Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for ஒக்ரோபர் 17th, 2007

Turkey seeks OK for military move into northern Iraq

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 17, 2007

குர்து பிரிவினைவாதிகள் மீது எல்லை கடந்து தாக்க துருக்கிய நாடாளுமன்றம் அங்கீகாரம்

வட இராக்கில் குர்து இன பிரிவினைவாதிகளின் தளங்களின் மீது எல்லை கடந்த தாக்குதல்களை நடத்த, துருக்கிய இராணுவத்துக்கு அனுமதி அளித்து, துருக்கிய நாடாளுமன்றம் பெரும் ஆதரவுடன் வாக்கெடுப்பு ஒன்றை நிறைவேற்றியுள்ளது.

இந்த தாக்குதல்களை ஓராண்டு காலம் நடத்த அரசுக்கு அனுமதி அளிக்கும் தீர்மானம் ஒன்றை, 550 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 19 பேர் மட்டுமே எதிர்த்து வாக்களித்தனர்.

துருக்கிய பிரதமர் ரசெப் தயிப் எர்தோவான், இராக்குக்குள் ஊடுருவல்கள் என்பது உடனடியாக நடக்கப்போவதில்லை என்று கூறினார். ஆனால் குர்துகளின் பிராந்திய அரசோ, இந்த ஆமோதிக்கும் வாக்கெடுப்பு சர்வதேச சட்டத்தை மீறியதாகும் என்று கூறியது.

இந்த முடிவு அறிவிக்கப்படும்போது, அமெரிக்க அதிபர் புஷ், துருக்கியை பெரிய எல்லைகடந்த ஊடுருவல் எதையும் தொடங்கவேண்டாம் என்று வலியுறுத்தினார்.

 

அத்தகைய தாக்குதல் எதுவும், துருக்கியின் நலன்களுக்கு உகந்தது அல்ல என்றும் அவர் கூறினார்.

துருக்கிய நாடாளுமன்றத்தின் இந்த நடவடிக்கை, ஒரு புதிய இராஜிய முயற்சிகளை தூண்டியுள்ளது. இந்த இராஜதந்திர முயற்சிகள் எடுக்கப்படவேண்டும் என்பதுதான் ஒருவேளை இந்த நடவடிக்கையின் பின்னுள்ள பிரதானமான நோக்கமாக இருக்கலாம்.

ஆனால், இராக்கின் வடக்கே உள்ள, பெரும்பாலும் சுயாட்சி பெற்ற குர்திஷ் பகுதியில் இராக்கின் மத்திய அரசுக்கு பெருமளவு செல்வாக்கு, அதிகாரம் இல்லை என்பது துருக்கிக்கு தெரிந்ததுதான்.

உடனடியாக ஏதும் போர் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற சாத்தியக்கூறு பெருமளவு இல்லை என்று துருக்கிய பிரதமர் ரெசெப் தயிப் எர்தோவான் கூறியுள்ளார்.

பெரிய அளவில் ஏதும் ஆயத்த நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக வெளிப்படையாகத் தெரியவில்லை என்றுதான் மேலை நாடுகளின் இராணுவ வட்டாரங்களும் கூறுகின்றன.

ஆனால் அத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டால் அதற்கு துருக்கியில் பெருத்த மக்கள் ஆதரவு இருக்கும். எந்தவொரு தாக்குதலுக்கும் குறிப்பிடத் தகுந்த பின்விளைவுகளும் இருக்கும் என்பது நிச்சயம்.

இராக்கிய எல்லைக்கு அருகே துருக்கிய காவலரண்
இராக்கிய எல்லைக்கு அருகே துருக்கிய காவலரண்

துருக்கிய இராணுவம் சிறிய தாக்குதல்களை அல்லது வெறும் விமானத் தாக்குதல்களை மட்டும் நடத்துவது என்பதோடு நிறுத்திக் கொண்டால்,அதற்கு சிறிய பின்விளைவுகள்தான் இருக்கும்.

ஆனால் அவைகளில் கூட ஆபத்துக்கள் இருக்கின்றன.

கிர்க்குக் நகருக்கு அல்லது அருகில் உள்ள எண்ணெய்க் கிணறுகளுக்கு அச்சுறுத்தல்களை விளைவிப்பது போன்ற எந்த ஒரு நடவடிக்கையும் ஒரு பெரிய நெருக்கடியை தோற்றுவித்து, இராக்கிய படைகளையோ, அமெரிக்காவையோ அல்லது இரானையோகூட மோதலில் ஈடுபடுத்திவிடக்கூடும்

கவலையில் அமெரிக்கா

அதிபர் புஷ்
அதிபர் புஷ்

நிச்சயமாக அமெரிக்கா கவலையில் இருக்கிறது. இராக்கில் இதற்கு மேலும் இராணுவ சவால்களை சந்திக்க அதற்கு வசதிகள் இல்லை.

மேலும்,அங்கு அது இருப்பதற்கே, துருக்கியின் ஆதரவு அமெரிக்காவுக்கு பெருமளவில் தேவைப்படுகிறது.

மேலும், முதலாம் உலகப்போர் காலத்தில் துருக்கியில் ஆர்மீனியர்கள் பெருமளவில் கொல்லப்பட்டது ஒரு இனப்படுகொலை என்று கண்டனம் செய்து, அமெரிக்க காங்கிரஸ் கமிட்டி ஒன்று வாக்களித்த விவகாரம் தொடர்பாக, ஏற்கனவே, அமெரிக்க-துருக்கி உறவுகள் ஒரு சிக்கலான கட்டத்தில் உள்ளன.

