இணையத்து இளவரசிகள் – அவள் விகடன்
– பாரதி தம்பி
படங்கள்: ‘ப்ரீத்தி’ கார்த்திக், இரா.ரவிவர்மன், சௌந்தரவிஜயன்

இது பெண்களின் காலம். பாதையெங்கும் விரவிக் கிடக்கும் முட்களை ஒவ்வொன்றாகத் தூக்கி தூர வீசிவிட்டு தனக்கான வெற்றிப் பாதையை தானே அமைத்துக் கொள்ளும் நேரம். அந்த முன்னேற்றத்தின் டிஜிட்டல் அடையாளம்-தான் ‘பெண் வலைப்பதிவு (ப்ளாக் – blog) எழுத்தாளர்கள்’!
அதென்ன வலைப்பதிவு என்கிறீர்களா? நம் ஒவ்வொருவருக்குள்ளும் எத்தனையோ சிந்தனைகள் பொதிந்திருக்கும். இந்த சமூகத்தின் மீதான கோபம், ஆதங்கம், சந்தோஷம், நேசம்.. இப்படி ஏதாவது ஒரு உணர்வு மனசின் ஒரு ஓரத்தில் நிச்சயம் கிடக்கும். அதையெல்லாம் சுதந்திரமாக எழுதுவதற்கு நமக்கே நமக்கென்று தனியாக ஒரு மேடை கிடைத்தால்.. அப்படியரு மேடைதான் வலைப்பதிவு!
அப்படியெனில், ஏதோ மிகப் பெரிய விஷய-மாக்கும் என்று பயந்து விட வேண்டாம். சாதாரண இ&மெயில் முகவரியைப் போலவே நமக்கென்று ஒரு வலைப் பதிவையும் மிக எளிதாக.. இலவசமாக.. உருவாக்கிக் கொள்ள முடியும்.
அதனால்தான், இன்றைக்கு அமெரிக்கா போன்ற நாடுகளில் உயர் பதவி வகிக்கும் பெண்களில் இருந்து மானாமதுரையில் இருக்கும் இல்லத்-தரசி வரை ஒரு கலக்கு கலக்குகிறார்கள் வலைப்பதிவு என்ற மேடையில்! அவர்களில் சிலரைப் பார்க்கலாமா?
ஒரு காலத்தில் தமிழகத்தில் பேச்சாளராகவும் வழக்கறிஞராக-வும் வலம் வந்து, இப்போது அமெரிக்காவில் வசிக்கும் செல்வநாயகி ‘நிறங்கள்’ என்ற பெயரில் எழுதும் வலைப்பதிவு, மொழி நடையால் வசீகரிக்கிறது நம்மை. ‘‘எப்படி எழுத வந்தீர்கள் இங்கு..?’’ என்று கேட்டால், தனது பிரத்யேக வார்த்தைகளிலேயே படபடக்கிறார்..
‘‘உண்மையிலேயே தமிழகத்தை விட்டு இப்படி அயல் நாடுகளுக்கு வரும்போது நம் மண்ணின் மீதும் மொழியின் மீதும் ஆர்வம் அதிகரிக்கத்தான் செய்கிறது. மனதில் இருந்த ஏக்கம், வீட்டில் இருந்த கணினி.. இரண்டுமே என் தேடலுக்குத் தீனியானது. அப்போது கிடைத்த வரம்தான் இந்த வலைப்பதிவு.
நான் வாசிக்கும் எழுத்துக்கள் எனக்குள் ஏற்படுத்-தும் பாதிப்புகளை, கேள்விகளை சுதந்திரமாக வெளியிடுவதற்கு மட்டுமல்ல.. என் பால்ய பருவத்-துச் சுவடுகளை, இந்திய மண்ணின் ஞாபகங்களை நாலு பேருக்குச் சொல்லி மகிழவும் இந்த வலைப்பதிவு உதவுகிறது.
