ஆவலுடன் தமிழ்த்தாய்!
தமிழினியன்
இன்னொரு “இலவச’ உத்தரவு! தமிழ்வழிக் கல்வி மாணவர்களுக்கு – தேர்வுக் கட்டணம் இல்லை. தமிழை மேம்படுத்துவதுதான் இச் சலுகையின் நோக்கமென்றால், அது தவறு. பொதுவாக தமிழ்நாட்டில் எதை வளர்க்கிறோமோ இல்லையோ, இலவசங்களை வளர்த்துக்கொண்டே போகிறோம்.
தேர்தலின்போது, வாக்காளர்களுக்குத்தான் எத்தனை இலவசத் திட்டங்கள்! அவை சரியா, இல்லையா, நிலைக்குமா, நிலைக்காதா என்ற கேள்விகளுக்கு அப்பால்~ ஆட்சி அமைக்க அத் திட்டங்கள் அடிகோலியது மட்டும் என்னவோ மறுக்க முடியாத உண்மை.
ஆனால், தமிழ் வளர்ச்சி என்ற சாக்கில் தமிழ்வழிக்கல்வி மாணவர்களுக்கான இச் சலுகை தமிழையும் வளர்க்காது; மாணவர்களுக்கும் பயன் தராது. மாறாக, மாணவர்களிடையே அடுத்த தேர்வில் பார்த்துக் கொள்ளலாம் என்ற மெத்தனப் போக்கைத்தான் ஏற்படுத்தும். இலவசமாகப் படி என்பதாலோ இலவசமாகத் தேர்வு எழுது என்பதாலோ தமிழை வளர்க்க முடியும் என்பது நடைமுறையில் பயன் தராத கற்பனை.
ஏனென்றால், இலவசங்களுக்கு ஆசைப்பட்டுக் கற்கக்கூடிய மொழி அல்ல தமிழ். அப்படி ஒரு நிலைமை தமிழ்நாட்டில் தமிழுக்கு இருக்குமானால் அதைவிட வெட்கக்கேடு வேறில்லை. செம்மொழி என்ற சிகரத்தைத் தொட்டிருக்கும் தமிழை இதுபோன்ற இலவசத் திட்டங்களால் கொச்சைப்படுத்தலாகாது.
தமிழ்வழிக்கல்வியை முழுமையாகக் கொண்டு வருவதற்கான ஒரேவழி, தமிழைத்தான் படிக்க வேண்டும் என்ற சூழலைத் தமிழ்நாட்டில் உருவாக்குவதுதான். இத்தகையச் சூழலை, கேரளத்திலோ, கர்நாடகத்திலோ, ஆந்திரத்திலோ அல்லது மத்தியப் பிரதேசத்திலோ உருவாக்க முடியாது. தமிழ் மண்ணில் மட்டும்தான் அத்தகைய நிலைப்பாட்டை ஏற்படுத்த இயலும்.
அதற்கான ஆக்கப்பணிகளை இப்போதே தொடங்கினால்தான் வரும் கல்வியாண்டில் இருந்து தமிழ்வழிக் கல்வியை அமல்படுத்த முடியும். அதுதான் தமிழ் வளர்ச்சிக்கு நாம் ஆற்றும் உண்மையான தொண்டு.
ஏற்கெனவே மாணவர்களுக்கு ஏகப்பட்ட சலுகைகள். உதாரணமாக, இலவசப் பேருந்துப் பயணம். இது சலுகைதானா என்பதே ஒரு பெரிய கேள்விக்குறி. எழுத்தறிவு, கண்ணொளிக்கு சமம். கண்ணில்லாவிட்டால் எப்படி உலகத்தைப் பார்க்க முடியாதோ, அதைப்போல் கல்வி இல்லாவிட்டால் உலகத்தை அறிய முடியாது.
