Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for நவம்பர் 5th, 2007

Pasumpon Muthuramalinga Thevar – Biosketch, History

Posted by Snapjudge மேல் நவம்பர் 5, 2007

நூற்றாண்டு: ஆன்மிகமும் அரசியலும் இரு கண்கள்!

தெய்வத் திருமகனார் முத்துராமலிங்கத் தேவரை இந்நாட்டுக்காக ஈன்றளித்த பெருமைக்குரியோர் உக்கிர பாண்டியத் தேவரும், இந்திராணி அம்மையாரும்.

இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமமே இவர் அவதரித்த திருத்தலமாகும். 30.10.1908 இவர் பிறந்த பொன்னாளாகும். இவர் ஆறு மாதக் குழந்தையாய் இருந்தபோதே அன்னையை இழந்தார். சாந்தபீவி எனும் இஸ்லாமிய அம்மையாரே இவருக்குத் தாய்ப்போல் ஊட்டி வளர்த்தார். இவருக்குக் குருவாக அமைந்து கற்பித்தவரோ கிறித்துவப் பாதிரியார் ஒருவர். எனவே இவரது மத நல்லிணக்கத்திற்கு இதுவே வித்து எனலாம்.

தொடக்கத்தில் தம் இல்லத்திலும், பின்னர் கமுதி, பசுமலை, மதுரை, இராமநாதபுரம் முதலிய இடங்களிலும் கல்வி கற்றார். இவர் இளமை முதலே நாட்டு விடுதலையில் நாட்டம் கொண்டார். தம் பத்தொன்பதாம் அகவையில் மூத்த காங்கிரஸ் தலைவர் ஸ்ரீமான் சீனிவாசக அய்யங்காரின் வழிகாட்டுதலால் அரசியலில் அடியெடுத்து வைத்தார். காங்கிரஸ் பேரியக்கத்தில் தம்மை இணைத்துக் கொண்டு விடுதலை வேள்வியில் தீவிரமாகப் பங்கேற்றார். காந்திஜி அறிவித்த கள்ளுக் கடை மறியலின் போது தமக்குச் சொந்தமான பனை மரங்களை வெட்டி வீழ்த்தினார்.

ஒரு சமயம் இராமநாதபுரம் பகுதிக்கு மூதறிஞர் இராஜாஜி தேர்தல் பிரச்சாரத்திற்கு வருகை தந்த போது அவரை மாட்டு வண்டியில் அமர்த்தி இவரே சாரதியாகச் செயல்பட்டார். தீரர் சத்தியமூர்த்தியுடன் இணைந்து தமிழகமெங்குமுள்ள பட்டி தொட்டிகள் எல்லாம் சுற்றி அனல் பொறி பறக்கப் பிரச்சாரம் செய்து காங்கிரஸ் பேரியக்கத்தை வளர்த்தார். இவர் பெரு நிலக்கிழாராயினும் தம் நிலங்களை உழுபவர்களுக்கே உரிமையாக்கிய உத்தம சீலராவார். தேசியமும் தெய்வீகமும் இவரது இரு கண்கள். இவர் நாட்டு நலனில் நாட்டம் கொண்டதால் இறுதிவரை திருமணமே செய்து கொள்ளவில்லை.

ஒரு சமயம் காமராஜர் விருதுநகர் நகராட்சித் தலைவரானதற்குத் தேவரின் தீவிரப் பிரச்சாரமே காரணமாகும். 1933 ஆம் ஆண்டு இராமநாதபுரம் மாவட்டக் கழகத் தலைவர் பதவி தேவருக்குக் கிடைக்க வாய்ப்பிருந்தும் அதனைப் பெருந்தன்மையோடு தம் ஆத்ம நண்பரான – பின்னாளில் சென்னை மாகாண முதல்வராகவும், ஒரிசா ஆளுநராகவும் பதவி வகித்த – இராஜபாளையம் பி.எஸ்.குமாரசாமி ராஜாவுக்கு விட்டுக் கொடுத்தார்.

ஜமீன் ஒழிப்புப் போராட்டத்திலும், மதுரை மீனாட்சி ஆலைத் தொழிலாளர் போராட்டத்திலும், கைரேகை மறுப்புச் சட்டப் போராட்டத்திலும் தீவிரமாக ஈடுபட்டு அவற்றை வெற்றி பெறச் செய்தார். ஆங்கில அரசு அமுல்படுத்திய குற்றப் பரம்பரைச் சட்டத்தை நீக்கப் போராடி அதிலும் வெற்றி கண்டார். இவரது செயல்பாடுகளைக் கண்டு அஞ்சிய ஆங்கில அரசு இவரைப் பேசவிடாது வாய்ப்பூட்டுச் சட்டம் போட்டது. காங்கிரஸ் கட்சியில் இருந்த போதும், பார்வர்டு பிளாக் கட்சியில் இணைந்த பின்னரும் பலமுறை சிறைவாசம் அனுபவித்தார்.

1937 மார்ச் 11 ஆம் நாள் நடைபெற்ற திரிபுரா காங்கிரஸ் மாநாட்டுத் தலைவராக நேதாஜியைத் தேர்வு செய்ய தேவர் அரும்பாடு பட்டார். அது முதல் அவரோடு நெருங்கிய நட்புப் பூண்டு அவரது சீடராகவே மாறினார்.

08.07.1937 ல் அன்றைய முதல்வர் ராஜாஜியும் விடுதலை வீரர் வைத்தியநாத ஐயரும் தாழ்த்தப்பட்டோரை மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்குள் ஆலயப் பிரவேசம் செய்விக்க முயன்றனர். ஜாதி வெறியர்கள் அதனைக் கடுமையாக எதிர்த்தனர். தாழ்த்தப்பட்டோர் பலரைத் தம் இல்லத்தில் வைத்து ஆதரித்து வந்த பசும்பொன் தேவரின் ஒத்துழைப்பால் தான் அது வெற்றிகரமாக நிறைவேறியது.

நேதாஜியின் தொடர்புக்குப் பின்னர் காந்திஜியின் மிதவாதப் போக்கைக் காட்டிலும், நேதாஜியின் போர்க் கொள்கையே நம்நாட்டு விடுதலைக்கு உகந்தது என்ற முடிவுக்கு வந்தார். தேவரின் அழைப்பிற்கிணங்க 06.09.1939 அன்று நேதாஜி மதுரை வந்து தம் கொள்கையை மக்களிடையே பரப்பினார். நேதாஜி அமைத்த போர்க்குழுவில் தேவரும் இடம் பெற்றார்.

1946 ஆம் ஆண்டு தமிழ்நாடு முதலமைச்சர் ஆந்திர கேசரி பிரகாசம் இவரைத் தொழிலமைச்சராகப் பதவி ஏற்குமாறு இருமுறை வற்புறுத்தியும் இவர் இணங்கினாரில்லை. இந்நிகழ்வுகளால் இவருக்குப் பதவி ஆசை அறவே இல்லை என்பது கண்கூடு.

இவர் இப்புவியில் வாழ்ந்த காலம் 55 ஆண்டுகள்தாம். ஆனால் சிறையில் வாடியதோ 10 ஆண்டுகளுக்கு மேல். இவரது அருந்தொண்டினைக் காணப் பொறுக்காத காலன் 30.10.1963 அன்று இப்பூவுலகை விட்டே அபகரித்துச் சென்றான்.

ஒரு பக்கம் நாட்டு விடுதலைக்காகப் போராடியவராகச் செயல்பட்டாலும் மறுபக்கம் சிறந்த முருக பக்தராகவும் ஆன்மீகவாதியாகவும் விளங்கினார் தேவர்.

பஸ் போச்சு; எரிப்பதற்கு ஏர்பஸ் வந்தாச்சு

Posted in Arms, Assassin, Assassination, Assassinations, Belief, Biosketch, Bloc, Brahmins, Caste, Chandrabose, Community, Cong (I), Cong(I), Congress, Congress (I), Congress Party, Congress(I), Convict, Correctional, Courts, Dalit, dead, Emmanuel, employees, Faces, Faith, FB, FC, Forward Bloc, Forward Block, Freedom, Gandhi, Harijans, Hinduism, Hindutva, History, Immanuel, Independence, Jail, Jameen, Judge, Justice, Kamaraj, kamarajar, Kamraj, Kamrajar, Karthik, Law, Madurai, Muthuramalinga, Muthuramalingam, Nethaji, Oppression, Order, people, Prisons, Rajaji, Religion, Sathiamoorthy, Sathiamurthy, Sathiyamoorthy, Sathiyamurthy, Shubash, Subash, Temple, Thevar, War, Weapons, workers | 142 Comments »

Ayurvedha Corner – Prof. S Swaminathan : Natural Medicines series – How to maintain a healthy physique

Posted by Snapjudge மேல் நவம்பர் 5, 2007

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: மெலிந்திருப்பதே மேலானது!

பேராசிரியர் எஸ். சுவாமிநாதன், ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி, நசரத்பேட்டை -602 103 (பூந்தமல்லி அருகே)
செல் : 9444441771

எனக்கு வயது 45 க்கு மேல் ஆகிறது. உடம்பு ரொம்ப ரெட்டை நாடியான பெரிய சரீரம். என் தொழில் சொந்த வியாபாரம். வேலை செய்தாலே உடம்பில் தண்ணீராகக் கொட்டுகிறது. இரவிலும் குளிக்கிறேன். குளித்தாலும் உடம்பு வாகு முடியவில்லை. பருமன் காரணமாகவே சோர்வு ஏற்படுகிறது. உடம்பு இளைக்க வழியுண்டா?

