Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Kovi Manisekaran in Tamil Films – Literature & Kollywood: Thinathanthi Movie Series

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 23, 2007

திரைப்பட வரலாறு 773
கோவி.மணிசேகரன்
கே.பாலசந்தரிடம் பெற்ற அனுபவங்கள்

டைரக்டர் கே.பாலசந்தரிடம் கோவி.மணிசேகரன் 21/2 ஆண்டு காலம் உதவியாளராகப் பணியாற்றினார். அந்த காலத்தில் டைரக்ஷன் துறையில் அவர் பெற்ற அனுபவங்கள் ஏராளம்.

பாலசந்தரிடம் பணியாற்றியபோது ஏற்பட்ட அனுபவங்கள் குறித்து கோவி.மணிசேகரன் கூறுகிறார்:

“விஜயதசமி அன்று இயக்குனர் சிகரம் கே.பாலசந்தரிடம் உதவியாளனாகச் சேர்ந்தேன். `அரங்கேற்றம்’ படம்தான் எனக்கும் ஆரம்ப அரங்கேற்றம்.

அவரது சிந்தனை நான்கு திசைகளிலும் சிறகடிக்கும். சிந்தனை அளவுக்கு அவரிடம் சினமும் குடிபுகுந்திருந்தது. ஆயினும் முரட்டுக்கோபம் அல்ல; முன்கோபம்.

குருகுல வாசம்

எவருக்கும் `அது இது’ என்று எடுத்துச் சொல்லமாட்டார். புத்தி உள்ளவன் புரிந்து கொள்ள வேண்டும்.

ஏறத்தாழ இரண்டரை வருடங்கள் அந்த குருகுலத்து ஏணிப்படிகளை எண்ணலானேன். நானே யோசிப்பேன்; நானே ஆய்வேன்; நானே புரிந்து கொள்வேன்.

டைட்டிலில் பெயர்

அரங்கேற்றம் டைட்டிலில் ஒரு குடுகுடுப்பைக்காரன் `நல்ல காலம் வருது, நல்ல காலம் வருது’ என்று குடுகுடுப்பையைக் குலுக்குவான். அவன் உருவத்தின் மீது என் பெயர் வரும். துணை டைரக்ஷன் – கோவி.மணிசேகரன் என்று! ஆம்; தனி டைட்டில் கார்டுதான்!

இப்படி தனி டைட்டில் போட்டது குறித்து எங்கள் குழுவில் பிரச்சினை எழுந்தது. குரு கே.பாலசந்தர் சொன்னார்: “அவர் இலக்கிய சாம்ராட் விருது பெற்றவர். நான் அவரை இறக்கி மதித்தால், அவருடைய வாசகர்கள் என்னை இறக்கி மதிப்பிடுவார்கள். எனவே இதுதான் அறம்.”

அவரது பதில், பலருக்கு இரும்பைக் காய்ச்சி இறக்கியது போலிருந்தது. அன்று முதலே, என் மீது சிலருக்கு எரிச்சல் ஏற்பட்டது.

இந்திப்படம் செய்கிற போதுகூட, பாலசந்தர் என்னை இறக்கிப் பார்த்ததில்லை. அவருக்கு எழும் இலக்கிய ஐயங்களை நான் அண்ணாந்து வழங்கியதில்லை; அடிபணிந்து வழங்கியிருக்கிறேன்.

இருமுறை அவர் என்னை கோபித்துக் கொண்டிருக்கிறார்.

ஒன்று: வசனத்தாளில் திருத்தப்பட்ட வசனங்களை வரிசையாக எழுதத் தவறியது.

மற்றொன்று: மைசூரில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோது, கன்னடத்தில் அதிகமாகப் பேசப்பட்ட கலை நுணுக்கங்கள் நிறைந்த படம் அருகேயுள்ள ஒரு திரையரங்கில் ஓடிக்கொண்டிருந்தது. அந்தப் படத்தைப் பார்க்க விரும்பினேன். துணைக்கு வர யாரும் இல்லை. ஒரு துணை நடிகையும் அந்தப் படத்தைப் பார்க்கத் துடித்தாள்.

இயக்குனருக்கு எங்கே தெரியப்போகிறது என்று நினைத்து படத்துக்குப்போனோமë. திரும்பி வரும்போதுதான் தெரிந்தது, கருகருவென ஆசான் காத்திருந்தது!

நடிகையோ ஓடி ஒளிந்து கொண்டாள். நான் அகப்பட்டுக்கொண்டேன். கே.பி.யின் கண்களில் கோபம். என்னை ஏசிவிட்டு, பிறகு ஒரு குழந்தைக்குக் கூறுவது போல் சொன்னார்:

“கோவி! நீங்கள் பிரபல எழுத்தாளர். அவளோ நடிகை. நாளை இது பத்திரிகைகளில் வந்தால் எவருடைய பெயர் எப்படிக் கெடும் யோசித்தீர்களா?”

இவ்வாறு பாலசந்தர் கூறியதும், நான் தலை குனிந்தேன். தவறுக்காக மன்னிப்பு கேட்டேன்.

