Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Saravana Stores – Buy stuff & get beaten up: Intrusive surveillance

Posted by Snapjudge மேல் ஜூலை 26, 2007

குமுதம் ரிப்போர்ட்டர்

சரவணா ஸ்டோர்ஸ் பயங்கரம்

ீஇங்கே  பொருள்களோடு அடி, உதையும் கிடைக்கும்

29.07.07  ஹாட் டாபிக்

தி.நகர் ரங்கநாதன் தெரு என்றாலே அங்கே திருவிழாக் கூட்டம் போல திரளும் மக்கள் நெரிசல்தான் நம் நினைவுக்கு வரும். அந்த ரங்கநாதன் தெருவில் பலதரப்பட்ட கடைகள். ‘எங்கள் கடையில் இல்லாத பொருட்களே இல்லை. எல்லாமே கிடைக்கும்’ என்று அங்குள்ள சில பிரபல கடைகள் பெரிதாக நீட்டி முழக்கும். அந்த, ‘எல்லாமே கிடைக்கும்’ என்பதில் ‘அடிஉதை’ என்பதையும் இனிமேல் சேர்த்துக் கொள்ள வேண்டும் போலிருக்கிறது.

அண்மையில் தி.நகர், ரங்கநாதன் தெரு சரவணா ஸ்டோர்ஸ் ஊழியர்கள், இலங்கைத் தமிழர் ஒருவர் மீது கண்மூடித்தனமான தாக்குதலை நடத்தி, அவரை கை, மற்றும் முதுகுப் பகுதியில் ரத்தக் கட்டுகளை ஏற்படுத்தி, மருத்துவமனையில் படுக்க வைத்து விட்டனர். இந்த விவரம் மீடியாக்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்த, இதுபற்றி நாமும் விறுவிறு விசாரணையில் இறங்கினோம்.

சரவணா ஸ்டோர்ஸ் ஊழியர்களால் தாக்கப்பட்ட இலங்கைத் தமிழரின் பெயர் இளஞ்செழியன். கடந்த பத்தாண்டுகளாக லண்டனில் குடும்பத்துடன் வசிக்கும் இவர், ‘விடுமுறையில் சென்னைக்கு வந்த இடத்தில்தான் இப்படியரு விபரீதம்.

மருத்துவமனையில் இளஞ்செழியனை சந்தித்துப் பேசினோம். நடந்த சம்பவங்களை நம்மிடம் விவரித்தார் அவர்.

‘‘நான் இலங்கைத் தமிழன். தமிழ்நாடு மீதும் தமிழர்கள் மீதும் கொண்ட பற்று காரணமாக பல ஆண்டுகளுக்கு முன் சென்னைக்கு வந்து செட்டிலானேன். நந்தனம் கல்லூரியில் படித்து பட்டம் பெற்றேன்.

லண்டனில் கடந்த பத்து ஆண்டுகளாகக் குடும்பத்துடன் தங்கியிருந்து வியாபாரம் செய்து வருகிறேன். விடுமுறையைக் கழிக்க கடந்த ஜூன் மாதம் 25_ம் தேதி மனைவி சுதர்ஷினி, மகள்கள் நளாயினி, சிந்து ஆகியோருடன் சென்னை வந்தேன். கடந்த 21_ம் தேதி (சனிக்கிழமை) மீண்டும் லண்டன் கிளம்ப ஆயத்தமானோம். விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்த நிலையில் குழந்தைகளுக்கு விளையாட்டுப் பொருட்களை வாங்க 20_ம் தேதியன்று, இரவு ரங்கநாதன் தெரு சரவணா ஸ்டோர்ஸ§க்குச் சென்றோம்.

குழந்தைகளுக்கு பொம்மை, துணிமணிகள் உள்பட பத்தாயிரம் ரூபாய் வரை பொருட்கள் வாங்கினோம். அப்போது என் மூன்று வயது மகள் நளாயினி கடையில் இருந்த ஒரு பந்தைக் காட்டி அதைக் கேட்டாள். அங்கிருந்த ஊழியர் என் மகள் கையில் பந்தைக் கொடுத்தார்.

அந்தப் பந்துக்கான பத்து ரூபாயைச் செலுத்தி ரசீதையும் என் மனைவி வாங்கிக் கொண்டாள். பின்னர் அங்கிருந்து நகர்ந்து கீழ்த்தளத்துக்கு வந்தோம்.