சிறு ஓடை, கொஞ்சம் கருவேல மரங்கள், சில ஓட்டு வீடுகள், நாட்டுப்புற மனிதர்கள்.. என்ற அடையாளங்களோடு என்னை ஆளாக்கிய பிரதேசங்-களை பல சமயங்களிலும் நான் கவிதைகளாகப் பதிவு செய்திருக்கிறேன்..’’ என்று சொல்லும் செல்வநாயகி ஏற்கெனவே, ‘பனிப்பொம்மைகள்’ என்ற பெயரில் கவிதைத் தொகுப்பு ஒன்றையும் வெளியிட்டிருக்கிறார்.
‘‘எழுத்துக்கள் நோய்களைக் குணப்படுத்துவதற்குப் பதிலாகக் கிளறிவிடும்படியாக மாறிவிடக் கூடாது’’ என்று அழுத்தமாகப் பேசும் செல்வநாயகியின் வலைப்பதிவு முழுக்க அந்த அக்கறையைப் பார்க்க முடிகிறது.
மொழியார்வம் மிக்க ஈழத்தமிழர்களின் பங்களிப்பு வலைப்பதிவுகளிலும் பளிச்சிடவே செய்கிறது. துயரம் கசியும் தன் எழுத்தால், ஈழத்தின் சோகங்களை அப்படியே கண்முன் நிறுத்துகிற தமிழ்நதி, ‘இளவேனில்’ என்ற தலைப்-பில் தன் வலைப்பதிவை அமைத்திருக்கிறார். புலம் பெயர்ந்த ஈழத் தமிழரான இவர், தற்போது சென்னையில் வசிக்கிறார்.
‘‘கண்ணீர்த் துளி வடிவில் இருக்கும் எங்கள் தேசத்திலிருந்து தெறித்துச் சிதறிய லட்சக்கணக்கான கண்ணீர்த் துளிகள்தான் நாங்கள். இன்று இணையமும் வலைப்பதிவும் எங்களை ஒன்றிணைத்திருக்கிறது என்றால், அதற்கு நாங்கள் நன்றி சொல்லியே தீர வேண்டும்’’ என்று உணர்ச்சிகரமாகத் தொடங்கியவர், தன்னைப் பற்றி விளக்கினார்.
‘‘புலம்பெயர்ந்து கனடாவில் வாழ்ந்தபோது அங்குள்ள தமிழ்ப் பத்திரிகைகளில் கதை, கவிதை என்று நானும் ஏதோ எழுதிக் கொண்டிருந்தேன். மீண்டும் தாய்மண்ணுக்கே திரும்பிப் போக வேண்டும் என்ற என் முயற்சி முடியாமல் போகவே, தற்செயலாக சென்னையில் இருக்க வேண்டி வந்தது.
எங்கிருந்தாலும் எழுதிக் கொண்டிருக்க வேண்டும் என்று மனது சொன்னாலும் இங்குள்ள பத்திரிகைகளில் என் எழுத்துக்கள் ஏற்றுக் கொள்ளப்படுமா என்ற தயக்கம் இருந்தது. தகுதியில்லாதவை என்று அவை திருப்பி அனுப்பப்பட்டால், அந்த நிராகரிப்பின் வலியைத் தாங்க முடியாத மனம் எனக்கு. அந்த நேரத்தில்தான் தோழி ஒருத்தி வலைப்பதிவைப் பற்றிச் சொல்லி, எனக்கான வலைப்பதிவை உருவாக்கியும் தந்தார்.
