ஈகைத் திருநாள்
எம்.ஒய். சுமய்யா
ரமளான் மாதம் பகற்பொழுது முழுவதும் இறைவனுக்காக உண்பதையும் பருகுவதையும் அடியோடு நிறுத்தி நோன்பு நோற்று, ஐவேளை தொழுகையுடன் ஜகாத் எனும் தான தருமத்தை ஏழைகளுக்கு வாரி வழங்கும் கடமைகளை நிறைவேற்றிய இஸ்லாமியர்கள் ஷவ்வால் முதல்பிறை அன்று ஈகைத் திருநாளாக, பெருநாளைக் கொண்டாடி மகிழ்கிறார்கள். ஈதுல் ஃபித்ர் எனும் ஈகைத் திருநாள் உலகெங்கிலுமுள்ள முஸ்லிம்களால் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
ஈதுல் ஃபித்ர் எனும் பெயர்பெறக் காரணம்:
ரமளான் மாதத்தின் இறுதிநாள் சூரியன் மறைந்து பிறை தோன்றியவுடன் ஸதக்கத்துல் ஃபித்ர் எனும் நோன்புப் பெருநாள் தர்மம் கொடுப்பது கடமையாகிறது. ஃபித்ரா என்பது ஈகைத் திருநாளன்று பெருநாள் தொழுகைக்குச் செல்லும் முன் ஏழைகளுக்காக வழங்கப்படும் உணவுப் பொருள்.
ஏழைகள் பெருநாளன்று பசி, பட்டினியுடன் இருக்கக் கூடாது. அவர்களும் மகிழ்ச்சியுடனிருக்க வேண்டுமென்பதற்காக இந்தத் தர்மம் வழங்கப்படுகிறது.
“”சிறியவர், பெரியவர், ஆண், பெண், அடிமை, சுதந்திரமானவர் அனைவர் மீதும் – ஒரு ஸôவு அளவு பேரீச்சம் பழத்தையோ அல்லது ஒரு ஸôவு தீட்டாத கோதுமையையோ பெருநாள் தர்மமாக மக்கள் தொழுகைக்காகப் புறப்படும் முன்னரே கொடுத்து விடும்படி நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். மேலும் பெருநாளுக்கு ஓரிரு தினங்களுக்கு முன்னதாகவே நபித்தோழர்கள் (இந்தத் தர்மத்தைக்) கொடுத்து வந்தார்கள்.”
~அறிவிப்பவர்! ப்னு உமர் (ரளி) அவர்கள்.
ஒரு ஸôவு என்பது ஏறக்குறைய இரண்டே முக்கால் கிலோகிராம் கொண்ட ஓர் அளவு. நபி அவர்கள் காலத்தில் பேரீச்சம்பழம், கோதுமை உணவாக இருந்ததால் அவற்றைத் தர்மம் செய்தார்கள்.
இப்போது நாம் அரிசியை உணவாக உண்பதால் அதையே தர்மம் செய்ய வேண்டும். இவ்வாறு ரமளான் பெருநாளன்று ஃபித்ரா (தர்மம்) செய்வதால் ஈதுல் ஃபித்ர் என்றும் இப்பெருநாள் அழைக்கப்படுகிறது.
நபி(ஸல்) அவர்கள் மதீனா சென்ற போது மதீனாவாசிகள் இரண்டு நாள்கள் விளையாட்டில் ஈடுபட்டனர். என்ன, இந்த இரண்டு நாள்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கேட்க அம் மக்கள், நாங்கள் அறியாமைக் காலத்தில் இந்த இரண்டு நாள்களும் விளையாடுவோம் என்று சொல்ல அதற்கு நபி(ஸல்) அவர்கள் இவ்விரண்டு நாள்களுக்குப் பதிலாக உங்களுக்கு அதைவிட சிறப்பான இரண்டு நாள்களை இறைவன் தந்துள்ளான். அவை ஈதுல் அழ்ஹா என்னும் ஹஜ்ஜுப் பெருநாள், ஈதுல் ஃபித்ர் என்னும் நோன்புப் பெருநாள் எனக் கூறினார்கள்.
