Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for நவம்பர் 13th, 2007

Ki Parthibharaja’s Kaayatha Kaanagathey – Book Review in Unmai

Posted by Snapjudge மேல் நவம்பர் 13, 2007

நூல்: காயாத கானகத்தே
ஆசிரியர்: கி.பார்த்திபராஜா
வெளியீடு:ராகாஸ் அகமது வணிக வளாகம்,
12/293, இராயப்பேட்டை, நெடுஞ்சாலை,
சென்னை-14.

விலை:ரூ.100/-

தமிழ் நாடகத்தின் ஒரு கூறான இசை நாடகம் பற்றி பெரிய அளவில் ஆய்வுகளோ, பகுதிகளோ இல்லாத நிலையில் பார்த்திப ராஜாவின் காயாத கானகத்தே நூல் இசை நாடகம் பற்றிய ஒரு சிறந்த பதிவாகும்.

தென்மாவட்டங்களில் 20 பகுதி மக்களின் சமூக வாழ்க்கையில் ஓர் அங்கமாக இருந்த இசை நாடகங்கள், காட்சி ஊடகங்களின் ஆக்கிரமிப்பால் அந்த நாடகங்கள் பற்றி நூல்கள் மூலமே. இளைய தலைமுறையினர் அறியக்கூடிய நிலையில், இந்நூல் மிகவும் பயனுள்ள வரவாகும்.
மற்ற நாடகங்கள் போலன்றி இசை நாடக கலைஞர்களுக்கு கற்பனைத் திறனும், நாட்டு நடப்பில் தெளிந்த கண்ணோட்டமும், சமயோசித திறனும் இருந்தால் தான் காட்சிகளில் பரிணமிக்க முடியும்.

நாடக கலைஞர்களின் பங்களிப்பு, அவர்களின் திறன் அவர்களின் வாழ்வியல் நிலைகள் ஆகியவற்றை நடிகர் சங்க அமைப்பாளர்களுடன் இணைந்து தொடர்ந்து நாடகத்தை பார்த்தும், அவர்களுடன் பழகியும் பல சுவையான தகவல்களை தொகுத்தளித்துள்ளார்.

கலைஞர்களின் திறனை வெளிப்படுத்த அவர் மேற்கொண்ட நடை சிறப்புடையது. அவற்றில் ஒரு சில துளிகள். வள்ளி நாடகத்தில் திண்டுக்கல் பகுதியைச் சேர்ந்த ஒரு புகழ்பெற்ற நடிகை தன்னை தர்க்கத்தில் வென்றால் நடிப்புத் தொழிலையே விட்டுவிடுவேன் என்று சவால் விடுவார். அவருடன் நடிப்பதற்கு ராஜபார்ட்டுகளே அஞ்சுவார்கள்.

அவரை வேறு பகுதியைச் சேர்ந்த ஒரு நடிகர் சூழ்ச்சியால் தர்க்கத்தில் வென்றுவிட அதன் பின்னர் அந்த நடிகை அரிதாரம் பூசுவதைவிட்டு நடிப்புத் தொழிலையே விட்டுவிட்டார்.

அதேபோல் சத்தியவான் சாவித்திரி நாடகத்தில் எமன் வேடத்தில் சங்கரதாஸ் சுவாமிகளின் குரலையும், ஆட்டத்தையும் பார்த்த அதிர்ச்சியில் கர்ப்பிணி பெண் ஒருவரின் கரு கலைந்து போனது. அதன்பிறகு அடுத்தடுத்த நாடகங்களில் அவர் எமன் வேடத்தில் வரும்போது கர்ப்பிணிகள் இருந்தால் சபையைவிட்டு வெளியே போய்விட்டு காட்சி முடிந்த பிறகு திரும்பிவரவும் என்ற அறிவிப்பு செய்துள்ளனர்.

அவர் நடித்த பிரகலாதன் நாடகத்தில், இரணியன் வேடம் கட்டி பிரகலாதனாக நடித்த சிறுவனை தூக்கி கீழே வீசியபடி கர்ஜனை செய்த காட்சியை பார்த்த பெண் மூர்ச்சையடைந்தார். அதிலிருந்து அவர் தொடர்ந்து நடிப்பை மேற்கொள்ள மறுத்துவிட்டார்.

அதன் பிறகு அவர் நடிக்கவேயில்லை.

இசை நாடக வரலாற்றில் பெண்களை புறந்தள்ளிவிட்டே தொடங்கியிருந்தது. அதனால் தான் மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி, பாவலர் பாய்ஸ் கம்பெனி, தேசிகானந்தா பாய்ஸ் கம்பெனி என்ற பெயரிலேயே நாடக கம்பெனிகள் இருந்துள்ளன. பிறகு இசை நாடகங்களில் பெண்கள் பங்கேற்க ஆரம்பித்த பின், ஆண்கள் பெண் வேடமிடும் பழக்கம் குறைந்தது.

அப்படியும் நாடக நடிகைகளுக்கு சமூக அங்கீகாரம் பெரிய அளவில் கிடைத்துவிடவில்லை. சமூகம் தங்களை இழிவாக பார்க்கவில்லை என்றும் கூறும் நடிகைக்கள் கூட அதற்கு காரணம் பொருள் வசதியோடு இருப்பது தான் என்கின்றனர். இக்காலக் கட்டத்தில் தான் பழம்பெரும் நடிகை பாலாமணி அம்மாள் பெண்களைக்-கொண்டே நாடகக் குழுவை நடத்தி வந்துள்ளார்.

அவரது குழுவில் 50-க்கும் மேற்பபட்ட பெண்கள் இருந்துள்ளனர்.

கும்பகோணத்தில் அவர் நடத்திய தாரா சசாங்கம் என்ற நாடகத்தைப் பார்க்க, மாயவரத்திலிருந்து எட்டு மணிக்கு ஒரு ரயிலும், திருச்சியிலிருந்து எட்டரை மணிக்கு ஒரு ரயிலும் புறப்பட்டு கும்பகோணம் சென்று, நாடகம் முடிந்து நள்ளிரவு மூன்று மணிக்கு இருரயில்களும் திரும்பிச் செல்லும். நாடகம் பார்க்கும் ரசிகர்-களுக்காக விடப்பட்ட இந்த ரயிலுக்கு பாலாமணி ஸ்பெஷல் என்றே பெயரிட்டுள்ளனர்.

இன்றைய தமிழ் சினிமா ரசிகத் தன்மை, நடிகர், நடிகைகள் வழிபாடு, ரசிக வெறித்தனம் போன்றவை ஒன்றும் புதியதல்ல. அது ஏற்கனவே நாடக வரலாற்றில் காண முடிகிறது. முழுஇரவு நாடகங்கள் முற்றாக மறைந்துவிட்ட நிலையில், அவற்றை பற்றிய ஒரு தொகுப்பு நூல் இன்றைய தலைமுறையினருக்கு ஒரு வரலாற்றுப் பெட்டகமாகும். இந்த அளவுக்கு களப்பணி செய்து, ஆராய்ச்சி கண்ணோட்டத்தோடு; சுவைபட எழுதப்பட்ட நூல் இது.

நூலாசிரியரின் முயற்சிக்கு பாராட்டுக்கள்.