விடை பெற்றேன்

பாலசந்தரிடம் 21/2 ஆண்டுகள் பணியாற்றினேன். அவரிடம் இருந்து விடைபெறும் நேரம் வந்தது. கண்ணீருடன் விடைபெற்றேன். அவர் கண்களும் கலங்கின.”

இவ்வாறு கோவி.மணிசேகரன் கூறினார்.

“பாலசந்தரிடம் இருந்து ஏன் விலகினீர்கள்?” என்று கேட்டதற்கு மணிசேகரன் சொன்னார்:

“சினிமா துணை டைரக்டராக பணியாற்றியபோது, எனக்கு கிடைத்த வருமானம் குறைவு. அதற்குமுன் புத்தகம் எழுதுவதன் மூலம்தான் வாழ்க்கை நடந்தது. சினிமாவில் பணியாற்றியபோது, மனைவியின் நகைகளை விற்று குடும்பம் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.

“திரைத்தொழில் கற்று என்ன சாதித்து விடப்போகிறீர்கள்?” என்று என் அன்பு மனையாள் கண்ணீருடன் கேட்ட கேள்விக்கு என்னால் பதில் சொல்ல இயலவில்லை.

தவிரவும், பாலசந்தரின் முக்கிய உதவியாளராக விளங்கிய அனந்துடன் எனக்கு மனஸ்தாபம் ஏற்பட்டது.

இத்தகைய காரணங்களால், நான் பிரிய நேர்ந்தது” என்று கூறிய மணிசேகரன், தொடர்ந்து சொன்னார்:

எதிர்பாராத திருப்பம்

இந்த சமயத்தில், என் வாழ்க்கையில் எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டது.

நான் எழுதிய “தென்னங்கீற்று” என்ற நாவல், புத்தகமாக வெளிவந்தது. அதைப் பாராட்டி, “இந்து” நாளிதழில் விமர்சனம் வெளியாகியிருந்தது.

பெங்களூரைச் சேர்ந்த பாபாதேசாய் என்ற படத்தயாரிப்பாளர், அந்த விமர்சனத்தைப் படித்துவிட்டு, அதைப் படமாக்க விரும்பி, என்னைத் தேடி வந்தார்.

“இந்து பத்திரிகையில் விமர்சனம் படித்தேன். கதை முழுவதையும் சொல்லுங்கள்” என்று கூறினார். எனக்கே புரியாத எதிர்பாராத அதிர்ச்சி.

நான் கதையை ஆங்கிலத்தில் சொன்னேன். பாலசந்தர் பட்டறையில் இருந்ததால், சினிமாவுக்கு ஏற்றபடி கதை சொல்லப் பழகியிருந்தேன். பட அதிபரை கவரும் விதத்தில் கதையைச் சொல்லி கலக்கினேன்.

கதையைக் கேட்டதும் அவர் கண்களில் நீர் மல்கியது. “இக்கதையை கன்னடத்தில் படமாக எடுக்கிறேன். கதைக்கு என்ன விலை?” என்று கேட்டார்.

வெறும் கதையை விற்பதற்கா 21/2 ஆண்டுகள் திரைத்தவம் செய்தேன்!

“தமிழில் எடுப்பதானால், கதையைத் தருகிறேன். அதுவும் வசனத்தை நானே எழுதி, டைரக்ட் செய்ய வேண்டும்” என்று கூறி, பாலசந்தரிடம் பணியாற்றியது பற்றி விவரித்தேன்.

பாலசந்தர் பெயரைச் சொன்னதும், பாபாதேசாய் மகிழ்ந்து போனார். “தமிழிலும், கன்னடத்திலும் எடுப்போம். ஒரே நேரத்தில் இரு மொழிகளில் எடுக்க உங்களால் முடியுமா?” என்று கேட்டார்.

“ஏன் முடியாது?” என்று திருப்பிக் கேட்டேன்.

“அப்படியென்றால் ஆகட்டும். திரைக்கதை எழுதத் தொடங்கலாம்” என்று கூறிவிட்டு, முறைப்படி ஒப்பந்தம் போட்டு, அட்வான்சும் வழங்கினார்.”

—————————————————————————————————————————————————————————–
வரலாற்றுச் சுவடுகள் :திரைப்பட வரலாறு :(774)
கோவி.மணிசேகரன் இயக்கத்தில்
“தென்னங்கீற்று”, 2 மொழிகளில் படமாகியது!
கன்னடத்தில் வெற்றி; தமிழில் தோல்வி

கோவி.மணிசேகரன் எழுதிய “தென்னங்கீற்று” என்ற நாவல், அவருடைய டைரக்ஷனில் தமிழ், கன்னடம் ஆகிய மொழிகளில் படமாகியது. இந்தப்படம் கன்னடத்தில் வெற்றி பெற, தமிழில் தோல்வி அடைந்தது.

“தென்னங்கீற்று” கதையின் நாயகி பெயர் வசுமதி. இருபத்தெட்டு வயது வரை பூப்படையாத பெண் அவள்.

ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து, கோவி.மணிசேகரன் இந்த நாவலை எழுதியிருந்தார்.

தமிழ்ப் படத்துக்கு கதாநாயகியாக சுஜாதாவும், கதாநாயகனாக விஜயகுமாரும் ஒப்பந்தம் ஆனார்கள்.

