Gauri Narayan chat – Dinamani Kathir
Posted by Snapjudge மேல் ஜூன் 29, 2007
மேடை: எல்லோருக்குள்ளும் காட்டுத் தீ!
பத்திரிகையாளர், நாடக ஆசிரியர், இயக்குனர், மொழிபெயர்ப்பாளர் என கெüரி ராம்நாராயணுக்குப் பல முகங்கள். விஜய் டென்டுல்கர் மராட்டிய மொழியில் எழுதிய கன்யாதான், மித்ராட்சிகோஷ்ட் ஆகிய நாவல்களை ஆங்கிலத்தில் எழுதியிருக்கிறார். கல்கியின் பன்னிரண்டு சிறுகதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார். இதுதவிர சிறுவர்களுக்கான எண்ணற்ற சிறுகதைகள் எழுதியிருக்கிறார். “ஜஸ்ட் அஸ்’ ( JustUs) என்னும் பெயரில் நமது கலை, பண்பாட்டு வடிவங்களை மற்ற மாநிலங்களில் இருக்கும் மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் ஆங்கில நாடகமாக அரங்கேற்றி வருகிறார். இவரின் இயக்கத்தில் உருவான கருப்பு குதிரை என்னும் ஆங்கில நாடகம், இந்தாண்டுக்கான தில்லி, மகேந்திரா தியேட்டர் எக்ஸசலன்சி அவார்டைப் பெற்றிருக்கிறது. இம்மாதம் 29, 30 மற்றும் ஜூலை 1 ஆகிய மூன்று நாட்களும் சென்னை, மியூசியம் தியேட்டரில் அரங்கேற இருக்கிறது. (தன்னைப் பற்றி இவர் சொள்லிக் கொள்ளாத 3 சுவாரஸ்யமான தகவல்கள்.
1. இவர் கல்கியின் பேத்தி,
2. இசை மேதை எம்.எஸ்.ஸின் சிஷ்யை,
3. முன்னாள் ரஞ்சி கிரிக்கெட் தாரகை ராமநாராயணனின் மனைவி.)
இவரின் மூன்றாவது நாடகமான “காட்டுத் தீ’ (). இதற்கு முந்தைய நாடகங்களைப் பற்றியும், தற்போதைய காட்டுத் தீ குறித்தும் கெüரி ராம்நாராயன் நம்மிடம் பேசியதிலிருந்து…
“”ஜஸ்ட் அஸ் நாடகக் கம்பெனியை 2005-ல் ஆரம்பித்தோம். எங்களுடையது மிகச் சிறிய குழுதான். மனித நேயத்தை, நமது பாரம்பரியமான கலை வடிவங்களை நாடகத்தின் மூலம் வெகுஜன மக்களுக்குக் கொண்டு செல்வதுதான் எங்களின் நோக்கம். என்னைப் பொறுத்தவரை தமிழர், மராட்டியர், வங்காளியர் என்ற பேதமெல்லாம் கிடையாது. எங்களின் முதல் நாடகமே புகழ்பெற்ற மராட்டியக் கவிஞரான அருண் கோலெட்கர் பற்றியதுதான். அவருக்கு விளம்பர வெளிச்சமே பிடிக்காது. அதை அவர் வாழ்நாளில் விரும்பியதே இல்லை. அவரை தமிழ்ப் பத்திரிகையாளர் ஒருவர் சந்தித்து உரையாடினால் எப்படி இருக்கும்? இந்த சுவாரஸ்யமான கற்பனையின் நாடக வடிவம்தான் எங்கள் “கருப்புக் குதிரை’. நிறையப் பேர் என்னிடம், “ஏன் மகாகவி பாரதியை நீங்கள் கோலெட்கருக்குப் பதிலாக நினைத்துப் பார்க்கவில்லை என்று கேட்டார்கள்?’
“”பாரதியும் நமக்குச் சொந்தம்தான். கோலெட்கரும் நமக்குச் சொந்தம்தான்.” என்று என்னிடம் கேட்டவர்களுக்கு நான் விளக்கமளித்தேன். கருப்புக் குதிரை சிறந்த இசையமைப்புக்கான விருதையும், சிறந்த நாடகத்துக்கான விருதையும் சமீபத்தில் வென்றிருக்கிறது.
கல்கியின் “கணையாழியின் கனவு’ என்னும் சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு “ரூரல் ஃபேன்டசி’ என்னும் ஆங்கில நாடகத்தை அரங்கேற்றினோம். சுதந்திரப் போர் நாடெங்கும் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தாலும், அதைப்பற்றியெல்லாம் அக்கறையில்லாமல் வாழ்ந்தவர்களும் அந்தக் காலத்தில் இருந்திருப்பார்கள். தஞ்சாவூரிலிருக்கும் ஒரு கிராமத்தில் அப்படிப்பட்ட மக்களுக்கு, சாந்திநிகேதனிலிருந்து வரும் ஒரு பெண் சுதந்திர உணர்வை ஊட்டுவதுதான் கதை. சுதந்திர உணர்வை ஊட்டும் பாரதியார் பாடல்களையும், கல்கியின் பாடல்களையும் டி.எம். கிருஷ்ணாவும், சங்கீதாவும் பாடினர்.
நாங்கள் தற்போது மூன்றாவதாக அரங்கேற்றப் போகும் நாடகம்தான் “காட்டுத் தீ’. கல்கியின் “சிவகாமியின் சபதம்’ நாவலின் தாக்கம்தான் இந்த நாடகத்திற்கான கரு.
