“என்று தணியும் எங்கள் சுதந்திர தாகம்’வெ. கணேசன்
மகளிர் தினம் இன்று உலகம் முழுவதும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. கொண்டாடப்படுவதன் வரலாற்றுப் பின்னணி, நாம் அனைவரும் அறிந்திருக்க வேண்டியது அவசியம்.
அது பத்தொன்பதாம் நூற்றாண்டின் துவக்க காலம். மேலை நாடுகள் பலவற்றில் தொழில் புரட்சி தோன்றி இருந்தது. அதன் எதிரொலியால், புதுப்புது ஆலைகள் தோன்றியிருந்தன.
ஆலை ஊழியர்களில், ஆண், பெண் இன பேதம் வெகு பிரசித்தம். நாள்தோறும் 16 மணி நேர வேலை. “”சாது மிரண்டால் காடு கொள்ளாது” என்பது அங்கேயும் அரங்கேறியது. அதனை மெய்ப்பிக்கும் விதமாக, வெடித்துக் கிளம்பியதுதான் அமெரிக்காவின் நியூயார்க் வீதிகளில் நடந்த மாபெரும் ஆர்ப்பாட்டமும், போராட்டமும்.
1857-ம் ஆண்டு அங்கே, நெசவு ஆலைப் பெண்களுக்கு ஊதியத்தில் பாரபட்சம், உழைப்பதற்கு தோதாக, சுகாதாரச் சூழல் இல்லாத, அருவருக்கத்தக்க சுற்றுச்சூழல் மறுபக்கம். நாளும் வாட்டி வதைக்கிற இந்த அவலங்களை எதிர்த்து, ஓங்கி ஒலித்தது உரிமைக்குரல்.
அதற்கடுத்த இரண்டே ஆண்டுகளில், கீழ்வானில் ஜொலித்துக் கிளம்பும் விடிவெள்ளியாய் “”உழைக்கும் மகளிர் இயக்கம்” எனும் அமைப்பு உருவானது. மகளிர் சமுதாயத்தின் மறுமலர்ச்சிக்கு இது ஒரு மைல்கல்.
1899-ல், “”டென்மார்க்கில்” முதல் சர்வதேச பெண்கள் மாநாடு கூடியது. உழைப்பாளிகளின் சங்கமிப்பை உலகே வியந்து பார்த்து மகிழ்ந்தது.
இதனைத் தொடர்ந்து 1908-ம் ஆண்டு 15 ஆயிரம் பெண்கள் ஒன்று கூடி குறைந்த வேலை நேரம், ஆண்களுக்குச் சமமான ஊதியம் மற்றும் மகளிர் வாக்குரிமை ஆகியவற்றை வலியுறுத்தி நியூயார்க் நகரில் மாபெரும் போராட்டம் நடத்தினர். இது மனித சமுதாயத்தில் ஒரு மாபெரும் புரட்சியை ஏற்படுத்தியது.
இதன் தொடர்ச்சியாக 1910ல் கோபன்ஹேகனில் மற்றொரு மாநாடு. அம் மாநாட்டில் தான் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த “”சர்வதேச மகளிர் தினம்” மார்ச் 8-ம் தேதி கொண்டாடுவது என தீர்மானிக்கப்பட்டது. அதுதான் காலம் காலமாக இன்றளவும் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.
“என்றைக்கு உடல் முழுக்க நகைகள் அணிந்து, ஒரு பெண் நள்ளிரவு நேரத்திலும் அச்சம் இன்றி, வீதிகளில் நடக்க முடிகிறதோ, அன்றுதான் நமது நாட்டுக்கு உண்மையான சுதந்திரம்’ என முழங்கினார் அண்ணல் மகாத்மா.
பெண்கள் மீதான வன்முறை, மனித உரிமை சம்பந்தப்பட்டது. சமூகம், பொருளாதாரம், சமயம், கல்வி என பலப்பல நிலைகளிலும், பெண்களுக்கான உரிமை மறுக்கப்படும் அவலம்தானே இந்நாள் வரையும் இங்கே நடக்கிறது.
நவீன உலகின் காவலராக, பாவலராக, நாவலராக, புடம் போட்ட தங்கமாய் ஜொலித்து நிற்கும் பெண்கள் நிறையவே உண்டு. கோவையில் எழுபது சதவிகிதப் பெண்கள், இன்று தொழில் முனைவோர்களாக மாறியுள்ளனர்.
