வடமத்திய மாகாணத்தில் புலிகள் 4 கிராமவாசிகளை சுட்டுக்கொன்றதாக தேசிய பாதுகாப்பு ஊடக மையம் தகவல்
![]() |
![]() |
சம்பவ இடம் |
இலங்கையின் வடமத்திய மாகாணத்தின் வில்பத்து சரணாலயத்தை அண்மித்த மாவிலாச்சிய என்ற கிராமப்பகுதியில் இன்று காலை 4 கிராமவாசிகளை விடுதலைப் புலிகள் சுட்டுக் கொன்றிருப்பதாகத் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் கூறியுள்ளது.
இன்று அதிகாலை இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் விவசாயிகளான மூன்று ஆண்களும் ஒரு பெண்ணுமே கொல்லப்பட்டுள்ளதாக அந்த ஊடகத் தகவல் மையம் தெரிவித்திருக்கின்றது.
துப்பாக்கிக் குண்டுகள் துளைத்த இவர்களின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்ட பிரதேசத்தைச் சுற்றிவளைத்து தாக்குதல் நடத்திய விடுதலைப் புலிகளைக் கண்டுபிடிப்பதற்கான தேடுதல் வேட்டையில் அரச படையினர் ஈடுபட்டிருப்பதாக இராணுவம் தெரிவித்திருக்கின்றது.
எனினும், இந்தச் சம்பவம் குறித்து விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து கருத்துக்கள் எதுவும் வெளியாகவில்லை.
மன்னார் பாடசாலையில் விடுதலைப் புலிகள் நடத்தியதாக இராணுவத்தினர் குற்றம்சாட்டும் மோர்டார் தாக்குதலில் 7 பேர் காயம்
![]() |
![]() |
இலங்கையின் வடமேற்கே மன்னார் மாவட்டத்தின் இராணுவ கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் உள்ள மல்லவராயன் கட்டையடம்பன் பாடசாலை மீது இன்று திங்கட்கிழமை பிற்பகல் விடுதலைப் புலிகள் மோர்டார் தாக்குதல் நடத்தியதாகத் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்துள்ளது.
இந்தத் தாக்குதலில் 2 ஆசிரியைகளும், 5 மாணவ மாணவியரும் காயமடைந்துள்ளதாகவும் அது தெரிவித்திருக்கின்றது.
ஆனால் இதனை விடுதலைப் புலிகள் மறுத்துள்ளதுடன், குறிப்பிட்ட பகுதியில் இன்று தாங்கள் எந்தத் தாக்குதல்களையும் நடத்தவில்லை என்றும், இந்தத் தாக்குதலுக்கும் தமக்கும் எதுவித சம்பந்தமும் இல்லை என்றும் தெரிவித்திருக்கின்றனர்.
காயமடைந்தவர்கள் உடனடியாக அருகில் உள்ள முருங்கன் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டிருக்கிறார்கள்.
மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இருவரும் சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு தொடர்ந்தும் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
இதற்கிடையில் விடுதலைப் புலிகளின் பிரதேசமாகிய புதுக்குடியிருப்பு மற்றம் கிளிநொச்சியின் மேற்குப் பிரதேசம் என்பவற்றில் அடையாளம் காணப்பட்ட புலிகளின் மறைவிடங்கள் மீது இன்று திங்கட்கிழமை மாலை விமானப்படையினர் தர்ககுதல் நடத்தி சேதங்களை ஏற்படுத்தியுள்ளதாக விமானப்படையினர் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து விடுதலைப் புலிகள் வெளியிட்டுள்ள தகவலில், கிளிநொச்சி, புதுக்குடியிருப்பு, யாழ் குடாநாட்டின் விடுதலைப் புலிகள் பிரதேசமாகிய இயக்கச்சி ஆகிய இடங்களில் இன்று காலையிலும் மாலையிலும் அரசின் மிக் 27 ரக தாக்குதல் விமானங்கள் குண்டுத் தாக்குதல்களை நடத்தியதாகவும், இதில் மக்கள் குடியிருப்புக்களே சேதமடைந்துள்ளதாகவும், சிவிலியன் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் கூறியிருக்கின்றனர்.
இன்று மாலை, புதுக்குடியிருப்பு நகரை அண்மித்த மக்கள் குடியிருப்புக்கள் மீது 2 குண்டுகளையும், புதுக்குடியிருப்பு 2 ஆம் வட்டாரப் பகுதியை வட்டமிட்டு 10 குண்டுகளையும் இந்தத் தாக்குதல் விமானங்கள் வீசியதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்திருக்கின்றனர்.
புதுக்குடியிருப்பு பகுதியில் 4 வீடுகள் முற்றாக அழிந்துள்ளதாகவும், மேலும் 7 வீடுகளும், அப்பகுதியில் உள்ள கத்தோலிக்க கன்னியர் மடமும் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. குண்டுத் தாக்குதலின்போது பொதுமக்கள் பாதுகாப்பைத் தேடிக் கொண்டதனால் அவர்களுக்கு சேதம் ஏற்படவில்லை.
இதற்கிடையில், மன்னார் இராணுவ முன்னரங்கப் பகுதிகளாகிய நாவற்குளம், குறிசுட்டகுளம், உயிலங்குளம் வடக்கு ஆகிய பகுதிகளில் இன்றும் நேற்றும் விடுதலைப் புலிகளுடன் இடம்பெற்ற மோதல்களில் 15 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டிருப்பதாகத் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்திருக்கின்றது. எனினும் இது குறித்து விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து உடனடியாகத் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.