Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Instructor’ Category

‘TV Gopalakrishnan is my Guru’ – Ilaiyaraja

Posted by Snapjudge மேல் திசெம்பர் 3, 2007

மனதிற்கு நிம்மதி, ஆனந்தம் தருவது இசை: டி.வி.கோபாலகிருஷ்ணன் நெகிழ்ச்சி

“மனதிற்கு நிம்மதி, ஆனந்தம் தருவது இசை’ என்று இசை வித்வான் டி.வி.கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

இசை வித்வான் டி.வி.கோபாலகிருஷ்ணனின் 70 ஆண்டு இசை வாழ்க்கையை பாராட்டும் வகையில் அவரது சிஷ்யர்கள் மற்றும் ரசிகர்கள் சார்பில், “குரு சேவா 70′ நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடந்தது. விழாவில் “ஸ்கார்ப்’ அமைப்பிற்கு டி.வி.கோபாலகிருஷ்ணன் ஒரு லட்சம் ரூபாய் நிதி வழங்கினார். “யுவர் வாய்ஸ்’ நுõலினை டி.வி.கோபாலகிருஷ்ணன் வெளியிட இசையமைப்பாளர் இளையராஜா பெற்றுக் கொண்டார். “தி கிங் ஆப் பெர்கூசன்மிருதங்கம்’ புத்தகத்தை மியூசிக் அகடமி தலைவர் என்.முரளி வெளியிட கர்நாடக இசைக் கலைஞர் பாலமுரளி கிருஷ்ணா பெற்றுக் கொண்டார். “மகிமா’ இசை “சிடி’யை இசை அறிஞர் வி.வி.ஸ்ரீவத்சவா வெளியிட கலாஷேத்ரா இயக்குனர் லீலா சாம்சன் பெற்றுக் கொண்டார்.

கர்நாடக இசைக் கலைஞர் பாலமுரளிகிருஷ்ணா பேசுகையில், “இசையின் அடிப்படையை தெரிந்து கொண்டால் எல்லா இசையும் ஒன்று தான். தென்னிந்திய இசையிலிருந்தே எல்லா இசைகளும் வருகின்றன. டி.வி.கோபாலகிருஷ்ணன் பல இளம் இசைக் கலைஞர்களை உருவாக்கியிருக்கிறார்’ என்றார். இசை அறிஞர் வி.வி.ஸ்ரீவத்சவா பேசுகையில், “தனது திறமையால் முன்னேறி, பல்வேறு திறமையான இசைக் கலைஞர்களை உருவாக்கி வருகிறார். அவர் ஒரு நடமாடும் பல்கலைக் கழகம்’ என்றார்.

சென்னை சபாக்கள் கூட்டமைப்பின் தலைவர் கிருஷ்ணசாமி பேசுகையில், “நாரதகான சபா ஆரம்பிக்கப்பட்ட சமயத்தில் பல வித்வான்களை அறிமுகப்படுத்தி, அவர்களுடன் உட்கார்ந்து வாசித்து, அவர்களையும், எங்கள் சபாவையும் வளர்த்த பெருமை டி.வி.கோபாலகிருஷ்ணனுக்கு உண்டு. அவர் இசை உலகிற்கு செய்த பணி மகத்தானது’ என்றார்.

இசையமைப்பாளர் இளையராஜா பேசுகையில், “கம்ப்யூட்டர், கிரிக்கெட் உள்ளிட்டவற்றை வைத்துக் கொண்டு, இசையை மட்டும் எடுத்து விட்டால் உலகில் மனிதர்கள் இருக்க மாட்டார்கள். நான் சினிமாவில் பிரபலமாக இருந்தபோது, இரவு 10 மணி முதல் நள்ளிரவு 2 மணி வரையும், மீண்டும் மறுநாள் அதிகாலை 4 மணிக்கு எனக்கு டி.வி.கோபாலகிருஷ்ணன் சங்கீதம் கற்றுத் தந்திருக்கிறார். சங்கீத உலகிற்கு அவர் போல ஒருவர் கிடைப்பது அபூர்வம்’ என்றார்.

கலாஷேத்ரா இயக்குனர் லீலா சாம்சன், கர்நாடக கலாசார அமைச்சர் பேபி, மியூசிக் அகடமியின் தலைவர் என்.முரளி ஆகியோரும் வாழ்த்துரை வழங்கினர். ஏற்புரையாற்றிய இசை வித்வான் டி.வி.கோபாலகிருஷ்ணன், “மனிதனுக்கு புத்தி தான் வழிகாட்டி. மனது நல்லபடியாக இருக்க வேண்டும். அதற்கு இசை அவசியம். மனதிற்கு நிம்மதி, ஆனந்தம் தருவது இசை. ஒரு பாடலை கேட்கும் போது, அதோடு உங்கள் குரலில் பாடி வருகிறீர்கள். உங்கள் உள்ளத்தில் என்றும் இசை பாடிக் கொண்டிருக்க வேண்டும்’ என்றார்.

