Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Tamil Actor Sathyaraj – Biosketch in Dhinathanthi

Posted by Snapjudge மேல் திசெம்பர் 12, 2007

வரலாற்றுச் சுவடுகள் : திரைப்பட வரலாறு :(811)
சத்யராஜ் சினிமா தயாரிப்பு நிர்வாகி ஆனார்

நாடகத்தில் நடித்துக்கொண்டே சினிமாவிலும் நடிக்க வாய்ப்பு தேடினார் சத்யராஜ். ஆனால் கிடைத்ததோ தயாரிப்புத் துறையில் நிர்வாகம் பார்க்கும் வாய்ப்பு!

இதுபற்றி சத்யராஜ் கூறியதாவது:-

“கோமல் சுவாமிநாதன் இயக்கிய “ஆட்சி மாற்றம்”, “சுல்தான் ஏகாதசி”, “கோடுகள் இல்லாத கோலங்கள்” என்ற மூன்று நாடகங்களிலும் எனக்கு வாய்ப்பு கிடைத்தது. இந்த மூன்று நாடகத்திலும் நடித்ததற்காக எனக்கு நாடகம் ஒன்றுக்கு பத்து ரூபாய் வீதம் 30 ரூபாய் தந்தார்கள்.

இந்த 30 ரூபாயில் 10 ரூபாய்க்கு சுவீட் வாங்கினேன். என்னை நாடகத்தில் சேர்த்துவிட்ட நடிகர் சிவகுமார் அண்ணன் வீட்டுக்கு போனேன். நடிப்புக்கு கிடைத்த என் முதல் சம்பளத்தில் அவர் வீட்டுக்கு சுவீட் வாங்கிப்போக வேண்டும் என்ற எண்ணத்தில்தான் இப்படிச் செய்தேன்.

நான் எம்.ஜி.ஆர். ரசிகன் அல்லவா! எம்.ஜி.ஆர். கொடுத்து கொடுத்து சிவந்த கரம் கொண்டவர். அதனால் 5 ரூபாயை, தர்மத்துக்கு கொடுத்தேன். மீதி பணத்தில் நண்பர்களுடன் சினிமாவுக்கு போனேன்.

சூர்யா, கார்த்தி

நான் சிவகுமார் அண்ணன் வீட்டுக்கு போன காலகட்டத்தில் சூர்யா, கார்த்தி இருவருமே குழந்தைகள். இந்தக் குழந்தைகளும் வளர்ந்து இன்றைக்கு நடிக்க வந்துவிட்டார்கள்! கார்த்தி நடிக்க வரும் முன்பாக ஒரு வேலையில் சேர்ந்திருக்கிறார். முதல் மாத சம்பளத்தில் அவர் எங்கள் வீட்டுக்கு `சுவீட்’ வாங்கிக்கொண்டு வந்தார்! அப்போதுதான் என் முதல் சம்பளத்தில் நான் அவர்கள் வீட்டுக்கு `சுவீட்’வாங்கிப்போனதை சிவகுமார் அண்ணன் தனது பிள்ளைகளிடம் சொல்லியிருக்கிறார் என்பதைத் தெரிந்து கொண்டேன்.

நாடகத்தில் அவ்வப்போது 10 ரூபாய் சம்பளம் வந்து கொண்டிருந்தது. பணம் குறைவாக இருக்கிறதே என்று நான் கவலைப்படவில்லை. அண்ணன் மாதம்பட்டி சிவகுமார் கொடுத்த பணம்தான் இருக்கிறதே. அதை முழுவதுமாக செலவழிக்க நாளாகும். அந்த அளவுக்கு, சிக்கனமாகவே என் செலவுப் பட்டியலை வைத்துக்கொண்டேன்.

விவேகானந்தா பிக்சர்ஸ் என்ற கம்பெனி சார்பில் “ரோசாப்பூ ரவிக்கைக்காரி” போன்ற படங்களை தயாரித்த திருப்பூர் மணி, அண்ணன் மாதம்பட்டி சிவகுமாரின் நண்பர். அவரது மைத்துனர் கே.பாலு, அந்த நாட்களில் என் நண்பராகி விட்டார். பின்னாளில் இவர் பிரபு நடிக்க மாபெரும் வெற்றிப்படமாக அமைந்த “சின்னத்தம்பி” படத்தை தயாரித்தார். பாலு என்னிடம் சினிமா வாய்ப்பு வரும்போது நிச்சயம் நடிக்க வைப்பதாக சொன்னார்.

வாடகை அறை

அப்போது நான் சென்னை தி.நகர் உஸ்மான் ரோட்டில் மாதம் 85 ரூபாய் வாடகையில் ஒரு அறையில் இருந்தேன். என் சைசுக்குதான் அந்த அறை இருக்கும். காலை முழுசாக நீட்டி படுக்க முடியாத அளவுக்கு இருந்தது அந்த அறை.

ஒருநாள் என்னைப் பார்ப்பதற்காக என் தங்கை கல்பனாவும், தங்கை கணவர் அர்ஜ×ன் மன்றாடியாரும் அங்கே வந்துவிட்டார்கள். என் அறையை பார்த்த இருவருமே கண் கலங்கிவிட்டார்கள்.

அவர்கள் அப்படி கலங்கியதற்கு காரணம் இருக்கிறது. கோயமுத்தூரில் உள்ள எங்கள் வீடு 5 கிரவுண்டு கொண்டது. ஊரில் இருந்த செல்வாக்குக்கு தொழில் துறையில் ஈடுபடலாம். உறவு முறையில் யாரைக் கேட்டாலும் தொழில் தொடங்க உதவுவார்கள். இப்படி செல்வமும் செல்வாக்குமாய் இருக்க வேண்டியவன் இப்படி எங்கோ ஆறு அடி ரூமுக்குள் அரைகுறையாக முடங்கிக் கிடக்கவேண்டுமா என்ற கவலை அவர்களுக்கு.

என் சித்தி இந்திராணி (அம்மாவின் தங்கை) சித்தப்பா துரைராஜ். ஊரில் சித்தி குடும்பமும் எங்களுடன்தான் இருந்தது. அம்மா மாதிரியே என் மேல் அன்பு காட்டி வளர்த்தவர் சித்தி. நான் சென்னையில் சரியான இருப்பிடம்கூட இல்லாமல் சிரமப்படுவதாக சித்தப்பாவுக்கு சொல்லப்பட்டதும், அவர் உடனே சென்னைக்கு வந்து விட்டார். “கோவைக்கு வா! உனக்கு தொழில் தொடங்க ஏற்பாடு செய்கிறேன்” என்று அழைத்தார். நான்தான் சித்தப்பாவிடம் பிடிவாதமாக, “நிச்சயம் சினிமாவில் எனக்கு வாய்ப்பு வரும். அதுவரை முயற்சி செய்கிறேன்” என்று சொல்லிவிட்டேன்.

ஓவியப்போட்டி

நாடகத்திலும் பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இந்த நேரத்தில் எழுத்தாளர் மணியன் நடத்திய பத்திரிகையில் சிறுகதைக்கு முக ஓவியப்போட்டி அறிவித்தார்கள். ஓரளவு நல்ல முகவெட்டு கொண்டவர்களை மாடலாக ஏற்றுக்கொண்டு அந்த முகங்களை தொடர் கதைக்குள் கொண்டு வருவார்கள். இப்படி பத்திரிகை மூலம் பிரபலமாகும் முகம், நாளடைவில் சினிமா வாய்ப்புக்கும் உரியதாகி விடும்.

சரி, இதாவது நடக்கட்டும் என்று என் மாதிரியே நல்ல வாய்ப்புக்காக போராடிக் கொண்டிருந்த நண்பர் ராஜ்மதனும் நானும் அந்த `ஓவிய முகத் தேர்வுக்கு போனோம். (இந்த ராஜ்மதன் ரஜினிக்கும் மிகச்சிறந்த நண்பர்) ஏராளமான பேர் திரண்டு வந்திருந்த இந்த போட்டியில் நாங்கள் முதல் ரவுண்டிலேயே ஓரம் கட்டப்பட்டோம்.

வெறுத்துப்போயிற்று எனக்கு. ஒரு பத்திரிகையில் படம் வரையக்கூட உதவாத நம் முகத்தை வைத்து சினிமாவில் எப்படி நடிக்கப்போகிறோம் என்றுகூட தோன்றியது. என்றாலும் சினிமா முயற்சியில் முன்வைத்த காலை பின்வைப்பதில்லை. முயன்று பார்ப்போம். ஆனது ஆகட்டும் என்ற மனநிலையில் சினிமா வாய்ப்புக்கு முயன்று கொண்டிருந்தேன்.

தயாரிப்பு நிர்வாகி

திருப்பூர் மணி விவேகானந்தா பிக்சர்ஸ் பட நிறுவனம் தொடங்கி சிவகுமாரை கதாநாயகனாக்கி “கண்ணன் ஒரு கைக்குழந்தை” படம் எடுக்க இருந்தார். படத்தில் அவருக்கு ஜோடி சுமித்ரா. சுருளிராஜன் – மனோரமாவும் படத்தில் இருந்தார்கள்.

இந்த படத்துக்கு என்னை புரொடக்ஷன் வேலை பார்க்கச் சொன்னார், திருப்பூர் மணி. சினிமாவுக்கும் எனக்கும் அதுவரை இருந்த இடைவெளியை இந்த வேலை குறைக்கும் என்ற நம்பிக்கையில் வேலையை ஒப்புக்கொண்டேன்.

இந்த சமயத்தில் பிரபல கேமிரா மேனாக இருந்த என்.கே.விஸ்வநாதனிடம் கே.பாலு உதவியாளராகச் சேர்ந்தார். பாலு மூலம் எனக்கு என்.கே.விஸ்வநாதன் சாரின் அறிமுகம் கிடைத்தது. அறிமுகம், பிறகு நட்பாகியது. அவரிடம், “நீங்க ஒர்க் பண்ற படங்களில் ஏதாவது ரோல் இருந்தா சொல்லுங்க” என்று கேட்டுக்கொண்டேன். `சரி’ என்றவர், “எதற்கும் உங்களை பல கோணங்களில் படம் எடுத்து போட்டோ ஆல்பம் ரெடி செய்து கொள்ளுங்கள். டைரக்டர் யாராவது அழைக்கும்போது உங்களை வெளிப்படுத்த இந்த ஆல்பம் உதவும்” என்றார்.

பிரபல கேமிராமேன் இப்படி சொன்னால் போதாதா? உடனே “ஸ்டில்ஸ்” ரவியிடம் விஷயத்தை சொல்லி, படங்கள் எடுத்தேன். அவர் போட்டுக்கொடுத்த படங்களை பார்த்ததும் நொந்துபோனேன். புகைப்பட கோணத்தில் என் படம் படுகேவலமாக இருந்தது. இந்த படங்களை சினிமா கம்பெனியில் கொண்டு போய் காட்டினால் கிடைக்கிற வாய்ப்பும் கிடைக்காது என்பது தெளிவாக புரிந்தது. அதனால் அந்தப் படங்களை தூர எறிந்துவிட்டு, பட சான்ஸ் தேடுவதை தொடர்ந்தேன். ஒருவேளை என் உயரம், அதற்கான பர்சனாலிட்டியை பார்த்துகூட ஒரு வாய்ப்பு வரலாம். போட்டோவைக் கொடுத்து, அதை ஏன் கெடுத்துக் கொள்ள வேண்டும்!

சட்டம் என் கையில்

டைரக்டர் டி.என்.பாலு அப்போது “சட்டம் என் கையில்” என்ற படத்தை இயக்கினார். கமலஹாசன் இரட்டை வேடத்தில் நடித்த படம். அந்த படத்தில் ஒரு சின்ன ரோல் இருப்பதாக கேமராமேன் என்.கே.விஸ்வநாதன் சார் என்னை அழைத்துப் போனார்.

அப்போது ஏவி.எம். ஐந்தாவது புளோரில் “சட்டம் என் கையில்” படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. கமல் – ஸ்ரீபிரியா நடிக்க ஒரு பாடல் காட்சியை எடுத்துக் கொண்டிருந்தார், டைரக்டர்.

பாடல் காட்சியை முடித்து விட்டு என்னை அழைத்தார், டி.என்.பாலு. அப்போதுதான் கமலஹாசனை முதன் முதலாக நேரில் பார்த்தேன். “இவ்வளவு அழகாய் இருக்கிறாரே. இவரெல்லாம் நடிக்கும்போது நாமும் ஊரில் இருந்து நடிக்க வந்திருக்கிறோமே!” என்று எனக்குத் தோன்றியது.

என்னைப் பார்த்த டைரக்டர், போட்டோ எடுத்துப் பார்க்கவில்லை (பார்த்திருந்தால் அவ்வளவுதான்) என்னிடம், “கார் ஓட்டத்தெரியுமா?” என்று கேட்டார். ஊரில் கார் ஓட்டக் கற்றுக் கொண்டிருந்ததால் “தெரியும் சார்” என்றேன்.

அப்போதே மனசுக்குள் ஒரு பயம். “நடிக்கத் தெரியுமா?” என்று கேட்காமல், “கார் ஓட்டத் தெரியுமா?” என்று கேட்கிறாரே, என்ன அர்த்தம்? ஒருவேளை படக்கம்பெனிகளுக்கு கார் ஓட்டும் டிரைவராக தேர்வு செய்யப் போகிறாரோ என்னவோ என்று உள் மனதில் உதறல் ஆரம்பித்தது.

ஆனால் டைரக்டர் அடுத்த கேள்வியாக “பைட் (சண்டை) தெரியுமா?” என்று கேட்டு உடனடியாக என் டென்ஷனை குறைத்தார். உடனே நான் “நான் `கராத்தே’யில் பிளாக் பெல்ட் சார்” என்றேன்.

உண்மையில் புரூஸ்லி நடித்து அப்போது வெளிவந்திருந்த “எண்டர் தி டிராகன்” படத்தை பார்த்த பிறகு, எல்லாருக்கும் வருகிற `கராத்தே’ ஆசை எனக்கும் வந்தது. அதனால் ஒரு ஆறு மாத காலம் கராத்தே கற்றுக்கொண்டேன். ஆனால் `பெல்ட்’ எல்லாம் வாங்கவில்லை. அந்த வகையில் டைரக்டரிடம் சொன்னது மட்டும் பொய்.

“டயலாக் பேசுவியா?” டைரக்டரின் அடுத்த கேள்வி.