“கார்ஸ்யமேவ வரம் ஸ்தெüல்யாத் ந ஹி ஸ்தூலஸ்ய பேஷஜம்’ என்று வாக்படர் எனும் முனிவர் தான் இயற்றிய அஷ்டாங்க ஹிருதயம் எனும் நூலில் தெரிவிக்கிறார். அதற்கு அர்த்தம், “பருமனாயிருப்பதைவிட மெலிந்திருப்பது மேலானது. பருமனாயிருப்பவருக்கு மருந்து அரிது’ என்பதாகும். அவர் ஏன் அப்படி ஒரு வினோதமான கருத்தைத் தெரிவிக்கிறார்? அதற்கு அவர் தரும் விளக்கம்தான் என்ன?

குண்டாக இருக்கும் ஒரு நபர் மருத்துவரை அணுகி உடல் இளைக்க மருந்து தாருங்கள் என்று கேட்டால் மருத்துவர் அவருக்கு மூன்றுவிதமான உபதேசங்களை வழங்க வேண்டும். அவை (1)ஆகாரம் – உணவு, (2) விஹாரம் – நடவடிக்கை, (3)ஒüஷதம் – மருந்து.

உணவு மற்றும் நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் தந்து மருந்துக்கு மூன்றாவது இடத்தைத்தான் ஆயுர்வேதம் தந்துள்ளது. இந்தச் சித்தாந்தம் பருமனாயிருப்பவருக்கு மட்டுமல்ல, எல்லா நோய்களுக்கும்தான்.

தன்னிடம் வந்துள்ள நபருக்கு இனிப்பு, புளிப்பு, உப்புச் சுவை நிறைந்த உணவுப் பண்டங்களைச் சாப்பிடக் கூடாது என்று முதல் அதிர்ச்சி வைத்தியத்தை மருத்துவர் உபதேசிக்கிறார். இரண்டாவதாக இச்சுவைகளுக்கு நேர் எதிரிடையான கசப்பு, உவர்ப்பு, துவர்ப்புச் சுவைகளை அதிகமாக உணவில் சேர்க்க வேண்டும் என்று நாக்குக்குத் தண்டனை தரும் உணவைக் கூறுகிறார். இந்த மூன்று சுவைகளும் பருமனாய் உள்ளவனுக்குக் கொழுப்பையும் தோலின் அடியே தங்கியுள்ள கப அடைப்பையும் நீக்கக் கூடியவை. அந்த வகையில் கொள்ளு, காராமணி, பார்லி, கம்பு, மொச்சைப்பயறு போன்ற தானியங்களை உணவாகப் பயன்படுத்த வேண்டும். தேன் கலந்த தண்ணீர், தெளிந்த மோர், கொழுப்பின் உள்ளே ஊடுருவிச் சென்று சூட்டைக் கிளப்பி வறட்சியைத் தோற்றுவித்து கொழுப்பைக் கரைக்கும் கடுகெண்ணெய், நல்லெண்ணெய் போன்றவற்றைத் தாளிக்கப் பயன்படுத்த வேண்டும்.

செய்கைகளில் கவலைப்படுதல், உடற்பயிற்சி, வாந்தி – பேதிக்குக் கொடுத்து உடலைச் சுத்தம் செய்தல், குறைவாகத் தூங்குதல் போன்றவற்றை உடலுக்கு ஏற்றவாறு கடைப்பிடிக்க வேண்டும்.

உடலில் கொழுப்பு அதிகம் வளர்ச்சி பெறுவதால் துவாரங்கள் அடைபடுகின்றன. அப்போது வாயு வயிற்றுக்குள் அதிகம் பரவி பசித்தீயை அதிகம் தூண்டிவிடச் செய்கிறது. அதனால் பசி, தாகம் அதிகப்படுகிறது. மரத்தின் பொந்தில் உள்ள நெருப்பு, காற்றுடன் சேர்ந்து வளர்ந்து மரத்தையே எரிப்பதுபோல், வயிற்றுக்குள் உள்ள பசித்தீயும் வாயுடன் சேர்ந்து வளர்ந்து உடல் பருமன் உள்ள மனிதனை எரித்து விடுகிறது.

மேற்குறிப்பிட்ட உணவு தானியங்கள், சுவைகள் அனைத்து குடல் வாயுவைச் சீற்றமடையச் செய்பவை. பசியை அதிகப்படுத்துபவை. ஆனால் கொழுப்பைக் கரைப்பவை. குடல் வாயுவும், பசியும் தூண்டாமலிருக்க இனிப்பு, புளிப்பு, உப்புச் சுவை, புலால் உணவு, எண்ணெய்ப் பலகாரம் போன்றவை உதவும். ஆனால் இதனால் கொழுப்பு உடலில் அதிகரிக்கக் கூடும். இப்படி ஒரு சங்கடமான நிலை உருவாவதினாலேயே வாக்படர் பருமனுக்கு மருந்து அரிது என்று குறிப்பிடுகிறார்.

பருமன் குறைய மிக அரிதான சில மருந்துகளை ஆயுர்வேதம் குறிப்பிடுகிறது.

* 5கிராம் திரிபலா சூரணத்தில் 10 மிலி தேன் குழைத்து காலை இரவு உணவிற்குப் பிறகு சாப்பிடவும்.

* பார்லி அரிசி 2.5 கிராம், நெல்லிக்காய் வத்தல் 2.5 கிராம் பொடித்து, 10 மிலி தேன் குழைத்து காலை, மாலை வெறும் வயிற்றில் நக்கிச் சாப்பிடவும். இது அதிக பருமனைக் குறைக்கும்.

* லோத்ராஸவம் 15மிலிஅயஸ்கிருதி 15 மிலி 1 கேப்ஸ்யூல் கண்மதம் எனும் சிலாஜது பஸ்மம் இரவில் படுக்கும் முன் சாப்பிடவும்.

* வியர்வையைப் பெருக்கும் நரம்புகள் கொழுப்பிற்கு இருப்பிடமாகையாலும், கொழுப்பு உருகும் தன்மையுடையதாலும், கபத்துடன் கலந்திருப்பதாலும் அதிகப் பருமன் உள்ளவரின் உடலிலிருந்து நாற்றத்துடன் வியர்வை அதிகம் வெளிப்படுகிறது. இதை நீக்க ஏலாதி சூரணத்தை, தயிரின் மேல் தெளிவாக நிற்கும் தண்ணீருடனும், சாதாரண வெந்நீருடனும் குழைத்து உடலில் தேய்த்துக் குளிக்கப் பயன்படுத்தவும்.

Posted in Advice, Ayurveda, Ayurvedha, Ayurvedha Corner, Ayurvedic, Ayurvetha, Diet, Fat, medical, Medicines, Natural, Nutrition, physique, Silm, Wellness | Leave a Comment »

Mooligai Corner: Herbs & Naturotherapy – Chappathi Kalli

Posted by Snapjudge மேல் நவம்பர் 5, 2007

மூலிகை மூலை: மூலத்தின் எதிரி பாதாள மூலி

வட்ட வடிவச் சதைப் பற்றான கொத்துக் கொத்தான முட்களையும் தண்டுகளையும் மஞ்சள் நிறப் பூக்களையும், புறப்பரப்பில் முள்ளுள்ள சிவப்பு நிற உண்ணக் கூடிய கனிகளையும் உடைய கள்ளி இன வகையாகும். தண்டு, வேர், பழம் மருத்துவக் குணம் உடையவை. நஞ்சை நீக்கி, உடல் வெப்பத்தை அகற்றவும் பயன்படுகின்றது. தமிழகம் எங்கும் தானே வளர்கின்றது.

வேறு பெயர்கள்: சப்பாத்திக் கள்ளி, சதுரக் கள்ளி, நாகதாளி.

ஆங்கிலத்தில் : Opuntia dillenii; Haw; Cectrceae

இனி மருத்துவக் குணங்களைப் பார்ப்போம்.

பாதாள மூலி சதையைச் சிறுசிறு துண்டுகளாக்கி சிறிது மிளகுத் தூள் சேர்த்து 10 துண்டுகள் வரை சாப்பிட எட்டி, வாளம், அலரி, சேங்கொட்டை, நாவி, ஊமத்தை ஆகியவற்றின் நஞ்சு இறங்கும். வெப்ப வயிற்றுவலி, அடிக்கடி மலம் கழித்தல், கிராணி, சத்தத்துடன் போகும் சூட்டு பேதி குணமாகும்.

பாதாள மூலி வேரை நிழலில் உலர்த்திக் காய வைத்து இடித்துப் பொடியாக்கி 10 கிராம் எடுத்துச் சாப்பிட பூரான் கடி, வண்டுக்கடி நஞ்சுகள் முறியும். தேள் கடிக்கு இதைக் கொடுத்து, பாதாளமூலியின் காயை வாட்டிக் கடி வாயில் வைத்துக் கட்ட குடைச்சல் நீங்கும்.

பாதாளமூலியின் பழச்சாற்றால் செய்த மணப்பாகு சாப்பிட்டு வர கோடைக்கால வெப்ப நோய் குணமாகும்.

பாதாள மூலியை முள் நீக்கி விளக்கெண்ணெயில் வாட்டி முடக்கு வாதத்திற்கு வைத்துக் கட்டலாம். ஒத்தடம் கூடக் கொடுக்கலாம்.

பாதாள மூலியைத் துண்டு துண்டாக நறுக்கி ஒரு பானையில் ஒரு படி அளவிற்குப் போட்டு 4 லிட்டர் தண்ணீர் ஊற்றி வாய்ப்புறம் துணியினால் ஏடுகட்டி அடுப்பில் வைத்து கருங்குருவை அரிசி மாவைத் துணியில் பரப்பி பிட்டவியல் செய்து எடுத்து 3 நாட்கள் கொடுக்க சகல மூலமும் குணமாகும்.

