Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Classroom’ Category

Teachers Day Special – Radhakrishnan to APJ Abdul Kalam

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 5, 2007

சர்வேப்பள்ளி முதல் ராமேசுவரம் வரை!

அ. கோவிந்தராஜு

(கட்டுரையாளர்: முதல்வர், டிஎன்பிஎல் மெட்ரிக் மேனிலைப்பள்ளி, கரூர்).

ஓர் ஆசிரியர் தம்மிடம் படிக்கும் மாணவர்களிடம் ஏற்படுத்தும் தாக்கம் அளப்பரியது. ஆசிரியரின் நடை, உடை, சிந்தனை, சொல், செயல் அத்தனையும் மாணவர்களிடத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் கூறுகளாகும். பார்த்துக் கற்றல் என்னும் உளவியல் நிகழ்வு மாணவப் பருவம் முழுவதும் நடைபெறுகிறது என்பதை ஆசிரியப் பெருமக்கள் உணர்ந்து, தம் அகவாழ்வையும் புறவாழ்வையும் சிறப்பாக வைத்துக்கொள்ள வேண்டியது இன்றியமையாத ஒன்றாகும்.

வீட்டுச்சூழல் எவ்வளவு மோசமாக இருந்தாலும், நன்மாதிரியாக பின்பற்றத்தக்க ஆசிரியர்கள் அமைந்துவிட்டால், சேற்றில் முளைத்த செந்தாமரைபோல மாணவர்கள் நல்ல குடிமக்களாக உருவாவார்கள்.

படித்து முடித்து, பணியில் சேர்ந்து, தம் தந்தையின் ஓராண்டு ஊதியத்தை ஒரே மாதத்தில் சம்பாதிக்கும் இளைஞர்கள், அறவாழ்வில் நாட்டமின்றி, மனம்போன போக்கில் வாழும் நிலைகெட்ட மாந்தர்களாக மாறுவதற்குக் காரணம் என்ன? படிக்கும் காலத்தில் பாடஅறிவைப் பெற்ற அளவுக்கு, மனிதநேயக் கல்வியைப் பெறவில்லை அல்லது ஆசிரியர்கள் தரவில்லை என்பதேயாகும்.

“வாடி மனம் மிக உழன்று, பிறர் வாடப் பல செயல்கள்’ செய்யும் இவர்கள், ஒருகாலத்தில் வகுப்பறையில் பாடம் கற்ற மாணவர்கள்தாம். நாற்றில் கோளாறா, நடப்பெற்ற சேற்றில் கோளாறா? கல்வி நிலையங்கள் எல்லாம் நாற்றங்கால்கள் ஆகும். அவற்றைப் பராமரிக்கும் பொறுப்பில் உள்ளவர்கள் ஆசிரியப் பெருமக்கள். நாற்றங்கால்கள் பழுதுபட்டால் ஒட்டுமொத்த சமுதாயமே பாழ்பட்டுவிடும். இதை நன்கு உணர்ந்தவர் டாக்டர். சர்வேப்பள்ளி ராதாகிருஷ்ணன். வாழ்வாங்கு வாழும் வழிமுறைகளை அவர் தம் மாணவர்களுக்குக் கற்பித்தார். வழிமுறைகள் சரியாக இருந்தால்தான் முடிவுகள் சரியாக இருக்கும் என்பதில் அசையாத நம்பிக்கை கொண்டவர் அவர்.

உண்ணும் உணவு, ஒருவனுடைய மனப்போக்கை மாற்றும் என்கின்றனர் உடற்கூறு வல்லுநர்கள். உடுக்கும் உடை ஒருவனுடைய மனப்போக்கை மாற்றும் என உளவியலார் கூறுகின்றனர். இவ்விரண்டிலும் டாக்டர். ராதாகிருஷ்ணன் மிகுந்த கவனம் செலுத்தினார். 1950-ஆம் ஆண்டு ரஷிய நாட்டின் தூதராக நியமிக்கப்பட்டார். சர்வாதிகாரி ஸ்டாலின் ஆண்ட காலம்; கடுமையான குளிர்நிறைந்த அந்நாட்டில் அவர் எப்போதும்போல எளிய, தூய்மையான உடையணிந்து வாழ்ந்தார். ஒருபோதும் மது, மாமிசம் போன்றவற்றைத் தொட்டதும் இல்லை. சொல்லப்போனால் அந்நாட்டு மரபுப்படி, விருந்துகளில் மது அருந்தியாக வேண்டும். ஆனால் அதுபோன்ற நிகழ்ச்சிகளில் அவர் பழச்சாறு மட்டும் அருந்துவார். எந்தவொரு தீயபழக்கமும் இல்லாத முன்மாதிரி பண்பாளர் அவர்.

புனிதமான ஆசிரியப் பணிக்குத் தம் தீயநடத்தை மூலம் களங்கம் சேர்க்கும் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள். மற்ற துறைகளில் ஒரு தவறு நடந்தால் அது அந்தத் துறையை மட்டுமே பாதிக்கும்; ஆனால் கல்வித்துறையில் நடக்கும் தவறு ஒட்டுமொத்த சமுதாயத்தையே பாதிக்கும். மற்ற துறைகளின் செழுமையும் செயல்பாடும் கல்வித்துறையின் அறநெறிகளைப் பொருத்தே அமையும் என்பார் கல்வி நிபுணர் டர்க்ஹிம். ஆசிரியர் தினத்தையொட்டி, இவற்றையெல்லாம் ஆசிரியர் சமுதாயம் எண்ணிப் பார்க்க வேண்டும்.

டாக்டர். ராதாகிருஷ்ணன் ஆசிரியப் பணியை முதன்மைப் பணியாகக் கொண்டார். தூதராக, குடியரசுத் தலைவராகப் பணியாற்றிய அவர், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திலும் பணியாற்றியிருக்கிறார். இன்று, ஆசிரியர்களில் சிலர் ஆசிரியப் பணியைத் துணைத்தொழிலாகவும், விவசாயம், வணிகம் போன்றவற்றை முதன்மைத் தொழிலாகவும் கொண்டுள்ளனர். இவர்கள், சக்தி எல்லாம் தீர்ந்துபோய், சக்கையாக வகுப்பில் நுழைந்தால் எப்படி மாணவர் மனம் கவரும் வகையில் பாடம் நடத்த முடியும்? இந்த நிலை அடியோடு மாறும் நாள் எந்நாளோ?

1964-ல் அரசால் நியமிக்கப்பட்ட கோத்தாரி குழு, ஒழுக்கமும் பண்பாடும் உடையவர்களை மட்டுமே ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தியது. இது எவ்வளவு இன்றியமையாதது என்பது ஆய்வு மாணவிகளின் சோகக்கதையைக் கேட்டால் புரியும். ஆய்வு ஏட்டில் சில வழிகாட்டிகளின் கையெழுத்தைப் பெறுவதில் சிரமங்கள் பல உள்ளன.

இவர்களை ஆசிரியர்கள் என்று எப்படி ஒப்புக்கொள்ள முடியும்? தம்மிடம் பயிலும் குழந்தைகளுக்கு தாம் இரண்டாவது பெற்றோர் என்பதை எப்போதும் உணர்ந்து ஆசிரியர்கள் செயல்பட வேண்டும்.

நேர்மையாக உழைக்கும் ஆசிரியர்களுக்கு அரசும் சமுதாயமும் உரிய அங்கீகாரத்தை எப்போதும் தரும்; தரவும் வேண்டும். சர்வேப்பள்ளி ராதாகிருஷ்ணன் என்ற ஆசிரியரையும், ராமேசுவரம் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் என்ற ஆசிரியரையும் குடியரசுத் தலைவர்களாக அமர வைத்து அழகு பார்த்ததே நம் நாடு. இது சமுதாயம் தந்த அங்கீகாரம்தானே?

ஒரு குக்கிராமத்து ஆசிரியருக்குக் கிடைத்த அங்கீகாரத்தைப் பற்றி அறிந்தால் நீங்கள் வியப்படைவீர்கள். ஈரோடு மாவட்டத்தில் மலையப்பாளையம் என்னும் சிற்றூரில் ஆசிரியப் பணியை அறப்பணியாகச் செய்து ஓய்வு பெற்ற ஓர் அரசுப் பள்ளித் தலைமையாசிரியருக்கு (சொ. அய்யாமுத்து) அந்த ஊர் மக்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து தம் வருவாயில் ஒரு பகுதியை அளித்து, 2400 சதுர அடியில் ஒரு நிலம் வாங்கி நன்றிக் கடனாக வழங்கினார்கள்.

எனவே, பண்டைய குருகுலத்தில் தொடங்கிய ஆசிரியப் பாரம்பரியம் – “சர்வேப்பள்ளி முதல் ராமேசுவரம்’ வரை பேணிப் போற்றப்பட்ட அந்த ஆசிரியப் பாரம்பரியம் – தொடர்ந்து பராமரிக்கப்பட வேண்டும். வணங்கத்தக்க நம் ஆசிரியப் பெருமக்கள் இனி இந்த உணர்வோடு, “இன்று புதிதாய்ப் பிறந்தோம்’ என்னும் புத்துணர்வோடு நாளை வகுப்பிற்குள் காலடி எடுத்து வைக்க வேண்டும். செய்வார்களா?

(இன்று ஆசிரியர் தினம்)

Posted in APJ, class, Classroom, Instructor, Kalam, President, Presidents, Professor, Radha, Radhakrishnan, Student, Teach, Teacher | Leave a Comment »