Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Posts Tagged ‘Veeramani’

Panruti Ramachandran thwarted merger of DMK with MGR’s ADMK: Mu Karunanidhi

Posted by Snapjudge மேல் ஏப்ரல் 1, 2009

திமுக, அதிமுக இணைவதைக் கெடுத்தவர் பண்ருட்டி ராமச்சந்திரன் – கருணாநிதி

திமுகவும், அதிமுகவும் இணைய பிஜூ பட்நாயக் மேற்கொண்ட முயற்சிகள் கூடி வந்த வேளையில், பண்ருட்டி ராமச்சந்திரன், எம்ஜிஆர். மனதை மாற்றி அதைக் கெடுத்து விட்டார் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

முரசொலி அறக்கட்டளை சார்பில் 2008-ம் ஆண்டுக்கான கலைஞர் விருது மற்றும் முரசொலி மாறன் சிறப்பு விருதுகள் வழங்கும் விழா, சென்னையில் உள்ள கலைஞர் அரங்கில் நேற்று நடைபெற்றது.

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, எழுத்தாளர் சோலை மற்றும் புகைப்பட நிபுணர் யோகா ஆகியோருக்கு கலைஞர் விருதுகளையும், முரசொலி மாறன் சிறப்பு விருதினை நடிகர் தியாகுவுக்கும் கருணாநிதி வழங்கினார்.

விருது பெற்ற அனைவருக்கும் தலா ஒரு லட்சம் ரூபாய் பொற்கிழி வழங்கப்பட்டது. முன்னதாக, ஈழத்தந்தை செல்வாவின் 112-வது பிறந்தநாளையொட்டி, அவரது திருவுருவப் படத்தையும் கருணாநிதி திறந்து வைத்தார்.

பின்னர் நிகழ்ச்சியில் கருணாநிதி பேசுகையில்,

வீரமணி சொன்ன புதிய செய்தி

உங்களுக்கெல்லாம் ஒரு புதிய செய்தியை இங்கே வீரமணி சொன்னார். ஆனால் அவர் சொல்லும் வேகத்திலே ஒன்றிரண்டை விட்டுவிட்டார் என்று கருதுகின்றேன்.

திமுக-அதிமுக இணைப்பு முயற்சி..

திராவிட இயக்கம் ஒன்றாக விளங்க வேண்டும் என்று, அதனை இரண்டாக ஆக்கியவர் (எம்ஜிஆர்) எண்ணினார்- அதற்கு முயற்சி மேற்கொண்டோம் என வீரமணி குறிப்பிட்டார். ஒன்றாக ஆகவேண்டும் என்று அருமை நண்பர் எம்.ஜி.ஆர். முயற்சி மேற்கொண்டு, அதற்கு தமிழர் தலைவர் வீரமணியை நீங்கள் அந்த காரியத்தை செய்ய வேண்டுமென்று கேட்டபோது, நடந்த சில விஷயங்களை முழுமையாக சொல்ல விரும்புகிறேன்.

அப்படி ஒரு முயற்சியை ஒரு தேர்தல் நேரத்தில்-நம்முடைய அன்புக்கும், மதிப்புக்கும் உரிய பிஜு பட்நாயக் அந்த முயற்சியை மேற்கொண்டு, ஏன் திமுகவும், அதிமுகவும் ஒன்றாகக் கூடாது என்று கேட்டார். இது யாருடைய சிந்தனை என்று கேட்டபோது, நான் எம்ஜிஆரிடம் பேசிவிட்டேன். உன் நிபந்தனை என்ன என்று கேட்டார்? நீங்கள் பேசியதும் நண்பர் எம்ஜிஆர் ஒப்புக்கொண்டதும் உண்மை என்றால் என் நிபந்தனையை கேளுங்கள் என்றேன்.

எனது நிபந்தனைகள்

இரண்டு கட்சிகளுக்கும் தலைவராக நான் இருப்பேன்.

ஏன் என்றால் இந்த இரண்டு கட்சிகளின் ஆரம்பகாலத்தினுடைய அடிப்படை கொள்கைகளை- கட்டிக்காக்க கூடிய அந்தத் தலைமை என்னிடத்திலே இருந்தால்தான்- அதை கட்டிக் காக்க முடியும். இப்போது இருப்பதைப் போலவே முதல்வர் பொறுப்பில் அவரே நீடிக்கட்டும் என்றேன்.

அப்படியா என்று கேட்ட அவர், பிறகு என்ன நிபந்தனை என்று கேட்டார். ஒன்றும் பெரிய நிபந்தனை அல்ல. கொடியிலே அண்ணாவின் படம் போட்டிருக்கிறார்கள். அது நீடிக்கட்டும். திடீரென அண்ணா படத்தை எடுக்கச் சொன்னால், அண்ணா படத்தை வேண்டுமென்றே கருணாநிதி எடுத்துவிட்டான் என்று சிலர் கோள் மூட்டுவார்கள், ஆகவே அண்ணா படம் கொடியில் அப்படியே இருக்கட்டும் என்று சொன்னேன்.

வேறு என்ன நிபந்தனை என்றார்? பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்கள் வாழ, உரிமை பெற, சலுகைகளை அனுபவிக்க, எல்லோருக்கும் கிடைக்கக் கூடிய நன்மைகள், அவர்களுக்குக் கிடைக்க, கல்வி, வேலை வாய்ப்புகளில் அவர்கள் சமூகரீதியாக இன்று பெற்று வருகிற இடஒதுக்கீடு-கல்லூரிகளில், பள்ளிகளில், பல்கலைக் கழகங்களில் பெறுகின்ற இடஒதுக்கீடு- இப்போது எம்.ஜி.ஆர். திடீரென கொண்டு வந்திருக்கிற பொருளாதார அடிப்படையில் பாழ்படுகிறது.

ஆகவே, 9 ஆயிரம் ரூபாய் சம்பளம் உள்ளவன் ஒரு சாதி. அதற்கு கீழே வருமானம் உள்ளவன் ஒரு சாதி என்று பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு செய்வது கூடாது, சமூக அடிப்படையில் அவர்களுடைய தகுதியை பிரித்து இந்த, இடஒதுக்கீடு தரப்படவேண்டும்,

அதற்கு ஒத்துக் கொள்கிறாரா? என்று கேளுங்கள் என்றேன்.

என்ன ஆண்டவரே…

நான் இப்போதே போய் எம்.ஜி.ஆரிடம் போய் பேசிவிட்டு வருகிறேன் என்று சொல்லி- இவர் சென்று, சேப்பாக்கம் கெஸ்ட் அவுசுக்கு எம்ஜிஆரை அழைத்துக் கொண்டு வந்தார். அங்கு நான் ஒரு அறையில் இருக்கிறேன். மற்றொரு அறையில் எம்.ஜி.ஆர், நெடுஞ்செழியன், இன்னொருவர் பெயர் சொல்ல விரும்பவில்லை. இருந்தாலும் சரித்திரம் முழுமையாகாது. பண்ருட்டி ராமச்சந்திரன். இவர்கள் இன்னொரு அறையில் இருந்தார்கள்.

எம்.ஜி.ஆருடன் சந்திப்பு

எம்ஜிஆர் என்னுடைய அறைக்கு வந்தார். அவர் என்னை பார்த்தால் என்ன முதலாளி? என்பார், இல்லாவிட்டால் என்ன ஆண்டவனே? என்பார். இப்படித்தான் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்வோம். அவர் என்னை பார்த்ததும், என்ன ஆண்டவரே? பிஜு பட்நாயக்கிடம் என்ன சொன்னீர்கள் என்று கேட்டார்.

நான் சொன்னேன்- இந்த இரு கழகங்களும் ஒன்றாக இணைந்தால், அண்ணா இட்ட பெயரே, தி.மு.கவே நீடிக்க வேண்டும் என்று சொன்னேன். கொடியை பொறுத்தவரையில் நீங்கள் வைத்த அண்ணாவின் உருவம், நீடிக்கட்டும் என்றேன். நீங்களே முதல்வராக நீடிக்கலாம் என்று சொன்னேன். இந்த 9,000 ரூபாய் பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீட்டை உடனே வாபஸ் பெறவேண்டும் என்றேன்.

அதற்கு அவர், நான் இன்று வேலூர் போகிறேன். நாளைக்கு பக்கத்தில் ஒரு ஊரில் எங்கள் கட்சியின் செயற்குழுக் கூட்டம் நடக்கவுள்ளது. நீங்களும் சென்னையில் அதே நேரத்தில் அவசர செயற்குழுவைக் கூட்டுங்கள். அங்கே, எங்கள் செயற்குழு நடைபெறும் நேரத்தில் நாளை மறுநாள் உங்கள் செயற்குழுவும் இங்கே நடைபெறட்டும்.

நாம் பேசிக் கொண்ட நிபந்தனைகளை வைத்து, ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி, அதை தொலைபேசியில் எங்களுக்குச் சொல்லச் செய்யுங்கள். நாங்களும் அதே தீர்மானத்தை நிறைவேற்றி, இரு கட்சிகளும் ஒன்றாக ஆகலாம் என்று சொன்னார்.

காரியத்தைக் கெடுத்த பண்ருட்டி ராமச்சந்திரன்…

சொல்லிவிட்டு வேலூர் சென்றார். காரில் சென்றபோது என்ன நடந்ததோ எனக்கு தெரியாது. காரிலே அவரோடு சென்றவர், காதுக்குள்ளே புகுந்தார். கருத்தை மாற்றினார். வேலூர் பொதுக்கூட்டத்திலே எம்ஜிஆர் பேசும்போது, மாலை பத்திரிகையில் நானும், கருணாநிதியும் இணைய போகிறோம். திமுகவும், அதிமுகவும் இணையப்போகின்றன என்று வந்துள்ள செய்தியை யாரும் நம்பாதீர்கள் என்று ஒரு செய்தியை அங்கே வெளியிட்டார்.

காரில் நடந்த மர்மம்

நான் உங்களுக்கு சொல்கிறேன். இது எப்படி விளைந்தது என்று கேட்டால் அப்போதே சொன்னேன்-நான் பெயர் சொல்ல விரும்பாத ஒருவர் என்று- அவரும் அந்த காரில் சென்றார். அதனுடைய விளைவு இந்த முடிவுக்கு காரணமாக ஆனது.

ஆக, திராவிட இயக்கம் என்பது ஒரு கொள்கை அடிப்படையில்தான் இயங்க முடியும். ஆனால் ஒரு கொள்கை, ஒரு லட்சியம் இவற்றுக்காக பாடுபடுகின்ற இந்த இயக்கம்-அந்த போரிலே வெற்றி பெறுகிற வரையில் யாருக்கும், எந்த நேரத்திலும் கொள்கையிலே ஒரு துளியும் விட்டுத் தராது, லட்சியத்திலே ஒரு துளியும் விட்டுத் தராது, லட்சியத்திலே சிறிதும் துவண்டுவிடாது.

ஈழத்தந்தை செல்வா

இந்த இனிய விழாவில் நம்முடைய நண்பர் தந்தை செல்வா அவர்களுடைய புதல்வர் சந்திரஹாசன் வருகை தந்து நமக்கெல்லாம் பெருமையை ஏற்படுத்தியிருக்கிறார். தந்தை செல்வா அவர்கள் 1972ம் ஆண்டு தமிழகத்துக்கு வந்தார். எதற்காக? இலங்கையிலே அவதிப்படுகிற மக்களுக்கு- இலங்கையிலே அடிமைப்படுத்தப்பட்டிருக்கிற தமிழ் இனத்துக்கு- உரிமைகளைக் கேட்க-அதற்காக துணைபெற இங்கே பெரியாரை காண, அதைத் தொடர்ந்து என்னைக் காண இங்கே வந்தார்.

அவர் அன்றைக்கு புரிந்த தொண்டின் காரணமாக- ஆற்றிய பணியின் காரணமாக- அடிமைப்பட்டு கிடக்கிற இலங்கை தமிழர்களுக்கு சுதந்திர உணர்ச்சியை உருவாக்க வேண்டும் என்பதற்காக அவர் உருவாக்கிய தமிழ் ஈழம் என்ற அந்த கொள்கை பரவுவதற்காக இங்கே வந்தார். ஆனால் 72ம் ஆண்டிலே வந்தார். பிறகு, ஐந்தாண்டுகளுக்கு பிறகு அவர்கள் மறைந்தார்.

ஈழ வரலாறு தெரியாதவர்கள்

அவர்கள் மறைந்தபோது அதாவது 32 ஆண்டுகளுக்கு முன்பு நான் எழுதிய உடன்பிறப்பு கடிதத்தில், செல்வா மறைந்துவிட்டார். எனினும் அவரால் உருவாக்கப்பட்ட ஆற்றல் மிகு தலைவர்கள், தளபதிகள், வீரக்கவிஞர்கள், இலட்சிய காளைகள் பலர் இருக்கிறார்கள். இலங்கை தமிழர்களுக்காக செல்வா ஆற்றிய பணியை அவர் வழியில் மற்றவர்கள் தொடர்வார்கள்.

அவர் காத்திட்ட அமைதி அதேநேரத்தில் தமிழர்களின் நல்வாழ்வுக்கு வழி அமைத்திட அவர் ஓயாது வழங்கிய உழைப்புஇவை என்றென்றும் அந்த தியாக செல்வத்தை உலகத் தமிழர்களின் நெஞ்சத்தில் அணையாத தீபமாக ஆக்கி வைத்திருக்கும் என்பது மட்டும் உறுதி என்று எழுதினேன்.

இந்த வரலாறு தெரியாதவர்கள் செல்வா மறைந்த செய்தி புரியாதவர்கள் செல்வா பட்ட பாடு என்னவென்று படிக்காதவர்கள் இன்றைக்கு இலங்கையை பற்றி நமக்கு என்ன தெரியும் என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

இலங்கை, ராவணன் ஆண்ட பூமி மாத்திரமல்ல என் தமிழனும் ஆண்ட பூமிதான். அந்த இலங்கையிலே ஈழத் தமிழர்கள் மீண்டு வாழ எந்த ஏற்பாடுகளை உலக நாடுகள் ஒன்று கூடிச் செய்தாலும் அதற்கு வழி வகுக்க, ஆலோசனைகளைக் கூற, அறிவுரைகளை வழங்க, பக்கத் துணை நிற்க என்றென்றும் தமிழகம் தயாராக இருக்கின்றது, திமுகவும் தயாராக இருக்கிறது என்றார் கருணாநிதி.

எம்.ஜி.ஆர் விருப்பம்

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தனது ஏற்புரையில், “என்னை பாராட்டி மு.க. ஸ்டாலின் பேசும்போது மணப்பெண் போல் தலை குனிந்திருந்தேன். மிசா காலத்தில் சிறையில் நாங்கள் அடைபட்டிருந்தபோது இரவு 9 மணி அளவில், போலீசார் தாக்கி என் மீது ரத்தம் தோய்ந்த நிலையில் தள்ளப்பட்ட ஒரு உருவம்தான் ஸ்டாலின். இந்த இயக்கத்தில் உள்ளவர்கள் கூட்டணி சேர வேண்டும் என்பதற்காக வந்தவர்கள் அல்ல. தி.மு.க.வுடன் அவர்கள் எப்போதும் இருப்பார்கள். எம்.ஜி.ஆர். முதல்-அமைச்சரான பிறகு தி.மு.க.வையும், அ.தி.மு.க.வையும் இணைக்க விரும்பினார். அதற்காக நான் தி.மு.க. தலைவர் கருணாநிதியிடம் தூது சென்றேன். அவரிடமும் பேசினேன். ஆனால் சில காரணங்களால் அது முடியாமல் போய்விட்டது. இந்த விழாவில் எனக்கு அளிக்கப்பட்டுள்ள ரூ.1 லட்சத்தை, பெரியார்-மணியம்மை பல்கலைக்கழகத்தில் தமிழில் சிறந்த இதழியலாளர்களை உருவாக்குவதற்காக அவர்களுக்கு பயிற்சி வகுப்பினை தொடங்குவதற்காக, வழங்குகிறேன். அந்த பயிற்சி வகுப்புக்கு கலைஞர் புரவலராக இருப்பார்” என்றார்.

மு.க.ஸ்டாலின்

முன்னதாக, பேசிய முரசொலி அறக்கட்டளைத் தலைவர் ஸ்டாலின், “ஒவ்வொரு ஆண்டும் முரசொலி சார்பில் கலைஞர் விருது வழங்கப்பட்டு வருகிறது. இதுபோல் முப்பெரும்விழாவையொட்டி, பாரதிதாசன் பாடல்கள் ஒப்புவிப்புப் போட்டியை மாணவர்களுக்கும் நடத்தி பரிசு வழங்கி வருகிறோம். இதுவரை 5,594 மாணவர்கள் பரிசு பெற்றுள்ளார்கள். இதுபோல் இதுவரை 238 சிறந்த ஆட்டோ ஓட்டுனர்களுக்கும் ரூ.10.5 லட்சம் பரிசும், விருதும் வழங்கப்பட்டுள்ளது. இதுவரை 40 பேர் கலைஞர் விருது பெற்றுள்ளார்கள். அவர்களுக்கு இதுவரை ரூ.40 லட்சம் வழங்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

இந்த விழாவுக்கு நிதியமைச்சர் அன்பழகன் தலைமை தாங்கினார். விருது பெற்றவர்களின் சாதனைக் குறிப்பை வாசித்து, வாழ்த்துரையை அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். எஸ்.ஏ.எம். உசேன், நன்றியுரை வழங்கினார். இதில், ஆற்காடு வீராசாமி, துரைமுருகன் உள்ளிட்ட தமிழக அமைச்சர்கள், டி.ஆர். பாலு உள்ளிட்ட மத்திய மந்திரிகள், கனிமொழி உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், ராஜாத்தி அம்மாள் மற்றும் முரசொலி அறக்கட்டளை உறுப்பினர் செ.குப்புசாமி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டார்கள்.

Posted in Politics, Tamil, Tamil Nadu | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , | 7 Comments »

Geetha, Ladies, Varnasramam: Kanimozhi speech in DMK Women Conference at Cuddalore

Posted by Snapjudge மேல் ஜூன் 17, 2008

கனிமொழி எம்.பி., கூறியதில் குற்றமென்ன?

– கி. வீரமணி

இதோ ஆதாரங்கள்:
ஜாதி (வர்ணமதர்ம) பாதுகாப்பு, கொலை வெறி தூண்டும் நூலே கீதை! கடலூரில் நடைபெற்ற திமுக மகளிரணி மாநாட்டில் தந்தை பெரியார் படத்தினை திறந்து வைத்துப் பேசிய மாநிலங்களவை உறுப்பினர் திருமதி கனிமொழி கருணாநிதி அவர்கள்,

“இந்த தேசத்தில் வருணாசிரமம் தொடங்கிய அந்தக் காலகட்டத்தி லிருந்து, அதற்கான எதிர்ப்புகளும் தொடர்ந்து இருந்து கொண்டுதான் இருக்கிறது. ஏன், கீதையே கூட அதன் எதிர்ப்பாகத்தான் எழுதப்பட்டது என்று சொல்லப் படுகிறது.

கீதையில் அர்ச்சுனன் கிருஷ்ணனைப் பார்த்துச் சொல்கிறான்;
பெண்ணின் துர்புத்தியால் தான்
இங்கு வருணாசிரம தர்மம்
அழியப் போகிறது என்று!
அப்படியானால் உங்களுக்கெல்லாம் இருக்கும் பொறுப்பு என்ன என்பதை நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். உங்கள் மனமாற்றத்தினால்தான் இந்த ஜாதி அழியும் என்ற பொறுப்பை 4000 ஆண்டுகளுக்கு முன்னால், அர்ஜுனன் நம்மீது ஏற்றி வைத்து விட்டுப் போயிருக்கிறான். ஆனால் கீதையே, இப் படி பல இடங்களில் திரும்பத் திரும்ப ஜாதியத்தை வலியுறுத்தி, அது இந்த எதிர்ப்புகளுக்கு எதிர்ப்பான விஷயமாகத்தான் இருந்திருக்கிறது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். என்று சுட்டிக்காட்டியுள்ளார், கீதை ஒரு கொலை நூல் என்பதை யும் திலகருடைய மேற்கோள் ஒன்றையும்கூட பொருத்தமாகச் சுட்டிக்காட்டிப் பேசியுள்ளார் கவிஞர் கனிமொழி.
இதை எதிர்த்து விநாயகர் வி. முரளி அறிக்கை ஒன்றை இன்றைய (`தினமணி 17.6.2008) நாளேடு ஒன்றில் விடுத்துள்ளார்.
“பகவத் கீதையில் இல்லாததை திரித்துக் கூற வேண்டாம் என மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழிக்கு இந்து இயக்கங்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் விநாயகர் வி. முரளி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சென்னையில் அவர் வெளியிட்ட அறிக்கை:
`பெண்களால்தான் வருணாசிரம தர்மம் அழியும் என்று கீதையில் அர்ஜூனன் கூறுகிறார் என கடலூரில் நடைபெற்ற தி.மு.க., மகளிரணி மாநாட்டில் கனிமொழி பேசியிருக்கிறார்.
இது போன்ற கருத்துகள் பகவத் கீதையில் இல்லை. இவ்வாறு இல்லாத கருத்துகளை திரித்துக் கூறியிருப்பது கண்டனத்துக்குரியது என்று விநாயகர் வி. முரளி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். என்று `தினமணியில் செய்தி வந்துள்ளது.
அப்படி எதுவும் கீதையில் இல்லை; இல்லாததை கனிமொழி கூறியுள்ளார். என்று கூறியுள்ளார். இது உண்மைக்கு மாறான செய்தியாகும். திராவிடர் இயக்கப் பேச்சாளர்களோ, எழுத்தாளர்களோ (திருமதி கனிமொழி உட்பட) ஆதாரமில்லாமல் எதையும் பேச மாட்டார்கள்.
கீதையின் முதல் அத்தியாயத்திலேயே உள்ள சுலோகங்களில் உள்ள கருத்தைத் தான் கவிஞர் கனிமொழி அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.
“கிருஷ்ணா, அதர்மம் சூழ்ந்துவிட்டால், குலப்பெண்கள் கெடுவர். பெண்கள் கெட்டால் வர்ணசாங்கரியம். (குலங்களின் கலப்பு) ஏற்பட்டு விடும்.

“அதர்மாபிபவாத் க்ருஷ்ண ப்ரதுஷ்யந்தி குலஸ்திரிய:
ஸ்த்ரீஷு துஷ்டாஸு வார்ஷ்ணேய ஜாயதே வர்ணஸ்ங்கர:
(அத்.1 – சுலோகம் – 41)

இந்த உண்மையைத்தான் ஆதாரப்பூர்வமாக கவிஞர் கனிமொழி கூறியுள்ளார்.
கீதையைப் பரப்புபவர்களைவிட எதிர்ப்பவர்கள்தான் உள்ளபடியே படித்து ஆதாரப் பூர்வமாகக் கூறுகிறார்கள் என்பது இதன் மூலம் விளங்கவில்லையா?

கீதையை திரித்துக் கூறவேண்டிய அவசியமில்லை

– கனிமொழி எம்.பி.

சென்னை, ஜூன் 19- பகவத் கீதையை திரித்துக் கூறவேண் டிய அவசியம் தனக்கு இல்லை என்று நாடாளுமன்ற உறுப் பினர் கவிஞர் கனிமொழி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செவ்வாய்க் கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை விவரம்: ஜூன் 17 அன்று வெளியான தினமணி யில் விநாயகர் வி. முரளி என்பவர் கீதையில் இல்லாத கருத்துகளை கடலூரில் நடந்த தி.மு.க. மகளிரணி மாநாட்டில் கனிமொழி பேசி யிருக்கிறார். இதுபோன்ற கருத்துகள் பகவத்கீதையில் இல்லை என்று அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

அதர்மாபி பவாத் க்ருஷ் ணப்ரதுஷ்யந்தி குலஸ்த்ரிய; ஸ்தரீஷீ துஷ்டாஸு வார் ஷனேய ஜாயதே வர்னாஸங் கர

இது கீதையின் முதல் அத் தியாத்தில் 40-ஆவது பாடல். கிருஷ்ணனை நோக்கி சொல் வதாக வருகிறது. விருஷ்ணி குலத்தில் பிறந்தவனே, குடும் பத்தில் அறமின்மை தலை யெடுக்கும்போது குடும்பப் பெண்கள் களங்கப்படுகின் றனர். பெண் சீரழிந்து கெட் டுப்போவதால்தான் வருணா சிரம தர்மம் அழிந்து தேவை யற்ற சந்ததிகள் பிறக்கின்றன என்பது அதன் பொருள்.

இந்தக் கடைசி வரியைத் தான் நான் மாநாட்டில் சுட் டிக்காட்டிப் பேசினேன். கீதையை மேற்கோள் காட் டுவதோ, உபநிஷத்தை, மகா பாரதத்தை, ராமாயணத்தை, பைபிளை, குரானை, திருக் குறளை மேற்கோள் காட்டுவ தென்பதோ தடை செய்யப் பட்ட ஒன்றல்ல. கீதையை திரித்துக் கூற வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. ஒரு கருத்தாக்கமோ, சமூக வழக்கமோ, அது பாரம் பரியமானதாக இருந்தாலும் கூட அதை இன்றைய கால கட்டத்தோடு பொருத்திப் பார்க்கும்போது அதன் நிறை குறைகளை பாதிப்புகளை ஆராய்ந்து பார்க்கவேண்டிய அவசியம் ஏற்படுகிறது.

உலகத்தின் அத்தனை மரபு களும், மதங்களும், கோட் பாடுகளும் இன்று ஒரு மறு வாசிப்புக்கு உள்ளாக்கப்பட் டிருப்பதை நாம் கண்கூடாகப் பார்த்துக் கொண்டிருக்கி றோம்.

மதத்தின் பெயரால், பாரம் பரியத்தின் பெயரால் பழம் பெருமையின் பெயரால் பெண்கள் ஒடுக்கப்பட்டது என்பது நிதர்சனம். அதை எதிர்க்கும் குரல்கள் எழும் போது இப்படிப்பட்ட கண் டனங்கள் எழும் என்பதும் நிதர்சனம். ஆனால், பகவத் கீதை யைக் காக்க கொடி தூக்குப வர்கள், அதில் என்ன இருக் கிறது என்பதைப் படித்துவிட்டு அதைச் செய்வது உத்தமம் என்று அவ்வறிக்கையில் கனி மொழி தெரிவித்துள்ளார்.

Posted in DMK, Govt, Politics, Tamil, Tamil Nadu | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »

Viduthalai Editorials: The skimming of the creamy layer – Complains against stringent parameters

Posted by Snapjudge மேல் ஏப்ரல் 14, 2008

கிரீமிலேயரா?

உச்சநீதிமன்றம் நேற்று (10.4.2008) அளித்த தீர்ப்பு வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது என்றாலும், இந்திய அரசமைப்புச் சட்டத்தில் எந்த இடத்திலும் சொல்லப்படாத பொருளாதார அளவு கோலைத் திணித்ததுமூலம் பிற்படுத்தப்பட்ட மக்களின் வாழ்வில் ஒரு இடியைப் போட்டுவிட்டது என்றே சொல்லவேண்டும்.

அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக ஒரு சட்டம் இயற்றப்பட்டுள்ளதா இல்லையா? என்று தீர்மானிப்பதுதான் நீதிபதிகளின் பணியே தவிர, அரசமைப்புச் சட்டத்தின் எல் லைக்கு வெளியே குதித்து, தம் மனப்போக்கில் ஆணைகளைப் பிறப்பிப்பது மிகவும் ஆபத்தானதாகும். இது வேலியே பயிரை மேயும் செயலாகும்.

இட ஒதுக்கீடு என்பது தாழ்த்தப்பட்டோருக்கும், பிற்படுத்தப்பட் டோருக்கும் தனித்தனியே அளவு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அளவுகோல் என்று வரும்பொழுது இரு தரப்பினருக்கும் ஒன்றுபோலவே அமையக்கூடியது.
ஆனால், இட ஒதுக்கீட்டில் தாழ்த்தப்பட்டோருக்கு ஒரு அளவு கோலும், பிற்படுத்தப்பட்டோருக்கு இன்னொரு அளவுகோலும் வைத்திருப்பது அசல் பிரித்தாளும் தன்மையுடையதாகும்.

பிற்படுத்தப்பட்ட சமூகத்தில் உள்ள கிரீமிலேயர் என்ற வசதி படைத்தவர்களுக்கு இட ஒதுக்கீடு கிடையாது என்பது – மேம்போக்காகப் பார்ப்பவர்களுக்கு நியாயம்போல இடமாறு தோற்றப் பிழையாகத் தோன்றலாம்.

ஆண்டாண்டுகாலமாகக் கல்வியையும், உத்தியோக வாய்ப்புகளையும் தங்கள் வசமே வைத்துக்கொண்டுள்ள ஆதிக்க ஜாதியினருடன் எதிர்த்துப் போட்டியிடக் கூடிய பகுதியினரை கிரீமிலேயர் என்று கூறி வெளியே தள்ளி விடுவதன்மூலம் ஏற்கெனவே அத்துறைகளில் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்தவர்களுக்குப் பேருதவி செய்ததாக ஆகாதா என்பதை மெத்த படித்த நீதிபதிகள் சிந்திக்காமல் போனது வருந்தத்தக்கதே!

அவர்கள் சொல்லும் அந்த விவாதத்தையே எடுத்துக்கொள் வோம். மத்திய அரசு உயர்கல்வி நிறுவனங்களான அய்.அய்.டி., அய்.அய்.எம்., எய்ம்ஸ் முதலிய ஆகிய நிறுவனங் களில் சேர்ந்து படிக்க ஆகும் செலவு என்ன?

எடுத்துக்காட்டாக அகமதாபாத் அய்.அய்.எம். நிறுவனத்தில் சேர்ந்து படிக்கும் ஒரு மாணவனுக்கு ஆகக்கூடிய செலவு 11 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்.

பிற்படுத்தப்பட்டவர்களில் ஏழை, எளிய மக்களுக்காகத்தான் இந்தக் கிரீமிலேயர் நீக்கம் என்பது உண்மையானால், பிற் படுத்தப்பட்ட மக்களில் உள்ள ஏழை, எளிய மக்கள் 11 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கொடுத்து அய்.அய்.எம். நிறுவனத்தில் சேர்ந்து படிக்க முடியுமா? என்ற பொது அறிவு கேள்விக்கு நீதிபதி கள் தரப்பில் என்ன நியாயமான பதிலை வைத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை.

பொருளாதார அளவுகோலைக் கொண்டே பொருளாதாரத்தில் வசதி படைத்தவர்களையும் முட்டித்தள்ளி, பொருளாதாரத்தில் ஏழை, எளிய பகுதியைச் சேர்ந்தவர்களையும் உள்ளே புக முடியாமல் செய்த – ஒரே கல்லால் இரண்டு காய்களை வீழ்த்திய ராஜதந்திரத்தை உச்சநீதிமன்றம் செய்திருக்கிறது.

மண்டல் குழுப் பரிந்துரைகளில் ஒரு பகுதியாகிய பிற்படுத்தப் பட்டவர்களுக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீட்டுக்கான ஆணை யினை சமூகநீதிக் காவலர் மாண்புமிகு வி.பி. சிங் அவர்கள் பிறப்பித்தார். அதனை எதிர்த்துத் தொடுக்கப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் (ஒன்பது நீதிபதிகளைக் கொண்ட ஆயம்) கிரீமி லேயர் என்ற பொருளாதார அளவுகோலைக் கொண்டு வந்து திணித்தது. அதன் விளைவு என்ன தெரியுமா?

மத்திய அரசுத் துறையில் 12.5 விழுக்காடு அளவுக்கு இடங்களைப் பெற்ற பிற்படுத்தப்பட்ட மக்களின் எண்ணிக்கை பத்து ஆண்டுகளில் 5.3 விழுக்காடாக வீழ்ச்சி அடைந்துவிட்டது.

இந்த அனுபவத்துக்குப் பிறகும்கூட, உயர்நிலைக் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோரின் இட ஒதுக்கீட்டிலிருந்து கிரீமிலேயர்களை வெளியேற்றுவது எதிர் விளைவைத்தான் ஏற்படுத்தும் என்பதில் அய்யமுண்டோ?

பிற்படுத்தப்பட்டோருக்கு இந்திய அரசமைப்புச் சட்டப்படி இட ஒதுக்கீடு பெற உரிமை உண்டு என்ற வகையில், உச்சநீதிமன் றம் நடந்துகொண்டது என்பதிலே ஒரு வகையில் மகிழ்ச்சி என்றாலும், இன்னொரு வகையிலே அதனைத் தட்டிப் பறிப்பது என்பது மகிழ்ச்சிக்குரியதல்ல என்று தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் தெரிவித்திருக்கும் கருத்தின் அடிப்படையில், இந்தியா முழுமையும் உள்ள சமூகநீதிச் சக்திகள் அணிதிரண்டு போராடுவது அவசியமாகும்.

சமூகநீதிக்காக இன்னும் எத்தனை எத்தனைக் களங் களைச் சந்திக்க வேண்டுமோ தெரியவில்லை. என்றாலும், போராடுவோம் – வெற்றி பெறுவோம் – வெற்றி கிட்டும்வரை போராடுவோம்!

இடைநிலையில் மட்டும் ஏன் கிரீமிலேயர்?

பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27 சதவிகித இட ஒதுக்கீடு அடிப்படையில் கிரீமிலேயர் என்பதை வலியுறுத்தும் உச்ச நீதிமன்றம் இதை ஏன் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு மட்டும் வலியுறுத்த வேண்டும்?

மேலே உள்ள, திறந்த போட்டியில் பங்கேற்கும் முன்னேறிய ஜாதியினருக்கும் (Forward Communities)பிற்படுத்தப்பட்டவர் களுக்கு அடுத்துள்ள S.C., S.T சமுதாயப் பிரிவினருக்கும் வைக்கப்படாத கிரீமிலேயர் – இடையில் உள்ள பிற்படுத்தப்பட்ட சமூகத்திற்கு மட்டும் வைக்கப்படுவது எவ்வகையில் நீதி, நியாயம், நேர்மை?

இக்கேள்வியின் அடிப்படை, அவர்களுக்கும் கொண்டு வரப்படவேண்டும் என்பது அல்ல; மாறாக, அவர்களுக்கு வைக்கப்படாதது போல் இடைத் தட்டாக உள்ள பிற்படுத்தப் பட்டவர் களுக்கும் அதை ரத்து செய்ய வேண்டும் என்பதற் காகவே!

வருமானம் குறைவாக உள்ள பிற்படுத்தப்பட்டவர்களால் தங்கள் பிள்ளைகளை அய்.அய்.டி., அய்.அய்.எம்.களில் படிக்க வைக்க இயலுமா?


அரசமைப்புச் சட்ட முதல் திருத்தத்திலேயே நிராகரிக்கப்பட்டது பொருளாதார அளவுகோல்

1. இந்திய அரசியல் சட்டத்தின் முதலாவது அரசியல் சட்டத் திருத்தமே, தமிழ்நாட்டில் தந்தை பெரியார் அவர்கள் தலைமையில் ஏற்பட்ட கிளர்ச்சியின் விளைவாக வந்தது என்பது அன்றைய பிரத மர் நேரு அவர்களால் நாடாளுமன்றத்திலேயே பதிவு செய்யப்பட் டுள்ளது!

1951 இல் நிறைவேறிய அந்த முதலாவது அரசியல் சட்டத் திருத் தத்தின்மூலம் 15(4) என்ற புதுப்பிரிவு இணைக்கப்பட்டது. அதில் பிற்படுத்தப்பட்டவர்களை அடையாளம் காட்டும் வகையில், “சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும்” (Socially and Educationally) என்ற சொற்றொடர்களைப் போட்டு திருத்தம் நிறைவேற்றப்பட்டது.

அப்போது சட்ட அமைச்சர், டாக்டர் அம்பேத்கர், பிரதமர் நேரு முதலியோர் அங்கம் வகித்தனர்.

(பழைய அரசியல் நிர்ணய சபை உறுப்பினர்களே நாடாளுமன்ற உறுப்பினர்களாக அமைந்த அவை அது. முதலாவது பொதுத் தேர்தல் 1952 இல் தான் என்பது சுட்டிக்காட்டப்பட வேண்டும்).

Founding Fathers of Constitution அரசியல் சட்டத்தை உருவாக் கிய கர்த்தாக்களையே கொண்டது அந்த அவை என்பது உச்சநீதி மன்றம் போன்றவைகளால் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டிய ஒன்று.

நேருவும் – அம்பேத்கரும் ஏற்கவில்லை

அன்று சிலர், பொருளாதார ரீதியாக “Economically” என்ற சொற்றொடரும் இடம்பெறுவது அவசியம் என்று சில திருத்தங் களைத் தந்தனர். அதை சட்ட அமைச்சர் டாக்டர் அம்பேத்கரோ, பிரதமர் நேருவோ ஏற்கவில்லை.


இட ஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்புத் திட்டமல்ல!

2. இட ஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்புத் திட்டம் அல்ல; சமூக நீதிக்கான வாய்ப்பினை காலங்காலமாக மறுக்கப்பட்ட மக்களுக்கு வழங்கும் ஓர் ஏற்பாடு என்பதும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு.

நரசிம்மராவ் அரசு உயர்ஜாதியினரில் 10 சதவிகிதம் ஏழை களுக்கு அளித்த இட ஒதுக்கீட்டினை உச்சநீதிமன்றம் செல்லாது என்று தீர்ப்பளித்தது இந்த அடிப்படையில்தான்!

3. இதைவிட முக்கியமான ஒரு கருத்து, பிற்படுத்தப்பட்டவர் களுக்கு மத்தியக் கல்வி நிலையங்களில் கதவே இதுவரை திறக்கப்படவில்லை; இப்போதுதான் திறக்கப்படவிருக்கிறது. அதற் குள்ளே, ஏதோ 27 சதவிகிதத்தினை உயர் வருமான வசதி படைத் தோர் அபகரித்துவிட்டனர் என்ற கூச்சலுக்கு அடிப்படை உண்டா?

பந்திக்கு உட்கார வைப்பதற்கு முன்பே, இதை மற்றவர்கள் சாப்பிட்டு விட்டனர்; எனவே, இதைத் தரம் பிரிக்க வேண்டும் என்று கூறுவது நியாயமா? தேவையா? மோசடி அல்லவா?


‘கிரீமிலேயர்’ அளவுகோலுக்கு உச்சநீதிமன்றம் வைத்திருக்கும் ஆதாரம் என்ன?

உச்சநீதிமன்றம் அண்மையில் அளித்த தீர்ப்பு வரவேற்கத் தக்கதே! இடஒதுக்கீடு என்பதே அரசியலமைப்புக் சட்டத்துக்கு விரோதம் என்பதுபோல உருவாக்கப்பட்ட கருத்து இந்தத் தீர்ப்பு மூலம் நிராகரிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இது வரவேற்கத்தக்க தீர்ப்பேதான்.

கிரீமிலேயர் என்ற ஒன்றைப் புதிதாகக் கொண்டு வந்து திணித்து இடஒதுக்கீட்டின் நோக்கமே தகர்க்கப்பட்டுள்ளது. மண்டல் குழு பற்றி உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் ஒன்பது நீதிபதிகள் கொண்ட தீர்ப்பில் திணிக்கப் பட்ட ஒன்றாகும் இந்தக் கிரீமிலேயர்.

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் எந்தப் பகுதியிலும் காணப்படாதது இது. பொருளாதார அளவுகோல் என்பது 1951-இல் நடைபெற்ற விவாதத்திலேயே நிராகரிக்கப்பட்டது. இந்திய அரசமைப்புச் சட்டத்தில் முதல் திருத்தம் கொண்டு வரப்பட்டு, பொருளாதார அளவுகோல் பற்றி விவாதிக்கப் பட்டு, வாக்கெடுப்பும் நடத்தப்பட்டு, ஏற்காமல் தள்ளுபடி செய்யப்பட்ட ஒன்றைக் கொண்டு வந்து உச்சநீதிமன்றம் திணிப்பது அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமாகும்.

பொருளாதார அளவுகோல் என்பது ஆண்டுக்கு ஆண்டு மாறக் கூடியது. இந்த ஆண்டு வருமானம் அடுத்த ஆண்டு இருக்கும் என்று சொல்ல முடியாது.

ஒரு குடும்பத்துக்குள்ளேயே ஒரு வீட்டுக்குள்ளேயேகூட ஒருவர் பிற்படுத்தப்பட்டவராகவும் இன்னொருவர் அது அல்லாதவராகவும் ஆக்கப்படக் கூடிய ஒரு நிலைமையை இந்தத் தீர்ப்பு ஏற்படுத்தியுள்ளது.

வருமானம் என்பதில் நிரந்தர வருமானக்காரர்கள் உண்டு – அவர்கள் அலுவலர்கள்; விவசாயத் தொழிலில் ஈடுபடக் கூடியவர்களை நிரந்தர வருமானக்காரர்களின் பட்டியலில் சேர்க்க முடியாது. இயற்கைத் தொல்லைகளால் பாதிக்கப்படக் கூடியது விவசாயத் தொழில்; இன்னும் சொல்லப் போனால் இடஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்புத் திட்டமும் அல்ல. இந்தக் கருத்து மண்டல் குழுவின் அறிக்கையிலே தெளிவுபடுத் தபட்டுள்ளது.

ஏழையாக இருப்பவர்களுக்குப் பொருளாதார உதவிகள் செய்யலாமே தவிர கல்வியில் கொண்டு வந்து அதனைத் திணிக்கக் கூடாது.
பிற்படுத்தப்பட்டவர்களில் பொருளாதாரத்தில் வசதி வாய்ப்புள்ளவர்கள் எல்லாம் கல்வியில் முன்னேறியுள்ளனர் என்பதற்கு உச்சநீதிமன்றத்திடம் ஆதாரமோ புள்ளி விவரமோ இருக்கிறதா? எந்த அடிப்படையில் கிரிமீலேயரை வெளியேற்ற வேணடும் என்று கூறுகிறார்கள்?

முதன் முதலாக மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் இப்பொழுதுதான் பிற்படுத்தப்பட்டோர் நுழைகிறார்கள். அதற்குள்ளாகவே அவர்கள் கல்வியில் வளர்ந்து விட்டார்கள் என்று அவர்களில் ஒரு பிரிவினரை வெளியேற்றுவது நியாயமாக இருக்க முடியுமா?
வாய்ப்பைக் கொடுத்து விட்டு அதற்குப் பிறகு 5 ஆண்டு கழித்தோ, பத்தாண்டு கழித்தோ ஆய்வு செய்யலாமே – 20 ஆண்டுகள் கழித்து பரிசீலனை செய்யப்பட வேண்டும் என்றுதான் மண்டல் குழு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பந்தியிலேயே உட்காரவில்லை; அதற்குள்ளாகவே அவர்கள் தின்று தீர்த்து விட்டனர் என்று நீதிமன்றம் கூறுலாமா? இதில் இன்னொரு கருத்து சுட்டிக்காட்டப்பட வேண்டும். பிற்படுத்தப்பட்டோரில் பொருளாதாரத்தில் உயர்ந்தவர்களுக்கு இடஒதுக்கீடு கூடாது – என்று புகார் செய்ய வேண்டியவர்கள் யார்? பிற்படுத்தப்பட்டோரில் ஏழைகளாக இருக்கக் கூடியவர்கள்தானே! அவ்வாறு யாரும் வழக்குத் தொடுக்கவில்லையே! உயர்ஜாதிகாரர்கள்தானே வழக்குத் தொடுத்துள்ளனர். உச்சநீதிமன்ற தீர்ப்பில் இன்னொரு ஆபத்து சுட்டிக்காட்டப்பட வேண்டும்.

உயர்கல்வி நிறுவனங்களில் சேர தகுதியானவர்கள் பிற்படுத்தப்பட்டோரிலிருந்து கிடைக்கவில்லையானால் அந்த இடங்களை திறந்த போட்டிக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்று கூறுவது – யாருக்கு லாபம்? உயர் ஜாதிக்காரர்களுக்குத் தானே இப்படி ஒரு தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்குகிறது?

பிற்படுத்தப்பட்டோர் பட்ட மேற்படிப்புக்குச் செல்லக் கூடாதா
பட்ட மேல் படிப்பில் இடஒதுக்கீடு கூடாது என்று ஒரு சில நீதிபதிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
இது தீர்ப்பா? கருத்தா? கட்டாயமா? என்பவை தெளிவாக் கப்பட வேண்டும். பிற்படுத்தப்பட்டவர்கள் பட்ட மேற் படிப்புக்கு செல்லக் கூடாதா? இது சமூகநீதியின் அடிப் படையைத் தகர்க்கக் கூடியதாகும்.

– செய்தியாளர்கள் கூட்டத்தில் தமிழர் தலைவர் கி. வீரமணி (சென்னை 12.4.2008)


இடஒதுக்கீடு வசதி படைத்தவர்கள் யார்?

உயர்கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட வர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கியது செல்லும் என்று தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், பிற்படுத்தப் பட்டவர்களில் வசதி படைத்த பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்கக்கூடாது என்று உத்தரவிட்டு உள்ளது.
மண்டல் ஆணைய வழக்கில் கடந்த 1992 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் வசதி படைத்தவர்கள் பிரிவு முதன் முதலாக அறிமுகப் படுத்தப்பட்டது.

அரசியல் சட்ட அதிகார பதவி வகிக்கும் குடியரசுத் தலைவர், உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகள், மத்திய பொதுத் தோர்வாணைய உறுப்பினர்கள், மத்திய மற்றும் மாநில அரசுப் பணிகளில் ஏ, பி அல்லது குரூப் 1, குரூப் 2 அதிகாரிகள் மற்றும் பொதுத்துறை நிறுவன அதிகாரி களின் குழந்தைகளுக்கு இட ஒதுக்கீடு வழங்கக்கூடாது என்று அந்தத் தீர்ப்பில் குறிப்பிடப் பட்டு இருந்தது.

ராணுவம் மற்றும் துணை ராணுவப் பணியில் சுலோனியல் அல்லது அதற்கு மேல் பதவி வகிக்கும் அதிகாரிகளின் குழந்தைகளும் இந்தப் பிரிவில் சேர்க்கப்பட்டு உள்ளனர். அத்துடன் வழக்கறிஞர்கள், சார்ட்டர்டு அக்கவுண்டண்ட், மருத்துவர்க,ள நிதி மற்றும் நிர்வாக ஆலோசகர்கள், பல்மருத்துவர்கள், கட்டடக் கலைஞர்கள், கணினி பொறியாளர்கள், வசனகர்த்தா, விளையாட்டு வீரர்கள், விளையாட்டுத் துறை பொறுப்பு வகிப்பவர்கள் மற்றும் ஊடக அதிகாரிகள், வசதி படைத்த பிரிவினர் என்றும் தீர்ப்பில் குறிப்பிடப் பட்டிருந்தது.

பொதுவாக ஆண்டு வருமானம் ரூ 2 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிகமாக உள்ள பிற்படுத்தப் பட்ட வகுப்பினர் குழந்தைகளுக்கும் இட ஒதுக்கீடு கிடையாது. விவசாயத்தில் ஈடுபட்டவர்களில், நில உச்சவரம்பு சட்டப்படி ஒருவர் வைத்துக் கொள்ள அனுமதிக்கப் பட்டுள்ள பாசன வசதியுள்ள நிலத்தில் 85 விழுக்காடும் அதற்கு மேலும் உள்ள விவசாயிகளின் குழந்தைகளுக்கும் இட ஒதுக்கீடு கிடையாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நேற்றைய வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், வசதி படைத்தவர்கள் பட்டியல் பற்றி மத்திய அமைச்சரவை இறுதி முடிவெடுக்கவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர்.

Posted in Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , | 2 Comments »