Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Anandasangaree urges Leaders and people of Tamil Nadu to demonstrate against Prabakaran

Posted by Snapjudge மேல் நவம்பர் 20, 2007

இலங்கை தமிழ் பேசும் மக்களை கைவிட்டுவிட வேண்டாமென தமிழ்நாட்டு தலைவர்களுக்கும் மக்களுக்கும் உருக்கமான வேண்டுகோள்.

தமிழ் நாட்டு தலைவர்களும் மக்களும் இலங்கை பிரச்சினையின் தீர்வுக்கு வழங்கும் ஆதரவானது எவ்வித தீர்வுக்கும் உதவாதது மட்டுமன்றி எதிர் விளைவுகளையே அது ஏற்படுத்தும். ஆகவே ஐக்கிய இலங்கைக்குள் ஒரு நியாயமான தீர்வை காண்பதற்கு தமிழ் நாட்டிலுள்ள சம்பந்தப்பட்ட சகலரும் பல்வேறு வேற்றுமைகளை மறந்து செயற்பட வேண்டுமென மிகுந்த ஆர்வத்துடன் வேண்டுகிறேன். தமிழ்நாட்டில் இயங்கும் சகல அரசியல் கட்சிகளும் ஒருமித்து தனிநாட்டுக் கோரிக்கைக்கு ஊக்கமளிக்கக் கூடாது. சர்வதேச சமூகம் பிரிவினையை முற்று முழுதாக எதிர்க்கிறது. இந்தியாவும் இலங்கையின் இறைமை, ஒருமைப்பாடு ஆகியவற்றை வலியுறுத்தி வருகின்றது. தொடர்ந்து நாட்டுப் பிரிவினைக்காக போராடுவது காலத்தை வீணடிப்பது மட்டுமல்லாது உயிர்ச்சேதங்களையும், சொத்தழிவுகளையும் ஏற்படுத்தும். இதை ஒவ்வொரு இந்திய மகனும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

50 ஆண்டுகளுக்கு மேலாக அரசியலில் மிகுந்த ஈடுபாடு கொண்ட முதிர்ந்த தமிழரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான நான் இனப்பிரச்சனை பற்றியும் அதன் தீர்வு பற்றியும் நன்கு அறிவேன். கிளிநொச்சி தொகுதியை பாராளுமன்றத்தில் 14 ஆண்டுகளுக்கு மேல் பிரதிநிதித்துவப்படுத்தியதும், அதை தனிமாவட்டமாக்கியதும் நானே. எனது இல்லத்திலிருந்து 200 யார் தூரத்திலேயே விடுதலைப் புலிகளின் தலைமைக் காரியாலயம் அமைந்துள்ளது. இந்த வேண்டுகோளில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்கள் உண்மையானதாகவும், அதிகாரபூர்வமானதும் எனக் கொள்வதோடு இதில் எப்பகுதியேனும் பிழையாக இருப்பின் யாரும் மறுப்பு தெரிவிக்க முடியும். 20 மைல் இடைவெளியில் பாக்குநீரிணைக்கப்பால் தமிழ்நாட்டில் வாழும் ஆறு கோடி மக்கள் இலங்கையில் தம் இன மக்கள் பற்றி கவலையடைவது நியாயமானதே. ஆகவேதான் தமிழ்நாடு இலங்கை இனப்பிரச்சiனை தீர்வில் கவனமாகவும். எச்சரிக்கையாகவும் செயற்பட வேண்டுமேயன்றி மனக்கிளர்ச்சியையும், உணர்ச்சியையும் தூண்டக்கூடிய பெச்சுக்களால் மக்கள் தூண்டிவிடப்படக் கூடாது. தமிழ்நாடு நியாயமான தீர்வை காண்பதற்கு விசுவாசமாக விரும்பினால் அது நாட்டின் கள நிலைமை பற்றி சரியாக அறிந்திருக்க வேண்டும்.