Posted in Audio, Bala murali krishna, Balamurali krishna, Balamuralikrishna, BGM, Carnatic, CD, Chennai, Cinema, City, Classical, Events, Films, Gopalakrishnan, Guru, Guru Seva 70, Ilaiyaraja, ilayaraja, Instructor, IR, Kalakshethra, Kalasethra, Kalasetra, Kalashethra, Kalashetra, Live, Madras, MD, Movies, music, NGO, Performance, Raja, release, SCARF, service, Shows, Stage, Teacher, Theater, Theatre, TV Gopalakrishnan, TVG, Your voice | Leave a Comment »

Thirukkural Chellammal: Karagattam Dancer – Folk Dances of Tamil Nadu

Posted by Snapjudge மேல் நவம்பர் 30, 2007

முகங்கள்: கரகாட்டத்தில் திருக்குறள்!

வி. கிருஷ்ணமூர்த்தி

ஆண்டு: 1957; இடம்: வந்தவாசி அருகே மங்கலம் கிராமம்; கையில் எப்போதும் இருக்கும் திருக்குறள் புத்தகம். எதற்கும் திருக்குறள் மேற்கோள். சீனிவாசனை உறவினர்கள் மட்டுமல்லாது ஊரில் உள்ளவர்களும் திருக்குறள் பைத்தியம் என கிண்டலடித்தனர். ஆனால் அவரைப் பைத்தியம் என்று ஒதுக்கவில்லை, அவரது சகோதரி மகளான செல்லம்மாள்.

திருக்குறள் சொல்பவரை பைத்தியம் என்கிறார்களே ஏன்? அப்படி திருக்குறளில் என்னதான் இருக்கிறது என்ற ஆர்வத்தில் திருக்குறளை படிக்க ஆரம்பித்தார் அவர். 10 வயதில் ஏற்பட்ட திருக்குறள் ஆர்வம், செல்லம்மாவை குறளுக்கு அடிமையாக்கிவிட்டது என்றே சொல்லலாம். திருக்குறள் மீது ஆர்வம் வருவதற்குப் பலருக்குப் பல காரணங்கள் உண்டு. செல்லம்மாளுக்கு ஏற்பட்ட ஆர்வம் இந்த வகையில் வித்தியாசமானதுதானே?

6-வது படிக்கும் போது செல்லம்மாள் கரகாட்டத்தைக் கற்றுக் கொண்டார். திருக்குறளும், கரகாட்டமும் தனது வாழ்க்கையை எந்த அளவுக்கு ஆட்கொள்ளப் போகிறது என்பது அப்போது தெரியாது செல்லம்மாளுக்கு. இந்த இரண்டிலும் ஏற்பட்ட ஆர்வம் திருக்குறளுக்குக் கரகாட்டம் ஆடும் அளவுக்கு அவரை உயர்த்தியது.

  • திருக்குறள் மாமணி,
  • திருக்குறள் தூதர்,
  • திருக்குறள் செம்மல்,
  • திருக்குறள் திருத்தொண்டர்

என ஏராளமான விருதுகளைப் பெற்ற, பெற காரணமாக இருந்த தனது அனுபவங்களை நம்முடன் பகிர்ந்து கொள்ளும் புலவர் கோ.ப. செல்லம்மாள் இனி உங்களுடன்…
“”திருக்குறள், கரகாட்டம் இவற்றுடன் எனது பள்ளிப்படிப்பு நல்லபடியாக முடிந்தது.

பள்ளிப்பருவத்தில் கரகாட்டம் ஆடியும், திருக்குறளை பாடியும் பல்வேறு போட்டிகளில் ஆர்வத்துடன் பங்கேற்று வெற்றிப் பெற்றதால் ஆசிரியர்கள் மட்டுமல்லாது சக மாணவர்களிடமும் பாராட்டுகளைப் பெற முடிந்தது. பள்ளிப்படிப்பு முடித்து ஆசிரியர் பயிற்சி அதுவும் திருக்குறள், கரகாட்டத்துடன் வெற்றிகரமாக முடிய ஆசிரியர் பணி கிடைத்தது.

ஆசிரியர் பணிக்கிடையே கரகாட்டத்துடன் எம்.ஏ., எம்.ஃபில், பிஎச்.டி., டி.டி.எச். என படிப்பிலும் பல்வேறு சிகரங்களைத் தொட திருக்குறள் அடிப்படையாக இருந்தது.

படிப்பில் ஏற்பட்ட உயர்வு எனது பணியின் நிலையையும் மேம்படுத்தியது. உதவி ஆசிரியையாக, தலைமை ஆசிரியை வரை பல்வேறு உயர்வுகள் கிடைத்தன.

ஆசிரியர் பணியில் இருந்த 33 ஆண்டுகளும் எனது வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவங்களாக அமைந்துவிட்டன. ஆசிரியர் பணியில் ஈடுபட்டிருந்தபோது, என்னிடம் படித்த மாணவர்கள், மாணவிகளுக்குக் கரகாட்டத்தைச் சொல்லிக் கொடுத்து அவர்களைக் கல்வி மட்டுமல்லாது கலையிலும் வல்லவர்களாக உருவாக்கினேன்.

வெறுமனே கரகாட்டத்தை எப்படி ஆடுவது என சொல்லிக் கொடுக்காமல் மாணவர்களுக்குக் கரகாட்டத்தின் தோற்றம், வளர்ச்சி, சிறப்புகள், தற்போதைய நிலை ஆகியவைக் குறித்துச் சொல்லிக் கொடுப்பதால் நான்படித்தக் கலையை மற்றவர்களுக்கு முழுமையாகக் கொண்டு சேர்த்த திருப்தி கிடைத்துள்ளது.