Posted in Actors, artists, Books, Cinema, Documents, Drama, Fieldwork, Films, History, Incidents, Literature, Movies, music, Paarthibharaja, Parthibharaja, Performance, Research, review, Shows, Stage, Theater, Theatre, Unmai | Leave a Comment »

Nov. 13 – Eezham clashes: fighting in northern and eastern Sri Lanka

Posted by Snapjudge மேல் நவம்பர் 13, 2007

மன்னார் மடு தேவாலயப் பகுதியில் எறிகணை வீச்சு

புகழ்பெற்ற மடு மாதா சிலை

இலங்கையின் வடமேற்கே மன்னார் மாவட்டத்தில் மடு தேவாலயப் பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை மாலை எறிகணைகள் விழுந்து வெடித்ததாகவும், அதில் ஒரு சிறுவனும் வயோதிபப் பெண்ணும் காயமடைந்ததாகவும் தேவாலயத்தில் இருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

காயமடைந்த சிறுவன் பள்ளமடு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

வரலாற்று சிறப்புமிக்க கத்தோலிக்க தேவாயலமாகிய மடுக்கோவிலிலிருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தூரத்திலேயே இராணுவத்தின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தையும் விடுதலைப் புலிகளின் பிரதேசத்தையும் பிரிக்கின்ற எல்லைப்புறம் அமைந்துள்ளது என்பதும், இப்பிரதேசத்தில் உள்ள தம்பனை பெரியதம்பனை, பண்டிவிரிச்சான் போன்ற பகுதிகளில் இராணுவத்தினருக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் அண்மைய வாரங்களாக எறிகணை வீச்சு மோதல்களும், நேரடிச் சண்டைகளும் இடம்பெற்று வருகின்றன என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

எறிகணையானது இலங்கை இராணுவத்தினரால் வீசப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுவதை இராணுவம் மறுத்துள்ளது.

மன்னார், யாழ்குடா பகுதிகளில் விடுதலைப் புலி உறுப்பினர்களை கொன்றிருப்பதாக தேசிய பாதுகாப்பிற்கான ஊடக மையம் தெரிவித்துள்ளது.

மன்னார் உயிலங்குளத்தை அண்டிய இராணுவ முன்னரங்க நிலைகள் மற்றும் அடம்பனை அண்டிய பிரதேசம், சிறுநாவற்குளம் உள்ளிட்ட சுமார் 5 இடங்களில் இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இன்று இடம்பெற்ற வெவ்வேறு மோதல் சம்பவங்களில் 17 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டுள்ளதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் கூறியுள்ளது.

யாழ் குடாநாட்டில் முகமாலை மற்றும் நாகர்கோவில் இராணுவ முன்னரங்கப் பகுதிகளில் நேற்று திங்கட்கிழமை மாலையும் இன்று செவ்வாய்க்கிழமையும் இடம்பெற்ற வெவ்வேறு மோதல் சம்பவங்களில் மேலும் 10 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்துள்ளது.

எனினும் இந்த மோதல்கள் மற்றும் சேதங்கள் குறித்து விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து உடனடியாகத் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.


திருகோணமலை மோதல்களில் புலிகள் மூவர் கொல்லப்பட்டதாக இலங்கை தேசிய பாதுகாப்பு ஊடக மையம் தகவல்

 

இலங்கையின் கிழக்கே திருகோணமலை மாவட்டத்தில் இலுப்பைக்குளம் பகுதியில் நேற்று திங்கட்கிழமை பின்னிரவு வேளை, அரசாங்கப் படையினர் மேற்கொண்ட தாக்குதல் நடவடிக்கையின்போது விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்த மூவர் கொல்லப்பட்டுள்ளதாக தேசிய பாதுகாப்பிற்கான ஊடக மையம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருகின்றது.

கொல்லப்பட்வர்களில் ஒருவர் விடுதலைப்புலிகளின் உளவுப்பிரிவைச் சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொல்லப்பட்டவர்களின் சடலங்கள் திருகோணமலை அரசினர் பொதுமருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.


Posted in defence, Defense, Eelam, Eezham, Ilanthiraian, Ilanthirayan, Jaffna, Liberation Tigers of Tamil Eelam, LTTE, Mannaar, Mannar, Military, Pariyapantrichurichchan, Rasaiya, Rasaiyah, Rasiah, Rasiaya, Srilanka, Triconamalee, triconmalee, Vavuniya | Leave a Comment »

Kavinjar Thanjai Ramaiyah Das – Tamil Cinema Poets

Posted by Snapjudge மேல் நவம்பர் 13, 2007

திரைப்பட வரலாறு 790
காலத்தை வென்ற பாடல்களை எழுதிய தஞ்சை ராமையாதாஸ்
ஆசிரியராகஇருந்து பட உலகுக்கு வந்தவர்


சினிமா பாடலாசிரியர்களில் கவிஞர் தஞ்சை ராமையாதாசுக்கு தனியிடம் உண்டு.

  • எம்.ஜி.ஆர். நடித்த குலேபகாவலி படத்திற்கு “மயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ! இனிக்கும் இன்ப இரவே நீ வாவா” பாடலும் தருவார்.
  • மாயாபஜார் படத்துக்கு “கல்யாண சமையல் சாதம்” பாடலும் தருவார்.
  • காதலை நெஞ்சில் பதிக்கும் “மணாளனே மங்கையின் பாக்கியம்” படப்பாடலான “அழைக்காதே! நினைக்காதே! அவை தனிலே என்னை நீ ராஜா”வும் தருவார்.
  • நாட்டு நடப்புக்கு என்றும் பொருந்தும் “மலைக்கள்ளன்” படப்பாடலான “எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே” பாடலும் தருவார்.

முன்னோடி

புரியாத மொழியில் `ஜிகினா’ வார்த்தைகளை கோர்க்கும் இன்றைய கவிஞர்களுக்கும் இவர் அன்றே முன்னோடியாக இருந்திருக்கிறார். அமரதீபம் படத்தில் “ஜாலியோ ஜிம்கானா” பாடலை எழுதியதும் இவரே.

கிராமத்து திருமண வீடுகளில் இப்போதும் மணப்பெண்ணுக்கு அவள் அண்ணன் புத்திமதி சொல்கிற மாதிரி அமைந்த “புருஷன் வீட்டில் வாழப்போகும் பெண்ணே! தங்கச்சி கண்ணே” பாடலை போடுவார்கள். “பானை பிடித்தவள் பாக்கியசாலி” படத்துக்காக இந்தப்பாடலை எழுதியதும் இவர்தான்.

இப்படி காலத்தால் அழியாத பாடல்களை தந்து தமிழ் ரசிகர்களின் நெஞ்சில் நின்று கொண்டிருப்பவர் தஞ்சை ராமையாதாஸ்.

1939-ல் வெளிவந்த “மாரியம்மன்” படத்தில் இவர் எழுதிய பாடல்தான் சினிமா உலகுக்கு இவரை கவிஞராக அறிமுகம் செய்தது. தொடர்ந்து 250 படங்களுக்கு மேல் எழுதியவர். எழுதிய பாடல்கள் இரண்டாயிரத்துக்கும் மேல்.

புலவர் பட்டம்

தஞ்சையில் உள்ள மானம்பூச்சாவடி சொந்த ஊர். அங்குள்ள சென்ஸ் பீட்டர் மேல்நிலைப்பள்ளியில் பத்தாவது முடித்தவர், தஞ்சை கரந்தை தமிழ்ச் சங்கத்தில் படித்து “புலவர்” பட்டம் பெற்றார். அதோடு ஆசிரியர் பயிற்சிப் படிப்பையும் முடித்தார். தஞ்சை ஆட்டுமந்தைத் தெருவில் உள்ள ஆரம்ப பாடசாலையில் ஆசிரியராக சேர்ந்தார்.

பள்ளி ஆசிரியராக இருந்தவர், சினிமாவுக்கு பாட்டெழுத வந்தது எப்படி?

கவிஞரின் மகன் ரவீந்திரன் இதற்கு பதில் சொல்கிறார்:-

அப்பாவுக்கு அப்போதே பாட்டெழுதும் ஆர்வம் இருந்திருக்கிறது. அதற்கு எடுத்துக்காட்டாக ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. அப்போது தஞ்சை சரஸ்வதி மகாலில் அடிக்கடி புலவர்கள் கூடி பாடல்கள் பற்றி விவாதிப்பது வழக்கம். இதில் ராஜாவின் அரண்மனைப் புலவர்களாக இருந்தவர்களும் கலந்து கொண்டிருக்கிறார்கள். இந்த சபையில் நடந்த பாட்டுப்போட்டியில் அரண்மனைப் புலவர்களும் ஆச்சரியப்படும் விதத்தில் அப்பா முதல் பரிசான தங்கப்பதக்கம் பெற்றிருக்கிறார்.