கல்வி, பொருளாதாரச் சுதந்திரம் ஆகிய இரண்டையும் பெண்கள் எட்டி விட்டால் அரசை ஆளலாம். ஏன், வானம் வரை கூட உயரலாம். அதற்கான வழிவகைகளை உருவாக்கித் தருவதே இன்றைய மனித சமுதாயத்தின் முதல் கடமை.
கென்யா நாட்டின் வாங்காரி மூட்டா மத்தாய் என்பவர் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்காக பசுமைப் பரப்பு இயக்கத்தைத் தோற்றுவித்தார். அவரது இயக்கம் 3 கோடி மரங்களை நட்டுள்ளது. ஆப்பிரிக்காவில் உள்ள இதர 12 நாடுகளிலும் இந்த இயக்கம் பரவி, வேரூன்ற வழி பிறந்துள்ளது.
ஏழைப் பெண்களின் பொருளாதார நிலைமையை எப்படி உயர்த்த முடியும். சமுதாயத்தை மேம்படுத்த முடியும் என்று சிந்தித்து, அதைச் செயலில் வடித்தவர் மத்தாய் என்பது அடுத்த குறிப்பிடத்தக்க விஷயம். இதனால் 80 ஆயிரம் பெண்கள் பயன் அடைந்துள்ளனர்.
“அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற முதல் பெண்’ என்கிற பெருமை மத்தாய்க்கே உரித்ததாகும். ரைட் லவ்லி ஹீட் விருது, கோல்டுமேன் சுற்றுச்சூழல் விருது, பிரான்ஸ் நாட்டின் தேசிய விருது ஆகியவை இவரைத் தேடிச் சென்று, தம்மை கௌரவித்துக் கொண்டன. நமது நாடும் தனது பங்காக, “ஜவாஹர்லால் நேரு’ விருதுக்கு இவரைத் தேர்ந்தெடுத்தது.
“”சாவின் முனை தொட்டு விடும் தூரம் தான்” எனத் தெரிந்தும், சாகசங்கள் செய்தே தீர்வது என்கிற துணிச்சலில் களமிறங்கி, விண்வெளியில் நடப்பதில் உலக சாதனை புரிந்தவர் இந்திய வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ்.
கடந்த 2003-ம் ஆண்டில், அமெரிக்க கொலம்பியா ஷட்டில்கலம் கீழே இறங்குகையில், நடுவானில் வெடித்தது. அப்போது உயிரிழந்த ஏழுபேரில், நமது நாட்டு வீரப் பெண்மணி கல்பனா சாவ்லாவும் ஒருவர்.
மொத்தம் 22 மணி 27 நிமிடங்கள் விண்வெளியில் நடந்து, அதிக நேரம் நடந்த பெண் வீராங்கனை என்கிற உலக சாதனை புரிந்துள்ளார், சுனிதா வில்லியம்ஸ்.
அகிம்சைப் பாதையில் அறவழிப் போராட்டம் நடத்தி வருபவர் டாஆங்சன்சூகி. யங்கோனில் பிறந்த சூகி, பர்மிய விடுதலைக்கு முயற்சி செய்து, படுகொலை செய்யப்பட்ட ஜெனரல் ஆங் சன்னின் மகள். 1988ல் ஜனநாயகத்திற்கான தேசியக் கூட்டமைப்பை மியான்மரில் ஏற்படுத்தினார். இதனால், வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். 1990-ல் இராணுவ ஆட்சி நடத்திய பொதுத் தேர்தலில், அவருடைய ஜனநாயகக் கூட்டமைப்பு மாபெரும் வெற்றி பெற்றது.
ஆனாலும், அடக்குமுறை ராணுவ ஆட்சி, தேர்தல் முடிவுகளை ரத்து செய்தது. சூகியிடம் ஆட்சியைத் தர மறுத்துவிட்டது. இதைத் தொடர்ந்து 1991-ல் “அமைதிக்கான நோபல் பரிசு’ சூகிக்கு வழங்கப்பட்டது. அதனால் கிடைத்த பெருந்தொகையைக் கொண்டு, மியான்மர் மக்களுக்கான சுகாதாரம் மற்றும் கல்வி அறக்கட்டளையை ஏற்படுத்தினார்.
கர்நாடகத்தில், சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் சுதா நாராயணமூர்த்தி. மாதச் சம்பளத்தில் நாள்களை நகர்த்தும் சராசரிப் பெண்ணாய்தான் தன்னுடைய குடும்ப வாழ்க்கையைத் தொடங்கினார். சவால்களைத் துணிவுடன் எதிர்கொண்டார். அயராத உழைப்பையும், தன்னம்பிக்கையையும் மூலதனம் ஆக்கினார்.
“முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்’ என்பது அவரது வாழ்விலும் நிரூபணம் ஆகியது. இன்று இந்தியாவின் முன்னணித் தொழில் அதிபர்களில் ஒருவராக, கம்ப்யூட்டர் துறை சாதனைப் பெண்மணியாய் ஜொலிக்கிறார். சிறந்த சமூக சேவகி, படிப்பாளி, உழைப்பாளி, நிர்வாகி, குடும்பத் தலைவி என பன்முகம் கொண்டவர். அவர் ஒரு படைப்பாளியும்கூட.
நமது நாட்டின் முதல் பெண் டாக்டர் என்ற பெருமைக்கு உரியவர் டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி. பெண்கள் படிப்பதே அபூர்வமாக இருந்த அக்காலத்தில், புதுக்கோட்டை மகாராஜா கல்லூரியில் சேர்ந்தார். பின்னர் 1907-ல் சென்னை மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படித்த முத்துலெட்சுமி ரெட்டி தங்கப் பதக்கங்களைப் பெற்று, 1912ல் டாக்டர் ஆனார். தேவதாசி முறையை ஒழிக்க சட்டம் கொண்டு வரக் காரணமாக இருந்தவரும் இவர்தான்.
ஹைதராபாதைச் சேர்ந்த டென்னிஸ் புயல் சானியா மிர்சா, மிகச்சிறந்த வீராங்கனை. லட்சியத்தை எட்ட, வேகமாக முன்னேற்றப் படிகளில் ஏறி வருபவர். தரவரிசைப் பட்டியலில் 497 புள்ளிகளுடன், உலகின் 46வது இடத்தில் அவர் ஜொலித்துக் கொண்டிருக்கிறார்.
இவரையும் எதிர்ப்பு அலைகள் பலங்கொண்ட மட்டும் தாக்கியது மதமென்னும் போர்வையில். இவரைக் கரை ஒதுக்க முயன்று, அது நிறைவேறாது எனத் தெரிந்ததும், இருட்டில் ஓடி மறைந்து கொண்டது.
உயர்ந்த சிந்தனையில் ஈர்க்கப்பட்டு, இடைவிடாத சமூகப்பணிகளை மேற்கொண்டு, முற்போக்குச் சிந்தனைக்கு வித்திட்டவர் ரூத் மனோரமா. கடந்த 30 ஆண்டுகளாக கர்நாடகத்தில் சமூகப் பணிகளைச் சிறப்பாக ஆற்றி வருகிறார். இப்பணிகளைப் பாராட்டி, 2006-ம் ஆண்டுக்கான “”வாழ்வாதார உரிமைக்கான விருது”, சுவீடன் நாடாளுமன்றத்தில் அவருக்கு வழங்கப்பட்டது. நோபல் பரிசுக்கு இணையான விருதாகும் இது.
அடுத்து, பெண்கள் முன்னேற்றத்துக்கு அயராது பாடுபட்டு பிரதமர் கையால் விருது பெற்ற மதுரையைச் சேர்ந்த சுயஉதவிக் குழு “”சின்னப்பிள்ளை”யும் சாதனைப் பெண்மணிதான். சுயமாய் நின்று, சமுதாயத்தில் அங்கீகாரம் பெற்ற பெண்கள் எல்லோரும் போராளிகளே.
அவர்களுக்கு நாடும், நாமும், சீரான பாதையை ஏற்படுத்திக் கொடுப்பதே சுதந்திரம் வாங்கியதன் லட்சியம். அந்த லட்சியப்பாதைக்கு இன்றே, இப்போதே அடித்தளம் இடுவோம். அயராது பாடுபடுவோம்.
பெண் உரிமைகளை மீட்போம். பொன் மயமாய் ஒளிர்வோம்!
(கட்டுரையாளர்: பாண்டியன் கிராம வங்கி தொழிலாளர் சங்க இணைப் பொதுச்
செயலர்).
=======================================================
பெண்ணின் பெருந்தக்க யாவுள…
செ. செல்வராணி
பெண்களின் சமுதாயப் படிநிலை இன்று எல்லாத் துறைகளிலும் உயர்ந்திருக்கிறது.
கல்வித்துறை, பொருளாதாரத்துறை, சமூகத்துறை, தொழிற்துறை என்று அனைத்துத் துறைகளிலும் பெண்கள் பதவி வகிக்கின்றனர். சமூக அந்தஸ்து என்பது எந்த அளவுக்கு பெண்களின் முன்னேற்றம் இருக்கிறதோ அதைப் பொறுத்து அமைவது.
