Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Dalai Lama’ Category

Diplomatic tangle over Dalai Lama: Ministers absent at “Peace Pilgrim Award”, instituted by the Gandhi Foundation USA

Posted by Snapjudge மேல் நவம்பர் 5, 2007

தன்னம்பிக்கை இல்லாத அரசு!

ஒரு நாட்டுடன் நட்புறவு வேண்டும் என்பதற்காக அந்த நாட்டின் கொள்கைகளையும், அந்த நாட்டு அரசு செய்யும் தவறுகளையும் கண்களை மூடிக்கொண்டு ஆதரிப்பதோ, கண்டும் காணாமலும் இருப்பதோ ஒரு நல்ல வெளியுறவுக் கொள்கைக்கு அழகல்ல. இந்தியா இப்போது கடைப்பிடித்து வரும் வெளியுறவுக் கொள்கை அத்தகையதுதான் என்பதை மியான்மர், இலங்கை, சீனா மற்றும் பாகிஸ்தானின் செயல்பாடுகள் குறித்து நமது அரசு கடைப்பிடித்து வரும் மௌனம் தெளிவாக்குகிறது.

ஐம்பதுகளில் சீனாவுடன் இந்தியா மிகவும் நெருக்கமான உறவு வைத்துக் கொண்டிருந்த நேரம். அப்போது சீனா தனது அண்டை நாடான திபெத் மீது படையெடுத்து அந்த நாட்டைத் தனது நாட்டுடன் இணைத்துக்கொண்டபோது அதற்கு எதிராக முதல் குரல் கொடுத்தவர் அன்றைய இந்தியப் பிரதமர் பண்டித ஜவாஹர்லால் நேருதான் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. அதுமட்டுமல்ல, சீன அரசின் எதிர்ப்பையும் மீறி, திபெத்திலிருந்து தப்பி ஓடிவந்த தலாய் லாமாவுக்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் ஜவாஹர்லால் நேரு அரசு அடைக்கலம் அளித்தது மட்டுமல்ல, இந்தியாவிலிருந்து தலாய் லாமா தலைமையில் ஒரு திபெத்திய அரசு செயல்படவும் அனுமதித்தது.

பண்டித நேருவின் காலம் தொடங்கி இதற்கு முந்தைய வாஜ்பாயி தலைமையிலான அரசு வரை, அத்தனை பிரதமர்களும் கட்சி வேறுபாடின்றி தலாய் லாமாவை மதித்தார்கள். திபெத் மக்களின் சுதந்திர உணர்வுக்கும், அவர்கள் மீண்டும் தங்களது நாட்டை சீனாவிடமிருந்து திரும்பப் பெறுவதற்கும் இந்தியா தனது தார்மிக ஆதரவை அளிக்கத் தவறவில்லை. அமெரிக்க எதிர்ப்பு, ரஷிய எதிர்ப்பு, சீன எதிர்ப்பு என்று பிரச்னைகளை அணுகாமல், பிரச்னைகளின் அடிப்படையில் மட்டும்தான் இந்தியாவின் அணுகுமுறை இருந்து வந்திருக்கிறது. அதுதான், உலக அரங்கில் இந்தியாவுக்குத் தனி மரியாதையையும் கௌரவத்தையும் பெற்றுத் தந்திருக்கிறது.

உலக அரங்கில் மதிக்கப்படும் சமாதானத் தூதராக தலாய் லாமா திகழ்கிறார். நோபல் பரிசு உள்பட உலகத்தின் மிகப்பெரிய கௌரவங்கள் அவருக்குத் தரப்பட்டிருக்கின்றன. சமீபத்தில், அமெரிக்க அரசின் கௌரவமான அமெரிக்க காங்கிரஸ் தங்கப்பதக்கம் அவருக்குத் தரப்பட்டிருக்கிறது. இதைப் பாராட்டும்வகையில் புதுதில்லியில், காந்தி சமாதான மையத்தின் (Gandhi Peace Foundation்) சார்பில் ஒரு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முன்னாள் பிரதமர் இந்தர்குமார் குஜ்ரால் மற்றும் தில்லி முதல்வர் ஷீலா தீட்சித்துடன் நாடாளுமன்ற உறுப்பினர்களும், மத்திய அமைச்சர்களும் இந்தப் பாராட்டு விழாவில் கலந்து கொள்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், ஐ.கே. குஜ்ரால் தவிர எந்த மத்திய அமைச்சரும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. அதற்குக் காரணம் அவர்களது அவசர வேலைகள் என்றால் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், யாரும் கலந்துகொள்ள வேண்டாம் என்று அமைச்சரவைச் செயலர் தகவல் அனுப்பி அவர்களைத் தடுத்திருப்பது ஏன் என்பதுதான் கேள்வி. இதற்குக் காரணம் கேட்டபோது, அமைச்சரவைச் செயலர் அலுவலகம் தந்திருக்கும் விசித்திரமான பதில், அதைவிட அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது. “சீனா கோபித்துக் கொள்ளும்’ என்பதுதான் அந்த பதில்.