அமெரிக்காவுக்கும் துருக்கிக்கும் இடையேயான உறவுகளில் விரிசல் ஏற்படும் ஆபத்தை உணர்ந்தோ என்னவோ, அமெரிக்க காங்கிரசில், இந்த பிரேரணைக்கு ஆதரவு குறைந்து வருவது போல் தோன்றுகிறது.

குழப்பத்தில் இருக்கும் ஒரு பிரதேசத்தில் தங்களை நிலை நிறுத்திக்கொள்ள முயலும் துருக்கியின் ஆட்சியாளர்களுக்கு, இவை எல்லாம் ஒரு சிக்கல் நிறைந்த கணக்குகள்தான்.


Posted in Abdullah, al-Assad, al-Maliki, America, Armenia, Attack, Bashar al-Assad, Cicek, defence, Defense, Diesel, Erdogan, Extremism, Extremists, Foreign, Gas, Government, Govt, guerrillas, Gul, incursion, International, Iraq, Kurd, Kurdish, Kurdistan Workers Party, Military, NATO, Nouri al-Maliki, oil, Ottoman, parliament, Petrol, PKK, Rebels, Syria, Talabani, Terrorism, Terrorists, Turkey, Turks, US, USA, War, World | Leave a Comment »

Kattumannarkoil District Court – Facilities & Infrastructure issues

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 17, 2007

நீதிமன்றத்துக்கு விமோசனம் எப்போது?

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம், அக்.17: சிதம்பரத்தை அடுத்த காட்டுமன்னார்கோயில் மாவட்ட குற்றவியல் மற்றும் உரிமையியல் நீதிமன்றம் ரூ.11,500 வாடகையில் பெரியகுளம் வடக்குத் தெருவில் உள்ள தனியாருக்குச் சொந்தமான கட்டடத்தில் 7 ஆண்டுகளாக இயங்கி வருகிறது.

இந்த கட்டடத்தில் போதுமான வசதி இல்லாததால் பொதுமக்களும், வழக்கறிஞர்களும் அவதியுற்று வருகின்றனர்.

சில ஆண்டுகளுக்கு முன் வழக்கறிஞர் சங்கம் இயங்கி வந்த கட்டடம் இடிந்து விழுந்தது. பின்னர் அக்கட்டடம் கட்டப்பட்டது. 3 கழிவறைகளில் இரு கழிவறைகள் இடிந்து விழுந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன. நீதிமன்ற வளாகத்தில் வாகனங்கள் நிறுத்த இடம் கிடையாது.

பொதுமக்கள் வெயில், மழை ஆகியவற்றுக்கு ஒதுங்கக்கூட இடம் கிடையாது. நீதிமன்றத்துக்கு புதிய கட்டடம் கட்ட வேண்டும் என காட்டுமன்னார்கோயில் வழக்கறிஞர்கள் சங்கம் சென்னை உயர் நீதிமன்ற பதிவாளருக்கு கோரிக்கை விடுத்னர். அதையடுத்து புதிய இடம் வாங்கி கட்டடம் கட்ட உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியது. அதற்காக காட்டுமன்னார்கோயில் உடையார்குடி ரம்சான் தைக்கால் என்னுமிடம் தேர்வு செய்யப்பட்டது.

மேற்கண்ட இடம் சிதம்பரம் – திருச்சி நெடுஞ்சாலையில் உள்ளது. சுமார் 100 சென்ட் வரை எவ்வித உபயோகமும் இன்றி உள்ளது. இந்த இடம் ரம்சான் தைக்கால் பள்ளிவாசலுக்கு சொந்தமானது. இந்த பள்ளிவாசல் சொத்து அனைத்தும் தமிழ்நாடு வக்ஃப் வாரிய கட்டுப்பாட்டிலும், மேற்பார்வையிலும் உள்ளது. இந்த சொத்தை வக்ஃப் வாரியத்திடம் இருந்து விலைக்கு வாங்கி புதிய நீதிமன்ற கட்டடம் கட்ட அனுமதி வழங்கி கடலூர் மாவட்ட முதன்மை நீதிபதிக்கு கடந்த 23-06-2006 அன்று சென்னை உயர் நீதிமன்றம் கடிதம் அனுப்பியுள்ளது.

ஏழை பாமர மக்கள் வசிக்கும் பகுதியான காட்டுமன்னார்கோயிலில் பெண்கள் அதிக அளவில் தங்கள் பிரச்னைகளுக்கு மனுக்கள் கொடுத்து நிலுவையில் இருந்து வருகிறது. பெண் வழக்கறிஞர்கள் இருந்தும் மகளிருக்கான சமரச மையம் இந்த நீதிமன்றத்தில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

காட்டுமன்னார்கோயில் நகர எல்லைக்குட்பட்ட பஞ்சாயத்து யூனியன் அலுவலக வளாகத்தில் அரசால் கட்டப்பட்ட திருமண மண்டபம் எந்த உபயோகமும் இல்லாமல் மூடப்பட்டு கிடக்கிறது. அனைத்து வசதிகளும் உள்ள இந்த இடத்துக்கு நீதிமன்றத்தை மாற்றலாம். இல்லையென்றால் தற்போது தாலுகா அலுவலகத்துக்கு புதிய கட்டடம் கட்டப்பட்டு மாற்றம் செய்யப்படவுள்ளது.