“பேசுவேன் சார்!”

“சின்னதாய் ஒரு வில்லன் வேஷம் இருக்கு. நாளைக்கு காலையில் வந்துரு” என்றார், டைரக்டர்.

நாளை முதல் சினிமாவில் நடிகனாகப் போகும் சந்தோஷத்தில் அன்று இரவு முழுவதும் தூக்கமே வரவில்லை.”

இவ்வாறு சத்யராஜ் கூறினார்.

—————————————————————————————————–

திரைப்பட வரலாறு 812
கமல் நடித்த “சட்டம் என் கையில்”:
வில்லனாக சத்யராஜ் அறிமுகம்

டி.என்.பாலு டைரக்ட் செய்த “சட்டம் என் கையில்” படத்தில் கமலஹாசனுக்கு வில்லன் ஆனார், சத்யராஜ். இந்தப் படத்தின் மூலம் சினிமாவில் நடிகராக அடியெடுத்து வைத்தார்.

முதல் படத்தில் அறிமுகமானது குறித்து சத்யராஜ் கூறியதாவது:-

“டைரக்டர் டி.என்.பாலு என்னைப் பார்த்த பார்வையில் நான் வில்லனாக தெரிந்திருக்கிறேன். மறுநாள் நான் அவரை சந்தித்தபோது, ”விக்கி என்றொரு வில்லன் கேரக்டர் இருக்கிறது. சின்ன கேரக்டர்தான். பண்ணுங்கள்” என்றார்.

நானும் நடிக்கும் நேரத்துக்காக காத்திருந்தேன். முதல் நாள் எனக்கு டயலாக் எதுவும் இல்லை. மலையில் இருந்து ஓடிவருகிற மாதிரி எடுத்தார்கள்.

முதல் வசனம்

இந்தப்படத்தில் டைரக்டர் எனக்கு கொடுத்த முதல் வசனம் “எனக்கு இப்ப நேரம் நல்லா இருக்கு.”

வில்லனுக்குப் போய் இப்படியொரு டயலாக்கா என்று உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும். கதைப்படி, நான் செய்கிற கொலைக்கு கதாநாயகன் மாட்டிக் கொள்வார். அதனால், “இப்ப எனக்கு நேரம் நல்லா இருக்கு. அதனால்தான் நான் செய்த கொலைக்கு அவன் மாட்டிக்கிட்டான்” என்ற வசனத்தை தந்து பேசச் சொன்னார்கள்.

ஏற்கனவே டைரக்டர் டி.என்.பாலு என்னிடம், “பைட் தெரியுமா?” என்று கேட்டபோது, “தெரியும்” என்று சொல்லிவிட்டேன். நடிக்க வந்த மூன்றாவது நாளே சென்னை வளசரவாக்கத்தில் இருந்த `ஜெய்’ தோட்டத்தில் சண்டைக்காட்சி எடுப்பதாகச் சொன்னார்கள். அப்போதே எனக்கு உள்ளுக்குள் உதறல் ஆரம்பித்து விட்டது. நமக்குத்தான் `சினிமா பைட்’ தெரியாதே!

அதனால், ஸ்டண்ட் மாஸ்டர் கிருபா சங்கரை சந்தித்து உண்மையை சொல்லி விட்டேன். அவரும் பெருந்தன்மையுடன் தனது அசிஸ்டெண்டை என்னுடன் மெரினா பீச்சுக்கு அனுப்பி வைத்தார். அந்த உதவியாளர் எனக்கு பீச் மணலில் `சினிமா பைட்’ கற்றுக் கொடுத்தார். அதாவது கதாநாயகனிடம் அடிவாங்குவது போல் நடிக்கும்போது அடிவாங்காமல் எப்படி தப்பிக்க வேண்டும் என்பதை கற்றுக் கொடுத்தார்! அப்போதுதான், ஸ்டண்ட் காட்சியில் `டைமிங்’ எவ்வளவு முக்கியம் என்பதை உணர்ந்து கொண்டேன்.

கமலுடன் சண்டைக்காட்சி

மறுநாள் படப்பிடிப்பில் கமல் சாருடன் சண்டைக்காட்சி. முந்தின நாள் பெற்ற பயிற்சி உதவியாக இருந்தது.

பொதுவாக, சண்டைக் காட்சியின்போது `வாட்ச்’ போட்டு நடிக்க மாட்டார்களாம். அது எனக்குத் தெரியாது. சண்டைக்காட்சி முடிந்த நேரத்தில், நான் போட்டிருந்த 600 ரூபாய் வாட்ச் உடைந்து போய்விட்டது! கமல் சார் இதைப் பார்த்ததும் `அடடா! உங்களிடம் முதலிலேயே சொல்லியிருக்க வேண்டும். கம்பெனி வாட்சை போட்டுக்கொண்டு சண்டைக்காட்சியில் நடித்திருக்கலாமே” என்றார்.

இப்படி 600 ரூபாய் வாட்சை உடைத்துவிட்டு, நடிப்புக்கு 500 ரூபாய் `செக்’ வாங்கினேன். 1975 வாக்கில் 500 ரூபாய் என்பது பெரிய தொகை. அந்த செக்குக்காக பாங்கியில் கணக்கு ஆரம்பித்தேன். முதல் சம்பளத்தில் அம்மா, சின்னம்மாவுடன் என் 5 தங்கைகளான கல்பனா, ரூபா, நந்தினி, அகிலா, அபராஜிதா ஆகியோருக்கும் புடவைகள் எடுத்துக் கொடுத்தேன்.

100-வது நாள்

முதல் படமே நூறாவது நாள் கண்டதில் எனக்கும் மகிழ்ச்சி. இந்த விழாவை சென்னை நிïஉட்லண்ட்ஸ் ஓட்டலில் கொண்டாடினார்கள். கலைஞர் தலைமை தாங்கி விருதுகள் வழங்கினார். எனக்கும் கேடயம் கிடைத்தது.

இதற்கிடையே, தயாரிப்புத் துறையில் நான் பணியாற்றிய “கண்ணன் ஒரு கைக்குழந்தை” படம் ரிலீஸ் ஆயிற்று. இந்தப் படத்தில் சிறு வேடத்தில் நடித்தும் இருந்தேன். அதனால் டைட்டில் கார்டில் நடிகர்கள் பட்டியலில் `நடிகர் சத்யராஜ்’ என்று வரும். டெக்னிஷியன் பட்டியலில் அலுவலக நிர்வாகம் என்ற இடத்தில் ரெங்கராஜ் பி.எஸ்.சி. என்று வரும்.

பெயர் மாற்றம்

பெற்றோர் எனக்கு வைத்த பெயர் ரெங்கராஜ்தான். சினிமாவில் அறிமுகமாகும் போது, எனக்கு நானாக வைத்துக்கொண்ட பெயர்தான் சத்யராஜ். அண்ணன் மாதம்பட்டி சிவகுமாரின் மகன் பெயர் சத்யன். (இப்போது சத்யனும் நடிகராகி விட்டார்) அந்த `சத்ய’னில் இருந்து `சத்ய’வையும் ரெங்கராஜில் இருந்து `ராஜை’யும் எடுத்துக்கொண்டு சத்யராஜ் ஆகிவிட்டேன்!

நடிகனாக சத்யராஜ் என்றிருந்தாலும், அலுவலக நிர்வாகம் என்ற இடத்தில் ஒரிஜினல் பெயரை கல்வித் தகுதியுடன் போட விரும்பினேன்.

இப்படி ஒரு படத்தில் 2 பெயரில் தனித்தனி பிரிவில் பெயர் வந்தது அனேகமாக எனக்கு மட்டும்தான் இருக்கும்.

“சட்டம் என் கையில்” படம் நன்றாக ஓடியும், தொடர்ந்து எனக்கு பட வாய்ப்புகள் எதுவும் வரவில்லை. நடிகர் சிவகுமார் சிபாரிசில் “முதல் இரவு”, “ஏணிப்படிகள்” போன்ற படங்கள் கிடைத்தன. டைரக்டர் ஏ.ஜெகந்நாதன் தனது “காதலித்துப்பார்” என்ற படத்தில் வாய்ப்பு கொடுத்தார்.

“முதல் இரவு” படத்தை தயாரித்த கோவை செழியன் எனக்கு தூரத்து உறவினர். ஆனாலும் நடிகர் சிவகுமார் அண்ணன்தான் என்னை படக்கம்பெனிக்கு அழைத்துச் சென்று வாய்ப்பு வாங்கிக் கொடுத்தார். இதெல்லாம், திருப்பூர் மணி ஆபீசில் தங்கிக்கொண்டு, தயாரிப்பு வேலையையும் பார்த்துக் கொண்டிருந்தபோது நடந்தது.

டைரக்டர் பி.மாதவன் அப்போது “தங்கப்பதக்கம்”, “வியட்நாம் வீடு” என்று சிவாஜி படங்களை இயக்கி, பெரிய பெயரோடு இருந்தார். அவர் சிவகுமார் – ஷோபா நடித்த “ஏணிப்படிகள்” படத்தை இயக்கினார். இந்தப் படத்தில் நடிகர் சிவகுமார் அண்ணன் உபயத்தில் ஷோபாவின் அண்ணன் வேடம் எனக்கு கிடைத்தது. அதுவரை நான் நடித்த படங்களில், என்னை `பளிச்’சென்று வெளிப்படுத்திய படம் இதுதான்.

என்றாலும், இந்தப்படத்தில் நடித்த போது இன்னொரு காரியமும் செய்தேன். படத்தின் வில்லன் ஜெய்கணேஷின் “பைக்” சேஸிங் காட்சியில், அவருக்கு நான் `டூப்’ ஆக நடித்தேன். ஏற்கனவே கார் ஓட்டிய அனுபவம் எனக்கு இருந்ததால், இந்த `பைக்’ சேஸிங் சிறப்பாக அமைந்தது.

போராட்டம்

நான் பல போராட்டங்களைக் கடந்துதான் நடிகனானேன். வந்த பிறகும் கிடைத்ததோ வில்லத்தனமான வேடங்களே. அதிலும் `கொஞ்ச நேர’ வில்லன்தான் அதிகம்.

`இப்படியான கேரக்டர்களில் நடிக்கத்தான் சினிமா சினிமா என்று அலைந்தாயா!’ என்று என்னிடம் உறவினர்கள் வருத்தத்துடன் கூறினார்கள். அவர்களின் `அப்செட்’டுக்கு மத்தியிலும், தொடர்ந்து சினிமாவில் நான் நீடிக்கக் காரணம், அண்ணன் மாதம்பட்டி சிவகுமார்தான். என் வளர்ச்சியில் என் அளவுக்கு அவருக்கும் நம்பிக்கை இருந்தது.

திருமண ஏற்பாடு

சினிமாவில் சின்னதாய் ஒரு வளர்ச்சி நிலையில் நான் இருந்த சமயத்தில், வீட்டில் எனக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தார்கள். பெண் பார்க்க அவசியமில்லை. மாதம்பட்டி சிவகுமார் அண்ணனின் அக்கா மகள்தான் எனக்கு மணப்பெண் என்று, ஏற்கனவே முடிவு செய்து வைத்திருந்தார்கள்.

பெண்ணும் பிறந்தது முதலே எனக்குத் தெரிந்தவர். குழந்தை பிறந்து தொட்டிலில் போட்டிருந்தபோது, நான் போய் எட்டிப் பார்த்தேன். அப்போது பெண்ணின் அப்பா (என் மாமா சண்முகசுந்தரம்) என்னிடம், “மாப்பிள்ளை இப்போதே பெண்ணைப் பார்க்க வந்துவிட்டார்” என்று கிண்டல் செய்திருக்கிறார்.

இப்படி உறவு முறையில் பெண் இருந்தாலும், சினிமாவில் சொந்தக் காலில் நின்ற பிறகுதான் திருமணம் என்பதில் நான் உறுதியாக இருந்தேன்.

திரைப்பட வரலாறு 814
மொட்டைத் தலையுடன் சத்யராஜ் நடித்த
“நூறாவது நாள்” மகத்தான வெற்றி
ஒரே ஆண்டில் 27 படங்களில் நடித்தார்

டைரக்டர் மணிவண்ணன் இயக்கிய “நூறாவது நாள்” படத்தில் மொட்டைத் தலை வில்லனாக நடித்து பிரபலமானார் சத்யராஜ். இதைத் தொடர்ந்து, அவருக்குப் பட வாய்ப்புகள் குவிந்தன. ஒரே ஆண்டில் 27 படங்களில் நடித்தார்.

தனது கலைப்பயணத்தின் வளர்ச்சி குறித்து சத்யராஜ் கூறியதாவது:-

“வாய்ப்புகள் கிடைப்பது அரிதாக இருந்த நேரம். அப்படிக் கிடைத்தாலும், திறமையை வெளிப்படுத்த முடியாத சின்ன ரோல்கள்தான் வந்து கொண்டிருந்தன.

சுந்தர்ராஜன் அறிமுகம்

இப்படி உள்ளும் புறமுமாய் போராடிக் கொண்டிருந்த நேரத்தில், டைரக்டர் ஆர்.சுந்தர்ராஜனின் அறிமுகம் கிடைத்தது.

ஆர்.சுந்தர்ராஜன் அப்போது “பயணங்கள் முடிவதில்லை” என்ற பெரிய வெற்றிப்படம் கொடுத்திருந்தார். என்னை ஒரு நடிகனாக மட்டுமின்றி ஒரே ஊர்க்காரன் (கோவை) என்ற அளவிலும் என்னை அவர் தெரிந்து வைத்திருந்தார். ஒருமுறை கோவைக்கு ரெயிலில் போனபோது, மனம் விட்டுப் பேசும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது டைரக்டர் ஆர்.சுந்தர்ராஜன் என்னிடம், அடுத்து எடுக்கப்போகும் படத்தின் கதையைக் கூறினார். நான் அந்தக் கதை தொடர்பாக எனது கருத்துக்களைக் கூறினேன். அப்போது அவர், `உங்களுக்கும் நல்ல கதை ஞானம் இருக்கிறதே’ என்று சொல்லி வியந்தார். அதோடு, `நீங்கள் ஏன் கதை விவாதத்தில் கலந்து கொள்ளக்கூடாது’ என்றும் கேட்டார்.

