Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘class’ Category

Teachers Day Special – Radhakrishnan to APJ Abdul Kalam

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 5, 2007

சர்வேப்பள்ளி முதல் ராமேசுவரம் வரை!

அ. கோவிந்தராஜு

(கட்டுரையாளர்: முதல்வர், டிஎன்பிஎல் மெட்ரிக் மேனிலைப்பள்ளி, கரூர்).

ஓர் ஆசிரியர் தம்மிடம் படிக்கும் மாணவர்களிடம் ஏற்படுத்தும் தாக்கம் அளப்பரியது. ஆசிரியரின் நடை, உடை, சிந்தனை, சொல், செயல் அத்தனையும் மாணவர்களிடத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் கூறுகளாகும். பார்த்துக் கற்றல் என்னும் உளவியல் நிகழ்வு மாணவப் பருவம் முழுவதும் நடைபெறுகிறது என்பதை ஆசிரியப் பெருமக்கள் உணர்ந்து, தம் அகவாழ்வையும் புறவாழ்வையும் சிறப்பாக வைத்துக்கொள்ள வேண்டியது இன்றியமையாத ஒன்றாகும்.

வீட்டுச்சூழல் எவ்வளவு மோசமாக இருந்தாலும், நன்மாதிரியாக பின்பற்றத்தக்க ஆசிரியர்கள் அமைந்துவிட்டால், சேற்றில் முளைத்த செந்தாமரைபோல மாணவர்கள் நல்ல குடிமக்களாக உருவாவார்கள்.

படித்து முடித்து, பணியில் சேர்ந்து, தம் தந்தையின் ஓராண்டு ஊதியத்தை ஒரே மாதத்தில் சம்பாதிக்கும் இளைஞர்கள், அறவாழ்வில் நாட்டமின்றி, மனம்போன போக்கில் வாழும் நிலைகெட்ட மாந்தர்களாக மாறுவதற்குக் காரணம் என்ன? படிக்கும் காலத்தில் பாடஅறிவைப் பெற்ற அளவுக்கு, மனிதநேயக் கல்வியைப் பெறவில்லை அல்லது ஆசிரியர்கள் தரவில்லை என்பதேயாகும்.

“வாடி மனம் மிக உழன்று, பிறர் வாடப் பல செயல்கள்’ செய்யும் இவர்கள், ஒருகாலத்தில் வகுப்பறையில் பாடம் கற்ற மாணவர்கள்தாம். நாற்றில் கோளாறா, நடப்பெற்ற சேற்றில் கோளாறா? கல்வி நிலையங்கள் எல்லாம் நாற்றங்கால்கள் ஆகும். அவற்றைப் பராமரிக்கும் பொறுப்பில் உள்ளவர்கள் ஆசிரியப் பெருமக்கள். நாற்றங்கால்கள் பழுதுபட்டால் ஒட்டுமொத்த சமுதாயமே பாழ்பட்டுவிடும். இதை நன்கு உணர்ந்தவர் டாக்டர். சர்வேப்பள்ளி ராதாகிருஷ்ணன். வாழ்வாங்கு வாழும் வழிமுறைகளை அவர் தம் மாணவர்களுக்குக் கற்பித்தார். வழிமுறைகள் சரியாக இருந்தால்தான் முடிவுகள் சரியாக இருக்கும் என்பதில் அசையாத நம்பிக்கை கொண்டவர் அவர்.

உண்ணும் உணவு, ஒருவனுடைய மனப்போக்கை மாற்றும் என்கின்றனர் உடற்கூறு வல்லுநர்கள். உடுக்கும் உடை ஒருவனுடைய மனப்போக்கை மாற்றும் என உளவியலார் கூறுகின்றனர். இவ்விரண்டிலும் டாக்டர். ராதாகிருஷ்ணன் மிகுந்த கவனம் செலுத்தினார். 1950-ஆம் ஆண்டு ரஷிய நாட்டின் தூதராக நியமிக்கப்பட்டார். சர்வாதிகாரி ஸ்டாலின் ஆண்ட காலம்; கடுமையான குளிர்நிறைந்த அந்நாட்டில் அவர் எப்போதும்போல எளிய, தூய்மையான உடையணிந்து வாழ்ந்தார். ஒருபோதும் மது, மாமிசம் போன்றவற்றைத் தொட்டதும் இல்லை. சொல்லப்போனால் அந்நாட்டு மரபுப்படி, விருந்துகளில் மது அருந்தியாக வேண்டும். ஆனால் அதுபோன்ற நிகழ்ச்சிகளில் அவர் பழச்சாறு மட்டும் அருந்துவார். எந்தவொரு தீயபழக்கமும் இல்லாத முன்மாதிரி பண்பாளர் அவர்.