பாதாள மூலியின் பால், பாலுண்ணி, பரு, மரு போன்ற தோல் நோய்களுக்குத் தடவி வர அவை மறையும்.

பாதாள மூலியின் பாலை உலர்த்திக் காய வைத்து 20 கிராம் எடுத்து சாப்பிட கழிச்சல் உண்டாகும்.

பாதாள மூலியின் பாலை புளி, சீரகத்துடன் சம அளவாக எடுத்து அரைத்து 50 மில்லி கிராம் சாப்பிட வயிறு கழியும். மூட்டு வீக்கங்கள் குறையும். கரப்பான், சொறி, குட்டம், காணாக்கடி, சூலை, குன்மம் முதலியன நீங்கும்.

பாதாள மூலியின் பாலை மூட்டு வீக்கத்திற்கு தடவி அதன் வேர் மண்ணை அதன் மீது தூவி வர வலி குறையும். பாதாள மூலியின் தண்டைச் சுட்டு சாம்பலாக்கி புண்ணின் மீது தூவி வர உலரும்.

பாதாள மூலியின் வேர்ப்பட்டையை நரம்புச் சிலந்திக்கு வைத்துக் கட்ட தணியும்.

பாதாள மூலியின் முட்களை நீக்கிச் சிதைத்துப் புண்கள் மீது வைத்துக் கட்ட புண்கள் உலரும்.

Posted in Alternate, Ayurveda, Ayurvedha, Ayurvedha Corner, Ayurvedic, Ayurvetha, Chappathi Kalli, Health, Herbs, Medicine, Medicines, Mooli, Mooligai, Naturotherapy | 1 Comment »

Vidya Sagar – Community Mental Health and Development (CMHD): mental illness – Schizophrenia

Posted by Snapjudge மேல் நவம்பர் 5, 2007

சேவை: மனம் இருந்தால் “மார்க்’ உண்டு!

மன வளர்ச்சி குன்றியோர் காப்பகங்கள் பல உருவாகியுள்ளன. ஆனால் அவர்களை அவர்களே காத்துக் கொள்வதற்கான பயிற்சிகளும் அளிக்கப்படும் அமைப்புகள் அவற்றில் சிலவே.

இத்தகையவர்களுக்காகக் கடந்த 22 ஆண்டுகளாக சென்னை கோட்டூர்புரத்தில் இயங்கி வந்த ஸ்பாஸ்டிக் சொûஸட்டி ஆஃப் இந்தியா அமைப்பு, இப்போது “வித்யாசாகர்’ என்ற பெயரில் இயங்கத் தொடங்கியிருக்கிறது. ஏன் இந்தப் பெயர் மாற்றம் என்று அவர்களிடம் காரணம் கேட்ட போது, “”பெயரில்கூட அவர்களின் மன வளர்ச்சியை நினைவுபடுத்தி காயப்படுத்த வேண்டாம் என்பதால்தான்” என்கிறார் ஜெயந்தி நடராஜன். இந்த அமைப்பின் விற்பனை மற்றும் வேலைவாய்ப்புப் பிரிவைச் சேர்ந்தவர் இவர். இத்தகையவர்களுக்கான வேலைவாய்ப்புகளுக்காகவும் முனைப்பாகச் செயல்பட்டு வருகிறார்.

“”கடந்த 22 ஆண்டுகளாக மூளை முடக்குவாதம் சம்பந்தமான ஊனமுற்றோரின் மேம்பாட்டுக்காகவும் மாணவர்களைப் பயிற்றுவிக்கவும் பாதுகாக்கவும் செயல்பட்டு வந்த நாங்கள் இப்போது அவர்களுக்கு இலவசமாகத் தொழிற் பயிற்சிகள் அளிக்கவும் ஆரம்பித்திருக்கிறோம்.

எந்தப் பணி இடத்திலும் ஆங்கிலத்தின் தேவை அதிகரித்து வருவதால் அதற்கான பயிற்சியை அளிக்கிறோம். கணினி சம்பந்தமான குறைந்தபட்ச திறன் இப்போது எல்லா துறைகளிலும் தேவையாகிவிட்டது. அதற்கான பயிற்சியையும் “பிஹேவியரல் ஸ்கில்’ எனப்படும் நடத்தைத் திறனுக்கான பயிற்சியையும் அளிக்கிறோம். இவையாவும் இரண்டு மாத இலவச பயிற்சித் திட்டங்களாகும். நடத்தைத் திறன் என்பது உளவியல் ரீதியாக அவர்களை செழுமைப்படுத்துவதாகும். பழகும் தன்மை, செய்தியை விளங்க வைக்கும் திறமை போன்றவை சம்பந்தமானது.

18 வயது முதல் 35 வயதுக்கு உட்பட்ட உடல் ஊனமுற்ற யாவரும் இதில் சேரலாம். உடல் ஆரோக்கியத்துடன் எல்லா திறமையும் இருந்தும் போட்டியை எதிர் கொள்வதற்கான மனோ தைரியம் இல்லாதவர்கள் இருக்கும் சூழலில் எங்களிடம் பயிற்சி பெறுபவர்களின் கண்களில் தெரியும் நம்பிக்கை ஒளி உண்மையில் பிரமிக்க வைக்கிறது” என்கிறார் அவர்.

மனசுகள் முடங்காதவரை எதுவும் யாரையும் எதுவும் முடக்கிவிடமுடியாதுதானே? மனம் இருந்தால் “மார்க்’ உண்டு!

Posted in Behavioral, Challenged, CMHD, cure, Development, Disabled, Disease, Free, Health, Illness, Mental, Phsychological, Schiz, Schizophrenia, service, Skills, Spastic, Students, Teach, Teachers, Vidhyasagar, VidiyaSagar, Vidya Sagar, Vidyasagar, VithiyaSagar, VithyaSagar | Leave a Comment »

Interview with Tamil Writer Bharatha Devi – Thamizh Literature: Author Series in Dinamani Kathir

Posted by Snapjudge மேல் நவம்பர் 5, 2007

முகங்கள்: ஒரே கதையத்தான் டிவி நாடகத்தில் போடுறாங்க!

அவர் படித்தது வெறும் ஐந்தாம் வகுப்பு. ஆனால் அவர் எழுதிய புத்தகங்களை பிஎச்.டி படிப்பிற்காக ஆய்வு செய்கிறார்கள். நான் பதினேழு வயதுவரை மாடுதான் மேய்த்தேன் என்று கபடமில்லாமல் கூறும் அந்த ஒளிவுமறைவற்ற அவரின் தன்மைதான் அவர் எழுத்திலும் வெளிப்படுகிறது.

சிறுகதை, குறுநாவல், நாவல், நாடகம் என்று எழுத்தின் பல்வேறு தளங்களிலும் செயல்படும் பாரத தேவியின் கதைகள் பல பரிசுகளைப் பெற்றிருக்கின்றன.

பாசாங்கற்ற இயல்பான கிராமத்து எழுத்துக்குச் சொந்தக்காரரான பாரததேவியிடம் பேசினோம்.

பாரததேவி என்பது உங்கள் புனைப் பெயரா? இல்லை சொந்தப் பெயரே அதுதானா?

நான் காந்தி இறந்த நாள் அன்னைக்கிப் பொறந்தேன். என் சித்தப்பா ராணுவத்திலே மேஜரா இருந்தவர். அப்பா போலீஸ்காரர். அவுக வச்சபேர்தான் பாரததேவி. சொந்தப் பேரே அதுதான்.

கதை எழுதுவதில் ஆர்வம் எப்படி வந்தது?

ராஜபாளையம் சொக்கலிங்கபுரத்தில அஞ்சாவது வரைக்கும் படிச்சேன். அப்பா நான் சின்னப்புள்ளையா இருக்கிறப்பவே இறந்துபோயிட்டார். அதனால சின்ன வயசுல மாடுதான் மேய்ச்சேன். அந்த நேரத்தில நிறையக் கதைகள் கேட்பேன்.

அப்புறம் எனக்கு கல்யாணமாச்சு. நெறையக் கதை புஸ்தகம் படிக்க ஆரம்பிச்சேன். மு.வ. புத்தகங்கள், நா.பார்த்தசாரதி புத்தகங்கள்ன்னு படிச்சேன். அப்பத்தான் கி.ராஜநாராயணனின் “கோபல்ல கிராமத்து மக்கள்’ படிச்சேன். நான் அப்ப எந்த எழுத்தாளரோட புத்தகத்தைப் படிச்சாலும் அவுகளுக்கு லெட்டர் போடுற பழக்கம் வச்சிருந்தேன். கி.ரா.வுக்கும் போட்டேன்.

அதுமட்டுமில்லாம அவர நேரில் பார்க்கிறதுக்காக கோவில்பட்டி பக்கத்திலே இருக்குற அவரு சொந்த ஊரான இடைசெவலுக்குப் போனேன். அவரைப் பார்த்ததுமே எனக்கு அப்பா மாதிரி தோணிருச்சி.

“”நான் அப்பான்னு உங்களைச் சொல்லட்டுமா”ன்னு அவர்ட்ட கேட்டப்ப அவரும் சந்தோஷமா, “”எனக்குப் பொம்பளைப் புள்ள இல்ல. கல்யாணம் முடிச்சி எந்தச் செலவில்லாம பேரனோட எனக்கு மகள் கிடைச்சா எனக்குச் சந்தோஷம்”னார்.

எனக்கு ரொம்ப சந்தோஷமாப் போச்சு.