சீனாவின் அதிருப்தியைச் சம்பாதித்துக் கொள்ளக்கூடாது என்பதற்காக நமது ஆதரவுடன் இந்தியாவில் தங்கி இருக்கும், உலகம் ஏற்றுக்கொண்ட சமாதானத் தூதரும், புத்த மதத்தின் மரியாதைக்குரிய மதத்தலைவருமான தலாய் லாமா அவமதிக்கப்படுவது என்ன நியாயம்? எல்லோருக்கும் நல்லவராக இருக்க வேண்டும் என்று நினைத்தால், தவறு என்று தெரிந்தாலும் மௌனமாக இருக்க வேண்டும். அப்படியொரு பலவீனமான நிலை இந்தியாவுக்கு ஏற்படக்கூடாது. அது பண்டித நேரு நமக்கு அமைத்துத் தந்த வெளியுறவுக் கொள்கைக்கு எதிரானது.

உணர்ச்சியே இல்லாத அரசாக இருக்கிறதே இந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு என்று சொல்வதா, இல்லை தன்னம்பிக்கை இல்லாத அரசு என்று இதைச் சொல்வதா?

Posted in Affairs, Alliance, America, Asean, Asia, BJP, Burma, China, Coalition, Commerce, Communism, Communist, Communist parties, Communist Party of India, Communist Party of India-Marxist, Communists, Cong (I), Cong(I), Congress, Congress (I), Congress Party, Congress(I), CPI, CPI (M), CPI(M), CPI(ML), CPI-ML, CPM, Dalai, Dalai Lama, Dalailama, Economy, Exports, Gandhi, Gandhi Peace Foundation, Govt, Imports, Myanmar, Nehru, PAK, Pakistan, Panchasheel, Peace, PM, Relations, Russia, SAARC, Sri lanka, Srilanka, Thalailama, Tibet, US, USA, World | Leave a Comment »

