அநுராதபுரத்தில் பொதுமக்கள் பேருந்து மீது தாக்குதல்: 15 பேர் பலி
இலங்கையின் அநுராதபுரம் மாவட்டம் கெப்பிட்டிக்கொல்லாவ பகுதியில் பொதுமக்கள் போக்குவரத்து பேருந்து ஒன்றின் மீது நடத்தப்பட்ட கிளெமோர் கண்ணிவெடித் தாக்குதலில் குறைந்தது 15 பேர் கொல்லப்பட்டதுடன், மேலும் 25 பேர் காயமடைந்ததாக அநுராதபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அநுராதபுரத்தில் இருந்து பதவியா ஜானகபுரவுக்குச் சென்றுகொண்டிருந்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்தே இந்தத் தாக்குதலுக்கு உள்ளானதாக பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கெப்பிட்டிக்கொல்லாவவில் இருந்து 9 கிலோ மீட்டர் தொலைவில் அபிமானிபுர என்ற இடத்திலேயே இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக இலங்கை இராணுவத்தின் சார்பில் பேசவல்ல பிரிகேடியர் உதய நாணயக்கார முன்னதாக தமிழோசைக்குத் தெரிவித்தார்.
காயமடைந்தவர்கள் கெப்பிட்டிக்கொல்லாவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
வட இலங்கையில் மோதல்கள் அதிகரிக்கின்றன: இரு தரப்பிலும் இழப்புகளும் அதிகரிப்பு
![]() |
![]() |
மோதல்கள் அதிகரித்துள்ளன |
இலங்கையின் வடக்குப் போர்முனைகளில் இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் அதிகரித்துச் செல்லும் மோதல்களில் இன்று மாத்திரம் குறைந்தது 7 இராணுவத்தினர் கொல்லப்பட்டிருப்பதாக இலங்கையின் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் கூறியிருக்கின்றது.
இந்த மோதல்களில் 30 விடுதலைப்புலிகள் கொல்லப்பட்டதாகவும் அது குறிப்பிட்டுள்ளது.
வவுனியா செட்டிகுளம் பிரதேசத்தில் உள்ள சின்னசிப்பிக்குளம் பகுதியில் படையினர் மீது விடுதலைப்புலிகள் நடத்திய தாக்குதலில், 3 இராணுவத்தினர் கொல்லப்பட்டதாகவும், விடுதலைப் புலிகளின் தாக்குதல்கள், படையினரின் எதிர்த்தாக்குதலில் முறியடிக்கப்பட்டதாகவும் அந்த ஊடகத் தகவல் மையம் தெரிவித்திருக்கின்றது.
இதே பகுதியில் பிற்பகல் 12.50 மணியளவில் உழவு இயந்திரம் ஒன்றில் பயணம் செய்த இராணுவத்தினர் மீது விடுதலைப் புலிகள் நடத்திய கண்ணிவெடி தாக்குதலில், 4 இராணுவத்தினர் கொல்லப்பட்டதாகவும், 2 சிப்பாய்கள் காயமடைந்ததாகவும் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் அறிவித்திருக்கின்றது.
மன்னார் அடம்பன் மேற்கு, முள்ளிக்குளம் பரப்பாங்கண்டல் மற்றும் நரிக்குளம் ஆகிய வெவ்வேறு இடங்களில் இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற கடுமையான மோதல்களின்போது, 30 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டிருப்பதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.
அதேவேளை மன்னார் நரிக்குளம், யாழ்ப்பாணம் முகமாலை, கிளாலி, நாகர்கோவில் ஆகிய முன்னரங்கப் பகுதிகளில் நேற்று இடம்பெற்ற வெவ்வேறு மோதல்களின்போது, 20 விடுதலைப் புலிகளும், 2 இராணுவத்தினரும் கொல்லப்பட்டுள்ளதாகத் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்துள்ளது. இந்த மோதல்களில் 2 இராணுவத்தினர் காயமடைந்துள்ளதாகவும் அது கூறுகிறது.
கிளாலி முன்னரங்க பகுதியில் நேற்று பிற்பகல் சுமார் ஒரு மணியிலிருந்து இரண்டு மணித்தியாலங்கள் இரு தரப்பினருக்கும் இடையில் கடும் மோதல்கள் இடம்பெற்றதாக இராணுவத்தினரும் விடுதலைப் புலிகளும் தெரிவித்திருக்கின்றனர். இந்த மோதலில் 13 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டிருப்பதாக அரசு அறிவித்துள்ள போதிலும், தமது தரப்பில் எந்தவித சேதமும் ஏற்படவில்லை என்றும், தமது பிரதேசத்தினுள் முன்னேறுவதற்கு இராணுவத்தினர் மேற்கொண்ட முயற்சி கடுமையான எதிர்த்தாக்குதலின் மூலம் முறியடிக்கப்பட்டுள்ளதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்திருக்கின்றனர்.
வவுனியாவில் தொண்டர் அமைப்பு பணியாளர்கள் பணிப்புறக்கணிப்பு
![]() |
![]() |
இதற்கிடையில், வவுனியா மாவட்டத்தில் மனிதாபிமான பணிகளில் ஈடுபட்டுள்ள தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்த பணியாளர்கள் தமது பாதுகாப்பை உறுதி செய்யக் கோரி இன்று ஒரு நாள் அடையாள பணிப் புறக்கணிப்பை மேற்கொண்டிருந்தனர்.
அடையாளம் தெரியாதவர்களின் அச்சுறுத்தல்கள், கப்பம் கோரி விடுக்கப்படும் எச்சரிக்கைகள் போன்றவற்றினால் இந்த பணியாளர்கள் அச்சமடைந்துள்ளதாகவும், இதனால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான மனித நேய பணிகளை மேற்கொள்ள முடியாத சூழ்நிலை உருவாகியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
எனவே, சம்பந்தப்பட்டவர்கள், இவர்களின் பாதுகாப்பை உறுதி செய்து, அவர்கள் சுதந்திரமாக, அச்சமின்றி பணிகளில் ஈடுபடக் கூடிய சூழலை உருவாக்க வேண்டும் என வவுனியா மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையொன்றில் கோரியிருக்கின்றது.
மீண்டும் வவுனியாவுக்கு ரயில் சேவை
![]() |
![]() |
கடந்த ஒரு வார காலமாக மட்டுப்படுத்தப்பட்டிருந்த இலங்கையின் வடபகுதிக்கான ரயில் சேவை உடனடியாக வழமைக்குத் திரும்பும் எனவும், ஜனாதிபதியின் அனுமதியோடு இதற்கான பணிப்புரை ரயில் போக்குவரத்துத் துறை அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்டிருப்பதாகவும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர் தெரிவித்தார்.
இதனை உறுதி செய்த ரயில் போக்குவரத்துத்துறை அதிகாரிகள், இரண்டு ரயில்கள் இன்றிரவு வவுனியாவை வந்தடையும் என்றும் நாளை காலை முதல் அனைத்து ரயில்களும் வழமைபோல வவுனியாவில் இருந்து கொழும்புக்குச் சேவையில் ஈடுபடும் எனவும் தெரிவித்தனர்.
இதற்கிடையில் வவுனியா ஒமந்தை இராணுவ சோதனைச்சாவடி ஊடாக விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசமாகிய வன்னிப்பகுதிக்கு இடம்பெற்று வந்த பொதுப் போக்குவரத்து நடைமுறையில் படையினர் ஏற்படுத்தியிருந்த கட்டுப்பாடுகள் இன்று தளர்த்தப்பட்டதாக வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ் தெரிவித்தார்.
வவுனியாவிலிருந்து விடுதலைப் புலிகளின் பிரதேசத்திற்குச் செல்பவர்களை படையினர் அனுமதித்திருந்தார்கள் எனினும் வன்னிப்பகுதியில் இருந்து இராணுவத்தின் கட்டுப்பாட்டுப் பிரதேசமாகிய வவுனியாவுக்குள் வருவதற்குப் பொதுமக்கள் எவரையும் படையினர் அனுமதிக்கவில்லை.
இந்த கட்டுபபாடுகள் இன்று தளர்த்தப்பட்டிருக்கின்றன. இதனையடுத்து, விடுதலைப் புலிகளின் பிரதேசமாகிய புளியங்குளம் பகுதியில் பலநாட்களாகக் காத்துக்கிடந்த பொதுமக்களில் ஒரு தொகுதியினர் இன்று வவுனியாவை வந்தடைந்ததாக அதிகாரிகள் கூறினர்.
இது பற்றி இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்காரவுடன் தொடர்பு கொண்டு கேட்டபோது, ஓமந்தை இராணுவ சோதனைச்சாவடி ஊடான பொதுப் போக்குவரத்து இன்று முதல் தொடர்ந்து வழமைபோல நடைபெறும் என அவர் கூறினார்.