நான் அப்பயே ஒன்றிரண்டு கதைங்க எழுதி பத்திரிக்கைக்கு அனுப்பிச்சு வச்சிருந்தேன். ஆனா ஒண்ணுல கூட அதப் போடலை. அதைக் கி.ரா.விடம் சொன்னேன். அவரு, “”நீ கதைய எழுதி எனக்கு அனுப்பி வை”ன்னு சொன்னாரு. அப்புறம் நான் ஊர்ப்பக்கத்தில நடந்த கதையை அவருக்கு அனுப்பி வச்சேன். அவரு அதைப் படிச்சிட்டு இது நாட்டுப்புறக் கதையில்ல. நிகழ்வுன்னார். எது நாட்டுப்புறக் கதை, எது நிகழ்வுன்னு எனக்கு அப்பத் தெரியலை.

அதுக்குப் பின்னால என் முதல்கதை “தாமரை’ பத்திரிகையில வந்துச்சு.

புத்தகம் எதுவும் எழுதியிருக்கிறீர்களா?

நானும் அப்பாவும் (கி.ரா) சேர்ந்து 4 புத்தகம் எழுதினோம்.

நான் தனியா எழுதின புத்தகங்களும் வர ஆரம்பிச்சிச்சு. ” பெண்மனம்’ ரெண்டு பாகம், “நாட்டுப் புறத்துப் பெண்கள்’ எல்லாம் வந்துச்சு. தமிழினி பதிப்பகம் “நிலாக்கள் தூரம் தூரமாக’ன்னு ஒரு புத்தகம் போட்டாங்க. அது 320 பக்கம். எனது 10-17 வயசுல கிராமத்திலே நடந்த உண்மைச் சம்பவங்களை அதில எழுதினேன். நான் எழுதின புத்தகம் இதுவரை 6 வந்திருச்சு.

பத்திரிகைகளில் எதுவும் எழுதியிருக்கிறீர்களா?

“கரிசல் காட்டுக் காதல் கதைகள்’னு அவள் விகடன்ல தொடர் வந்துச்சு. அப்ப தினகரன் வசந்தத்துல எஸ்.கே.முருகன் இருந்தாரு. அவரு முயற்சியால அதில “சுமைதாங்கிக் கற்கள்’னு தொடர் வந்துச்சு.

தூரதர்ஷன்ல, ரேடியோவில, “பெண்ணே நீ’ பத்திரிகையில என் பேட்டி வந்துச்சு. சன்டிவி, மக்கள் டிவியிலும் பேட்டி வந்துச்சு.

நான் படிக்கலையே தவிர என் புத்தகத்தை ரெண்டு பேரு பிஎச்.டி பண்றதுக்காக எடுத்திருக்காங்க. அசோக்குமாருன்னு ஒரு தம்பி இதுக்காக என்னை வந்து பார்த்துச்சு.

ஐந்தாவது வகுப்புதான் படித்திருக்கிறீர்கள். இவ்வளவு புத்தகம் எழுதும் அளவுக்கு நீங்கள் முன்னேறியதற்கு என்ன காரணம்?

நான் இந்த அளவுக்கு முன்னேறுனதுக்குக் காரணம், நான் படிக்காமப் போனதுதான். படிச்சிருந்தா ஒரு வேளை டீச்சர் வேலை பார்த்துக்கிட்டு இருந்திருப்பேன். உலகத்துக்கு நான் இருக்கிறது தெரிஞ்சிருக்காது. புத்தகம் எழுதியிருக்கமாட்டேன். படிக்காமப் போனது பெரிய இழப்பு மாதிரி எனக்குப் பட்டுச்சு. அந்த இழப்பை ஈடுகட்டுற மாதிரிதான் கதை எழுதுற முயற்சியில இறங்கியிருக்கேனோன்னு தோணுது.

வேறு துறைகளில் முயற்சி செய்யாமல் கதை எழுதியதற்குக் காரணம்?

அப்ப கிராமத்தில எல்லாருக்கும் கதை சொல்ற பழக்கம், கேக்ற பழக்கம் இருந்துச்சு. எங்க வீட்டுக்காரரோட அக்கா நல்லா கதை சொல்லுவாங்க. எங்க சின்னம்மா கதை சொல்லுவாங்க. களையெடுக்க, கதிரறுக்கப் போறப்ப கதை சொல்லிக்கிட்டே வேலை நடக்கும். கதையைக் கேட்டு வளர்ந்த நான் கதை எழுத இறங்கினது ஆச்சரியம் இல்லை.

இப்போது கதை சொல்லும் பழக்கம் குறைந்துவிட்டதே? இதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

இந்தக் காலத்துப் பொம்பளைங்க வேலைங்கள எவ்வளவு சீக்கிரமா முடிக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரமா முடிச்சிட்டு டிவி பார்க்க உக்காந்துடுறாங்க. பிள்ளைகள்ட்ட பேசுறது, அன்பா சாப்பாடு கொடுக்கிறது எல்லாம் கெடையாது.

நான்லாம் பிள்ளைகளோட சேர்ந்து பொழுதக் கழிக்கணும்னு நெனைப்பேன். அப்பத்தான் பிள்ளைக கிட்ட மனந்திறந்து பேசமுடியும். கஷ்டம், குடும்பச் சூழ்நிலை பிள்ளைங்களுக்குத் தெரியும். பிள்ளைகளும் நல்ல பிள்ளைகளா வளர்வாங்க.

இப்பல்லாம் சீக்கிரமே மூணுவயசுல பள்ளிக்கூடத்துக்கு அனுப்பிடுறாங்க. இது பிள்ளைங்களுக்கும் நல்லதில்ல. சமுதாயத்துக்கும் நல்லதில்லை.

பிள்ளைகள் போனப்பறம் டிவி பார்க்க உக்காந்திடுறாங்க. ரெண்டு பொம்பளைங்க பேசினா அது நாடகத்தப் பத்தின பேச்சாத்தான் இருக்கு. டிவியில ஒரே கதையத்தான் திரும்பத் திரும்பப் போடுறாங்க. ஒருத்தர் ரெண்டு பெண்டாட்டி கட்டிக்கிறது, மாமியார் கொடுமை இதத்தான் காட்டுறாங்க. இப்பல்லாம் மாமியார் கொடுமை இல்லை. மாமியாரப் பிடிக்கலைன்னா தனியாப் போயிடுறாங்க. அப்புறம் எங்க கொடுமையிருக்கு? நல்லா வாழ்றவங்களுக்கு எப்பிடி இடைஞ்சல் கொடுக்கலாம்?னு காட்டுவாங்க. நாம முன்னேறுறதுக்கு என்ன செய்யணும்னு யோசிக்கணும். அடுத்தவங்களைக் கெடுக்க யோசிக்கக் கூடாது.

ஆனா இந்த நாடகமெல்லாம் சீக்கிரமே மாறிடும்னு நெனைக்கிறேன். ஏன்னா எல்லாமே மாறிக்கிட்டிருக்கு. சனங்களுக்கு இந்த டிவி நாடகத்தைப் பார்த்துப் பார்த்து சலிச்சுப் போயிடும். ஒரு காலத்தில சரித்திரப் படங்கள் அதிகமா வந்துச்சு. இப்ப வருதா? ஏன்? சனங்களுக்கு அதைப் பார்க்கப் பிடிக்கலை.

Dinamani Kathir Bharatha Devi Ki Rajanarayan Karisal Kaattu kathaigal

உங்களுடைய குடும்பத்தைப் பற்றி?

எங்க வீட்டுக்காரரு பள்ளிக்கூடத்தில வாத்தியாரா இருந்து ஹெட்மாஸ்ட்டாரா ஆயி இப்ப ரிடையர் ஆயிட்டார். அவரு எனக்கு ஒத்துழைப்புக் கொடுக்கலேன்னே இந்த அளவுக்கு நான் முன்னேறியிருக்க முடியாது.

எனக்கு ஒரே பையன். கஷ்டப்படுத்தாம, காயப்படுத்தாம வளர்ந்தான். நான்தான் படிக்க முடியலை. பையனை நல்லாப் படிக்க வச்சோம். இப்ப அமெரிக்காவில் பெரிய படிப்பு படிக்கிறான். பொம்பளைப் பிள்ளை இல்லைன்னு கவலையில்லை. எனக்குக் கல்யாணமாகி 11 வருஷம் கழிச்சுத்தான் இவன் பிறந்தான். குழந்தையே இல்லாம இருந்த எனக்கு “இவனாவது பிறந்தானே’ன்னு இருந்துச்சு.

Posted in Author, Bharatha Devi, Biosketch, Faces, Fiction, Interview, Kathir, KiRa, Literature, Novels, Story, Tamil, Thamizh, Writer | 1 Comment »

Simpsons – Vedanthangal in Chennai: A retreat for migrating birds (North Madras)

Posted by Snapjudge மேல் நவம்பர் 5, 2007

சுற்றுச்சூழல்: சென்னையில் ஒரு வேடந்தாங்கல்!

சென்னை என்றாலே ஒருவருக்கு என்ன நினைவுக்கு வரும்?

போக்குவரத்து நெரிசல். புழுதிபடிந்த சாலைகள். வாகனப்புகை நடுவில் சிக்கித் திணறும் மனிதர்கள். வீடுகளில் தோட்டம் வைக்க முடியாத அளவுக்கு இட நெருக்கடி. சாலையில் 30 நிமிஷம் நடந்தால் 300 வகையான மாசுகள் படிந்துவிடும் அளவுக்கு தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் மாசுகள். நடக்கவே முடியாத இட நெருக்கடி. ஏதோ கொஞ்சம் வசதியானவர்கள் வீடுகளில் வேண்டுமானால் கொஞ்சம் பச்சைப் பசேல் செயற்கைப் புல் வெளிகளைப் பார்க்கலாம்.

மாநகராட்சியின் புண்ணியத்தால் எங்கேயாவது தென்படும் பூங்காக்கள்.

இயற்கைக்கும் மனிதனுக்குமான உறவில் நகர்ப்புறங்களில் விழுந்துவிட்ட இடைவெளி என்னவோ அதிகரித்துக் கொண்டே போகிறது.