தமிழ்ச்செல்வனின் மரணம்

தமிழ்ச்செல்வன் அவர்கள் மகாத்மாகாந்தி போன்றோ, அன்றி மார்ட்டின் லூதர் கிங் போன்றோ மக்கள் கொதித்தெழக்கூடிய வகையில் கொலை செய்யப்படவில்லை. விடுதலைப் புலிகளும் அரசும் யுத்தத்தில் ஈடுபட்டிருந்தனர் என்பதும் யுத்த களத்திலேயே அவர் இறந்தார் என்பதையும் மக்கள் உணர வேண்டும். ஒருவரையொருவர் மிஞ்சி செயற்பட வேண்டுமென்று போட்டி போட்டுக் கொண்டனர். தமக்கு தாமே புகழ் தேடக்கூடிய நோக்கோடு விடுதலைப் புலிகள் அண்மையிலும் கூட பல முக்கியஸ்தர்களை கொல்ல முயற்சித்தனர். பாதுகாப்புச் செயலாளர் திரு. கோத்தபாய ராஜபக்ஷவை இலக்கு வைத்து தற்கொலை குண்டுதாரி தாக்கியவேளை மயிரிழையில் அவர் உயிர் தப்பியபோதும் பாதுகாப்பு அதிகாரிகளும், குண்டுதாரியும் அதேயிடத்தில் பலியானார்கள். அதேபோன்று இராணுவத்தளபதி லெப். ஜேனரல். சரத் பொன்சேகா தற்கொலை குண்டுவெடிப்பில் படுகாயமடைந்து நீண்டநாள் வைத்தியத்தின் பின் தப்பினார். ஆனால் பல பாதுகாப்பு உத்தியோகத்தர்களும், தற்கொலை குண்டுதாரியும் அதேயிடத்தில் பலியானார்கள். இவ்விரு தற்கொலையாளிகள் தம் பெற்றோரிடமிருந்து பலாத்காரமாக பிரித்தெடுக்கப்பட்டு போரிடுமாறு மூளைச்சலவை செய்யப்பட்டு விடுதலைப் புலிகளால் பலியிடப்பட்டுள்ளர். இவ்விரு கொலைகளுக்கும் தமிழ்ச்செல்வன் பெறுப்பேற்க வேண்டாமா என்ற கேள்வி ஒவ்வொருவரின் உள்ளத்திலும் எழ வேண்டும். தமிழ்ச்செல்வனை இலக்கு வைத்தமைக்கு இராணுவத்தை எவ்வாறு குறைகூற முடியும். கொலை குற்றத்திற்காக குறைந்தபட்சம் கொலை செய்ய தூண்டியதற்காகவேனும் தமிழ்ச்செல்வன் குற்றஞ்சாட்டப்பட்டிருக்க வேண்டும். ஒரு காலத்தில் ஒருபகுதி தமிழ் மக்களால் சுதந்திர போராளிகள் என பாராட்டப்பட்டு பிற்காலத்தில் அவர்களுடைய கொடூரச் செயல்களால் மதிப்பிழந்த ஒரு இயக்கத்தின் உப தளபதியாக செயல்பட்ட ஒருவரின் மரணத்துக்கு ஆர்பாட்ட ஊர்வலங்களும், கண்டன கூட்டங்களும் நடத்துவதில் அர்த்தமில்லை. மேலும் இது சம்பந்தமாக இலங்கை தமிழர்களே பெரிதாக அலட்டிக் கொள்ளாத அதேவேளை சர்வதேச சமூகம் கவலைப்பட வேண்டிய அவசியமும் இல்லை. கள நிலைமை பற்றி போதிய விளக்கமின்மையும் புலிகளின் பொய் பிரச்சாரமுமே மூளைச்சலவை செய்யப்பட்டு சுயமாக சிந்திக்கின்ற தன்மையை இழந்த அப்பாவி தற்கொலைதாரிகளை பலிகொடுத்த குற்றச்சாட்டுக்காக வழக்கு தொடரப்பட வேண்டிய ஒருவருக்கு இவ்வாறு பதற்றமும், மிகைப்படுத்தப்பட்ட அனுதாபமும் ஏற்பட காரணமாக இருந்தது நியாயப்படுத்த முடியாத ஆட்சேபனைகளும், ஆர்பாட்டங்களும் வெல்லமுடியாதவொரு யுத்தத்தை தொடர்வதற்கு விடுதலைப் புலிகளுக்கு உற்சாகம் கொடுக்கின்ற ஒரு செயலாகும்.