எனவே பழைய தாலுகா அலுவலக கட்டடத்தில் நீதிமன்றத்தை மாற்றலாம் என வழக்கறிஞர்கள் தெரிவிக்கின்றனர். ஏற்கெனவே 1977 வரை அங்கு நீதிமன்றம் இயங்கி வந்தது. அந்த நீதிமன்றம் பின்னர் பரங்கிப்பேட்டைக்கு மாற்றப்பட்டது.

எனவே காட்டுமன்னார்கோயில் நீதிமன்றக் கட்டடம் கட்ட மாவட்ட ஆட்சியர் இடத்தை விரைவில் தேர்வு செய்து அளித்தால் நீதிமன்றத்துக்கு விமோசனம் கிடைக்கும் என்கின்றனர் வழக்கறிஞர்கள்.

Posted in Attorney, Chidamabram, Chidambaram, Chidhambaram, Chithambaram, Court, facilities, infrastructure, Judges, Jury, Justice, Kaattumannaarkoil, Kaattumannaarkovil, Kaattumannarkoil, Kaattumannarkovil, Kattumannaarkoil, Kattumannarkoil, Kattumannarkovil, Law, Lawyer, Order, Panchayat, Panchayath, Panjayat, Panjayath, Parangipettai, Parangippettai, Parankipettai, Parankippettai, Thiruchi, Thiruchirapalli, Thiruchirappalli, Thiruchy, Trichy | 1 Comment »

SriKrishna Commission Report – Pay Commission suggests Firing over Suspension

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 17, 2007

ஆபத்துக்கு அச்சாரம்!

மத்திய அரசின் பரிசீலனையில் இருக்கும் ஒரு பிரச்னை நிர்வாகத்தையும், நாட்டின் வருங்காலத்தையும் பெரிய அளவில் பாதிக்கும் தன்மையது என்பதால், தவறான முடிவு எடுக்கப்பட்டுவிடுமோ என்கிற அச்சம் எழுகிறது. இந்த விஷயம் ஊடகங்கள் மத்தியிலும், மக்கள் மத்தியிலும் பெரிய அளவில் விவாதிக்கப்படவில்லை என்பது அதைவிட வருத்தமாக இருக்கிறது.

முன்னாள் நீதிபதி பி.எஸ். ஸ்ரீகிருஷ்ணா தலைமையில் அமைக்கப்பட்டிருக்கும் ஆறாவது ஊதிய கமிஷன் அடுத்த ஆண்டு மார்ச் அல்லது மே மாதம் தனது அறிக்கையை சமர்ப்பிக்க இருக்கிறது. இந்த அறிக்கையை அரசு அப்படியே ஏற்றுக்கொண்டாக வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை என்றாலும், அந்த அறிக்கையின் அடிப்படையில்தான் வருங்காலத்தில் அரசு ஊழியர்களின் பணி நியமனங்கள் மற்றும் அவர்களது ஊதியங்கள் தீர்மானிக்கப்படும்.

தான் சமர்ப்பிக்க இருக்கும் ஆறாவது ஊதிய கமிஷன் பற்றி சமீபத்தில் பேசும்போது, நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா ஒரு கருத்தைக் கூறியிருக்கிறார்.

இனிமேல், மூத்த அரசு அதிகாரிகளின் நியமனத்தில் வேலை உத்தரவாதப் பிரிவு அகற்றப்பட்டு, எப்போது வேண்டுமானாலும் அவர்கள் பணியிலிருந்து அகற்றப்படும் வகையில் திருத்தங்கள் செய்ய சிபாரிசு செய்யப்போவதாக அவர் கருத்துத் தெரிவித்திருக்கிறார்.

தற்போதைய அரசு ஊழியர்களுக்கான சேவை விதிகளின்படி, ஓர் அரசு ஊழியர் தவறிழைத்திருக்கிறார் என்று நிரூபிக்கப்படாதவரை அவரை வேலையிலிருந்து அகற்ற முடியாது. அதாவது, திறமையின்மை ஒருவரைப் பதவியிலிருந்து நீக்க சரியான காரணமாக இருக்காது.

நீதிபதி ஸ்ரீகிருஷ்ணாவின் கருத்துப்படி, அரசு ஊழியர்கள் தங்களுடைய பணி நிரந்தரமானது என்கிற காரணத்தால் அலட்சிய மனப்போக்குடன் செயல்படுகிறார்கள் என்பதுடன் பொதுமக்களையும் அவர்களது கோரிக்கைகளையும் பொருள்படுத்துவதில்லை. ஒருவகையில் நீதிபதி ஸ்ரீகிருஷ்ணாவின் கூற்றில் உண்மை இருக்கிறது. ஆனால், அவர் மறந்துவிடும் மற்றொரு பக்கமும் இருக்கிறது.

அரசு அதிகாரிகளை, அரசியல்வாதிகளும் மேலதிகாரிகளும் இடமாற்றம் செய்ய முடியுமே தவிர பணியிலிருந்து அகற்ற முடியாது என்பதால்தான், இன்னமும் பல அதிகாரிகள் நேர்மையாகவும் பயமின்றியும் செயல்பட முடிகிறது.