காந்தியடிகள் “”பெண்கள் ஒரு அடி முன்னேறினால் அந்த நாடு பத்து அடிகள் முன்னேறுகிறது” என்று பெண்கள் முன்னேற்றத்தின் இன்றியமையாமையை விளக்குகிறார். சென்ற பத்தாண்டுகளில் பெண்களின் கல்வி வளர்ச்சி 1 விழுக்காடு அதிகரித்த போது நம் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 10 விழுக்காடு அளவுக்கு அதிகரித்திருப்பதாக புள்ளிவிவரம் கூறுகிறது. இது தேசப்பிதாவின் கூற்றை மெய்ப்பிக்கிறது.
விவேகானந்தர், “”முதலில் பெண்களுக்கு கல்வியறிவை அளியுங்கள், பின் அனைத்தையும் அவர்களிடம் விட்டு விடுங்கள். முன்னேறுவதற்கான தேவைகளை அவர்கள் கூறுவார்கள்” என்று கூறியுள்ளார். ஒரு பெண் சுயமாகச் சிந்தித்துச் செயல்பட, சொந்தக் காலில் நிற்க கல்வி மிகவும் அவசியம்.
வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள அனைத்துப் பெண்களும் அடிப்படைக் கல்வியையாவது கற்றால்தான் நாடு தன்னிறைவு பொருளாதார வளர்ச்சியை எட்ட முடியும். ஒரு குடும்பத்தில் ஒரு பெண் கல்வி கற்றால் அந்தக் குடும்பமே கல்வி கற்றதாக ஆகும். அடிப்படைக் கல்வி என்பது கையெழுத்துப் போடத் தெரிந்திருப்பது மட்டும் அல்ல. ஓட்டுரிமை, அடிப்படைச் சுகாதாரம், சுயமாகச் சிந்திக்கும் திறன், மக்கள்தொகை பற்றிய விழிப்புணர்வு, குடும்பநலத்திட்டம் போன்ற முக்கியமான விஷயங்கள் பற்றி அறிந்திருத்தல் ஆகும்.
இன்று பெண்கள் கல்வியில் நல்ல முன்னேற்றம் காணப்படுகிறது. அனைத்துத் துறைகளிலும் ஆண்களுக்கு நிகராக பெண்கள் பதவி வகிக்கின்றனர். மாநில முதல்வர்களாக, பல்கலைக் கழக துணை வேந்தர்களாக, ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளாக, மருத்துவத்துறை அதிகாரிகளாக, விஞ்ஞானிகளாக, பிரபல நிறுவனங்களில் இயக்குநர்களாக என பல துறைகளிலும் உயர் பதவிகளை வகித்து சாதனைகள் புரிந்து வருகின்றனர்.
இன்று நம்நாட்டில் 25 பிரபல நிறுவனங்களின் மேலாண்மை இயக்குநர்களாக பெண்கள் பதவி வகிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்க விஷயம். தொழிற்கல்வி பயின்று, தொழில் துறையில் பெண்கள் மேலும் முன்னேற வேண்டும். ஜப்பானியப் பெண்களில் பெரும்பாலோர் தொழில் முனைவோர்களாக உள்ளனர். நம் நாட்டிலும் பெண் தொழில் முனைவோர்களை உருவாக்குவது மிகவும் அவசியம்.
“சிவில் சர்வீஸ்’ துறையில் பெண்களின் பங்கு 10 சதவீதத்திலிருந்து கடந்த ஐந்து ஆண்டுகளில் 25 சதவீதமாக அதிகரித்திருப்பது வரவேற்கத்தக்கது. நீதித்துறை, அரசியல்துறை போன்ற துறைகளிலும் பெண்களின் பங்கு அதிகரிக்க வேண்டும்.
எல்லாவற்றுக்கும் இட ஒதுக்கீட்டையே நம்பியிருக்கக் கூடாது. பெண்கள் முயன்றால் தங்கள் அறிவால், ஆற்றலால், உழைப்பால், சொந்தத் திறமையால் அனைத்தையும் அடைய முடியும். வெற்றி பெற முடியும். இன்று உள்ளாட்சி அமைப்புகளுக்கு பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில் செயலாற்றும் பெண்கள் சுயமாகச் சிந்தித்துச் செயல்படக்கூடியவர்களாக இருக்க வேண்டும்.
நம் வரலாற்று ஏடுகளைப் புரட்டினால் வீரமிக்க மங்கையர் ராணி லஷ்மிபாய், அகல்யா பாய், துர்கா தேவி போன்ற சாதனைப் பெண்களைக் காணலாம். நமது நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட அன்னிபெசன்ட், முதல் பெண் ஆளுநர் கவிக்குயில் சரோஜினி நாயுடு ஆகியோரும் சாதனை படைத்த மங்கையர்களே.