சுதந்திரப் போராட்ட தியாகி

அப்பா காங்கிரசில் இருந்தார். கட்சியில் ரொம்பவும் ஈடுபாடு. சுதந்திரப் போராட்ட காலத்தில் கட்சியின் கட்டளையை ஏற்று போராட்டத்திலும் கலந்து கொண்டார்.

சுதந்திரம் கிடைத்த பிறகு “சுதந்திர போராட்ட தியாகி” என்ற வகையில் கிடைத்த பட்டயம், பதக்கம் இரண்டையும் வேண்டாம் என்று கூறிவிட்டார்.

ஆசிரியப் பணியை தொடரும்போதே நாடகத் துறையிலும் நாட்டம் ஏற்பட, ஒரு நாடகக்குழு அவரை தன் சபாவில் வாத்தியாராக ஏற்றுக்கொண்டது. நாடக கதை – வசன – பாடலாசிரியருக்கு `வாத்தியார்’ என்ற பெயர் நிலைத்து விடும். இந்த வகையில் நாடகத் துறையிலும் `வாத்தியார்’ ஆனார். மச்சரேகை, பகடை, பவளக்கொடி, விதியின் வெற்றி, அல்லி அர்ஜ×னா, வள்ளி திருமணம் போன்ற நாடகங்களையும் நடத்தி வந்தார்.

ஊர் ஊராக நாடகம் போட்டு வந்த அப்பாவை ராமசாமி பாவலர் என்பவர் சேலத்தில் நாடகம் போட அழைத்து வந்தார். அதே ஊரில் அறிஞர் அண்ணாவின் “வேலைக்காரி”, ”ஓர் இரவு” போன்ற நாடகங்களை கே.ஆர்.ராமசாமி நடத்தி வந்தார். இரண்டு குழு நாடகங்களுக்கும் ரசிகர்களின் ஆதரவு அமோகமாக இருந்தது.

அப்பாவின் வசனமும் பாடல்களும் நாடக மேடையில் பிரபலம் என்பதால், அவரது புகழ் சினிமாத்துறையிலும் பரவ ஆரம்பித்தது.

மாடர்ன் தியேட்டர்ஸ்

இதனால் அப்பாவுக்கு சினிமாவில் பாட்டெழுதும் வாய்ப்பு வந்தது. இவரை சிறந்த கவிஞராக கண்டுகொண்ட சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனம் அப்போது தயாரித்து வந்த “ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி” படத்துக்கு பாடல் எழுத வாய்ப்பு கொடுத்தது. அப்பா அந்தப் படத்துக்காக “வெச்சேன்னா வெச்சதுதான்” என்று ஒரு பாடலை எழுதிக்கொடுக்க, அது அவர்களுக்கு பிடித்துப்போனது.

அப்பாவை நாடகம் மூலமாக ஏற்கனவே தெரிந்து வைத்திருந்த நடிகர் டி.ஆர்.மகாலிங்கம், அப்பாவை மாடர்ன் தியேட்டர்சில் கவிஞராக பார்த்தபோது வியந்திருக்கிறார். அப்பாவின் கதை-வசனம் இயக்கத்தில் “மச்சரேகை” நாடகம் 200 தடவை மேடையேறியிருப்பதை தெரிந்து கொண்ட டி.ஆர்.மகாலிங்கம் அதை தனது கம்பெனிக்காக படமாக்கித்தர முடியுமா? என்று கேட்க, அப்பாவும் சந்தோஷமாய் சம்மதித்திருக்கிறார்.

இந்த வகையில் சினிமாவுக்காக அப்பா சென்னை வர காரணமாக இருந்தவர் டி.ஆர்.மகாலிங்கம்தான். அப்பாவின் பாட்டெழுதும் திறமையை முதலில் கண்டு கொண்டது நாகிரெட்டியாரின் விஜயா – வாகினி நிறுவனமே. 1951 முதல் 1960 வரை அந்த நிறுவனம் தயாரித்த “பாதாள பைரவி”, “மிஸ்ஸியம்மா”, “மாயாபஜார்” போன்ற பல படங்களுக்கு வசனம், பாடல்கள் அப்பாதான். விஜயா – வாகினியின் ஆஸ்தான கவிஞர் என்ற தகுதியிலும் நிலைத்தார்.

அன்று இசையுலகில் கொடிகட்டிப் பறந்த இசை மேதைகள் சி.ஆர்.சுப்பராமன், எஸ்.எம்.சுப்பையா நாயுடு, ஜி.ராமநாதன், எஸ்.வி.வெங்கட்ராமன், கே.வி.மகாதேவன், விஸ்வநாதன்-ராமமூர்த்தி, கண்டசாலா, எஸ்.ராஜேஸ்வரராவ், ஆதிநாராயணராவ் ஆகியோரின் இசை அமைப்பில் அப்பா பாடல்கள் எழுதினார்.

டைரக்டர் ஸ்ரீதர்

ஒரு சமயம் டைரக்டர் ஸ்ரீதர் “அமரதீபம்” படத்துக்கு பாட்டெழுதி வாங்க அப்பாவிடம் வந்திருக்கிறார். பாடலுக்கான சூழ்நிலையை ஸ்ரீதர் விவரித்ததும் அப்பா, “நம்பினா நம்புங்க! நம்பாகாட்டி போங்க” என்ற பல்லவியை சொன்னார். பதறிப்போன ஸ்ரீதர், “வாத்தியாரய்யா! இது எனது முதல் படம். அதோட படத்துக்கு நான் பதிவு பண்ணப்போற முதல் பாட்டும் இதுதான். இப்படி பாட்டு கிடைச்சா, படத்தை யாரும் வாங்காமல் போய்விடுவார்களே” என்று கலக்கமாய் கூறியவர், “வேற ஒரு பாட்டு ஜாலியாய் வர்ற மாதிரி எழுதிக்கொடுங்க” என்று கேட்டிருக்கிறார்.

அப்பாவும் உடனே தமாஷாக, “ஜாலிலோ ஜிம்கானா, டோலிலோ கும்கானா” என்று எழுதிக் கொடுத்திருக்கிறார்.

“இதுக்கு என்ன அர்த்தம்?” என்று ஸ்ரீதர் முழிக்க, அப்பாவோ, “கதைப்படி இது குறவன் – குறத்தி பாடற பாட்டு. குறவர்கள் பாஷை எனக்கும் தெரியாது. உனக்கும் தெரியாது. போய் தைரியமாய் ரிக்கார்டிங் செய். படம் அமோகமாக வெற்றி பெறும்” என்று சொல்லி அனுப்பியிருக்கிறார். படம் வெற்றி பெற்றதோடு அப்பாவுக்கு “டப்பாங்குத்து பாடலாசிரியர்” என்ற பெயரும் வந்து சேர்ந்தது. ஆனால் அப்பா அதுபற்றியெல்லாம் கவலைப்படாமல் தனது பாணியில் பாடல்களை எழுதிக் கொண்டிருந்தார்.

கலைஞர் மு.கருணாநிதி அப்போது தங்கள் மேகலா பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வந்த “குறவஞ்சி” படத்துக்கு பாடல்கள் எழுத அப்பாவை அழைத்தார். அப்பா அப்போது மதுவுக்கு பழக்கப்பட்டுப் போயிருந்த நேரம். அதனால் அதை பாட்டிலேயே வரிகளாக்கி “எந்நாளும் `தண்ணி’யிலேயேதான் எங்க பொழப்பு இருக்குது ரா… ரா…. ரா…” என்று எழுதினார்.