Chinese Premiere’s India Visit – Hu Jintao

Posted by Snapjudge மேல் நவம்பர் 20, 2006

உலகம் கவனிக்கும் ஒரு பயணம்

மு. இராமனாதன்

சீன அதிபர் ஹூ ஜின்டாவ் நவம்பர் 20 முதல், 4 தினங்களுக்கு இந்தியாவில் பயணம் மேற்கொள்கிறார். இதற்கு முன்பு சீன அதிபர் இந்தியா வந்தது பத்தாண்டுகளுக்கு முன்பு – 1996இல். சீனப் பிரதமர் வென் ஜியோபோ, 2005 ஏப்ரலில் மேற்கொண்ட இந்தியப் பயணத்திற்கு 20 மாதங்களுக்குப் பிறகு வருகிறார் ஹூ. ராஜீய உறவுகளில் இரு தேசத் தலைவர்கள் பரஸ்பரம் மாறி மாறிப் பயணம் மேற்கொள்வதென்பது ஓர் எழுதப்படாத விதி. இடையில் ஓர் இந்தியத் தலைவர் சீனாவிற்குச் செல்லாமல், இரு சீனத் தலைவர்கள் அடுத்தடுத்து இந்தியா வருவது இதுவே முதல் முறை. இது நல்லுறவின் வெளிப்பாடாகப் பார்க்கப்படுகிறது. இந்தப் பயணத்தின் போது ஹூ பல்வேறு துறைகளில் 12 ஒப்பந்தங்களில் கையொப்பமிடுவார். பிராந்திய வணிகம், முதலீட்டுப் பாதுகாப்பு போன்றவை அவற்றுள் முதன்மையானவையாக இருக்கும். மேலும், மாணவர் பரிமாற்றம், சுற்றுச்சூழல் அக்கறை, பரஸ்பர பண்டிகைக் கொண்டாட்டங்கள், விளையாட்டு போன்ற துறைகளிலும் கூட்டு முயற்சிகளைப் பிரதிபலிக்கிற ஒப்பந்தங்களிலும் அவர் கையொப்பமிடுவார். ஆனால், இந்த உற்சாகம் அரசியல் தளங்களிலும் எல்லைப் பிரச்சினைகளிலும் இருக்குமா? பிரச்சினைகள் ஆக்கபூர்வமாக விவாதிக்கப்படும்; தீர்வுகள் ஏற்படாவிடினும் திசை வழிகள் நிச்சயிக்கப்படும் என்கிற எதிர்பார்ப்பு சில நோக்கர்களுக்கு இருக்கிறது. ஆனால் ஹூவின் வருகைக்குச் சரியாக 5 தினங்கள் முன்பு, சீனத் தூதர் சன் யுக்ஸி “அருணாசலப் பிரதேசம் சீனாவிற்குச் சொந்தமானது’ என்று சொல்லியிருப்பது அந்த எதிர்பார்ப்புகளுக்கு ஏது செய்வதாக இல்லை. தெற்காசியாவின் நிலைத்தன்மைக்கு இரு தேசங்களின் பங்களிப்பும், அவற்றுக்கு இடையிலான இணக்கமும் முக்கியமானவை. ஆதலால் இந்தப் பயணம் சர்வதேச அளவில் கவனிக்கப்படுகிறது.

இவ்வாண்டு இந்திய – சீன நட்புறவு ஆண்டாக அனுசரிக்கப்படுகிறது. நண்பர்களுக்குள் ஒற்றுமை அதிகம். உலகின் அதிக மக்கள்தொகை கொண்டவை. பொருளாதாரச் சீர்திருத்தங்கள் மேற்கொள்பவை, வேகமாய் வளரும் வணிகமும் தொழிலும் மிக்கவை, மிகுதியும் கிராமப்புறங்களும் விவசாயிகளும் நிறைந்தவை. இரண்டு தேசங்களும் மிகப் பழைய பாரம்பரியங்களுக்குச் சொந்தமானவை. எனில் இரண்டு வேறுபட்ட நாகரிகங்களிலிருந்து கிளைத்தவை. முற்றிலும் வெவ்வேறான பாதைகளைக் கடந்து வந்தவை. மாறுபட்ட பின்புலங்களும், அரசியல் அமைப்புகளும் கொண்டவை.

சீனாவின் அபரிமிதமான வளர்ச்சி பல இந்தியர்களைக் கவர்ந்திருக்கிறது. இந்தியாவிற்கு மாதிரியாகவும், அதே நேரத்தில் போட்டியாகவும் விளங்குகிறது சீனா. சமீபகாலமாக இந்திய-சீன வணிகம் தழைத்து வருகிறது. பத்தாண்டுகளுக்கு முன்பு இரு தரப்பு வணிகத்தின் மதிப்பு ரூ. 500 கோடி. இதுவே 2005-இல் ரூ. 85,000 கோடியாக உயர்ந்தது. நடப்பு ஆண்டில் இது ரூ. 90,000 கோடியாகும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. 2010-இல் இதன் இலக்கு ரூ. 2.25 லட்சம் கோடியென நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

