தவறுகளும் வரம்புமீறல்களும்!
வழக்கறிஞர்களின் போராட்டத்தால் சென்னையிலுள்ள நீதிமன்றங்கள் ஸ்தம்பித்திருக்கின்றன. தங்களுக்கு நீதி கிடைக்கவில்லை என்றால் தமிழகம் முழுவதும் வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்று எச்சரித்திருக்கிறது வழக்கறிஞர்கள் சங்கம்.
சென்னையிலுள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சென்ற ஒரு வழக்கறிஞர், காலதாமதமாவது ஏன் என்று கேள்வி கேட்க, அதுவே வாக்குவாதமாகி, அங்கிருந்த காவல்துறையினர் ஒருவரால் வழக்கறிஞர் தாக்கப்பட்டார் என்பதுதான் வழக்கறிஞர்கள் தரப்பு வாதம். “”காலதாமதத்தையோ, நிர்வாக முறையீடுகளையோ கேள்வி கேட்டதே தவறா? ஒரு வழக்கறிஞருக்கே இந்த நிலைமை என்றால் சாதாரண பொதுமக்களின் நிலைமை என்ன? காவல்துறையினரும் சரி, வழக்கறிஞர் என்றும் பாராமல் அவரைத் தாக்கியது என்ன நியாயம்?” – இவையெல்லாம் வழக்கறிஞர்கள் தரப்பு வாதம்.
இணை ஆணையர் ரவியின் தலைமையில் விசாரணை நடத்த அரசு உத்தரவிட்டது. ஆனால், அவர் சம்பந்தப்பட்ட வழக்கறிஞர்களையோ, வழக்கறிஞர் சங்கத் தலைவரையோ விசாரிக்காமலேயே காவல்துறையினர் மீது எந்தத் தவறும் இல்லை என்று அறிக்கை தாக்கல் செய்துவிட்டார் என்பது வழக்கறிஞர்களின் அடுத்த ஆதங்கம். நீதிமன்ற விசாரணை தேவை என்பது அவர்கள் கோரிக்கை.
வழக்கறிஞர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையில் எப்போதுமே பனிப்போர் நிகழ்ந்தவண்ணம் இருப்பது உலகளாவிய ஒன்று. காவல்துறையினரிடம் ஆஜர்படுத்தப்படும் குற்றவாளிகள் பலரையும் சட்டத்தின் ஓட்டைகளைக் காட்டி விடுவித்துவிடுகிறார்கள் வழக்கறிஞர்கள் என்பது காவல்துறையினரின் வருத்தம். மேலும், கிரிமினல் வழக்குகளில் தங்களைச் சாட்சிக் கூண்டுகளில் ஏற்றி தர்மசங்கடமான கேள்விகளைக் கேட்டு கேலிப்பொருள்களாக்கிவிடுகிறார்கள் என்பதும் காவல்துறையினரின் ஆதங்கம்.
வழக்கறிஞர்கள் தரப்பும் சரி, காவல்துறையினர் தங்களுக்குத் தரவேண்டிய மரியாதையைத் தருவதில்லை என்றும் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்கிறார்கள் என்றும் விமர்சனம் செய்கிறது. வழக்கறிஞர்கள் காவல்நிலையங்களில் தகுந்த மரியாதையுடன் காவல்துறையினரால் நடத்தப்படுவதில்லை என்பதும் குற்றவாளிகளை முறையாக ஜாமீனில் எடுக்க வழக்கறிஞர்களைக் காவல்துறையினர் முடிந்தவரை அனுமதிப்பதில்லை என்பதும் நீண்டகாலமாகவே இருந்துவரும் குற்றச்சாட்டுகள்தான்.
எழுபதுகளில் திருப்பரங்குன்றத்தில் வழக்கறிஞர் அய்யாத்துரை என்பவர் காவல்துறையினரால் தாக்கப்பட்ட சம்பவம் முதல் இன்று வரை, காவல்துறையினருக்கும் வழக்கறிஞர்களுக்கும் இடையில் தொடரும் பரஸ்பர அவநம்பிக்கையும், எதிரி மனப்பான்மையும் குறைந்தபாடில்லை. காலம் தரும் பாடம் இரு தரப்பினரையும் ஒருவரை ஒருவர் மதிக்கும் பண்பையும் அவர்களிடம் நல்லுறவையும் வளர்த்திருக்க வேண்டும். சொல்லப்போனால், காவல்துறையினரும் சரி, வழக்கறிஞர்களும் சரி நவீன உலகத்தின் நாகரிகக் கோட்பாடுகள் தெரிந்த தலைமுறையினராக இருந்தும், இவர்களுக்குள் நல்லிணக்கம் ஏற்படாமல் இருப்பது ஏன் என்பதுதான் கேள்வி.
இவர்களுடைய கருத்து வேறுபாடுகளால் பாதிக்கப்பட்டிருப்பது நீதிமன்றங்கள் மட்டுமல்ல, பொதுமக்களும்தான். சென்னை உயர் நீதிமன்றத்தில் மட்டும் 2006ஆம் ஆண்டு புள்ளிவிவரப்படி தேங்கிக் கிடக்கும் வழக்குகள் 4,06,958. கீழமை நீதிமன்றங்களில் மட்டும் தமிழகத்தில் சுமார் மூன்றரை லட்சம் வழக்குகள் இருப்பதாகக் கடந்த மார்ச் மாதப் புள்ளிவிவரம் கூறுகிறது. விசாரணையில் இருக்கும் வழக்குகள் சுமார் எட்டரை லட்சம்.
இப்படியொரு நிலையில், பலருடைய ஜீவாதாரப் பிரச்னைகள் நீதிமன்றங்களின் தீர்ப்புக்காகக் காத்திருக்கின்றன. காக்கிச் சட்டை போட்டவரானாலும், கருப்புக் கோட்டு அணிந்தவரானாலும், சிவப்பு விளக்கு எரியும் வாகனங்களில் பயணிப்பவர்களானாலும், பேனா பிடித்து எழுதுபவரானாலும் அனைவரும் பொதுமக்களின் நன்மைக்காகவும் தேசத்தின் வளர்ச்சிக்காகவும் சேவை செய்யக் கடமைப்பட்டவர்கள். வரம்பு மீறுவது யாராக இருந்தாலும் கண்டனத்துக்கு உரியவர்களே. சக பணியாளர் என்பதற்காக அவர்களது தவறுகளும் வரம்புமீறல்களும் அனுமதிக்கப்படலாகாது.
நீதி கேட்டு நெடும்பயணம் போக வேண்டிய நிலையில் இருக்கும் பொதுமக்களை மேலும் அவதிப்பட வைப்பது தவறு. கைகுலுக்கிச் செயல்பட வேண்டிய காக்கிச் சட்டைகளும் கருப்புக் கோட்டுகளும் கைகலப்பில் ஈடுபடலாமா?