Understanding & nurturing Kids – Child development
Posted by Snapjudge மேல் மே 3, 2007
உங்கள் குழந்தைகளை நன்றாகப் புரிந்துகொள்ள அவர்களின் உணர்வுப் போக்குகளை இனம் காணுங்கள்
– டாக்டர் எஸ். யமுனா
குழந்தை மருத்துவத்தில் குழந்தை வளர்ச்சி என்பது பிரமிப்பூட்டும் ஒரு பிரிவு. அதில் புதிய சிந்தனைகள் வந்தவண்ணம் இருக்கின்றன. உயிரியல், உளவியல், மற்றும் சமூகக் காரணிகளே குழந்தையின் வளர்ச்சியைத் தீர்மானிக்கின்றன என்று சமீப காலங்களில் சொல்லப்படுகிறது.
ஒரு குழந்தையின் வளர்ச்சியின் மீதுள்ள உயிரியல் ரீதியான தாக்கங்களைப் பல காரணிகள் தீர்மானிக்கின்றன. மரபணு உட்பொருள், குரோமோசோம் ஒழுங்குவரிசை, கருவறைக்குள் இருக்கும் சூழல், கர்ப்ப காலத்தின்போது தாய்க்கு ஏற்படும் ஜெர்மன் மீஸில்ஸ் அல்லது ருபெல்லா போன்ற தொற்றுநோய்கள், கர்ப்பத்தால் ஏற்படும் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய்; குறைப் பிரசவம், மிகத் துரிதப் பிரசவம் (precipitate labour), நெடுநேரப் பிரசவம் (இதில் குழந்தையின் மூளைக்குச் செல்லும் ஆக்சிஜனின் அளவு குறையக்கூடும்) போன்ற நிகழ்வுகள், பிறக்கும்போது குழந்தையின் அழுகை பலவீனமாக இருத்தல் ஆகியவை இந்தக் காரணிகளில் அடங்கும்.
குழந்தைகள், உணர்வுப் போக்குகளுடன் (temperamental traits) பிறக்கின்றன. குழந்தைகள் அன்றாட வாழ்க்கையின் சவால்களை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதே இந்த உணர்வுப் போக்குகள். இவை குழந்தைகளுக்குள் ஆழமாகப் பொதிந்திருக்கும். பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளிடம் குறிப்பிட்ட சில நடத்தைகள் மரபணு அமைப்பினால் வந்தவையே தவிர, தாங்கள் வளர்க்கும் முறையினால் ஏற்பட்டவை அல்ல என்று தெரிந்துகொண்டு ஆறுதல் அடைகிறார்கள்.
பெற்றோர்கள் என்ற முறையில் நமக்கு நம் குழந்தைகளின் உணர்வுப் போக்கைப் பற்றித் தெரிந்திருப்பது அவசியம். உணர்வுப் போக்குகள் ஒன்பது வகைப்பட்டவை.
செயல்பாடு: சில குழந்தைகள் பிறந்ததிலிருந்தே மிகவும் சுறுசுறுப்பாக இருக்கிறார்கள். அவர்கள் எப்போதும் கைகளையும் கால்களையும் வெவ்வேறு விதமாக அசைத்துக்கொண்டிருப்பார்கள். சில குழந்தைகள் பிறந்தது முதல் மிகவும் சோம்பலாக இருக்கிறார்கள்.
ஒழுங்கு: சில குழந்தைகளுக்குப் பசி, தாகம், தூக்கம் எல்லாம் கச்சிதமான ஒழுங்கில் இருக்கும். ஆனால் சில குழந்தைகளுக்கு இந்தத் தேவைகள் வெவ்வேறு நேரங்களில் ஏற்படும்.
அணுகுமுறை: புதிதாக ஒரு பொருள் கொடுக்கப்படும்போது சில குழந்தைகள் உடனே கை நீட்டி வாங்கிக்கொள்கிறார்கள். இன்னும் சில குழந்தைகள் அந்தப் புதிய பொருளை முற்றிலும் தவிர்க்கிறார்கள்.
சூழலுக்கேற்ப மாறும் திறன்: அதே போல, சில குழந்தைகளால் புதிய சுற்றுப்புறத்திற்கு ஏற்ப மாற முடிகிறது. ஆனால் சில குழந்தைகளுக்குப் புதிய இடத்திற்கு ஏற்ப மாற முடிவதில்லை.
எதிர்வினையாற்றுதல்: ஒளி, ஒலி, காற்று, வெப்பம் போன்றவை குழந்தைகளிடம் வெவ்வேறு விதமான எதிர்வினைகளை ஏற்படுத்துகின்றன. சில குழந்தைகளுக்கு உரத்த ஒலிகள் பிடிக்கும், சில குழந்தைகள் உரத்த ஒலிகளைக் கேட்டால் அலறுகிறார்கள்.
எதிர்வினையின் தீவிரம்: ஊசி போடப்பட்ட பின் சில குழந்தைகள் வெகு நேரம் அழுதுகொண்டிருக்கும். இன்னும் சில குழந்தைகள் சிறிது நேரத்தில் அழுகையை நிறுத்திவிடுகின்றன.
மனநிலையின் தன்மை: சில குழந்தைகள் கலகலப்பாக, உற்சாகமாக, சிநேகமாக இருக்கிறார்கள். ஆனால் சில குழந்தைகள் எப்போதும் ‘உர் என்று’, சோகமாக, உதட்டைப் பிதுக்கியபடி இருக்கிறார்கள்.
கவனம் சிதறும் தன்மை: மின்விசிறி சுற்றும் ஒலி, யாராவது கடந்து செல்வது என்று சுற்றுப்புறத்தில் சிறு சலனம் ஏற்பட்டால்கூட சில குழந்தைகளுக்கு கவனம் சிதறக்கூடும்.
கவனம் நீடிக்கும் காலம்: ஒரு கதையைக் கேட்டுக்கொண்டிருக்கும்போது சில குழந்தைகளுக்கு மணிக்கணக்கில் ஆழ்ந்து கேட்க முடிகிறது. ஆனால் சில குழந்தைகளால் எதையும் நீண்ட நேரம் உட்கார்ந்து கேட்க முடிவதில்லை.
குழந்தைகளின் உணர்வு பெற்றோரின் எதிர்பார்ப்புகளுடன் ஒத்துப்போனால் இருவருக்கும் இடையிலான மோதல்கள் குறைவாக இருக்கின்றன. இது “Goodness of Fit” எனப்படுகிறது. ஒவ்வொரு குழந்தைக்கும் அதற்கே உரிய உணர்வு என்பதையும் குழந்தைகளை ஒப்பிடக் கூடாது என்பதையும் பெற்றோர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
டாக்டர் யமுனா, சென்னையைச் சேர்ந்த குழந்தைகள் மற்றும் வளர் இளம் பருவத்தினர் நல சிறப்பு மருத்துவர். இவரை dryamunapaed@yahoo.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
மறுமொழியொன்றை இடுங்கள்