ஆசிரியர் பணியின்போது நூற்றுக்கணக்கான மாணவர்களுக்குக் கரகாட்டத்தைக் கற்றுக் கொடுத்திருந்தாலும் அதில் மது, சந்திரா உள்ளிட்ட சில மாணவமணிகள் இந்தக் கலையில் பெரிய அளவில் சிறப்பு பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

கரகாட்டம் கற்றுக் கொடுக்கும்போது மாணவர்களுக்குத் திருக்குறளையும் கற்றுக்கொடுத்தேன். அனைத்து மாணவர்களையும் திருக்குறளை முழுமையாகப் படிக்கச் செய்து, அதில் போட்டிகள் நடத்தியும், மற்ற இடங்களில் நடக்கும் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெறும் அளவுக்குத் தயார்படுத்தினேன்.

இந்தச் சமயத்தில், கரகாட்டத்துக்கு வழக்கமான கிராமியப் பாடல்கள், பக்திப் பாடல்களுக்குப் பதிலாக திருக்குறளின் சில பகுதிகளைப் பாடலாக மாற்றி கரகாட்டம் நடத்தினேன். பார்வையாளர்களிடம் இதற்குக் கிடைத்த வரவேற்பு இதனை மேலும் சிறப்பாகச் செய்யத் தூண்டியது. இதனால், பக்தி மற்றும் கிராமியப் பாடல்களே இல்லாமல் அவற்றின் மெட்டில் திருக்குறளையும் அது வலியுறுத்தும் கருத்துகளையும் பாடலாக அமைத்து கரகாட்டம் நடத்த தொடங்கினோம். பல மாணவர்களுக்கு இதனை கற்றுக் கொடுத்தேன்.

உலகத் திருக்குறள் மையத்தில் இணைந்தது, எனது திருக்குறள் பணியை மேலும் விரிவுப்படுத்தியதுடன் என்னை திருக்குறள் தூதராக்கியது. திருக்குறள் கருத்துகளை மக்களிடம் விளக்க பல இடங்களுக்குச் சுற்றுப்பயணம் சென்றேன். 1996-ம் ஆண்டில் திருச்சி மாவட்டம் நடுப்பட்டியில் திருக்குறள் கருத்து விளக்கத்துக்காகச் சென்ற போது திருக்குறள் இசைப் பாடலுக்குக் கரகாட்டம் ஆடியது பலராலும் பாராட்டப்பட்டது.

திருக்குறள் பிரசாரம் தொடர்பான பணியில் ஈடுபட்டுள்ள ஏராளமான மன்றங்கள், மையங்களில் என்னை இணைத்துக் கொண்டேன். இது எனது திருக்குறள் பணியின் எல்லையை மேலும் விரிவுபடுத்தியது. தமிழகம் மட்டுமல்லாது, மற்ற மாநிலங்கள் அதனைத் தொடர்ந்து சிங்கப்பூர், மலேசியா, நேபாளம் உள்ளிட்ட நாடுகளிலும் திருக்குறள் பிரசார மாநாடுகளில் பங்கேற்றேன்.

ஒரு கட்டத்துக்கு பின்னர் எனது அன்றாட செயல்களில் ஒன்றாகவே திருக்குறள் பிரசாரம் மாறிவிட்டது. எனது மகன் மகள் இருவருக்கும் திருக்குறளுடன் கரகாட்டத்தைக் கற்று கொடுத்து மேடை ஏற்றிவிட்டேன். வீட்டுக்கு வெளியில் மட்டுமல்ல, வீட்டுக்குள்ளும் எந்த நிகழ்ச்சியும் திருக்குறள் இல்லாமல் இல்லை என்ற நிலை உருவாகிவிட்டது.

திருக்குறள் பிரசாரத்தில் கிடைத்த சந்தோஷம் அதிகம் இருந்தாலும், கரகாட்டத்தின் தற்போதைய நிலை கவலை அளிப்பதாக உள்ளது. நமது கலாசாரத்தில் நடைமுறை வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவானது கரகாட்டகலை. ஒரு சமயத்தில் கடவுள் வழிபாடாக மட்டும் இருந்த கரகாட்டகலை பிற்காலத்தில் பொழுதுபோக்காகவும் மாறியது. இந்தக் காலகட்டத்தில் பொழுதுபோக்காக இருந்தாலும் அதன் அடிப்படை புனிதத்தன்மை பாதிக்கப்படாமல் இருக்க பல்வேறு விதிகள் வகுக்கப்பட்டன. அதன்படி ஆடும்போது பல்வேறு சாகசங்கள் செய்து மக்களை அசத்துவதோடு ஆச்சரியப்பட வைத்தனர் கரகாட்ட கலைஞர்கள். ஆனால், தற்போது கரகாட்டத்தை முறையாகக் கற்றுக் கொண்டு வருபவர்களின் எண்ணிக்கை குறைந்து விட்டதாலும் மற்ற பொழுதுபோக்குகளில் இருந்து மக்களை தங்கள் பக்கம் ஈர்ப்பதற்காகவும் கரகாட்டக் கலைஞர்கள் பல தவறான அணுகுமுறைகளைக் கையாளத் தொடங்கியுள்ளனர். ஆபாச சைகைகள் போன்றவற்றால் இந்தக் கலையின் எதிர்காலம் கேள்விக்குறியாக மாறியுள்ளது கவலை அளிக்கிறது” என்றார் செல்லம்மாள்.

Posted in Artistes, artists, Arts, Chellammal, Couplets, Cultural, Culture, Dancers, Dances, Folk, Heritage, Instructor, Karaga, Karagam, Karagattam, Kural, Literature, Performances, Performers, Shows, Stage, Students, Teacher, Temple, Theater, Theatre, Thirukkural, Thiruvalluvar, Tradition, Traditional, Valluvar | Leave a Comment »

Srinivasa Sasthri – Faces: Biosketch by V Sundaram

Posted by Snapjudge மேல் நவம்பர் 28, 2007

ஆங்கிலேயருக்கு ஆங்கிலம் கற்பித்த இந்தியர்

வி. சுந்தரம்

“வெள்ளி நாக்கு படைத்த பேச்சாளர்’ (Silver tongued orator) என பிரசித்தி பெற்ற ரைட் ஆனரபிள் ஸ்ரீநிவாஸ சாஸ்திரி பார்க்காத உயர்ந்த பதவியில்லை – சிறந்த ஆசிரியர், சிறந்த “பார்லிமெண்டேரியன்’, சிறந்த ராஜதந்திரி, சிறந்த தூதுவர்..

1869 ஆம் ஆண்டு செப்டம்பர் 22-ம் நாள் கும்பகோணத்துக்கு அருகிலுள்ள வலங்கைமான் கிராமத்தில் ஏழைக்குடும்பத்தில் பிறந்தார். சங்கரநாராயண சாஸ்திரியின் மூத்த குமாரரான இவர் குடும்பத்தின் வறுமையை சிறு வயதிலேயே கண்டார். சட்டையை வெளுக்க சவுக்காரம் கூட வாங்க முடியாத வறுமை, இலவசமாகக் கிடைத்த மாங்காய்களை ஊறுகாய்போட தேவையான உப்பைக்கூட வாங்க முடியாத ஏழ்மை.

கும்பகோணத்தில் பள்ளிப்படிப்பு பின்னர் கல்லூரியில் படிக்கும்போது இரவில் தெருவிளக்கின் வெளிச்சத்தில் பாடங்களைப் படிக்கும்படி செய்த பணமின்மை! இப்பேர்ப்பட்ட குடும்ப நிலையிலிருந்து ஒரு பெரிய பேச்சுவன்மை நிறைந்த உலகம் போற்றும் ராஜதந்திரியாக மலர்ந்தது ஒரு சுவையான கதை.

பி.ஏ. தேர்வில் மாகாணத்தில் முதலிடம் பெற்று, சட்டக் கல்வி பயில பணமின்மையால் சென்னை சைதாப்பேட்டையிலுள்ள ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் பணியில் சேர்ந்தார். பிறகு பல பள்ளிகளில் ஆசிரியராகப் பணியாற்றியபின் சென்னை ஹிந்து மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியரானார்.

ஆங்கிலம், சமஸ்கிருதம் இவைகளைப் போதிப்பதில் சிறந்த ஆசிரியராகப் புகழ்பெற்றதுடன் மற்ற இரு தொண்டுகளிலும் புகழ் பெற்றார். ஒன்று ஆசிரியர்களின் நன்மைக்காக முதன்முறையாக ஒரு சங்கம் நிறுவியது (Madras Teacher’s Guild) மற்றொரு தொண்டு – இன்று பல கிளைகளுடன் கொழிக்கும் திருவல்லிக்கேணி அர்பன் கோவாப்பரேடிவ் சொûஸட்டி (Triplicane urban Co-operative Society)

கல்விப் பணியில் ஈடுபட்ட சாஸ்திரியாருக்கு தேசப்பணியில் ஈடுபட வாய்ப்பு கிடைத்தது. தேசத் தொண்டில் ஈடுபட விரும்பும் இளைஞர்களுக்குத் தேவையான பயிற்சியளிக்க தேச பக்தர் கோபாலகிருஷ்ண கோகலே இந்திய ஊழியர் சங்கம் (Servants of India Society) என்ற ஒரு ஸ்தாபனத்தை நிறுவியிருந்தார். கோகலேயின் நோக்கத்தால் கவரப்பட்ட சாஸ்திரியார், தன் நல்ல சம்பளத்தையும் பெரிய குடும்ப நிர்வாகப் பொறுப்பையும் விட்டுவிட்டு, நாட்டுப்பணியில் கோகலே அளித்த உதவித் தொகையை ஏற்றுக்கொண்டது மிக வியப்புக்குரிய செய்கையாகும்.

இச்சங்கத்தில்தான் பயிற்சிக்கு வந்த காந்திஜியை முதன்முதலில் சந்தித்தார். சாஸ்திரியின் ஆங்கில அறிவு காந்திஜியைக் கவர்ந்தது. பிற்காலத்தில் தான் தொடங்கிய “யங் இந்தியா’ என்ற பத்திரிகையின் முதல் பிரதியை சாஸ்திரியாரின் அபிப்ராயத்தை அறிய அனுப்பினார். அதில் 17 நுண்ணிய இலக்கணத் தவறுகளைச் சுட்டிக்காட்டினார். காந்திஜிக்கு சாஸ்திரியாரிடம் இருந்த மதிப்பு அதிகமாயிற்று.

மற்றொரு சமயம் தான் தொடங்க இருந்த சட்ட மறுப்பு போராட்டத்தைப் பற்றிக் கூறி சாஸ்திரியாரின் கருத்தைக் கேட்டார். இந்தத் திட்டத்தைக் கடுமையாக எதிர்த்த சாஸ்திரியார், நோக்கம் எவ்வளவு உயர்ந்ததாக இருந்தபோதிலும் சட்டத்தை மீறிப் போராடுவது எதிர்காலத்தில் ஆபத்தான விளைவுகளை உண்டாக்கும் என்று எச்சரித்தார். அந்த எச்சரிக்கை எவ்வளவு தீர்க்கதரிசனமுள்ளது என்பதை இப்பொழுது காண்கிறோமல்லவா!

சாஸ்திரியார் தன் சொற்பொழிவாற்றும் திறமையை மக்கள் நலனுக்காகப் பயன்படுத்தினார். உலக அரங்கில் இந்தியாவுக்கு சுய ஆட்சி அளிக்க வேண்டுமென்று முதன்முதலில் பேசியவர் அவரே.

உலகில் எங்கெங்கெல்லாம் தீமைகள் நடந்தனவோ அவைகளுக்குப் பொறுப்பான நாடுகளை சாடினார்.

பிரிட்டிஷ் காமன்வெல்த் நாடுகளுக்கு பிரயாணம் செய்து அங்கு லட்சக்கணக்கில் வாழும் இந்தியர்களுக்கு சமஉரிமை கிடைக்குமாறு செய்தார். இந்தியாவின் பெருமைகளை உலகம் அறியுமாறு செய்த முதல் இந்தியர் இவரே.

தென் ஆப்பிரிக்காவில் நிறவெறி பிடித்த முன்னாள் பிரதமர் ஸ்மட்ஸ் அங்கு லட்சக்கணக்காக வசிக்கும் தமிழர்களின் பிள்ளைகளுக்கு கல்லூரிப் படிப்புக்கு எவ்வித வசதியும் செய்து தரவில்லை. சாஸ்திரியார் அங்குள்ள நகரங்களுக்குச் சென்று தன்னுடைய சொற்பொழிவுத் திறமையால் பல ஆயிரம் ரூபாய் வசூலித்து ஒரு கல்லூரியை நிறுவினார். அக்கல்லூரி டர்பன் நகரில் “சாஸ்திரி காலேஜ்’ என்ற பெயரில் சிறந்த பணி செய்து வருகிறது.

பிரிட்டிஷ் அரசு அவர் பணியைப் பாராட்டி “ரைட் ஆனரபிள்’ என்று அழைக்கப்படும் மன்னரின் “பிரிவிகவுன்சில்’ என்ற ஆலோசனை சபையின் அங்கத்தினராக்கியது.

மேலும் அவருடைய இனிய குரலில் அழகான ஆங்கிலத்தில் மயங்கிய பிரிட்டிஷ் மக்கள் “வெள்ளி நாக்கு படைத்த சொற்பொழிவாளர்’ என்று அழைத்தனர். சாஸ்திரியாரின் சொற்பொழிவு தங்குதடையற்ற பிரவாகமாகவும், பொதுவாகவும், தெளிவாகவும், வெள்ளி மணிகளின் ஓசைபோலவும் இனிய குரலில் அமைந்திருக்கும்.

அவர் பேச்சை முதன்முறையாக ஜெனிவாவில் கேட்ட பால்ப்ளோர் பிரபு (Lord Balflour) “எங்கள் இங்கிலீஷ் பாஷை மேன்மை எவ்வளவு உயரம் செல்லும் என்பதைப் புரிந்து கொண்டேன்’ என்று கூறுகிறார்.

ஒரு தடவை சாஸ்திரியாரின் சொற்பொழிவைக் கேட்க அழைக்கப்பட்டார் பிரிட்டிஷ் முன்னாள் பிரதமர் மெக்டொனால்ட். ஐந்து நிமிஷமே இருக்க முடியும் என்று சொன்ன அவர் சாஸ்திரியாரின் பேச்சு முடியும் வரை இருந்தார் என்பது வியப்பளிக்கும் செய்தியாகும்.

சாஸ்திரியார் கடைசியாக வகித்தது அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவியாகும். அங்கு அப்பதவிக்குரிய சம்பளத்தைப் பெறாமல் இந்திய ஊழியர் சங்கத்தில் சேரும்போது தான் எடுத்துக்கொண்ட உறுதிமொழிக்கிணங்க ரூ. 500 மட்டுமே கௌரவப்படியாக பெற்றுக்கொண்டார். அந்தத் தொகையிலும் பாதியை ஏழை மாணவர்களின் கல்விக் கட்டணத்துக்காகவும் விடுதிச் செலவுக்காகவும் தன் தேவைகளைக் குறைத்துக் கொண்டு கொடுத்து விடுவார்.

கல்வி கற்பிப்பதில் விருப்பம் கொண்ட அவர் தன் தள்ளாத வயதில் ஆங்கில மொழிநடையைக் கற்பிப்பார். அந்த வகுப்புகளுக்கு முதல் வரிசையில் இடம் பிடிக்க மாணவர்களாகிய எங்களுடன் ஆசிரியர்களும் ஓடி வருவது வேடிக்கையாக இருக்கும்.

சாஸ்திரியாரின் கடைசித் தொண்டு மைலாப்பூரில் அவர் நிகழ்த்திய பிரசித்தி பெற்ற ராமாயண சொற்பொழிவுகளேயாகும். அவைகளும் அவருடைய பேச்சுகளும் எழுத்துகளும் அவர் நமக்கு விட்டுச் சென்ற பொக்கிஷங்களாகும்.

லண்டன் மாநகரில் உள்ள “கில்ட் ஹால்’ என்ற பிரசங்க மண்டபத்தில் நாடுகளின் தலைவர்கள் மட்டுமே பேசலாம். அங்கு பேசியவர்களின் பட்டியலில் சாஸ்திரியாரின் பெயர் முதலிடம் வகிக்கிறது. அத்துடன் அங்கு வைக்கப்பட்டிருக்கும் அவருடைய பெரிய உருவப்படத்தின் கீழ் காணப்படும் வாக்கியம் “ஆங்கிலேயருக்கு ஆங்கிலம் கற்பித்த இந்தியர்’.

(சாஸ்திரியாருக்கு நினைவாலயம் பல இடங்களில் இருப்பினும் அவர் பிறந்த வலங்கைமானில் இல்லை என்பது மிகுந்த வருத்தமளிக்கும் விஷயமாகும். மக்களின் விருப்பம் என்று நிறைவேறுமோ?)

Posted in AICC, Attorney, Biosketch, British, Commonwealth, Congress, Durban, Education, England, English, Faces, Gandhi, Gokale, Gokhale, Instructor, Law, Lawyer, Leaders, legal, Mahathma, Mahatma, Orator, parliament, Parliamentarian, people, Sanskrit, Sasthri, Sastri, Shasthri, Shastri, Speech, Srinivas, Srinivasa, Srinivasan, Sundaram, Teacher, Vice-chancellor | 1 Comment »

Teachers Day Special – Radhakrishnan to APJ Abdul Kalam

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 5, 2007

சர்வேப்பள்ளி முதல் ராமேசுவரம் வரை!

அ. கோவிந்தராஜு

(கட்டுரையாளர்: முதல்வர், டிஎன்பிஎல் மெட்ரிக் மேனிலைப்பள்ளி, கரூர்).

ஓர் ஆசிரியர் தம்மிடம் படிக்கும் மாணவர்களிடம் ஏற்படுத்தும் தாக்கம் அளப்பரியது. ஆசிரியரின் நடை, உடை, சிந்தனை, சொல், செயல் அத்தனையும் மாணவர்களிடத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் கூறுகளாகும். பார்த்துக் கற்றல் என்னும் உளவியல் நிகழ்வு மாணவப் பருவம் முழுவதும் நடைபெறுகிறது என்பதை ஆசிரியப் பெருமக்கள் உணர்ந்து, தம் அகவாழ்வையும் புறவாழ்வையும் சிறப்பாக வைத்துக்கொள்ள வேண்டியது இன்றியமையாத ஒன்றாகும்.

வீட்டுச்சூழல் எவ்வளவு மோசமாக இருந்தாலும், நன்மாதிரியாக பின்பற்றத்தக்க ஆசிரியர்கள் அமைந்துவிட்டால், சேற்றில் முளைத்த செந்தாமரைபோல மாணவர்கள் நல்ல குடிமக்களாக உருவாவார்கள்.

படித்து முடித்து, பணியில் சேர்ந்து, தம் தந்தையின் ஓராண்டு ஊதியத்தை ஒரே மாதத்தில் சம்பாதிக்கும் இளைஞர்கள், அறவாழ்வில் நாட்டமின்றி, மனம்போன போக்கில் வாழும் நிலைகெட்ட மாந்தர்களாக மாறுவதற்குக் காரணம் என்ன? படிக்கும் காலத்தில் பாடஅறிவைப் பெற்ற அளவுக்கு, மனிதநேயக் கல்வியைப் பெறவில்லை அல்லது ஆசிரியர்கள் தரவில்லை என்பதேயாகும்.

“வாடி மனம் மிக உழன்று, பிறர் வாடப் பல செயல்கள்’ செய்யும் இவர்கள், ஒருகாலத்தில் வகுப்பறையில் பாடம் கற்ற மாணவர்கள்தாம். நாற்றில் கோளாறா, நடப்பெற்ற சேற்றில் கோளாறா? கல்வி நிலையங்கள் எல்லாம் நாற்றங்கால்கள் ஆகும். அவற்றைப் பராமரிக்கும் பொறுப்பில் உள்ளவர்கள் ஆசிரியப் பெருமக்கள். நாற்றங்கால்கள் பழுதுபட்டால் ஒட்டுமொத்த சமுதாயமே பாழ்பட்டுவிடும். இதை நன்கு உணர்ந்தவர் டாக்டர். சர்வேப்பள்ளி ராதாகிருஷ்ணன். வாழ்வாங்கு வாழும் வழிமுறைகளை அவர் தம் மாணவர்களுக்குக் கற்பித்தார். வழிமுறைகள் சரியாக இருந்தால்தான் முடிவுகள் சரியாக இருக்கும் என்பதில் அசையாத நம்பிக்கை கொண்டவர் அவர்.

உண்ணும் உணவு, ஒருவனுடைய மனப்போக்கை மாற்றும் என்கின்றனர் உடற்கூறு வல்லுநர்கள். உடுக்கும் உடை ஒருவனுடைய மனப்போக்கை மாற்றும் என உளவியலார் கூறுகின்றனர். இவ்விரண்டிலும் டாக்டர். ராதாகிருஷ்ணன் மிகுந்த கவனம் செலுத்தினார். 1950-ஆம் ஆண்டு ரஷிய நாட்டின் தூதராக நியமிக்கப்பட்டார். சர்வாதிகாரி ஸ்டாலின் ஆண்ட காலம்; கடுமையான குளிர்நிறைந்த அந்நாட்டில் அவர் எப்போதும்போல எளிய, தூய்மையான உடையணிந்து வாழ்ந்தார். ஒருபோதும் மது, மாமிசம் போன்றவற்றைத் தொட்டதும் இல்லை. சொல்லப்போனால் அந்நாட்டு மரபுப்படி, விருந்துகளில் மது அருந்தியாக வேண்டும். ஆனால் அதுபோன்ற நிகழ்ச்சிகளில் அவர் பழச்சாறு மட்டும் அருந்துவார். எந்தவொரு தீயபழக்கமும் இல்லாத முன்மாதிரி பண்பாளர் அவர்.

புனிதமான ஆசிரியப் பணிக்குத் தம் தீயநடத்தை மூலம் களங்கம் சேர்க்கும் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள். மற்ற துறைகளில் ஒரு தவறு நடந்தால் அது அந்தத் துறையை மட்டுமே பாதிக்கும்; ஆனால் கல்வித்துறையில் நடக்கும் தவறு ஒட்டுமொத்த சமுதாயத்தையே பாதிக்கும். மற்ற துறைகளின் செழுமையும் செயல்பாடும் கல்வித்துறையின் அறநெறிகளைப் பொருத்தே அமையும் என்பார் கல்வி நிபுணர் டர்க்ஹிம். ஆசிரியர் தினத்தையொட்டி, இவற்றையெல்லாம் ஆசிரியர் சமுதாயம் எண்ணிப் பார்க்க வேண்டும்.

டாக்டர். ராதாகிருஷ்ணன் ஆசிரியப் பணியை முதன்மைப் பணியாகக் கொண்டார். தூதராக, குடியரசுத் தலைவராகப் பணியாற்றிய அவர், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திலும் பணியாற்றியிருக்கிறார். இன்று, ஆசிரியர்களில் சிலர் ஆசிரியப் பணியைத் துணைத்தொழிலாகவும், விவசாயம், வணிகம் போன்றவற்றை முதன்மைத் தொழிலாகவும் கொண்டுள்ளனர். இவர்கள், சக்தி எல்லாம் தீர்ந்துபோய், சக்கையாக வகுப்பில் நுழைந்தால் எப்படி மாணவர் மனம் கவரும் வகையில் பாடம் நடத்த முடியும்? இந்த நிலை அடியோடு மாறும் நாள் எந்நாளோ?

1964-ல் அரசால் நியமிக்கப்பட்ட கோத்தாரி குழு, ஒழுக்கமும் பண்பாடும் உடையவர்களை மட்டுமே ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தியது. இது எவ்வளவு இன்றியமையாதது என்பது ஆய்வு மாணவிகளின் சோகக்கதையைக் கேட்டால் புரியும். ஆய்வு ஏட்டில் சில வழிகாட்டிகளின் கையெழுத்தைப் பெறுவதில் சிரமங்கள் பல உள்ளன.

இவர்களை ஆசிரியர்கள் என்று எப்படி ஒப்புக்கொள்ள முடியும்? தம்மிடம் பயிலும் குழந்தைகளுக்கு தாம் இரண்டாவது பெற்றோர் என்பதை எப்போதும் உணர்ந்து ஆசிரியர்கள் செயல்பட வேண்டும்.

நேர்மையாக உழைக்கும் ஆசிரியர்களுக்கு அரசும் சமுதாயமும் உரிய அங்கீகாரத்தை எப்போதும் தரும்; தரவும் வேண்டும். சர்வேப்பள்ளி ராதாகிருஷ்ணன் என்ற ஆசிரியரையும், ராமேசுவரம் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் என்ற ஆசிரியரையும் குடியரசுத் தலைவர்களாக அமர வைத்து அழகு பார்த்ததே நம் நாடு. இது சமுதாயம் தந்த அங்கீகாரம்தானே?