இரண்டு பெருநாள்களும் இஸ்லாமியக் கடமைகளான நோன்பிற்குப் பின் ஈதுல் ஃபித்ரும், ஹஜ்ஜுக்குப் பின் ஈதுல் அழ்ஹாவும் கொண்டாடப்படுகின்றன.
நோன்புப் பெருநாளன்று காலையில் ஒன்று, மூன்று, ஐந்து, ஏழு என ஒற்றைப்படையாகப் பேரீச்சம்பழங்களை உண்பது நபி(ஸல்) அவர்களின் வழி என அனஸ்ரளி அவர்கள் அறிவிக்கிறார்கள்.
பெருநாள், மகிழ்ச்சி மற்றும் சந்தோஷத்திற்குரிய நாளாகும். நோன்பை நல்ல முறையில் நிறைவேற்றுவதற்கும் அந்த மாதத்தில் அதிகமதிகமான பிரார்த்தனைகள் மற்றும் தொழுகைகளை நிறைவேற்றவும் அருள்புரிந்த இறைவனுக்கு நன்றி செலுத்த வேண்டும்.
எனவே அன்று மார்க்கம் அனுமதிக்கும் வகையில் சந்தோஷம், மகிழ்ச்சியை நாம் வெளிப்படுத்த வேண்டும். ஆண்களும் பெண்களும் முஸôபஹா எனும் கை கொடுத்தல், புகைப்படம் எடுத்தல், நடனம் ஆடுதல், விடியோக்கள், திரைப்படம் பார்த்தல் போன்ற தவறான வழிகளில் அந்த நாளைக் கழிக்கலாகாது.
எனினும் சொந்த பந்தங்கள், நண்பர்கள், அண்டை வீட்டார் மற்றும் நோயாளிகள் இருந்தால் அவர்களைச் சந்திக்கச் செல்லுதல் போன்ற நல்ல காரியங்களில் ஈடுபடலாம்.
பெருநாள்களின் பயன்கள்: ஸகாத்துல் ஃபித்ர் எனும் நோன்புப் பெருநாள் தர்மம் வழங்குவது மூலம் ஏழைகளும் மகிழ்வாக பெருநாளைக் கொண்டாட வழியேற்படுகிறது.
சமுதாய ஒற்றுமை, மக்களின் நலனில் அக்கறை போன்ற பயன்களும் இதனால் ஏற்படுகின்றன.
ஏழை, பணக்காரன், உயர்ந்தவன், தாழ்ந்தவன் என அனைவரும் ஓரிடத்தில் சமமாக ஒன்று கூடுவதாலும், ஒருவரையொருவர் ஸலாம் கூறி வாழ்த்துவதாலும் அன்பும் சகோதரத்துவமும் பரிணமிக்கின்றன.
இறைத் தூதர் கூறினார்கள்:
“”என் உயிர் யார் கையிலுள்ளதோ, அவன் மீது சத்தியமாக! நீங்கள் இறை நம்பிக்கை (ஈமான்) கொள்ளாதவரை சுவனத்தில் நுழைய முடியாது. நீங்கள் ஒருவரையொருவர் நேசிக்காதவரை (முழுமையான) இறைநம்பிக்கையாளர்களாக ஆக முடியாது. ஒன்றை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? அதை நீங்கள் செயல்படுத்தினால் ஒருவரை ஒருவர் நேசம் கொள்ளலாம். உங்களிடையே ஸலாம் கூறுவதைப் பரவலாக்குங்கள்”. (நூல்: முஸ்லிம்)
ஒரு முஸ்லிம், தான் முயன்று தேடிச் சம்பாதித்த பொருள் அவனுக்கு மட்டுமே என்றில்லாமல், ஏழைகளுக்கும் அதில் சிறிது பங்குண்டு என்பதைக் கட்டாயமாக்கி, தனிமனித வாழ்வில் சமூகத்தையும் பங்குகொள்ளச் செய்த வெற்றித் திருநாளே ஈந்துவக்கும் ஈகை திருநாளாம் ஈதுல் ஃபித்ர்..!