தமிழ்ச்செல்வனின் கொலை பற்றி உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து பல்வேறு கண்டனங்கள் வந்து குவிந்தன. சிலர் சமாதானப் பேச்சுவார்த்தை முறிந்து விட்டது எனக் கூறினர். வேறு சிலர் சமாதானப் புறா கொல்லப்பட்டு விட்டதாக முறைப்பட்டனர். மிகக் கவலைதரும் விடயம் என்னவென்றால் 20 மைல் நீளம் கொண்ட பாக்குத் தொடுவாயால் மட்டும் பிரிக்கப்பட்டுள்ளவர்களுக்குக்கூட இலங்கை நாட்டின் நிலைமை புரிந்துகொள்ள முடியவில்லை. உலகின் பல்வேறு பகுதிகளில் இயங்கும் தமிழ் ஊடகங்கள் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள தமிழ் பிரதேசங்கள் பற்றிய செய்திகளை வெளியிடுவதில்லை. ஆகவே இலங்கை நிலைமை பற்றி அறியக்கூடிய ஒரேயொரு வழி பல கட்சிகளின் பிரதிநிதிகள் வடக்கு கிழக்கிற்கு வந்து விடுதலைப் புலிகளின் பிரதேசங்கள் உட்பட சகல இடங்களையும் பார்வையிடுவதே.

ஒரு கொடூரமான கிளைக் கதை

தமிழ்ச்செல்வனே முழுபொறுப்பையும் ஏற்க வேண்டிய அவர் இறப்பதற்கு பத்து நாட்களுக்கு முன்பு நடந்த சம்பவத்தை நாம் இங்கு குறிப்பிட வேண்டும். மரணிக்க இருந்த 21 பேருடன் புகைப்படம் எடுத்துவிட்டு அசிங்கமான அந்த பணியை திரு தமிழ்ச்செல்வனிடம் விட்டுவிட்டு அவருடைய தலைவர் பிரபாகரன் பங்கருக்குள் ஓடி ஒளிந்து கொண்டார். 21 இளஞர்களும், யுவதிகளும் ஏனைய பல்லாயிரக் கணக்கானோரைப் போல பலவந்தமாக சேர்க்கப்பட்டு போரிடுமாறு மூளைச்சலவை செய்யப்பட்டு தலைவருடன் இராப்போசனம் அருந்தி புகைப்படமும் எடுக்கப்பட்ட பெரும் மகிழ்ச்சியை அவர்களுக்கு கொடுத்து உயிருடன் திரும்பி வரமாட்டார்கள் என அறிந்திருந்தும் உயிருடன் அனுராதபுர தாக்குதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் அறிக்கையின் படி ஒரு பெறுமதியான காரணத்துக்காக இறக்காத 21 இளைஞர், யுவதிகளின் சடலங்களை பொறுப்பேற்குமாறு யாரும் கோரிக்கை விடவில்லை. வீரமும் திறமையுமிக்க நாட்டின் பல்வேறு முன்னேற்றத்திற்கு பயன்படுத்தியிருக்கக்கூடிய இந்த 21 இளைஞர் யுவதிகளையும் கொடூரமான முறையில் கொலை செய்த, அல்லது முட்டாள்தனமாக பலிகொடுத்த சமாதானப் புறா என்றழைக்கப்படும் இம் மனிதரை சமுதாயம் மன்னிக்குமா?.