மேலும் அயராத உழைப்பால் புற்றுநோய்க்குத் தீர்வு கண்டு நோபல் பரிசு பெற்ற மேடம் கியூரி, கருணையுள்ளம் கொண்ட அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற அன்னை தெரசா, ஆங்கிலத் துறையில் அளிக்கப்படும் உலக அளவிலான புக்கர் பரிசைப் போற்ற அருந்ததி ராய், விண்வெளியில் பறந்து தீபமாய் ஒளிர்விடும் கல்பனா சாவ்லா, திகார் சிறையில் சாதனைகள் பல புரிந்த கிரண் பேடி, இசைத்துறையில் பிரகாசிக்கும் லதா மங்கேஷ்கர், இசை மேதை எம்.எஸ். சுப்புலட்சுமி, டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா என்று சாதனை புரிந்த, புரிந்து கொண்டிருக்கின்ற பெண்களின் பட்டியலை அடுக்கிக் கொண்டே செல்லலாம். இவர்கள் அனைவரும் இன்றைய பெண்களுக்கு முன்மாதிரிகள்; வழிகாட்டிகள்.
பெண்களுக்கு வழிகாட்டவும், பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் போன்றவற்றைக் கேட்டு உதவி புரியவும் தேசிய அளவிலும் மாநில அளவிலும் கீழ்க்கண்ட பெண்கள் அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன.
பெண்களுக்கான தேசிய பொறுப்பாண்மைக் குழு, சுயவேலை பார்க்கும் பெண்கள் அமைப்பு, அகில இந்திய மக்களாட்சியைச் சார்ந்த பெண்கள் அமைப்பு, மகிழ தக்ஷாடா சங், பணியிலிருக்கும் சென்னைப் பெண்களின் பொது அமைப்பு ஆகியவை பெண்களுக்கு உதவி புரிந்து வருகின்றன.
“”உன் பெண்மையின் லட்சியம் சீதை, சாவித்திரி, தமயந்தி என்பதை மறந்து விடாதே” என்ற விவேகானந்தரின் சொற்கள் ஒவ்வொரு பாரதப் பெண்ணின் உள்ளத்திலும் பதிய வேண்டும்.
“பாரத நாடு புண்ணிய பூமி’ என்ற பெயரைப் பெற்றுள்ளது. பெண்மையைப் போற்றுவது நம் பாரதப் பண்பாடு. இந்த நாட்டின் பண்பாடு, கலாசாரம், நாகரிகம், நன்னெறிகள் அனைத்துமே பெண்களின் கைகளில்தான் உள்ளது. குழந்தைகள் வளர்ப்பில் பெண்களின் பங்கு மிக மிக இன்றியமையாதது. நல்ல மக்களைக் கொண்ட சமுதாயம் அமைதல் என்பது குழந்தைகளை தாய்மார்கள் வளர்க்கும் சூழ்நிலையைப் பொறுத்தே அமைகிறது. தாய்மை என்பது புனிதமான, உன்னதமான போற்றுதலுக்குரிய ஒன்று. ஒரு நல்ல தாயினால்தான் நல்ல மகனை உருவாக்க முடியும். எனவே நல்ல பண்பாடு மிக்க பெண்களால்தான் நல்ல சமுதாயத்தை உருவாக்க முடியும்.
அன்பு, அடக்கம், அமைதி, கற்பு, வீரம், தியாகம், மனத்திட்பம் முதலிய நன்னெறிகளின் வடிவமாகப் பெண்கள் திகழ வேண்டும். “மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்’ என்று பாடினார் பாரதி. ஆனால் இன்று விளம்பரம் மற்றும் திரைப்படத் துறைகளில் பெண்களே பாரத கலாசாரத்திற்கு முரண்பாடு கொண்ட உடைகள் அணிந்தும், நடித்தும், நம் பண்பாட்டையே இழிவுபடுத்திக் கொண்டிருக்கின்றனர். இத்தகைய பெண்கள் திருந்தினால்தான் நமது கலாசாரத்தைப் பாதுகாக்க முடியும்.
இளம்பெண்களும், மாணவிகளும் அறிவு சார்ந்த நூல்களையும் கல்வி, சமூகம், அறிவியல் மற்றும் அரசியல் துறைகளில் சாதனை புரிந்த பெண்களின் வரலாறுகளையும் படித்தார்களேயானால் அவர்களும் சாதனை படைக்கலாம்.