அப்போது என் மகளை நான் தூக்கி வைத்திருந்தேன். அவள் கையில் இருந்த பந்தைப் பார்த்து ஓர் ஊழியர் எங்களை வழிமறித்து ‘குழந்தையின் கையில் இருக்கும் பந்துக்குப் பணம் செலுத்தி விட்டீர்களா?’ என்று கேட்டார். என் மனைவி பணம் செலுத்தி விட்டதைக் கூறி கையில் இருந்த ரசீதையும் காட்டினாள். அப்போது திடீரென அங்கு வந்த மற்றொரு ஊழியர் என் மகளிடம் இருந்த பந்தை வெடுக்கென பிடுங்கிக் கொண்டு போய் விட்டார்.

பந்து பறிபோனதால் என் மகள் சத்தமிட்டு அழுதாள். உடனே ‘‘ஏன் இப்படி நடந்து கொள்கிறீர்கள்? குழந்தையிடம் பந்தை திருப்பிக் கொடுங்கள்!’’ என்று நான் சத்தம் போட்டேன்.

மறுநிமிடம் என் பின்னால் இருந்து ஓர் ஊழியர் என்னை ‘மடேர்’ என்று தலையில் அடித்து விட்டார். நான் மகளை கீழே இறக்கி விட்டுத் திரும்ப முயன்றேன். அதற்குள் மற்றொரு ஊழியர் என்னைக் கீழே தள்ளினார். நான் எழுந்திருக்க முயல்வதற்குள் பத்துப்பேர் கும்பலாகச் சேர்ந்து என்னை நையப் புடைத்தார்கள். கையில் கிடைத்த எவர்சில்வர் பாத்திரங்களை எடுத்து என் கை, முதுகு, கழுத்து என அடிக்க ஆரம்பித்தனர். நான் தாக்கப்படுவதைப் பார்த்து என் மகள் நளாயினி பயத்தில் வாந்தியெடுத்து விட்டாள்.

என் மேல் விழுந்த அடிகளைத் தடுக்க முயன்ற என் தந்தையும், மருத்துவருமான சண்முகநாதனை வயதானவர் என்று கூடப் பார்க்காமல் தள்ளி விட்டனர். அங்கிருந்த மற்ற வாடிக்கையாளர்கள் வாக்குவாதம் செய்து எங்களை மீட்டனர்.

கடைக்கு வெளியே என்னை அவர்கள் அழைத்து வந்தனர். முதுகில் கடுமையான வலி இருந்ததால் சட்டையைக் கழற்றிப் பார்த்தேன். ரத்தக்கட்டுகளும், காயங்களும் இருந்தன. அதைப் பார்த்து சக வாடிக்கையாளர்கள் கொதித்துப் போய்விட்டனர். என் மனைவி ஏறத்தாழ மயக்கம் போட்டுவிழும் நிலைக்கு வந்துவிட்டாள். உடனே நான் செல்போன் மூலம் போலீஸ் கண்ட்ரோல் ரூமுக்கு தகவல் சொன்னேன். சற்று நேரத்தில் மாம்பலம் போலீஸார் அங்கே வந்து என்னை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

என் காயங்களைப் பார்த்த போலீஸார் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு என்னை அழைத்துச் சென்றனர். அதற்குள்ளாக போலீஸாருக்கு எங்கிருந்தோ போன் வந்துவிட ‘இதைப் பெரிதுபடுத்த வேண்டாம். இப்படியே விட்டுவிடுங்கள்’ என்று போலீஸார் என்னிடம் காம்ப்ரமைஸ் செய்ய முயன்றார்கள்.

அதற்கு நான் ஒப்புக்கொள்ளவில்லை. ‘இனிமேல் தமிழ்நாட்டில் யாருக்கும் இப்படியரு சம்பவம் நடக்கக்கூடாது. வழக்குப்பதிவு செய்யுங்கள்’ என்று கண்டிப்பாகக் கூறினேன். அதன் பிறகுதான் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்தார்கள்.

இந்தச் சம்பவம் மீடியாக்களில் வெளிவந்த பிறகு ஏராளமானோர் என்னைத் தொடர்பு கொண்டு ‘நாங்களும் சரவணா ஸ்டோர்ஸ் ஊழியர்களால் இப்படி பாதிக்கப்பட்டுள்ளோம்’. ஆனால் நீங்கள்தான் தைரியமாக போலீஸ்வரை போய் புகார் கொடுத்திருக்கிறீர்கள்’’ என்று எனக்கு பாராட்டுத் தெரிவித்தனர்.