கதை விவாதத்தில் கலந்து கொண்டால், அதற்கென்று தனி சன்மானம் எதுவும் கிடையாது. என்றாலும் டைரக்டர் சொன்னது என்னை உற்சாகப்படுத்தி விட்டது. என்னாலும் கதையை உருவாக்க முடியும் என்று அவர் கருதியதால், மிக்க மகிழ்ச்சி அடைந்தேன்.

சினிமா கதை

இந்த சந்தோஷ வேகத்தில், சினிமாவுக்கான ஒரு கதையை நானே தயார் செய்தேன். கிரைம் – ஆக்ஷன் கதை. இதே காலகட்டத்தில் எனக்கு நண்பராகி இருந்த டைரக்டர் மணிவண்ணனிடம் இந்தக் கதையை சொன்னேன்.

அவர் என்னிடம் `நன்றாகத்தான் இருக்கிறது. இதை பிறகு திரைக்கதையாக தயார் செய்யலாம். என்னிடம் ஒரு கதை இருக்கிறது. அதை கேளுங்கள்’ என்று கூறி, ஒரு கதையை சொன்னார்.

ஆர்.சுந்தர்ராஜன் என்னிடம் ரெயிலில் சொன்ன கதை மோகன், நளினி, விஜயகாந்த் நடிக்க “சரணாலயம்” என்ற பெயரில் தயாராகிக் கொண்டிருந்தது. மணிவண்ணன் சொன்ன கதையை படமாக்க எஸ்.என்.திருமால் முன்வந்தார்.

இப்போது, எனக்குள் நடிப்பைவிட டைரக்ஷன் ஆர்வம் அதிகமாகி விட்டது. ஒரு கதை தயார் செய்யும் அளவுக்கு வந்துவிட்டேனே! இந்தக் கதையை டைரக்ட் செய்து, டைரக்ஷன் பக்கம் போய்விடலாம் என்று நினைத்தேன்.

நூறாவது நாள்

நண்பர் மணிவண்ணன் சொன்ன கிரைம் சப்ஜெக்ட்தான் “நூறாவது நாள்” என்ற பெயரில் படமானது. இந்தப்படத்தின் கதை விவாதத்துக்கு மணிவண்ணன் என்னையும் அழைத்திருந்தார். படத்தின் கிளைமாக்சில் ஒரு மொட்டை வில்லன் வருவதாக காட்சி வைத்திருந்தார். இந்த கேரக்டருக்கு யாரைப் போடலாம் என்ற பேச்சு வந்தபோது, அந்த வேடத்தில் நான் நடிப்பது என்று அவர்கள் முடிவு செய்தார்கள்.

நான்தான் டைரக்ஷன் கனவில் இருக்கிறேனே! அதனால் கொஞ்சம் தயங்கவே செய்தேன். விஜயகாந்த் “சரணாலயம்” படத்தில் நடித்துக் கொண்டிருந்த நேரத்தில், அவரிடமும் நான் உருவாக்கிய கதையை சொன்னேன். அவருக்கும் கதை பிடித்துப்போய், அதைப் படமாக்கலாம் என்று சொல்லி விட்டார்.

இந்த நேரத்தில்தான் நூறாவது நாள் படத்தில் நடிக்க வாய்ப்பு தேடிவந்தது.

நான் தயங்கினாலும் மணிவண்ணன் விடவில்லை. எனக்கு மேக்கப் போட்டுப் பார்த்தார். “ஆலிவுட் நடிகர் மாதிரி இருக்கீங்க, தலைவா!” என்றார்.

இதனால் நம்பிக்கை வந்தது, சென்னை பாண்டி பஜாரில் உள்ள ஒரு சலூனில் மொட்டை அடித்துக் கொண்டேன். மொட்டை கெட்டப்பில் என் கேரக்டர் படமாக்கப்பட்டபோதே, அந்த கேரக்டர் பேசப்படும் என்பது தெரிந்தது.

படம் வெளியானது. பெரிய வெற்றி. என் மொட்டை கேரக்டரும் பெரிய அளவில் பேசப்பட்டது.

இந்தப்படம் வெளிவந்த சமயத்தில், ஜெயப்பிரகாஷ் என்பவர் 7 கொலை செய்ததாக போலீசாரால் கைது செய்யப்பட்டார். அப்போது அவர், “நூறாவது நாள் படத்தைப் பார்த்த பிறகே இப்படி கொலை செய்யும் எண்ணம் வந்தது” என்று சொல்லப்போக, படத்துக்கு இன்னும் `பப்ளிசிட்டி’ ஆகிவிட்டது! இந்தப்படம் வெளியான சமயத்தில் குழந்தைகள் என்னை நெருங்கவே பயப்பட்டார்கள்!

24 மணி நேரம்

இந்த வெற்றியைத் தொடர்ந்து டைரக்டர் மணிவண்ணன் சூட்டோடு சூடாக அதே நிறுவனத்துக்கு, “24 மணி நேரம்” என்று ஒரு படம் பண்ணினார். இதிலும் மோகன் – நளினிதான் ஜோடி. ஆனால் இதன் கதையமைப்பு வில்லனுக்காகவே உருவான கதை மாதிரி அமைந்திருந்தது.

இந்தக் கதையில் வரும் வில்லன் கேரக்டரில் முதலில் நான் நடிப்பதாகவே இல்லை. நான் மணிவண்ணன் சாரிடம், “படத்தின் ஜீவனே இந்த வில்லன் கேரக்டர்தான். `வீணை’ பாலச்சந்தர் நடித்தால் நல்லா இருக்கும்” என்றேன்.

மணி சார் என்னைப் பார்த்தார். அவர் என்ன நினைக்கிறார் என்பது புரியாமல், “வீணை பாலச்சந்தர் இல்லாவிட்டால் நம்ம நம்பியார்சாமி நடிக்கட்டும்” என்றேன்.

அந்த கேரக்டரின் முக்கியத்துவம் தெரிந்து நான் இப்படி சொல்லிக் கொண்டிருக்க, அவரோ, `நீங்களே நடிச்சிருங்க தலைவா’ என்றார்.

அந்த கேரக்டரில் நான் நடித்தால் சரியாக இருக்கும் என்று அவர் எண்ணினாலும், அவர் என் மீதான அக்கறையில்தான் அப்படிச் சொல்கிறார் என்று நான் நினைத்தேன். அதனால் அவரது விருப்பத்தை மறுக்கும்விதமாக, `தயாரிப்பாளர் திருமால் சார் அதற்கு ஒப்புக்கொள்ள மாட்டார். அந்த அளவுக்கு இது ஹீரோவுக்கு இணையான கேரக்டர்’என்றேன்.

அப்போதும் டைரக்டர் மணிவண்ணன் என்னை விடவில்லை. நேராக தயாரிப்பாளரை போய்ப் பார்த்தவர், `படத்தில் வரும் வில்லன் கேரக்டரில் சத்யராஜை நடிக்க வைக்கலாம் என்றிருக்கிறேன்’ என்று சொன்னார். தயாரிப்பாளரும், `தாராளமாக நடிக்கட்டும்’ என்று பச்சைக்கொடி காட்டினார்.

வில்லனுக்கு புது இலக்கணம் வகுத்த அந்த கேரக்டர்தான் என்னை ரசிகர்களிடம் முழுமையாக கொண்டு சேர்த்தது. இந்தப் படத்தில் நான் அடிக்கடி பேசும், “என் கேரக்டரையே புரிஞ்சிக்க மாட்டேங்கறீங்களே” என்ற வசனம், பட்டித்தொட்டிவரை கூட பிரபலம் ஆனது.

ஒரே ஆண்டில் 27 படங்கள்

இந்த படத்துக்குப் பிறகு நான் பிஸி நடிகனாகி விட்டேன். காலை 7 மணி தொடங்கி நள்ளிரவு 2 மணி வரை தினமும் 3 படங்களுக்கு கால்ஷீட் கொடுக்கும் அளவுக்கு பிஸியாகி விட்டேன். 1985-ம் ஆண்டில் மட்டும், நான் நடித்து 27 படங்கள் ரிலீஸ் ஆயின.

இப்படி பிஸியாக இருந்தாலும் நான் உருவாக்கி வைத்திருந்த கதையை `அம்போ’ என்று விட்டுவிட முடியவில்லை. டைரக்டர் மணிவண்ணன் தெலுங்கில் படம் இயக்கப்போன நேரத்தில் என் கதையை இயக்கினார். `தர்ஜா தொங்கா’ என்ற பெயரில் (தமிழில் `கவுரவத் திருடன்’) உருவான அந்தப் படத்தில் சுமன் – விஜயசாந்தி நடித்தார்கள். இந்தப் படத்தில் நான் கதாசிரியர் மட்டுமே. படம் வெளியாகி 6 சென்டர்களில் நூறு நாட்களை தாண்டி ஓடியது.

இந்த வகையில், ஒரு சினிமா கதாசிரியராகவும் ஜெயித்த சந்தோஷம் எனக்கு.

இந்தப்படத்தின் கதைக்காக டைரக்டர் மணிவண்ணன் எனக்கு 50 ஆயிரம் ரூபாய் வாங்கிக் கொடுத்தார். தமிழில் `மர்ம மனிதன்’ என்ற பெயரில் `டப்’ செய்யப்பட்டு வெளியானது.”

இவ்வாறு சத்யராஜ் கூறினார்.

திரைப்பட வரலாறு 819
பாலாஜி தயாரித்த “காவல்”
சிறிய வேடத்தில் விரும்பி நடித்தார், சத்யராஜ்

சத்யராஜ் பிசியாக இருந்த நேரத்திலும், பாலாஜி தயாரித்த ஒரு படத்தில், சிறிய வேடத்தை கேட்டு வாங்கி நடித்தார். படத்தில் ஐந்து நிமிடமே வந்து போகிற வேடம் அது.

வெற்றிகரமான ஹீரோ என்ற நிலைக்கு வந்து விட்ட சத்யராஜ், நடிகரும், தயாரிப்பாளருமான பாலாஜியின் படங்களிலும் நடித்தார். பாலாஜி தயாரித்த “மங்கம்மா சபதம்”, “அண்ணி” ஆகிய படங்களில் வில்லனாக நடித்தவர், “விடுதலை” படத்தில் மட்டும் வில்லனாக நடிக்க மறுத்துவிட்டார்.

அதுபற்றி சத்யராஜ் கூறியதாவது:-

“ஹீரோவாக வளர்ந்து விட்டேன். என்னை நம்பி பணம் போடும் தயாரிப்பாளர்கள் வந்துவிட்டார்கள். இப்படிப்பட்ட நிலையில் இனி `வில்லன்’ வேடத்தையும் செய்தால், என்னை நம்பி பணம் போட்ட தயாரிப்பாளர்கள் வியாபார ரீதியாக பாதிக்கப்படலாம் என்பதை உணர்ந்தேன். அதனால்தான் பாலாஜி சாரின் மங்கம்மா சபதம், அண்ணி படங்களில் வில்லனாக நடித்த நான், அடுத்து அவர் தயாரித்த `விடுதலை’ படத்தில் வில்லனாக நடிக்க அழைத்தபோது, அந்த வாய்ப்பை தவிர்த்து விட்டேன்.

வெளிநாட்டில் படப்பிடிப்பு

இத்தனைக்கும் அந்தப் படத்தின் பெரும்பாலான காட்சிகளை லண்டனில்தான் எடுத்தார்கள். நான் அதுவரை லண்டனை பார்த்ததில்லை. “எந்த வேடமாக இருந்தால் என்ன! லண்டன் பயணத்தை அனுபவித்து விடுவோம்” என்று எண்ணியிருந்தால் ஒருவேளை அந்த வில்லன் வேடத்தை ஒப்புக் கொண்டிருந்திருப்பேன். ஆனால் நான் பாலாஜி சாரிடம், “நான் ஹீரோவாக நடித்த படங்கள் வரத் தொடங்கிவிட்ட இந்த நேரத்தில் வில்லனாக நடித்தால் சரியாக இருக்காது” என்று சொன்னேன்.

பாலாஜி சார் என்னை கூர்மையாகப் பார்த்தார். “இனி வில்லனாக நடிப்பதில்லை என்பதில் அவ்வளவு நம்பிக்கை வந்துவிட்டதா?” என்று கேட்டார்.

“ஆமாம் சார்! அதில் நான் தெளிவாக இருக்கிறேன்” என்றேன்.

“உங்கள் தன்னம்பிக்கை வெற்றி பெறட்டும்” என்று வாழ்த்தியவர், என் தன்னம்பிக்கைக்கு அவரும் கைகொடுக்கும் விதமாய் எனக்குத் தந்த படம்தான் “மக்கள் என் பக்கம்.” மலையாளத்தில் பாலாஜி சாரின் மருமகன் மோகன்லால் நடித்த “ராஜா வின்டெ மகன்” படத்தைத்தான் இந்தப் பெயரில் தமிழில் `ரீமேக்’ செய்தார். மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான அந்தப்படம், தமிழிலும் பெரிய வெற்றி பெற்றது.

பாலாஜி சார், மற்ற எந்த நிறுவனத்திலும் செய்திராத ஒரு ஏற்பாட்டை தனது நிறுவனத்தில் கலைஞர்களுக்கு கவுரவம் அளிக்கும் வகையில் செய்தார். நடிகர் – நடிகைகள், டைரக்டர் ஆகியோர், படப்பிடிப்பின்போது உட்காரும் நாற்காலியில், அவர்களின் பெயரை குறிப்பிட ஏற்பாடுசெய்தார். இதனால், ஒருவர் நாற்காலியில் பிறர் உட்கார்ந்து கொள்ள முடியாது.

கூடுதல் சம்பளம்

“மங்கம்மா சபதம்” படத்தில் நடித்தபோது என் வில்லன் நடிப்புக்கு பேசிய சம்பளம் 25 ஆயிரம் ரூபாய். ஆனால் எனக்கு வந்து சேர்ந்ததோ 40 ஆயிரம் ரூபாய்! கணக்கில் ஏதோ தவறு நடந்து விட்டது என்று நினைத்த நான், பாலாஜி சாரை பார்த்து மீதி 15 ஆயிரத்தை கொடுக்கப்போனேன். அவரோ, “நன்றாக நடித்திருந்தீர்கள். அதனால், பேசினதைவிட அதிகமாகக் கொடுக்கத் தோன்றியது. கொடுத்தேன்” என்று சர்வசாதாரணமாக சொல்லிவிட்டார்.