‘நீங்கள் ஏன் துயரத்தையே எழுதுகிறீர்கள்..?’ என்று பலரும் என்னிடம் கேட்பதுண்டு. ‘உதடுகள் கண்ணீரின் கரிப்புக்கும் நாசிகள் குருதியின் வாடைக்குமே பழக்கமாக்கப்பட்டிருக்கும் என் மக்களைப் பற்றிப் பேசும்போது சந்தோஷம் எப்படி இருக்கும்..?’ என்பதுதான் என்னுடைய பதில்’’ என்று தன்னை நியாயப்படுத்தும் தமிழ்நதி, அண்மையில் ‘சூரியன் தனித்தலையும் பகல்’ என்ற கவிதைத் தொகுப்பை வெளியிட்டு உற்சாகமாக இலக்கிய நடை போடுகிறார்.
வலைப்பதிவைப் பொறுத்தவரை அதைப் படிக்கும் வாசகர்-கள் கூட அது பற்றிய தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்ய முடியும். இப்படிப்பட்ட கருத்துக்களாலேயே காரசாரமான விவாதங்கள் எழுந்து விடுவதும் உண்டு. அப்படி எந்த வலைப்பதிவில் பெண்களுக்கெதிரான கருத்துகள் பேசப்பட்டாலும் முதல் ஆளாக ஓடிச் சென்று தன் எதிர்ப்பை-பதிவு செய்பவர் ‘மலர்வனம்’ என்ற வலைப்பதிவை எழுதி வரும் லஷ்மி. இவரும் சென்னைவாசிதான்.
‘‘இந்தக் காலத்தில் ஆணும் பெண்ணும் சமமாக சம்பாதித்து வாழ்க்கை நடத்தி-னாலும் எண்ணங்கள் மட்டும் மாறவேயில்லை. வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் பெண்களை மட்டம் தட்டும் வேலையை இணையத்திலும் செய்கிறார்கள். சினிமா–வில் பெண்களை அடி முட்டா-ளாகக் காட்டுவதைக் கண்டித்து சமீபத்தில் ஒரு பதிவு போட்டிருந்-தேன்.
‘ஆண்களுக்கு இன்ட்டலக்ச்சுவல் பெண்- களைப் பிடிக்காது. டிகிரி முடித்து ரெண்டு வருஷம் வீட்டில் இருந்து விட்டு, தையல், சமையல் என்று கற்றுக் கொண்டு கல்யாணத்–துக்காகவே காத்திருக்கும் பெண்களைத்-தான் பிடிக்கும். அதைத்தான் சினிமாவில் காட்டுகிறார்கள்’ என்று ஒரு கருத்தை மெத்தப் படித்த நண்பர் ஒருவர் எழுதினார்.
கற்பு பற்றி குஷ்பு வெளியிட்ட கருத்து போல அவரது இந்தக் கருத்து வலைப்-பதிவாளர்கள் மத்தியில் மிகப்-பெரும் விவாதமாகவே பற்றியெரிந்தது. ஆக்ரோஷமாகத் தொடங்கினாலும் ஆரோக்கியமான சிந்தனைகளோடு முடிவது-தான் இப்படிப்பட்ட விவாதங்-களின் சிறப்பு’’ என்று பரவசப்படும் லஷ்மி ஒரு சாஃப்ட்வேர் என்ஜினீயரும் கூட!
‘‘அமெரிக்காவில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோதுதான் வலைப்பதிவு எனக்கு அறிமுகமானது. பொதுவாகவே என் வேலையில் சின்னச் சின்ன டென்ஷன்களும் எரிச்சல்களும் சகஜம். அதை மறக்கவும் ஜெயிக்கவும் நிச்சயமாக இந்த வலைப்பதிவு உதவுகிறது’’ என்று சான்றிதழும் தருகிறார் லஷ்மி.
‘சீரியஸான விவாதங்களுக்கு மட்டு-மில்லை.. ஜாலியாக கலாய்க்கவும் இங்கே ஆட்கள் இருக்கிறார்கள்’ என்பதற்கு அத்தாட்சிதான் ஈரோட்டைச் சேர்ந்த காயத்ரி. சேலத்திலுள்ள லோக்கல் சேனல் ஒன்றில் ‘காம்பியரிங்’ செய்யும் இவர், வலைப்பதிவு ஆரம்பித்து ஆறு மாதங்கள்தான் ஆகிறதாம். அதற்குள் உலகம் முழுவதிலும் இருந்து இவர் எழுத்துக்கு ரசிகர்கள் குவிகிறார்கள்.