சினிமாவில் `கேட்டது கிடைக்கும்’ என்பது அப்பாவிடம்தான். இயக்குனர்கள் எந்த மாதிரி விரும்புகிறார்களோ, அந்த மாதிரி பாடல்களை கொடுப்பார். ஒருமுறை லட்சிய நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் தனது “தங்கரத்தினம்” படத்துக்கு ஒரு பாட்டு கேட்டார். பல்லவியில் “உதயசூரியன்” என்ற வரி வரும்படி கேட்டுக் கொண்டார். அப்பாவும் “எதையும் தாங்கும் மனசு, என்னை ஏமாத்தப் பாக்குது வயசு, என் இதயவானிலே உதயசூரியன் எழுந்ததுதான் புதுசு” என்று எழுதிக் கொடுத்தார்.

அப்பா பிசியான கவிஞராக இருந்த நேரத்தில் கவிஞர் கண்ணதாசனும் பாட்டெழுத வந்து விட்டார். அவர் அப்போது “மாலையிட்ட மங்கை” என்ற படத்தையும் தயாரித்தார். அந்தப் படத்திற்கு பாட்டு எழுத அப்பாவை கேட்டார். ஆனால் அப்பா இருந்த `பிஸி’யில் அவரால் பாட்டெழுதி கொடுக்க முடியாமல் போயிற்று. இதில் கண்ணதாசனுக்கு அப்பா மீது வருத்தம்.

அந்தக் காலத்தில் `கதை, வசனம், பாடல்கள் ஒருவரே’ என்ற நிலையை துவக்கி வைத்த முதல் கவிஞர் அப்பாதான். அதோடு நாடக உலகின் தந்தை என கொண்டாடப்படும் சங்கரதாஸ் சுவாமிகளை தமிழ் மண்ணுக்கு அறிமுகம் செய்து வைத்தவரும் அவர்தான். சங்கரதாஸ் சுவாமிகளின் நாடகக் குழுவில் `பபூன்’ வேடமிட்ட சங்கரய்யரை கடைசி வரை ஆதரித்தார்.

பின்னாளில் நாடகத் தந்தை சங்கரதாஸ் சுவாமிகளின் சமாதிக்கு சென்று குருபூஜை நடத்தி, தன்னை சங்கரதாஸ் சுவாமிகளின் `ஏகலைவன்’ என்றும் அழைத்துக் கொண்டார்”

இவ்வாறு ரவீந்திரன் கூறினார்.

——————————————————————————————————————————————————————————–
வரலாற்றுச் சுவடுகள் : திரைப்பட வரலாறு – 791
ராமையாதாஸ் தயாரித்த “ராணி லலிதாங்கி”:
பாதி படம் எடுத்த பிறகு கதாநாயகன் மாற்றம்!
எம்.ஜி.ஆருக்கு பதிலாக சிவாஜிகணேசன்!

தஞ்சை ராமையாதாஸ், “லலிதாங்கி” என்ற படத்தை சொந்தமாகத் தயாரித்தார். கதாநாயகனாக, எம்.ஜி.ஆர். நடித்தார். கிட்டத்தட்ட பாதி படம் தயாரான நிலையில் இருவருக்கும் கருத்து வேற்றுமை ஏற்பட, கதாநாயகனாக சிவாஜிகணேசனை நடிக்க வைத்து படத்தை முடித்தார்.

தஞ்சை ராமையாதாசின் மகள் ஆர்.விஜயராணி தனது தந்தை பற்றி கூறியதாவது:-

சினிமாவில் பாட்டெழுதி வந்தாலும், காங்கிரஸ் தலைவர்களின் அப்பாவுக்கு நெருக்கமான நட்பு இருந்தது. பெருந்தலைவர் காமராஜர், கக்கன் போன்ற காங்கிரஸ் தலைவர்களிடம் அப்பாவுக்கு நெருக்கமான நட்பு இருந்தது. கலைஞர் மு.கருணாநிதி தனது வசனங்கள் மூலம் சினிமாவில் பிரபலமான நேரத்தில் அப்பாவுக்கும் நெருங்கிய நண்பராகி இருக்கிறார். 1965-ல் அப்பா காலமாகும்வரை அந்த நட்பு நீடித்தே வந்தது. லட்சிய நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரனுடனும் அப்பாவுக்கு நல்ல நட்பு தொடர்ந்தது.

கருத்தாழ பாடல்கள் மட்டுமின்றி தமாஷான பாடல்கள் எழுதுவதிலும் அப்பா திறமையானவர். “சிங்காரி”யில் “ஒரு சாண் வயிறு இல்லாட்டா உலகத்தில் ஏது கலாட்டா” என்கிற பாட்டை எழுதினது அப்பாதான்.

“மதுரை வீரன்” படத்தில் அப்பா எழுதின “வாங்க மச்சான் வாங்க, வந்த வழியைப் பார்த்துப் போங்க” பாடல், அவருக்கு ரொம்பவும் புகழைத் தேடித்தந்தது.

ஏற்கனவே நாடகத்துக்கு கதை எழுதியிருந்ததால், சினிமாவிலும் கதை முடிவாகும்போது அப்பாவிடம் கலந்து பேசுவார்கள். அப்பாவிடம் பாடல் எழுதும் திறமை மட்டுமின்றி, கதை ஞானமும் இருப்பதை தெரிந்து கொண்ட டைரக்டர் ராமண்ணா, “எம்.ஜி.ஆருக்காக ஒரு கதை தரமுடியுமா?” என்று கேட்டார்.

குலேபகாவலி

அப்பாவும் அப்போதே ஒரு கதை சொன்னார். அந்தக்கதை பிடித்துப்போக ராமண்ணா அதை எம்.ஜி.ஆரிடம் சொல்ல அவரும் இதையே படமாக்குவோம் என்றார். இப்படி எம்.ஜி.ஆரையும் கவர்ந்த அந்தக்கதைதான் `குலேபகாவலி’ என்ற பெயரில் வெளிவந்தது.

இந்தப் படத்துக்கு அப்பா முதலில் எழுதிய பாடல், “சொக்கா போட்ட நவாபு செல்லாதுங்க ஜவாபு.” இந்தப்பாடல் எம்.ஜி.ஆருக்கு ரொம்பப் பிடித்து, இதற்கு சிறப்பாக நடனக்காட்சி அமைக்க வேண்டும் என்று ராமண்ணாவிடம் சொல்லியிருக்கிறார்.

இதே படத்துக்கு அப்பா எழுதி காலத்துக்கும் மறக்க முடியாத காதல் பாடலாகிவிட்ட பாடல், “மயக்கும் மாலைப் பொழுதே நீ போபோ” பாடல். அப்பாவின் பாட்டெழுதும் வேகம் பார்த்த எம்.ஜி.ஆர். அப்பாவை “எக்ஸ்பிரஸ் கவிஞர்” என்று பெருமையுடன் அழைப்பாராம்.

இப்படி அப்பாவின் பாடல்களால் ஈர்க்கப்பட்ட எம்.ஜி.ஆருடனேயே ஒரு கட்டத்தில் அப்பா மோதிக்கொள்ளும் நிலை ஏற்பட்டது.”

ராணி லலிதாங்கி

கொள்கை விஷயத்தில் அப்பா நெஞ்சுறுதி மிக்கவர். எதற்காகவும், யாருக்காகவும் வளைந்து போகாதவர். `லலிதாங்கி’ என்ற பெயரில் ஒரு படம் தயாரிக்க முடிவு செய்த அப்பா, எம்.ஜி.ஆரை கதாநாயகனாக போட்டார். பானுமதியையும் ஒப்பந்தம் செய்தார். படம் 10 ஆயிரம் அடிவரை வளர்ந்த நிலையில் எம்.ஜி.ஆருக்கும் அப்பாவுக்கும் இடையே ஒரு பிரச்சினை எழுந்தது.