எனவேதான் உணவு, உடை, உறையுள் ஆகிய அத்தியாவசியத் தேவைகளில் நான்காவதாகச் சேர்க்கப்பட்டுள்ளது கல்வி. எனவேதான் பட்டிதொட்டிகளில் எல்லாம் இன்று பாடசாலைகள் உள்ளன. இருந்தும் ஓர் ஊரில் உள்ள மாணவர்கள் இன்னோர் ஊரில் போய் படித்து வரும் நிலை நீடிக்கிறது.
நடுநிலை மற்றும் உயர்நிலைக் கல்வி நிலையங்கள் உள்ளூரில் இல்லை என்று வேற்றூர் போவோர் ஒருசாரார். கல்விக்கூடம் சரியாக இல்லை என்பதும் கற்றுத் தருவார் யாருமில்லை என்பதும் இன்னொரு காரணம்.
முதலாவது காரணத்தில் நியாயம் இருக்கிறது. ஆனால் இரண்டாவது காரணத்துக்காக மாணவர்கள் வெளியூர் செல்வதைத் தவிர்க்க முடியும். கட்டட அமைப்புகளையும் பராமரிப்பையும் முறையாகச் செய்து, ஆசிரியர் நியமனங்களையும் தேவைக்கேற்ப செய்து முறைப்படி கல்வி நிறுவனங்களை நிர்வகித்தால் இரண்டாவது காரணத்தைத் தவிர்ப்பது சாத்தியம்.
இன்னொரு தேவையற்ற காரணமும் இருக்கிறது. இலவசப் பயணத்தை அனுபவிப்பதற்காகவே சில மாணவர்கள் (சிறுவர்கள்தானே) ஊர்விட்டுஊர் செல்கிறார்கள். அவர்களிடையேயும் கல்விபால் நாட்டத்தை ஊட்ட வேண்டும்.
இலவசப் பயணத்தின் எதிர்விளைவுகளைக் கவனிப்போம்:
மனிதநேரம் மதிப்பிட முடியாதது. ஒரு தொழிலாளி ஒருமணி நேரம் உழைக்க இயலாமல்போனால், உற்பத்தி குறையும். அதைப்போல் படிப்பதற்கு ஏற்ற அருமையான காலைப்பொழுதில், பேருந்துப் பயணம் மேற்கொள்வதால் “மாணவர் நேரம்’ விரயமாகிறது. தவிர புத்தக மூட்டையைத் தோளில் சுமந்து கொண்டு அவர்கள் பேருந்து நெரிசலில் படும் அவதி இருக்கிறதே… சொல்லும் தரமன்று. அத் தொல்லைக்கு உள்ளாகும்போது மாணவன் தன் சக்தியை இழந்து விடுகிறான். களைத்தும் சோர்ந்தும் வகுப்பறைக்கு அவன் செல்கிறான். அந்தப் பரிதாப நிலையில் அவனுக்குப் பாடம் கேட்கத் தோன்றுமா? தூக்கம்தான் வரும்.
அரசு மனது வைத்தால் மாணவர்களுக்கு ஏற்படும் இந்த இடையூறுகளைத் தவிர்க்க அல்லது குறைக்க நிச்சயமாக முடியும். ஆனால் இப்பணியில் ஒரு தயக்க நிலையே இன்னும் இருக்கிறது. அதனால்தான் இலவசச் சலுகைகளைக் காட்டி அவர்கள் தப்பித்துக் கொள்கிறார்கள்.
பத்து ஆண்டுகள் படித்து, பத்தாவது ஆண்டு முடிவிலோ அல்லது பன்னிரண்டு ஆண்டுகள் பயின்று, பன்னிரண்டாம் ஆண்டு முடிவிலோ, இலவசத்தேர்வு எழுத முடியும் என்பதற்காக தமிழ் படிக்க மாணவர்கள் முன்வருவார்கள் என எதிர்பார்ப்பது பேதைமை.
அடிப்படைக் கல்வி அவசியம் என்றுதான் ஆரம்பக்கல்வியை இலவசமாக்கினோம். ஆறாம் வகுப்பிலிருந்து கட்டணம் செலுத்தி படிக்கும் நிலைமை ஐம்பதுகளில் இருந்தது. அப்போது அரசு மற்றும் தனியார் உள்ளிட்ட அனைத்துப் பள்ளிகளிலும் தமிழே பயிற்று மொழியாக இருந்தது. அப்போது இந்தப் பயிற்றுமொழிப் பிரச்னை எழவே இல்லை. தமிழில்தான் அனைவரும் உயர் கல்வி பயின்றார்கள். பட்டப்படிப்பு முடித்து, வேலையும் கிடைத்து வாழ்க்கையில் உயர்ந்தார்கள். நிலைத்தார்கள்.
ஆனால் அறுபதுகளின் ஆரம்பத்தில் அத் தவறு நேர்ந்துவிட்டதே. ஆமாம்: உயர்கல்வியும் இனி இலவசம் என்ற சட்டம் வந்தது அப்போதுதான்.
மேலோட்டமாகப் பார்த்தால் அரசின் தாராளமானபோக்காக அது தோன்றும். உண்மையும் அதுதான். ஏனெனில் வசதிக்குறைவான மாணவர்களும் தவறாமல் உயர் கல்வி பெற வேண்டும் என்ற பரந்த நோக்கத்தைக் கொண்டதல்லவா அத்திட்டம். எனவே அதற்கு பெருத்த வரவேற்பு கிடைத்ததில் நியாயம் உண்டு.
ஆனால் அதன் தாக்கம் எதிர்விளைவாகி ஒரு பாதகமான சூழ்நிலையை ஏற்படுத்திவிட்டது.
உயர்கல்வி இலவசமானதும் கல்வியின் தரம் குறைந்தது. மாணவர்கள், ஆசிரியர்கள் இருதரப்பிலும் இலவசக் கல்வியை “பத்தியக்கஞ்சியாக’ பார்க்கத் தலைப்பட்டார்கள். இது ஒரு பக்கம். இன்னொரு தாக்கம்~ சமூகப் பார்வையிலானது.
நடுத்தர மக்களும் மேல்தட்டுவாசிகளும் இலவசக் கல்வி தரக்குறைவு என்பதோடு கௌரவக் குறைவு என்றும் கருதினார்கள். இத் தருணத்துக்கென்றே காத்திருந்த வியாபாரக் கல்வியாளர்கள் தங்கள் பணியைத் தொடங்கிவிட்டனர். கட்டணத்துடன் தமிழ்க்கல்வி என்றால் கவர்ச்சி இருக்காதே, ஆகவே கட்டணத்துடன் ஆங்கிலக் கல்வி என்று கடைவிரித்தார்கள். வியாபாரம் சூடு பிடித்தது. ஆங்கிலம் களைகட்ட, தமிழ் களைஇழந்தது.
இதிலிருந்து, ஆங்கிலக் கல்வி, தேவை அடிப்படையில் ஏற்பட்டது அல்ல; தற்செயலாக நேர்ந்த விபத்து என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
மேலும் தாய்த் தமிழ்நாட்டில் தாய்த்தமிழை இலவசமாகவேனும் படியுங்கள் என்பது கேவலமாகத் தோன்றுகிறது. தமிழின் பெயரால் கொண்டுவரும் சலுகை எதுவாயினும், அது தமிழுக்குப் பின்னடைவே தவிர, தமிழ் வளர்ச்சிக்கு ஒருபோதும் உதவாது.
சமச்சீர் கல்வி பற்றி பேசப்படுகிறது. இதன் சாராம்சம் உயர்கல்வி வரை தமிழ்தான் சகலருக்கும் பயிற்று மொழி என்று இருக்குமானால் – மாநில அரசும் அதை முழு மனதுடன் அமலாக்கத் துணியுமானால், தமிழ்நாட்டில் தமிழ் மீண்டும் அரியணை ஏறும்.
அந்த இனிய திருநாள் வாய்க்குமா? தமிழ்த்தாய் ஏக்கத்துடன் எதிர்பார்க்கிறாள்!