இந்த வணிகம் கடல் வழியாக மட்டுமே நடக்கிறது. தரைவழிப் போக்குவரத்திற்கும் வழி செய்யப்பட்டால் வணிகம் மேலும் செழிக்கும். இவ்வாண்டு ஜூலை மாதம் திறக்கப்பட்ட சிக்கிம் மாநிலத்தையும் சீனாவின் திபெத் சுயாட்சிப் பகுதியையும் இணைக்கும் நாதுல்லா கணவாய், அதற்கான அடிவைப்புகளுள் ஒன்று. 44 ஆண்டுகளாக மூடிக் கிடந்த கணவாய் திறக்கப்பட்டதை, இரு தேசங்களுக்கிடையே வளர்ந்து வரும் பரஸ்பர நம்பிக்கையின் அடையாளமாகப் பார்க்கலாம். எனினும் நாதுல்லா வழியாக இப்போது பரிமாறிக் கொள்ளப்படும் பொருள்கள் குறைவு. இப்போதைக்கு இதன் வணிக முக்கியத்துவத்தைக் காட்டிலும் அரசியல் முக்கியத்துவமே அதிகம். கணவாயையும் பெரு நகரங்களையும் இணைக்கும் சாலைகள் அமைக்கப்பட வேண்டும். சீனா இதைச் செய்து வருகிறது. இந்தியாவின் உள்கட்டமைப்பும் மேம்படுத்தப்பட வேண்டும். தலைவர்களின் உரையாடலில் நாதுல்லா இடம் பெறும்.

விவாதத்திற்கு வரக்கூடிய மற்றொரு பொருள்: இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம். இந்த ஒப்பந்தத்தைச் சீனாவின் ஊடகங்கள் விமர்சித்தன. தெற்காசியாவில் சீனாவின் வளர்ச்சியை ஈடு செய்வதற்காக, இந்தியாவை அமெரிக்கா பயன்படுத்துவதாக அவை குற்றஞ்சாட்டின. எனினும் சீன அரசு இதுவரை அதிகாரபூர்வமாகக் கருத்துத் தெரிவிக்கவில்லை. அமெரிக்க செனட் அவை, நவம்பர் 17-ஆம் தேதி ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் வழங்கியிருக்கிறது. ஒப்பந்தம் அமலுக்கு வரும் முன்பு கடக்க வேண்டிய பல கட்டங்களில் ஒன்று: 45 உறுப்பு நாடுகளைக் கொண்ட அணுசக்தி வழங்குவோர் குழுமம் இதை அங்கீகரிக்க வேண்டும். குழுமத்தின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவரான சீனாவின் ஆதரவை, இந்தச் சந்திப்பின் போது இந்தியா கோரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளையில் அணுசக்தி ஒப்பந்தங்களில் சீனாவும் பாகிஸ்தானும் நெருங்கி வருகின்றன. இந்தியாவில் 4 தினங்கள் தங்கும் ஹூ, பாகிஸ்தானில் ஒரு வாரம் தங்கவிருக்கிறார். இஸ்லாமாபாத், தமக்கு 600 மெகாவாட் சக்தியுள்ள 6 அணு உலைகளை அமைத்துத் தருமாறு பெய்ஜிங்கை வேண்டியிருக்கிறது. ஏற்கெனவே சாஷ்மா எனுமிடத்தில் 300 மெகாவாட் சக்தியுள்ள உலையொன்றை சீனா நிர்மாணித்துக் கொடுத்திருக்கிறது. இந்தச் சந்திப்பின் போது பாகிஸ்தானின் கோரிக்கையை ஹூ ஏற்பார் என்று தெரிகிறது. பாகிஸ்தானுடனான சீனாவின் அணுவிசை ஒத்துழைப்பு இந்தியாவிற்கு எதிரானதல்ல என்று சீனா சொல்கிறது. இந்தியா கவலையுடன் கவனித்து வருகிறது; அதேவேளையில் தனது உறவுகளை அமெரிக்காவுடனும் சீனாவுடனும் சமன் செய்தும் வருகிறது. மாறி வரும் சர்வதேச உறவுகளில் முதிர்ச்சியும் புரிதலும் தேவைப்படுகிறது.