அதிலும் வடசென்னையைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். எங்கும் குப்பைகள். தெருவில் வழிந்தோடும் சாக்கடை. தொழிற்சாலைகளின் புகை மண்டிய வானம். நெடி வீசும் காற்று. அவசர அவசரமாக வேலைக்குச் செல்லும் மனித இயந்திரங்கள். மனிதர்கள் நிம்மதியாக வாழ்வது சந்தேகம் என்று கூறும் அளவுக்கு நெருக்கடி. புறாக் கூண்டு குடியிருப்புகள்.

ஆனால் இந்த வடசென்னைப் பகுதியில் வனம் போல் ஒரு பகுதி; அங்கே பல வெளிநாட்டுப் பறவைகள் ஆயிரக்கணக்கில் வந்து செல்கின்றன. ஆம்! இங்கே ஒரு பறவைகள் சரணாலயம் இருக்கிறது. நம்புவதற்குக் கொஞ்சம் கஷ்டம்தான். ஆனால் இது உண்மை.

நூற்றுக்கும் மேற்பட்ட வகைகள். ஆயிரக்கணக்கான எண்ணிக்கையில் நீர்ப்பறவைகள். வேடந்தாங்கல் எல்லாருக்கும் தெரியும். ஆனால் சென்னையில் வேடந்தாங்கல் இருப்பது எத்தனை பேருக்குத் தெரியும்? ஆம் அது இருப்பது சென்னை செம்பியம் பகுதியில்தான்.

தொழிற்சாலை என்றாலே அது சுற்றுச் சூழலைக் கெடுக்க வந்தது என்ற எண்ணம் உங்களுக்கு இருந்தால் அதை நீங்கள் கொஞ்சம் மாற்றிக் கொள்ள வேண்டியிருக்கும். ஆம் இந்த சென்னை வேடந்தாங்கல் உருவானதே ஒரு தொழிற்சாலையால்தான்.

நிலம் கிடைத்ததா? அதில் தொழிற்சாலையைத் தொடங்கினோமா? லாபம் சம்பாதித்தோமா? என இருக்கும் பல தொழிற்சாலை நிர்வாகங்களின் மத்தியில் வித்தியாசமாக, கிடைத்த நிலத்தில் இருந்த குளங்களை நல்லபடியாகப் பாதுகாத்து, தொடர்ந்து பராமரித்து வந்தது சிம்சன் நிறுவனம். அதன் விளைவாக வந்து சேர்ந்தனர் பல வெளிநாட்டுப் பறவை விருந்தினர்கள்.

முதன் முதலில் 1978-ல் இங்கு “வக்கா’ எனப்படும் இரவில் உணவு தேடும் அரிய வகை பறவைகள் இருப்பதைத் தற்செயலாகப் பார்த்தனர். அடடா! நம் பகுதியை நாடி பறவைகள் வர ஆரம்பித்துவிட்டனவே! என ஆச்சரியப்பட்ட தொழிற்சாலை நிர்வாகம் இங்குள்ள 2 குளங்களையும் அட்டகாசமாகப் பாதுகாக்க வேண்டும் என்று முடிவெடுத்தது.

சென்னையில் மழை வருவதே அக்டோபர், நவம்பர் மாதங்களில்தான். அதிகம் போனால் ஒரு பத்துநாட்கள் பெய்யும். அப்புறம் ஆண்டு முழுதும் வாட்டி வதைக்கும் வெயில்…வெயில்…தண்ணீர் பஞ்சம்…பற்றாக்குறை.

சில வருடங்களில் இந்தப் பத்து நாள் மழையும் கூட ஏமாற்றிவிடும். மக்கள் குடிக்கத் தண்ணீரின்றி படும்பாடு சொல்லி மாளாது. அப்படிப்பட்ட சிங்காரச் சென்னை மாநகரில் ஒரு குளத்தை வற்றாமல் பாதுகாப்பது என்பது சாதாரண விஷயமா? என்ன?

இந்த வளாகத்தில் பெய்யும் மழை நீரில் ஒரு துளி கூட வீணாகாமல் அனைத்தையும் சேகரித்து இந்தக் குளங்களுக்கு வழங்கும் சிறந்த மழை நீர் சேகரிப்பு அமைப்பு இங்கு செயல்படுகிறது.

அதன் விளைவாக – முறையான இயற்கை வழி பராமரிப்பின் காரணமாக – அந்த 2 குளங்களும் தற்போது பறவைகள் சரணாலயமாக மாறியுள்ளன. சென்னையில் மிக வேகமாக அழிந்து வரும் “வக்கா’ எனப்படும் இரவில் உணவு தேடும் அரியவகை கொக்கு, முக்குளிப்பான், பெரிய நீர்க்காகம், சிறிய நீர்க்காகம், கொண்டை நீர்க்காகம், பாம்புதாரா, சின்ன கொக்கு, உன்னி கொக்கு, குருட்டு கொக்கு, செங்குருகு, கம்புள் கோழி, தாழைக்கோழி, நாமக்கோழி, நீர்க்கோழி, நில தாழைக்கோழி, மேற்கத்திய பொன் முதுகு மரங்கொத்தி போன்ற 110 வகை பறவைகள் இங்கு வந்து இளைப்பாறிச் செல்கின்றன.

இவற்றில் இரவில் உணவு தேடும் வக்கா உள்ளிட்ட சில வகைப் பறவைகள் இந்த குளங்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள மரங்களில் இனப்பெருக்கம் செய்கின்றன.

இவை மட்டுமல்லாது ஐரோப்பா, இலங்கை போன்ற அயல் நாடுகளில் இருந்து “பிட்டா’ உள்ளிட்ட அரிய வகை பறவைகளும் இங்கு வந்து செல்கின்றன.

“”சிம்சன் நிறுவனத்தால் சுமார் 29 ஆண்டுகளாகப் பாதுகாக்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு வரும் இந்த குளங்களில் 10 ஆண்டுகளுக்கு முன்பு சுமார் 22 ஆயிரம் பறவைகள் இருந்தன. அப்போது, பி.என்.எஸ். எனப்படும் மும்பையை சேர்ந்த அமைப்பு சார்பில் நடைபெற்ற பறவைகள் கணக்கெடுப்பில் இந்த தகவல் தெரியவந்தது. இதையடுத்து, இந்த இடம் உலக அளவிலான பறவைகள் சரணாலயங்கள் பட்டியலில் இடம் பெற்றது” என்றார் செம்பியம் எஸ்டேட் மேலாளர் பி. சிவராமமூர்த்தி.

“வக்கா’ எனப்படும் பறவைகள் மட்டும் 8 ஆயிரத்துக்கும் அதிகமாக அப்போது இருந்தனவாம்.

நிறையப் பேருக்கு இப்படியோர் அதிசயம் இருப்பது தெரியாது என்றாலும் தெரிந்தவர்கள் இங்கு வந்து குவிவது சாதாரண நிகழ்வு.

இந்த சரணாலயம் இருக்கும் செம்பியம் பகுதி மட்டுமல்லாது சென்னையில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்தும் பள்ளி, கல்லூரிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் இங்கு வந்து கண்டுகளிக்கின்றனர். இதற்கு நிறுவனத்திடம் உரிய அனுமதி பெற வேண்டும்.

இங்கு வந்து இந்த குளங்களையும், அதில் தங்கும் பறவைகளையும் பார்த்து செல்கின்றனர்.

இந்தப் பறவைகளின் பழக்க வழக்கங்கள், நீர் நிலைகளின் சுற்றுச்சூழல் தன்மை போன்றவை குறித்து நீர்ப்பறவைகள் ஆர்வலர்கள் மற்றும் சென்னை கால்நடை அறிவியல் கல்லூரி மாணவர்களும் ஆராய்ச்சி கட்டுரைகளை உருவாக்கியுள்ளனர்.

110 வகையான பறவைகள் வந்து சென்ற இந்தப் பகுதியில் தற்போது 10, 12 வகைகளை சேர்ந்த சில நூறு பறவைகள் மட்டுமே வந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தக் குளங்கள் அமைந்துள்ள பகுதியைச் சுற்றி இருந்த மற்ற நீர் நிலைகள் மிக வேகமாக அழிந்து வரும் நிலையில் இங்கு வரும் பறவைகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் குறைந்து கொண்டே வருவது கவலை தரக்கூடிய ஒன்றாகும்.

“”இந்த இடத்தைச் சிறப்பாகப் பராமரிக்க விரும்புகிறோம், இது தொடர்ந்து நடைபெறும், பறவைகள் வந்தாலும், வராவிட்டாலும் இந்தக் குளங்கள் இதே அளவு முக்கியத்துவத்துடன் சிறப்பாகப் பராமரிக்கப்படும்” என்று உறுதியாகக் கூறுகிறார்கள் சிம்சன் நிர்வாகத்தினர்.

சென்னை மக்கள் தொழில் வளர்ச்சி, புதிய குடியிருப்புகள் போன்றவற்றில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால், இவர்களே பறவைகளைப் பார்க்க வேண்டும் என்றால் பல கிலோமீட்டர் தூரம் சென்று வேடந்தாங்கலை ரசிப்பார்கள். நம்மிடம் அதுபோன்ற இடம் இல்லையே என அப்போது அங்கலாய்ப்பார்கள். இதற்குக் காரணம் இப்படியோர் இடம் இருப்பது பலருக்கும் தெரியாது. இந்தச் சரணாலயம் அமைந்துள்ள பகுதியில் உள்ள பிற நீர்நிலைகளைக் கான்கிரீட் வனங்களாக மாற்றாமல் இருந்தால்தான் இங்கு பறவைகள் தொடர்ந்து வரும்.

