பறிதல்’ என்ற சொல்லுக்குப் பெண்கள்தான் சிறந்த உதாரணம் என்றார் கீழாம்பூர்.)
சொற்பொழிவில் தம் பெருமைக்குரிய தாத்தா ஏ.என்.எஸ். பற்றிய தகவல் துளிகளையும் அங்கங்கே தூவினார். (ஏ.என். சிவராமன் பற்றிய வாழ்க்கை வரலாற்று நூலை எழுதிக் கொண்டிருப்பதாகச் சொன்னீர்களே கீழாம்பூர் சார், நூல் எப்போது வெளியாகும்?)
கி.வா.ஜ. எப்படி ஊர் ஊராகப் போய் தமிழ்ப் பழமொழிகள் சேகரித்தார் என்று விவரித்தார் கிழாம்பூர். கி.வா.ஜ.வின் திருக்குறள் விளக்கவுரை இதுவரை யாரும் முயற்சி செய்யாத வகையில், பரிமேலழகர் முதல் சமீபத்திய அறிஞர் வரை சேர்த்துத் தொகுத்த அற்புதமான படைப்பு என்றார்.
இளம் பாடகர் ராகவ் கிருஷ்ணா, வயலின் கலைஞர் வி.வி. ரவியின் புதல்வர். நாலு வயதிலேயே தம் குரல் வளத்தால் கேட்பவர்களை மகிழ வைத்தவர்.
அவர் வழங்கிய சுப்பிரமணிய புஜங்கம், சுப்பிரமணிய அஷ்டகம், சுப்பிரமணிய கலாவரம்பம் ஆகியவை கொண்ட சிடியையும், அவர் பாடிய 11 பாடல்கள் கொண்ட “பிருந்தாவனம்’ என்ற சிடியையும் மியூசிக் அகடமி தலைவர் முரளி, தியாகராஜ வித்வத் சமாஜ சந்நிதியில் வெளியிட, ராகவ் கிருஷ்ணாவின் குரு இசைக் கலைஞர் பி.எஸ். நாராயணசுவாமி பெற்றுக் கொண்டார். (வி.வி. ரவியை அவர் தகப்பனார் நம்மிடம் இசை பயில அழைத்து வந்ததையும் பிறகு ரவியின் தமையனார் வி.வி.எஸ்.ஸின் மகன் முராரியை ரவி அழைத்து வந்ததையும், பிறகு ரவி தம் மகன் ராகவ் கிருஷ்ணாவை இசைப் பயிலத் தம்மிடம் அழைத்து வந்ததையும் குறிப்பிட்டு, “ஒரு குடும்பம் முழுவதுக்கும் ஆசிரியராக இருந்துவிட்டேன். இனி ராகவ்வின் மகன், பேரனுக்கும்கூட குருவாக இருக்கும் பேறு தமக்குக் கிடைக்கக்கூடும் என்று வேடிக்கையாகக் குறிப்பிட்டார் பி.எஸ்.என்.) “பிருந்தாவனம்’ ஓர் அருமையான, அதிகம் தமிழ்ப் பாடல்கள் கொண்ட தொகுப்பு. “நன்றாகப் பாயிடியிருக்கிறான் ராகவ்’ என்று குருவே பாராட்டி விட்டார்!
மறுமொழியொன்றை இடுங்கள்