ஒவ்வொரு பெண்ணும் நற்பண்புகளின் உறைவிடமாகத் திகழ்ந்து, தன்னிகரற்ற பாரதத்தைப் படைக்க உறுதி ஏற்போம்.
(கட்டுரையாளர்: முதல்வர், ஸ்ரீசாரதாநிகேதன் மகளிர் கல்லூரி, அமராவதிபுதூர்).
=================================================================
ஆணுக்குப் பெண் நிகரானால் குழந்தைகளுக்கும் நல்வாழ்வு
என். கங்கா
பெண்களே நாட்டின் கண்கள்! இந்தக் கூற்று முற்றிலும் உண்மை!
பெண்ணியவாதிகள், அறிவியல் வல்லுநர்கள், சமூக இயல் வல்லுநர்கள், தேசப்பற்று கொண்டவர்கள், பொருளாதார வல்லுநர்கள், மருத்துவர்கள், திட்டமிடுபவர்கள், அரசியல்வாதிகள் ஆகிய எல்லா தரப்பினருக்கும் இதில் மாறுபட்ட கருத்து இருக்க முடியாது. பெண்களின் சம உரிமையும், குழந்தைகளின் நல வாழ்வும் கைகோத்து நடைபோடுகின்றன. பெண்களுக்கு எல்லா கோணங்களிலும் சம உரிமை வழங்கப்பட்டு பெண்களின் நிலை முன்னேற்றம் அடைந்தால் பெண்களின் நல்வாழ்வும், குழந்தைகளின் நல்வாழ்வும் உறுதி செய்யப்படும்.
உலக சுகாதார நிறுவனம் புத்தாயிரம் ஆண்டில் முன்னேற்றத்தின் குறிக்கோள் என்று 10 கருத்துகளை அறிவுறுத்தியிருக்கிறது. அதில் மூன்றாவது குறிக்கோளாக பெண்களுக்கு சம உரிமை மற்றும் பெண்கள் மேம்பாடு என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது வெற்றிகரமாக நடந்தேறினால் இரட்டை அறுவடை பயன் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது! ஒரே கல்லில் இரண்டு மாங்காய்கள்!
ஆண்-பெண் சமத்துவத்தின் இரட்டைப் பலன்கள் என்பதை 2007ன் கருத்தாக ஐக்கிய நாடுகள் குழந்தைகள் அமைப்பு யுனிசெப் வலியுறுத்துகிறது.
2007ம் ஆண்டு சர்வதேச மகளிர் தினத்தின் கருத்து – மகளிருக்கு இழைக்கப்படும் வன்கொடுமைகளுக்குச் சட்டப்படி ஒரு முடிவு என்பதாகும்.
உலக அளவில் பெண்களுக்கு சம உரிமை பெரிய அளவில் பேசப்பட்டாலும் கோடிக்கணக்கான பெண்களின் நிலை பரிதாபத்திற்குரியதாக இருப்பது உள்ளங்கை நெல்லிக்கனியாகத் தெரிகிறது. சிறு வயதில் திருமணம், தாய்மார்கள் இறப்பு, செய்யும் வேலைக்கு குறைவான சம்பளம், உடல் மற்றும் பாலியல் ரீதியான கொடுமைகள், பணி இடத்தில் இகழ்ச்சி, தகுந்த பாதுகாப்பும், நீதியும் கிடைக்காத நிலை என்ற பற்பல அம்புகள் ஒரே நேரத்தில் பெண்களைத் தாக்குகின்றன.
இரட்டைப்பலன் எப்படிக் கிடைக்கும்? ஆரோக்கியமான, படித்த, சக்தி படைத்த பெண்ணுக்கு ஆரோக்கியமான, அறிவுள்ள, திட சிந்தனையுள்ள, மகனும், மகளும் அமைவார்கள்! அந்தப் பெண்ணிற்கு குடும்பத்தில் முடிவு எடுக்கும் உரிமை இருந்தால் குடும்பத்தின் ஊட்டச்சத்து, நல்வாழ்வு, மருத்துவ சேவைகளைத் தகுந்த நேரத்தில் அடைதல், பொருளாதார மேம்பாடு என்ற பலவிதமான பயன்கள் கிடைக்கின்றன.
ஒரு பெண்ணின் வாழ்க்கையில் ஒவ்வொரு படியிலும் சிக்கல்களும் போராட்டங்களும்தான்! இந்த பாரபட்சம் பிறக்கும் முன்பே ஆரம்பித்து இறுதிநாள் வரை தொடர்கிறது. பெண் கருக்கலைப்பு, பெண் சிசுக்கொலை. இது இந்த நூற்றாண்டில் மிகப்பெரிய தீமை!
