தன்னம்பிக்கை இல்லாத அரசு!
ஒரு நாட்டுடன் நட்புறவு வேண்டும் என்பதற்காக அந்த நாட்டின் கொள்கைகளையும், அந்த நாட்டு அரசு செய்யும் தவறுகளையும் கண்களை மூடிக்கொண்டு ஆதரிப்பதோ, கண்டும் காணாமலும் இருப்பதோ ஒரு நல்ல வெளியுறவுக் கொள்கைக்கு அழகல்ல. இந்தியா இப்போது கடைப்பிடித்து வரும் வெளியுறவுக் கொள்கை அத்தகையதுதான் என்பதை மியான்மர், இலங்கை, சீனா மற்றும் பாகிஸ்தானின் செயல்பாடுகள் குறித்து நமது அரசு கடைப்பிடித்து வரும் மௌனம் தெளிவாக்குகிறது.
ஐம்பதுகளில் சீனாவுடன் இந்தியா மிகவும் நெருக்கமான உறவு வைத்துக் கொண்டிருந்த நேரம். அப்போது சீனா தனது அண்டை நாடான திபெத் மீது படையெடுத்து அந்த நாட்டைத் தனது நாட்டுடன் இணைத்துக்கொண்டபோது அதற்கு எதிராக முதல் குரல் கொடுத்தவர் அன்றைய இந்தியப் பிரதமர் பண்டித ஜவாஹர்லால் நேருதான் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. அதுமட்டுமல்ல, சீன அரசின் எதிர்ப்பையும் மீறி, திபெத்திலிருந்து தப்பி ஓடிவந்த தலாய் லாமாவுக்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் ஜவாஹர்லால் நேரு அரசு அடைக்கலம் அளித்தது மட்டுமல்ல, இந்தியாவிலிருந்து தலாய் லாமா தலைமையில் ஒரு திபெத்திய அரசு செயல்படவும் அனுமதித்தது.
பண்டித நேருவின் காலம் தொடங்கி இதற்கு முந்தைய வாஜ்பாயி தலைமையிலான அரசு வரை, அத்தனை பிரதமர்களும் கட்சி வேறுபாடின்றி தலாய் லாமாவை மதித்தார்கள். திபெத் மக்களின் சுதந்திர உணர்வுக்கும், அவர்கள் மீண்டும் தங்களது நாட்டை சீனாவிடமிருந்து திரும்பப் பெறுவதற்கும் இந்தியா தனது தார்மிக ஆதரவை அளிக்கத் தவறவில்லை. அமெரிக்க எதிர்ப்பு, ரஷிய எதிர்ப்பு, சீன எதிர்ப்பு என்று பிரச்னைகளை அணுகாமல், பிரச்னைகளின் அடிப்படையில் மட்டும்தான் இந்தியாவின் அணுகுமுறை இருந்து வந்திருக்கிறது. அதுதான், உலக அரங்கில் இந்தியாவுக்குத் தனி மரியாதையையும் கௌரவத்தையும் பெற்றுத் தந்திருக்கிறது.
உலக அரங்கில் மதிக்கப்படும் சமாதானத் தூதராக தலாய் லாமா திகழ்கிறார். நோபல் பரிசு உள்பட உலகத்தின் மிகப்பெரிய கௌரவங்கள் அவருக்குத் தரப்பட்டிருக்கின்றன. சமீபத்தில், அமெரிக்க அரசின் கௌரவமான அமெரிக்க காங்கிரஸ் தங்கப்பதக்கம் அவருக்குத் தரப்பட்டிருக்கிறது. இதைப் பாராட்டும்வகையில் புதுதில்லியில், காந்தி சமாதான மையத்தின் (Gandhi Peace Foundation்) சார்பில் ஒரு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முன்னாள் பிரதமர் இந்தர்குமார் குஜ்ரால் மற்றும் தில்லி முதல்வர் ஷீலா தீட்சித்துடன் நாடாளுமன்ற உறுப்பினர்களும், மத்திய அமைச்சர்களும் இந்தப் பாராட்டு விழாவில் கலந்து கொள்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், ஐ.கே. குஜ்ரால் தவிர எந்த மத்திய அமைச்சரும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. அதற்குக் காரணம் அவர்களது அவசர வேலைகள் என்றால் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், யாரும் கலந்துகொள்ள வேண்டாம் என்று அமைச்சரவைச் செயலர் தகவல் அனுப்பி அவர்களைத் தடுத்திருப்பது ஏன் என்பதுதான் கேள்வி. இதற்குக் காரணம் கேட்டபோது, அமைச்சரவைச் செயலர் அலுவலகம் தந்திருக்கும் விசித்திரமான பதில், அதைவிட அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது. “சீனா கோபித்துக் கொள்ளும்’ என்பதுதான் அந்த பதில்.
சீனாவின் அதிருப்தியைச் சம்பாதித்துக் கொள்ளக்கூடாது என்பதற்காக நமது ஆதரவுடன் இந்தியாவில் தங்கி இருக்கும், உலகம் ஏற்றுக்கொண்ட சமாதானத் தூதரும், புத்த மதத்தின் மரியாதைக்குரிய மதத்தலைவருமான தலாய் லாமா அவமதிக்கப்படுவது என்ன நியாயம்? எல்லோருக்கும் நல்லவராக இருக்க வேண்டும் என்று நினைத்தால், தவறு என்று தெரிந்தாலும் மௌனமாக இருக்க வேண்டும். அப்படியொரு பலவீனமான நிலை இந்தியாவுக்கு ஏற்படக்கூடாது. அது பண்டித நேரு நமக்கு அமைத்துத் தந்த வெளியுறவுக் கொள்கைக்கு எதிரானது.
உணர்ச்சியே இல்லாத அரசாக இருக்கிறதே இந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு என்று சொல்வதா, இல்லை தன்னம்பிக்கை இல்லாத அரசு என்று இதைச் சொல்வதா?