கதைப்படி எம்.ஜி.ஆருக்கு பக்தியுடன் கூடிய இளைஞர் வேடம். எனவே படத்தின் ஒரு பாடல் காட்சியில் கழுத்தில் ருத்ராட்ச மாலை அணிந்து வரவேண்டும்.

இந்த காட்சிக்காக ஒரு பாடலையும் அப்பா எழுதினார்:

“ஆண்டவனே இல்லையே

தில்லை தாண்டவனே உன்போல்

ஆண்டவனே இல்லையே”

– இதுதான் பாட்டு.

இந்த பாடல், அப்போது தி.மு.க. வில் இருந்த எம்.ஜி.ஆருக்கு உடன்பாடாக இல்லை. தான் சார்ந்த கட்சியின் `கடவுள் மறுப்புக் கொள்கை’க்கு முரணானது என்று கருதினார். அதனால் இந்தப் பாடல் காட்சியில் நடிக்க மாட்டேன் என்று மறுத்துவிட்டார்.

அப்போதே எம்.ஜி.ஆர். பட உலகில் செல்வாக்கு மிக்கவராக இருந்தார். எனவே, “எம்.ஜி.ஆரை பகைத்துக் கொள்ளாமல் அனுசரித்துப் போங்கள்” என்று கலை நண்பர்கள் பலரும் அப்பாவை கேட்டுக்கொண்டார்கள்.

சிவாஜி

ஆனால் அப்பா அதுபற்றியெல்லாம் கவலைப்படவில்லை. அதுவரை எடுத்த 10 ஆயிரம் அடி பிலிமையும் தூக்கிப்போட்டு விட்டு, அதே கதையை “ராணி லலிதாங்கி” என்ற பெயரில் சிவாஜி – பானுமதியை வைத்து எடுத்து முடித்தார். இந்தப்படத்தில்தான் அதுவரை `பிரமிளா’வாக இருந்த நடிகை “தேவிகா” என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டார்.

தான் நடித்து வந்த படத்தை பாதியில் விட்டு, சிவாஜியை வைத்து எடுத்தது எம்.ஜி.ஆருக்கு கோபம் ஏற்படுத்தவே செய்தது. உடனே தனது வக்கீல் மூலம் அப்பாவுக்கு நோட்டீஸ் அனுப்பினார். அப்பா பதிலுக்கு தனது வக்கீல் மூலம் பதில் நோட்டீஸ் அனுப்பினார். அதில், “நான் “லலிதாங்கி” என்று எம்.ஜி.ஆரை வைத்து எடுத்தது வேறு படம். இப்போது சிவாஜியை வைத்து எடுப்பது வேறு படம். இதற்குப் பெயர் “ராணி லலிதாங்கி” என்று கூறியிருந்தார்.

அப்பா இப்படி செய்த பிறகும்கூட எம்.ஜி.ஆர். அவரிடம் கோபித்துக்கொள்ளவில்லை. “நமக்குள் நடந்தது கொள்கை ரீதியிலான மோதல். அவரவர் கொள்கையில் உறுதியாக இருக்கும்போது இதுமாதிரியான நிகழ்வுகள் சகஜம்” என்று பெருந்தன்மையாக கூறியதோடு, தொடர்ந்து தனது படங்களில் அப்பாவுக்கு பாட்டெழுதவும் வாய்ப்பு அளித்தார்.”

இவ்வாறு விஜயராணி கூறினார்.

ஏ.பி.நாகராஜன்

தஞ்சை ராமையாதாஸ் நாடகத்துறையில் இருந்தபோது அவரது மாணவராக இருந்தவர் ஏ.பி.நாகராஜன். இவர் குரு எழுதும் நாடகங்களில் வில்லனாக நடித்து வந்ததோடு நடன நிகழ்ச்சியையும் இயக்கி வந்தார்.

தஞ்சை ராமையாதாஸ் பாடல்களில் சில கருத்துக்களை துணிச்சலாக சொன்னார். அதனால் சிறு சிறு சர்ச்சைகள் எழுந்து அடங்கின. அதுபற்றி விஜயராணி கூறுகிறார்:-

“எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே” என்ற பாடலில் அப்பா சொன்ன கருத்துக்கள், அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தின. அப்பா அரசியலிலும் இருந்ததால், மாற்றுக் கட்சியினரை வசைபாடவே இந்த பாடலை எழுதினார் என்றும் சொல்லப்பட்டது. அதனால் அரசியல்வாதிகளுக்கும் புத்தி சொல்கிற மாதிரி “ஏச்சுப் பிழைக்கும் தொழிலே சரிதானா? எண்ணிப் பாருங்க” என்று எழுதினார். தூக்குத்தூக்கி படத்தில் அவர் எழுதிய “ஆனந்தக்கோனாரே” பாடலும் சர்ச்சைக்குள்ளானது.

சினிமாவில் அப்பா தயாரிப்பாளரானதுதான் அவர் செய்த தவறு. “ஆளைக் கண்டு மயங்காதே” படம் பெரிய அளவில் நஷ்டத்தை ஏற்படுத்தியது. பாட்டெழுதி சம்பாதித்து வடபழனி பேசும்படம் அலுவலகம் அருகில் பெரிய பங்களாவை வாங்கினார். தயாரிப்பில் ஏற்பட்ட நஷ்டத்தில் அந்த பங்களாவை விற்றுவிட்டார்.”

இவ்வாறு கூறினார், விஜயராணி.

ஆரூர்தாஸ்

தமிழில் மிக அதிகப்படங்களுக்கு (சுமார் 500) வசனம் எழுதிய ஆரூர்தாசுக்கு, தஞ்சை ராமையாதாஸ்தான் ஆசான்.

இதுபற்றி ஆரூர்தாஸ் கூறுகையில், “நான் 1953-ல் திரை உலகில் அடியெடுத்து வைத்தேன். `நாட்டியதாரா’ என்ற படத்துக்கு தஞ்சை ராமையாதாசுக்கு உதவியாளராகப் பணிபுரிந்தேன். எனக்கு மாதம் 50 ரூபாய் சம்பளம் கொடுத்தார். ஜேசுதாஸ் என்ற என் பெயரை ஆரூர்தாஸ் என்று மாற்றியவர் அவரே. வசனம் எழுதுவதற்கான வழிமுறைகளை எனக்குக் கற்றுக் கொடுத்தார். இந்த அளவுக்கு நான் சாதனை புரிவதற்கு அடிப்படை அமைத்தவர் அவரே” என்று நன்றி பெருக்குடன் குறிப்பிட்டார்.

திருக்குறள்

சினிமாவுக்கு பாட்டு, வசனம், தயாரிப்பு என்று பிஸியாகவே இருந்த நேரத்திலும், “திருக்குறள் இசையமுதம்” என்ற புத்தகத்தை எழுதினார், தஞ்சை ராமையாதாஸ். திருக்குறளின் ஒவ்வொரு அதிகாரத்தில் இருந்தும் ஒரு திருக்குறளை எடுத்து, அதை பல்லவியாக்கி அந்தந்த அதிகாரத்தின் முழுக்கருத்தையும் எதிரொலிக்கிற பாடல்களை எழுதினார். பாடல்களுக்கான இசையை, ராகத்துடன் புத்தகமாக வெளியிடவும் செய்தார்.

1962-ம் ஆண்டில் இந்த குறள் காவியம் புத்தகமாக வெளிவந்தபோது, தமிழறிஞர் டாக்டர் மு.வரதராசனார் அதற்கு முன்னுரை எழுதியிருக்கிறார். அதில், “இசை கற்கும் ஒவ்வொருவரும் இந்தப் பாடல்களை கற்று சுரம் உணர்ந்து பாடி கலை இன்பம் பெறவேண்டும்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இந்த இசை நூலை நடிகர் சங்கத் தலைவராக இருந்த எம்.ஜி.ஆர். மூலம் வெளியிட்டார். கவிஞர் தஞ்சை ராமையாதாஸ் “திருக்குறள் இசையமுதம்” எழுதியபோது அவரது உணர்வுகள் எத்தகையதாக இருந்தது? அதுபற்றி மகன் ரவீந்திரன் கூறுகிறார்:-

“நாங்களெல்லாம் படங்களுக்கு பக்கம் பக்கமாக பாட்டெழுதுகிறோம். இரண்டே அடியில் ஒரு குறளை எழுதி, அதற்கு இரண்டு பக்க விளக்கவுரை சொல்லும் அளவுக்கு மக்களிடம் பதிந்து போனவர் திருவள்ளுவர். என் வாழ்நாளில் நான் செய்த கலைச் சேவைகளில் மிகப்பெரியதாக இந்தப் படைப்பை உணருகிறேன்” என்று அப்பா சொன்னார்.