இலங்கையில், இந்தியாவில் அல்லது உலகின் எப்பகுதியிலேனும் ஒரு பெற்றோர் அல்லது விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகளாக கருதப்படுகின்ற 22 தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவர் அல்லது ஒரு அரசியல் தலைவர், அல்லது விடுதலைப் புலிகளுக்கு நிதியுதவி செய்து புலிகளின் கொள்கையை ஆதரிப்பவர் தன்னுடைய ஆண் பிள்ளைகளில் ஒருவரையோ, பெண்பிள்ளைகளில் ஒருவரையோ புலிகளின் தற்கொலை படைக்கு கையளித்து தற்கொலை பணிக்கு அனுப்பி வைக்க முன்வருவாரேயானால் நான் விடுதலைப் புலிகளை சுத்த வீரர்கள் என பாராட்டுவேன். ஆனால் துரதிஷ்டவசமாக எமக்கு கிடைத்த செய்திகளின் படி திரு தமிழ்ச்செல்வன் உட்பட விடுதலைப் புலிகள் தலைவர்களின் பிள்ளைகள் வெளிநாடுகளில் கல்வி கற்கின்ற வேளையில் உள்ளுர் ஏழைப் பெற்றோர்களின் பிள்ளைகள் பலாத்காரமாக இயக்கத்தில் சேர்க்கப்பட்டு மூன்றுமாத பயிற்சியோடு யுத்த களத்துக்கு அனுப்பப்படுகின்றார்கள். அவர்களில் அநேகர் யுத்தக்களத்தில் இருந்து உயிருடன் திரும்புவதில்லை. அவ்வாறு இறந்தவர்களின் சடலங்களுக்கு அனுபவத்துக்கும் வயதுக்கும் ஏற்ப பொருத்தமான பட்டங்கள் வழங்கி கௌரவிக்கின்றனர். பிள்ளைகளை புலிகள் இயக்கத்துக்கு வழங்க மறுக்கின்ற பெற்றோர்கள் கடுமையாக தண்டிக்கப்படுகின்றனர். பிள்ளைகள் சேர்வதை தடுக்க முடியாது போனவர்கள் தற்கொலையும் செய்து கொண்டுள்ளனர். விடுதலைப் புலிகள் சார்பான ஆர்ப்பாட்டங்கள் எதிலும் இனி சேர்பவர்கள் பல தடவை சிந்தித்த பின்பே சேர்வார்கள் என்றெ நான் நம்புகிறேன்.