படத்தின் தரத்துக்காக செலவை பொருட்படுத்தாதவர் இவர். “மக்கள் என்பக்கம்” படத்தின் ஒரு காட்சியில் ஆட்டோக்கள் தேவை என்று டைரக்டர் கேட்டபோது, 100 ஆட்டோக்களை உடனடியாக ஏற்பாடு செய்து விட்டார். நான்கூட அவரிடம், “சார்! 20 ஆட்டோ போதுமே” என்றேன். “கதைக்கு தேவையான பிரமாண்டத்துக்கு 100 ஆட்டோக்கள் இருக்கட்டுமே” என்று சொல்லிவிட்டார். 28 நாட்களில் முழு படப்பிடிப்பும் முடிந்து இந்தப்படமும் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.

பாலாஜி சாரின் “திராவிடன்” படத்திலும் ஹீரோவாக நடித்தேன்.

ஐந்து நிமிட வேடம்

நடிக்க வந்த பிறகு, இந்தக் கேரக்டரில் நடிக்கிறேன் என்று நானாக கேட்டு வாங்கி நடித்தது “காவல்” படம் மட்டும்தான். பாலாஜி சாரின் தயாரிப்பான இந்தப்படம், ஒரு இந்திப்படத்தின் ரீமேக். அந்த இந்திப்படத்தில் ஹீரோவாக ஓம்புரியும், ஐந்து நிமிடமே வந்து போகிற போலீஸ்காரர் கேரக்டரில் நசுருதீன்ஷாவும் நடித்திருந்தார்கள். இந்தப் படத்தை நான் பார்த்தபோது, நசுருதீன்ஷா நடித்த அந்த கேரக்டர் என்னை மிகவும் கவர்ந்தது. அதே படம் தமிழில் ரீமேக் ஆகிறது என்று தெரிந்ததும், பாலாஜி சாரை நானே போய் சந்தித்தேன். “சார்! எனக்கு சம்பளம் வேண்டாம். இந்தியில் நசுருதீன் ஷா நடித்த அந்த கவுரவ கேரக்டரை தமிழில் எனக்கு கொடுத்து விடுங்கள்” என்றேன். அவரும், “தாராளமாய் நடியுங்கள்” என்றார்.

படத்தில் என் போர்ஷனை இரண்டே நாளில் எடுத்து முடித்தார்கள். நான் பாலாஜி சாரை சந்தித்து, என் `நடிப்பு விருப்பம்’ நிறைவேற்றியதற்காக நன்றி சொல்லி புறப்பட்டபோது, தடுத்து நிறுத்தி, என் கையில் 3 பவுன்களைத் திணித்தார். நான், “சார்! எனக்கு சம்பளமே வேண்டாம்” என்று கூற, அவரோ, “இது என் அன்பளிப்பு. சம்பளம் அல்ல. நீங்கள் வாங்கிக் கொள்ளத்தான் வேண்டும்” என்று கூறிவிட்டார். எனது 2 நாள் நடிப்புக்கு கிடைத்த 3 பவுனை கணக்கில் கொண்டால் அப்போது நான் படங்களுக்கு வாங்கிய சம்பள அடிப்படையில் அதிக சம்பளம் வாங்கியது இந்த படத்துக்குத்தான்!

டைரக்டர் பாசில்

தமிழ் சினிமாவில் அப்போது மலையாளத் திரையுலகில் இருந்து வந்து புரட்சி ஏற்படுத்தியவர் டைரக்டர் பாசில். தமிழில், ஜெய்சங்கர், பத்மினி, நதியா, எஸ்.வி.சேகர் நடித்த “பூவே பூச்சூடவா” படம் மூலம் ரொம்பவே பாப்புலராகி விட்டார். வித்தியாசமான கதைப் பின்னணிக்காக அந்தப்படம் பேசப்பட்டதோடு வெற்றியும் பெற்றது.

நான் அப்போது படங்களில் இரவு, பகலாக ஓய்வின்றி நடித்த நேரம். தனது அடுத்த படத்தில் நடிக்கும்படி பாசில் என்னிடம் கேட்டுக்கொண்டார். பாம்குரோவ் ஓட்டலில், ஒரு இரவில் கதையைச் சொன்னார். ஓய்வே இல்லாததால், களைப்பு அடைந்திருந்த நான், கதையுடன் ஒன்ற முடியவில்லை. கதை சொல்லி முடித்த பாசில், “கதை எப்படி இருக்கிறது” என்று கேட்டபோது கூட, உடனே நான் பதில் சொல்லவில்லை. பாசில் புறப்பட்டுப்போனதும் எனது மானேஜர் ராமநாதனிடம் “அவர் கதை சொன்னார். நான் களைப்பாக இருந்ததால், கதையுடன் என்னால் ஒன்ற முடியவில்லை. இந்தக் கதையில் நடிக்கவில்லை என்று கூறிவிடலாமா?” என்று கேட்டேன்.

அவரோ, “சார்! பாசில் மலையாளத்தில் பெரிய டைரக்டர். தமிழிலும் அவர் பெரிய அளவில் வருவார். நிச்சயம் அவர் வித்தியாசமான கதைக்குத்தான் உங்களைத் தேடி வந்திருக்கிறார். பேசாமல் `சரி’ என்று சொல்லிவிடுங்கள்” என்றார்.

அப்படி நான் ஒப்புக்கொண்ட படம்தான் “பூவிழி வாசலிலே.”

கேரள உணவு

இந்தப்படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் உள்ள ஆலப்புழையில் நடந்தது. எந்த மாநிலத்தில் படப்பிடிப்பு நடந்தாலும் எனக்கு சாப்பாட்டுப் பிரச்சினை கிடையாது. அந்தந்த ஊரில் உள்ள உணவுக்கு என்னை பழக்கப்படுத்திக் கொள்வேன். ஆனால் ஆலப்புழையில் மட்டும் எனக்கு கேரள உணவுக்குப் பதிலாக தமிழ்நாட்டு உணவு வகைகளையே தந்தார்கள். இரண்டொரு நாள் பொறுத்துப் பார்த்த பிறகு நானே தயாரிப்பாளரிடம் “உங்க ஊர் உணவையே எனக்கு கொடுங்கள்” என்று கேட்டு வாங்கி சாப்பிட்டேன். பிரவுன் கலர் அரிசி சாப்பாடு, புட்டு, மீன் குழம்பு, நேந்திரம் பழம் என்று படப்பிடிப்பு நடந்த நாட்களில் கேரள ஸ்பெஷல் உணவுகளுடனேயே ஐக்கியமாகிவிட்டேன்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பை பார்க்க மலையாள சூப்பர் ஸ்டார்கள் மம்முட்டி, மோகன்லால் ஆகியோர் வருவார்கள். செட்டே கலகலப்பாக இருக்கும். இந்தப் படத்தில் சிறுவனாக முக்கிய கேரக்டரில் நடித்த சுஜிதா, பெண் குழந்தை என்று முதலில் எனக்குத் தெரியாது. படப்பிடிப்பு தொடங்கி 10 நாட்களுக்குப் பிறகே தெரியும். குழந்தை என்றாலும் சுஜிதா நடிப்பில் மிரட்டியிருந்தாள். படம் “சூப்பர்ஹிட்” ஆனது.

சமீபத்தில் ஒரு டப்பிங் தியேட்டரில் டப்பிங் பேசப்போனபோது ஒரு அம்மா என்னிடம் ஒரு இளம் பெண்ணை அறிமுகப்படுத்தினார். “சார்! இது என் பெண் சுஜிதா. நீங்கள் நடித்த “பூவிழி வாசலிலே” படத்தில் சிறுவனாக நடித்தது இவள்தான்” என்றார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. குட்டிப்பெண் வளர்ந்து பெரியவளாக நிற்கும்போதுதான், நமக்கும் வயதாகியிருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது!

“பூவிழி வாசலிலே” படத்தில் நடித்த பிறகு, மறுபடியும் பாசில் டைரக்ஷனில் “பொம்முகுட்டி அம்மாவுக்கு” படத்திலும் நடித்தேன். இந்தப் படத்தில்தான் சுஹாசினி எனக்கு முதன் முதலாக ஜோடியானார். ஒரு சாதாரண குடும்பத் தலைவனாக என்னை நடிக்க வைத்து இந்தப் படத்தையும் வெற்றி பெறச்செய்தார், பாசில்.”

இவ்வாறு சத்யராஜ் கூறினார்.

வரலாற்றுச் சுவடுகள் : திரைப்பட வரலாறு :(821)
சத்யராஜ் சிவாஜியுடன் இணைந்து நடித்த “ஜல்லிக்கட்டு”

சிவாஜிகணேசன் நடித்த “ஜல்லிக்கட்டு” படத்தில் இன்னொரு ஹீரோவாக சத்யராஜ் நடித்தார். இந்தப்படமும் வெற்றி பெற்றது.

சிவாஜியுடன் “ஜல்லிக்கட்டு” படத்தில் நடித்த சத்யராஜ×க்கு, படத்தில் முக்கியமான கேரக்டர். நீதிபதி ஒருவர் தனக்கு ஏற்பட்ட பாதிப்பை ஒரு அதிரடி இளைஞன் மூலம் சரி செய்து கொள்ளும் கதை. இதில் பாதிக்கப்பட்ட நீதிபதியாக சிவாஜியும், அவருக்கு உதவும் இளைஞராக சத்யராஜ×ம் நடித்தார்கள். வித்தியாசமான கதைக்கருவைக் கொண்ட இந்தப்படமும் பெரிய அளவில் வெற்றி பெற்றது.

எம்.ஜி.ஆர்.

இந்தப் படத்தின் வெற்றி விழாவில், அன்றைய முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். கலந்து கொண்டு சிவாஜி உள்ளிட்ட கலைஞர்களை வாழ்த்தினார்.

எம்.ஜி.ஆர். கலந்து கொண்ட கடைசி சினிமா விழா இதுதான்.

சிவாஜியுடன் நடித்த “ஜல்லிக்கட்டு” அனுபவம் குறித்து சத்யராஜ் கூறியதாவது:-

“ஜல்லிக்கட்டு படத்தை நண்பர் மணிவண்ணன்தான் இயக்கினார். சித்ரா லட்சுமணன் தயாரித்தார்.

கதையைக் கேட்கும்போதே இது நன்றாக ஓடும் என்று தோன்றியது. சில கதைகளை கேட்டதுமே, அது வெற்றி பெறும் என்று சொல்லிவிட முடியும். ஜல்லிக்கட்டு அப்படியொரு கதை.

தலைவா…!

அப்போதெல்லாம் நானும் மணிவண்ணனும் செட்டிலே ஒருவரை ஒருவர் `தலைவா!’ என்று கூப்பிட்டுக் கொள்வோம். இந்த `தலைவா’ பழக்கம் செட்டில் இருந்த மற்ற டெக்னீஷியன்களையும் தொற்றிக் கொண்டது.

இது எதில் போய் முடிந்தது தெரியுமா? செட்டில் சிவாஜி சாரிடம் போன டான்ஸ் மாஸ்டர் பாபு அவரிடம், “தலைவா! ஷாட் ரெடி” என்று சொல்லப்போக, பதிலுக்கு சிவாஜி சார் அவரை கேலி செய்யும் அளவுக்குப் போய்விட்டது. “ஏண்டா! உங்க `தலைவா’ என் வரைக்கும் வந்தாச்சா?” என்று கேட்க, மாஸ்டர் அவசரமாய் `எஸ்கேப்’ ஆகியிருக்கிறார்.

நானும் பிரபுவும் `தலைவரே’ என்று அழைத்துக் கொள்வதும் சிவாஜிசாருக்கு தெரிந்திருக்கிறது. இப்போது ëஅவரே செட்டில் “தலைவா” என்று அழைக்கப்பட்டு விட்டதால், அன்று படப்பிடிப்பு முடிந்து வீட்டுக்குப் போனவர், பிரபு வரும் வரை காத்திருந்திருக்கிறார். பிரபு வீட்டுக்குப் போனதும் “வாங்க தலைவரே!” என்று அழைத்து அவரை வெலவெலக்க வைத்திருக்கிறார்.

மறுநாள் இதுபற்றி பிரபு என்னிடம் சொன்னபோது, எங்களுக்கெல்லாம் அடக்கமுடியாத சிரிப்பு.

நேரத்தை மதிப்பவர்

நேரத்துக்கு மதிப்பு கொடுப்பதில் சிவாஜி சாருக்கு நிகர் அவரேதான். காலை 7 மணிக்கு படப்பிடிப்பு என்றால் நான் 7 மணிக்கு செட்டில் இருப்பேன். ஆனால் அதற்கு முன்பே சிவாஜி சார் செட்டில் இருப்பார்.

ஒருநாளாவது அவரை முந்திவிடவேண்டும் என்று இன்னும் சீக்கிரம் வரத்தொடங்கினேன். அப்போதும் சிவாஜி சார் எனக்கு முந்தி வந்திருந்தார். நடிப்பில் மட்டுமின்றி, `பங்ச்சுவாலிட்டி’யிலும் சிவாஜி சாருக்கு இணையாக யாருமில்லை என்பதை நானும் இந்த நாட்களில் கண்கூடாக உணர்ந்தேன்.

“ஜல்லிக்கட்டு” படப்பிடிப்புக்காக பெங்களூரில் இருந்து மங்களூருக்கு விமானத்தில் போனோம். நான், மணிவண்ணன், கேமராமேன் சபாபதி, சித்ரா லட்சுமணன் எல்லோரும் ஒரே ரூமில் தங்கினோம். சிவாஜி சார் பக்கத்து ரூமில் தங்கினார்.

படப்பிடிப்பு முடிந்து ஊருக்கு கிளம்ப வேண்டிய நாள். காலை 6 மணிக்கு விமானம் ஏறவேண்டும். சிவாஜி சார் அதிகாலை 4 மணிக்கு விழித்தவர் எங்கள் அறைக்கு வந்திருக்கிறார். நாங்கள் முந்தின நாள் இரவு சிக்கன் பிரியாணி சாப்பிட்டு விட்டு அப்படியே தூங்கியிருக்கிறோம். அதிகாலையில் எங்களை வந்து பார்த்தவர், நாங்கள் படுத்திருந்த இடத்துக்கு அருகில் சிக்கன் எலும்புகள் கிடந்ததை பார்த்திருக்கிறார். அப்போதைக்கு ஒன்றும் சொல்லாமல் போனவர், நாங்கள் புறப்பட்டு தயாராகி வந்தபோது பிடித்துக்கொண்டார். “ஏண்டா! காலையிலேயே எழுப்பலாம்னு வந்தால் செத்துப்போன கோழியோட ஒண்ணா படுத்திருக்கீங்களே” என்று கிண்டல் செய்தார். அந்த கிண்டலில் ஒரு தந்தைக்கே உரிய அக்கறை இருந்தது.

அவசரப்பயணம்

விமான நிலையத்துக்கு புறப்பட சிவாஜி சார் அவசரப்படுத்தின தால், ஆளாளுக்கு சீக்கிரமே கிளம்பி விட்டோம். கமலா அம்மாளும் சிவாஜி சாருடன் வந்திருந்தார்கள். “மாமா இப்படித்தான் அவசரப்படுத்துவாங்க. நாமபோறப்போ விமான நிலைய கேட்டை திறந்திருக்க மாட்டாங்க” என்றார்.

கமலா அம்மாள் சொன்னதுபோலவே ஆயிற்று. நாங்கள் போய்ச் சேர்ந்த பிறகுதான் விமான நிலைய பயணிகள் கேட்டையே திறந்தார்கள்! அப்போது மங்களூரில் இருந்து பெங்களூருக்கு தினமும் ஒரு விமானம்தான். எனவே விமானத்தை தவறவிட்டால் தேவையில்லாமல் ஒருநாள் காத்திருக்க வேண்டியிருக்கும். இந்த வகையில் சிவாஜி சாரின் `அவசரம்’ நியாயமானதுதான்.

பார்த்ததுமே “வாங்க கவுண்டரே!” என்பார். படப்பிடிப்பின்போது கிடைக்கிற இடைவெளி நேரத்தில் குடும்ப விஷயங்கள் பற்றி பேசுவார். எங்கள் சித்தப்பா அவரது நண்பர் என்ற முறையில் எங்கள் குடும்பம் பற்றி ஆர்வமாய் விசாரிப்பார். என் சிறுவயதிலேயே விவசாய நிலங்கள் விற்கப்பட்டதை தெரிந்து கொண்டவர், “நீ சம்பாதிச்சு சொந்த ஊர்லயே நிறைய தென்னந்தோப்பு வாங்கணும்” என்று சொன்னார். அவர் சொன்னதுபோலவே பொள்ளாச்சி பகுதியில் வாழவாடி ஊரில் 95 ஏக்கர் தென்னந்தோப்பு வாங்கியிருக்கிறேன்.

“ஜல்லிக்கட்டு” படம் எதிர்பார்த்த மாதிரியே நன்றாக ஓடி, வெற்றி பெற்றது. இந்தப் படத்துக்குப் பிறகே பாரதிராஜாவுடன் “வேதம் புதிது” படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தது.”

இவ்வாறு சத்யராஜ் கூறினார்.

வரலாற்றுச் சுவடுகள் : திரைப்பட வரலாறு :(822)
நடிகர் சத்யராஜ் பாலுத்தேவராக வாழ்ந்த “வேதம் புதிது”
6 விருதுகளை வாங்கித்தந்த படம்

“வேதம் புதிது” படத்தில் பாலுத்தேவராக வாழ்ந்து காட்டினார், சத்யராஜ். பாரதிராஜாவின் மிகச்சிறந்த படைப்புகளில் ஒன்றான “வேதம் புதிது” படம் சத்யராஜை மிகச்சிறந்த குணசித்ர நடிகராகவும் வெளிப்படுத்தியது. அவருக்கு 6 விருதுகள் கிடைத்தன.

“முதல் மரியாதை” படத்தில் சிறு வேடத்தில் மட்டும் நடித்த சத்யராஜை, தனது கிராமத்துக் காதல் கதையான “கடலோரக் கவிதைகள்” படத்தில் கதாநாயகன் ஆக்கினார், பாரதிராஜா. “கடலோரக் கவிதைகள்” படத்தின் வெற்றிக்குப் பிறகு, “மதங்களை கடந்தது மனிதநேயம்” என்ற கருத்தை வெளிப்படுத்தும் “வேதம் புதிது” படத்திலும் சத்யராஜையே நடிக்க வைத்தார். பாலுத்தேவர் என்ற கம்பீரமான குணச்சித்திர வேடத்தில் சத்யராஜ் வாழ்ந்து, ரசிகர்களை பிரமிக்க வைத்தார். படமும் வெற்றி பெற்றது.

இந்தப்படத்தில் நடித்த அனுபவம் பற்றி சத்யராஜ் கூறியதாவது:-

மைல்கல்

“என் நடிப்பு வரலாற்றில் நிச்சயம் ஒரு மைல்கல் `பாலுத்தேவர்’ கேரக்டர்.

பாரதிராஜாவின் “வேதம் புதிது” கதையை என்னிடம் சொல்லும்படி சித்ரா லட்சுமணனிடம் பாரதிராஜா கூறியிருக்கிறார். அவர் என்னிடம், “கதையின் அவுட்லைனை கேட்டுக் கொள்ளுங்கள்” என்றார்.

“நான் டைரக்டர் பாரதிராஜா சாரிடம் முதல் மரியாதை படத்தில் என் கேரக்டர் என்ன என்பது பற்றி கேட்கவில்லை. கடலோரக் கவிதைகள் படத்திலும் கதை கேட்கவில்லை. இந்தப் படத்திலும் கதை கேட்கப்போவதில்லை. நான் கதை கேட்டு முடிவு செய்கிற நிலையை கடந்தவர் அவர்” என்று சித்ரா லட்சுமணனிடம் கூறி, கதை கேட்க மறுத்துவிட்டேன்.

இந்தப் படத்தில் நடித்த பிறகு வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் மத்தியிலும், எனக்கு பெரிய அளவில் மரியாதை கிடைத்தது.

நான் அப்போது பெரியார் கொள்கைகளுக்குள் வந்திருந்த நேரம். படத்தில் வரும் பாலுத்தேவர் கேரக்டர் `நாத்திகர்’ என்பது எனக்கு மிகவும் வசதியாகி விட்டது.

அருமையான வசனம்

படத்துக்கு கண்ணன் என்பவர் வசனம் எழுதியிருந்தார். இந்தப்படத்துக்கு அவர் வசனம் எழுதிய பிறகு, `வேதம் புதிது கண்ணன்’ என்று அழைக்கப்பட்டார். அந்த அளவுக்கு படத்துக்கு வசனங்களும் உயிர் நாடியாக அமைந்தன.

“பராசக்தி”, “வீரபாண்டிய கட்டபொம்மன்”, “மனோகரா” போன்ற படங்கள் வசனங்களுக்காகவும் பேசப்பட்டவை. “காக்கி சட்டை” படத்தில் நான் இரண்டு தடவை சொன்ன `தகடு தகடு’ வசனம் சினிமாவில் என் நடிப்புக்கு புதிய பாதையை உருவாக்கித் தந்தது.

இப்படி வசனங்கள் மூலம் கிடைக்கும் பெருமை, இந்தப் படத்தில் கண்ணன் வசனத்துக்கும் கிடைத்தது. கதைப்படி, என் மகன் தாமிரபரணி ஆற்றில் விழுந்து இறந்திருப்பான். அது தெரியாத உறவினர்கள், அவனைக் காணோம் என்று தேடிப்போயிருப்பார்கள். அவர்கள் வீட்டுக்கு வந்ததும் நான் பதட்டத்திலும் பரபரப்பிலும் “கிடைச்சிட்டானா?” என்று கேட்பேன். அவர்கள் பதிலோ, “கிடைச்சிட்டுது” என்பதாக இருக்கும்.

மகன் உயிரோடு இல்லை என்பதை இந்த வசனம் நெற்றிப்பொட்டில் அடிக்கிற மாதிரி உணர்த்தி விட்டது.

ஆளுக்குத்தானே மரியாதை!

மகன் உயிரோடு இல்லை என்பதை இந்த ஒரு வரி வசனத்தில் சொல்லி, கதைக்கே ஒரு ஜீவன் கொடுத்திருந்தார், கண்ணன். படத்தில் இந்தக் காட்சிக்கு, காட்சியின் சோகம் தாண்டியும் கைதட்டிய ரசிகர்கள் அதிகம். என் படங்களில் நான் பேசிய வசனங்களிலேயே சிறந்த வசனமாக இதைக் கருதுகிறேன்.

ரஜினி புகழாரம்

இந்தப் படத்தின் படப்பிடிப்பு மைசூரில் நடந்தபோது, ஊர்க்காவலன் படப்பிடிப்புக்காக ரஜினி சாரும் அங்கே வந்திருந்தார். அவர் நடித்த படப்பிடிப்பு முடிந்ததும் எங்கள் படப்பிடிப்பு தளத்துக்கு வந்தார். 2 மணி நேரம் எங்களுடன் இருந்தார். என் `பாலுத்தேவர்’ கெட்டப் அவரை ரொம்பவே கவர்ந்திருக்கிறது. அதுபற்றிப் பேசி பாராட்டினார்.

படத்தில் நடிகை அமலா என் மருமகளாக நடித்திருந்தார். இதே அமலா என் அடுத்த படமான “ஜீவா”வில் என் ஜோடியாக நடித்தார்! அதுமாதிரி, `மிஸ்டர் பாரத்’ படத்தில் அம்பிகா எனக்கு மருமகள். அடுத்து வந்த “மக்கள் என் பக்கம்” படத்தில் என் ஜோடி! இரண்டு விதமான வேறுபாட்டையும், ரசிகர்கள் ஏற்றுக்கொண்டார்கள்.

6 விருதுகள்

“வேதம் புதிது” படத்தில் பாலுத்தேவராக நடித்த என் நடிப்புக்கு `பிலிம்பேர்’ பத்திரிகை உள்பட 6 பத்திரிகைகள் விருது கொடுத்து சிறப்பித்தன.

மத்திய அரசின் விருது கமிட்டியில் அப்போது ஜுரியாக இருந்தவர்களில் நடிகை லட்சுமியும் ஒருவர். இந்தப்படத்தில் என் நடிப்புக்கு விருது கொடுப்பதற்கான பரிசீலனையில், சின்ன விஷயத்துக்காக `விருது’ வாய்ப்பு தவறி விட்டதாக லட்சுமி என்னிடம் சொன்னார். அதாவது என் கேரக்டருக்கு `விக்’ பயன்படுத்தியிருந்தது விருதுக்கு தடையாக அமைந்திருந்ததை தெரிந்து கொண்டேன். ஆனாலும் ரசிகர்களின் பாராட்டை எனக்கு கிடைத்த பெரிய விருதாக ஏற்றுக்கொண்டு மகிழ்ந்தேன்.

ஜெயலலிதா மேடம் முதல்-அமைச்சராக இருந்தபோது ஒரு தடவை அவர்களை சந்தித்து பேசினேன். அப்போது நான் பல படங்களில் நடித்திருந்தாலும் `பாலுத்தேவர்’ கேரக்டர் பற்றியே அதிகம் பாராட்டிப் பேசினார்கள்.

படத்தில் ஒரு காட்சியில் நானே ஆடிப்போய்விட்டேன். என் வளர்ப்பு மகனாக வரும் சிறுவனை நான் தோளில் தூக்கி வைத்தபடி கதை சொல்லிக்கொண்டே வருவேன். ஆற்றைக்கடக்கும்போது அந்த சிறுவன் என்னிடம், “உங்க பெயர் என்ன?” என்று கேட்க, “நான் பாலுத்தேவர்” என்பேன். “பாலு உங்கள் பெயர். தேவர் என்பது நீங்கள் படிச்சு வாங்கின பட்டமா?” என்று அந்த சிறுவன் கேட்பான்.

இந்தக் காட்சியை, தனக்கே உரிய ஆற்றலில் மிகத் திறமையாக இயக்கினார், பாரதிராஜா. இந்தக் கேள்வியால் அந்தச் சிறுவன் என்னை கன்னத்தில் அறைவதாக உணர்வேன். `ஜாதிய சமூகத்தை தாண்டியது மனித நேயம்’ என்பதை சொல்லாமல் சொல்கிற அந்தக் காட்சி, என் நடிப்பிலும் மறக்க முடியாத காட்சியாகி விட்டது.

எம்.ஜி.ஆர். பார்த்தார்

படம் தயாரான பிறகு வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டது. குறிப்பிட்ட மதத்தை புண்படுத்துவதாக ஒரு தகவல் உலாவந்து படத்துக்கு பிரச்சினையாக அமைந்தது. இதுபற்றி முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆருக்கு சொல்லப்பட்டபோது அவர் படத்தை பார்க்க விரும்பினார். ஏவி.எம். தியேட்டரில் படம் பார்த்தபோது என்னையும் அவர் அருகே அமர வைத்துக்கொண்டார். முழுப்படத்தையும் ரசித்துப் பார்த்தவர், “இந்தப்படத்தில் சர்ச்சைக்குரிய விஷயம் எதுவும் இல்லையே!” என்றார். என் நடிப்பையும் பாராட்டினார்.

முதல்-அமைச்சர் பாராட்டிய பிறகு, படத்தின் வெளியீட்டுக்கு எந்தத் தடையும் இருக்கவில்லை. ரசிகர்கள் உணர்ச்சி மயமாய் ரசித்ததோடு, படத்தையும் வெற்றி பெறச்செய்தார்கள்.

“வேதம் புதிது” பாலுத்தேவர் கேரக்டர் என்னை ரசிகர்களிடம் பெரிய அளவில் வெளிப்படுத்தியதால்தான் இன்றைக்கு “பெரியார்”, “ஒன்பது ரூபாய் நோட்டு” போன்ற படங்களிலும் நடிப்பில் என்னை நிலைநிறுத்த முடிந்தது.”

இவ்வாறு சத்யராஜ் கூறினார்.

திரைப்பட வரலாறு 823
சத்யராஜ×க்கு எம்.ஜி.ஆர். அழைப்பு
“எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் படத்தில் நடியுங்கள்”

எம்.ஜி.ஆர். முதல்-அமைச்சராக இருந்தபோது, அவரை சத்யராஜ் சந்தித்தார். அப்போது, “எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்தில் நடியுங்கள்” என்று எம்.ஜி.ஆர். அழைப்பு விடுத்தார்.

சினிமாவில் இடைவிடாமல் நடித்துக் கொண்டிருந்த சத்யராஜ×க்கு, கொஞ்சநாள் குடும்பத்துடன் ஓய்வெடுக்கலாமே என்று தோன்றியது.

