Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Posts Tagged ‘Corruption’

Right to Information: State of Tamil Nadu remains Closed

Posted by Snapjudge மேல் மார்ச் 11, 2009

வெளிப்படைத் தன்மை எங்கே?

தமிழ்நாடு மாநிலத் தகவல் ஆணையம் தொடங்கப்பட்டு மூன்றாண்டுகள் ஆகும் நிலையில் ஒருமுறை கூட ஆண்டறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை.

அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் பொருட்டு மத்திய அரசு தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005-ஐ நிறைவேற்றியது. இந்தச் சட்டத்தின் கீழ் அரசு நிர்வாக நடைமுறை தொடர்பாக தங்களுக்கு வேண்டிய தகவல்களைப் பொதுமக்கள் பெறுகின்றனர்.

இந்தச் சட்டத்தின் அமலாக்க மற்றும் மேல்முறையீட்டு அதிகார அமைப்பாக ஒவ்வொரு மாநிலத்திலும் மாநிலத் தகவல் ஆணையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தொடக்கம்: இதன்படி தமிழக அரசால் தமிழ்நாடு மாநிலத் தகவல் ஆணையம் 2006 ஜனவரி 12-ம் தேதி தொடங்கப்பட்டு 28-1-2006-முதல் செயல்பட்டு வருகிறது.

3 ஆணையர்களுடன் தொடங்கப்பட்ட இந்த ஆணையத்தில் பின்னர் மேலும் 4 ஆணையர்கள் நியமிக்கப்பட்டனர்.

மூன்றாண்டுகளில்…:

கடந்த மூன்று ஆண்டுகளில் இதுவரை 1.50 லட்சம் மேல்முறையீட்டு மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இவற்றின் மீது நடத்தப்பட்ட விசாரணைகள் அடிப்படையில் மக்களுக்கு தகவல் அளிக்க மறுத்த 30 அதிகாரிகளுக்கு தலா ரூ. 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

உரிய தகவல்களை மனுதாரர்களுக்கு அளிக்க மறுத்தது தொடர்பாக விளக்கம் கேட்டு 300 அரசு அதிகாரிகளுக்கு நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டுள்ளன என மாநிலத் தகவல் ஆணையர் ஆர். ரத்தினசாமி அண்மையில் தெரிவித்தார்.

தகவல் அளிக்க மறுத்த 30 அதிகாரிகளுக்கு தலா ரூ. 25,000 அபராதம் விதிக்கப்பட்டதாக ஆணையம் தரப்பில் கூறப்பட்டாலும், ஒரு சிலரைத் தவிர மற்றவர்கள் யாரும் அபராதத்தைச் செலுத்தவில்லை.

அந்தந்த துறை உயர் அதிகாரிகள் மற்றும் தகவல் ஆணையத்தின் அலட்சியப் போக்கு காரணமாக ஏராளமான அதிகாரிகள் அபராதம் செலுத்தாமல் தப்பித்து வருவதாக தகவல் பெறும் உரிமைச் சட்ட ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

ஆண்டறிக்கை:

தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் 25 (4) பிரிவின் படி மாநிலத் தகவல் ஆணையம் தனது பணிகள் குறித்த விவரங்களை ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் ஆண்டறிக்கையாக தொகுத்து சட்டப்பேரவையில் அளிக்க வேண்டும்.

ஆனால், தமிழ்நாடு மாநிலத் தகவல் ஆணையம் தொடங்கப்பட்டு மூன்றாண்டுகள் ஆகும் நிலையில் இதுவரை ஒருமுறை கூட ஆண்டறிக்கை தாக்கல் செய்யப்படாமல் உள்ளது என பொள்ளாச்சியில் இருந்து செயல்படும் தாயகம் அமைப்பின் நா. பாஸ்கரன் தெரிவித்தார்.

இது தொடர்பாக தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு, “ஆண்டறிக்கை இதுவரை சமர்பிக்கப்படவில்லை’ என சட்டப்பேரவை செயலக துணைச் செயலர் 10-10-2007-லும், பணியாளர் நிர்வாகச் சீர்திருத்தத் துறை இணைச் செயலர் 19-10-2007-லும் பதில் அளித்துள்ளனர்.

கடைசியாக சட்டப்பேரவைச் செயலக இணைச் செயலர் 29-01-2009-ல் அளித்த (எண்: 1822/2009-1) கடிதத்திலும், தகவல் ஆணையத்தின் ஆண்டறிக்கை சமர்ப்பிக்கப்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

வெளிப்படைத் தன்மை எங்கே?

இந்த நிலையில், 2006-ம் ஆண்டு முதல் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் சட்டப்பேரவை செயலகம் உள்பட ஒவ்வொருத் துறையும் அளித்த தகவல்கள் குறித்த விவரங்கள் ஆண்டறிக்கைக்காக பெறப்பட்டு வருகிறது என மாநிலத் தகவல் ஆணையம் தரப்பில் கூறப்படுகிறது.

“அரசுத் துறைகளில் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்வதற்கான ஒரு சட்டத்தை அமலாக்க வேண்டிய ஆணையமே, தனது பணிகளில் வெளிப்படைத் தன்மையை பராமரிக்காமல் உள்ளதற்கு உதாரணமாக இந்த செயல்பாடு அமைந்துள்ளது’ என தகவல் பெறும் உரிமைச் சட்ட ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Posted in Tamil Nadu | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , | Leave a Comment »

Baby Formula – 4 dead, 6200 sick: China Milk Scandal Shows Ties Between Companies, City Officials: Singapore suspends China milk imports; deadly chemical found in yoghurt

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 20, 2008


பாலில் நஞ்சு கலக்க காரணமான வலையமைப்பு கலைக்கப்பட்டதாக சீனா கூறுகிறது

சீனப்பாலை கொண்டு தயாரிக்கப்பட்ட உணவு பொருட்களை தடை செய்யவோ அல்லது திருப்பியழைக்கவோ மேலும் மேலும் நாடுகள் நடவடிக்கை எடுத்துவரும் நிலையில், இந்த இரசாயனத் தொற்று ஏற்பட காரணமாக இருந்த வலையமைப்பை கலைத்து விட்டதாக சீனா கூறுகிறது.

திருட்டுத்தனமாக நடத்தப்பட்ட ஆலைகள் மற்றும் பால் பண்ணைகளில் நடத்தப்பட்ட சோதனைகளையடுத்து இருபத்து இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் பாலில் மெலமைன் என்னும் இரசாயனத்தை சேர்த்தார்கள் அல்லது அதை பாலில் சேர்க்க உதவினார்கள் என்ற காரணத்துக்காகவே கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தக் இரசாயனக் கலப்பு காரணமாக அங்கு பல ஆயிரம் குழந்தைகள் நச்சுத்தன்மைக்கு உள்ளாகி நோயுற்றன. நான்கு குழந்தைகள் இறக்கவும் நேரிட்டது.

இதனிடையே தங்களது குழந்தைகள் பாதிக்கப்பட்டமை தொடர்பில் வழக்குகளை தொடுத்திருக்கும் குடும்பங்கள் வழக்கை கைவிடுமாறு அழுத்தத்துக்கு உள்ளாக்கப்படுகிறார்கள் என்றும் அவர்களின் வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.


சீனப் பொருட்களின் பாதுகாப்புத்தன்மை உறுதி செய்யப்படும் – சீன பிரதமர்

சீன குழந்தை
பால்மா கலப்படத்தால் குழந்தைகள் பாதிப்பு

சீனாவில் பால்மாவில் கலப்படம் செய்யப்பட்ட விவகாரத்தை தொடர்ந்து, சீனப் பொருட்களின் பாதுகாப்புத்தன்மையை உறுதி செய்ய சீன பிரதமர் வென் ஜியாபோ உறுதியளித்துள்ளார்.

உலக பொருளாதார மாநாட்டில் உரையாற்றிய அவர், இந்த விவகாரத்தை தீர்ப்பதற்கு தங்கள் அரசாங்கம் திடமான நடவடிக்கைகளை எடுத்திருப்பதாக அவர் கூறினார்.

ஆனால் பால்மா கலப்பட விஷயத்தில் தலைநகர் பீஜிங்கில் புதியதாக 176 பேர் பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளதாக சீன செய்திகள் கூறுகின்றன.

மேலும் ஷாங்காய் நகரத்தில் மூன்று வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் ஐந்து சதவிதத்தினர் சிறுநீரகங்களில் கற்கள் இருப்பதற்கான அறிகுறிகளை காண்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விவகாரத்தில் இது வரையில் நான்கு குழந்தைகள் பலியாகியுள்ளனர், ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சீனாவில் பால்மாவில் ஏற்பட்ட ரசாயனக் கலப்பால் பல ஆயிரம் குழந்தைகளுக்கு பாதிப்பு

பாதிக்கப்பட்டுள்ள ஒரு குழந்தை
பாதிக்கப்பட்டுள்ள ஒரு குழந்தை

சீனாவில் இரசாயனக் கலப்பு கொண்ட பால்மாவை உட்கொண்ட காரணத்தினால் ஆறாயிரம் குழந்தைகள் நோய்வாய்பட்டுள்ளனர் என அதிகாரிகள் வெளிப்படுத்தியுள்ளனர்.

இதன் காரணமாக இதுவரை மூன்று குழந்தைகள் மரணமடைந்துள்ளன என்றும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் தொடர்ந்து இருக்க வேண்டிய நிலை உள்ளது என்றும் சீனாவின் சுகாதார அமைச்சர் சென் ஷூ தெரிவித்துள்ளார்.

மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள குழந்தைகளில் நூற்றிஐம்பதுக்கும் அதிகமானவர்களின் சிறுநீரகம் கடுமையாக பாதிக்கப்பட்டு செயலிழந்துள்ளன என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த ஊழல் தொடர்பான விவகாரம் பரவிவரும் நிலையில், சீனாவின் தரக்கட்டுப்பாட்டு அமைப்பானது, தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் இராசயனமான மெலமைன், மேலும் இருபத்து இரண்டு வெவ்வேறு வர்த்தகப் பெயர்களையுடைய பால்மாவில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ரசாயனப் பொருள் பால்மாவில் கலந்திருப்பதாக அறியப்படவில்லை. பாலில் புரதச்சத்து கூடுதலாக இருப்பதற்காக மெலமைன் கலக்கப்பட்டதாக எண்ணப்படுகிறது.

இதையடுத்து தேசிய அளவில் அனைத்து பால் உணவுப் பொருட்களும் பரிசோதிக்கப்பட வேண்டும் என சீனா உத்தரவிட்டுள்ளது.



சீன பால் உற்பொருட்களுக்கு சிங்கப்பூர் இறக்குமதி தடை

இரசாயனக் கலப்படம் நிறைந்த பால் மாவு

சீனாவிலிருந்து பால் மற்றும் பால் உற்பத்திப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கும் விற்பனை செய்வதற்கும் சிங்கப்பூர் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

சில சீன பால் உற்பத்திப் பொருட்களில் தொழிற்சாலை இரசாயனமான மலெமைன் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சீனாவில் பாலிலும் பால் மாவிலும் இந்த இரசாயனக் கலப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து கடைகளிலிருந்து பால் உற்பத்திப் பொருட்கள் பலவற்றின் விற்பனை நிறுத்தப்பட்டு அவை அகற்றப்பட்டுவருகின்றன.

சீனாவின் முன்னணி பால் உற்பத்தி நிறுவனங்களின் உற்பத்திகளை கடந்த சில நாட்களில் எடுத்து பரிசோதித்துப் பார்த்ததில் கிட்டத்தட்ட பத்து சதவீத மாதிரிகளில் மெலமைன் கலந்திருக்கிறது என சீன அரசாங்கத்தின் தரக் கண்காணிப்பு நிறுவனம் கூறுகிறது.

இதனிடையே, இலங்கையில் இறக்குமதி செய்யப்படும் பால் மாவு வகைகளை பரிசோதனை செய்ய இலங்கை அரசு தீர்மானித்திருப்பதாக அறிவித்திருக்கிறது.

இது குறித்து கொழும்பில் இடம்பெற்ற பத்திரிகையாளர் மாநாட்டில் உரையாற்றிய வர்த்த நுகர்வோர் அமைச்சர் பந்துல குணவர்த்தன, நுகர்வோரின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்காகவே அரசு இந்த முன்னெச்செரிக்கை நடவடிக்கையினை எடுத்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.

Posted in Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , | Leave a Comment »

Report on The Government of Tamil Nadu: Public Administration: Accountant General’s Office: IAAS – Indian Audit and Accounts Service

Posted by Snapjudge மேல் மே 20, 2008

மு.க.ஸ்டாலின் துறையில் பல கோடி ரூபாய் முறைகேடு

தமிழக அரசுத் துறைகளில் ரூ. 32 கோடி அளவுக்கு தேவையற்ற மற்றும் முறைகேடான செலவுகள் செய்யப் பட்டுள்ளதாகவும், இதில் உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் துறையில் மட்டும் ரூ.13 கோடி அளவுக்கு முறைகேடான செலவுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் இந்திய தணிக்கை துறை தலைவரின் அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

2006-07ம் ஆண்டிற்கான மத்திய தணிக்கைத் துறைத் தலைவரின் அறிக்கை நேற்று முன்தினம் தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த தணிக்கை விவரங்களை செய்தியாளர்களிடம் வெளியிட்டு சென்னையில் உள்ள இந்திய தணிக்கை துறை தலைவர் முருகையா பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது: ஆண்டுதோறும் மாநில அரசின் கணக்கு வழக்குகளை மத்திய தணிக்கை துறை தணிக்கை செய்து மாநில ஆளுநரிடம் சமர்ப்பிக்கும். இந்த அறிக்கை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு பொதுக் கணக்கு குழுவின் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்படும்.

இந்த அறிக்கையில் உள்ளவற்றை இந்தக் குழு ஆய்வு செய்து அதன்படி எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசுக்கு பரிந்துரைசெய்யும். இதன் பேரில் அரசு நடவடிக்கை எடுக்கும்.

  • 2006-07 ஆம் ஆண்டு மாநில அரசின் வருவாய் முந்தைய ஆண்டை விட 20.5 சதவிகிதம் உயர்ந்து 40 ஆயிரத்து 913 கோடியாக உள்ளது.
  • வருவாய் செலவினம் 19.5 சதவிகிதம் உயர்ந்து 38 ஆயிரத்து 265 கோடியாக உள்ளது.
  • கடன் அல்லாத மூலதன வருவாய் 710 கோடி ரூபாயாகவும்,
  • மூலதன செலவு மற்றும் கடன்கள் வழங்கியவை முறையே 1898 கோடி மற்றும் 1214 கோடி ரூபாயாக அதிகரித்ததாலும்
  • இந்த ஆண்டில் வருவாய் பற்றாக்குறை 1705 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

இந்த ஆண்டில் அரசின் நிதி பொறுப்பு வருவாயை விட 1.62 மடங்குகூடுதலாக ரூ.66 ஆயிரத்து 320 கோடியாக உள்ளது. நபார்டு வங்கி ஒப்புதல் அளித்த 269 பாசன திட்டங்களில் 251 திட்டங்கள் மட்டுமே முடிக்கப்பட்டுள்ளன. பாசனத்துறை ஒப்புதல் பெறாத திட்டங்களில் 2.47 கோடி ரூபாய் செலவு செய்துள்ளது. கூடுதல் திறன் கொண்ட கால்வாய்கள் மற்றும் நீர்த்தேக்கங்களை வடிவமைப்பதில் கூடுதலாக 5.77 கோடி ரூபாய் செலவாகி உள்ளது.

வணிகவரித்துறையில் இலவசமாக கிடைக்கும் மென்பொருளை தனியாரிடமிருந்து வாங்கியதால் 80 லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. 14 கோடி ரூபாய் செலவு செய்தும் கணினிமயமாக்கும் பணிகள் முற்றுப் பெறவில்லை.

கடந்த 1975 ஆம் ஆண்டு முதல் 415 ஏக்கர் நிலத்தை தனியார் நிறுவனம் ஒன்று எந்தவித கட்டணமும் செலுத்தாமல் அனுபவித்து வருகிறது. பல்வேறு வரிகள் வசூலிப்பதில் சுணக்கம் காரணமாக பல லட்சம் ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாடு மின் வாரியத்தில் எந்தவித இடர்பாடுகளும் இல்லாத நிலையிலும் 25 திட்டங்களில் 23 திட்டங்கள் நிறைவு செய்யப்படவில்லை.

பாக்கித் தொகை செலுத்துவதில் தமிழ்நாடு மின்சார வாரியம் நிபந்தனைகளை பின்பற்ற தவறியதால் 24.63 கோடி ரூபாய் ஊக்கத் தொகை இழப்பு ஏற்பட்டுள்ளது. பொது விநியோக முறையின் கீழ் மத்திய அரசிடமிருந்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் செலவு தொகையை திரும்ப பெற சமர்ப்பித்த தவறான கோரிக்கையின் விளைவாக ரூ.3.99 கோடி முடங்கிப் போயுள்ளது.

இத்துடன் அரசின் பல்வேறு துறைகள் மற்றும் கள அலுவலகங்களில் சோதனை செய்ததில் வீணான செலவினம் மற்றும் இதர முறைகேடுகள் காரணமாக 31.89 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இவற்றில் மு.க.ஸ்டாலின் கீழ் உள்ள துறை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் தேவையற்ற மற்றும் பலன் அளிக்காத செலவு 9.63 கோடி ரூபாய் செய்யப்பட்டுள்ளது. தவிர்த்திருக்கக் கூடிய செலவுகள் 3.30 கோடி ரூபாய் செய்யப்பட்டுள்ளது.

இதே போல் பல துறைகளில் பல கோடி ரூபாய்க்கு தேவையற்ற மற்றும் முறைகேடான செலவுகள் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

Posted in DMK, Economy, Finance, Govt, India, Tamil Nadu | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »

உலகளவில் ஊழல் அதிகரிப்பு

Posted by Snapjudge மேல் மே 15, 2008


மலிந்துவரும் லஞ்சம்
மலிந்துவரும் லஞ்சம்

உலக அளவில் நான்கில் ஒரு பங்கு நிறுவனங்கள் தங்களின் வியாபாரத்தை நிலை நிறுத்துவதற்காகவோ அல்லது புதிய ஒப்பந்தங்களை பெறுவதற்காகவோ லஞ்சம் வழங்கும்படி கடந்த இரண்டாண்டு காலத்தில் தாங்கள் அணுகப்பட்டதாக தெரிவித்துள்ளன.

எர்ன்ஸ்ட் அண்ட் யங் என்கிற தணிக்கை நிறுவனத்தால் முப்பத்திமூன்று நாடுகளில் இருக்கும் ஆயிரத்தியிருநூறு நிர்வாகிகளிடம் நடத்திய கருத்துக் கணிப்பில் இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐந்தில் ஒரு பங்கு நிறுவனங்கள், லஞ்சம் வழங்கத் தயாராக இருந்த போட்டி நிறுவனத்திடம் தங்களின் தொழில் வாய்ப்புகளை இழந்துள்ளதாகவும் இந்தக் கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.

மேற்கு ஐரோப்பாவுக்கு வெளியே ஊழல் பரவலாக காணப்படுகிறது. சுரங்கத் தொழில்துறை தான் இருப்பதிலேயே ஊழல் மலிந்த துறையாக கணிக்கப்பட்டுள்ளது.

சுரங்கத் தொழில்துறையில் ஈடுபட்டுள்ளவர்களில் பாதிப்பேர் தாங்கள் ஊழலுக்கு முகம்கொடுப்பதாக புகார் தெரிவித்துள்ளனர். அதேவேளை, வங்கித்துறையிலும், எரிசக்தித் தொழில் துறையிலும் 30 சதவீதம் பேர் தாங்கள் ஊழலுக்கு முகம்கொடுப்பதாக புகார் தெரிவித்துள்ளனர்.

Posted in Finance, Law, Order | குறிச்சொல்லிடப்பட்டது: , , | Leave a Comment »

Exploiting the power & abusing Minister’s influence: DMK Govt – TR Balu, Poongothai, Arcot Veerasamy

Posted by Snapjudge மேல் மே 15, 2008

அமைச்சர்களின் அதிகார துஷ்பிரயோகம்: முதல்வர் தெளிவுபடுத்துவாரா?-சரத்குமார் கேள்வி

சென்னை, மே 14: தி.மு.க. அமைச்சர்களின் அதிகார துஷ்பிரயோகம் குறித்து முதல்வர் கருணாநிதி தெளிவுபடுத்துவாரா என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

ஆட்சிப் பொறுப்பேற்று அமைச்சர்களாக பதவிக்கு வருவதே தங்களுடைய தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ளத்தான் என்பதை உறுதிசெய்வது போல, தி.மு.க. அமைச்சர்களின் நடவடிக்கைகள் இருந்து வருகின்றன.

லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான மின்துறை பொறியாளரான தனது உறவினர் ஜவஹர் மீது எவ்வாறான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் பூங்கோதை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரியிடம் பேசியுள்ளார்.

அவர் மீதான குற்றச்சாட்டை துறை நடவடிக்கைக்கு அனுப்பினால் நல்லது என்று அமைச்சரே பரிந்துரை செய்ததாக செய்தி வெளியாகியுள்ளது.

கடலூர் மின்சார நிறுவனத்தின் உரிமையாளர் அமைச்சர் ஆர்க்காடு வீராசாமியின் உறவினர் என்றும், அதனால்தான் கடலூர் மாவட்டத்தில் நிலங்களை கையகப்படுத்துவதில் அமைச்சர் தீவிரமாக செயல்படுகிறார் என்றும் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்திருந்தார்.

அதேபோல், மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு தனது குடும்ப நிறுவனத்துக்கு குறைந்த விலையில் எரிவாயு தர வேண்டும் என்று எரிசக்தித் துறையை வலியுறுத்தினார் என்றும், பிரதமர் அலுவலகம் இதுதொடர்பாக 8 முறை பரிந்துரை செய்துள்ளது என்றும் அண்மையில் செய்தி வெளியாகி நாடாளுமன்றத்தில் மிகப்பெரிய அமளி ஏற்பட்டது.

தனது நிறுவனத்தின் பங்குதாரர்களுக்காகத்தான் உதவி கேட்டதாகவும், பதவியை ராஜிநாமா செய்யமாட்டேன் என்றார். இந்த நிறுவனத்தில் தனது குடும்பத்தினருக்கு எத்தனை சதவீத பங்குகள் உள்ளன என்பதையும் அவர் தெளிவுபடுத்தி இருக்க வேண்டும்.

தி.மு.க.வைச் சேர்ந்த மத்திய, மாநில அமைச்சர்கள் செய்துவரும் அதிகார துஷ்பிரயோகங்களுக்கு மேற்கண்டவை சில உதாரணங்கள் மட்டுமே. இதுபோன்ற பல்வேறு ஊழல்களும், அதிகார துஷ்பிரயோகங்களும் தொடர்ந்து நடைபெற்று வருவதை மக்கள் கவனித்துக் கொண்டுதான் வருகிறார்கள்.

முதல்வர் கருணாநிதிக்கு தெரிந்து இவை நடக்கின்றனவா அல்லது முதல்வரின் கட்டுப்பாட்டில் இவர்கள் இல்லையா என்பது நம்முன் உள்ள கேள்வி.

அமைச்சர் பூங்கோதை, ஜவஹர் தனது அத்தை மகன் என்றும், அவர் ஒருவர்தான் அந்த குடும்பத்தை காப்பாற்ற வேண்டிய நிலையில் இருப்பதால் அப்படி நடந்துகொள்ள நேர்ந்தது என்றார்.

இப்படி தங்களது குடும்ப நலன்களுக்காகவே அதிகார துஷ்பிரயோகம் செய்வது தொடர்கதையாகி வருகிறது.

அமைச்சர் பூங்கோதை மட்டும் ராஜிநாமா செய்து இருக்கும் நிலையில் மற்ற அமைச்சர்களின் நிலை என்ன என்பதை முதல்வர் தெளிவுபடுத்துவாரா?

————————————————————————————————
“வெட்கப்படுகிறேன்’: அமைச்சரின் செயல் குறித்து கருணாநிதி

சென்னை, மே 14: லஞ்சம் வாங்கிய தனது உறவினரைப் பாதுகாக்கும் முயற்சியில் அமைச்சர் ஒருவரே ஈடுபட்டிருப்பது வெட்கப்பட வேண்டிய ஒன்றாகும் என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.

பேரவையில் புதன்கிழமை இது குறித்து அவர் பேசியதாவது:

லஞ்சம் வாங்கிய தனது உறவினரைப் பாதுகாக்கும் முயற்சியில் அமைச்சர் ஒருவரே ஈடுபட்டிருப்பது வெட்கப்பட வேண்டிய ஒன்றாகும். இதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை. இதற்காக நான் வெட்கப்படுகிறேன்.

“”எனது உறவினர் ஜவஹர் மீது நடைபெற்று வரும் விசாரணையின் போக்கில் குறுக்கிட்டு அமைச்சர் என்ற முறையில் என் செல்வாக்கை, அதிகாரத்தை செலுத்த வேண்டும் என்ற உள்நோக்கம் எதுவும் இல்லை. லஞ்ச ஒழிப்பு ஆணையருடன் பேசியபோது ஜவஹர் தொடர்பான விஷயத்தை ஒரு கோரிக்கை என்ற முறையில் பரிசீலிக்கச் சொன்னேன். ஆனாலும் அதனை தவறு என்று இப்போது உணர்கிறேன். அதற்கு பரிகாரமாக எனது அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்கிறேன்” என்று அமைச்சர் பூங்கோதை எனக்கு எழுதியுள்ளார் என்றார் முதல்வர் கருணாநிதி.

————————————————————————————————
அமைச்சர் பதவியிலிருந்து பூங்கோதை ராஜிநாமா

சென்னை, மே 14: சமூக நலத்துறை அமைச்சர் பூங்கோதை தனது அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்திருப்பதாகவும், அது ஆய்வில் இருப்பதாகவும் முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.

பேரவையில் புதன்கிழமை இந்தப் பிரச்னை குறித்து எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ. பன்னீர்செல்வம் பேசியதாவது:

சமூக நலத்துறை அமைச்சர் பூங்கோதை, லஞ்சப் புகாரில் சிக்கிய தனது நெருங்கிய உறவினரான, மின்வாரியத்தில் பொறியாளராகப் பணிபுரியும் ஜவஹர் என்பவரைக் காப்பாற்றுவதற்காக லஞ்ச ஒழிப்புத் துறை ஆணையர் உபாத்தியாயாவிடம் தொலைபேசியில் பேசியிருக்கிறார்.

அவர்களின் உரையாடல் தொலைக்காட்சிகளிலும், பத்திரிகைகளிலும் வெளிவந்து அனைத்துத் தரப்பு மக்களிடமும் மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய அரசியல் சாசனப்படி நடப்பேன் என்று பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்ட அமைச்சர் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்திருக்கிறார். இதற்கான பரிகாரத்தை சம்பந்தப்பட்ட அமைச்சரே காண வேண்டும் என்றார்.

அதற்கு பதிலளித்து முதல்வர் கருணாநிதி பேசியதாவது:

எதிர்க்கட்சியின் பணி எதுவோ அதனை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஒ. பன்னீர்செல்வம் அமைதியான முறையில் நிறைவேற்றி உள்ளார். இடித்துச் சொல்ல வேண்டிய எதிர்தரப்பினர் இல்லாவிட்டால் அந்த அரசு தானாகவே கெட்டுவிடும் என்பது வள்ளுவர் வாக்கு.

ஏற்கெனவே ஒட்டுக்கேட்ட விவகாரம் சட்டப் பேரவையில் எழுப்பப்பட்டு அதனை விசாரிக்க விசாரணை கமிஷனும் அமைக்கப்பட்டுள்ளது. விஞ்ஞான வளர்ச்சியில் ஒருவர் பேசுவதை இன்னொருவர் பதிவு செய்வது எளிதாகி இருக்கிறது.

தலைமைச் செயலாளரும், இன்னொரு அதிகாரியும் பேசிக் கொண்டதாகப் பதிவான ஒட்டுக் கேட்பு விவகாரம் விசாரணையில் இருக்கும் போது இடையில் இந்த செய்தி வந்துள்ளது. இதில் ஒரு அமைச்சர் சம்பந்தப்பட்டிருப்பதால் நான் வேதனைப்படுகிறேன்.

எதிர்க்கட்சித் துணைத் தலைவர் கூறியதைப்போல விசாரணை கமிஷனோடு இதையும் சேர்க்கலாமா என்று நாங்கள் யோசித்துக் கொண்டிருக்கும்போது, அவரே தனது ராஜிநாமா கடிதத்தை அனுப்பியிருக்கிறார்.

அமைச்சரின் ராஜிநாமா குறித்து நான் எந்த முடிவையும் எடுக்கவில்லை. அதைப் பற்றி கலந்தாலோசித்துக் கொண்டிருக்கிறேன். அதே நேரத்தில் இந்த ஒட்டுக் கேட்பு விவகாரம் எப்படி நடைபெறுகிறது என்பதை நமது புலனாய்வு அமைப்பு மூலம் ஆராய வேண்டியிருக்கிறது.

இது தொடர்பாக விசாரிக்க விசாரணைக் குழு அமைப்பதா அல்லது ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ள விசாரணைக் குழுவில் சேர்ப்பதா என்பது குறித்து யோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

————————————————————————————————

விடை கிடைக்காத வினாக்கள்

ஆர்.ஆர்.பி.

பரபரப்பான தி.நகர். மேலும் பரபரப்பான பகல் நேரம். வெள்ளைச் சீருடையில் ஏராளமான போக்குவரத்து போலீஸôர், போதிய இடைவெளியில் இருபுறமும் நிற்கின்றனர். சற்று தள்ளி, நடமாடும் நீதிமன்றம், இரு சக்கர வாகனங்களில் வருபவர்கள் ஆங்காங்கே ஓரங்கட்டப்படுகின்றனர். சிலர் லைசென்ஸ் இல்லாதவர்கள். சிலர் செல்போனில் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டியவர்கள். சிலர் பெட்ரோல் டேங்க்குக்கு ஹெல்மெட் போட்டவர்கள்.

அத்தனை பேரும் அபராதம் கட்டியாக வேண்டும். அருகிலேயே நடமாடும் நீதிமன்றம் இருப்பதால், காந்தி படங்களைக் காட்டி, தப்பிச் செல்ல முடியாது. சுருங்கச் சொன்னால், சட்டம் தன் கடமையைச் செய்து கொண்டிருக்கிறது.

பார்க்கும்போதே மெய்சிலிர்த்தது. சிந்தனை வேறு பக்கம் திரும்பியது.

முதலிரண்டு “பாரா’க்களைப் படித்ததுமே தெரிந்திருக்கும். சம்பந்தப்பட்டவர்கள் எவரும் பஞ்சமாபாதகங்களைச் செய்தவர்கள் இல்லை என்பது. ஆனால், இவர்கள் அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டுள்ளனர். நூறு சதவீதம் நியாயமான விஷயம்.

மறுபக்கம், தொலைபேசி ஒட்டுக்கேட்பு என்ற பூதம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் பிடித்து உலுக்கிக் கொண்டிருக்கிறது என்றால், அது மிகைப்படுத்தலாகவே இருக்கும்.

அ.தி.மு.க.வைத் தவிர அந்தப் பிரச்னையைக் கையால் தொடவே எவரும் தயங்குகின்றனர். அவ்வப்போது முனகலாகக் குரல் கொடுக்கும் பா.ம.க.வோ, “எங்கள் ஐயாவின் தொலைபேசியும் ஒட்டுக் கேட்கப்படுகிறது’ என்பதிலேயே குறியாக இருக்கிறதே தவிர, இந்தப் பிரச்னையின் முழு பரிமாணத்தையும் புரிந்துகொண்டதாகத் தெரியவில்லை.

தலைமைச் செயலர் பேச்சிலிருந்து சமீபத்தில் சர்ச்சைக்குள்ளான சமூக நலத்துறை அமைச்சர் பூங்கோதை பேச்சுவரை அத்தனை தொலைபேசி ஒட்டுக்கேட்பு “சிடி’க்களையும் கூர்ந்து கவனித்தால், அனைத்திலும் தமிழக லஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்புத் துறை இயக்குநர் உபாத்யாயா இருப்பார். அந்த “சிடி’க்கள் ஒலிபரப்பானபோது கேட்டவர்கள், அவரது குரல் தெள்ளத் தெளிவாக இருப்பதையும், எதிர்முனையில் இருப்பவர்கள் குரல் தெளிவு சற்றுக் குறைவாக இருப்பதையும் கவனித்திருக்க முடியும்.

இதன் மூலம் உறுதியாகும் உண்மை: இந்த உரையாடல்கள் அனைத்தும், ஏ.டி.ஜி.பி., உபாத்யாயா முனையில் பதிவு செய்யப்பட்டவை.

அப்படியானால், அத்தனை சர்ச்சைக்கும் காரணம் அவர் தானா? நிச்சயமாக இல்லை. போலீஸ் துறையில் இருக்கும் அனைவருக்கும் தெரியும் அவரது நேர்மை. நூறு ரூபாய் லஞ்சம் வாங்குவதை விட, பதவியைத் தூக்கி எறிந்துவிட்டு, வீட்டுக்குப் போவதை வீரம் என நினைப்பவர். எந்த ஆதாயத்துக்காகவும் எவர் வீட்டு வாசலிலும் நின்றறியாதவர்.

எனில், இந்த ஒலிப்பதிவு எப்படி நடந்தது? எப்படி வெளியானது? பொதுவாக, உயர்பதவியில் இருக்கும் சில ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகள், தாங்கள் நடத்தும் தொலைபேசி உரையாடல்களைப் பதிவு செய்வது வழக்கம். இன்னார், அன்னார் என்ற பேதம் இல்லாமல் எல்லா அழைப்புகளையும் பதிவு செய்வர். முக்கியமானவற்றைச் சேமிப்பர்; தேவையில்லாதவற்றை அழித்துவிடுவர்.