திருவள்ளுவர் பற்றி எழுதி முடித்த பிறகு மூன்றாண்டுகள் வரையே இருந்தார். அப்பா மறைந்தது கூட 1965-ல் ஜனவரி 16-ந்தேதி திருவள்ளுவர் தினத்தில்தான்.

45 வருடங்களுக்கு முன்பே அப்பா தந்த திருக்குறள் இசையமுதம் புத்தகத்தைப் படித்த சில கவிஞர்கள், “இதை இசைக் கல்லூரியில் பாடமாக வைக்கலாம்” என்று நெகிழ்ச்சியுடன் சொன்னார்கள்.

இவ்வாறு ரவீந்திரன் கூறினார்.

கவிஞர் தஞ்சை ராமையாதாசுக்கு தாயாரம்மாள், ரங்கநாயகி என 2 மனைவிகள். வாரிசுகளும் ரவீந்திரன், விஜயராணி என இருவரே. ரவீந்திரன் பிரசாத் லேபில் சினிமா எடிட்டராக பணியாற்றுகிறார்.

விஜயராணி குடும்பத்தலைவி. கணவர் நடராஜன் ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இந்த தம்பதிகளுக்கு விஸ்வராஜ் என்று ஒரே வாரிசு விஸ்வராஜ், என்ஜினீயரிங் படித்தவர்.

Posted in Audio, Biosketch, Daas, Das, Doss, Faces, Films, History, Kavinjar, Literature, Movies, music, people, Poets, Raamaiya, Raamaiyah, Ramaiya, Ramaiyah, Songs, Tanjore, Thanchai, Thanjai | 1 Comment »

Tamil Actress Latha in TN Politics – ADMK, Thirunavukkarasu & BJP

Posted by Snapjudge மேல் நவம்பர் 13, 2007

திரைப்பட வரலாறு 789
அரசியலில் லதா


சினிமாவில் எம்.ஜி.ஆருடன் ஜோடியாக நடித்துக் கொண்டிருந்தபோதே, நடிகை லதாவை அரசியலுக்கு அழைத்தார், எம்.ஜி.ஆர். ஆனால், அப்போது அரசியலைத் தவிர்த்த லதா, அ.தி.மு.க.வை எம்.ஜி.ஆர். தொடங்கியபோது அதில் சேர்ந்தார்.

எம்.ஜி.ஆரின் அ.தி.மு.க. சந்தித்த முதல் பொதுத்தேர்தலில், நடன நிகழ்ச்சி மூலம் கட்சிக்கு நிதி திரட்டிக் கொடுத்தார் லதா.

எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு எம்.ஜி.ஆர். அமைச்சரவையில் இருந்த திருநாவுக்கரசின் அழைப்பின் பேரில், அப்போது அவர் தொடங்கிய “எம்.ஜி.ஆர். அ.தி.மு.க”வில் இணைந்தார்.

எம்.ஜி.ஆருடனான அரசியல் அனுபவம் குறித்து லதா கூறியதாவது:-

ஆர்வம் உண்டா?

“எம்.ஜி.ஆர். படங்களில் நான் நடித்துக் கொண்டிருந்த நேரத்தில் ஒருநாள் அவர் என்னிடம், “லதா! உனக்கு அரசியலில் ஆர்வம் உண்டா?” என்று கேட்டார். “ஆர்வம் இல்லை. அரசியல் பற்றி எனக்கு எதுவும் தெரியாது” என்றேன்.

”அரசியல் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். அப்போதுதானே தேர்தலின்போது சரியானவர்களை தேர்ந்தெடுக்க முடியும்” என்றார்.

ஆனால் காலச்சூழலில் அவரே அ.தி.மு.க.வை தொடங்க வேண்டியதாயிற்று. கட்சியில் நானும் சேர்ந்தேன். கட்சியில் சேரும்படி என்னை அவர் கேட்கவில்லை. என்றாலும், சினிமாவில் என்னை இந்த அளவுக்கு உருவாக்கியவருக்கு காட்டும் நன்றிக்கடனாக, அவர் கேட்காமலே கட்சியில் சேர்ந்து விட்டேன்.

நடன நிகழ்ச்சி

எம்.ஜி.ஆர். கட்சி, முதல் பொதுத்தேர்தலை சந்தித்த நேரத்தில், “தேர்தலுக்கு நான் என்ன செய்தால் சரியாக இருக்கும்?” என்று கேட்டேன். “உனக்கு எது சரியாக இருக்குமோ, அதைச் செய்தால்தான் சிறப்பாக வரும்” என்றார், எம்.ஜி.ஆர். பிறகு அவரே “லதா! நீ முக்கிய நகரங்களில் நடன நிகழ்ச்சியில் கலந்து கொள். கட்சிக்கு நிதி திரட்டிய மாதிரியும் இருக்கும்” என்றார்.

உடனே தாமதமின்றி நான் உருவாக்கிய நாட்டிய நாடகம்தான் “சாகுந்தலம்.” முப்பதுக்கும் மேற்பட்ட நடனக்குழுவினருடன் நான் கட்சிக்கூட்டம் நடக்கும் இடங்களில் இந்த நாட்டிய நாடகத்தை நடத்துவேன். மக்கள் திரண்டு வந்து, இந்த நிகழ்ச்சியை ரசித்தார்கள். திருச்சியில் நடந்த பொதுக்கூட்ட மேடையில் அதுவரை நடன நிகழ்ச்சிக்கு வசூலான தொகையை எம்.ஜி.ஆரிடம் அளித்தேன்.

இந்த தேர்தலில் எம்.ஜி.ஆர். வெற்றி பெற்று முதல்-அமைச்சரானார். தேர்தலில் நேரம் காலம் பார்க்காமல் விடிய விடிய நாட்டிய நாடகம் நடத்தியதை அவர் மறக்காமல் மனதில் வைத்திருந்தார். ஒருநாள் என்னை அழைத்துப் பேசியவர், “லதா! மக்களின் அன்பு எத்தகையது என்பதை நேரில் காண, இந்த தேர்தல் உனக்கு ஒரு வாய்ப்பாக அமைந்தது. நீ முழுநேர அரசியலுக்கு வரலாம் என்று எண்ணுகிறேன். உன் விருப்பம் என்ன?” என்று கேட்டார்.

நான் அவரிடம், “அரசியலிலும் நீங்கள் ஜெயிக்க வேண்டும் என்பதுதான் என் ஆசை. அதற்காகவே நடன நிகழ்ச்சியையும் உற்சாகமாக செய்தேன். மற்றபடி அரசியலில் ஈடுபடும் அளவுக்கு இன்னமும் எனக்கு பக்குவம் இல்லை” என்று கூறினேன்.

எம்.ஜி.ஆர். என்னைப் புரிந்து கொண்டார். அதன்பிறகு என்னை அரசியலுக்கு அழைக்கவில்லை.”

இவ்வாறு லதா கூறினார்.

சந்திரபாபு நாயுடு

தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆரின் அழைப்பு தவிர, ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவும் லதாவை அரசியலுக்கு அழைத்தார்.