ஆனால் செம்பியம் வளாகத்துக்கு அருகில் இருந்த மாதவரம் ஏரி முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ள நிலையில் இங்கு வரும் பறவைகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது.

“சிம்சன்’ நிறுவனம் மட்டும் இந்தப் பகுதியைத் தொடர்ந்து பறவைகள் சரணாலயமாக வைத்திருக்க பல்வேறு முயற்சிகளைச் செய்து வருகிறது.

ஆனால் நீர் நிலைகளை அரசும், மக்களும் தொடர்ந்து பாதுகாக்க வேண்டும். இல்லாவிட்டால் பலருக்கும் தெரியாத இந்தப் பறவைகள் சரணாலயம் இல்லாமலேயே போய்விடும் அபாயம் உள்ளது.

கோடையிலே இளைப்பாறிக் கொள்ளும் வகையில் அமைந்த இந்தக் குளிர்வனம் காய்ந்து போவதை யார்தான் கற்பனை செய்ய முடியும்?

Posted in Chennai, employees, Environment, Factory, Industry, job, Kathir, Lakes, Madras, migration, Migratory, Nature, Protection, Rains, Rainwater, retreat, Simpsons, Source, Stream, Summer, Tanks, Vedandhaangal, Vedandhangal, Vedanthaangal, Vedanthangal, Water, Winter, workers | Leave a Comment »

Diplomatic tangle over Dalai Lama: Ministers absent at “Peace Pilgrim Award”, instituted by the Gandhi Foundation USA

Posted by Snapjudge மேல் நவம்பர் 5, 2007

தன்னம்பிக்கை இல்லாத அரசு!

ஒரு நாட்டுடன் நட்புறவு வேண்டும் என்பதற்காக அந்த நாட்டின் கொள்கைகளையும், அந்த நாட்டு அரசு செய்யும் தவறுகளையும் கண்களை மூடிக்கொண்டு ஆதரிப்பதோ, கண்டும் காணாமலும் இருப்பதோ ஒரு நல்ல வெளியுறவுக் கொள்கைக்கு அழகல்ல. இந்தியா இப்போது கடைப்பிடித்து வரும் வெளியுறவுக் கொள்கை அத்தகையதுதான் என்பதை மியான்மர், இலங்கை, சீனா மற்றும் பாகிஸ்தானின் செயல்பாடுகள் குறித்து நமது அரசு கடைப்பிடித்து வரும் மௌனம் தெளிவாக்குகிறது.

ஐம்பதுகளில் சீனாவுடன் இந்தியா மிகவும் நெருக்கமான உறவு வைத்துக் கொண்டிருந்த நேரம். அப்போது சீனா தனது அண்டை நாடான திபெத் மீது படையெடுத்து அந்த நாட்டைத் தனது நாட்டுடன் இணைத்துக்கொண்டபோது அதற்கு எதிராக முதல் குரல் கொடுத்தவர் அன்றைய இந்தியப் பிரதமர் பண்டித ஜவாஹர்லால் நேருதான் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. அதுமட்டுமல்ல, சீன அரசின் எதிர்ப்பையும் மீறி, திபெத்திலிருந்து தப்பி ஓடிவந்த தலாய் லாமாவுக்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் ஜவாஹர்லால் நேரு அரசு அடைக்கலம் அளித்தது மட்டுமல்ல, இந்தியாவிலிருந்து தலாய் லாமா தலைமையில் ஒரு திபெத்திய அரசு செயல்படவும் அனுமதித்தது.

பண்டித நேருவின் காலம் தொடங்கி இதற்கு முந்தைய வாஜ்பாயி தலைமையிலான அரசு வரை, அத்தனை பிரதமர்களும் கட்சி வேறுபாடின்றி தலாய் லாமாவை மதித்தார்கள். திபெத் மக்களின் சுதந்திர உணர்வுக்கும், அவர்கள் மீண்டும் தங்களது நாட்டை சீனாவிடமிருந்து திரும்பப் பெறுவதற்கும் இந்தியா தனது தார்மிக ஆதரவை அளிக்கத் தவறவில்லை. அமெரிக்க எதிர்ப்பு, ரஷிய எதிர்ப்பு, சீன எதிர்ப்பு என்று பிரச்னைகளை அணுகாமல், பிரச்னைகளின் அடிப்படையில் மட்டும்தான் இந்தியாவின் அணுகுமுறை இருந்து வந்திருக்கிறது. அதுதான், உலக அரங்கில் இந்தியாவுக்குத் தனி மரியாதையையும் கௌரவத்தையும் பெற்றுத் தந்திருக்கிறது.

உலக அரங்கில் மதிக்கப்படும் சமாதானத் தூதராக தலாய் லாமா திகழ்கிறார். நோபல் பரிசு உள்பட உலகத்தின் மிகப்பெரிய கௌரவங்கள் அவருக்குத் தரப்பட்டிருக்கின்றன. சமீபத்தில், அமெரிக்க அரசின் கௌரவமான அமெரிக்க காங்கிரஸ் தங்கப்பதக்கம் அவருக்குத் தரப்பட்டிருக்கிறது. இதைப் பாராட்டும்வகையில் புதுதில்லியில், காந்தி சமாதான மையத்தின் (Gandhi Peace Foundation்) சார்பில் ஒரு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முன்னாள் பிரதமர் இந்தர்குமார் குஜ்ரால் மற்றும் தில்லி முதல்வர் ஷீலா தீட்சித்துடன் நாடாளுமன்ற உறுப்பினர்களும், மத்திய அமைச்சர்களும் இந்தப் பாராட்டு விழாவில் கலந்து கொள்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், ஐ.கே. குஜ்ரால் தவிர எந்த மத்திய அமைச்சரும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. அதற்குக் காரணம் அவர்களது அவசர வேலைகள் என்றால் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், யாரும் கலந்துகொள்ள வேண்டாம் என்று அமைச்சரவைச் செயலர் தகவல் அனுப்பி அவர்களைத் தடுத்திருப்பது ஏன் என்பதுதான் கேள்வி. இதற்குக் காரணம் கேட்டபோது, அமைச்சரவைச் செயலர் அலுவலகம் தந்திருக்கும் விசித்திரமான பதில், அதைவிட அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது. “சீனா கோபித்துக் கொள்ளும்’ என்பதுதான் அந்த பதில்.

சீனாவின் அதிருப்தியைச் சம்பாதித்துக் கொள்ளக்கூடாது என்பதற்காக நமது ஆதரவுடன் இந்தியாவில் தங்கி இருக்கும், உலகம் ஏற்றுக்கொண்ட சமாதானத் தூதரும், புத்த மதத்தின் மரியாதைக்குரிய மதத்தலைவருமான தலாய் லாமா அவமதிக்கப்படுவது என்ன நியாயம்? எல்லோருக்கும் நல்லவராக இருக்க வேண்டும் என்று நினைத்தால், தவறு என்று தெரிந்தாலும் மௌனமாக இருக்க வேண்டும். அப்படியொரு பலவீனமான நிலை இந்தியாவுக்கு ஏற்படக்கூடாது. அது பண்டித நேரு நமக்கு அமைத்துத் தந்த வெளியுறவுக் கொள்கைக்கு எதிரானது.

உணர்ச்சியே இல்லாத அரசாக இருக்கிறதே இந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு என்று சொல்வதா, இல்லை தன்னம்பிக்கை இல்லாத அரசு என்று இதைச் சொல்வதா?

Posted in Affairs, Alliance, America, Asean, Asia, BJP, Burma, China, Coalition, Commerce, Communism, Communist, Communist parties, Communist Party of India, Communist Party of India-Marxist, Communists, Cong (I), Cong(I), Congress, Congress (I), Congress Party, Congress(I), CPI, CPI (M), CPI(M), CPI(ML), CPI-ML, CPM, Dalai, Dalai Lama, Dalailama, Economy, Exports, Gandhi, Gandhi Peace Foundation, Govt, Imports, Myanmar, Nehru, PAK, Pakistan, Panchasheel, Peace, PM, Relations, Russia, SAARC, Sri lanka, Srilanka, Thalailama, Tibet, US, USA, World | Leave a Comment »

Theodore Bhaskaran, Thamizharuvi Manian, Vasanthidevi, Ra Nallakkannu, Judge Chandru & Kunrakkudi Ponnambala Adigalaar

Posted by Snapjudge மேல் நவம்பர் 5, 2007

என்று சொன்னார்!

ஆர். நல்லக்கண்ணு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி.
ஒரு வெள்ளைக்கார அழகியின் ரோஸ் நிற கன் னத்தில் அழகு ததும்பும் மச்சம். இரண்டு கவிஞர் களுக்கிடையில் அந்த மச்சத்தை வர்ணிக்கிற போட்டி. “செழித்து வளர்ந்திருக்கும் ரோஜாத் தோட்டத்தில் ஒரு கறுப்பு வண்டு தேன் அருந்து கிறது’ என்றார் வெள்ளைக்காரக் கவிஞர்.
“வெள்ளைக்காரன் தோட்டத்தில் அடிமையாக வேலை செய்தே களைத்துப்போன ஒரு கறுப்ப னைப் போல இருக்கிறது அந்த மச்சம்’ எனச் சொன்னார் கறுப்பர் இனக் கவிஞர்.
————————————————————————————————————————————-

தமிழருவி மணியன்.