அமெரிக்கா பயணம்

அவரது சகோதரிகளில் ஒருவரான ரூபா, தனது கணவர் சேனாதிபதியுடன் அமெரிக்காவில் வாஷிங்டன் நகரில் இருந்தார். இதனால், ஒரு மாதம் நடிப்புக்கு `லீவு’ கொடுத்துவிட்டு, குடும்பத்துடன் அமெரிக்காவுக்கு பறந்தார், சத்யராஜ்.

இந்த அமெரிக்க பயணத்தைத் தொடர்ந்து எம்.ஜி.ஆருடன் சத்யராஜ் மிகவும் நெருக்கமாகப் பழகக்கூடிய வாய்ப்பு வந்தது.

அந்த அனுபவம் பற்றி, சத்யராஜ் கூறியதாவது:-

“தங்கை வீட்டுக்கு அமெரிக்காவுக்கு போக முடிவு செய்து புறப்பட்ட நாளில் என் நண்பர் டைரக்டர் மணிவண்ணன், “தினத்தந்தி”யில் என்னை வாழ்த்தி முழுப்பக்க விளம்பரம் கொடுத்துவிட்டார். இது, என் மீதான அவரது அதிகபட்ச அன்பு என்றாலும், இதை நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. “என் நண்பன் சத்யராஜின் அமெரிக்கப் பயணம் வெற்றியடைய வாழ்த்துகிறேன்” என்ற அந்த ஒருபக்க வாழ்த்துதான் எனக்கும், எம்.ஜி.ஆர். சாருக்குமான நட்புக்கான அடித்தளம் அமைக்கப்போகிறது என்பது, அப்போது எனக்குத் தெரியாது.

எம்.ஜி.ஆர். தந்தி

அப்போதுநாங்கள் சென்னை வாலஸ் கார்டனில் ஒரு வீட்டில் வாடகைக்கு இருந்தோம்.

ஒரு மாதம் அமெரிக்க பயணத்தை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்தால் கதவைத் திறந்ததுமே கண்ணில் பட்டது ஒரு தந்தி. பிரித்த மாத்திரத்தில் அது என் அமெரிக்க பயணத்தை வாழ்த்தி அனுப்பப்பட்ட தந்தி என்பதும், அதை எனக்கு அனுப்பியது அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர். என்பதும் தெரிந்தது!

அதிர்ந்து போனேன். தந்தி வந்து ஒரு மாதம் ஆகியிருந்தது. நாங்கள் அமெரிக்காவுக்கு புறப்பட்டுப் போன கொஞ்ச நேரத்தில், அந்த தந்தி எங்கள் வீட்டுக்குள் போடப்பட்டிருக்கிறது. ஒரு மாதம் கழித்து அப்படியொரு தந்தி வந்திருப்பது தெரிந்ததும் மகிழ்ச்சியையும் தாண்டி அதிர்ச்சியே எனக்குள் ஏற்பட்டது.

பின்னே! என்னை வாழ்த்தி தந்தி அனுப்பியிருப்பது மதிப்பிற்குரிய முதல்வர். ஒரு மாதம் வரை அதற்கு பதில் நன்றிகூட சொல்லாமல் இருததால், தவறாக நினைத்துக் கொள்ளமாட்டாரா?

உடனே அவரை சந்தித்து, வாழ்த்துக்கு நன்றி சொல்வதுதான் பண்பாடு. ஆனால் அவர் அழைப்பில்லாமல் எப்படிப் போவது? அப்படிப் போனாலும் அவரை சந்தித்துப் பேசமுடியுமா?

இப்படியான குழப்பம் என்னை ஆட்கொண்டபோது, டைரக்டர் பாரதிராஜாவிடம் யோசனை கேட்டேன். அவரோ, “யாரிடமும் முன்கூட்டியே அனுமதி பெறத் தேவையில்லை. நேராக தோட்டம் (எம்.ஜி.ஆரின் ராமாவரம் இருப்பிடம்) போங்க! போய், வாழ்த்துக்கு நன்றி சொல்லிட்டு வந்துடுங்க” என்றார்.

எம்.ஜி.ஆர். வீட்டில்

அவர் சொன்னது நல்ல யோசனையாகப்பட்டது. மறுநாளே மனைவியுடன் தோட்டத்துக்கு கிளம்பினேன். காலை 8 மணிக்கு தோட்டத்தை நெருங்கும்போது இன்னொரு சந்தேகம். `ஒருவேளை கேட்டில் நிற்கும் காவலாளி தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பி விட்டால்?’

நான் சராசரி மனிதன் என்றால் பரவாயில்லை. என்னோடு அந்த விஷயம் முடிந்து விடும். நான் இப்போது நடிகன். பார்க்கிற எல்லோருக்குமே என்னைத் தெரியும். ஒருவேளை அப்படி திருப்பி அனுப்பிவிட்டால், “எம்.ஜி.ஆரை பார்க்கப்போன நடிகர் சத்யராஜ் திருப்பி அனுப்பப்பட்டார்” என்றல்லவா செய்தி வரும்!

ஆனால் அப்படியெல்லாம் எந்தத் தடையும் இருக்கவில்லை. கேட்டில் என் வருகைக்கு வரவேற்புதான் இருந்தது. அங்கிருந்தவர்கள் எங்களை வரவேற்பு அறைக்கு அழைத்துப்போய் உட்கார வைத்தார்கள். தோட்டத்தில் நிறைய குழந்தைகளை எம்.ஜி.ஆர். படிக்க வைத்துக் கொண்டிருந்தார். அந்தக் குழந்தைகள் என்னைப் பார்த்ததும் உற்சாகமாய் ஓடிவந்து `ஆட்டோகிராப்’ வாங்கினார்கள்.

கொஞ்ச நேரத்தில் நாங்கள் வந்திருந்த தகவல் எம்.ஜி.ஆர். சாருக்கு சொல்லப்பட்டு, எங்களை இன்னொரு வரவேற்பறைக்கு அழைத்துச் சென்றார்கள். அப்போது அங்கிருந்த ஒருவர் எங்களை நெருங்கி வந்து, “என்ன சாப்பிடறீங்க?” என்று கேட்டார்.”

நான், “வீட்டிலேயே சாப்பிட்டு விட்டு வந்து விட்டோம் என்றேன். “இந்த இடத்துக்கு வந்து அப்படியெல்லாம் சொல்லக்கூடாது” என்றார், அவர்.

எம்.ஜி.ஆர். இல்லத்துக்கு போகிறவர்களுக்கு முதலில் வயிறார சாப்பாடு. அதன்பிறகுதான் அவருடன் சந்திப்பு என்பதாக நானும் ஏற்கனவே அறிந்திருந்தேன். என்றாலும் காலை டிபன் முடித்துவிட்டுப் போனபிறகு, உடனே மறுபடி டிபன் சாப்பிட முடியுமா? எனவே `டீ` கொடுங்க போதும்” என்றேன்.

`டீ’ வந்த கொஞ்ச நேரத்தில் ஜானகி அம்மாளுடன் எம்.ஜி.ஆர். சார் நாங்கள் இருந்த அறைக்கே வந்துவிட்டார். இருவருக்கும் கையோடு கொண்டு போயிருந்த மாலைகளை அணிவித்து ஆசி பெற்றுக்கொண்டோம்.

எங்களைப் பார்த்ததுமே எம்.ஜி.ஆர். சார் கேட்ட முதல் கேள்வி, “ஏன் குழந்தைகளை அழைத்து வரவில்லை?” என்பதுதான்! நான் விழிக்க, என் மனைவியை பார்த்த எம்.ஜி.ஆர், “உங்க வீட்டுக்காரருக்கு இதெல்லாம் ஞாபகம் இருக்காது. நீங்கதாம்மா குழந்தைகளையும் அழைச்சிட்டு வந்திருக்கணும்” என்றார்.

குழந்தைகளையும் நேசிக்கும் அவர் அன்பு புரிந்தது. பேச வார்த்தை வராமல் நின்றோம். அவரே, “அடுத்த தடவை வரும்போது கண்டிப்பா குழந்தைகளையும் அழைச்சிட்டு வரணும். சரியா?” என்று எங்கள் தவிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

அடுத்து அவர் கேட்ட கேள்வி இன்னும் பாசப்பிணைப்பானது.

“ஏன் இத்தனை நாளா வரலை?” என்பதே அவர் கேள்வி.

“அண்ணே! எப்படி திடீர்னு வர்றது? ஒருவேளை நான் வந்து கேட்டைத்தாண்டி உள்ளே விடமாட்டேன்னுட்டாங்கன்னா தமிழ்நாடு முழுக்க தெரிஞ்சிடுமே” என்றேன்.

நான் இப்படிச் சொன்னதை எம்.ஜி.ஆர். சார் ரொம்பவே ரசித்தார். என் தோளில் தட்டி சிரித்தார். பிறகு அவரே, “அப்படியெல்லாம் பண்ணமாட்டாங்க” என்றார்.

அமெரிக்கா அனுபவம்

பிறகு என் குடும்பம் பற்றியெல்லாம் ஆர்வமாக விசாரித்தார். வாஷிங்டனில் இருக்கும் தமிழர்கள் எனக்கு கொடுத்த சிறப்பான வரவேற்பு பற்றி அவரிடம் பகிர்ந்து கொண்டேன்.

“தொடர்ந்து படப்பிடிப்பு படப்பிடிப்புன்னு இருந்ததுக்கு ஒரு மாத ஓய்வு பயனுள்ளதாக இருந்திருக்குமே” என்றார், ஜானகி அம்மாள்.

உடனே எம்.ஜி.ஆர், “எங்கே ஓய்வெடுக்கிறது! அமெரிக்காவிலும் தமிழ்ச்சங்கம் வரவேற்பு அது இதுன்னு போய் வந்ததுல ஓய்வு எப்படி எடுக்க முடியும்?” என்று என் சார்பில் ஜானகி அம்மாளுக்கு பதில் கூறினார்.

தொடர்ந்து என் படங்களையெல்லாம் பார்த்ததாகவும், சிறப்பாக நடிக்கிறேன் என்றும் சொன்னபோது சந்தோஷத்தில் இறக்கையில்லாமல் பறந்தேன்.

நடிக்க அழைப்பு

திடீரென்று, “சத்யராஜ்! நீங்க எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் படத்தில் நடிக்கிறீங்களா?” என்று கேட்டார், எம்.ஜி.ஆர்.

“நீங்க இப்படி கேட்டிருக்க கூடாதுண்ணே! உத்தரவே போட்டிருக்கணும். அப்படி உங்க எம்.ஜி.ஆர். பிக்சர்சில் நடிக்கிற வாய்ப்பு அமைந்தால் அது என் பாக்கியம்” என்றேன்.

இப்போது ஜானகி அம்மாள், “எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் மூலமா நாலைந்து படம் எடுத்திருக்கிறோம்” என்றார்கள்.

நான் உடனே, “3 படம்தான் எடுத்திருக்கீங்க. 1958-ல் “நாடோடி மன்னன்”, 1969-ல் “அடிமைப்பெண்”, 1973-ல் “உலகம் சுற்றும் வாலிபன்” என 3 படம்தான் எடுத்திருக்கீங்க” என்றேன்.

நான் இப்படி புள்ளி விவரங்களுடன் சொன்னது எம்.ஜி.ஆர் சாரை ஆச்சரியப்படுத்தி விட்டது. “சரி! எங்க கம்பெனிக்கு எப்ப நடிக்கிறே?” என்று கேட்டார்.

“நாளையில் இருந்தே ஷூட்டிங் வைத்தாலும் நான் ரெடி” என்றேன்.

உடனே எம்.ஜி.ஆர். சார் என் வார்த்தையை பிடித்துக்கொண்டார். “அப்ப, இப்போது உன்னை வெச்சு படம் எடுக்கிறவங்க கதி? அவங்க படத்தை முடிச்சிட்டு அப்புறமா நடி” என்றார்.

தயாரிப்பாளர்களை `முதலாளி ஸ்தானத்தில்’ வைத்து மரியாதை செய்யும் அவரது வார்த்தைகளில் தயாரிப்பாளர்கள் மீது எத்தனை கரிசனம் என்று எண்ணி வியந்தேன்.

“கண்டிப்பாக நடிக்கிறேன். ஆனால் நீங்களே டைரக்ட் பண்ணணும்” என்றேன்.

பதிலுக்கு அவர், “எனக்கும் விருப்பம்தான். ஆனால் `சி.எம்’ ஆயிட்டேனே!” என்றார். பிறகு அவரே, “படத்துக்கு நல்ல டைரக்டராக போட்டு விடுவோம். நான் எடிட்டிங் சமயத்தில் வந்து விடுகிறேன்” என்றார். சினிமாவை அப்போதும் அவர் எவ்வளவு நேசிக்கிறார் என்பதை என்னால் உணர முடிந்தது.

முத்தம்

விடைபெறும் நேரம் வந்தபோது கன்னத்தில் முத்தமிட்டு என்னை வாழ்த்தினார். அடுத்த தடவை குழந்தைகளோடுதான் வரணும் என்று அன்புக் கட்டளையிட்டு அனுப்பி வைத்தார்.

வீட்டுக்கு வந்த பிறகும் கூட எனக்கு எம்.ஜி.ஆர். சாரின் அந்த அன்பே கண்ணுக்குள் நின்றது. என் மனைவி என்னிடம், எம்.ஜி.ஆர். சார் கொடுத்த முத்தத்தை நினைவுபடுத்தி, “10 நாள் நீங்கள் உடம்புக்கு மட்டும்தான் குளிப்பீங்க. முத்தம் கிடைச்ச சந்தோஷத்துல முகம் கழுவப் போறதில்லை” என்று கிண்டல் செய்தார்.”

இவ்வாறு சத்யராஜ் கூறினார்.

திரைப்பட வரலாறு 824
சத்யராஜ் தங்கைகள் திருமணம்
“எம்.ஜி.ஆர். நேரில் சென்று வாழ்த்து”

நடிகர் சத்யராஜின் 2 தங்கைகள் திருமணம் கோவையில் நடந்த போது,முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். அங்கு சென்று மணமக்களை வாழ்த்தினார்.