கன்னடப்படத்துக்கு “நிரீக்ஷே” (எதிர்பாராதது) என்று பெயரிடப்பட்டது. அப்போது கன்னடத்தில் மிகப்பிரபலமாக இருந்த கல்பனா, (கன்னட) மஞ்சுளா ஆகியோர் கன்னடப்படத்துக்கு ஒப்பந்தம் ஆனார்கள். தமிழில் இரண்டாவது கதாநாயகியாக (டாக்டர் வேடத்தில்) நடிக்கவும் கல்பனா சம்மதித்தார்.

கன்னடப் படவுலகில் நெம்பர் 1 இசை அமைப்பாளராக விளங்கிய ஜி.கே.வெங்கடேஷ், இரு படங்களுக்கு இசை அமைத்தார்.

பாலசந்தர் எச்சரிக்கை

“தென்னங்கீற்று” படப்பூஜை சென்னை பிரசாத் ஸ்டூடியோவில் நடந்தது. மணிசேகரன் கேட்டுக்கொண்டதன் பேரில், கே.பாலசந்தர் இந்த படப்பூஜையில் கலந்து கொண்டு, கேமராவை முடுக்கி வைத்து, படப்பிடிப்பை தொடங்கி வைத்தார்.

ஒரே நேரத்தில் இரு மொழிகளிலும் படத்தை இயக்கப் போகிறேன் என்று கோவி.மணிசேகரன் சொன்னதும், “என்ன கோவி! முதன் முதலாக டைரக்ட் செய்யப் போகிறீர்கள். எதற்கு இந்த விஷப்பரீட்சை?” என்று கேட்டார்.

“ஒரு சோதனைதான்!” என்றார், மணிசேகரன்.

“அதற்கில்லை. நானும் தென்னங்கீற்று நாவலைப் படித்திருக்கிறேன். படம் எடுக்க முடியுமா என்று பலநாள் யோசித்து, `முடியாது’ என்று கைவிட்டேன். ஒரு பெண் பருவம் அடையவில்லை என்று, 13,000 அடி வரை எப்படி சொல்லப்போகிறீர்கள்? கத்தி மேல் நடப்பது போன்ற இந்தக் கதையை, ஒரே நேரத்தில் இரு மொழிகளில் தயாரிக்கிறீர்கள். இது விஷப்பரீட்சை. ஜாக்கிரதையாக இருங்கள்” என்று எச்சரித்தார்.

படப்பிடிப்பை, இரு மொழிகளிலும், ஏக காலத்தில் வேகமாக நடத்தி, குறிப்பிட்ட காலத்தில் முடித்தார், மணிசேகரன்.

படத்தை வாங்க, விநியோகஸ்தர்கள் ஈபோல் மொய்த்தனர். இரு மொழிகளிலும் பட அதிபருக்கு கொள்ளை லாபம்.

“தென்னங்கீற்று” 4-7-1975-ல் ரிலீஸ் ஆயிற்று. அதே சமயத்தில் கன்னடப்படமும் கர்நாடகத்தில் வெளியாயிற்று.

கன்னடப்படம் 75 நாட்கள் வெற்றிகரமாக ஓடியது. தமிழ்ப்படம் 4 வாரம்தான்!

கதையின் மையக்கருத்தை பெண்கள் ஏற்காததால், தமிழ்ப்படம் பெண்களை கவரவில்லை. ஆனால், கர்நாடக ரசிகர்கள், புதுமையை ஏற்றுக்கொண்டார்கள்.

“தென்னங்கீற்று” படத்தைப் பார்த்த டைரக்டர் எஸ்.பி.முத்துராமன், “இது விருதுக்கு உரிய படம். அனுப்பி வைக்கலாம்” என்று யோசனை சொன்னார்.

அவர் கூறியபடியே, “தென்னங்கீற்று” தமிழ்த் திரைப்பட ரசிகர்கள் சங்க விருதைப் பெற்றது. கன்னட “நிரீக்ஷே”, கர்நாடக அரசின் விருதைப் பெற்றது.

பட அதிபர் எங்கே?

பட அதிபர் பாபாதேசாய் புத்திசாலி. நிறைய லாபத்தை சம்பாதித்தவர், மீண்டும் படம் எடுப்பதில்லை என்று முடிவு செய்து, வேறு வியாபாரத்துக்கு போய்விட்டார்.

“தென்னங்கீற்று” படம் தயாராகி முடிந்திருந்தபோது, அடுத்த படத்துக்கு அட்வான்ஸ் தர பல பட அதிபர்கள் கோவி.மணிசேகரன் வீட்டுக்கு படையெடுத்தனர். அவற்றை மணிசேகரன் ஏற்கவில்லை. “படம் வரட்டும்; பிறகு பார்ப்போம்” என்று கூறிவிட்டார்.

படம் வெளிவந்து, சரிவர ஓடாததால், அந்தப் பட அதிபர்களில் ஒருவர்கூட மணிசேகரனைத் தேடி வரவில்லை. மூலைக்கு ஒருவராக ஓடி மறைந்துவிட்டனர்!