‘‘நான் வலைப்பதிவு தொடங்-கியதற்கு கிடைத்த பிரமாதமான பரிசு, நண்பர்கள்-தான். சில மாதங்களுக்கு முன்பு வரை சொல்லிக் கொள்ளும் அளவுக்கு நெருங்கிய நட்பு வட்டமே இல்லாமல் இருந்த எனக்கு, இப்போது கடல் தாண்டி கண்டங்கள் தாண்டி முகம் தெரியாத நட்புகள் கிடைத்திருக் கின்றன.
சமீபத்தில் வந்த என் பிறந்த நாளில் முந்தின நாள் இரவு தொடங்கி வரிசையாக இ&மெயிலிலும், செல்-போனிலும் வந்த வாழ்த்துச் செய்தி-களில் நனைந்து விட்டேன். இதற்கு முன் என் பிறந்த நாளை நான் இந்த அளவுக்குக் கொண்டாடியதே இல்லை.’’ என்று நெகிழும் இவர், சமீபத்தில் தன் காமெடிகளைக் குறைத்துக் கொண்டு, தமிழ் இலக்கியத்தில் உள்ள ‘குறுந்தொகை’ பற்றி எளிய முறையில் ஒரு கட்டுரை எழுத, அதற்கு வரவேற்பு அள்ளிக் கொண்டு போயிருக்கிறது. ‘‘இனிமேல் என்னை இலக்கியவாதியாகவும் பார்க்கப் போகிறீர்கள்’’ என்கிறார் நகைச்சுவை உணர்வு பொங்க.
பெரும்பாலும் வலைப்பதிவு எழுதும் அனைத்துப் பெண்களுமே அறிந்த நபராக இருக்கிறார் பொன்ஸ் என்ற பூர்ணா. சென்னையைச் சேர்ந்த இவர், வலைப்-பதி வா-ளர்களுக்கான தொழில்நுட்ப விஷயங்களை கற்றுக் கொடுப்பதற்காக ‘வலைப்பதிவாளர் பயிற்சிப் பட்டறைகள்’ பலவற்றை நடத்தியவர். தற்போது அமெரிக்காவில் சாஃப்ட்வேர் என்ஜினீயராக இருக்கும் பொன்ஸிடம் பேசினால், பல ஆச்சர்ய தகவல்களைத் தருகிறார்.
‘‘இன்றைய நிலையில் சுமார் 150 பெண்கள் வலைப்-பதிவு எழுத்தாளர்களாக இருக்கிறார்கள். இவர்களில் சுமார் நூறு பேரை ஒருங்கிணைத்து ‘மகளிர் சக்தி’ என்கிற திரட்டியை (வலைப்பதிவுகளை ஒன்று திரட்டும் இணைய தளம்) உருவாக்கியிருக்கிறோம். வலைப்பதிவு எழுதும் பெண்கள் இதில் பதிவு செய்து கொண்டால், அடுத்தடுத்த முறை தங்களது வலைப்பதிவில் அவர்கள் புதிய பதிவுகள் எழுதும்போது, அதை உடனே ‘மகளிர் சக்தி’யில் பார்க்கலாம்.
கணினி துறையில் பெண்களின் எண்ணிக்கை பெருகிவரும் நிலையில், வலைப்பதிவு எழுதுபவர்களின் எண்ணிக்கையும் வரும் காலங்களில் அதிகரிக்கவே செய்யும்’’ என்கிறார் பளிச்சென்று.
இவர்கள் ஐந்து பேரும் ஒரு சாம்பிளுக்கு மட்டுமே. மற்றபடி வலைப்பதிவில் எழுதும் எல்லாப் பெண்களுமே தங்களுக்கான ஸ்பெஷல் எழுத்து நடையோடு தேர்ந்த இலக்கியவாதி போலத்-தான் எழுதுகிறார்கள். படித்து முடித்து, கை நிறைய சம்பாதித்தாலும் எழுதும் ஆர்வத்தை நிறுத்தி வைக்காமல் தங்களுக்கென்று ஒரு தளம் அமைத்துக் கொண்டவர்கள்தான் அனைவருமே.
இந்தக் காலப் பெண்களின் ‘தொழில்நுட்பம் சார்ந்த எழுத்துப் புரட்சி!’ என்று இதற்குப் பட்டம் கொடுக்கலாமா என்றுகூடத் தோன்றுகிறது!
தமிழ்நதி
“பாவாடை காலிடற ஓடித் திரியும் குழந்தை-களில், நாதஸ்வர இசையில், மரங்களினி-டையே தெரியும் பிறைத் -துண்டில், வன்னி-மரத்தின் ஆழ்ந்த மௌனத் தில், யாரையும் புண்படுத்த முடியாத அந்தச் சூழலில் இறைத்-தன்மை இருக்கிறது. இறைத்தன்மை என்பது கல்லில் மட்டும் இருப்ப-தாக எவர் சொன்னது?”-
செல்வநாயகி
‘‘நீயும் நானும் பூமிக்கு வந்தபோது இருந்த ஆர்வம் இத்தனை வருடங்களிலும் எத்தனை முறை துளிர்த்திருக்க வேண்டும்? சொட்டுச் சொட்டாய்க் குறையவிடலாமா அதை? வெளிவருவதற்காய் நமக்கும், வெளித்தள்ளுவதற்காய் அன்னையருக்கும் நிகழ்ந்த போராட்டங்களோடு–தானே பூமிக்கு வந்–தோம்? தொடர்வதும் அதுதான். துவள்–வது எதற்கு?”
லஷ்மி
‘தொண்டையை வறளச் செய்யும்
இந்த தாகம் பயமுறுத்தினாலும்
தூரத்தில் தெரியும் நீர்ப்பரப்பு
கண்ணில் தூவிய
நம்பிக்கை காரணமாய்
உயிர்த்திருக்கிறேன் இன்னமும்..
தயவு செய்து அது
கானல் நீராயிருப்பினும்
என்னிடம் யாரும் சொல்லிவிடாதீர்கள்..
இன்னும் சற்று நேரமேனும்
நான் உயிர் வாழ விரும்புகிறேன்!’’
காயத்ரி
‘‘நான் கஸ்டப்பட்டு ப்ளஸ் டூ பரீட்சை எழுதி முடிச்சதும், ‘எப்பதான் உனக்கு பொறுப்பு வரும் காயத்ரி?’ன்னு என் உள்மனசு பெஞ்ச் மேல நிக்க வச்சு கேள்வி கேட்டதால நான் அந்த விபரீத முடிவை எடுக்க வேண்டி வந்துச்சு. அதாங்க.. சமையல் கத்துக்குறது! உடனே, ‘நான் இன்னும் கொஞ்சம் நாள் வாழணும்னு ஆசைப்படுறேன்’ அப்படினு சொல்லிட்டு சித்தி வீட்டுக்குப் போயிட்டான் என் தம்பி. நான் அசரலையே.. ‘அப்பா’னு ஒரு அப்பாவி ஜீவன் இருக்கும்போது எனக்கென்ன கவலை..!
ஆனா, இன்னமும் எனக்கு சரியா டீ போட வராது. இதனால எங்க வீட்டுக்கு மழையில நனைஞ்சுக்கிட்டே விருந்தாளிக வந்தாலும், ‘ஜூஸ் சாப்பிடுறீங்களா..?’னுதான் கேப்பேன்.’’