ஆட்சியில் இருப்பவர்களிடம் பதவி நீக்கம் செய்யும் அதிகாரத்தை அளித்துவிட்டால், தங்களுக்கு அடிபணிந்து நடக்காத அதிகாரிகளை அகற்றிவிட்டு, குற்றேவல் புரியத் தயாராக இருக்கும் அதிகாரிகளை மட்டும்தான் வைத்துக் கொள்வார்கள். இதுவே, நிர்வாகம் சீர்கெடவும், அரசு இயந்திரத்தை துஷ்பிரயோகம் செய்யவும், ஊழல்கள் அதிகரிக்கவும் வழிகோலிவிடும் என்பது ஏனோ நீதிபதி ஸ்ரீகிருஷ்ணாவுக்குத் தெரியாமல் போய்விட்டது.

தனியார் வர்த்தக நிறுவனங்களிலுள்ள திறமையும் சுறுசுறுப்பும் ஏன் அரசு நிர்வாகத்தில் இல்லை என்பதற்கு, அரசு ஊழியர்களின் சேவை விதிகள்தான் காரணம் என்பது நீதிபதி ஸ்ரீகிருஷ்ணாவின் கருத்து. முதலாவதாக, அரசு இயந்திரத்தை, வியாபார நிறுவனங்களுடன் ஒப்பிடும் போக்கு அபத்தமானது. மக்களின் சேவைக்காக ஏற்படுத்தப்பட்டிருக்கும் அரசு நிர்வாகமும், வியாபார லாபத்துக்காக நடத்தப்படும் தொழில் நிறுவனங்களும் ஒன்றுக்கொன்று முரண்பட்டவை. எந்தவிதத்திலும் ஒப்பிடத்தக்கவை அல்ல.

அரசு நிர்வாகம் செம்மையாக இல்லாமல் இருப்பதற்கும், மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்காமல் இருப்பதற்கும், சுறுசுறுப்பாகவும் பொறுப்புணர்வுடனும் இயங்காமல் இருப்பதற்கும் காரணம், அந்த நிர்வாகத்தை நடத்துகின்ற நமது அரசியல் தலைவர்கள்தான் மிக முக்கியமான காரணம் என்பதை மறந்துவிடக் கூடாது. நமது அரசியல்வாதிகளின் தரத்திலும், அவர்களது செயல்பாடுகளிலும், கண்ணோட்டத்திலும் மாறுதல் ஏற்படாத வரையில் நிர்வாகச் சீர்திருத்தம் என்பது வெறும் கானல்நீராகத்தான் இருக்க முடியும். ஆட்சியாளர்கள் திறமைசாலிகளாகவும், தூய்மையானவர்களாகவும் இருப்பார்களேயானால், அரசு நிர்வாகமும் அதற்குத் தகுந்தாற்போல மாறும் தன்மையது என்பதுதான் உண்மை.

அரசு ஊழியர்களுக்கான சேவை விதிகளில் மாற்றம் செய்யப்பட்டு, அவர்களை எப்போது வேண்டுமானாலும் பணிநீக்கம் செய்யும் அதிகாரம் ஆட்சியாளர்கள் கையில் கொடுக்கப்படுவது ஆபத்துக்கு அச்சாரம் போடும் விஷயம். இதனால் பாதிக்கப்படப் போவது திறமையற்றவர்களும் ஊழல் பேர்வழிகளுமல்ல. மாறாக, திறமைசாலிகளும் நேர்மையானவர்களும்தான். விபரீதத்தை விலை கொடுத்து வாங்கிவிடக் கூடாது!

Posted in Appeals, Commission, Compensation, Corruption, employees, Fired, Government, Govt, job, Justice, kickbacks, Krishna, Law, Mull, Order, Pay, Report, Salary, Security, Sri Krishna, SriKrishna, Suggestions, Suspend, Suspension, Work | Leave a Comment »

Tamil Nadu Govt Cinema Awards Ceremony details – Karunanidhi, Rajni & Kamal speech

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 17, 2007

சேது திட்டத்துக்கு உரிய தீர்வு காண வேண்டும்: ரஜினி

Kalainjar karunanidhi DMK Govt Awards Functionசென்னை, அக்.17: சேதுசமுத்திர திட்டத்துக்கு முதல்வர் கருணாநிதி உரிய தீர்வு காணவேண்டும் என ரஜினி காந்த் தெரிவித்தார்.
2005 மற்றும் 2006-ம் ஆண்டுக் கான தமிழக அரசின் திரைப் பட விருது வழங்கும் விழா சென்னையில் செவ்வாய்க்கி ழமை நடைபெற்றது. இவ்விழா வில் ரஜினிகாந்த் பேசியதாவது: நல்ல கதையம்சம் உள்ள படங்களில் நடித்து அந்தப் படம் வெற்றி பெற்று ஓடினால் தான் மக்கள் மனதில் இடம்பி டிக்க முடியும். அப்படிப்பட்ட படங்களை எடுத்தவர்களையும் அவற்றில் நடித்த கலைஞர்க ளையும் கெüரவப்படுத்த அரசு எடுக்கும் விழாதான் இது.

இதில் எனக்கும் சிறந்த நடிகர் விருது வழங்கப்படுவதால் மிகுந்த மகிழ்ச்சியோடு வந்திருக் கிறேன். “சந்திரமுகி’ படத்தில் நடித்ததற்காக எனக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.

Priyamani Paruthi Veeran Prize Ceremony Mu Karunanidhi 84இந்தப் படத்தில் ரஜினி என்ன பெரிதாக நடித்துவிட் டார்; ஜோதிகா, வடிவேலு தானே சிறப்பாக நடித்தார்கள் என நினைக்கலாம். “வேட்டை யன்’ என்ற கதாபாத்திரத்தில் நடித்ததற்குத்தான் எனக்கு இந்த விருது. கிட்டத்தட்ட 26 வரு டங்களுக்குப் பிறகு இந்தக் கேரக்டரில் எப்படி நடிப்பது எனத் தீவிரமாக யோசித்து நடித்த படம் “சந்திரமுகி’ தான்.