அதுபற்றி லதா கூறியதாவது:-

ஆந்திர மாநிலத்தில் உள்ள கர்னூல்தான் எங்கள் பூர்வீகம். அங்குள்ள அம்மன் கோவில் பிரபலம். ஊர் எல்லையில் இருக்கிற இந்த கோவிலை என் அம்மா விருப்பப்படி 1977-ல் நான் புதுப்பித்தேன். இப்போதும் தம்பி ராஜ்குமார் இந்த கோவிலை பராமரிக்கும் பொறுப்பில் இருக்கிறான்.

தெலுங்கில் 60-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தது மூலமாக தெலுங்கு ரசிகர்களிடமும் நான் பிரபலமாகியிருந்தேன். இப்போது கோவிலை புதுப்பித்ததன் மூலம் அந்தப் பகுதி மக்களிடமும் நல்லவிதமாக அறியப்பட்டிருந்தேன்.

இதனால் சந்திரபாபு நாயுடு என்னை தனது கட்சி சார்பில் இந்த தொகுதியில் நிற்கச்சொன்னார். அப்போது அவர் போட்ட ஒரே கண்டிஷன், “தேர்தலுக்குப்பிறகு, ஆந்திராவிலேயே செட்டிலாகி விடவேண்டும்” என்பதுதான்.

நான் அவரிடம், “நான் பிறந்து வளர்ந்தது, படித்தது எல்லாமே தமிழ்நாட்டில்தான். அங்கேதான் நடிகையாக அறிமுகமானேன். எம்.ஜி.ஆர். மட்டும் அவரது ஜோடியாக படங்களில் என்னை அறிமுகப்படுத்தாமல் இருந்திருந்தால், `லதா’ என்ற பெண்ணை யாருக்குமே தெரியாமல் போயிருக்கும். எனவே எனக்கு புகழ் தேடித்தந்த தமிழ்நாட்டில், தமிழ் மக்களிடையே இருக்கவே விரும்புகிறேன்” என்று சொல்லி, நாயுடு தந்த அரசியல் வாய்ப்பை தவிர்த்து விட்டேன்.

இவ்வாறு கூறினார், லதா.

திருநாவுக்கரசு

எம்.ஜி.ஆர். அமைச்சரவையில் அமைச்சராக இருந்த திருநாவுக்கரசு, எம்.ஜி.ஆர். காலமான பிறகு “எம்.ஜி.ஆர். அ.தி.மு.க” என்றொரு கட்சியை தொடங்கினார். இதில் சேரும்படி நடிகை லதாவை கேட்டுக்கொண்டார். லதாவும் இந்தக் கட்சியில் சேர்ந்து அரசியலில் ஈடுபட்டார்.

1998-ல் நடந்த “எம்.பி” தேர்தலில், திண்டுக்கல்லில் தனது கட்சி சார்பில் போட்டியிட்டார். இதில் அவர் வெற்றி பெறாவிட்டாலும் 60 ஆயிரத்துக்கு மேல் ஓட்டு வாங்கி, அரசியல் வட்டத்தை ஆச்சரியப்படுத்தினார்.

திருநாவுக்கரசு, தனது கட்சியை பாரதீய ஜனதாவுடன் இணைத்த நேரத்தில் லதாவும் பாரதீய ஜனதாவில் ஐக்கியமானார். கட்சியில் அவருக்கு தேசிய பொதுக்குழு உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது.

லதா இப்போது சினிமா, சின்னத்திரை என இரண்டிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த பிஸி நிலை, அவருக்கும் அரசியலுக்கும் ஒரு இடைவெளி இருப்பதுபோல் காட்டுகிறது. தொடர்ந்து அரசியலில் நீடிக்கும் எண்ணம் லதாவுக்கு உண்டா? அவரே கூறுகிறார்:-

“திருநாவுக்கரசரின் `எம்.ஜி.ஆர். அ.தி.மு.க‘ சார்பில் நான் திண்டுக்கல் எம்.பி. தொகுதியில் போட்டியிட்டபோது, கட்சிக்கென்று அங்கீகார சின்னம் எதுவும் தரவில்லை. அப்போது சுயேச்சை சின்னங்களில் ஒன்றாக இருந்த மாம்பழம் சின்னம் ஒதுக்கினார்கள். பிரசாரத்தின்போது மக்களை சந்தித்தேனே அந்த
30 நாட்கள்தான் என் வாழ்க்கையில் திருப்பம். “தலைவர்
(எம்.ஜி.ஆர்) கூட நடிச்ச பொண்ணு” என்று சொல்லி என்னைக் கொண்டாடினார்கள். “உங்க முகத்துல தலைவரைப் பார்க்கிறோம்மா” என்றார்கள்.

வயதானவர்கள்கூட என் காலில் விழ வந்தார்கள். அவர்களை தடுத்து அனுப்புவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. இதெல்லாம் எம்.ஜி.ஆர். மீது அவர்கள் வைத்திருந்த அன்பைத்தான் எடுத்துக்காட்டின.

சிலர் என்னிடம், தங்கள் ஊரில் உள்ள “குழாயில் தணணீர் வரவில்லை” உள்ளிட்ட பல குறைகளை உரிமையுடன் சொல்லத் தொடங்கி விட்டார்கள். எம்.ஜி.ஆருடன் நடித்தவள் என்ற உரிமையில், அவர்கள் என் மீது வைத்த நம்பிக்கையாகவே அது எனக்குப் பட்டது. சிலர், “மதியம் சாப்பாட்டுக்கு எங்க வீட்டுக்கு வாங்க”, “இரவு சாப்பாட்டுக்கு எங்க வீட்டுக்குத்தான் வரணும்” என்றெல்லாம் அன்போடு கேட்டு, அழைத்துப்போய் சாப்பாடும் கொடுத்தார்கள். சூதுவாது தெரியாத அன்பை மட்டுமே பொழியத் தெரிந்த இந்த மக்களுக்காக அவர்களுக்கு நல்லது செய்யும் அரசியலில் நான் நீடிப்பதுதான் சரியாக இருக்கும்.

இந்த பிரசாரத்தில் ஒரு வேடிக்கையும் நடந்தது. நான் எங்கள் “எம்.ஜி.ஆர். அ.தி.மு.க” கட்சி வேட்பாளராக போட்டியிட்ட அதே தொகுதியில், தி.மு.க.வுக்கு ஓட்டு கேட்டு என் தோழி ராதிகா பிரசாரம் செய்தார். அரசியலுக்கு அப்பாற்பட்ட தோழிகள் என்பதால், பிரசாரத்தில் எதிரும் புதிருமாக சந்தித்துக்கொண்டபோதுகூட மறக்காமல் “ஹாய்! ஹலோ” சொல்லிக்கொண்டோம். நட்பு என்பது அரசியலுக்கு அப்பாற்பட்டது அல்லவா?

இப்போது படங்களிலும், தொடர்களிலும் நடிப்பதை தொடர்ந்தாலும், அரசியல் ஈடுபாடும் இருக்கவே செய்கிறது. அரசியலில் முழு மூச்சாக இறங்கும் காலம் வரும்போது நிச்சயம் அதில் என்னை முழுவீச்சில் வெளிப்படுத்தவே செய்வேன். தேசியக்கட்சியில் (பா.ஜ.க) இருந்தாலும் எனது அரசியல் தமிழ்நாட்டில் இருக்கும்.

மக்கள் தந்த ஆதரவில் வளர்ந்த நான், மக்கள் பிரச்சினைக்காக என்னை அர்ப்பணிப்பேன்.”