முறைப்படி பார்க்கும் போது இந்த 21 இளைஞர், யுவதிகளும் உயிருடன் திரும்ப மாட்டார்கள் என அறிந்திருந்தும் அவர்களை பலாத்காரமாக அனுராதபுர தாக்குதலுக்கு அனுப்பி வைத்த தமிழ்ச்செல்வனும், பிரபாகரனும் கொலைக் குற்றம் சாட்டப்பட வேண்டியவர்கள். ஆனால் அப்பாவி தமிழ்நாட்டு மக்கள் அவர்களை பெரும் வீரர்களாக கணிக்கும் அளவிற்கு தப்பாக வழிநடத்தப்படுகின்றார்கள். இனி ஒருவரேனும் விடுதலைப்புலிகள் புகழ்ச்சியடைய நடைபெறும் ஆர்ப்பாட்டங்கள் எதிலும் கலந்து கொள்ளமாட்டார்கள் என நம்புகிறேன். இவர்கள் தற்கொலை பணிக்கு செல்வதற்கு முன்னர் பிரபாகரனுடன் படம் எடுத்துக் கொண்டமைக்கு ஆதாரம் இருப்பதால் இந்த 21 இளைஞர், யுவதிகள் எந்தவிதமாக அனுராதபுரத்தில் இறந்தார்கள் என்பதை உலகத்துக்கு பிரபாகரன் தெரியப்படுத்த வேண்டும். விடுதலைப் புலிகளின் கொடூர செயல்களின் வரலாற்றில் இவர்களுடைய குற்றங்களை நிரூபிப்பதில் முதல் தடவையாக பொருத்தமான சாட்சி கிடைத்திருக்கிறது.. 21 பேருடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் விடுதலைப் புலிகளின் இணையத்திலும், உள்ளுர் பத்திரிகைகளிலும் மறுநாளே பிரசுரமானது. இந்த 21 பேரும் கடைசியாக பிரபாகரனுடன் இருந்ததற்கு போதிய சாட்சியாகும். இத்தகையவொரு பாரதூரமான புலிகளின் மனித உரிமை மீறலுக்கு எதிராக சர்வதேச சமூகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்ச்செல்வன் கொலையை கண்டித்து ஆதரவாக நடைபெற்ற ஆர்ப்பாட்ட ஊர்வலத்திலும் அனுதாப கூட்டத்திலும் கலந்து கொண்ட ஒவ்வொருவரையும் உங்கள் பிள்ளைகளில் ஒருவரை விடுதலைப் புலிகளின் தற்கொலை படையில் சேர்த்துக்கொள்ள தயாரா என விசனத்துடன் கேட்டுக்கொள்ள விரும்புகிறேன். இல்லையெனில் தமது வாயை திறந்து தமது ஆட்சேபனையை தெரிவிக்காது மௌனியாக்கப்பட்ட ஏழைப் பெற்றோருடைய பிள்ளைகளின் மரணத்தின் மூலம் விடுதலைப் புலிகளுக்கு புகழ் தேடும் உரிமை உங்களுக்கு எப்படி கிடைத்து. இலங்கை அரசும் ஐக்கிய நாடுகள் ஸ்தாபனமும் அவர்களுக்கு உதவ முன்வரவில்லை. சர்வதேச சமூகம் இப்பிரச்சனையை ஐக்கிய நாடுகள் ஸ்தாபன மட்டத்தில் எடுக்க வேண்டும்.

வட பகுதி முஸ்லீம், தமிழ் மக்களுடைய பரிதாப நிலை

தமிழை தாய் மொழியாகக் கொண்ட வட மாகாணத்தில் வாழும் முஸ்லீம் மக்களை புலிகள் நடத்திய கொடூரமான முறைபற்றி தமிழ் நாட்டு மக்களுக்கு எடுத்துரைக்க தவறின் நான் எனது கடமையிலிருந்து தவறியவனாவேன். பால், வயது என்ற வேறுபாடின்றி சகல முஸ்லீம் மக்களும் வட மாகாணத்திலிருந்து தம் உடமைகள் அனைத்தும் விட்டுவிட்டு குறுகிய நேர அவகாசம் கொடுத்து வெளியேற வேண்டுமென புலிகள் கட்டளைப் பிறப்பித்தனர். சிறு பிள்ளைகளின் காதணிகள்கூட பறிக்கப்பட்டது. கடந்த 17 ஆண்டு காலமாக இன்று வரை 160 அகதி முகாம்களில் தெற்கே சிங்கள மக்களுடன் வாழ்கின்றனர். விடுதலைப் புலிகளின் தலையீடு இன்றி என்றோ ஒரு நாள் தமது இல்லங்களுக்கு திரும்புவோம் என படுபரிதாபகரமான நிலையில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். புலிகளின் ஆட் சேர்ப்பு நடவடிக்கைக்கு பயந்து அரச கட்டுப்பாட்டுப் பகுதியில் ஏறக்குறைய 300 தமிழ் பிள்ளைகள் மனித உரிமை ஆணைக்குழுவின் பாதுகாப்பில் வாழ்கிறார்கள். இதுதான் அரச கட்டுப்பாட்டின் கீழுள்ள யாழ்ப்பாணத்தில் வாழ்கின்ற தமிழ் மக்களின் நிலையாகும். தமிழ் மக்களில் அரைவாசிப் பேருக்கு மேல் தென்னிலங்கையில் சிங்கள, முஸ்லீம் மக்கள் மத்தியில் வாழ்கிறார்கள். ஆகவே சிங்கள மக்கள் தமிழ் மக்களை இன அழிப்பு செய்கின்றார்கள். என்ற புலிகளின் குற்றச்சாட்டு வெறும் கட்டுக்கதையே. இன்று தமிழர்களுக்கு விடுதலை பெற்றுத் தருவோம் என்று கூறிய புலிகளிடமிருந்து தமிழ் மக்கள் விடுதலை பெற வேண்டும். இலங்கையில் என்ன நடக்கிறது. புலிகள் மக்களை எவ்வாறு துன்புறுத்துகிறார்கள் என்பவற்றை தமிழ்நாட்டிலிருந்து ஒரு குழுவினர் இலங்கை வந்து புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசம் உட்பட ஏனைய பிரதேசங்களுக்கும் சென்று நேரடியாக அறிய வேண்டும்.