ஆனால் கடந்த வாரம் இந்தியாவிற்கான சீனத் தூதர், தொலைக்காட்சி ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலில், இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களில் ஒன்றான அருணாசலப் பிரதேசத்தின் மீதான சீனாவின் உரிமையைக் குறித்துப் பேசியது முதிர்ச்சியைக் காட்டுவதாக இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே தெளிவாக வரையப்பட்ட, இரு தரப்பும் ஒப்புக்கொண்ட “எல்லைக்கோடு’ இல்லை. ஆனால் இரு தரப்பும் ஏற்றுக்கொண்ட “கட்டுப்பாட்டுக் கோடு’ இருக்கிறது. 1914-இல் பிரிட்டிஷ் அரசால் இந்தியாவிற்கும் திபெத்திற்கும் இடையே இமயமலைகளின் ஊடாக வரையப்பட்டதுதான் “மக்மோகன் கோடு’. இதுவே அருணாசலப் பிரதேசத்தையும் திபெத் சுயாட்சிப் பகுதியையும் பிரிக்கிறது. சீனா இதை ஏற்க மறுத்து வருகிறது. இவை ஒன்றும் புதிய செய்திகளில்லை. எனில் ஒரு தூதர், தனது அதிபர் அண்டை நாட்டில் கால் வைப்பதற்கு ஐந்து தினங்கள் முன்பு இதைப் பகிரங்கமாகப் பேசுவானேன்? பிற்பாடு பெய்ஜிங், பேச்சுவார்த்தைகளின் மூலம் சமரசம் எட்டப்பட வேண்டுமெனச் சொல்லி சூட்டைத் தணிக்க முயற்சித்தது.

எல்லைப் பிரச்சினை குறித்து இரு தரப்புக்கும் இடையே, பல தளங்களில் பல்வேறு பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. எனினும் ஒத்திசைவை எட்ட முடியவில்லை. எல்லைப் பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் உறவை மேம்படுத்த முடியாது என்று சிலர் கருதுகின்றனர். எல்லைப் பிரச்சினைகளை ஒதுக்கி வைத்துவிட்டு, தொழிலிலும் வணிகத்திலும் இணைந்து செயலாற்றி புதிய உயரங்களை எட்ட வேண்டுமென வேறு சிலர் கருதுகின்றனர்.

இந்திய-சீன உறவு பல ஏற்ற இறக்கங்களைக் கண்டு வந்திருக்கிறது. 1962 எல்லைப்போரின் கசப்புணர்வு பல ஆண்டுகளுக்கு நீண்டது. 1988-இல் ராஜீவ் காந்தியின் சீனப் பயணம், உறவுகளில் புதிய கதவுகளைத் திறந்தது. சீனப் பிரதமர் லீ பெங் (1991), நரசிம்ம ராவ் (1993), சீன அதிபர் ஜியாங் ஜெமின் (1996) என்று தலைவர்களின் விஜயங்கள் தொடர்ந்தன. 1998-இல் இந்தியா மேற்கொண்ட அணு ஆயுதச் சோதனையால் உறவுகளில் பின்னடைவு ஏற்பட்டது. எனில் 1999-இல் அப்போதைய வெளியுறவு அமைச்சர் ஜஸ்வந்த் சிங்கின் பயணத்தில், இரண்டு தேசங்களும் ஒன்றுக்கொன்று அச்சுறுத்தலாக இரா என்பது மீண்டும் உறுதி செய்து கொள்ளப்பட்டது. தொடர்ந்து நல்லுறவை வளர்க்கும் நடவடிக்கைகளும் சந்திப்புகளும் நடந்து வருகின்றன.

கடந்த இரண்டு ஆண்டுகளில் சீன அதிபர் ஹூ ஜின்டாவும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கும் பல்வேறு அயல் மாநாடுகளில் ஐந்து முறை சந்தித்துப் பேசியிருக்கின்றனர். ஆசியாவின் இரண்டு வளரும் நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பின் பயன்கள் தலைவர்கள் அறியாததல்ல. எனில் பல ஆண்டுகளாக நீடிக்கும் கருத்து வேற்றுமைகள் சில சந்திப்புகளில் நேர் செய்துவிடக் கூடியவைல்ல. அதற்கு பரஸ்பர நம்பிக்கையும், பல சுற்றுப்பேச்சுகளும் வேண்டி வரும். புதுதில்லியில் நடைபெறவிருக்கும் தலைவர்களின் சந்திப்பு அந்தப் பாதையில் மேற்கொள்ளப்படும் பயணங்களில் ஒன்றாக இருக்கும்.

(கட்டுரையாளர்: ஹாங்காங்கில் பணியாற்றும் பொறியாளர்).

Posted in AP, Arunachal Pradesh, Beijing, China, Dalai Lama, Foreign Relations, Hongkong, Hu Jintao, India, Official, Pakistan, SAARC, Tibet, Visit | 2 Comments »