அவ்வாறு உபாத்யாயா சேமித்து வைத்திருந்த தொலைபேசி அழைப்புகள் தான் தற்போது வெளியாகி உள்ளன. இவை பதிவு செய்து வைக்கப்பட்டிருந்த “லேப் – டாப்’பை சர்வீஸ் செய்தவர்கள், உபாத்யாயா அலுவலக ஊழியர்கள் என்ற இருதரப்பில் ஒருவர்தான் இதைச் செய்திருக்க வேண்டும்.

இப்படி வெளிக்கிளம்பிய “சிடி’யைத் தான் மெமரி விட்டா விளம்பரம் போல ஜெயா “டிவி’யில் மணிக்கு நூறு முறை ஒளிபரப்பி வருகின்றனர்.

இது இவ்வாறிருக்க, தொலைபேசி உரையாடல் எப்படி பத்திரிகைகளுக்குச் சென்றது? என்பதைப் பற்றித் தான் உலகம் முழுவதும் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறதே தவிர, அந்த “சிடி’யில் இருந்த விஷயங்கள் பற்றி யாரும் கவலைப்படக் காணோம். அதைத்தான் முதல்வரும் விரும்பினார். அதற்காகத்தான், உபாத்யாயாவுடன் தலைமைச் செயலர் மற்றும் முதல்வரின் செயலர் உரையாடல் வெளியானபோது, “அவர்கள் ஒன்றும் தேச விரோதச் செயல்களில் ஈடுபட்டுவிடவில்லையே’ என்றார் முதல்வர்.

லஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்புத் துறை இயக்குநரிடம், எந்த இடத்தில் எந்த அதிகாரியை நியமிக்க வேண்டும்? எந்த அதிகாரி எந்த அரசியல்வாதிக்கு உறவினர்? எதிர்க்கட்சித் தலைவர் வழக்கை எப்படி விசாரிக்க வேண்டும்? அவர் பக்கம் நியாயம் இருந்தாலும் அதை எப்படி திசைதிருப்ப வேண்டும்? என்பன போன்ற விஷயங்களை அறிவுறுத்துவது முற்றிலும் மரபு விரோதம்.

அதையும் ஒதுக்கி வைப்போம்.

நேற்று முன்தினம் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சாமி வெளியிட்ட “சிடி’ எத்தகையது? சமூக நலத்துறை அமைச்சர் பூங்கோதை, லஞ்ச வழக்கில் கையும் களவுமாக சிக்கிய தனது உறவினரை விடுவிக்க உதவும்படி உபாத்யாயாவைக் கேட்கிறார். “பாவம்… அவர்தான் அந்தக் குடும்பத்தின் ஒரே வருவாய் ஆதாரம்’ என கெஞ்சுகிறார்.

வேறு வருவாய் ஆதாரம் இல்லை எனில் லஞ்சம் வாங்கலாம் என சட்ட மசோதா தாக்கல் செய்வார்போலும். வழக்கு ஆவணங்களை மின்சார வாரியத்துக்கே அனுப்பிவிட்டால் போதுமாம்; அவர் பார்த்துக் கொள்வாராம்.

இதன் மூலம், அங்கேயும் புரையோடிப்போன ஊழலை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறார் அமைச்சர் பூங்கோதை. சமூக நலத்துறை அமைச்சரின் சமூக நலம் இந்த அளவில் இருக்கிறது.

முதல்வர் கூறியதுபோல, முந்தைய உரையாடல்கள் தேசவிரோதம் இல்லை என்றே கொண்டாலும், இந்த உரையாடல் எத்தகையது? இதில் சட்ட விரோதம் எதுவும் இல்லையா? லஞ்ச வழக்கில் கையும் களவுமாக கைதானவரை விடுவிக்கக் கோருவது தான் சமூக நீதியா? இதன் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார்? பூங்கோதை ராஜிநாமா செய்வாரா? நீக்கப்படுவாரா? அல்லது பதவி உயர்வு வழங்கப்பட்டுவிடுமா?

எந்தக் கேள்விக்கும் பதில் கிடைக்கப்போவதில்லை. தமிழக அரசு இப்போது, வெற்றி முரசு கொட்டும் மூன்றாமாண்டு தொடக்க விழாவில் முனைப்போடு இருக்கிறது. இதற்கெல்லாம் பதில் கிடைக்கும்; நியாயம் பிறக்கும் என “அசடு’ மாதிரி உட்கார்ந்து கொண்டிருக்காமல், ஒழுங்காக ஹெல்மெட் போட்டு, ஒருபோதும் மஞ்சள் கோட்டைத் தாண்டாமல், “சிக்னல்’களை மதித்து நடப்போமாக!

————————————————————————————————

பூங்கோதைக்கு சுவாமி பாராட்டு

சென்னை, மே 14: லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநரிடம் நடத்திய தொலைபேசி உரையாடலை ஒப்புக்கொண்டு அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்த பூங்கோதையின் தைரியத்தைப் பாராட்டுவதாக ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

பூங்கோதையை முன் மாதிரியாகக் கொண்டு மத்திய கப்பல் துறை அமைச்சர் டி.ஆர்.பாலுவும் அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்யவேண்டும் என புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் சுவாமி கேட்டுக் கொண்டுள்ளார்.

————————————————————————————————

பூங்கோதை ராஜிநாமா ஏற்கப்படுமா?

சென்னை, மே. 15: சமூக நலம் மற்றும் சத்துணவுத் துறை அமைச்சர் பூங்கோதையின் பதவி விலகல் கடிதம் ஏற்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தன்னுடைய உறவினரை லஞ்ச ஒழிப்புக் காவல் விசாரணையில் இருந்து காப்பாற்றும் நோக்கில் அத் துறையின் தலைவர் உபாத்யாயாவிடம் தொலைபேசியில் பேசினார் என்ற தகவல் வெளியானதைத் தொடர்ந்து, அமைச்சர் பதவியில் இருந்து விலக பூங்கோதை முன்வந்துள்ளார்.