பத்தாயிரம் ரூபாய்க்குப் பொருள் வாங்கும் நான், பத்து ரூபாய் கொடுத்து பந்து வாங்க மாட்டேனா? என்னைப் பார்த்தால் பந்து திருடுபவன் மாதிரியா இருக்கிறது? அப்படியே இருந்தாலும் எடுத்த எடுப்பில் ஒருவர் மீது கை வைக்கலாமா? லண்டனில் ஒரு போலீஸ்காரர் கூட சாதாரண ஆளை இப்படிப் போட்டு துவைத்து விட முடியாது. அப்படித் தாக்கினால் நாடு முழுவதும் கண்டனக் குரல்கள் எழும்’’ என்றார் அவர் வேதனையுடன்.

இளஞ்செழியன் அளித்த புகாரைத் தொடர்ந்து அவரைத் தாக்கியதாக கடை மேலாளர் லிங்கராஜன், ஊழியர்கள் வைகுண்ட பெருமாள், மூர்த்தி, சிவக்குமார், பாலமுருகன், ஜெகன், தம்பிராஜ் என்ற ஏழு பேரை மாம்பலம் போலீஸார் கைது செய்துள்ளனர்.

சரவணா ஸ்டோர் சம்பவம் பற்றி சென்னையைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர் ஒருவரிடம் பேசினோம். பெயர், விவரம் வேண்டாம் என்ற கோரிக்கையுடன் பேசிய அவர், ‘தி.நகரில் உள்ள ஒரு சில கடைகளில் இது போன்ற அடிஉதை சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. அந்தக் கடைகளுக்கு வரும் எல்லோரையும் தராதரம் இல்லாமல், திருடர்களாகவே பார்க்கிறார்கள். பெண் வாடிக்கையாளர்கள் மீது சந்தேகம் வந்தால் அவர்களை சோதனை போடவேண்டும் என்று ஆண் ஊழியர்கள் மிரட்டும் சம்பவங்களும் நடந்துள்ளன.

பெரிய கடைகளில் பொருட்கள் திருட்டுப் போவதைத் தடுக்க நவீன தொழில்நுட்ப வசதிகள் வந்துவிட்டன. ஆனால் அவற்றின் விலை அதிகம் என்பதால் இந்த மாதிரி கடைகள் வாங்குவதில்லை.

‘மாம்பலம் காவல் நிலையமும் இதைக் கண்டுகொள்வதே இல்லை. இந்த காவல் நிலையத்தில் பணியாற்றுபவர்களுக்கு மாதச் சம்பளத்தைவிட பலமடங்கு அதிக பணம் மாமூலாகக் கடைகளில் இருந்து கிடைத்து விடுகிறது. அதோடு விசேஷ நாட்கள் வந்தால் வீட்டுக்குத் தேவையான இனிப்பு, டிரஸ் எல்லாம் இலவசமாகக் கிடைத்துவிடுகிறது. அப்புறம் அவர்கள் ஏன் கடைக்காரர்களைத் தட்டிக்கேட்கப் போகிறார்கள்?

இப்படிப்பட்ட சில போலீஸாரின் துணை இருப்பதால்தான் கடை ஊழியர்கள் தெனாவெட்டாக நடந்து கொள்கிறார்கள். பூனைக்கு மணி கட்டும் வேலையை லண்டனில் இருந்து வந்த ஓர் இலங்கைத் தமிழர் செய்துள்ளார். இனியாவது இந்த அத்துமீறல்களுக்கு ஒரு முடிவு ஏற்பட வேண்டும்’’ என்றார்.

இளஞ்செழியன் விவகாரம் பற்றி தி.நகர் துணை ஆணையர் லட்சுமியிடம் கேட்டோம்.

‘‘நடந்த சம்பவத்தில் உரிய விசாரணை நடத்தி ஏழு பேரைக் கைது செய்துள்ளோம். தி.நகர் கடைகளுக்கு போலீஸார் ஆதரவாகச் செயல்படுவதாக இனி புகாரே வராது. அதன் ஆரம்பமாகத்தான் இளஞ்செழியனைத் தாக்கியவர்களைக் கைது செய்திருக்கிறோம்’’ என்றார் அவர்.

சரவணா ஸ்டோர் தரப்பிடம் பேச முயன்றோம். அவர்கள் சர்வ மௌனமாகி விட்டார்கள். நம்மிடம் எதுவும் பேச முன்வரவில்லை.

‘எங்கள் கடையில் எல்லாம் கிடைக்கும்’ என்பதற்கு அடி உதைகளும் உண்டு என்று அர்த்தப்படுத்திக் கொள்ள வேண்டும்போல் இருக்கிறது.

படங்கள்: ஞானமணி.
– வே. வெற்றிவேல்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: