Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Viduthalai Editorials: The skimming of the creamy layer – Complains against stringent parameters

Posted by Snapjudge மேல் ஏப்ரல் 14, 2008

கிரீமிலேயரா?

உச்சநீதிமன்றம் நேற்று (10.4.2008) அளித்த தீர்ப்பு வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது என்றாலும், இந்திய அரசமைப்புச் சட்டத்தில் எந்த இடத்திலும் சொல்லப்படாத பொருளாதார அளவு கோலைத் திணித்ததுமூலம் பிற்படுத்தப்பட்ட மக்களின் வாழ்வில் ஒரு இடியைப் போட்டுவிட்டது என்றே சொல்லவேண்டும்.

அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக ஒரு சட்டம் இயற்றப்பட்டுள்ளதா இல்லையா? என்று தீர்மானிப்பதுதான் நீதிபதிகளின் பணியே தவிர, அரசமைப்புச் சட்டத்தின் எல் லைக்கு வெளியே குதித்து, தம் மனப்போக்கில் ஆணைகளைப் பிறப்பிப்பது மிகவும் ஆபத்தானதாகும். இது வேலியே பயிரை மேயும் செயலாகும்.

இட ஒதுக்கீடு என்பது தாழ்த்தப்பட்டோருக்கும், பிற்படுத்தப்பட் டோருக்கும் தனித்தனியே அளவு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அளவுகோல் என்று வரும்பொழுது இரு தரப்பினருக்கும் ஒன்றுபோலவே அமையக்கூடியது.
ஆனால், இட ஒதுக்கீட்டில் தாழ்த்தப்பட்டோருக்கு ஒரு அளவு கோலும், பிற்படுத்தப்பட்டோருக்கு இன்னொரு அளவுகோலும் வைத்திருப்பது அசல் பிரித்தாளும் தன்மையுடையதாகும்.

பிற்படுத்தப்பட்ட சமூகத்தில் உள்ள கிரீமிலேயர் என்ற வசதி படைத்தவர்களுக்கு இட ஒதுக்கீடு கிடையாது என்பது – மேம்போக்காகப் பார்ப்பவர்களுக்கு நியாயம்போல இடமாறு தோற்றப் பிழையாகத் தோன்றலாம்.

ஆண்டாண்டுகாலமாகக் கல்வியையும், உத்தியோக வாய்ப்புகளையும் தங்கள் வசமே வைத்துக்கொண்டுள்ள ஆதிக்க ஜாதியினருடன் எதிர்த்துப் போட்டியிடக் கூடிய பகுதியினரை கிரீமிலேயர் என்று கூறி வெளியே தள்ளி விடுவதன்மூலம் ஏற்கெனவே அத்துறைகளில் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்தவர்களுக்குப் பேருதவி செய்ததாக ஆகாதா என்பதை மெத்த படித்த நீதிபதிகள் சிந்திக்காமல் போனது வருந்தத்தக்கதே!

அவர்கள் சொல்லும் அந்த விவாதத்தையே எடுத்துக்கொள் வோம். மத்திய அரசு உயர்கல்வி நிறுவனங்களான அய்.அய்.டி., அய்.அய்.எம்., எய்ம்ஸ் முதலிய ஆகிய நிறுவனங் களில் சேர்ந்து படிக்க ஆகும் செலவு என்ன?

எடுத்துக்காட்டாக அகமதாபாத் அய்.அய்.எம். நிறுவனத்தில் சேர்ந்து படிக்கும் ஒரு மாணவனுக்கு ஆகக்கூடிய செலவு 11 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்.

பிற்படுத்தப்பட்டவர்களில் ஏழை, எளிய மக்களுக்காகத்தான் இந்தக் கிரீமிலேயர் நீக்கம் என்பது உண்மையானால், பிற் படுத்தப்பட்ட மக்களில் உள்ள ஏழை, எளிய மக்கள் 11 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கொடுத்து அய்.அய்.எம். நிறுவனத்தில் சேர்ந்து படிக்க முடியுமா? என்ற பொது அறிவு கேள்விக்கு நீதிபதி கள் தரப்பில் என்ன நியாயமான பதிலை வைத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை.

பொருளாதார அளவுகோலைக் கொண்டே பொருளாதாரத்தில் வசதி படைத்தவர்களையும் முட்டித்தள்ளி, பொருளாதாரத்தில் ஏழை, எளிய பகுதியைச் சேர்ந்தவர்களையும் உள்ளே புக முடியாமல் செய்த – ஒரே கல்லால் இரண்டு காய்களை வீழ்த்திய ராஜதந்திரத்தை உச்சநீதிமன்றம் செய்திருக்கிறது.

மண்டல் குழுப் பரிந்துரைகளில் ஒரு பகுதியாகிய பிற்படுத்தப் பட்டவர்களுக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீட்டுக்கான ஆணை யினை சமூகநீதிக் காவலர் மாண்புமிகு வி.பி. சிங் அவர்கள் பிறப்பித்தார். அதனை எதிர்த்துத் தொடுக்கப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் (ஒன்பது நீதிபதிகளைக் கொண்ட ஆயம்) கிரீமி லேயர் என்ற பொருளாதார அளவுகோலைக் கொண்டு வந்து திணித்தது. அதன் விளைவு என்ன தெரியுமா?

மத்திய அரசுத் துறையில் 12.5 விழுக்காடு அளவுக்கு இடங்களைப் பெற்ற பிற்படுத்தப்பட்ட மக்களின் எண்ணிக்கை பத்து ஆண்டுகளில் 5.3 விழுக்காடாக வீழ்ச்சி அடைந்துவிட்டது.

இந்த அனுபவத்துக்குப் பிறகும்கூட, உயர்நிலைக் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோரின் இட ஒதுக்கீட்டிலிருந்து கிரீமிலேயர்களை வெளியேற்றுவது எதிர் விளைவைத்தான் ஏற்படுத்தும் என்பதில் அய்யமுண்டோ?

பிற்படுத்தப்பட்டோருக்கு இந்திய அரசமைப்புச் சட்டப்படி இட ஒதுக்கீடு பெற உரிமை உண்டு என்ற வகையில், உச்சநீதிமன் றம் நடந்துகொண்டது என்பதிலே ஒரு வகையில் மகிழ்ச்சி என்றாலும், இன்னொரு வகையிலே அதனைத் தட்டிப் பறிப்பது என்பது மகிழ்ச்சிக்குரியதல்ல என்று தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் தெரிவித்திருக்கும் கருத்தின் அடிப்படையில், இந்தியா முழுமையும் உள்ள சமூகநீதிச் சக்திகள் அணிதிரண்டு போராடுவது அவசியமாகும்.

சமூகநீதிக்காக இன்னும் எத்தனை எத்தனைக் களங் களைச் சந்திக்க வேண்டுமோ தெரியவில்லை. என்றாலும், போராடுவோம் – வெற்றி பெறுவோம் – வெற்றி கிட்டும்வரை போராடுவோம்!

இடைநிலையில் மட்டும் ஏன் கிரீமிலேயர்?

பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27 சதவிகித இட ஒதுக்கீடு அடிப்படையில் கிரீமிலேயர் என்பதை வலியுறுத்தும் உச்ச நீதிமன்றம் இதை ஏன் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு மட்டும் வலியுறுத்த வேண்டும்?

மேலே உள்ள, திறந்த போட்டியில் பங்கேற்கும் முன்னேறிய ஜாதியினருக்கும் (Forward Communities)பிற்படுத்தப்பட்டவர் களுக்கு அடுத்துள்ள S.C., S.T சமுதாயப் பிரிவினருக்கும் வைக்கப்படாத கிரீமிலேயர் – இடையில் உள்ள பிற்படுத்தப்பட்ட சமூகத்திற்கு மட்டும் வைக்கப்படுவது எவ்வகையில் நீதி, நியாயம், நேர்மை?

இக்கேள்வியின் அடிப்படை, அவர்களுக்கும் கொண்டு வரப்படவேண்டும் என்பது அல்ல; மாறாக, அவர்களுக்கு வைக்கப்படாதது போல் இடைத் தட்டாக உள்ள பிற்படுத்தப் பட்டவர் களுக்கும் அதை ரத்து செய்ய வேண்டும் என்பதற் காகவே!

வருமானம் குறைவாக உள்ள பிற்படுத்தப்பட்டவர்களால் தங்கள் பிள்ளைகளை அய்.அய்.டி., அய்.அய்.எம்.களில் படிக்க வைக்க இயலுமா?


அரசமைப்புச் சட்ட முதல் திருத்தத்திலேயே நிராகரிக்கப்பட்டது பொருளாதார அளவுகோல்

1. இந்திய அரசியல் சட்டத்தின் முதலாவது அரசியல் சட்டத் திருத்தமே, தமிழ்நாட்டில் தந்தை பெரியார் அவர்கள் தலைமையில் ஏற்பட்ட கிளர்ச்சியின் விளைவாக வந்தது என்பது அன்றைய பிரத மர் நேரு அவர்களால் நாடாளுமன்றத்திலேயே பதிவு செய்யப்பட் டுள்ளது!

1951 இல் நிறைவேறிய அந்த முதலாவது அரசியல் சட்டத் திருத் தத்தின்மூலம் 15(4) என்ற புதுப்பிரிவு இணைக்கப்பட்டது. அதில் பிற்படுத்தப்பட்டவர்களை அடையாளம் காட்டும் வகையில், “சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும்” (Socially and Educationally) என்ற சொற்றொடர்களைப் போட்டு திருத்தம் நிறைவேற்றப்பட்டது.

அப்போது சட்ட அமைச்சர், டாக்டர் அம்பேத்கர், பிரதமர் நேரு முதலியோர் அங்கம் வகித்தனர்.

(பழைய அரசியல் நிர்ணய சபை உறுப்பினர்களே நாடாளுமன்ற உறுப்பினர்களாக அமைந்த அவை அது. முதலாவது பொதுத் தேர்தல் 1952 இல் தான் என்பது சுட்டிக்காட்டப்பட வேண்டும்).

Founding Fathers of Constitution அரசியல் சட்டத்தை உருவாக் கிய கர்த்தாக்களையே கொண்டது அந்த அவை என்பது உச்சநீதி மன்றம் போன்றவைகளால் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டிய ஒன்று.

நேருவும் – அம்பேத்கரும் ஏற்கவில்லை

அன்று சிலர், பொருளாதார ரீதியாக “Economically” என்ற சொற்றொடரும் இடம்பெறுவது அவசியம் என்று சில திருத்தங் களைத் தந்தனர். அதை சட்ட அமைச்சர் டாக்டர் அம்பேத்கரோ, பிரதமர் நேருவோ ஏற்கவில்லை.


இட ஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்புத் திட்டமல்ல!

2. இட ஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்புத் திட்டம் அல்ல; சமூக நீதிக்கான வாய்ப்பினை காலங்காலமாக மறுக்கப்பட்ட மக்களுக்கு வழங்கும் ஓர் ஏற்பாடு என்பதும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு.

நரசிம்மராவ் அரசு உயர்ஜாதியினரில் 10 சதவிகிதம் ஏழை களுக்கு அளித்த இட ஒதுக்கீட்டினை உச்சநீதிமன்றம் செல்லாது என்று தீர்ப்பளித்தது இந்த அடிப்படையில்தான்!

3. இதைவிட முக்கியமான ஒரு கருத்து, பிற்படுத்தப்பட்டவர் களுக்கு மத்தியக் கல்வி நிலையங்களில் கதவே இதுவரை திறக்கப்படவில்லை; இப்போதுதான் திறக்கப்படவிருக்கிறது. அதற் குள்ளே, ஏதோ 27 சதவிகிதத்தினை உயர் வருமான வசதி படைத் தோர் அபகரித்துவிட்டனர் என்ற கூச்சலுக்கு அடிப்படை உண்டா?

பந்திக்கு உட்கார வைப்பதற்கு முன்பே, இதை மற்றவர்கள் சாப்பிட்டு விட்டனர்; எனவே, இதைத் தரம் பிரிக்க வேண்டும் என்று கூறுவது நியாயமா? தேவையா? மோசடி அல்லவா?


‘கிரீமிலேயர்’ அளவுகோலுக்கு உச்சநீதிமன்றம் வைத்திருக்கும் ஆதாரம் என்ன?

உச்சநீதிமன்றம் அண்மையில் அளித்த தீர்ப்பு வரவேற்கத் தக்கதே! இடஒதுக்கீடு என்பதே அரசியலமைப்புக் சட்டத்துக்கு விரோதம் என்பதுபோல உருவாக்கப்பட்ட கருத்து இந்தத் தீர்ப்பு மூலம் நிராகரிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இது வரவேற்கத்தக்க தீர்ப்பேதான்.

கிரீமிலேயர் என்ற ஒன்றைப் புதிதாகக் கொண்டு வந்து திணித்து இடஒதுக்கீட்டின் நோக்கமே தகர்க்கப்பட்டுள்ளது. மண்டல் குழு பற்றி உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் ஒன்பது நீதிபதிகள் கொண்ட தீர்ப்பில் திணிக்கப் பட்ட ஒன்றாகும் இந்தக் கிரீமிலேயர்.

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் எந்தப் பகுதியிலும் காணப்படாதது இது. பொருளாதார அளவுகோல் என்பது 1951-இல் நடைபெற்ற விவாதத்திலேயே நிராகரிக்கப்பட்டது. இந்திய அரசமைப்புச் சட்டத்தில் முதல் திருத்தம் கொண்டு வரப்பட்டு, பொருளாதார அளவுகோல் பற்றி விவாதிக்கப் பட்டு, வாக்கெடுப்பும் நடத்தப்பட்டு, ஏற்காமல் தள்ளுபடி செய்யப்பட்ட ஒன்றைக் கொண்டு வந்து உச்சநீதிமன்றம் திணிப்பது அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமாகும்.

பொருளாதார அளவுகோல் என்பது ஆண்டுக்கு ஆண்டு மாறக் கூடியது. இந்த ஆண்டு வருமானம் அடுத்த ஆண்டு இருக்கும் என்று சொல்ல முடியாது.

ஒரு குடும்பத்துக்குள்ளேயே ஒரு வீட்டுக்குள்ளேயேகூட ஒருவர் பிற்படுத்தப்பட்டவராகவும் இன்னொருவர் அது அல்லாதவராகவும் ஆக்கப்படக் கூடிய ஒரு நிலைமையை இந்தத் தீர்ப்பு ஏற்படுத்தியுள்ளது.

வருமானம் என்பதில் நிரந்தர வருமானக்காரர்கள் உண்டு – அவர்கள் அலுவலர்கள்; விவசாயத் தொழிலில் ஈடுபடக் கூடியவர்களை நிரந்தர வருமானக்காரர்களின் பட்டியலில் சேர்க்க முடியாது. இயற்கைத் தொல்லைகளால் பாதிக்கப்படக் கூடியது விவசாயத் தொழில்; இன்னும் சொல்லப் போனால் இடஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்புத் திட்டமும் அல்ல. இந்தக் கருத்து மண்டல் குழுவின் அறிக்கையிலே தெளிவுபடுத் தபட்டுள்ளது.

ஏழையாக இருப்பவர்களுக்குப் பொருளாதார உதவிகள் செய்யலாமே தவிர கல்வியில் கொண்டு வந்து அதனைத் திணிக்கக் கூடாது.
பிற்படுத்தப்பட்டவர்களில் பொருளாதாரத்தில் வசதி வாய்ப்புள்ளவர்கள் எல்லாம் கல்வியில் முன்னேறியுள்ளனர் என்பதற்கு உச்சநீதிமன்றத்திடம் ஆதாரமோ புள்ளி விவரமோ இருக்கிறதா? எந்த அடிப்படையில் கிரிமீலேயரை வெளியேற்ற வேணடும் என்று கூறுகிறார்கள்?

முதன் முதலாக மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் இப்பொழுதுதான் பிற்படுத்தப்பட்டோர் நுழைகிறார்கள். அதற்குள்ளாகவே அவர்கள் கல்வியில் வளர்ந்து விட்டார்கள் என்று அவர்களில் ஒரு பிரிவினரை வெளியேற்றுவது நியாயமாக இருக்க முடியுமா?
வாய்ப்பைக் கொடுத்து விட்டு அதற்குப் பிறகு 5 ஆண்டு கழித்தோ, பத்தாண்டு கழித்தோ ஆய்வு செய்யலாமே – 20 ஆண்டுகள் கழித்து பரிசீலனை செய்யப்பட வேண்டும் என்றுதான் மண்டல் குழு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பந்தியிலேயே உட்காரவில்லை; அதற்குள்ளாகவே அவர்கள் தின்று தீர்த்து விட்டனர் என்று நீதிமன்றம் கூறுலாமா? இதில் இன்னொரு கருத்து சுட்டிக்காட்டப்பட வேண்டும். பிற்படுத்தப்பட்டோரில் பொருளாதாரத்தில் உயர்ந்தவர்களுக்கு இடஒதுக்கீடு கூடாது – என்று புகார் செய்ய வேண்டியவர்கள் யார்? பிற்படுத்தப்பட்டோரில் ஏழைகளாக இருக்கக் கூடியவர்கள்தானே! அவ்வாறு யாரும் வழக்குத் தொடுக்கவில்லையே! உயர்ஜாதிகாரர்கள்தானே வழக்குத் தொடுத்துள்ளனர். உச்சநீதிமன்ற தீர்ப்பில் இன்னொரு ஆபத்து சுட்டிக்காட்டப்பட வேண்டும்.

உயர்கல்வி நிறுவனங்களில் சேர தகுதியானவர்கள் பிற்படுத்தப்பட்டோரிலிருந்து கிடைக்கவில்லையானால் அந்த இடங்களை திறந்த போட்டிக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்று கூறுவது – யாருக்கு லாபம்? உயர் ஜாதிக்காரர்களுக்குத் தானே இப்படி ஒரு தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்குகிறது?

பிற்படுத்தப்பட்டோர் பட்ட மேற்படிப்புக்குச் செல்லக் கூடாதா
பட்ட மேல் படிப்பில் இடஒதுக்கீடு கூடாது என்று ஒரு சில நீதிபதிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
இது தீர்ப்பா? கருத்தா? கட்டாயமா? என்பவை தெளிவாக் கப்பட வேண்டும். பிற்படுத்தப்பட்டவர்கள் பட்ட மேற் படிப்புக்கு செல்லக் கூடாதா? இது சமூகநீதியின் அடிப் படையைத் தகர்க்கக் கூடியதாகும்.

– செய்தியாளர்கள் கூட்டத்தில் தமிழர் தலைவர் கி. வீரமணி (சென்னை 12.4.2008)


இடஒதுக்கீடு வசதி படைத்தவர்கள் யார்?

உயர்கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட வர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கியது செல்லும் என்று தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், பிற்படுத்தப் பட்டவர்களில் வசதி படைத்த பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்கக்கூடாது என்று உத்தரவிட்டு உள்ளது.
மண்டல் ஆணைய வழக்கில் கடந்த 1992 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் வசதி படைத்தவர்கள் பிரிவு முதன் முதலாக அறிமுகப் படுத்தப்பட்டது.

அரசியல் சட்ட அதிகார பதவி வகிக்கும் குடியரசுத் தலைவர், உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகள், மத்திய பொதுத் தோர்வாணைய உறுப்பினர்கள், மத்திய மற்றும் மாநில அரசுப் பணிகளில் ஏ, பி அல்லது குரூப் 1, குரூப் 2 அதிகாரிகள் மற்றும் பொதுத்துறை நிறுவன அதிகாரி களின் குழந்தைகளுக்கு இட ஒதுக்கீடு வழங்கக்கூடாது என்று அந்தத் தீர்ப்பில் குறிப்பிடப் பட்டு இருந்தது.

ராணுவம் மற்றும் துணை ராணுவப் பணியில் சுலோனியல் அல்லது அதற்கு மேல் பதவி வகிக்கும் அதிகாரிகளின் குழந்தைகளும் இந்தப் பிரிவில் சேர்க்கப்பட்டு உள்ளனர். அத்துடன் வழக்கறிஞர்கள், சார்ட்டர்டு அக்கவுண்டண்ட், மருத்துவர்க,ள நிதி மற்றும் நிர்வாக ஆலோசகர்கள், பல்மருத்துவர்கள், கட்டடக் கலைஞர்கள், கணினி பொறியாளர்கள், வசனகர்த்தா, விளையாட்டு வீரர்கள், விளையாட்டுத் துறை பொறுப்பு வகிப்பவர்கள் மற்றும் ஊடக அதிகாரிகள், வசதி படைத்த பிரிவினர் என்றும் தீர்ப்பில் குறிப்பிடப் பட்டிருந்தது.

பொதுவாக ஆண்டு வருமானம் ரூ 2 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிகமாக உள்ள பிற்படுத்தப் பட்ட வகுப்பினர் குழந்தைகளுக்கும் இட ஒதுக்கீடு கிடையாது. விவசாயத்தில் ஈடுபட்டவர்களில், நில உச்சவரம்பு சட்டப்படி ஒருவர் வைத்துக் கொள்ள அனுமதிக்கப் பட்டுள்ள பாசன வசதியுள்ள நிலத்தில் 85 விழுக்காடும் அதற்கு மேலும் உள்ள விவசாயிகளின் குழந்தைகளுக்கும் இட ஒதுக்கீடு கிடையாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நேற்றைய வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், வசதி படைத்தவர்கள் பட்டியல் பற்றி மத்திய அமைச்சரவை இறுதி முடிவெடுக்கவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர்.

2 பதில்கள் to “Viduthalai Editorials: The skimming of the creamy layer – Complains against stringent parameters”

  1. bsubra said

    வடக்குபட்டு ராமசாமி: கிரீமி லேயர் தேவையா?

  2. bsubra said

    கண்ணோட்டம்- KANNOTTAM: <strong>உச்சநீதி மன்றத் தீர்ப்பு, இட ஒதுக்கீடு- ஒரு முதற்கட்டப் பார்வையில்

பின்னூட்டமொன்றை இடுக