எம்.ஜி.ஆரை அவரது இல்லத்தில் சத்யராஜ் சந்தித்த பிறகு, அவர் எம்.ஜி.ஆரின் அன்புக்குரியவராகி விட்டார். இந்த சமயத்தில் சத்யராஜின் இரண்டு தங்கைகளுக்கு நடந்த திருமணத்திலும் எம்.ஜி.ஆர். கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

இதுகுறித்து சத்யராஜ் கூறிய தாவது:-

தங்கைகள் திருமணம்

“எனது தங்கைகள் நந்தினி, அகிலா இருவருக்கும் கோவையில் திருமணம் நிச்சயமானது. “மலைக் கள்ளன்” “சிவகவி” போன்ற வெற்றிப்படங்களை தயாரித்த பட்சிராஜா ஸ்டூடியோ கோவையில் இருந்தது. பின்னாளில் இந்த ஸ்டூடியோ கல்யாண மண்டபமாக மாற்றப்பட்டது.

இந்த திருமண மண்டபத்தில்தான் தங்கைகள் திருமணம் நடந்தது. தங்கைகளின் திருமண பத்திரிகையை எம்.ஜி.ஆரிடம் கொடுக்க நான் ராமாவரம் தோட்டத்துக்கு போயிருந்தபோது அவர் கோட்டைக்கு போயிருந்தார். ஜானகி அம்மாள் மட்டும் வீட்டில் இருந்தார். நான் ஜானகி அம்மாவிடம் திருமண பத்திரிகையை கொடுத்து, “அம்மா! இது அழைப்பிதழ் அல்ல. கோவையில் திருமணம் நடக்கிறது என்பதை சொல்லும் தகவல் மட்டும்தான். ஒரு சாதாரண நடிகனின் தங்கைகள் திருமணத்துக்காக 600 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்ய வேண்டும் என்பது அவசியம் இல்லை. கோவையில் திருமணம் முடிந்ததும், நானே மணமக்களை இங்கே அழைத்து வருகிறேன்” என்றேன்.

இதற்குப் பிறகு நான் கல்யாண வேலைகளில் பிசியாகி விட்டேன். சித்தப்பா வகையில் சிவாஜி எங்கள் குடும்பத்தின் நெருங்கிய நண்பர் என்பதால் அவர் நிச்சயம் வந்து விடுவார். நாமே வர வேண்டாம் என்று சொன்னதால், எம்.ஜி.ஆர். வரமாட்டார் என்றே எண்ணினேன்.

திருமணத்திற்கு முந்தின நாள், முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். எனது தங்கைகள் திருமணத்துக்காக கோவை வருகிறார் என்ற தகவல் காவல் துறைக்கு தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அடுத்த சில நிமிடங்களில் கோவை மாவட்ட கலெக்டர் எனக்கு போன் செய்தார். “ஏன் சார்! சி.எம். வரப்போறார் என்பதை முதலிலேயே எனக்கு தெரிவித்திருக்கலாமே” என்றார்.

நாம் வரவேண்டாம் என்று சொல்லியும் முதல்வர் வருகிறாரே என்பதுதான் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. எத்தனை அன்பு இருந்தால் அவராகவே வர முடிவு செய்வார்!

“எப்படி?”

மறுநாள் மதியம் கோவை விமான நிலையத்தில் காத்திருந்தேன். விமானத்தில் இருந்து முதல்வரும் ஜானகி அம்மாளும் இறங்கி வந்தார்கள். நான் பரவசமாய் வணங்கி நின்றபோது, என்னிடம் “எப்படி?” என்று குதூகலமாகக் கேட்டார், முதல்வர்.

அவர் “எப்படி?” என்று கேட்பதே தனி அழகு. அவரிடம் நெருங்கிப் பழகியவர்களுக்கு அந்த “எப்படி” வார்த்தையின் வல்லமை தெரியும். என்னிடம் சொன்ன “எப்படி”க்கு அர்த்தம், “நீ வரவேண்டாம் என்று சொல்லியும் வந்துவிட்டேன் பார்த்தாயா!” என்கிற அர்த்தம்.

நேராக சர்க்ïட் அவுசில் தங்கியவர், மறுநாள் காலை 5 மணிக்கு முகூர்த்தம் என்பதால் ஜானகி அம்மாளுடன் 4.45 மணிக்கே வந்து விட்டார்.

எம்.ஜி.ஆர். வரும் அதே நேரத்தில் சிவாஜியும் கல்யாண மண்டபத்துக்குள் நுழைந்தார்! இப்போது யாரை வரவேற்பது என்பதில் எனக்கே சிறு தடுமாற்றம். நிலைமையை `சட்’டென்று புரிந்து கொண்ட சிவாஜி, என்னிடம், “டேய்! இது என் வீட்டுக் கல்யாணம். நீ அண்ணன் (எம்.ஜி.ஆர்.) கூடப் போ” என்றார். இந்த ஒரு வார்த்தையில் நான் ரிலாக்ஸ் ஆனேன்.

அம்மா எங்கே?

திருமண மேடையை நெருங்கிய எம்.ஜி.ஆர். என்னிடம், “உங்கம்மா எங்கே?” என்று கேட்டார். நான் பார்வையாளர்கள் பகுதியில் முதல் வரிசையில் இருந்த அம்மாவிடம் அழைத்துப்போனேன். அம்மாவை பார்த்து “வணக்கம்மா” என்று கைகூப்பினார். அம்மா எழுந்து பதிலுக்கு கைகூப்ப, ஒட்டுமொத்த கூட்டமும் அம்மாவுடன் சேர்ந்து எழுந்து எம்.ஜி.ஆருக்கு வணக்கம் செய்தார்கள். இந்த வகையில் எம்.ஜி.ஆர். சாரால் என் தாய்க்கு மிகப் பெரிய மரியாதை கிடைத்தது.

திருமணம் நல்லபடியாக முடிந்து முதல்வர் சென்னை புறப்பட இருந்தார். விமான நிலையத்துக்கு சென்று அவரை வழியனுப்பினேன்.

என்ன வேண்டும்?

சிவாஜி சாருடன் நான் நடித்த “ஜல்லிக்கட்டு” பட விழாவுக்கு அவரை அழைக்க தோட்டத்துக்கு போன போதுதான், “உனக்கு ஏதாவது வேண்டுமா?” என்று கேட்டார்.

நான், “வேணாங்க! எந்தவித அப்பாயின்மெண்ட்டும் இல்லாம உங்களை வந்து பார்த்துப் போக முடியுதே! இதைவிட எனக்கு வேறென்ன வேண்டும்?” என்றேன்.

“நான் உனக்கு ஏதாவது பண்ணணுமா?” என்று மறுபடியும் கேட்டார்.

இதற்கும் “வேண்டாம்” என்றேன்.

“எதையாவது இப்ப நீ என்கிட்ட கேளு” என்றார், உறுதியான குரலில்.

அவர் கொடுக்க நினைப்பதும் நான் தவிர்ப்பதுமாய் ரொம்ப நேரம் தாக்குப்பிடிக்க முடியவில்லை. இப்போது எதையாவது கேட்டே ஆக வேண்டும் என்று கிடுக்கிப்பிடி போட்டு விட்டார்.

எனவே, “நீங்க உடற்பயிற்சி பண்ணுகிற கர்லாக்கட்டை வேண்டும்” என்றேன்.

நான் இப்படிக் கேட்டதும் தலையில் அடித்து சிரித்தார். உடற்பயிற்சியின் போது அவர் பயன்படுத்தி வந்த கர்லாக் கட்டையை எனக்கு வழங்கினார். இப்போதும் அவர் தந்த கர்லாக் கட்டையைக் கொண்டுதான் பயிற்சி செய்து வருகிறேன்.

“ஜல்லிக்கட்டு” நூறாவது நாள்

1987 டிசம்பர் 5-ந் தேதி “ஜல்லிக்கட்டு” படத்தின் நூறாவது நாள் விழா வள்ளுவர் கோட்டத்தில் நடந்தது. படத்தின் விழாவுக்கு முதலில் வருவதாகச் சொல்லி எல்லா ஏற்பாடுகளும் நடந்து முடிந்த நிலையில், நிகழ்ச்சி நாளன்று `வரவில்லை’ என்பதாக தகவல் அனுப்பி விட்டார். தோட்டத்தில் இருந்து வந்த போன் இந்த தகவலை உறுதி செய்ததும் அதிர்ந்துபோய் விட்டேன்.

இப்போது போல் அப்போது செல்போன் வசதியெல்லாம் கிடையாது. அதுவும் ஒரு விதத்தில் நல்லதாகப் போயிற்று. அவர் வரவில்லை என்று சொன்னாலும் அவரை போய் பார்த்து அதை உறுதிப்படுத்திக் கொள்ள விரும்பினேன்.

ஆனால் அவர் எப்படிப்பட்டவர்? எங்கே நான் போய் அவரை சந்தித்து மனதை மாற்றி விடுவேனோ என்று யோசித்தவர், மறுபடியும் வீட்டுக்கு போனில் தகவல் சொல்லச் சொல்லியிருக்கிறார். “முதல்வர் வரவில்லை என்பதற்காக, அவரை பார்க்க சத்யராஜ் வரவேண்டாம்” என்பதுதான் அந்த தகவல்.

ஆனால் வீட்டில் நான் ஏற்கனவே சொல்லி வைத்தபடி, “அவர் அப்பவே உங்களை பார்க்க வர்றதா சொல்லிட்டுப் போயிட்டாரே” என்று சொல்லி விட்டார்கள்.

நான் தோட்டம் போயிருந்தபோது என் வருகை தெரிவிக்கப்பட்டதும், மாடியில் இருந்த அவரது தனியறைக்கு அழைத்துப் போனார்கள். எம்.ஜி.ஆர். சட்டை, லுங்கியில் 10 நாள் ஷேவ் பண்ணாத முகமாய் தெரிந்தார். அவருடன் 5 அதிகாரிகள் இருந்தார்கள். பக்கத்தில் பைல்களை சரிபார்த்துக் கொண்டிருந்தார்.

அவரைப் பார்த்ததும் அவருக்கிருந்த வேலைப்பளுவும் தெரிந்தது; அவரது உடல் சோர்வும் புரிந்தது. என்னைப் பார்த்ததும், “இன்னிக்கு மழை வர்ற மாதிரி இருக்குல்ல!” என்றார்.

நான் என்ன பதில் சொல்வது? விழாவை தவிர்க்கப் பார்க்கிறார் என்பது புரிந்தது. “ஆமாண்ணே” என்றேன்.

இதற்குள் அவருக்கு பால் வருகிறது. எனக்கும் வருகிறது. சாப்பிடும்போது, “நான் வரலைன்னா வருத்தப்படுவியா?” என்று கேட்டார்.

“வருத்தமாகத் தான் இருக்கும். ஆனாலும் நாங்களே நடத்திக்கிறோம் அண்ணே!” என்றேன்.

ஒரு கணம் என்னையே கூர்மையாகப் பார்த்தார். என் ஏமாற்றத்தை முகத்தில் கண்டவர், “உனக்காக வர்றேன்” என்று சொல்லி என்னை அனுப்பி வைத்தார்.

சொன்னது போலவே மிகச் சரியாக விழா தொடங்கும் மாலை 6 மணிக்கு காரில் வள்ளுவர் கோட்டத்தில் வந்திறங்கினார். அவரை வரவேற்றபோது, என்னை அருகில் அழைத்தவர் “எப்படி?” என்றார், உற்சாகமாக அதாவது சொன்னபடி வந்ததற்காக இந்த `எப்படி’ என்பது புரிந்து எனக்கும் மகிழ்ச்சி.

முத்தம்

இந்த விழாவில் அவருக்கு உற்சாகம் என்றால் அப்படி ஒரு உற்சாகம். சிவாஜியை கட்டிப் பிடித்து முத்தமிட்டார். விருது வாங்க வந்த எம்.என்.நம்பியார் தனக்கும் முத்தம் வேண்டும் என்றார். “முத்தமா? தர முடியாது. குத்துவேன்” என்றார், ஜாலியாக.

நம்பியாரோ, “அப்படியென்றால் எனக்கு ஷீல்டு வேண்டாம்” என்றார்.

இதனால் எம்.ஜி.ஆர். சிரித்துக் கொண்டே அவரை அழைத்து, ஒரு முத்தம் கொடுத்து விட்டு, ஷீல்டை கொடுத்தார்.

நடிகர் திலகம் சிவாஜி பட வெற்றி விழாவில் எம்.ஜி.ஆர். கலந்து கொண்ட முதல் நிகழ்ச்சி இதுதான் என்றார்கள். அதுவே முதலும் கடைசியுமாகி விட்டது. அவர் கலந்து கொண்ட கடைசி சினிமா விழாவும் அதுதான்.

டிசம்பர் 5-ந் தேதி இந்த விழா நடந்தது. அதற்கு 19 நாள் கழித்து, அதாவது டிசம்பர் 24-ந் தேதி எம்.ஜி.ஆர். அமரர் ஆனார். அவரது இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டதோடு, அவரது பொன்னுடலுக்கு `உப்பு’ போடும் வாய்ப்பும் கிடைத்தது. இந்த `உப்பு’ வாய்ப்பு கிடைக்கப் பெற்ற ஒரே நடிகன் நான்தான்.

ஒரு ரசிகனாக அவரை வியந்தவன், நடிகனான போது அவரது நேசத்துக்குரியவனானேன். இப்போதும் என்னுடைய உணர்வுகளில் கலந்து போயிருப்பவர் அவர்”.

இவ்வாறு சத்யராஜ் கூறினார்.

————————————————————————————————————–

திரைப்பட வரலாறு :(835)
“பெரியார்” படம் உருவானது எப்படி?
சத்யராஜ் வெளியிட்ட ருசிகர தகவல்கள்

பெரியார் வேடத்தில் நடித்தது பற்றியும், படப்பிடிப்பின்போது நடந்த சுவையான நிகழ்ச்சிகள் பற்றியும் நடிகர் சத்யராஜ் விவரித்தார்.

பல்வேறு கேரக்டர்களில் நடித்திருந்தாலும் சத்யராஜ் நடிப்பில் ஒரு வரலாற்றுப் பதிவாக அமைந்தது `பெரியார்’ படம். இந்த படத்தில் நடித்தபோது ஏற்பட்ட அனுபவங்கள் பற்றி அவர் கூறியதாவது:-

ஞானராஜசேகரன் அழைப்பு

`பாரதி’ டைரக்டர் ஞானராஜசேகரன் என்னை சந்தித்தார். எடுத்த எடுப்பிலேயே, “சார்! பெரியாரின் வாழ்க்கைச் சம்பவங்களை படமாக எடுக்கலாம். நீங்கள் பெரியாராக நடிக்கிறீர்கள்” என்றார்.

எப்போதோ சொன்னது இப்போது நடந்துவிடும் போலிருக்கிறதே என்று உள்ளுணர்வு சொன்னாலும், பெரியார் வேடத்துக்கு நான் எந்த அளவுக்கு பொருத்தமாக இருப்பேன் என்பது தெரியவில்லையே! எனவே, என் சந்தேகத்தை கேள்வியாக்கி, “நீங்கள் பெரியார் படம் பண்றது நல்ல விஷயம். ஆனால் நான் பெரியார் தோற்றத்துக்கு எந்த அளவுக்கு பொருத்தமாக இருப்பேன் என்று தெரியவில்லையே” என்றேன்.

நான் இப்படிச் சொல்வேன் என்று எதிர்பார்த்தோ என்னவோ, சட்டென ஒரு புகைப்படத்தை எடுத்து என்னிடம் கொடுத்தார், ஞானராஜசேகரன்.

கம்பீரத் தோற்றத்தில் காணப்பட்ட ஒரு இளைஞரின் படம் அது. படத்தை பார்த்ததும், “யார் இந்த இளைஞர்? காக்கி சட்டை படத்தில் நான் இருந்த தோற்றத்தையொட்டி காணப்படுகிறாரே?” என்றேன், ஆச்சரியமாய்!

ஞானராஜசேகரனோ, “சார்! பெரியாரின் 25 வயதில் எடுத்த படம் அது. பெரியாரின் சாயல் உங்களிடமும் இருப்பதால், படத்துக்கு தாடி, மீசை வைத்து கிராபிக்ஸ் செய்து பார்த்தேன். உங்களுக்கு அச்சாகப் பொருந்துகிற மாதிரி அமைந்திருக்கிறது” என்றார். “எனக்கும் தந்தை பெரியார் வேடத்தில் நடிக்க வேண்டும் என்ற லட்சியம் உண்டு. அதைத்தான் மேடையிலும் வெளிப்படுத்தினேன். உங்கள் டைரக்ஷனில் நான் நடிக்கிறேன். தயாரிப்பாளரை தயார் செய்துவிடுங்கள்” என்றேன்.

தயாரிப்பாளர் யார்?

ஆனால் தயாரிப்பாளர்தான் கிடைத்தபாடில்லை. பெரியார் கடவுள் நம்பிக்கை இல்லாதவர். அவரது வாழ்க்கை வரலாற்றை படமாக தயாரித்தால் `சாமி கண்ணைக் குத்திவிடும்’ என்று தவறாக எண்ணிக் கொண்டு ஒதுங்கினார்களோ என்னவோ!

இதற்கிடையே நானும் மற்ற படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தேன். இந்த சமயத்தில் ஒருமுறை கி.வீரமணியை சந்தித்தேன். அவரை `ஆசிரியர் ஐயா’ என்றே அழைப்பேன். நான் அவரிடம் “பெரியார்” படம் தொடர்பாக டைரக்டர் ஞானராஜசேகரன் என்னை சந்தித்த விவரத்தை சொன்னேன். அதோடு தயாரிப்பாளர் கிடைக்காததால்தான் படம் தொடங்குவதில் தாமதம் என்பதையும் விவரித்தேன்.

“தயாரிப்பாளர் கிடைப்பதுதான் பிரச்சினை என்றால் நாங்களே தயாரிக்கிறோம்” என்று அவர் முன்வந்தார். “பெரியாரின் தொண்டர்கள் தயாரிப்பில் பங்கேற்பார்கள். எனவே பட வேலைகளை தொடங்கச் சொல்லுங்கள்” என்றார்.

ஆசிரியர் வீரமணி பற்றி நான் அவருடன் பழகிய நாட்களில் என் அனுபவத்தை சொல்லியாக வேண்டும். எப்போதுமே அவருடனான உரையாடலில் பெரியார் பற்றியும், திராவிடர் கழக செயல்பாடுகள் பற்றியுமே அதிகம் இடம் பெறும். அவரது ஒரு மகள் அருள் அமெரிக்காவில் குடும்பத்துடன் இருக்கிறார். மகளை பார்க்க அமெரிக்கா போய் வந்த நேரத்தில் அவரை சந்தித்தபோதுகூட, மகள் பற்றியோ மகளின் குடும்பம் பற்றியோ, அமெரிக்கா பற்றியோ அவர் பேசவில்லை. `அமெரிக்காவில் உள்ள இணையதளத்தில் கூட பெரியாரை பார்க்க முடிகிறது’ என்பதையே பரவசமாய் சொல்லிக் கொண்டிருந்தார்.

சிங்கப்பூர் பயணம்

சிங்கப்பூரில் வாழும் தமிழர்களின் நேசத்துக்குரிய தமிழ்த் தலைவராக இருந்தவர் `தமிழ்வேள்’ கோ.சாரங்கபாணி. அவரது 125-வது ஆண்டு விழா சிங்கப்பூரில் கொண்டாடப்பட்ட நேரத்தில், தந்தை பெரியாரின் நினைவு நாளையும் இணைத்து கொண்டாடினார்கள். இதில் கலந்து கொள்ள ஆசிரியர் வீரமணி தனது மனைவியுடன் புறப்பட்டார். அப்போது என்னையும் குடும்பத்துடன் வருமாறு கேட்டுக்கொண்டதால் என் மனைவியுடன் பயணப்பட்டேன்.

சிங்கப்பூருக்கு போன பிறகுதான் அவருக்கு அங்கே கவிதா என்ற மகள் இருப்பதே எனக்குத் தெரியவந்தது. கவிதாவின் இல்லத்துக்குப் போனபோது அங்கேயும் பெரியார் பற்றிதான் அதிகம் பேசிக்கொண்டிருந்தார். அப்போது பெரியாராக நான் நடிப்பது பற்றி பேச்சு வந்ததும் ஆசிரியர் வீரமணியின் மனைவி என்னிடம், “பெரியார் வேஷத்துக்கு நீங்க பொருத்தமாகவே இருப்பீங்க. ஆனால் பெரியாரைவிட நீங்கள் உயரம் மட்டும் கொஞ்சம் அதிகம்” என்றார். (படத்தில் உயரம் தெரியாதபடி சரிசெய்து கொண்டு விட்டோம்)

படப்பிடிப்பில் பிரச்சினை

“பெரியார்” படத்தின் படப்பிடிப்பு ஒருவாறு தொடங்கியது. காஞ்சீபுரத்தில் உள்ள ஒரு கோவிலில் படப்பிடிப்பு நடந்தது.

காஞ்சீபுரம் கோவிலில் காலை 7 மணிக்கே பெரியார் படப்பிடிப்பு தொடங்க இருந்தது. ஆனால் `பெரியார்’ படத்துக்கான காட்சிகளை கோவிலில் எடுக்கக்கூடாது என்று எதிர்ப்பு கிளம்பியது. இதனால் படப்பிடிப்புக்கு அனுமதி மறுக்கப்பட்டது. பிற்பகல் 3 மணி வரை இதே நிலை நீடித்ததில் ரொம்பவே வருத்தமாகி விட்டது.

அப்போது படப்பிடிப்புக்கு உதவியாக வந்த பெரியார் தொண்டர்களில் சிலர் என்னிடம் வந்து, “கண்டிப்பாகப் படப்பிடிப்பு நடக்கும் `அன்பு’ பார்த்துக்குவார்” என்றார்கள்.

எட்டு மணி நேரம் முயன்றும் முடியாத ஒரு விஷயத்தை, `அன்பு’ என்பவர் வந்து முடித்து விடுவார் என்கிறார்களே என்று ஆச்சரியப்பட்டேன்.

அதுமாதிரியே அன்பு வந்தார். பேசவேண்டியவர்களிடம் பேசினார். அடுத்த ஒரு சில நிமிடங்களில் படப்பிடிப்பு தடையின்றி நடந்தது. என் ஆச்சரியம் இப்போது எல்லை தாண்டிவிட்டது. “யார் அந்த அன்பு” என்று விசாரித்தபோது என் ஆச்சரியம் இன்னும் பல மடங்கானது. ஆசிரியர் வீரமணியின் மகன்தான் அந்த அன்பு!

சமீபத்தில் ஆசிரியரின் 75-வது ஆண்டையொட்டி நடந்த விழாவின்போது முதல்-அமைச்சர் கலைஞர் கலந்து கொண்டார். அந்த விழாவுக்கு போயிருந்தபோது தான் அவருக்கு அசோக் என்றொரு மகன் இருப்பதும் தெரியவந்தது!

இப்படி தங்களை மறைத்து பெரியாரின் கொள்கைக்காகவே வாழுகிற ஒரு குடும்பம் “பெரியார்” படம் தயாரிக்க முன்வந்தது பொருத்தம்தானே.

5 வருட ஆராய்ச்சி

பெரியாரை டைரக்ட் செய்த ஞானராஜசேகரன் ஐ.ஏ.எஸ். முடித்தவர். `பாரதி’ படத்தின் மூலம் ஒரு `மகாகவி’யின் வாழ்க்கையை கவிதையாக திரைக்குத் தந்தவர் என்ற முறையில் அவர் மீது என் மரியாதை கூடியிருந்தது. இப்போது அவரே பெரியார் படத்தை உருவாக்கவும், தயாராகி இருந்தது வரலாற்றுத் தலைவர்கள் மீதான அவரது ஈடுபாட்டை உணர்த்தியது. அவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது பெரியார் படம் எடுக்கும் ஆர்வத்தில் பெரியார் பற்றி ஐந்தாறு வருடமாக பல்வேறு ஆய்வு முயற்சிகளை மேற்கொண்டதும் தெரியவந்தது. பெரியார் பற்றிய புத்தகம் எங்கே கிடைத்தாலும், அதை வாங்கி பெரியாரின் வாழ்க்கை தொடர்பான விஷயங்களை சேகரித்திருக்கிறார். அதுமாதிரி பெரியாருடன் பழகியவர்களை சந்தித்து அவர்களின் அனுபவங்களை கேட்டறிந்திருக்கிறார்.

இப்படியெல்லாம் அவர் முழுமையாக தயாராகிக் கொண்டிருந்த நேரத்தில்தான் நான் பெரியாராக நடிக்கும் என் ஆர்வத்தை வெளியிட்டு இருக்கிறேன். இருவரின் ஒருமித்த சிந்தனையும் எங்களை `பெரியாருக்குள்’ இணைத்துவிட்டது.

இந்த நேரத்தில்கூட எனக்கு பெரியாராக நடிப்பதில் ஒரு சின்ன தயக்கம் ஓடிக்கொண்டிருந்தது. பெரியாருடன் பழகியவர்கள் இப்போதும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். `பெரியார் நடிப்பில்’ அவர்களை நான் திருப்திபடுத்தியாக வேண்டும். அதோடு பெரியார் வேடத்தில் நடிப்பதை நடிகர் திலகம் தனது லட்சியமாக வைத்திருந்தார். காலம் அந்த வாய்ப்பை அவருக்கு வழங்காமலே போய்விட்டது. இப்படி நடிகர் திலகம் விரும்பிய ஒரு கேரக்டரை நான் செய்யும்போது, ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் என் நடிப்பு அமையவேண்டும். இப்படி இரு தரப்பிலும் விரும்பும் விதத்தில் `பெரியாரை’ சரியாக நடிப்பில் பிரதிபலித்தாக வேண்டிய கட்டாயத்தில் இருந்தேன்.

“சந்தோசங்க…”

பெரியார் இளைஞராக இருந்த காலகட்டம் பற்றி யாரும் கேட்டுக்கொண்டிருக்க மாட்டார்கள். ஆனால் முதிய தோற்றத்தில் அவரைப் பார்த்து உணர்ந்தவர்களுக்கு, என் நடிப்பு கொஞ்சம் மாறிப்போனால்கூட ஏமாற்றமாகி விடும். இப்படி நினைத்த நேரத்தில் 75 வயதில் பெரியார் நிகழ்ச்சி அடங்கிய கேசட்டை என்னிடம் தந்தார்கள். அதைப் போட்டுப் பார்த்தபோது பெரியாரின் குரல் நடுக்கம், அவர் உட்கார்ந்து பேசும் விதம் பற்றி கவனித்துக் கொண்டேன்.

அவர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும்போது “சந்தோசங்க! ரொம்ப சந்தோசங்க!” என்று சொல்வார் என்பதை கேள்விப்பட்டிருக்கிறேன். பெரியாருடன் பழகும் வாய்ப்பு கிடைக்கப் பெற்ற கலைஞரிடம் இதுபற்றி கேட்டபோது, அவர் பெரியார் உச்சரிக்கும் விதமாகவே இந்த `சந்தோசங்க’ வார்த்தையை சொல்லிக் காட்டினார்.

1967-ம் ஆண்டில் அறிஞர் அண்ணாவை தலைவராகக் கொண்ட தி.மு.கழகம் முதன் முதலாக தமிழகத்தில் ஆட்சி பீடம் ஏறியது. ஆட்சிப் பொறுப்பேற்றதும் முதல்-அமைச்சர் அண்ணா தலைமையில் நாவலர், கலைஞர் உள்ளிட்ட அமைச்சர்கள் திருச்சியில் உள்ள பெரியார் மாளிகைக்குப் போய் பெரியாரை சந்தித்து அவரது வாழ்த்தைப் பெறுகிறார்கள்.

தன்னால் அரசியலில் உருவாக்கப்பட்டவர்கள் ஆட்சிப் பொறுப்புக்கு வந்ததும், மறக்காமல் தன்னைத் தேடி ஆசி பெற வந்ததை பார்த்தபோது பெரியார் மகிழ்ச்சியில் உணர்ச்சிவசப்பட்டிருக்கிறார். அதே உணர்வில் “சந்தோசங்க! ரொம்ப சந்தோசங்க” என்று சொல்லி வாழ்த்தியிருக்கிறார்.

இதை கலைஞர் என்னிடம் நடித்தே காட்டியபோது, பெரியார் அவருக்குள்ளும் எப்படி உள்வாங்கியிருக்கிறார் என்பதை புரிந்து கொண்டேன்.

கலைஞர் சொன்ன இதே சம்பவத்தை முன்பு பெரியார் இருந்த அதே திருச்சி `பெரியார் மாளிகை’யில் படமாக்கியபோது, என்னையும் மீறி ஒரு பரவசம் ஓடிக்கொண்டிருந்தது. இப்போது பெரியாராக நடிப்பது நானல்லவா?”

இவ்வாறு சத்யராஜ் கூறினார்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: