Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Posts Tagged ‘Vijaiganth’

Panruti Ramachandran thwarted merger of DMK with MGR’s ADMK: Mu Karunanidhi

Posted by Snapjudge மேல் ஏப்ரல் 1, 2009

திமுக, அதிமுக இணைவதைக் கெடுத்தவர் பண்ருட்டி ராமச்சந்திரன் – கருணாநிதி

திமுகவும், அதிமுகவும் இணைய பிஜூ பட்நாயக் மேற்கொண்ட முயற்சிகள் கூடி வந்த வேளையில், பண்ருட்டி ராமச்சந்திரன், எம்ஜிஆர். மனதை மாற்றி அதைக் கெடுத்து விட்டார் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

முரசொலி அறக்கட்டளை சார்பில் 2008-ம் ஆண்டுக்கான கலைஞர் விருது மற்றும் முரசொலி மாறன் சிறப்பு விருதுகள் வழங்கும் விழா, சென்னையில் உள்ள கலைஞர் அரங்கில் நேற்று நடைபெற்றது.

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, எழுத்தாளர் சோலை மற்றும் புகைப்பட நிபுணர் யோகா ஆகியோருக்கு கலைஞர் விருதுகளையும், முரசொலி மாறன் சிறப்பு விருதினை நடிகர் தியாகுவுக்கும் கருணாநிதி வழங்கினார்.

விருது பெற்ற அனைவருக்கும் தலா ஒரு லட்சம் ரூபாய் பொற்கிழி வழங்கப்பட்டது. முன்னதாக, ஈழத்தந்தை செல்வாவின் 112-வது பிறந்தநாளையொட்டி, அவரது திருவுருவப் படத்தையும் கருணாநிதி திறந்து வைத்தார்.

பின்னர் நிகழ்ச்சியில் கருணாநிதி பேசுகையில்,

வீரமணி சொன்ன புதிய செய்தி

உங்களுக்கெல்லாம் ஒரு புதிய செய்தியை இங்கே வீரமணி சொன்னார். ஆனால் அவர் சொல்லும் வேகத்திலே ஒன்றிரண்டை விட்டுவிட்டார் என்று கருதுகின்றேன்.

திமுக-அதிமுக இணைப்பு முயற்சி..

திராவிட இயக்கம் ஒன்றாக விளங்க வேண்டும் என்று, அதனை இரண்டாக ஆக்கியவர் (எம்ஜிஆர்) எண்ணினார்- அதற்கு முயற்சி மேற்கொண்டோம் என வீரமணி குறிப்பிட்டார். ஒன்றாக ஆகவேண்டும் என்று அருமை நண்பர் எம்.ஜி.ஆர். முயற்சி மேற்கொண்டு, அதற்கு தமிழர் தலைவர் வீரமணியை நீங்கள் அந்த காரியத்தை செய்ய வேண்டுமென்று கேட்டபோது, நடந்த சில விஷயங்களை முழுமையாக சொல்ல விரும்புகிறேன்.

அப்படி ஒரு முயற்சியை ஒரு தேர்தல் நேரத்தில்-நம்முடைய அன்புக்கும், மதிப்புக்கும் உரிய பிஜு பட்நாயக் அந்த முயற்சியை மேற்கொண்டு, ஏன் திமுகவும், அதிமுகவும் ஒன்றாகக் கூடாது என்று கேட்டார். இது யாருடைய சிந்தனை என்று கேட்டபோது, நான் எம்ஜிஆரிடம் பேசிவிட்டேன். உன் நிபந்தனை என்ன என்று கேட்டார்? நீங்கள் பேசியதும் நண்பர் எம்ஜிஆர் ஒப்புக்கொண்டதும் உண்மை என்றால் என் நிபந்தனையை கேளுங்கள் என்றேன்.

எனது நிபந்தனைகள்

இரண்டு கட்சிகளுக்கும் தலைவராக நான் இருப்பேன்.

ஏன் என்றால் இந்த இரண்டு கட்சிகளின் ஆரம்பகாலத்தினுடைய அடிப்படை கொள்கைகளை- கட்டிக்காக்க கூடிய அந்தத் தலைமை என்னிடத்திலே இருந்தால்தான்- அதை கட்டிக் காக்க முடியும். இப்போது இருப்பதைப் போலவே முதல்வர் பொறுப்பில் அவரே நீடிக்கட்டும் என்றேன்.

அப்படியா என்று கேட்ட அவர், பிறகு என்ன நிபந்தனை என்று கேட்டார். ஒன்றும் பெரிய நிபந்தனை அல்ல. கொடியிலே அண்ணாவின் படம் போட்டிருக்கிறார்கள். அது நீடிக்கட்டும். திடீரென அண்ணா படத்தை எடுக்கச் சொன்னால், அண்ணா படத்தை வேண்டுமென்றே கருணாநிதி எடுத்துவிட்டான் என்று சிலர் கோள் மூட்டுவார்கள், ஆகவே அண்ணா படம் கொடியில் அப்படியே இருக்கட்டும் என்று சொன்னேன்.

வேறு என்ன நிபந்தனை என்றார்? பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்கள் வாழ, உரிமை பெற, சலுகைகளை அனுபவிக்க, எல்லோருக்கும் கிடைக்கக் கூடிய நன்மைகள், அவர்களுக்குக் கிடைக்க, கல்வி, வேலை வாய்ப்புகளில் அவர்கள் சமூகரீதியாக இன்று பெற்று வருகிற இடஒதுக்கீடு-கல்லூரிகளில், பள்ளிகளில், பல்கலைக் கழகங்களில் பெறுகின்ற இடஒதுக்கீடு- இப்போது எம்.ஜி.ஆர். திடீரென கொண்டு வந்திருக்கிற பொருளாதார அடிப்படையில் பாழ்படுகிறது.

ஆகவே, 9 ஆயிரம் ரூபாய் சம்பளம் உள்ளவன் ஒரு சாதி. அதற்கு கீழே வருமானம் உள்ளவன் ஒரு சாதி என்று பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு செய்வது கூடாது, சமூக அடிப்படையில் அவர்களுடைய தகுதியை பிரித்து இந்த, இடஒதுக்கீடு தரப்படவேண்டும்,

அதற்கு ஒத்துக் கொள்கிறாரா? என்று கேளுங்கள் என்றேன்.

என்ன ஆண்டவரே…

நான் இப்போதே போய் எம்.ஜி.ஆரிடம் போய் பேசிவிட்டு வருகிறேன் என்று சொல்லி- இவர் சென்று, சேப்பாக்கம் கெஸ்ட் அவுசுக்கு எம்ஜிஆரை அழைத்துக் கொண்டு வந்தார். அங்கு நான் ஒரு அறையில் இருக்கிறேன். மற்றொரு அறையில் எம்.ஜி.ஆர், நெடுஞ்செழியன், இன்னொருவர் பெயர் சொல்ல விரும்பவில்லை. இருந்தாலும் சரித்திரம் முழுமையாகாது. பண்ருட்டி ராமச்சந்திரன். இவர்கள் இன்னொரு அறையில் இருந்தார்கள்.

எம்.ஜி.ஆருடன் சந்திப்பு

எம்ஜிஆர் என்னுடைய அறைக்கு வந்தார். அவர் என்னை பார்த்தால் என்ன முதலாளி? என்பார், இல்லாவிட்டால் என்ன ஆண்டவனே? என்பார். இப்படித்தான் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்வோம். அவர் என்னை பார்த்ததும், என்ன ஆண்டவரே? பிஜு பட்நாயக்கிடம் என்ன சொன்னீர்கள் என்று கேட்டார்.

நான் சொன்னேன்- இந்த இரு கழகங்களும் ஒன்றாக இணைந்தால், அண்ணா இட்ட பெயரே, தி.மு.கவே நீடிக்க வேண்டும் என்று சொன்னேன். கொடியை பொறுத்தவரையில் நீங்கள் வைத்த அண்ணாவின் உருவம், நீடிக்கட்டும் என்றேன். நீங்களே முதல்வராக நீடிக்கலாம் என்று சொன்னேன். இந்த 9,000 ரூபாய் பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீட்டை உடனே வாபஸ் பெறவேண்டும் என்றேன்.

அதற்கு அவர், நான் இன்று வேலூர் போகிறேன். நாளைக்கு பக்கத்தில் ஒரு ஊரில் எங்கள் கட்சியின் செயற்குழுக் கூட்டம் நடக்கவுள்ளது. நீங்களும் சென்னையில் அதே நேரத்தில் அவசர செயற்குழுவைக் கூட்டுங்கள். அங்கே, எங்கள் செயற்குழு நடைபெறும் நேரத்தில் நாளை மறுநாள் உங்கள் செயற்குழுவும் இங்கே நடைபெறட்டும்.

நாம் பேசிக் கொண்ட நிபந்தனைகளை வைத்து, ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி, அதை தொலைபேசியில் எங்களுக்குச் சொல்லச் செய்யுங்கள். நாங்களும் அதே தீர்மானத்தை நிறைவேற்றி, இரு கட்சிகளும் ஒன்றாக ஆகலாம் என்று சொன்னார்.

காரியத்தைக் கெடுத்த பண்ருட்டி ராமச்சந்திரன்…

சொல்லிவிட்டு வேலூர் சென்றார். காரில் சென்றபோது என்ன நடந்ததோ எனக்கு தெரியாது. காரிலே அவரோடு சென்றவர், காதுக்குள்ளே புகுந்தார். கருத்தை மாற்றினார். வேலூர் பொதுக்கூட்டத்திலே எம்ஜிஆர் பேசும்போது, மாலை பத்திரிகையில் நானும், கருணாநிதியும் இணைய போகிறோம். திமுகவும், அதிமுகவும் இணையப்போகின்றன என்று வந்துள்ள செய்தியை யாரும் நம்பாதீர்கள் என்று ஒரு செய்தியை அங்கே வெளியிட்டார்.

காரில் நடந்த மர்மம்

நான் உங்களுக்கு சொல்கிறேன். இது எப்படி விளைந்தது என்று கேட்டால் அப்போதே சொன்னேன்-நான் பெயர் சொல்ல விரும்பாத ஒருவர் என்று- அவரும் அந்த காரில் சென்றார். அதனுடைய விளைவு இந்த முடிவுக்கு காரணமாக ஆனது.

ஆக, திராவிட இயக்கம் என்பது ஒரு கொள்கை அடிப்படையில்தான் இயங்க முடியும். ஆனால் ஒரு கொள்கை, ஒரு லட்சியம் இவற்றுக்காக பாடுபடுகின்ற இந்த இயக்கம்-அந்த போரிலே வெற்றி பெறுகிற வரையில் யாருக்கும், எந்த நேரத்திலும் கொள்கையிலே ஒரு துளியும் விட்டுத் தராது, லட்சியத்திலே ஒரு துளியும் விட்டுத் தராது, லட்சியத்திலே சிறிதும் துவண்டுவிடாது.

ஈழத்தந்தை செல்வா

இந்த இனிய விழாவில் நம்முடைய நண்பர் தந்தை செல்வா அவர்களுடைய புதல்வர் சந்திரஹாசன் வருகை தந்து நமக்கெல்லாம் பெருமையை ஏற்படுத்தியிருக்கிறார். தந்தை செல்வா அவர்கள் 1972ம் ஆண்டு தமிழகத்துக்கு வந்தார். எதற்காக? இலங்கையிலே அவதிப்படுகிற மக்களுக்கு- இலங்கையிலே அடிமைப்படுத்தப்பட்டிருக்கிற தமிழ் இனத்துக்கு- உரிமைகளைக் கேட்க-அதற்காக துணைபெற இங்கே பெரியாரை காண, அதைத் தொடர்ந்து என்னைக் காண இங்கே வந்தார்.

அவர் அன்றைக்கு புரிந்த தொண்டின் காரணமாக- ஆற்றிய பணியின் காரணமாக- அடிமைப்பட்டு கிடக்கிற இலங்கை தமிழர்களுக்கு சுதந்திர உணர்ச்சியை உருவாக்க வேண்டும் என்பதற்காக அவர் உருவாக்கிய தமிழ் ஈழம் என்ற அந்த கொள்கை பரவுவதற்காக இங்கே வந்தார். ஆனால் 72ம் ஆண்டிலே வந்தார். பிறகு, ஐந்தாண்டுகளுக்கு பிறகு அவர்கள் மறைந்தார்.

ஈழ வரலாறு தெரியாதவர்கள்

அவர்கள் மறைந்தபோது அதாவது 32 ஆண்டுகளுக்கு முன்பு நான் எழுதிய உடன்பிறப்பு கடிதத்தில், செல்வா மறைந்துவிட்டார். எனினும் அவரால் உருவாக்கப்பட்ட ஆற்றல் மிகு தலைவர்கள், தளபதிகள், வீரக்கவிஞர்கள், இலட்சிய காளைகள் பலர் இருக்கிறார்கள். இலங்கை தமிழர்களுக்காக செல்வா ஆற்றிய பணியை அவர் வழியில் மற்றவர்கள் தொடர்வார்கள்.

அவர் காத்திட்ட அமைதி அதேநேரத்தில் தமிழர்களின் நல்வாழ்வுக்கு வழி அமைத்திட அவர் ஓயாது வழங்கிய உழைப்புஇவை என்றென்றும் அந்த தியாக செல்வத்தை உலகத் தமிழர்களின் நெஞ்சத்தில் அணையாத தீபமாக ஆக்கி வைத்திருக்கும் என்பது மட்டும் உறுதி என்று எழுதினேன்.

இந்த வரலாறு தெரியாதவர்கள் செல்வா மறைந்த செய்தி புரியாதவர்கள் செல்வா பட்ட பாடு என்னவென்று படிக்காதவர்கள் இன்றைக்கு இலங்கையை பற்றி நமக்கு என்ன தெரியும் என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

இலங்கை, ராவணன் ஆண்ட பூமி மாத்திரமல்ல என் தமிழனும் ஆண்ட பூமிதான். அந்த இலங்கையிலே ஈழத் தமிழர்கள் மீண்டு வாழ எந்த ஏற்பாடுகளை உலக நாடுகள் ஒன்று கூடிச் செய்தாலும் அதற்கு வழி வகுக்க, ஆலோசனைகளைக் கூற, அறிவுரைகளை வழங்க, பக்கத் துணை நிற்க என்றென்றும் தமிழகம் தயாராக இருக்கின்றது, திமுகவும் தயாராக இருக்கிறது என்றார் கருணாநிதி.

எம்.ஜி.ஆர் விருப்பம்

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தனது ஏற்புரையில், “என்னை பாராட்டி மு.க. ஸ்டாலின் பேசும்போது மணப்பெண் போல் தலை குனிந்திருந்தேன். மிசா காலத்தில் சிறையில் நாங்கள் அடைபட்டிருந்தபோது இரவு 9 மணி அளவில், போலீசார் தாக்கி என் மீது ரத்தம் தோய்ந்த நிலையில் தள்ளப்பட்ட ஒரு உருவம்தான் ஸ்டாலின். இந்த இயக்கத்தில் உள்ளவர்கள் கூட்டணி சேர வேண்டும் என்பதற்காக வந்தவர்கள் அல்ல. தி.மு.க.வுடன் அவர்கள் எப்போதும் இருப்பார்கள். எம்.ஜி.ஆர். முதல்-அமைச்சரான பிறகு தி.மு.க.வையும், அ.தி.மு.க.வையும் இணைக்க விரும்பினார். அதற்காக நான் தி.மு.க. தலைவர் கருணாநிதியிடம் தூது சென்றேன். அவரிடமும் பேசினேன். ஆனால் சில காரணங்களால் அது முடியாமல் போய்விட்டது. இந்த விழாவில் எனக்கு அளிக்கப்பட்டுள்ள ரூ.1 லட்சத்தை, பெரியார்-மணியம்மை பல்கலைக்கழகத்தில் தமிழில் சிறந்த இதழியலாளர்களை உருவாக்குவதற்காக அவர்களுக்கு பயிற்சி வகுப்பினை தொடங்குவதற்காக, வழங்குகிறேன். அந்த பயிற்சி வகுப்புக்கு கலைஞர் புரவலராக இருப்பார்” என்றார்.

மு.க.ஸ்டாலின்

முன்னதாக, பேசிய முரசொலி அறக்கட்டளைத் தலைவர் ஸ்டாலின், “ஒவ்வொரு ஆண்டும் முரசொலி சார்பில் கலைஞர் விருது வழங்கப்பட்டு வருகிறது. இதுபோல் முப்பெரும்விழாவையொட்டி, பாரதிதாசன் பாடல்கள் ஒப்புவிப்புப் போட்டியை மாணவர்களுக்கும் நடத்தி பரிசு வழங்கி வருகிறோம். இதுவரை 5,594 மாணவர்கள் பரிசு பெற்றுள்ளார்கள். இதுபோல் இதுவரை 238 சிறந்த ஆட்டோ ஓட்டுனர்களுக்கும் ரூ.10.5 லட்சம் பரிசும், விருதும் வழங்கப்பட்டுள்ளது. இதுவரை 40 பேர் கலைஞர் விருது பெற்றுள்ளார்கள். அவர்களுக்கு இதுவரை ரூ.40 லட்சம் வழங்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

இந்த விழாவுக்கு நிதியமைச்சர் அன்பழகன் தலைமை தாங்கினார். விருது பெற்றவர்களின் சாதனைக் குறிப்பை வாசித்து, வாழ்த்துரையை அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். எஸ்.ஏ.எம். உசேன், நன்றியுரை வழங்கினார். இதில், ஆற்காடு வீராசாமி, துரைமுருகன் உள்ளிட்ட தமிழக அமைச்சர்கள், டி.ஆர். பாலு உள்ளிட்ட மத்திய மந்திரிகள், கனிமொழி உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், ராஜாத்தி அம்மாள் மற்றும் முரசொலி அறக்கட்டளை உறுப்பினர் செ.குப்புசாமி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டார்கள்.

Posted in Politics, Tamil, Tamil Nadu | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , | 7 Comments »