பூனை குட்டி போட்டால், தாய்க்கு அதிகக் கவலை, பொறுப்பு! பத்திரமாக, வலிக்காமல் நம் மைத் தூக்கிக்கொண்டு போய்விடுவாள் தாய் என்கிற தைரியத்தில் இருக்கும் பூனைக்குட்டி! ஆனால் குரங்கினம் அப்படியில்லை. “தன்னைப் பெற்றவள் எந்த நேரத்திலும் எந்த மரத்துக்கும், எந்தக் கிளைக்கும் தாவிவிடுவாள்; உஷாராக இருக்க வேண்டியது நம் பொறுப்பு’ என்று தாய் மடியைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்ளும் குரங்குக்குட்டி. குரங்கிலிருந்து வந்த மனிதன், பூனை மனோபாவத்துக்கு வந்துவிட்டான். எல் லாவற்றையும் அடுத்தவர்கள் பார்த்துக் கொள் வார்கள் என்கிற பொறுப்பின்மையை வளர்த்துக் கொண்டுவிட்டான்.
————————————————————————————————————————————-

வசந்திதேவி, கல்வியாளர்.

தேவையற்ற அநாகரிகங்களை மேலைநாடுகளி லிருந்து காப்பியடிக்கிற நாம், அவர்களிடம் இருக்கிற நல்ல விஷயங்களைக் கற்பதில்லை.

முதலாளித்துவ நாடுகளின் சிறப்பே, எல்லோ ருக்கும் சமமான கல்வி முறை என்பதுதான். மந் திரியின் மகனுக்கும், மாடு மேய்ப்பவரின் மக னுக்கும் ஒரே வகுப்பறைதான். அனைவருக்கும் தரமான, கல்வி கிடைக்க அரசுதான் செலவு செய் யும். அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் தனி யார் பள்ளிகள் என்று சொன்னாலே சிரிக்கிறார் கள். “கல்வி தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டால், பிறகு எதற்காக அரசாங்கம்” என்று கேட்கிறார் கள்.

————————————————————————————————————————————-

தியோடர் பாஸ்கரன், சுற்றுச்சூழல் ஆர்வலர்.

இன்றைய குழந்தையிடம் முட்டையிலிருந்து என்ன வரும் என்று கேட்டால் “ஆம்லெட்’ என்று சிரிக்கி றது. முட்டை ஓர் உயிர் வளர்கிற இடம் என்பதை நம் குழந்தைகளுக்கு நாம் சொல்லித் தருவதே இல்லை. டால்பினை வெளிநாட்டிலிருந்து இறக்கு மதியான உயிராகப் பார்க்கிற நமக்கு, அதை “ஓங் கில்’ என்று நம் முன்னோர்கள் அழைத்த விவரம் தெரியாது. காட்டில் வாழ்கிற உயிரினங்களைக் குறிப்பிடும்போது “கொடிய விலங்கு புலி’ என்று அறிமுகப்படுத்தபட்டால் எப்படிக் குழந்தைக ளுக்கு விலங்குகள் மேல் நேசம் வரும்? “கொடூரக் காடு’ என்று கதையை ஆரம்பிக்கிறார்கள் நம் கதா சிரியர்கள். சென்னையில் சாலையில் ஓரமாக நடந் துபோனால், உயிருடன் திரும்புவதற்கு எந்த உத்தர வாதமும் இல்லை.
————————————————————————————————————————————-

குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்.

தொலைக்காட்சி பெட்டியை நாக்கூசா மல் “இடியட் பாக்ஸ்’ என்று அழைக்கி றோம். புத்திசாலித்தனமான அந்த அறி வியல் கண்டுபிடிப்பைத் தகுந்தபடி பயன்படுத்திக் கொள்ளாமல், ராசிக்கல் பலன் பார்ப்பது நாம்தானே தவிர, அந் தக் கண்டுபிடிப்பு அல்லவே! இப்படி நாம் செய்யும் தவறுகளுக்குக்கெல்லாம் மற்றவர்களின் மீது பழிபோட்டு, நம் பொறுப்பைத் தட்டிக் கழிப்பதே நம் வழக்கமாக இருக்கிறது. ஆன்மிகத் தைப் புரிந்துகொள்ளாமல் சடங்குக ளின் பின்னால் சென்று சடங்குகளையே ஆன்மிகமாக்கி விட்டோம்.
————————————————————————————————————————————-

நீதிபதி சந்துரு. 

பொது இடங்களில் கழிப்பிடங்களில் செல்லும்போது “ஆண்கள்-பெண்கள்’ என்று தமிழில் எழுதியிருப்பதையே படிக்கத் தெரியாமல் வரைந்திருக்கும் ஆண், பெண் படங்களைப் பார்த்து தெரிந்துகொள்கிற மக்கள் இருக்கிற நாட்டில், மக்களின் மொழியை நீதிமன் றமே புறக்கணிக்கிறது. தன் வழக்கு பற்றி என்ன விவாதம் நடைபெறுகிறது என்பதைப் பாமரன் புரிந்துகொண்டால் வாய்தா வாங்குவதும், இழுத்தடிப்பதும் பெருமளவு குறையும்.

Posted in Authors, Comparisons, Courts, Education, Environment, Evolution, Famous, Fun, Impress, Incidents, Interesting, Judge, Justice, Law, Life, Metaphors, Observations, Order, Quotes, Read, Religion, Rituals, Society, Speech, Study, Wow, Writers | Leave a Comment »

Celebrated Hindustani classical singer Prabha Attre’s 75th birthday celebrations

Posted by Snapjudge மேல் நவம்பர் 5, 2007

வாழும்போதே வாழ்த்துங்கள்!

ஞாயிறு மாலை. மழைச் சாரல் வேறு.

பாராட்டுப் பெறுபவருக்கோ 75 வயது. அதுவும் கர்நாடக இசைப் பாடகி கூட அல்ல. ஹிந்துஸ்தானி இசைப் பாடகி! -இத்தனை இருந்தும் பாரதிய வித்யா பவன் மண்டபம் கிட்டத்தட்ட நிறைந்து இருந் தது. இந்தப் பெருமைக்குச் சொந்தக்காரர் ஸ்ரீமதி பிரபா ஆத்ரே.
ரேடியோவிலும், மும்பை மகளிர் கல்லூரியி லும் இசைப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். குடியரசுத் தலைவரின் பத்ம பூஷன் விருது, சங்கீத நாடக அகாடமி விருது என்று ஏராளமான விருதுகளைப் பெற்றவர் பிரபா ஆத்ரே.

வழக்கறிஞர் கே.சுமதி, இலக்கியத்தில் ஆர் வமுள்ளவர், நாவல் எழுதியிருக்கிறார் என்று தெரியுமே தவிர, ஹிந்துஸ்தானி இசையில் இவ்வளவு ஈடுபாடுள்ளவர் என்று இந்த நிகழ்ச்சி மூலம்தான் தெரிந்தது. “”இந்த வயதி லும் கூட இவர் பாடுகிறதைக் கேட்டால் மெய் மறந்து போய் விடுவோம். இவரை நீங்கள் ஒரு விழா ஏற்பாடு செய்து பாராட்ட வேண் டும்” என்று கிருஷ்ணா ஸ்வீட்ஸ் அதிபர் முர ளியைக் கேட்டுக் கொண்டாராம். ஏற்கனவே பண்டிட் ஜஸ்ராஜ், பண்டிட் ஹரிபிரசாத் சௌ ராசியா போன்ற ஹிந்துஸ்தானி இசைமேதை களை விழா எடுத்துப் பாராட்டியிருப்பவர் முரளி; உடனே இசைந்தார்.

கௌரி ராம்நாராயணன் குத்துவிளக்கேற்றி விழாவைத் தொடங்கி வைத்தார். வழக்கறிஞர் சுமதி விரிவான வரவேற்புரை நிகழ்த்த, பாடகி அருணா சாய்ராம் பிரபா ஆத்ரேயை வாழ்த் திப் பேசினார். அதற்குப் பிறகு வேத பண்டிதர் கள் சமஸ்கிருதத்தில் ஒவ்வொரு தெய்வத்தை யும் வேண்டும் சுலோகங்களைச் சொல்லி அருள் வேண்ட, ஓதுவார்கள் தமிழில் அதே பணியைச் செய்தார்கள்.

(ஓதுவாரின் குரலில்தான் என்ன கம்பீ ரம், என்ன இனிமை! அவர் பாடி முடிக் கும் போதெல்லாம் கைத்தட்டல் எழுந்த தில் வியப்பே இல்லை.) ஒவ்வொரு கடவுளையும் வேண்டி, வாழ்த்துகளை அவருக்குத் தெரிவிக்கும் போது, வெள்ளியில் வேல், திரிசூலம், சடாரி என்று பரிசாகவும் வழங்கினார் கள். பொன்னாடைகள் போர்த்தி, சரசு வதி தேவியின் படத்தையும் அன்பளிப் பாகக் கொடுத்தார் முரளி.

இத்தனை நடக்கும் போதும் ரசிகர்க ளிடமிருந்து எந்தச் சிறு சலசலப்பும் இல்லை. பிரபா ஆத்ரேக்குச் செய்யப்படும் விதவிதமான மரியாதைகளையும் கைதட்டி வரவேற்று மகிழ்ந்தார்கள்.

“”இவர் சரஸ்வதியின் அவதாரம் போன்ற வர். அதனால் வெண்ணிறப் புடவையை அன் பளிப்பாகக் கொடுக்கிறோம்” என்றார் அருணா சாய்ராம்.

அப்புறம் தொடங்கியது பிரபா ஆத்ரேயின் இசை நிகழ்ச்சி.

இந்த எழுபத்தைந்து வயதில் பலருக்குக் குரல் இனிமை போய், கரகரப்பாக மாறி இருக் கும். இனிமை எங்கே என்று தேட வேண்டியி ருக்கும். பலருக்கு இந்த வயதில் குரலில் நடுக் கம் தெரியும். நிலையாக இராது.

பிரபா ஆத்ரேக்கு இந்தப் பிரச்னைகள் எது வுமே இருக்கவில்லை. குரலில் இனிமைக்குக் குறைவு இருக்கவில்லை. குரல் நடுங்கவே இல்லை. குரலில் ஒரு பிசிறு கூடத் தட்ட வில்லை.