ஒருவரின் மரணத்திலும் நான் மகிழ்ச்சியடைபவன் அல்ல. ஒரு எதிரிக்கும் மரணம் ஏற்படுவதை விரும்பாதவன். எனது கவலையனைத்தும் தமிழீழம் அடைய முடியாது என தெரிந்திருந்தும் ஆயிரக்கணக்கில் எமது இளைஞர்களை விடுதலைப் புலிகள் பலிகொடுப்பதே. அவர்கள் ஏற்கனவே இருபதாயிரம் இளைஞர், யுவதிகளை பெற்றோர் விருப்பத்திற்கு மாறாக பலாத்காரமாக தம்முடன் இணைத்துக் கொள்ளப்பட்டவர்களை பலிகொடுத்துள்ளார்கள். தினமும் இளைஞர்களும், யுவதிகளும் யுத்த களத்துக்கு அனுப்பப்பட்டு மரணிக்கிறார்கள். இதைவிட பல்வேறு தமிழ் இயக்கங்களைச் சேர்ந்த பத்தாயிரத்துக்கு மேற்பட்டவர்கள் இவர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார்கள். 70,000 இற்கு மேற்பட்ட சிங்கள, தமிழ், முஸ்லீம்கள் உயிரிழந்துள்ளார்கள். பல்லாயிரக்கணக்கானோர் அங்க வீனர்களாக ஆக்கப்பட்டிருக்கிறார்கள். 30,000 மேற்பட்டோர் அநாதைகளாகவும், விதவைகளாகவும் வாழ்கின்றனர். எல்லாவற்றுக்கும் மேலாக புலிகளின் இந்த அர்த்தமற்ற யுத்தத்தால் பல கோடி பெறுமதியான சொத்துக்கள் அழிக்கப்பட்டன.

தமிழ்நாட்டு தலைவர்களையும் மக்களையும் நாம் பரிந்து கேட்பது இந்த வேண்டுகோளில் குறிப்பிட்ட அத்தனையும் மிக கவனத்துக்கு எடுத்து உடனடியாக யுத்தத்தை நிறுத்துமாறும், நாட்டுப் பிரிவினையை கைவிட்டு சமஷ்டி அடிப்படையிலோ அதற்குப் பதிலாக இந்திய முறையிலான ஓர் அமைப்பையோ ஏற்றுக்கொண்டு இனப்பிரச்சனைக்கு தீர்வு காணும்படி ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டும். அத்தகைய தீர்வுக்கு இலங்கையரில் பெரும்பான்மையினரின் ஆதரவை பெற்றுக்கொள்ள முடியும். தமிழ்நாடு புலிகளை ஆதரித்து ஒரு வரலாற்றுத் தவறை புரியாமல் அனைவரும் தமது அரசியல் வேறுபாடுகளை மறந்து சமாதான முயற்சியில் ஈடுபடுபவர்களுக்கு ஒத்துழைக்க வேண்டுமென தமிழ்நாட்டு தலைவர்களையும், தமிழக மக்களையும் கேட்டுக்கொள்கிறேன்.

வீ. ஆனந்தசங்கரி
தலைவர்- த.வி.கூ

தமிழர் விடுதலை கூட்டணி (டுல்ப் – TULF) 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: