Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Rushdie’ Category

Taslima Nasreen Security – West Bengal & Calcutta – Islam & Bangladesh: The great Indian dilemma

Posted by Snapjudge மேல் நவம்பர் 27, 2007

புதுப்பிக்கப்பட்ட நாள்: 29 நவம்பர், 2007 


புத்தகத்தின் சர்ச்சைக்குரிய பகுதிகளை நீக்கிக்கொள்வதாக தஸ்லிமா நஸ்ரின் அறிவிப்பு

தஸ்லிமா நஸ்ரின்

வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின், தான் எழுதிய
‘த்விக்ஹோண்டிதோ’ புத்தகத்தில் இடம்பெற்றிருந்த சர்ச்சைக்குரியதாகக் கூறப்படும் பகுதிகளைத் திரும்பப் பெற்றுக்கொள்வதாக அறிவித்திருக்கிறார்.

கடந்த பல ஆண்டுகளாக இந்தியாவில் தங்கியிருக்கும் தஸ்லிமா நஸ்ரின், தனது புத்தகத்தில் இஸ்லாமுக்கு எதிரான கருத்துக்களை வெளியிட்டிருப்பதாக இஸ்லாமிய அமைப்புக்கள் பல போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

சமீபத்தில், மேற்கு வங்கத் தலைநகர் கொல்கத்தாவில் அவருக்கு எதிராக இஸ்லாமிய அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். தஸ்லிமாவை வெளியேற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.

இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூருக்கு அனுப்பப்பட்ட அவர், பின்னர் புதுடெல்லிக்கு அழைத்து வரப்பட்டார். தற்போது, மத்திய அரசின் பாதுகாப்பில் ரகசிய இடத்தில் தங்கவைக்கப்பட்டிருக்கிறார்.

இரு தினங்களுக்கு முன்பு தஸ்லிமா தொடர்பாக நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்த வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, இந்தியாவில் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்கள், பொதுமக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் கருத்துக்களை வெளியிடக்கூடாது என்று குறிப்பிட்டிருந்தார். அதேநேரத்தில், தஸ்லிமா தொடர்ந்து இந்தியாவில் தங்கியிருக்க அனைத்துப் பாதுகாப்பும் வழங்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், தனது புத்தகத்தில் சர்ச்சைக்குரியதாகக் கூறப்படும் பகுதிகளை நீக்க முடிவுசெய்திருப்பதாக பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு தொலைபேசி மூலம் அவர் தெரிவித்திருக்கிறார்.

“மதச்சார்பின்மையின் மகத்துவத்துக்காகக் குரல் கொடுத்தவர்களுக்கு ஆதரவாக இந்தப் புத்தகத்தை எழுதினேன். யாருடைய உணர்வுகளையும் புண்படுத்தும் எண்ணம் எனக்கு இல்லை. தற்போது இந்தியாவில் உள்ள சிலர், இது அவர்களது உணர்வுகளைப் புண்படுத்துவதாகக் கருதுவதால், அந்தப் புத்தகத்தில் உள்ள சில வரிகளைத் திரும்பப் பெற்றுக் கொள்கிறேன்” என்று தஸ்லிமா தெரிவித்திருக்கிறார்.

இந்த முடிவின் காரணமாக, சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டதாகவும், இனி இந்த நாட்டில் நிம்மதியாக வாழ முடியும் என்று நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் குருதாஸ் தாஸ்குப்தா, தஸ்லிமாவின் இந்த முடிவு, அவர் மீண்டும் கொல்கத்தா திரும்வுதற்கு வழிவகுக்கும் என்றார்.

தஸ்லிமாவின் முடிவை, ஜமியதுல் உலாமை ஹிந்த் அமைப்பின் பொதுச்செயலர் மஹமூத் மதனியும் வரவேற்றுள்ளார்.

இது குறித்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜவாஹிருல்லா, தமிழக பெண் முஸ்லிம் எழுத்தாளர் சல்மா, இலங்கை எழுத்தாளர் நுஹ்மான் ஆகியோரின் கருத்துக்களை நேயர்கள் கேட்கலாம்.


நானாக வெளியேறவில்லை – கோல்கத்தா திரும்பவே விரும்புகிறேன்: தஸ்லிமா

கோல்கத்தா, நவ. 26: கோல்கத்தா நகரை விட்டு வெளியேறத் தானாக முடிவெடுக்கவில்லை என்று தெரிவித்த வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீன், எனினும், இவ்விஷயத்தில் மெüனத்தைக் கடைப்பிடிக்கவே விரும்புவதாகக் குறிப்பிட்டார்.

தில்லியிலிருந்தவாறு வங்க மொழித் தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்குத் தொலைபேசி வழியே பேட்டியளித்தார் தஸ்லிமா.

பேட்டியில் “நானாக எதற்காக இந்த முடிவு எடுக்க வேண்டும்? யாராவது ஒருவர் வந்து என்னைக் கொன்றுவிடுவார்கள் என்று என் மனதுக்குத் தோன்றியது. பலர் என்னுடைய எழுத்துகளை விரும்புகிறார்கள்; மேலும் பலர் வெறுக்கிறார்கள்’ என்றார் அவர்.

விசாவை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி சிறுபான்மையினர் அமைப்பு நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்த நிலையில், உயிருக்குப் பாதுகாப்பு இல்லை எனக் கருதி, கோல்கத்தாவைவிட்டு வெளியேற முடிவெடுத்தீர்களா? என்று அவரிடம் கேட்கப்பட்டது.

“இங்கே கருத்துச் சுதந்திரம் இருக்கிறது. கையளவே உள்ள சிலரின் எதிர்ப்புக்காக எதற்காக நான் கடும் முயற்சியை மேற்கொள்ள வேண்டும்?’ என்று பதிலளித்தார் தஸ்லிமா.

“கோல்கத்தா திரும்பவே நான் விரும்புகிறேன். ஆனால், இன்னமும் இதற்கு ஆதரவாக எவ்வித குறிப்பும் கிடைக்கவில்லை. எங்கிருந்து பச்சைக்கொடி காட்டப்படும் என்று எனக்கு பரபரப்பாக இருக்கிறது’ என்றும் குறிப்பிட்டார் அவர்.

கோல்கத்தாவிலிருந்து “நெருக்குதல்’ காரணமாக வெளியேறினீர்களா? என்று கேட்டபோது, “இதுபற்றிப் பேச நான் விரும்பவில்லை; கோல்கத்தாவுக்குத் திரும்பவே நான் விரும்புகிறேன். எந்த அளவுக்கு விரைவாக அது நடைபெறுமோ அந்த அளவுக்கு நல்லது’ என்றார் தஸ்லிமா.

1994-ல் எழுத்துக்காக அவருடைய தலைக்கு முஸ்லிம் அடிப்படைவாத அமைப்புகள் விலை வைத்தபோது, வங்கதேசத்திலிருந்து வெளியேறி வந்து கோல்கத்தாவில் தங்கியவரான தஸ்லிமா, “கோல்கத்தாவில் தங்கியிருக்கவே விரும்புகிறேன். ஐரோப்பாவுக்குச் செல்ல விரும்பவில்லை. வங்கதேசம் அனுமதித்தாலும் அங்கே செல்ல மாட்டேன்; இங்கிருந்தே என் உரிமைக்காகக் குரல் கொடுப்பேன்’ என்று குறிப்பிட்டார்.

———————————————————————————————————————————————————————–

தஸ்லிமா நஸ்ரீனுக்கு விசா: மேற்கு வங்கம் எதிர்த்தது

புது தில்லி, நவ. 26: வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீனுக்கு விசா காலம் நீட்டிக்கப்பட்டதற்கு மேற்கு வங்க அரசு எதிர்ப்புத் தெரிவித்தது.

மாநில அரசின் எதிர்ப்பையும் மீறி மத்திய அரசு தலையிட்டு விசா காலத்தை நீட்டித்ததாக காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறியது:

மத்திய அரசின் அனுமதியின்றி ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு அவரைக் கொண்டு செல்ல எவருக்குமே உரிமை கிடையாது.

இத்தகையோருக்கு விசா வழங்குவதற்கு சில நிபந்தனைகள் விதிக்கப்படுவது வழக்கம். இதற்கு முன்னர் திபெத்திய மதத் தலைவர் தலாய் லாமாவுக்கு விசா வழங்கப்பட்டபோது சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. அதே நிபந்தனைகள்தான் தற்போது தஸ்லிமா நஸ்ரீனுக்கும் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அவர் எந்த அரசியல் நடவடிக்கையிலும் ஈடுபடக் கூடாது. மேலும் பிற நாடுகளுடன் இந்தியா கொண்டுள்ள வெளியுறவு பாதிக்கப்படும் நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது என்ற விதிமுறையும் விதிக்கப்பட்டுள்ளது என்றார் சிங்வி.

———————————————————————————————————————————————————————–

“விரும்பிதான் வெளியேறினார்’

கோல்கத்தா, நவ. 26: மேற்கு வங்கத்திலிருந்து அவராக விரும்பியே எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீன் வெளியேறினார் என்று கோல்கத்தா மாநகர காவல் ஆணையர் கெüதம் மோகன் சக்ரவர்த்தி தெரிவித்தார்.

கோல்கத்தாவில் மாநில தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை செய்தியாளர்களுடன் பேசிய சக்ரவர்த்தி, “அவருடைய விருப்பத்தின் பேரில்தான் தஸ்லிமா வெளியேறினார்’ என்றார்.

இதனிடையே, கடந்த புதன்கிழமை கோல்கத்தாவில் நடந்த வன்முறை தொடர்பாக, மேலும் 4 பேரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ஏற்கெனவே, 68 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

———————————————————————————————————————————————————————–
தஸ்லிமாவை கைகழுவியது மார்க்சிஸ்ட்

புது தில்லி, நவ. 26: வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீன் விஷயத்தில் பல்முனைத் தாக்குதலுக்கு உள்ளான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்தப் பிரச்னையிலிருந்து தற்போது கைகழுவிக் கொண்டுவிட்டது.

மேற்கு வங்கத்திலிருந்து தஸ்லிமா நஸ்ரீன் அவராகவேதான் ராஜஸ்தானுக்கு சென்றார்; இனி அவர் எங்கே தங்கியிருக்க வேண்டும் என்பதை மத்திய அரசுதான் முடிவு செய்ய வேண்டும் என்றும் கட்சி குறிப்பிட்டுள்ளது.

“சர்ச்சைக்குரிய எழுத்தாளர் தஸ்லிமா, மேற்கு வங்கத்திலுள்ள இடதுசாரி அரசால் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படவில்லை; எனவே, அவர் எங்கே தங்குவது என்பதை முடிவு செய்வதில் மேற்கு வங்கத்துக்கு எவ்விதப் பங்கும் இல்லை’ என்று கட்சியின் உயர்நிலைக் குழு உறுப்பினரான சீதாராம் யெச்சூரி தெரிவித்தார்.

தில்லியில் திங்கள்கிழமை இதுதொடர்பான செய்தியாளர்களிடம் ஏராளமான கேள்விகளை எதிர்கொண்ட யெச்சூரி, “தஸ்லிமா எங்கே தங்கியிருப்பது என்பது முற்றிலுமாக மத்திய அரசு முடிவு செய்ய வேண்டிய விஷயம்; அவர் எங்கே செல்கிறாரோ அங்கே அவருக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டிய பொறுப்பு அந்தந்த மாநிலத்தையே சாரும்’ என்றார்.

“இந்தியாவில் தஸ்லிமா தங்கியிருக்கலாமா? வேண்டாமா? அல்லது அவருடைய விசா காலம் நீட்டிக்கப்படலாமா? கூடாதா? என்பதெல்லாமும் மத்திய அரசு முடிவு செய்ய வேண்டிய விஷயம்’ என்றார் யெச்சூரி.

மேற்கு வங்கத்தைவிட்டு வெளியேறுமாறு தஸ்லிமாவை இடதுசாரி அரசு கேட்டுக்கொண்டதாக வெளியான செய்திகள் பற்றிக் கேட்டதற்கு, “யாரும் அவரை வற்புறுத்தவில்லை, மத்திய அரசு அனுமதித்தால் அவர் விருப்பத்துக்கேற்ப எங்கே வேண்டுமானாலும் தஸ்லிமா செல்லலாம்’ என்று பதிலளித்தார் சீதாராம் யெச்சூரி.

தஸ்லிமா திரும்பிவர வேண்டும் என்பதில் இடதுசாரி அரசு அக்கறை எடுத்துக் கொள்ளவில்லை என்று கூறப்படும் செய்திகளையும் அவர் மறுத்தார்.

“இந்தப் பிரச்னைக்குள் மேற்கு வங்க அரசையோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியையோ இழுத்துவிட முயலாதீர்கள். கடந்த மூன்றாண்டுகளாக அவர் கோல்கத்தாவில் தங்கியிருந்தார்; அவருக்குத் தேவையான பாதுகாப்பை மாநில அரசு அளித்து வந்தது’ என்றும் சீதாராம் யெச்சூரி குறிப்பிட்டார்.

நஸ்ரீனை வரவேற்று பாதுகாப்புத் தர இடது முன்னணி தயாராக இருக்கிறதா? என்றபோது, இந்தப் பிரச்னையில் மேற்கு வங்க அரசு சம்பந்தப்படவில்லை. இந்த அழைப்பை மத்திய அரசுதான் பரிசீலிக்க வேண்டும் என்றார் அவர்.

தஸ்லிமாவை மீண்டும் அனுமதிக்க கோல்கத்தா காவல்துறையினர் மறுத்துவிட்டதாக ராஜஸ்தான் மாநில அரசு தெரிவித்துள்ளது பற்றிக் கேட்டபோது, இந்தக் கேள்விக்கு மேற்கு வங்க அரசுதான் பதிலளிக்க வேண்டும் என்றார் யெச்சூரி.

தஸ்லிமாவுக்கு அடைக்கலம் தருவது பற்றிய மார்க்சிஸ்ட் கட்சியின் நிலை என்ன? என்ற கேள்வியைத் தவிர்த்த யெச்சூரி, இதுதொடர்பாக ஏற்கெனவே வரையறுக்கப்பட்ட சட்டமும் விதிகளும் இருக்கின்றன. இதுபற்றித் தனக்குள்ள தகவல்களின் அடிப்படையில் மத்திய அரசுதான் முடிவு செய்ய வேண்டும் என்று கூறினார்.

ஓவியர் எம்.எப். ஹுசைன் நாடு திரும்பும் விஷயத்திலும் தஸ்லிமா பிரச்னையில் இரட்டை நிலையைக் கடைப்பிடிப்பதாக பாரதிய ஜனதா கட்சி மீது குற்றம் சாட்டினார் அவர்.

ஆர்எஸ்எஸ், விஎச்பி மற்றும் சார்ந்த அமைப்புகள் வழக்குத் தொடுத்துள்ள நிலையில் ஹுசைன் நாடு திரும்புவதைத் தடுக்கிறார்கள். குறிப்பிட்ட சமுதாயத்தின் உணர்வுகளைப் புண்படுத்தியதாகத் தெரிவிக்கின்றனர். எதற்காக இந்த இரட்டை நிலை? என்றும் கேள்வி எழுப்பினார் சீதாராம் யெச்சூரி.

நந்திகிராமம் வன்முறையைக் கண்டித்தும் எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீனை வெளியேற்ற வேண்டும் என்று வலியுறுத்தியும் கடந்த வாரத்தில் கோல்கத்தாவில் சிறுபான்மையினர் அமைப்பின் சார்பில் போராட்டமும் தீவைப்பும் நடைபெற்றது; ராணுவமும் அழைக்கப்பட்டது.

———————————————————————————————————————————————————————–

Posted in Asylum, Bangladesh, Bengal, BJP, Books, Calcutta, Citizen, Communalism, Communism, Communist, Communist parties, Communist Party of India, Communist Party of India-Marxist, Communists, Cong, Cong (I), Cong(I), Congress, Congress (I), Congress Party, Congress(I), CPI, CPI (M), CPI(M), CPI(ML), CPI-ML, CPM, dilemma, expression, Faces, fanaticism, Fathva, Fathwa, Fatva, Fatwa, Females, Freedom, Fundamentalists, Govt, Gujarat, Hussain, Hussein, Immigrants, India, Islam, Kolkata, Lajja, Left, Life, Literature, MF Hussain, minority, Modi, Muslim, Narendra Modi, Nasreen, Nasrin, Outcast, people, Refugee, RSS, Rushdie, Salman, Secular, Security, Sensation, She, Taslima, Thoughts, UPA, Voices, WB, West Bengal, Women | Leave a Comment »