ஏழரை மணி ஆகியும் கூட எழுந்து போகாத ரசிகர்கள், அவர் பாட்டைக் கேட்கக் காத்திருந்தது வீண் போகவில்லை.

பெஹாக் ராகத்தில் மெதுவாகவும், பிறகு வேக கதியிலும் அவர் பாடியதைக் கேட்ட போது, 75 வயதுக்காரர் பாடும் பாட்டா இது என்று வியக்க வைத்தது.

அடுத்ததாக, அவர் கலாவதி ராகத்தையும் இதே முறையில் கையாண்ட போது, அத்தனை ரசிகர்களும் கைதட்டி மகிழ்ந்தார்கள். வந்து அமர்ந்து கேட்டவர்கள் “கொடுத்து வைத்தவர் கள்’ என்பது மிகையில்லாத வார்த்தை.

நாம் அரியக்குடி பாணி, ஜி.என்.பி. பாணி என்பது போல, வடக்கே “கரானா’ என்று பாணியைக் குறிப்பிடுவார்கள். இவர் கிரானா கரானாவைச் சேர்ந்தவர். குரு-சிஷ்ய பரம் பரை முறையில் காலம் சென்ற சுரேஷ்பாபு மோனே என்பவரிடமும், பிறகு, புகழ்பெற்ற ஹிந்துஸ்தானி பாடகியும் தன் சகோதரியு மான, பத்மபூஷன் விருது பெற்ற ஹிராபாய் பரோடேக்கரிடமும் பயிற்சி பெற்றிருக்கிறார் பிரபா ஆத்ரே.

இவர் இசைக் குறித்து எழுதிய நூல்கள் நிறைய. முதல் நூலான “ஸ்வரமயி’ மகாராஷ்டிர அரசின் பரிசைப் பெற்றது. இரண்டாவது நூல் “சுஸ்வராளி’ மத்திய பிரதேச அரசால் இந்தியில் மொழி பெயர்க்கப்பட்டு பல பாராட்டுகளைக் குவித்தது.
ஒலி நாடாக்களும், குறுந்தகடுக ளும் இவர் இசையை உலகெங்கும் உள்ள ரசிகர்களிடையே எடுத்துச் சென்றிருக்கின்றன.

ஸ்வரமயி அமைப்பாளர் பாரதி, வழக்கறிஞர் சுமதி, கிருஷ்ணா ஸ்வீட்ஸ் முரளி ஆகியோர் முயற்சி யால் இந்தப் பாராட்டு நிகழ்ச்சி நடந் திராவிட்டால், ஒரு மகத்தான ஹிந்துஸ்தானி இசை மேதையான பிரபா ஆத்ரேயின் திறமைப் பற்றி இங்கே பலரும் அறியாமலே போயி ருப்போம்.

சாருகேசி 

Posted in 75, aathre, aatre, Artist, Birthday, Carnatic, Celebrations, Faces, Guru, Hindustani, music, Musician, Padmabhushan, Padmabushan, Pathmabhushan, Pathmabushan, people, praba aathre, praba aatre, prabha aathre, prabha aatre, Professor, Singer, Songs, Students, svaramyi, swaramyi, Swarangini, Swaranjini, Teachers | Leave a Comment »

SG Kittappa & Kunjaan Kadai Pakoda – Taste of the native land

Posted by Snapjudge மேல் நவம்பர் 5, 2007

எஸ்.ஜி. கிட்டப்பாவும் குஞ்சான் கடை பக்கோடாவும்..!

தஞ்சை மாவட்டத்தின் ஒவ்வொரு ஊரும் ஒவ்வொரு ரசனைக்குப் பேர் போனது. அந்த வகையில் நாக்குக்கே முழு அடிமையான ஒரு கூட்டம் இருக்கி றதென்றால் அது மன்னார்குடிதான். பெரிய ஆர்ப்பாட்டம் இல்லாத ஊர் மன் னார்குடி. ஊர் மட்டுமல்ல இங்குள்ள சாப்பாட்டு சமாச்சாரங்களும் அப்படிதான். உல கம் முழுக்க பிரபலமான ஐட்டங்கள் இங்கு கிடையாது. ஆனால், இங்குள்ள ஐட்டங் களை ருசி பார்த்தவர்களை வேறெங்கும் திருப்தி செய்ய முடியாது.

அப்படி ஒரு நூற் றாண்டுக்கும் மேலாக இந்த வட்டாரத்தையே கட்டிப்போட்டிருக்கும் ஒரு ஐட்டம் குஞ்சான் செட்டியார் மிட்டாய் கடை பக்கோடா. சும்மாவா, கர்நாடக இசை மேதை கிட்டப்பாவையே சொக்க வைத்த ருசியல்லவா அது! மன்னார்குடி கடை வீதியில் கொஞ்சமும் பழைமை மாறாமல் இன்றும் இருக்கிறது குஞ்சான் செட்டியார் மிட்டாய் கடை. தவிர, சுற்று வட்டார கோயில் திருவிழாக்களில் எந்த இடத்தில் பலகாரங்கள் மலைபோல குவித்து வைக்கப்பட்டிருக்கின்றனவோ அந்தக் கடைகளெல்லாமும் குஞ்சான் கடைதான்.

கோயில்களுக்கு முன் சொந்தமாக இடம் வாங்கி, அந்த இடத்தில் திருவிழாக் கடை போடுமளவுக்குக் கடை பிரபலம். ஆனாலும், மன்னார்குடியில் குஞ்சான் செட்டியார் தொடங்கிய அதே சிறிய பெட்டிக் கடையில் தொடர்கிறது கடை.

“குஞ்சான் கடையில் பக்கோடா போட்டால் தெருவுல போறவனெல்லாம் சுவத்துல மூக்கைத் தேய்பான்’ என்றொரு சொலவடை. வெங்காயத்தை நல்லெண்ணெய்யில் வதக்கும்போது அப்படியே விழுந்து கடிக்க வேண்டும்போல் முதலில் எழுமே ஒரு மணம், அது குஞ்சான் கடை பக்கோடாவில் எப்போதும் குடி கொண்டிருக்கிறது.

முதல் கடிக்கு மொறுமொறுப்பு; அடுத்த கடிக்குப் பதம்; மூன்றாம் கடிக்கு கரையும்.

அப்படி ஒரு பதம் இந்தப் பக்கோடாவில் இருக்கிறது. பக்கோடா மட்டுமல்ல; சுட்டது முதல் வாய்க்குள் போகும் வரை ஒரே ருசியில் இருக்கும் இந்தக் கடையின் மெதுவ டையும் பிரபலம்தான்.

தலைமுறைகளைக் கடந்த பக் கோடா, வடை பற்றி இந்தத் தலைமு றையில் கடையை நடத்திக்கொண்டிருக் கும் எஸ். லட்சுமிகாந்தன் கூறுகிறார்: “”எங்களுக்குப் பூர்வீகம் மகாதேவப் பட்டணம். குஞ்சான் செட்டியார் ஆரம் பித்த இந்தக் கடையை அடுத்தத் தலை முறையில் அவருடைய மகன் துரை சாமி செட்டியார் பிரபலமாக்கினார்.

அவருடைய காலத்தில்தான் வடைக் கென தனி ருசி வந்தது. இது ஐந்தாவது தலைமுறை. இன்றும் அந்த ருசி அப் படியே தொடர காரணம் அவர்கள் சொல்லிக் கொடுத்த கைப்பக்குவத் தையும் தரத்தையும் மாற்றாதது தான்.

இன்றும் ஆட்டுக்கல்லில்தான் மாவு அரைக்கிறோம். விறகு அடுப் பைத்தான் எரிக்கிறோம். சரியான வேக்காட்டுக்குத் தீ பக்குவம் முக்கி யம் தெரியுமா? அதேபோல், மாவு பதமும் முக்கி யம். மாவு பிசையும்போது சொட்டு சொட்டாக நீர் விட்டு பிசைந்தால்தான் மாவுக்கேற்ற பதம் கிடைக்கும். மற்றபடி, பொருளோடு தரம்தான் பலகாரத்தில் ருசிக் கும். நாங்கள் எந்தப் பொருளிலும் மலிவானதைச் சேர்ப்பதில்லை. சோடா உப்பு சேர்ப்பதில்லை.

பெரிய வெங்காயம் வந்தவுடனே எல்லோரும் அதுக்கு மாறிட்டாங்க. ஆனால், என்ன விலை விற்றாலும் எங்கக் கடையில் இன்னமும் சின்ன வெங்காயம்தான்.

சின்ன வெங்காயத்தைப் பொடிப்பொடியாக நறுக்கிச் சேர்த்தால் அதன் ருசியே தனி தான். எங்கக் கடை பக்கோடா, வடையின் தனி ருசிக்குக் காரணமே அதுதான்” என் றார் லட்சுமிகாந்தன்.

கர்நாடக இசை மேதை எஸ்.ஜி. கிட்டப்பா தஞ்சை மாவட்டத்தில் எங்கு நாடகம் போட்டாலும் அவருடைய ஆள்கள் குஞ்சான் கடைக்கு வந்து பக்கோடா கட்டிச் செல் வார்களாம். அந்தப் பாரம்பரியம் இன்றும் தொடர்கிறது. ஆம், தேச எல்லைகளைக் கடந்து மன்னார்குடிக்காரர்கள் இருக்கும் இடங்களுக்கெல்லாம் பொட்டலமாகப் பய ணிக்கிறது குஞ்சான் கடை பக்கோடா, தலைமுறைகளைத் தாண்டி.

ஸ்டாலின்

Posted in cook, Cooking, Kittappa, Pakoda, Pakora, Special, Specials, Taste | Leave a Comment »