விருது வாங்கும் அனைவருக் கும் பாராட்டுகள். குறிப்பாக “பருத்தி வீரன்’ படத்தில் நடித்த கார்த்தி, ப்ரியாமணி, ஆகியோ ரைப் பற்றிச் சொல்ல வேண்டும்.

இந்தப் படத்தில் கார்த்தி 100, 200 படங்களில் நடித்தால் வரும் அனுபவத்தோடு நடித்திருக்கி றார். இந்தப் படத்தைச் சிறப்பாக இயக்கிய அமீருக்கும் பாராட்டு கள். பலர் வாய்ப்புகளுக்காக தவம் கிடக்கிறார்கள். நல்ல வாய்ப்புகள் தங்களைத் தேடி வரும்போது அவற்றைப் பயன்ப டுத்திக்கொள்ள வேண்டும்.

அடுத்து “பெரியார்’ படத்தைப் பற்றி சில விஷயங்கள் சொல்ல வேண்டும். “பெரியார்’ படத்தைப் பார்த்த பிறகு எனக்கு அதுவரை புரியாத பல விஷயங்கள் புரிந் தன. அந்தப் படத்தைப் பாராட்டி கடிதமும் எழுதினேன். ஆனால் அது பல்வேறு தரப்பிலும் சில விமர்சனங்களை எழுப்பியது.

“பெரியார்’ என்பவர் ஒரு “விருந்து’ போன்றவர். விருந்தில் 10 வகை யான காய்கறிகள் இருக்கும். சாப் பிடுபவர்கள் தங்களுக்குப் பிடித் ததை எடுத்துக்கொண்டு மற்ற வற்றை விட்டுவிடலாம். பெரி யார் வெறும் கடவுள் எதிர்ப்பு என்ற விஷயத்தை மட்டும் சொல் லவில்லை. தீண்டாமை, ஜாதி ஒழிப்பு, வறுமை ஒழிப்பு என எத் தனையோ நல்ல விஷயங்களை சொல்லியிருக்கிறார். கடவுள் மறுப்பு என்ற விஷயம் எனக்கு பிடிக்கவில்லை என்றால் அவரை அப்படியே ஒதுக்கிவிட முடி யுமா? அதை விட்டுவிட்டு அவர் சொன்ன பல நல்ல விஷயங்களை நான் எடுத்துக்கொண்டேன்.

அவர் ஒரு சீர்திருத்தவாதி.

இந்த மேடையில் இன்னொரு விஷயத்தைப் பற்றி பேசவேண் டும் என நினைக்கிறேன். இங்கு பேசலாமா எனத் தெரிய வில்லை. இருந்தாலும் மனதில் பட்டதைச் சொல்லிவிடுகிறேன்.

யாரும் தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம். சமீபகால மாக சேதுசமுத்திரத் திட்டத் தைப் பற்றி பல செய்திகள் வரு கின்றன. அதில் லாபம் இருக்கி றது; நஷ்டம் இருக்கிறது என பலரும் சொல்கிறார்கள். அது பற்றி எனக்கு சரியான உண்மை தெரியவில்லை. அது பற்றிய சில சென்சிட்டிவான விஷயங்கள் வெளிவருகின்றன. தமிழகத்தில் அது பெரிய அளவில் தெரிய வில்லை. ஆனால் வட மாநிலங்க ளில் அது வேறு வகையாகப் பார்க்கப்படுகிறது. அந்த விஷ யத்தைப் புகையாக்கி நெருப்பாக் கப் பல முயற்சிகள் நடக்கின்றன.

நமக்குக் காரியம்தான் முக்கி யம். இந்த விஷயத்தில் முதல்வர் கருணாநிதி வட மாநிலத் தலை வர்களுடன் கலந்துபேசி சேது சமுத்திரத் திட்டத்துக்கு விரை வில் உரிய தீர்வு காண வேண் டும் என்றார் ரஜினிகாந்த்.

விழாவில் கமல்ஹாசன் பேசிய தாவது:

முதல்வர் கருணா நிதி திரையுலகுக்கும் மக்களுக் கும் பல நல்ல காரியங்களைச் செய்திருக்கிறார். இந்த விழா வில் மாலை, சால்வை போன்ற வற்றுக்குப் பதிலாக புத்தகங்க ளைத் தந்திருக்கிறார்கள். அரசு விழாக்களில் இனி இது தொட ரும் என்றும் சொல்லியிருக்கி றார்கள். நான் சிறுவனாக இருந்த காலத்திலிருந்து நினைத்த விஷயம் இது. முதல் வர் இதை நிறைவேற்றியதற்கா கத் தமிழன் என்ற முறையில் பெருமைப்படுகிறேன். திரையுல குக்கு இன்னும் பல விஷயங்கள் செய்ய வேண்டியிருக்கிறது.

அதற்காகத் தற்போது பட்டியல் தரப்போவதில்லை. எங்களுக் குத் தேவையானவற்றைத் தங்க ளிடம் கேட்டுப் பெற்றுக்கொள் வோம். அந்த தைரியத்தைத் தந்த தும் தாங்கள்தான் என்ற உரிமை யில் இதைச் சொல்கிறேன் என் றார்.