தன்னுடைய ஆட்சிக்குட்பட்ட பூமியை கலைக்கோயிலாக்க வேண்டும் என்று நினைத்த மகேந்திரபல்லவன், அதன் விளைவாகவே மாமல்லபுரத்தை நிர்மாணிக்கிறான். சிறந்த நாடக ஆசிரியரான மகேந்திரவர்மன் தன்னுடைய சமஸ்கிருத நாடகமான மத்தவிலாஸத்தில், “”மதச் சண்டை போடுபவர்களை விட பைத்தியக்காரன் உயர்ந்தவன்” என்று கமென்ட் அடித்திருப்பார். இன்றைக்கும் “சிவகாமியின் சபதம்’ நாவலைப் படிப்பவர்களுக்கு நிறைய விஷயங்கள் ஆச்சரியமாக இருக்கும்.
வாழ்நாள் முழுவதும் கலைத் தொடர்பான விஷயங்களுக்காகவே நேரம் செலவழித்த மகேந்திரவர்மன் இறக்கும் தறுவாயில் தன்னுடைய தளபதியான பரஞ்சோதியிடம் வாதாபியை தீக்கிரையாக்கும்படி சத்தியம் வாங்கிக் கொள்கிறார். சாத்வீகமான அவரின் மனதில் பொங்கிய அந்தக் காட்டுத் தீக்கான பொறி எங்கிருந்து வந்தது. யார் வைத்தது?
மாமல்லனுக்கு தோள் கொடுத்து வாதாபியை தீக்கிரையாக்கி மன்னனுக்கு தான் செய்துகொடுத்த சத்தியத்தை நிறைவேற்றிய பரஞ்சோதி, அதோடு தன் போர்த் தொழிலுக்கே விடை கொடுத்து, ஆன்மிகத்தின் பக்கம் ஒதுங்கி விடுகிறான். பரஞ்சோதியின் மனத்தில் அதுவரை கொழுந்து விட்டு எரிந்த பகைத் தீயை சட்டென்று அணைத்தது எது?
ஒரு வேகத்தில் சபதம் செய்துவிட்ட சிவகாமி நாளடைவில் இறைப் பணிக்காக தன்னை முழுவதுமாக ஈடுபடுத்திக் கொள்கிறாள். சிவகாமியின் இந்த மாற்றத்துக்கு எது காரணம்?
நம்மிடையே பிரிவினை என்ற காட்டுத் தீயை மூட்டித்தான் ஆங்கிலேயர்கள் நமது நாட்டையே பிடித்தனர். ஒற்றுமையாக நாம் வளர்த்த வேள்வித் தீயினால் அவர்களிடமிருந்து நாம் விடுதலை பெற்றுவிட்டோம். இப்போதும் நம்மிடையே காட்டுத் தீயாய் பல பிரிவினைகள். இவை எப்போது அணையும்?
-இதுபோன்ற கேள்விகளுக்கு இந்த நாடகத்தில் உங்களுக்கு பதில் கிடைக்கும் என்று நினைக்கிறேன். “நிறையப் பேர் என்னிடம் நாடகத்தை ஏன் நீங்கள் தமிழில் அரங்கேற்றுவதில்லை’ என்கிறார்கள். அவர்களுக்கு என்னுடைய பதில் இதுதான்: நல்ல தமிழில் பேசி நடிக்கும் நடிகர்களை எனக்குத் தெரியவில்லை. அப்படியொரு பத்து பேர் ரிகர்சலுக்கு வருவதற்குத் தயாராக இருக்கிறார்கள் என்றால் நான் தமிழிலும் நாடகம் எழுதுவதற்குத் தயார்.
இன்னொரு விஷயம், நான் ஆங்கிலத்தில் நாடகம் போட்டாலும் தென்னிந்தியாவின் கலை வடிவங்களை, அது பாடலாக இருக்கட்டும், இசை, நடனமாகட்டும் அதை அப்படியேதான் பயன்படுத்துகிறேன். உடையில்கூட நான் காம்ப்ரமைஸ் செய்து கொள்வதில்லை. இந்த நாடகத்தில் கூட சிறந்த நடனமணிகளான மைதிலி பிரகாஷ், பிரியதர்ஷினி கோவிந்த் ஆகியோர்தான் இளவயது, நடுவயது சிவகாமியாக நடிக்கிறார்கள். இந்தியா முழுமைக்குமான பொது மொழியாக இன்றைக்கு ஆங்கிலம் தானே இருக்கின்றது. ஆங்கிலத்தில் நாடகத்தைப் போட்டால், அது மராட்டிய கவியைப் பற்றியதாக இருந்தாலும் சென்னை ரசிகனால் அதில் ஈடுபட முடியும். மகேந்திரவர்ம பல்லவனைப் பற்றியதாக இருந்தாலும் மராட்டிய ரசிகரால் அதில் ஈடுபட முடியும். கருத்துதானே முக்கியம்!
ரவிக்குமார்
This entry was posted on ஜூன் 29, 2007 இல் 9:44 பிப and is filed under Author, Children, Faces, Flame of the forest, Hindu, Kalki, Kids, Literature, MS, people, profile, Tamil, Translator, Women, Works, Writer. You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, அல்லது trackback from your own site.
மறுமொழியொன்றை இடுங்கள்