Posted in Actress, ADMK, AIADMK, Biosketch, BJP, Cinema, Faces, Films, History, Jaya, Jayalalitha, Jayalalithaa, Jeya, Jeyalalitha, JJ, Latha, Leaders, MGR, MGRADMK, Movies, people, Politics, Serial, Sun, Tamil, TamilNadu, Thirunavukkarasar, Thirunavukkarasu, TV | Leave a Comment »

Adithan, Balachander, Nadar conferred honorary doctorates – Madras University convocation ceremony

Posted by Snapjudge மேல் நவம்பர் 13, 2007

சிவ்நாடார், வ.அய்.சுப்ரமணியம் உள்ளிட்ட 10 பேருக்கு டாக்டர் பட்டம்

“சென்னைப் பல்கலைக் கழகம் சார்பில்

  • பிரதமர் மன்மோகன் சிங்,
  • காங்கிரஸ் தலைவர் சோனியா மற்றும்
  • முதல்வர் கருணாநிதிக்கு

கவுரவ டாக்டர் பட்டம் வழங்க திட்டமிடப்பட்டது. சில காரணங்களுக்காக அந்நிகழ்ச்சி தள்ளி வைக்கப்பட்டுள்ளது’ என உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.
சென்னைப் பல்கலைக் கழகத்தின் 150வது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. கவர்னர் சுர்ஜித்சிங் பர்னாலா தலைமையில் நடந்த விழாவில்

  • எச்.சி.எல்., நிறுவனர் சிவ்நாடார்,
  • புள்ளியியல் பேராசிரியர் சி.ஆர்.ராவ்,
  • சென்னை ஐகோர்ட் முன்னாள் நீதிபதி ஏ.கே.ராஜன்,
  • நரம்பியல் வல்லுனர் சி.யு.வேல் முருகேந்திரன்,
  • கல்வியாளர் உமையாள் ராமநாதன்,
  • தினத்தந்தி குழுமத்தின் இயக்குனர் சிவந்தி ஆதித்தன்,
  • சென்னைப் பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் சாந்தப்பா,
  • சினிமா இயக்குனர் பாலச்சந்தர்,
  • சாந்தலிங்கர் மடத்தின் தலைவர் சாந்தலிங்க ராமசாமி அடிகளார்,
  • தமிழறிஞர் வ.அய்.சுப்ரமணியம்

ஆகிய 10 பேருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.
பொருளாதாரத் துறை ஆய்விற்காக

  • மாநில திட்டக் குழு துணைத் தலைவர் நாகநாதனுக்கும்,

பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல் துறை ஆய்விற்காக

  • ஏகாம்பரநாதனுக்கும் டி.லிட்., பட்டங்கள் வழங்கப்பட்டன.

கடல்சார் கல்வித் துறை ஆய்விற்காக

  • சென்னைப் பல்கலைக் கழக துணைவேந்தர் ராமச்சந்திரன்,
  • விலங்கியல் துறை ஆய்விற்காக முனுசாமி,
  • பயோகெமிஸ்டரி ஆய்விற்காக தேவராஜ்

ஆகியோருக்கு டி.எஸ்சி., பட்டங்கள் வழங்கப்பட்டன. மேலும் தன்னாட்சி கல்லுõரிகள், தொலைதுõரக் கல்வித் திட்டத்தில் பயின்றவர்கள் என மொத்தம் 59 ஆயிரத்து 23 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. கவர்னர் சுர்ஜித்சிங் பர்னாலா பட்டங்களை வழங்கினார்.
விழாவில் பேசிய உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, “சென்னைப் பல்கலைக் கழகம் சார்பில் பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா, முதல்வர் கருணாநிதி ஆகியோருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்க திட்டமிடப்பட்டிருந்தது. சில காரணங்களுக்காக அந்நிகழ்ச்சி தள்ளிவைக்கப்பட்டுள்ளது. சமுதாய மாற்றங்களுக்கு ஏற்ப பல்கலைக் கழகங்களும், கல்லுõரிகளும் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். இன்றைய இளைஞர்கள் அரசியல் கருத்து வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு முதல்வர் கருணாநிதியை முன்மாதிரியாக எடுத்துக் கொள்ள வேண்டும்’ என்றார்.

பட்டமளிப்பு விழா உரையாற்றிய கவர்னர் சுர்ஜித்சிங் பார்னாலா, “ஆரம்பத்தில் இரண்டு பேருக்கு பட்டம் வழங்கிய சென்னை பல்கலைக் கழகம், தற்போது ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி வருகிறது. பல்கலைக் கழகம் பட்டம் வழங்குவதுடன், மாணவர்களை முழு மனிதனாக உருவாக்க வேண்டும். வாழ்க்கையில் நிகழும் சவால்களை சந்திக்க அவர்களை தயார்படுத்த வேண்டும். பட்டம் பெறுவதுடன் கல்வி முடிவடைவதில்லை. அது ஒரு தொடர் நிகழ்வு. கற்பதற்கு உள்ள பல்வேறு வாய்ப்புகளை பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேற வேண்டும். நாடு இளைஞர்களிடமிருந்து நிறைய எதிர்பார்க்கிறது. இளைஞர்களின் கடின உழைப்பு தேசத்தை முன்னேற்றும்’ என்றார்.

சென்னைப் பல்கலைக் கழக துணைவேந்தர் ராமச்சந்திரன் வரவேற்றார்.

Posted in Adithan, B Sivanthi Adithan, Balachandar, Balachander, Balachandhar, Balachanthar, Barnala, Ceremony, Chennai, convocation, Daily Thanthi, Doctor, doctorates, HCL, Honorary, Madras, Nadar, Pomudi, SivanthiAdithan, Thinathanthi, Thinathanthy, University | Leave a Comment »

Implementation of Law & Order: Correctional Forces – Ranking & Survey

Posted by Snapjudge மேல் நவம்பர் 13, 2007

வழக்குகள் இழுத்தடிப்பில் இந்தியாவுக்கு 206வது இடம்

மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியாவில் தான் சிறை தண்டனை அனுபவிப்போர் குறைவாக உள்ளனர். 213 நாடுகளில், இந்தியா 206வது இடத்தில் உள்ளது. இந்தியாவில் புலன் விசாரணை இழுபறி, வழக்கு விசாரணை இழுபறி, அப்பீல் செய்வது போன்றவற்றால், குற்றம் சாட்டப்பட்டவர்கள் சிறை தண்டனையை அனுபவிப்பது இழுத்தடிக்கப்படுகிறது. குற்றம் சாட்டப்பட்டவர், இறுதியாக தண்டனை விதிக்கப்படும் போது, அவர் இயற்கையாகவே மரணமடைந்திருக்கும் வழக்குகள் கூட உள்ளன.

போலீசார் பதிவு செய்யும் ஒரு லட்சம் வழக்குகளில், 30 வழக்குகளில் மட்டுமே தண்டனை அறிவிக்கப்பட்டு, குற்றம் சாட்டப்பட்டவர் தண்டனை பெறுகிறார். இது தொடர்பாக 213 நாடுகளில் போலீஸ் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்குழு நடத்திய ஆய்வில், இந்தியாவுக்கு கிடைத்துள்ள இடம் 206.

இந்தியாவை விட மோசமான நிலையில் இருக்கும் நாடுகள் ஏழு மட்டுமே.அண்டை நாடுகளுடன் ஒப்பிடுகையில், நேபாளத்தை விட மற்ற நாடுகள் அனைத்தும் இந்தியாவை விட, முன்னிலையில் உள்ளன. உலகின் அனைத்துக் கண்டங்களையும் சேர்ந்த நாடுகளின் அரசியல் முறை, மக்கள் தொகை, பரப்பளவு அடிப்படையில் பார்த்தால், எந்த நாடும் இந்தியாவைப் போல மோசமான நிலையில் இல்லை.

இந்த விஷயத்தில் முதலிடம் வகிப்பது அமெரிக்கா தான். இங்கு பதிவு செய்யப்படும் வழக்குகளில், 737 வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர் தண்டனை அனுபவிக்கிறார். ரஷ்யாவில், இது 613 ஆக உள்ளது.

Posted in Convict, Courts, Criminal, Imprison, Imprisonment, Judges, Justice, Law, Order, Police, Prison, Punishment, Ranking, Ranks, Survey | Leave a Comment »