புனிதமான ஆசிரியப் பணிக்குத் தம் தீயநடத்தை மூலம் களங்கம் சேர்க்கும் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள். மற்ற துறைகளில் ஒரு தவறு நடந்தால் அது அந்தத் துறையை மட்டுமே பாதிக்கும்; ஆனால் கல்வித்துறையில் நடக்கும் தவறு ஒட்டுமொத்த சமுதாயத்தையே பாதிக்கும். மற்ற துறைகளின் செழுமையும் செயல்பாடும் கல்வித்துறையின் அறநெறிகளைப் பொருத்தே அமையும் என்பார் கல்வி நிபுணர் டர்க்ஹிம். ஆசிரியர் தினத்தையொட்டி, இவற்றையெல்லாம் ஆசிரியர் சமுதாயம் எண்ணிப் பார்க்க வேண்டும்.

டாக்டர். ராதாகிருஷ்ணன் ஆசிரியப் பணியை முதன்மைப் பணியாகக் கொண்டார். தூதராக, குடியரசுத் தலைவராகப் பணியாற்றிய அவர், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திலும் பணியாற்றியிருக்கிறார். இன்று, ஆசிரியர்களில் சிலர் ஆசிரியப் பணியைத் துணைத்தொழிலாகவும், விவசாயம், வணிகம் போன்றவற்றை முதன்மைத் தொழிலாகவும் கொண்டுள்ளனர். இவர்கள், சக்தி எல்லாம் தீர்ந்துபோய், சக்கையாக வகுப்பில் நுழைந்தால் எப்படி மாணவர் மனம் கவரும் வகையில் பாடம் நடத்த முடியும்? இந்த நிலை அடியோடு மாறும் நாள் எந்நாளோ?

1964-ல் அரசால் நியமிக்கப்பட்ட கோத்தாரி குழு, ஒழுக்கமும் பண்பாடும் உடையவர்களை மட்டுமே ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தியது. இது எவ்வளவு இன்றியமையாதது என்பது ஆய்வு மாணவிகளின் சோகக்கதையைக் கேட்டால் புரியும். ஆய்வு ஏட்டில் சில வழிகாட்டிகளின் கையெழுத்தைப் பெறுவதில் சிரமங்கள் பல உள்ளன.

இவர்களை ஆசிரியர்கள் என்று எப்படி ஒப்புக்கொள்ள முடியும்? தம்மிடம் பயிலும் குழந்தைகளுக்கு தாம் இரண்டாவது பெற்றோர் என்பதை எப்போதும் உணர்ந்து ஆசிரியர்கள் செயல்பட வேண்டும்.

நேர்மையாக உழைக்கும் ஆசிரியர்களுக்கு அரசும் சமுதாயமும் உரிய அங்கீகாரத்தை எப்போதும் தரும்; தரவும் வேண்டும். சர்வேப்பள்ளி ராதாகிருஷ்ணன் என்ற ஆசிரியரையும், ராமேசுவரம் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் என்ற ஆசிரியரையும் குடியரசுத் தலைவர்களாக அமர வைத்து அழகு பார்த்ததே நம் நாடு. இது சமுதாயம் தந்த அங்கீகாரம்தானே?

ஒரு குக்கிராமத்து ஆசிரியருக்குக் கிடைத்த அங்கீகாரத்தைப் பற்றி அறிந்தால் நீங்கள் வியப்படைவீர்கள். ஈரோடு மாவட்டத்தில் மலையப்பாளையம் என்னும் சிற்றூரில் ஆசிரியப் பணியை அறப்பணியாகச் செய்து ஓய்வு பெற்ற ஓர் அரசுப் பள்ளித் தலைமையாசிரியருக்கு (சொ. அய்யாமுத்து) அந்த ஊர் மக்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து தம் வருவாயில் ஒரு பகுதியை அளித்து, 2400 சதுர அடியில் ஒரு நிலம் வாங்கி நன்றிக் கடனாக வழங்கினார்கள்.

எனவே, பண்டைய குருகுலத்தில் தொடங்கிய ஆசிரியப் பாரம்பரியம் – “சர்வேப்பள்ளி முதல் ராமேசுவரம்’ வரை பேணிப் போற்றப்பட்ட அந்த ஆசிரியப் பாரம்பரியம் – தொடர்ந்து பராமரிக்கப்பட வேண்டும். வணங்கத்தக்க நம் ஆசிரியப் பெருமக்கள் இனி இந்த உணர்வோடு, “இன்று புதிதாய்ப் பிறந்தோம்’ என்னும் புத்துணர்வோடு நாளை வகுப்பிற்குள் காலடி எடுத்து வைக்க வேண்டும். செய்வார்களா?

(இன்று ஆசிரியர் தினம்)

Posted in APJ, class, Classroom, Instructor, Kalam, President, Presidents, Professor, Radha, Radhakrishnan, Student, Teach, Teacher | Leave a Comment »

Amitabh Bachan gets into the NCERT Social Sciences Textbook

Posted by Snapjudge மேல் ஜூன் 19, 2007

பாடப்புத்தகத்தில் இடம் பிடித்த அமிதாப்

இந்தி நடிகர் அமிதாப்பச்சன் புகழின் உச்சமாக தற்போது பாடப்புத்தகத்திலும் இடம் பிடித்து விட்டார். அவர் நடித்த `தீவார்'(தமிழிலில் ரஜினி நடிக்க “தீ” என்ற பெயரில் வெளியானது) படத்தில் ஒரு காட்சி.

ஷூ பாலீஷ் போட்டு பிழைப்பு நடத்தி வரும் சிறு வயது அமிதாபிடம் ஷூ பாலீஸ் போடுவதற்காக வில்லன் கோஷ்டியினர் இருவர் வருவார்கள். ஷூபாலீஸ் போட்டு முடிந்ததும் அதற்குரிய நாணயத்தை கையில் கொடுக்காமல் தூக்கி ஏறிவார்கள்.

தன்னை அவமானப்படுத்து கிறார்கள் என்று கோபமடையும் அந்த சிறுவன் “துட்ட எடுத்து கையில் கொடுத்துட்டு” போய்யா என்பான் “சின்ன வயதிலேயே உனக்கு இவ்வளவு திமிரா” என்று வில்லன்களில் ஒருவர் அடிக்கப்பாய மற்றொருவரோ அவரைத் தடுத்து கையில் காசை எடுத்து, கையில் கொடுத்துவிட்டுப் போவார்.

சற்று தொலைவில் சென்றதும் “இந்த பையன் வருங்காலத்துல பெரிய ஆளா வருவான் பாறேன்” என்பார்.

தனிமனித சுயகவுரவத்தை யாரும் எந்த நேரத்திலும் விட்டுக்கொடுக்கக் கூடாது என்பதை வலியுறுத்தும் இந்த காட்சி அதை கருத்தை வலியுறுத்துவதற்காக சமீபத்தில் வெளியான என்.சி.ஆர்.டி. சமூக அறிவியல் பாட புத்தகங்களில் இடம் பெற்றுள்ளது. ஒரு பாடமாக இந்த காட்சி விளக்கப் பட்டுள்ளது. தீவார் படத்தில் அமிதாப் பச்சனின் ஸ்டில் ஒன்றும் அதில் அச்சடிக்கப் பட்டுள்ளது.

இதன் மூலம் வாழும் காலத்திலேயே பாடப் புத்தகத்தில் இடம்பிடித்த நடிகர் என்ற பெயர் அமிதாப்புக்கு கிடைத்துள்ளது.

சினிமா காட்சிகளின் மூலம் வாழ்க்கைத் தத்துவங் களை விளக்க மேலும் பல சிறந்த படங்களின் சிறந்த காட்சிகளை பாடப்புத்தகங்களில் பாடமாக வைக்கவும் என்.சி.ஆர்.டி. முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. அப்படி பரிசீலிக்கப்படும் படங்களில் அமீர்கானின் “லகானும்” ஒன்று. சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்திய இந்தபடம் தலைமைப்பண்பின் சிறப்பை விளக்குவதற்காக பாடமாக வைக்க பரிசீலிக்கப் பட்டு வருகிறது.

ஹிருத்திக்ரோஷன், ஷாருக்கான் போன்ற தற்கால இளைஞர்களின் உள்ளங்களை அதிக அளவில் கொள்ளை கொண்ட நடிகர்களையும், பாடபுத்தகங்களில் இடம்பெறச் செய்யவேண்டும் என்ற கோரிக்கையும் வடஇந்திய மாணவர்களிடையே எழுந்துள்ளது.

Posted in Aamer, Aamir, Aamir Khan, AamirKhan, Amir, Amitab, Amitabh, Amitabh Bachaan, Amitabh Bhachan, Bachan, Bollywood, Caste, Cinema, class, Dalit, Dignity, Education, Hindi, Khan, Kollywood, Lagaan, Lagan, Lessons, Movies, NCERT, Oppressed, Rajini, Respect, School, Social Sciences, Students, Study, Textbook | Leave a Comment »

ANEW (Association for Non-traditional Employment for Women)

Posted by Snapjudge மேல் ஜூன் 12, 2007

சேவை: ஏழைப் பெண்களுக்கு இலவச தொழிற்பயிற்சி

ந. ஜீவா

முன்பைக் காட்டிலும் பெண்கள் படிப்பது அதிகமாகியிருக்கிறது. மாணவர்களைவிட மாணவிகள் அதிக மார்க்குகள் குவித்து எவரெஸ்ட்டில் கொடிகளை ஒவ்வோராண்டும் நட்டு வருகிறார்கள். என்றாலும் இந்தக் காலத்திலும் பெண் பிள்ளைகள் ஒரு பத்தாவது படித்தால் போதும் என்று நினைக்கக் கூடிய பெற்றோர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். பிளஸ் டூ படித்த பின்னால் படிப்பில் கரைகடந்த ஆர்வம் இருந்தும் படிக்க வசதியில்லாத பெண்களும் இருக்கிறார்கள். அவர்கள் படித்த அந்தக் குறைந்தபட்ச பத்தாவது, பிளஸ் டூ படிப்புகளும் கூட பயனில்லாமற் வீணாகப் போய்விடுகிறது.

இப்படிப்பட்ட பெண்கள் வேலைக்குப் போகும்விதமாக அவர்களுக்கு ஹோம் நர்சிங் பயிற்சி, கார், ஆட்டோ டிரைவிங், கணினிப் பயிற்சி, ஸ்போக்கன் இங்கிலீஷ் பயிற்சி எல்லாம் இலவசமாகக் கற்றுத் தருகிறார்கள்; முடிந்தால் வேலையும் வாங்கித் தருகிறார்கள் சென்னை அண்ணாநகர் ANEW (Association for Non-traditional Employment for Women) என்கிற அமைப்பினர். அந்த அமைப்பைச் சேர்ந்த அனு சந்திரனை அவருடைய அலுவலகத்தில் சந்தித்துப் பேசினோம்…

யாருக்குப் பயிற்சி கொடுக்கிறீர்கள்?

நாங்கள் வேலைவாய்ப்பிற்கான இலவசப் பயிற்சி கொடுப்பது மிகவும் கஷ்டப்படும் குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்குத்தான். பெண் குழந்தைகள் நன்றாகப் படிப்பார்கள். ஆனால் அவர்களால் பத்தாவதையோ, பிளஸ் டூ வையோ தாண்ட முடியாத அளவுக்குக் குடும்பநிலை இருக்கும். பிளஸ் டூ படித்துவிட்டு எந்த வேலைக்கும் போக முடியாமல் இருக்கும் பெண்களுக்கு நாங்கள் பயிற்சி கொடுக்கிறோம். பயிற்சியின் பின் 95 சதவீதம் பேருக்கு வேலையும் வாங்கிக் கொடுத்துவிடுகிறோம். இதனால் அந்தப் பெண்களின் வீட்டுக்கு ஒரு வருமானம் வருகிறது. நாளைக்கு திருமணம் என்று வருகிற போது அந்தப் பணம் அவர்களுக்கு உதவுகிறது.

ஹோம் நர்சிங் பயிற்சி பெற்றவர்களுக்கு வேலை வாய்ப்பு எப்படி?

நாங்கள் ஹோம் நர்சிங் பயிற்சியை நான்கரை மாதத்தில் கற்றுத் தருகிறோம். முதல் இரண்டு மாதங்கள் தியரி கிளாஸ், அதன்பின் இரண்டரை மாதங்கள் சுந்தரம் மெடிக்கல் பவுண்டேஷன் போன்ற நிறுவனங்களில் பிராக்டிகல் பயிற்சி கொடுக்கிறோம். பயிற்சி முடிந்தவுடன் அவர்களுக்கு வேலை கிடைத்துவிடும். நிறைய வீடுகளில் முதியவர்கள் நோய்வாய்ப்பட்டிருப்பார்கள். அவர்களைப் பார்த்துக் கொள்ள வீட்டிலுள்ளவர்களால் முடியாது. வீட்டிலுள்ள எல்லாரும் வேலைக்குப் போகிறவர்களாக இருப்பார்கள். சில நேரங்களில் அவர்களை ஆஸ்பத்திரியில் அட்மிட் பண்ணவும் முடியாது. ஆஸ்பத்திரியில் அவர்களைப் பார்த்துக் கொள்ளணுமே. அதுபோல சிறுகுழந்தைகளை வைத்திருப்பவர்கள் வேலைக்குச் செல்பவர்களாக இருப்பார்கள். வேலைக்குப் போகிற நேரங்களில் சிறுகுழந்தைகளைப் பார்த்துக் கொள்ள யாரும் இருக்கமாட்டார்கள். அப்படிப்பட்டவர்களிடம் எங்களிடம் பயிற்சி பெற்றவர்கள் வேலைக்குச் செல்கிறார்கள். மாதம் குறைந்தபட்சம் ரூ.3700 சம்பளம் கிடைக்கிறது. இப்படித் தேவையுள்ளவர்கள் அவர்களின் தேவையைக் குறிப்பிட்டு எங்களுக்கு போன் செய்தால் அதைக் குறித்துவைத்துக் கொண்டு அவர்கள் தேவைக்குப் பொருத்தமானவர்களை வேலைக்கு அனுப்புகிறோம்.

ஆட்டோ டிரைவிங், கார் டிரைவிங் பயிற்சிகளைப் பற்றிச் சொல்லுங்களேன்?

பெண்களுக்கு ஆட்டோ டிரைவிங், கார் டிரைவிங் பயிற்சி கொடுக்கிறோம். கற்றுக் கொடுப்பது மட்டுமல்லாமல் அவர்களுக்கு லைசென்ஸýம் எடுத்துக் கொடுக்கிறோம். கார் டிரைவிங் ஐதப மூலமாகக் கற்றுத் தருகிறோம். ஒன்றரை மாதம் டிரெயினிங்கிற்குப் பிறகு எங்களிடம் உள்ள மாருதி, அம்பாசிடர் கார்களில் மேலும் 3 மாதங்கள் டிரெயினிங் எடுத்துக் கொள்கிறார்கள். எங்களிடம் பயிற்சி எடுத்த பெண்கள் சென்னை விமானநிலையத்தில் அங்கு வருகிற பயணிகளை உரிய இடத்தில் கொண்டு விடும் பணிகளைச் செய்கிறார்கள். பெரிய ஹோட்டல்களில், தனிப்பட்டவர்களுடைய வீடுகளில் கார் டிரைவராக வேலை செய்கிறார்கள்.

ஆட்டோ டிரைவிங் கற்றுக் கொண்ட பெண்கள் பெரிய பெரிய பள்ளிகளில் ஆட்டோ ஓட்டுகிறார்கள். பள்ளிக்கு வரும் குழந்தைகளை ஏற்றிச் செல்வதுதான் அவர்களுடைய வேலை. கார் டிரைவிங் பயிற்சி, ஆட்டோ டிரைவிங் பயிற்சி எடுத்தவர்கள் எல்லாருக்கும் நாங்களே வேலை வாங்கிக் கொடுத்துவிடுவோம்.

கம்ப்யூட்டரில் என்ன கற்றுக் கொடுக்கிறீர்கள்?

இப்போது கம்ப்யூட்டர் யுகமாகிவிட்டது. எனவே பிளஸ் டூ படித்த பெண்களுக்கு கம்ப்யூட்டரில் டிடிபி கற்றுக் கொடுக்கிறோம். டிசிஏ படிப்பும் உண்டு. கம்ப்யூட்டர் படிக்க வருகிறவர்களுக்கு ஆங்கிலம் கண்டிப்பாகத் தெரிந்திருக்க வேண்டும். அதற்காக நாங்கள் ஒரு டெஸ்ட்டும் வைக்கிறோம். இவர்களுக்கு இந்தப் பயிற்சி கொடுக்க ஒரு மாணவிக்கு சுமார் ரூ.3500 ஆகிறது.

கம்ப்யூட்டர் பயிற்சி இருந்தால் மட்டும் போதாது, ஆங்கிலத்தில் சரளமாகப் பேசுவதும் இக்காலத்தில் அவசியம். இதற்கென புகழ்பெற்ற வீட்டா நிறுவனத்தைச் சேர்ந்த ஆசிரியரைக் கொண்டு வகுப்புகள் எடுக்கிறோம்.

பயிற்சி கொடுத்த பின் வேலைக்குப் போகிறவர்களிடம் பணம் எதுவும் வாங்குவீர்களா?

நாங்கள் கார் டிரைவிங் இலவசமாக கற்றுக் கொடுத்தாலும் லைசென்ஸ் வாங்க செலவாகும் 2000 ரூபாயை வேலை கிடைத்ததும் கொஞ்சம் கொஞ்சமாகத் திருப்பிக் கொடுக்க வேண்டும். பலர் கரெக்டாகத் திருப்பிக் கொடுத்துவிடுவார்கள்.

இலவசமாகப் பயிற்சி தந்தால் பலர் பொய் சொல்லி வருவார்களே, அவர்களை எப்படிக் கண்டுபிடிப்பீர்கள்?

நாங்கள் இலவசமாக வேலைவாய்ப்புப் பயிற்சிகள் கொடுக்கிறோம் என்பதைத் தெரிந்து கொண்டு சில வசதியானவர்களும் கூட வந்துவிடுவார்கள். ஆனால் நாங்கள் நாலைந்து பேர் உட்கார்ந்து இன்டர்வியூ பண்ணுவோம். அதில் நாங்கள் கேட்கிற கேள்விகளுக்கு அவர்கள் சொல்லும் பதிலிலேயே அவர்கள் ஏழையா? பணக்காரரா? என்பது தெரிந்துவிடும்.

கார்ப்பரேஷன் ஸ்கூலில் படித்தவரா? தனியார் பள்ளியில் படித்தவரா? என்பதிலேயே அவர்களுடைய வருமானநிலை தெரிந்து விடும். குடும்பத்தில் எவ்வளவு பேர்? வருமானம் எவ்வளவு? போன்ற கேள்விகளில் உண்மை தெரிந்துவிடும். அதை வைத்துத்தான் நாங்கள் பயிற்சி கொடுப்பதற்கான மாணவிகளைத் தேர்வு செய்கிறோம்.

பயிற்சிகளை எல்லாம் இலவசமாகக் கற்றுக் கொடுக்கிறீர்களே? செலவுகளை எப்படிச் சமாளிக்கிறீர்கள்?

எங்களுக்கு பெரிய அளவில் நிதி உதவி செய்து வருகிறவர் தமிழ்நாடு ஃபெüண்டேஷனைச் சேர்ந்த சந்திரசேகர். அதுபோல நிறைய நல்ல மனம் படைத்தவர்கள் ஏராளமான நன்கொடை தருவதால்தான் எங்களால் இந்த சமுதாய சேவையைச் செய்ய முடிகிறது.

Posted in ANEW, Anu, Anu chandran, Anuchandran, Chennai, class, Colleges, Compensation, computers, Development, Diploma, Donation, Driving, Education, Employment, Empowerment, Expenses, Females, Help, Interview, Jobs, Lady, Madras, Needy, NGO, Nurse, Nursing, Personnel, Poor, Rich, Schools, service, She, Skills, Spoken English, Students, Training, Volunteer, Wealthy, Women, Work | Leave a Comment »

SS Rajagopalan – Equal Opportunity in Indian Education System

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 13, 2006

சமச்சீர் கல்வி முறையைச் செயல்படுத்தல்

எஸ்.எஸ். இராஜகோபாலன்

“”தற்போது செயல்பாட்டிலுள்ள பல்வேறு கல்விமுறைகளான – நர்சரி, மெட்ரிகுலேசன், ஆங்கிலோ-இந்தியன், ஓரியண்டல் மற்றும் மாநில வாரியக் கல்வி முறைகளை ஆய்வு செய்து அனைத்துப் பள்ளிகளிலும் ஒரே தரமான கல்வி வழங்கும் சமச்சீர் கல்வி முறையை நடைமுறைப்படுத்த “”அறிக்கை வேண்டி முனைவர் ச. முத்துக்குமரன் தலைமையில் ஒரு குழுவினைத் தமிழக அரசு நியமித்துள்ளது குழந்தைகளின் நலனைப் பேணும் ஒரு சீரிய நடவடிக்கையாகும்.

வேறுபாடுகளுக்கான காரணிகள்:

 • பள்ளிகளில் மாணவர் சேர்க்கை முறை,
 • பள்ளி வயது,
 • பாடத்திட்டம்,
 • பாட நூல்கள்,
 • ஆசிரியர்கள்,
 • தேர்வுமுறை,
 • பள்ளிச்சூழல்,
 • உட்கட்டமைப்பு வசதி,
 • வகுப்பறைக் கற்றல் – கற்பித்தல் முறைகள்,
 • பள்ளி மேலாண்மை,
 • பள்ளி ஆய்வு,
 • பயிற்று மொழி போன்றவை கல்வி முறைகளில் வேறுபாடுகளை உருவாக்கியுள்ளன.

அவ் வேறுபாடுகளை அகற்றியோ, குறைத்தோ சமச்சீர் கல்வித் திட்டத்தைச் செயல்படுத்த முற்படுவதுதான் அரசின் நோக்கம். கோத்தாரி கல்விக்குழு, தேசியக் கல்விக் கொள்கை ஆகியவை வலியுறுத்திய ஒரு திட்டம் பல்வகைப் பள்ளிகளின் தனித்தன்மைகளை அறிதல் வேண்டும்.
ஓரியண்டல் பள்ளிகள்:

28 அரேபிக், 8 வடமொழி கற்பிக்கும் பள்ளிகள் ஓரியண்டல் பள்ளிகளாகும். இம் மொழிகளைத் தவிர, ஆங்கிலம் மொழியல்லாப் பாடங்கள் அனைத்தும் மாநில வாரியப் பாடத்திட்டத்தின்படி கற்பிக்கப்பட்டு மாநில வாரியத் தேர்விற்கு மாணவர்களை ஆயத்தப்படுத்தி வருகின்றன. தமிழில் ஒரு தாள் மட்டுமே உண்டு. மற்றொரு மொழித்தாள் அரேபிக் அல்லது வடமொழி, சமூக இயல் தேர்வை மாணாக்கர் எதிர்கொண்டாலும் அதில் பெறும் மதிப்பெண் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்க எடுத்துக் கொள்ளப்படாது.

ஆங்கிலோ-இந்தியன் பள்ளிகள்:

ஆங்கில ஆட்சியில் ரயில்வே, தபால்தந்தித்துறை, செவிலியர் போன்ற பணிகளில் ஆங்கிலோ-இந்தியர் அதிகம் பணி புரிந்தனர். இத் தேவைகளை நிறைவு செய்யும் வகையில் அவற்றின் பாடத்திட்டம் வகுக்கப்பட்டது.

ஆங்கிலத்திற்கு முக்கியத்துவம் கொடுத்த வேளையில் பிற பாடங்களின் பாடத்திட்டங்கள் சுமையற்றதாக இருந்தது. சமீபகாலத்தில் இப் பாடத்திட்டங்களையும் மாநில வாரியப் பாடத்திட்டத்திற்கு இணையாகக் கொணர மாற்றங்கள் படிப்படியாகச் செய்யப்பட்டுள்ளன. இப் பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகள் சிறப்பாக உள்ளன. புதிய பள்ளிகள் ஏதும் தொடங்கப்பெறாததால் அவற்றின் எண்ணிக்கை 41-லேயே நிற்கின்றது. ஓரியண்டல், ஆங்கிலோ-இந்தியப் பள்ளிகளில் சமச்சீர் கல்வி கொண்டு வருவது எளிது. அக் கல்வி முறைகளின் சிறப்பான மொழிப்பாடங்களில் ஒரு தனித்தாள் கொடுப்பது ஒரு தீர்வாக அமையும்.

மெட்ரிக் பள்ளிகளின் சிறப்பு அம்சங்கள்:

1978-ஆம் ஆண்டில் 40-க்கும் குறைவாக இருந்த மெட்ரிக் பள்ளிகள் இன்று ஏறக்குறைய 4000 பள்ளிகளாகியும் மேலும் இவ் வகைப் பள்ளிகள் தொடங்கப் பலரும் முன்வருகின்றனர்.

எல்லா மெட்ரிக் பள்ளிகளிலும் நர்சரி வகுப்புகள் உண்டு. எனவே கல்வி 3 வயதிலேயே தொடங்குகின்றது. ஒவ்வொரு பிரிவிற்கும் ஓர் ஆசிரியர் இருப்பதால் கற்பித்தல் தொடர்ச்சியாக நடைபெறுகின்றது. குழந்தைகளுக்கும் தனிக்கவனம் செலுத்த வாய்ப்பு உண்டு. தேர்வை மையப்படுத்திய கற்றல் – கற்பித்தல் முறை பெற்றோர்க்கு விருப்பமாக உள்ளது. மாதந்தோறும் பெற்றோர் கூட்டம் நடைபெறுவதும் அவற்றில் தவறாது பெற்றோர் பங்கேற்பதை உறுதி செய்வதும் ஆசிரியர் – பெற்றோர் உறவை வளர்க்க உதவும். பள்ளி நிர்வாகியோ அல்லது அவரால் நியமிக்கப் பெற்ற கல்வி ஆலோசகரோ பள்ளியில் இருந்து பள்ளி செயல்பாட்டினை நேரடியாகக் கண்காணித்து வருவது ஒரு சிறப்பு. பொதுத்தேர்வு தேர்ச்சி சதவீதமே பள்ளியின் நிலைத்த தன்மைக்கு அடிப்படை என்பதால் சிறப்பான தேர்ச்சியைக் காட்ட முயற்சிகள் எடுக்கப்படுகின்றன.

பொதுப்பள்ளிகளின் சிறப்பம்சங்கள்:

மாநில வாரியத்தின் கீழ் செயல்படும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் இவை. சமீபகாலமாக அரசு உதவி பெறாமல் மாநில வாரியத்தோடு இணைந்த பள்ளிகள் சில உண்டு.
இவற்றில் உள்ள ஆசிரியர்கள் அனைவரும் முழுமையான தகுதி பெற்றவர்கள். தொடர்ந்து அரசுச் செலவில் புத்தறிவு பயிற்சியும் ஆசிரியர்கள் பெறுகின்றனர். அரசு ஊழியர்க்குரிய அனைத்து உரிமைகளையும் இவ்வாசிரியர்கள் பெறுகின்றனர். பதவி உயர்வு வாய்ப்புகளும் உண்டு. கல்வித் துறையின் நேரடிக் கண்காணிப்பில் இயங்குகின்ற இப் பள்ளிகள் ஆண்டுதோறும் தணிக்கைக்குட்படுத்தப்படுகின்றன. பள்ளிச் சேர்க்கை முதல் வகுப்புத் தேர்ச்சி முடியவும், ஒவ்வோர் ஆசிரியரது கற்பித்தல் திறனும் ஆண்டாய்வில் மேற்பார்வை செய்யப்படுகின்றன. மக்களின் வரிப்பணத்தால் இவை இயங்குவதால் இவற்றை மக்கள் பள்ளிகளெனலாம். அரசின் நலத்திட்டங்கள் பலவற்றையும் செயல்படுத்தும் பொறுப்பும் இப் பள்ளிகளுக்கும் ஆசிரியர்களுக்கும் உண்டு. மாணவரைப் பொறுத்தவரையில் இலவச பாடநூல்கள் வழங்கப் பெறுவதுடன், சீருடை, இலவசப் பேருந்து, அரசு உதவித்தொகை போன்றவையும் மாணவர் பெற இயலும்.

பாடத்திட்ட வேறுபாடு:

ஓரியண்டல் பள்ளிகள் மாநில வாரியப் பாடத்திட்டத்தையே பின்பற்றுகின்றன. 6 முதல் 10 ஆம் வகுப்பு வரை பாடத்திட்டங்களில் பெரிய வேறுபாடு எக் கல்வி முறையிலும் இல்லை. சிறிய மாற்றங்களே காணப்படும். தொடக்கக் கல்வியில் மட்டும் மெட்ரிக் பள்ளிகளில் சுமைமிக்கப் பாடத்திட்டம் உள்ளது. நர்சரி வகுப்புகளிலேயே முறையான கல்வி தொடங்கப் பெறுவதன் விளைவே இது. ஆனால் எல்லாக் கல்வி முறைக்கும் வேறுபாடற்ற மாநில மேல்நிலைப் படிப்பிற்கு ஆயத்தப்படுத்துகின்றன. தேர்வு முறைகளில் ஆங்கிலோ – இந்தியன், மெட்ரிக் பள்ளிகளில் அறிவியல் பாடத்தில் செய்முறைத் தேர்வு உண்டு. மற்ற இரு வகைப்பள்ளிகளிலும் செய்முறைத் தேர்வு கிடையாது.

பொதுப்பள்ளிகளின் தரத்தை உயர்த்தல்:

மாநில வாரியப் பள்ளிகளின் தரத்தை உயர்த்த அடிப்படையில் சில மாற்றங்கள் செய்வது அவசியம்.

அங்கன்வாடி மையங்கள் அனைத்தையும் முன்பருவக் கல்வி மையங்களாக மாற்றி அமைப்பது நல்ல பயனைத் தரும். சில ஆண்டுகளுக்கு முன்னர் தேர்ந்தெடுக்கப்பட்ட சில வட்டாரங்களில் யுனிசெப் ஆதரவில் அங்கன்வாடி ஊழியர்க்கு முன்பருவக்கல்விப் பயிற்சி அளித்த திட்டம் மிகுந்த பயனைத் தந்துள்ளது என ஆய்வுகள் வெளிப்படுத்தியுள்ளன. அனைத்து அங்கன்வாடி ஊழியர்க்கும் மிகக் குறைந்த செலவில் இப் பயிற்சியினை அளிக்க இயலும்.

ஆசிரியர் பணியிடங்களை அதிகரிப்பது மற்றொரு செயல்பாடாக இருக்க வேண்டும். பிரிவிற்கு ஓர் ஆசிரியர் என்ற இலக்கை நோக்கி படிப்படியாகச் செல்லத் திட்டம் வகுக்கப்பட வேண்டும். உயர்நிலைப் பகுதியில் கணிதம், அறிவியல், சமூகஇயல் ஆகிய பாடங்களைக் கற்பிக்க அப் பாடங்களில் தகுதி பெற்றவரை நியமிக்க வேண்டும். தற்பொழுது அப் பாடங்களைக் கல்லாதவரும் கற்பிக்கும் நிலையை மாற்றிடுதல் அவசியம்.

மூன்றாவதாக, அறிவியல் பாடத்தில் செய்முறைப் பயிற்சியை அமலாக்க வேண்டும். மேல்நிலைக் கல்வி வகுப்புகள் பள்ளிகளில் அமைந்ததால் எல்லாப் பள்ளிகளுக்கும் அறிவியல் பாடங்கள் அமைந்தன. அதுபோலவே, செய்முறைத் தேர்வுகள் கொணரப்பட்டால் அனைத்து உயர்நிலைப் பள்ளிகளிலும் அறிவியல் கூடங்கள் உருவாகிடும்.

இம் மூன்றும் அடிப்படை மாற்றங்கள். மற்றவை எளிதானவையே.

மெட்ரிக் பள்ளிகளைச் சீரமைத்தல்:

மெட்ரிக் பள்ளிகளில் நர்சரி வகுப்பு முதல் அனைத்தாசிரியரும் பயிற்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும். மறுபயிற்சி வகுப்புகள் நடத்தப் பெற்று ஆசிரியர் திறன்கள் வளர்க்கப்பட வேண்டும். ஆண்டாய்வு நடைபெற வேண்டும். முனைவர் சிட்டிபாபு குழு அளித்துள்ள பரிந்துரைகளை முழுமையாகச் செயல்படுத்த வேண்டும்.

சமச்சீர் கல்வி ஜனநாயகத் தேவை:

நால்வகைப் பள்ளிகளிலும் காணப்படும் குறைகள் களையப்பெற்று, நிறைகளை அனைத்துப் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்துவதே சமச்சீர் கல்வியின் நோக்கமும் செயல்பாடும் ஆகும். எல்லாப் பள்ளிகளும் மேலோங்கச் சிறப்புற செயல்படத் துணை செய்யும் ஒரு கருவியே சமச்சீர் கல்வி முறை. இதனைச் செயல்படுத்துவது அரசின் கடமை மட்டுமல்ல, ஒட்டுமொத்த சமுதாயத்தின் பொறுப்பாகும். சமச்சீர் கல்வி முறை அமலாக்கப்பட்டால் தமிழகத்தில் பிறந்து வளரும் ஒவ்வொரு குழந்தையும் தரமிக்க நல்ல கல்வி பெற இயலுமென்பதால் அனைத்து மக்களும் தங்கள் முழுமையான ஆதரவினை இத் திட்டத்திற்கு அளிக்க வேண்டும்.

Posted in Analysis, Anglo-Indian, Chittibabu, class, Equal Opportunity, High School, Higher Secondary, India, Indian Education, Insights, Matriculation, Metric schools, Nursery, Op-Ed, Oriental, Rajagopalan, School, State Board, Tamil Nadu | 1 Comment »