விழாவில் விஜய், அஜித், விக் ரம், பிரபு, சூர்யா (ஜோதிகாவுக் காக), கார்த்தி, வடிவேலு, விவேக், ப்ரியாமணி, சந்தியா, பசுபதி, நாசர், இயக்குநர்கள் ஷங்கர், திருமுருகன், சீமான், இசையமைப்பாளர்கள் யுவன் ஷங்கர் ராஜா, ஹாரிஸ் ஜெய ராஜ், பாடலாசிரியர்கள் பா.விஜய், நா.முத்துக்குமார் உள்ளிட்ட பலருக்கு முதல்வர் கருணாநிதி விருதுகளையும் பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கினார்.

விழாவில் யுவன் ஷங்கர் ராஜாவின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

அனு ஹாசன் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார்.

தமிழகம் வளர்ந்தால் வட மாநிலங்களுக்கு ஆபத்தா? ராமரை முன்னிறுத்தி சதி வேலை என்கிறார் கருணாநிதி

சென்னை : “தமிழகம் வளர்ந்தால் மற்ற மாநிலங்களில் குறிப்பாக வடமாநிலங்களுக்கு ஏதோ ஆபத்து ஏற்படும் என தவறாக கருதி, ராமரை கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார்கள்’ என முதல்வர் கருணாநிதி பேசினார்.

தமிழக அரசின் 2005, 2006ம் ஆண்டிற்கான கலைத் துறை வித்தகர் விருதுகள், சிறந்த திரைப்படம், நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கான விருதுகள் வழங்கும் விழா சென்னையில் நேற்று நடந்தது. கவர்னர் சுர்ஜித்சிங் பர்னாலா தலைமையில் நடந்த விழாவில் 2005, 2006 ஆகிய ஆண்டுகளுக்கான விருதுகளை முதல்வர் கருணாநிதி வழங்கினார்.

நடிகர்கள் ரஜினி, கமல், விஜய், சூர்யா, கார்த்தி, நடிகைகள் சந்தியா, இயக்குனர் சங்கர் மற்றும் பல்வேறு திரையுலக நட்சத்திரங்கள் விருதுகளை பெற்றுக் கொண்டனர்.

விழாவில் முதல்வர் கருணாநிதி பேசியதாவது:

அரசியல் கருத்துக்களை, நாட்டு மக்களுக்கு, சமுதாயத்திற்கு தேவையான கருத்துக்களை கலை உலகில் பலர் புகுத்தியிருக்கிறார்கள். எங்களுக்கு முன்பே எங்களுக்கு வழிகாட்டியவர்கள் காங்கிரஸ் இயக்கத்தில் இருந்தார்கள். அவர்கள் நாட்டுப்பற்றை படங்கள் மூலமாக வளர்த்தார்கள் என்ற உண்மையை மறுத்துவிட முடியாது.

இதிகாசங்கள், வரலாறு இரண்டையும் தனித்தனியாக பிரித்துப் பார்க்க வேண்டும். இதிகாசம் நாமாக செய்து கொள்ளும் கற்பனை. ராஜாஜி, சக்ரவர்த்தி திருமகன் என்ற புத்தக முன்னுரையில், “ராமாயணம் ஒரு இதிகாசம். சரித்திரம் அல்ல. நான் இதிலே அடையாளம் காட்டுகிற ராமன் கடவுள் அவதாரம் அல்ல.

ராமனும் மனிதன் தான். ஒரு ராஜகுமாரன் தான். நல்லவர். நல்ல காரியங்களை செய்தவர். அவரிடம் தெய்வீக அம்சம் உண்டு என்று சொல்லப்பட்டாலும், ராமன் செய்தவைகளை கடவுளின் வேலையாக நான் ஒப்புக் கொள்ள மாட்டேன்’ என்று கூறியுள்ளார்.பெரியாரின் கருத்துக்கள் முதலில் சந்தேகத்திற்கு உரியவையாக இருந்து, இன்று ரஜினியால் ஏற்றுக் கொள்ளப்பட்டு, பரிமாறப்பட்ட பத்து பண்டங்களில் எனக்கு பிடித்த பண்டங்களை நான் சுவைக்கிறேன் என்று குறிப்பிட்டாரோ, அதைபோல, ராஜாஜி படைத்த பண்டங்களில் எங்களுக்கு பிடித்த பண்டம் “ராமன் ஒரு ராஜகுமாரன் தான். அவதார புருஷன் அல்ல’ என்பது தான்.

சேது சமுத்திர திட்டத்திற்காக இந்தியாவில் உள்ள தலைவர்களுடன் பேசி ஒரு நல்ல முடிவிற்கு வாருங்கள் என ரஜினி கூறினார். உள்ளபடியே சந்தேகம் இருந்தால் போக்கலாம். 150 ஆண்டுகளுக்கு முன்பு வெள்ளைக்காரர்கள் காலத்தில் திட்டத்திற்காக எட்டு முதல் 10 கோடி ரூபாயில் திட்டம் நிறைவேறும் என கணக்கிடப்பட்டு, இடையில் சில தடங்கல்கள் ஏற்பட்டு திட்டம் நின்று போனது. 1963ம் ஆண்டு காமராஜர் முதல்வராக இருந்த போது பிரதமர் நேருவை சந்தித்து திட்டம் குறித்து சொல்லி திட்டம் நிறைவேற்றலாம் என முடிவு செய்யப்பட்டது.