பெண் குழந்தைகளுக்குத் தொடக்கக் கல்வி கூட முழுமையாகக் கிடைக்கவில்லை. தொடக்கப்பள்ளியில் சேரும் 5 பெண்களில் ஒரு பெண்ணுக்கு ஆரம்பக் கல்விகூட கிடைப்பதில்லை. அவள் 5ஆம் வகுப்பு வருவதற்குள் பள்ளியில் இருந்து நிறுத்தப்படுகிறாள். 15 சதவீதம் பெண்கள் மட்டுமே கல்லூரி படிப்புக்குச் செல்கிறார்கள்!
18 வயதிற்குக் குறைவான பெண்ணுக்குத் திருமணமும், குழந்தைப் பிறப்பும் சட்டப்படி தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் 30 சதவீதம் பெண்களுக்கு முதல் குழந்தை 18 வயதிற்குக் கீழ் பிறந்து விடுகிறது. கருப்பை மற்றும் இடுப்பு எலும்புகள் முழு வளர்ச்சி அடையாத நிலையில், வாழ்க்கையை எதிர்கொள்ள உரிய மனமுதிர்ச்சியும் அடையாத பெண்ணுக்குக் குழந்தை பிறப்பு! இதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் மரணம் அடைவது அதிகமாகிறது.
தாய் கருவுற்ற சமயத்தில் இரண்டு உயிர்களுக்கு ஊட்டச்சத்துக் கிடைக்காததால் தாய் மேலும் உடல் மெலிந்து அடிக்கடி நோய்வாய்ப்படுகிறாள். அந்தத் தாய்க்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது. குழந்தை எடை குறைவாக, குறைமாதமாக, எதிர்கால வளர்ச்சித் திறன் குறைவாகப் பிறக்கிறது. அந்தக் குழந்தை பெண் குழந்தையானால், வளர்ச்சி குறைவாக எதிர்ப்பு சக்தி இல்லாத, ஒல்லியான பெண்ணாக வளர்ந்து அது பேறு காலத்தை எட்டும்போது நிறைய இன்னல்களை அனுபவிக்க வேண்டி வருகிறது. இது ஒரு தொடர்பிரச்சினையாகி விடுகிறது.
ஒவ்வோர் ஆண்டும் 5 லட்சம் பெண்கள் தாய்மைப்பேற்றின்போது இறக்கிறார்கள்! அதாவது ஒரு நிமிடத்திற்கு ஒரு தாய்! வளர்ந்து வரும் ஏழை நாடுகளில் இந்த இறப்பு இன்னும் அதிகம்! 2000-ம் ஆண்டில் உலக அளவிலான தாய்மார்கள் இறப்பில் 25 சதவீதம் இந்தியாவில். என்ன கொடுமை!
வளர்ந்த நாடுகளில் 4 ஆயிரம் தாய்க்கு ஒரு தாய் என்ற அளவில் இறக்கிறார்கள்! அடிப்படை பேறுகாலக் கவனிப்பு இருந்தாலே இந்த இறப்புகளைப் பெரிய அளவில் தவிர்க்க முடியும்! தாய் இறந்த பிறகு அந்தக் குழந்தைகளிடையே இறப்பு விகிதம் அதிகம்தான் என்கிறது ஒரு புள்ளிவிவரம்.
வயது முதிர்ந்த பிறகு பெண்களுக்குப் பிரிவினையும், பாகுபாடும் தொடர்கிறது. இயற்கையாகவே பெண்கள் அதிக நாள்கள் உயிர் வாழ்கிறார்கள். வயது முதிர்ந்து உழைக்கத் திறனின்றி, வருவாய்க்கும் வழியின்றி, நோய்நொடியுடன், கடமைக்கு உணவு அளிப்பவர் மத்தியில் வாழும் முதிய பெண்மணிகள் மனத்தளவில் இறந்தவர்கள் தான். அரசு மூலமும், சட்டரீதியாகவும், இவர்களுக்கு பாதுகாப்பு குறைவு!
எங்கெங்கு ஆணுக்குச் சரிநிகர் சமமாகப் பெண்கள் நடத்தப்பட வேண்டும்?