“இலக்கியத் துறையில் வெற்றி மேல் வெற்றி பெற்றோம். கலைத்துறையில் மட்டும் ஏனிந்த தோல்வி?” என்று எண்ணி வருந்தினார், மணிசேகரன்.

`இனி திரைப்படத்துறையே வேண்டாம்’ என்று தீர்மானித்து, மீண்டும் இலக்கியப்பணியில் ஈடுபட்டார். பாதியில் நின்றிருந்த “யாகசாலை” என்ற நாவலை எழுதி முடித்தார்.

மனோரஞ்சிதம்

இந்த சமயத்தில், சிவகாசியில் காலண்டர் வியாபாரம் செய்து வந்த சிதம்பரம் என்ற தொழில் அதிபர், மணிசேகரனை சந்தித்தார்.

“தென்னங்கீற்று” படத்தால் ஈர்க்கப்பட்டவர் அவர்.

மணிசேகரனிடம் சிதம்பரம் சொன்னார்:

“மணிசேகரன் அய்யா! தென்னங்கீற்றில், வயதுக்கு வராத ஒரு பெண்ணை கதாநாயகியாகப் படைத்தது பெரிதல்ல. அவள் வயதுக்கு வந்து விட்டாள் என்பதை உணர்த்த, திரையில் ரத்தச் சிதறலைக் காட்டினீர்களே… ஆ! அது அற்புதம். அதில் மயங்கியே, உங்களை வைத்து ஒரு படம் தயாரிக்க முடிவு செய்திருக்கிறேன்” என்றார்.

மணிசேகரன், தனது “யாகசாலை”, “மனோரஞ்சிதம்” ஆகிய கதைகளைச் சொன்னார். “மனோரஞ்சிதம்” அவருக்குப் பிடித்துப்போயிற்று. அதை படமாக்குவதாகச் சொன்னார்.

பட வேலைகள் தொடங்கின. டைரக்டர் துரையால் தமிழ்ப்பட உலகுக்கு அறிமுகம் செய்யப்பட்ட சுமித்ராதான் கதாநாயகி. விஜயகுமார் கதாநாயகன். மற்றும் எஸ்.வி.சுப்பையா, மனோரமா, தேங்காய் சீனிவாசன், புதுமுகம் எம்.எஸ்.வசந்தி, எம்.என்.ராஜம் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டனர்.

திரைக்கதை, வசனத்தை எழுதி முடித்தார், மணிசேகரன்.

“மனோரஞ்சிதம்” படத்தொடக்க விழா அமர்க்களமாக நடந்தது. விழாவுக்கு வந்த அனைவருக்கும் மனோரஞ்சித மலர் வழங்கப்பட்டது!

—————————————————————————————————————————————————————————–

வரலாற்றுச் சுவடுகள் : திரைப்பட வரலாறு :(776)
கோவி.மணிசேகரன் சினிமாவில் தோல்வி; சின்னத்திரையில் வெற்றி

சினிமாவில் தோல்வியைச் சந்தித்த கோவி.மணிசேகரன், டெலிவிஷனுக்கு தொடர்கள் எழுதி வெற்றி பெற்றார்.

“மனோரஞ்சிதம்” திரைப்படம் வெளிவராமல் போனதால் மணிசேகரன் மனம் வருந்தினார் என்றாலும், சினிமா மோகம் அவரை விடவில்லை.

யாகசாலை

கீதையை அடிப்படையாக வைத்து அவர் எழுதிய “யாகசாலை” என்ற நாவலை சொந்தமாக படமாக்க எண்ணினார். 1,200 பக்கங்கள் கொண்ட பெரிய நாவல் இது.

“இலக்கிய உலகில் பேரும் புகழுமாக இருக்கிறீர்கள். சினிமா நமக்குத் தேவையா?” என்று மனைவி சொன்னதை அவர் கேட்கவில்லை.

வேகமாக வசனங்களை எழுதி முடித்தார்.

இவருடைய நாவல்களில் மனதைப் பறிகொடுத்து, இவருக்கு நண்பரானவர் ஜெமினிகணேசன். அவருக்கு படத்தில் ஒரு முக்கிய வேடம் கொடுக்கத் தீர்மானித்தார்.

இதன்பின் நடந்தது பற்றி மணிசேகரன் கூறியதாவது:-

எம்.ஜி.ஆர்.

“யாகசாலை நாவலைப் படித்துப் பாராட்டியவர், எம்.ஜி.ஆர். நான் அந்த நாவலைப் படமாக்கப்போகிறேன் என்பதை அறிந்து `இது புரட்சிகரமான நாவல். படமாக வந்தால், நாவலின் ஜீவன் கெட்டுப்போகும். படமாக்கும் முயற்சியைக் கைவிடுங்கள் என்று கூறினார்.

நான் கேட்கவில்லை. அதாவது, என் விதி, அவர் அறிவுரையைக் கேட்க மறுத்து விட்டது!

படப்பிடிப்பைத் தொடங்குவதற்கான ஏற்பாடுகள் தொடர்ந்தன.