பிறகு திட்டம் நின்று போனது. 1967ம் ஆண்டு அண்ணா முதல்வராக இருந்த போது சேது சமுத்திர திட்டம் தமிழகத்திற்கு தேவை என்பதை வலியுறுத்தி எழுச்சி நாளாக கொண்டாடினார்.அதன் பிறகு தி.மு.க., அ.தி.மு.க., கம்யூனிஸ்ட்கள் தேர்தலில் நின்ற போது சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தினோம். இப்படி கேட்ட போது தெய்வீக முலாம் யாரும் பூசவில்லை.

பாம்பன் கால்வாய், தேம்ஸ் நதி போல இது ஒரு திட்டம். ஒரு வழி பாதை. வழியை பொருளாதாரத்தில் சிக்கனத்தை கடைபிடிக்கவும், தமிழகம் வளம் பெறவும், வியாபார ரீதியாக பல தொடர்புகளை உலகத்தோடு கொள்ளவும், கடல்வழி குறுகிய காலத்தில் போய்ச் சேரும் வழியாக இத்திட்டத்தை யோசித்தோம். அண்ணா முயற்சிக்கு பிறகு, நான் முதல்வராக இருந்த போது கடிதம் மூலமாக வலியுறுத்தியிருக்கிறேன்.

வாஜ்பாய் பிரதமரான போது, சென்னை கடற்கரையில் அண்ணா பிறந்தநாள் விழாவில் திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும் என சொன்னார். திருநாவுக்கரசு உட்பட பா.ஜ., அமைச்சர்கள் அந்த திட்டத்தை ஏற்று கையெழுத்திட்டு, சேது சமுத்திர திட்டத்திற்கான வழிமுறைகள் செய்யப்பட்டன.

மன்மோகன்சிங் ஆட்சி வந்த பிறகு நாம் தொடர்ந்து கேட்டோம். இரண்டாயிரம் கோடி ரூபாய் திட்டமாக இத்திட்டத்தை அறிவித்து முக்கால்வாசி பணி முடிந்துள்ளது.இந்நேரத்தில், ராமர் பிரச்னையை யார் முதல்முதலில் எழுப்பினார்கள் என்றால், நாம் அல்ல. ராமர் கட்டிய பாலத்தை இடிக்கிறார்கள் என்று சொல்லி இத்திட்டத்தை கெடுப்பதற்காக, சிலபேர் தமிழகத்திற்கு இத்திட்டம் வரக்கூடாது,

தமிழகம் வளர்ந்து விடும். எல்லா துறைகளிலும் தமிழகம் வளர்ந்து விடும். தமிழகம் வளர்ந்தால் மற்ற மாநிலங்களில் குறிப்பாக வடமாநிலங்களுக்கு ஏதோ ஆபத்து ஏற்படும் என தவறாக கருதி, ராமரை கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார்கள். ராமரிடம் எங்களுக்கு எந்தவித விரோதமும் கிடையாது. ராமரை நாங்கள் வெறுப்பவர்கள் அல்ல. எந்த அவதார புருஷர்களும் நன்மைகளை செய்திருந்தால், பாராட்டக் கூடியவர்கள் தான் நாங்கள்.

கிருஷ்ணா என்பதற்காக கிருஷ்ணா நதி நீர் வேண்டாம் என்று சொல்லி விட்டோமா? கிருஷ்ணா நதி நீர் வேண்டும் என்பதற்காக துரைமுருகனும், ஸ்டாலினும், ஆந்திராவில் உள்ள சாய்பாபாவிடம் துõது சென்று வந்தனர்.கிருஷ்ணா என பெயர் வைக்கக் கூடாது என்று கூறினோமா? ராமகிருஷ்ணா என்று கூட வைத்துக் கொள்ளுங்கள். ஆயிரம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ராமர் பாலம் என்ற பெயர் இருந்திருக்குமானால், அத்திட்டத்தை அந்தப் பெயரால் நிறைவேற்றுங்கள் என்று சொல்லியிருப்பேன்.

இவ்வாறு கருணாநிதி பேசினார்.

இமயமலை சாமியார்களிடம் துõது :

ரஜினிக்கு கருணாநிதி யோசனை :

சேது சமுத்திர திட்டம் நிறைவேற ரஜினி கூறிய கருத்துக்கு பதிலளித்து பேசிய முதல்வர் கருணாநிதி கூறியதாவது:

சேது சமுத்திர திட்டம் நிறைவேற ரஜினி எனக்கு ஒரு யோசனை கூறினார். என்னை விட வடநாட்டில் அதிகமாக சுற்றுப்பயணம் செய்யக்கூடிய வாய்ப்பும் வசதியும் படைத்தவர் ரஜினி. அவர் நினைத்தால் இமயமலை வரை சென்று சாமியார்களை சந்திக்கக்கூடிய வாய்ப்பு அவருக்கு உண்டு.

நீங்கள் செல்லும் போது, அவர்களிடம், “கருணாநிதி நாத்திகர் தான். கருணாநிதி ராமர் என்ற பெயரை வெறுப்பவர் அல்ல. அவரது தலைவருக்கு ராமசாமி என்று தான் பெயர்’ என்ற உண்மையை அங்குள்ள சாமியார்கள் சொல்ல வேண்டும். அந்த சாமியார்கள் திருந்தினால், நாடு திருந்தும்.

சேது சமுத்திர திட்டத்தில் மதம், ஜாதி, கடவுள் தன்மை, இதிகாசம் குறிக்கிடக் கூடாது. இதில் குறுக்கிட வேண்டியவை நல்வாழ்வு, எதிர்காலம், வரும்காலம் தான் என்ற உண்மையை மக்களுக்கு எடுத்துக் கூறும் பொறுப்பை ரஜினி ஏற்றுக் கொள்ள வேண்டும். ரஜினிக்கு விருது வழங்கவில்லை, இந்த வேண்டுகோளை வழங்குகிறேன்.இவ்வாறு முதல்வர் கருணாநிதி கூறினார்.

————————————————————————————————-
ரஜினி நழுவவிட்ட “முதல்வர்’ வாய்ப்பு

விறுவிறுப்பான ஒரு கேள்வி-பதில் நிகழ்ச்சியைப் பார்ப்பது போன்ற ஓர் உணர்வை ஏற்படுத்தியது தமிழக அரசின் திரைப்பட விருது வழங்கும் விழா.

விழாவில் செய்தித் துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி பேசும்போது, முதல்வருக்கும் திரையுலகுக்கும் சுமார் 60 ஆண்டு காலத் தொடர்பு இருக்கிறது. இந்த காலகட்டத்தில் அவர் அரசியலிலும் ஈடுபட்டுக்கொண்டு, 73 படங்களுக்கு வசனம் எழுதியிருக்கிறார். இது மிகப் பெரிய சாதனை. இன்னொரு விஷயம் அவருடைய வசனத்தில் நடித்த மூன்று பேர் தமிழகத்தின் முதல்வர் பொறுப்பை ஏற்றிருக்கிறார்கள். ஒருவர் எம்.ஜி.ஆர்., மற்றொருவர் ஜானகி எம்.ஜி.ஆர்., இன்னொருவர் யாரென்று உங்களுக்கே தெரியும்; கலைஞரின் வசனத்துக்கு அந்த அளவுக்கு சக்தி இருக்கிறது என சூசகமாகப் பேசி உரையை முடித்தார்.

ரஜினி பேசும்போது தன்னால் கருணாநிதி வசனத்தில் நடிக்க முடியாமல் போனதே என்று ஆதங்கப்பட்டார். இதுபற்றி ரஜினி கூறும்போது… “”ஒரு சமயம் எனக்கு எஸ்.பி. முத்துராமன் மூலமாக கலைஞர் கைப்பட எழுதிய “மந்திரி குமாரி’ படத்தின் ஸ்கிரிப்டைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில் வசனத்தோடு ஒவ்வொரு காட்சியும் எப்படி இருக்க வேண்டும்; நடிகர், நடிகைகளின் உடை, செட் எல்லாவற்றையும் குறிப்பிட்டு “இது என்னுடைய கருத்து; பிடித்த விஷயங்களை இயக்குநர் எடுத்துக்கொள்ளலாம்’ என்றும் எழுதியிருந்தார். அப்படி ஒரு ஸ்கிரிப்ட் கிடைத்தால் நானே டைரக்டர் ஆகி விடுவேன்.

15, 20 வருடங்களுக்கு முன்பு டி.ராஜேந்தர், தான் தயாரித்து இயக்கிய “இலங்கேஸ்வரன்’ என்ற படத்தில் என்னை ராவணனாக நடிக்கச் சொன்னார். படத்துக்கு கலைஞரிடம்தான் வசனம் எழுதித் தருமாறு கேட்கப்போகிறேன் என்றார். நான் ஏதோ “இது எப்படி இருக்கு? அது எப்படி இருக்கு? அதிருதுல்ல, உதிருதுல்ல…’ போல டயலாக் பேசி காலத்தை ஓட்டிக்கொண்டிருக்கிறேன். என்னால் எப்படி கலைஞரின் வசனத்தைப் பேச முடியும் என்று நினைத்து அந்தப் படத்தில் நடிக்கவில்லை. இதை ஒரு சமயம் கலைஞரிடமும் சொன்னேன்.

அதற்கு அவர் “மலைக்கள்ளன்’ பார்த்தீர்களா? அதில் வசனம் எப்படி இருந்தது? என்று கேட்டார். நானும் படம் பார்த்திருக்கிறேன். வசனம் சாதாரணமாக இருந்தது என்றேன்.

அதற்கு அவர் அதே படத்தில் சிவாஜிகணேசன் நடித்திருந்தால் வசனம் வேறு மாதிரி இருக்கும் என்றார். அப்போதுதான் அவருடைய வசனத்தில் நடிக்கும் நல்ல வாய்ப்பை இழந்துவிட்டோமே என நினைத்தேன் என்றார்.

ஒருவேளை கருணாநிதியின் வசனத்தில் நடித்திருந்தால்… ரஜினியும் அரசியலில் ஈடுபட்டிருந்தால்… கருணாநிதி வசனத்தில் நடித்து முதல்வரான நாலாமவராக ஆகியிருக்கலாமோ என்பது விழாவுக்கு வந்திருந்த ரஜினி ரசிகர்களின் முணுமுணுப்பு.

Posted in Awards, Ceremony, Cinema, EVR, Films, God, Hindu, Hinduism, Hindutva, Kamal, kamalahasan, Kamalahassan, Kamalhasan, Kamalhassan, Karuna, Karunanidhi, Karunanidhy, Karunanidi, Karunanithi, Movies, Paper, Periyar, Prizes, Rajini, Rajiniganth, Rajinikanth, Rajni, Rajniganth, Rajnikanth, Ram, Ramar, Religion, Sedhu, Sethu, Speech, Talk | Leave a Comment »