வீட்டுப்பொறுப்புகளில், வீட்டை நிர்வகிப்பதில், வீட்டு நிதி நிர்வாகத்தில் மகளிருக்கு சம உரிமை இருக்குமானால், வேலைக்குத் தகுந்த கூலி பெண்களுக்கும் கிடைக்குமானால், அவளது குடும்பம் மேன்மேலும் உயரும். தான் ஈட்டிய பணத்தை எப்படிச் செலவிடுவது, குழந்தைகளுக்கும் கணவருக்கும், முதியவர்களுக்கும், தகுந்த பாதுகாப்பு, குழந்தைகளுக்கு நல்ல படிப்பு, எதிர்காலச் சேமிப்பு போன்ற எல்லா கோணங்களிலும் பெண்களின் பங்களிப்பு இருந்தால் குடும்பம் உயர்வடையும்.
பெண்கள் அரசியலில் இருந்தால் நாட்டின் அமைதி, பாதுகாப்பு, வளமை வலுப்பெறுகிறது என்பதும், நாட்டில் அமைதிப் பேச்சு வார்த்தையில் பெண்கள் இருந்தால் அதன் முடிவு நாட்டிற்குச் சாதகமாக இருக்கிறது என்றும் நிரூபித்து இருக்கிறார்கள். என்று அடங்கும் இந்த ஆண்களின் ஆதிக்கம்?
பெண்களுக்கு சம உரிமை மறுக்கப்படுவதும், அவர்களைக் குறைவாக மதிப்பிடுவதும் உலக அளவில் ஒன்றாகத்தான் இருக்கிறது!
உலக அளவில் 150 நாடுகளில் எடுக்கப்பட்ட ஒரு கணக்கெடுப்பின்படி ஆண்களின் கருத்து என்ன தெரியுமா? ஆண்கள் தான் சிறந்த அரசியல் தலைவர்களாகச் செயலாற்ற முடியுமாம்! நிறைய பணியிடங்களில் ஆண்கள்தான் அமர்த்தப்பட வேண்டும். பணி வாய்ப்புகள் குறைவாக இருக்கும்போது ஆண்களுக்கு முன்னுரிமை தரப்பட வேண்டும். பெண்களைவிட பல்கலைக்கழகப் படிப்பு ஆண்களுக்குத்தான் முக்கியம்.
இந்த நிலை என்று மாறும்?
7 முக்கிய அம்சங்கள் மூலமாக பெண்களுக்குச் சம உரிமை என்ற குறிக்கோளைப் படிப்படியாக அடையலாம் என்று உலகளாவிய அமைப்புகள் தெரிவிக்கின்றன.
கல்வி, பொருளாதாரச் சீரமைப்பு, சட்டங்கள், ஆட்சியில் அதிக பங்கு, பெண்கள் முன்னேற்றத்தில் ஆண்களை ஈடுபடுத்துதல், பெண்களே பெண்களின் ஆக்கசக்தியை ஊக்குவித்தல், தேவைப்பட்ட அளவு ஆராய்ச்சிகளும், புள்ளிவிவரங்களும் சேகரித்து – அதன் அடிப்படையில் முன்னேற வழி வகுத்தல், திட்டமிடுதல். பெண்களுக்குச் சம உரிமை வழங்கப்பட்டால் பெண்களின் திறன் அதிகரிக்கும்! பெண்களின் திறன் அதிகரித்தால்தான் குழந்தைகளுக்கு நல்வாழ்வு கிட்டும். இது இரட்டிப்புப் பலன் அல்லவா?
பெண்களின் சக்தியை ஓங்க வைத்து, அதைத் தகுந்த அளவில் பயன்படுத்தினாலன்றி, எந்த ஒரு சமுதாயமும், நாடும், நிலைத்த, நீடித்த வளர்ச்சியை அடைய முடியாது. பொருளாதார முன்னேற்றத்திற்கும் பெண்கள், குழந்தைகள் முன்னேற்றத்திற்கும் பெண்களுக்கு சம உரிமை அளிப்பதைத் தவிர வேறு ஓர் ஆயுதம் இருக்க முடியாது!
கொள்கைகளை ஏற்படுத்தி, அறிவித்து கூட்டங்கள் நடத்துவதால் மட்டும் பெண்கள் முன்னேற்றம் கைகூடி விடாது. பெண்களுக்கு நல்ல கல்வி, அரசில் பங்கு, பொருளாதார மேம்பாட்டிற்கான வாய்ப்புகள், நல்ல மருத்துவ சேவைகள், உடல் மற்றும் மனரீதியான சட்டப் பாதுகாப்பு கிடைக்கும் நாள் எந்நாளோ, அந்தப் பொன்னான நாளில் தான் பெண்கள் மற்றும் குழந்தைகளின் நல்வாழ்விற்கு ஏற்ற உலகம் அமையும்.
(கட்டுரையாளர்: பேராசிரியர், தஞ்சை மருத்துவக் கல்லூரி, தஞ்சாவூர்).