இந்தப் படத்தின் கதாநாயகி, நல்ல குடும்பத்தில் பிறந்து, விதி வசத்தால் கற்பை இழக்க, பிறகு அதுவே தொழிலாய் போய்விட, கடைசியில் நோய்வாய்படுகிறாள்.

இந்தக் காலக்கட்டத்தில் “சிவப்பு ரோஜாக்கள்” படத்தில் அறிமுகமாகியிருந்த வடிவுக்கரசிக்கு, கதாநாயகி வேடம் கொடுத்தேன்.

படத்தில் இரு கதாநாயகர்கள். ஒருவர், கீதையில் வரும் கண்ணன் பாத்திரத்துக்கு ஒப்பானவர். அந்தக் கண்ணன் தேர் ஓட்டினான். இந்த கண்ணன் குதிரை ஓட்டுபவன். இந்தப் பாத்திரத்துக்கு பொருத்தமான நடிகர் அமையவில்லை. பலபேரை பார்த்தும் திருப்தி ஏற்படவில்லை.

விஜயகாந்த்

இன்று திரை உலகிலும், அரசியலிலும் விஸ்வரூபம் எடுத்துள்ள விஜயகாந்த், அப்போதுதான் திரைப்பட உலகுக்கு வந்திருந்தார். அவரை என்னுடைய `கண்ணன்’ கதாபாத்திரத்தில் நடிக்க வைக்கலாம் என்று முடிவு செய்த நேரத்தில், விதி விளையாடியது.

என் கையில் போதிய பணம் இல்லை. படப்பிடிப்புக்கு செல்ல, மேலும் ரூ.30 ஆயிரம் தேவைப்பட்டது. அப்போது ஒரு புதுமுக நடிகர் என்னிடம் வந்தார். நல்ல கதாபாத்திரம் கொடுத்தால் ரூ.30 ஆயிரம் `பைனான்ஸ்’ செய்வதாகக் கூறினார். இதனால் நான் விஜயகாந்தை இழக்க நேரிட்டது. அன்று நான் அவரை பயன்படுத்தி இருந்தால், ஒரு சரித்திரத்தின் முதல் அத்தியாயத்தைப் பார்த்தவனாக இருந்திருப்பேன். விதியின் சதியால், அந்த வாய்ப்பு எனக்குக் கிட்டாமல் போயிற்று.

கிராமத்தில் படப்பிடிப்பு

படப்பிடிப்பு தொடங்கியது. முதலில் வெளிப்புறக் காட்சிகளை எடுக்கத் தீர்மானித்தேன். மதராந்தகத்தின் அருகேயுள்ள கோட்டைக்காடு கிராமத்தில் படப்பிடிப்பு நடந்தது. ஒய்.ஜி.மகேந்திரன், கே.நட்ராஜ், டி.ஆர்.ராமச்சந்திரன் ஆகியோர் நடித்தனர்.

மேற்கொண்டு, ஸ்டூடியோவில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டபோது, மீண்டும் பணமுடை ஏற்பட்டது. அப்போது, இப்ராகிம் என்ற தயாரிப்பாளர் என்னை நாடி வந்தார். என்னுடைய “அகிலா” என்ற நாவல், நடிகை சுஜாதாவுக்கு மிகவும் பிடித்தமானதாகும். அவர் சொல்லி, அக்கதையை என்னுடைய இயக்கத்தில் படமாக்க விரும்பி, இப்ராகிம் வந்திருந்தார்.

வெளிப்படங்களுக்கு வசனம் எழுதி, டைரக்ட் செய்வதில்லை என்ற முடிவுக்கு வந்திருந்தேன். அதை அவரிடம் தெரிவித்து, “வேண்டுமானால் கதையை வாங்கிக் கொண்டு, நீங்களே தயாரியுங்கள். கூடுதலோ, குறைவோ, ஒரு தொகையை தவணை முறையில் கொடுக்காமல் மொத்தமாக கொடுத்துவிடவேண்டும்” என்று தெரிவித்தேன்.

அதன்படி அவர்கள் ஒரே `செக்’ கொடுத்தார்கள். அந்தத் தொகை, “யாகசாலை” படத்தை தொடர்ந்து உருவாக்க உதவியது.

யாகசாலை தயாராகிக் கொண்டிருந்தபோதே, “அகிலா” கதை “மீண்டும் பல்லவி” என்ற பெயரில் படமாக வெளிவந்தது. `கதை: கோவி.மணிசேகரன்’ என்று டைட்டிலில் போட்டார்கள்.

“யாகசாலை” 95 சதவீதம் முடிந்து விட்டது. ஜெமினிகணேசன் சம்பந்தப்பட்ட காட்சிகள்தான் பாக்கி. இந்த நிலையில் அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டதால், அவருடைய சம்மதத்தைப் பெற்று அந்தப் பாத்திரத்தில் பூரணம் விஸ்வநாதனை நடிக்க வைத்தேன். அவரும் நன்றாக நடித்தார்.

நிலத்தை விற்றேன்

படம் ரிலீஸ் தேதியை நெருங்கியபோது, ஒரு கடன்காரர் வந்து மென்னியைப் பிடித்தார். படத்தை, “அவுட்ரைட்” முறையில் நான் விற்று விட்டதால், படம் வெளியான பின்னர் பணம் வராது என்று அவர் நினைத்து விட்டார் போலும்!

வீடு கட்டுவதற்காக வாங்கியிருந்த நிலத்தை விற்று, கடனை அடைத்தேன்.

“யாகசாலை” ரிலீஸ் ஆகியது. நான்கே நாளில் ரிசல்ட் தெரிந்து விட்டது. படம் “அவுட்!” சென்னை எமரால்டு தியேட்டரில் மட்டும் நான்கு வாரம் ஓடியது.

அன்றே சினிமாவுக்கு தலைமுழுகத் தீர்மானித்தேன். ஒரு சனிக்கிழமையன்று, எண்ணை வாங்கி வரச்செய்து, தலைமுழுகினேன்!

என்னிடம் புகழ்வாய்ந்த – உறுதியான பேனா இருந்ததால், என் வாழ்க்கை தப்பியது. இல்லையென்றால், `நடுத்தெரு நாராயணன்’ ஆகியிருப்பேன். நான் வணங்கும் சக்தி என்னைக் காப்பாற்றினாள்.

இலக்கியப்பணி

தொடர்ந்து இலக்கியப்பணிகளில் ஈடுபட்டேன்.

சென்னை தொலைக்காட்சிக்கு, புதுமுகங்களை வைத்து நான் தயாரித்த “ஊஞ்சல் ஊர்வலம்” என்ற தொடர், பெரிய வெற்றி பெற்றது.

அதன் பிறகு திரிசூலி, அக்னிப் பரீட்சை முதலான தொடர்களும் வெற்றி பெற்றன.

பெரிய திரையில் வெற்றி பெறாமல் போன நான், சின்னத்திரையில் வெற்றி கண்டேன்.

சினிமாவில் இருந்து விடுபட்டு இலக்கியத்தில் கவனம் செலுத்தியதால், 3,571 பாடல்கள் கொண்ட “கோவி.ராமாயண”த்தை என்னால் எழுத முடிந்தது.

ரஜினிகாந்த்

நான் விதி பற்றி பல முறை குறிப்பிட்டேன். நமக்கு நல்ல வாய்ப்பு வரும்போது, விதி குறுக்கிட்டு கெடுத்து விடும். உதாரணத்துக்கு ஒன்று சொல்வேன்.

இந்நாளைய இணையற்ற நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், 1973-ல் சினிமா உலகில் நுழைய முயற்சி செய்து கொண்டிருந்த சிவாஜிராவ். நான் பாலசந்தரிடம் பயிற்சி பெற்றுவிட்டு, சினிமா தயாரிக்கலாம் என்று இருந்த நேரம்.

ரஜினியுடன் நடிப்பு பயின்ற கோபால் என்ற நண்பர், ரஜினிக்கு வாய்ப்பு கேட்டு வந்தார். படம் தொடங்கும்போது நிச்சயம் அவர் இடம் பெறுவார் என்று கூறினேன்.

ரஜினி என் வீட்டுக்கு வருவார். சிகரெட் வித்தைகளை பிள்ளைகளிடம் காட்டி மகிழ்விப்பார்.

இதற்கிடையே ரஜினி, “அபூர்வராகங்கள்” படத்தில் அறிமுகம் ஆகிவிட்டார். ஏராளமான படங்களுக்கு ஒப்பந்தம் ஆனார்.

“தென்னங்கீற்று” படம் ஆரம்பம் ஆனதும், ரஜினியிடம் பேசினேன். “குரு! இருபது நாட்களுக்கு என்னை விட்டு விடுங்கள். அப்புறம் ஒரு வாரம் பெங்களூர் வந்து உங்கள் மனதைக் குளிரச் செய்கிறேன்” என்றார்.

ஆனால், படத் தயாரிப்பாளரோ இதற்கு சம்மதிக்கவில்லை. ஏற்கனவே, மற்ற நடிகர் – நடிகைகளிடம் பெற்ற `கால்ஷீட்’படி உடனே படத்தைத் தொடங்க வேண்டும் என்றார். இதனால் என் படத்தில் ரஜினி இடம் பெறவில்லை. இதை விதி என்று சொல்லாமல், வேறு எப்படி சொல்வது?

சினிமா ரசிகர்களுக்கு…

சினிமா உலகில் நுழைந்து விடவேண்டும் என்ற ஆசை கொண்ட இளைஞர்களும், இளம் நங்கையர்களும் ஏராளம். அவர்களுக்கு ஒன்று சொல்வேன்:

`சினிமா என்பது பல ரசவாத வித்தைக் தெரிந்த ஒரு அழகான மாயமோகினி. அந்த மோகினியிடம் சென்றால், மீள்வது அரிது. அந்த மோகினியின் வித்தையில் பாதியேனும் தெரிந்தவர்கள் தப்பித்து திரும்பி வரலாம்; அல்லது மோகினியை அடிமைப்படுத்தி, அவளைக் காதலிக்கச் செய்யலாம். அந்த வித்தை தெரியாதவர்கள் நுழைந்து விட்டால், அந்த மோகினி நம் ரத்தத்தை உறிஞ்சி, சக்கையாகத்தான் துப்புவாள்!”

இவ்வாறு கோவி.மணிசேகரன் கூறினார்.

குடும்பம்

மணிசேகரன் – சரசுவதி தம்பதிகளுக்கு அம்பிகாபதி, மாமல்லன், செல்வக்கண்ணன் என்ற மூன்று மகன்கள். பீலிவளை, அம்மங்கை, ஸ்ரீ, சமயபுரி, வானதி என்று ஐந்து மகள்கள்.

மூத்த மகன் அம்பிகாபதி, இளம் வயதில் காலமாகிவிட்டார். மற்ற 7 பேரும் படித்து, பட்டம் பெற்றவர்கள். எல்லோருக்கும் திருமணம் ஆகிவிட்டது.

—————————————————————————————————————————————————————————–
திரைப்பட வரலாறு 775
“மனோரஞ்சிதம்” படப்பிடிப்பின்போது
எஸ்.வி.சுப்பையா கோபம்
படப்பிடிப்பு நின்றது

“மனோரஞ்சிதம்” படமாகும்போது, பல சோதனைகளைச் சந்தித்தது.

அதுபற்றி கோவி.மணிசேகரன் கூறியதாவது:-

“மனோரஞ்சிதம் நாவல், அக்காலத்தில் மிகப்பிரபலம்.

ஒரு சலவைத் தொழிலாளியின் மகள் தன் வீட்டுக்கு வரும் அழுக்குத் துணிகளில், ஒரு பட்டு ஜிப்பாவில் மட்டும் மனோரஞ்சிதம் வாசனை மணப்பதை கவனிப்பாள். அந்த சென்ட் வாசனையை வைத்து, அதை அணிபவன் எத்தகைய அழகான இளைஞனாக இருப்பான் என்று கற்பனை செய்வாள்; காதல் கொள்வாள். கடைசியில் அவன் ஒரு குஷ்டரோகி என்பதுதான் கிளைமாக்ஸ்!

எஸ்.வி.சுப்பையாதான், அந்த சென்ட் வாசனை ஜிப்பாக்காரராக நடித்தார்.

படப்பிடிப்பு நின்றது

4 பக்கங்கள் கொண்ட நீண்ட வசனத்தை அவர் பேசி நடிக்க வேண்டிய காட்சியைப் படமாக்கும்போது அவருக்கு சோதனை ஏற்பட்டது; எனக்கும் சோதனைதான்!

“ரத்தக்கண்ணீர்” படத்தில், எம்.ஆர்.ராதா பேசிக்கொண்டே உடம்பை சொறிந்து கொள்வார். அந்த பாணியில் நடிக்க வேண்டிய சுப்பையா, பேசும்போது சொறிய மறந்து விடுவார்; சொறியும்போது வசனம் மறந்துவிடும்!

10 முறை படம் எடுத்தும் காட்சி “ஓகே” ஆகவில்லை.

நேரம் பகல் ஒரு மணி. சாப்பாட்டு நேரம். இந்த காட்சியை எடுத்து விட்டால், நிம்மதியாக இருக்கும் என்று நினைத்தேன். “ஒன் மோர் டேக்” என்றேன்.

சுப்பையாவோ, “சாப்பிட்டு விட்டு வந்து முயற்சிக்கலாமே” என்றார்.

நான் விடவில்லை. “அண்ணே! இந்த ஒரு டேக்கில் ஓகே ஆகிவிடும் ப்ளீஸ்!” என்றேன்.

ஆனால் சுப்பையா, தன் “விக்”கை கழற்றி எறிந்தார். “பிரேக்” என்று கூறிவிட்டார்.

படப்பிடிப்பு முடிந்தது என்பதை குறிப்பிடும் “பிரேக்” என்ற சொல்லை டைரக்டர்தான் கூறவேண்டும். அதை சுப்பையா கூறியதால் கோபம் அடைந்தேன்.

“மிஸ்டர் சுப்பையா! `பிரேக்’ சொல்ல உங்களுக்கு அதிகாரம் இல்லை. பிளீஸ் கெட் அவுட்!” என்றேன்.

சுப்பையா கோபித்துக்கொண்டு, வீட்டுக்குச் சென்றுவிட்டார். படப்பிடிப்பு ரத்து ஆனது. ஒரு மாத காலம் படப்பிடிப்பு நடைபெறவில்லை.

சிவாஜிகணேசன் தீர்ப்பு

நான் எஸ்.வி.சுப்பையாவை அவமானப்படுத்தி விட்டதாக, அவர் தரப்பில் நடிகர் சங்கத்தில் புகார் கொடுத்தார்கள். நான் டைரக்டர்கள் சங்கத்தில், சுப்பையா மீது புகார் செய்தேன்.

அப்போது நடிகர் சங்கத் தலைவராக இருந்தவர் நடிகர் திலகம் சிவாஜிகணேசன். செயலாளர் மேஜர் சுந்தரராஜன்.

இரு தரப்பையும் அழைத்து சிவாஜி விசாரித்தார்.

பிறகு எஸ்.வி.சுப்பையாவை நோக்கி, “நீங்கள் இப்படி நடந்திருக்கக் கூடாது. ஒரு துரும்பைக் கிள்ளி, டைரக்டர் என்று சொன்னாலும், உரிய மரியாதை தரவேண்டும். கோவி.மணிசேகரன் பெரிய இலக்கியவாதி. விருதுகள் பெற்றவர். நாம் எல்லோரும் மதிக்கும் கே.பி.யின் மாணவர். ஒரு டேக் எடுக்க விட்டுக் கொடுக்காமல் `பிரேக்’ என்று நீங்கள் சொன்னது தவறு” என்றார்.

ஆனால், எஸ்.வி.சுப்பையா தொடர்ந்து நடிக்க மறுத்துவிட்டார். வாங்கிய பணத்தைத் திருப்பித் தந்துவிடுவதாகக் கூறினார்.

“வாங்கிய பணத்தைத் திருப்பித் தந்துவிடலாம். ஆனால் இதுவரை ஆன செலவை யார் தருவது? தயவு செய்து நடிக்க வாருங்கள்” என்று நான் கேட்டுக்கொண்டும், சுப்பையா பிடிவாதமாக மறுத்துவிட்டார்.

நான் கோர்ட்டுக்குப் போகப்போவதாகக் கூறினேன்.

சிவாஜியின் அன்பு

அப்போது சிவாஜி, மேஜர் சுந்தரராஜனை அழைத்து, “சுந்தர்ராஜா! நீ போய் அந்த குஷ்டரோகி வேடத்தில் நடித்துவிடு. பணம் எதுவும் கேட்காதே!” என்றார்.

சிவாஜி இவ்வாறு கூறியதும் மெய்சிலிர்த்துப் போனேன்.

சிவாஜி சொன்னபடியே, மேஜர் சுந்தரராஜன் அந்த வேடத்தில் நடித்துக் கொடுத்தார்.

மீண்டும் சிக்கல்

படம் 90 சதவீதம் வளர்ந்தபோது, படத்தயாரிப்பாளர் சிதம்பரத்துக்கும் அவருடைய பார்ட்னருக்கும் ஏதோ மனத்தாங்கல் ஏற்பட்டது. அந்த பார்ட்னருடன், என்னால் நியமனம் செய்யப்பட்ட இசை அமைப்பார் வி.குமாரும் சேர்ந்து கொண்டார்.

மூவரும் என்னை சந்தித்தார்கள். டைரக்டர் பொறுப்பில் இருந்து என்னை விலகிக் கொள்ளச் சொன்னார்கள்.

சிதம்பரம் நல்லவர். ஆனால், மற்ற இருவரும் செய்த சூழ்ச்சியினால் நான் டைரக்டர் பொறுப்பில் இருந்து விலகினேன்.

கிருஷ்ணன் – பஞ்சு

மீதிப்பகுதியை டைரக்டர்கள் கிருஷ்ணன்-பஞ்சுவை வைத்து, படத்தை முடிக்க முயற்சி செய்தார்கள்.

அவர்கள், அதுவரை படமாக்கியிருந்த காட்சிகளைப் போட்டு பார்த்தார்கள். பாதி புரிந்தது; பாதி புரியவில்லை.

நான் காட்சிகளைப் பகுதி பகுதியாக படமாக்கியிருந்தேன். அதனால் மேற்கொண்டு எப்படி எடுப்பது என்று அவர்கள் குழம்பினார்கள். “முக்கால்வாசி எடுத்த படத்தில் அரை பாகத்தை நீக்கிவிட்டு, கால் பாகத்தை வைத்துக்கொண்டு மீதி படத்தை எடுக்கலாம். சம்மதமா?” என்று டைரக்டர் பஞ்சு கேட்டார்.

மீண்டும் கால்ஷீட் பெறுவதில் உள்ள சிக்கல்கள், மேற்கொண்டு ஆகக்கூடிய செலவுகள் என்று யோசித்தபோது, சிதம்பரத்துக்கு தலை சுற்றியது.

“கோவி.மணிசேகரன் வந்து விளக்கங்கள் சொன்னால் தவிர, நாங்கள் இந்தப் படத்தை தொடர்ந்து டைரக்ட் செய்ய இயலாது” என்று கிருஷ்ணன் – பஞ்சு முடிவாக கூறிவிட்டார்கள்.

பட அதிபர்கள் வன்நெஞ்சம் அவர்களையே சுட்டது. இனி எப்படி அவர்கள் என்னிடம் வரமுடியும்?

படம் நின்று போனது.

சிதம்பரத்தை எண்ணி நான் வருந்தினேன் என்பதை விட, கண்ணீர் விட்டேன். அப்படிப்பட்ட நல்ல மனிதர் அவர்.

மனோரஞ்சிதம் வெளிவராமல் போனதில், இன்னமும் எனக்கு வருத்தம் உண்டு. நட்சத்திரங்கள் நிறைந்த படம். முக்கால்வாசி முடிந்தும், நின்று போய்விட்டது. என்ன செய்வது? இதுதான் விதி!”

இவ்வாறு மணிசேகரன் கூறினார்.

—————————————————————————————————————————————————————————–

பின்னூட்டமொன்றை இடுக