செவ்வாய்க்கிழமை மதியமே அவர் பதவி விலகல் கடிதம் தந்ததாகத் தெரிகிறது. பூங்கோதையின் பதவி விலகல் கடிதம் தொடர்பாக முதல்வர் கருணாநிதி சட்டப்பேரவையில் புதன்கிழமை தெரிவித்தார்.

ஆனால், பதவி விலகல் கடிதம் இதுவரை ஏற்கப்படவில்லை. பூங்கோதையை நீக்கக் கூடாது என்று தென் மாவட்டங்களைச் சேர்ந்த நாடார் சமூகத்தவர்கள் வலியுறுத்துகின்றனர். அதுமட்டுமின்றி முதல்வருடைய குடும்பத்துக்குள்ளேயே பூங்கோதைக்கு ஆதரவாகக் குரல்கள் எழுந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

பதவி விலகல் முடிவைக்கூட பூங்கோதை முன்வந்து எடுக்கவில்லை. செவ்வாய்க்கிழமை காலை பத்திரிகையில் அவருடைய பேட்டியைப் பார்த்து கோபம் அடைந்ததால், பூங்கோதையிடம் பதவி விலகல் கடிதத்தை வாங்குமாறு முதல்வர் கூறினார் என்று நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.

மூத்த அமைச்சர்கள் மட்டுமே வேறொரு அமைச்சரின் துறை அதிகாரிகளுடன் தேவையைப் பொருத்துப் பேசுவது வழக்கம். மூத்த அமைச்சர்களின் துறையில் தங்களுக்கு ஏதாவது வேலை நடக்க வேண்டுமானால், சம்பந்தப்பட்ட அமைச்சர்களைத்தான் இளைய அமைச்சர்கள் நாடுவது வழக்கம்.

ஆனால், முதல்முறையாக அமைச்சராகியுள்ள பூங்கோதை இந்த வழக்கத்தை மீறியது மட்டுமல்ல, முதல்வரின் கட்டுப்பாட்டில் உள்ள ஐ.பி.எஸ். அதிகாரியிடமே தொடர்பு கொண்டு பேசி, தன் உறவினருக்குச் சாதகமாக நடந்து கொள்ளுமாறு கூறியிருக்கிறார். தன்னுடைய எல்லையிலேயே பூங்கோதை தலையிட்டிருப்பதுதான் முதல்வரின் கோபத்துக்குக் காரணம் என சொல்லப்படுகிறது.

பதவி விலகல் கடிதம் பெற்று, அதையும் அறிவித்துவிட்ட நிலையில், அதை ஏற்றாக வேண்டிய நிர்பந்தத்தில் முதல்வர் இருப்பதாக மூத்த அமைச்சர்கள் சொல்கின்றனர்.

அக் கடிதத்தை ஏற்காமல் போனால், “நேர்மை தவறியதற்காக பூங்கோதை பதவி விலகியபோதிலும், அதை முதல்வர்தான் ஏற்க மறுத்துவிட்டார்’ என்றாகிவிடும். அப்படியொரு சங்கடம் ஏற்படுவதை முதல்வர் விரும்பமாட்டார் என்று அமைச்சர்கள் சிலர் கருதுகின்றனர்.

தொலைபேசி உரையாடல் எப்படி வெளியில் தெரிந்தது என்பதற்கு முக்கியத்துவம் கொடுத்து விசாரிக்க ஆணையிட்டுவிட்டு, பூங்கோதை பதவி விலகலை ஏற்காமல் போகலாம் என்று சொல்லப்பட்டாலும், விசாரணைக்கு ஆணையிட்டாலே, அமைச்சர் பதவி விலகி ஆக வேண்டும் என்ற மரபையும் பின்பற்றியாக வேண்டியிருக்கும்.

பூங்கோதையைக் காப்பாற்றுவதற்காக லஞ்ச ஒழிப்புக் காவல் துறை தலைவர் உபாத்யாயா மீது குற்றச்சாட்டு கூறிடவும் முயற்சிப்பதாகத் தெரிகிறது.

தகவல் வெளியானது எப்படி என்று விசாரிக்கத் தொடங்கினால், தவறு நடக்கக் கூடாது என்பது முக்கியமா? அல்லது நடந்த தவறு வெளியாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது முக்கியமா? என்ற கேள்வியும் எழும்.

இவர் மட்டும் பதவி விலகியது போதாது என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார். அதிகார துஷ்பிரயோகம் செய்ததை ஒப்புக்கொண்ட மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு மீதும், காவல் நிலையத்தில் இருந்து கைதிகளை மீட்ட விவகாரத்தில் மாநில அமைச்சர் கே.பி.பி. சாமி மீதும் என்ன நடவடிக்கை என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

பூங்கோதையின் பதவி விலகல் ஏற்கப்படும்போது, மேற்குறிப்பிட்ட இரு கேள்விகளுக்கும் முதல்வர் பதில் தர வேண்டியிருக்கும். அவருக்கு நேரடி அரசியல் அனுபவம் இல்லை என்பது ஒரு குறை. மேல்தட்டு அணுகுமுறையுடன் நடந்து கொள்கிறார் என்பது அவருடைய கட்சியினரின் குற்றச்சாட்டாக இருந்தது.

வியாழக்கிழமை காலையில் அமைச்சரவைக் கூட்டம் நடக்க உள்ளதாகப் பரபரப்பாகப் பேசப்பட்டது. பூங்கோதை பற்றி அதில் முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அக் கூட்டமே நடக்காமல் போய்விட்டது.

முதல்வரின் அடுத்த நடவடிக்கையைத் தமிழகம் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கிறது.

Posted in DMK, Govt, India, Law, Politics, Tamil, Tamil Nadu | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »