மட்டக்களப்பு சிறைச்சாலையில் கைதிகள் உண்ணாவிரதம்
![]() |
![]() |
மட்டக்களப்பு சிறைச்சாலை |
இலங்கை மட்டக்களப்பு சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் எனக் கூறப்படும் 29 பேர் தம் மீதான விசாரணையை துரிதப்படுத்த வேண்டும் அல்லது விடுதலை செய்யப்பட வேண்டும் எனக் கோரி சனிக்கிழமை காலை முதல் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
சிறைச்சாலை கூரை மேல் அமர்ந்து இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இக் கைதிகள் 2004 – 2007 ம் ஆண்டு காலப் பகுதிகளில் கைது செய்யப்பட்டவர்கள் எனக் கூறப்படுகின்றது
கைதான நாள் முதல் விசாரணைகளின்றி தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ள இக் கைதிகள் தமது கோரிக்கைகள் தொடர்பாக ஜனாதிபதி செயலக பிரதிநிதிகள், நீதிஅமைச்சர், தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் ஐ.நா. பிரதிநிதிகள் உட்பட பல்வேறு தரப்பினரை தாம் சந்தித்து பேச வேண்டும் என்றும் மற்றுமொரு கோரிக்கையை முன் வைத்துள்ளனர்
இது தொடர்பாக சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் வஜிர
விஜயகுணவர்தனவுடன் தொடர்பு கொண்ட போது இக் கைதிகளில் 4 பேர் மட்டுமே விடுதலைப் புலி சந்தேக நபர்கள் என்றும் ஏனையோர் பிற குற்றங்களுடன் தொடர்புடையவர்கள் என்றும், இவர்களை விசாரணை செய்வதா அல்லது விடுதலை செய்வதா என்பது நீதிமன்றம் தீர்மானிக்க வேண்டிய விடயம் என்றார்.