ஒரு குக்கிராமத்து ஆசிரியருக்குக் கிடைத்த அங்கீகாரத்தைப் பற்றி அறிந்தால் நீங்கள் வியப்படைவீர்கள். ஈரோடு மாவட்டத்தில் மலையப்பாளையம் என்னும் சிற்றூரில் ஆசிரியப் பணியை அறப்பணியாகச் செய்து ஓய்வு பெற்ற ஓர் அரசுப் பள்ளித் தலைமையாசிரியருக்கு (சொ. அய்யாமுத்து) அந்த ஊர் மக்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து தம் வருவாயில் ஒரு பகுதியை அளித்து, 2400 சதுர அடியில் ஒரு நிலம் வாங்கி நன்றிக் கடனாக வழங்கினார்கள்.

எனவே, பண்டைய குருகுலத்தில் தொடங்கிய ஆசிரியப் பாரம்பரியம் – “சர்வேப்பள்ளி முதல் ராமேசுவரம்’ வரை பேணிப் போற்றப்பட்ட அந்த ஆசிரியப் பாரம்பரியம் – தொடர்ந்து பராமரிக்கப்பட வேண்டும். வணங்கத்தக்க நம் ஆசிரியப் பெருமக்கள் இனி இந்த உணர்வோடு, “இன்று புதிதாய்ப் பிறந்தோம்’ என்னும் புத்துணர்வோடு நாளை வகுப்பிற்குள் காலடி எடுத்து வைக்க வேண்டும். செய்வார்களா?

(இன்று ஆசிரியர் தினம்)

Posted in APJ, class, Classroom, Instructor, Kalam, President, Presidents, Professor, Radha, Radhakrishnan, Student, Teach, Teacher | Leave a Comment »

How to improve the Quality of output from Educational Instituitions

Posted by Snapjudge மேல் ஜூன் 4, 2007

தரமென்னும் தாரக மந்திரம்!

இரா. வெங்கடேஷ்

ஒவ்வொரு துறையிலும் நாள்தோறும் புதிய சிந்தனைகளும் புதிய வெளிப்பாடுகளும் உருவாகிக்கொண்டே இருக்கின்றன.

இதை அறிவுசார் சமூகம் உணர்ந்து ஏற்றுக்கொள்வதற்கு அடிப்படை ஆதாரம் கல்வி நிறுவனங்களின் கல்வித்தரம் மதிப்புற்று இருப்பதுதான்.

நாட்டின் எதிர்காலம் உயர்கல்வி கற்றவர் கையில்தான் உள்ளது என்ற நிலைமாறிவிட்டது. உயர்கல்வியின் எதிர்காலம் உயர்கல்வி நிறுவனங்களின் கையில்தான் உள்ளது என்ற சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பெருகிவரும் கல்வி நிறுவனங்கள் தரமான உயர் கல்வியை வழங்குகின்றனவா? அக் கல்வி சமூகப் பயன்பாட்டைச் சார்ந்துள்ளதா போன்ற வினாக்கள் எழுகின்றன.

லட்சியத்தை அடைவதற்கு வழிகாட்டியாகத் திகழும் உயர்கல்விக்கும், அக் கல்வியை வழங்கும் நிறுவனத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.

2005 ஆம் ஆண்டு புள்ளிவிவரப்படி

  • 357 பல்கலைக்கழகங்கள்,
  • 17,625 கல்லூரிகள்,
  • 4.72 லட்சம் ஆசிரியர்கள்,
  • சுமார் 67 லட்சம் மாணவர்கள்

என்று இந்தியாவில் உயர்கல்விச் சேவை பல துறைகளில் தொடர்ந்தாலும்

  • உயர்கல்வி பெறுவோர் வெறும் 7 சதவீதம் பேர் மட்டுமே.

இதற்குக் காரணம் உயர்கல்வியின் தரமின்மை குறைபாடா? அல்லது உயர்கல்வியின் மீது நாம் உரிய கவனம் செலுத்தவில்லையா?
இன்று அறிவு வளர்ச்சிக்குத்தான் உயர்கல்வி நிறுவனங்கள் என்ற நிலை மாறி அதிக வருவாய் ஈட்டத்தான் என்ற நோக்கில் செயல்பட்டு வருகின்றன. தரமான கல்வியை வழங்க வேண்டும் என்ற சமூக உணர்வு குன்றிய நிலையில்தான் பெரும்பாலும் உள்ளன.

கடந்த பத்து ஆண்டுகளில் மத்திய, மாநில அரசுகள் கல்விக்கு ஒதுக்கிவரும் நிதியைக் கணக்கிட்டுப் பார்த்தால் ஆண்டுதோறும் உயர்ந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் கல்வியின் தரம் உயர்ந்ததா என்பது கேள்விக்குறியாகத்தான் உள்ளது.

உதாரணமாக, கடந்த ஆண்டு தமிழக அரசு உயர்கல்விக்கு ஒதுக்கிய தொகை ரூ. 892 கோடி. இந்த ஆண்டு ரூ. 1,052 கோடி. ஏறத்தாழ ரூ. 160 கோடி கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது.

பொதுவாக கல்வி நிறுவனங்கள் குறைந்தபட்சம் மாணவர்களின் கல்வியறிவை சர்வதேசத் தரத்தில் உயர்த்துவது, குறைந்த செலவில் தரமான உயர்கல்வியை அளிப்பது, வேலைவாய்ப்பு சார்ந்த பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் கல்வியை வழங்குவது, மாணவர்களை சுயசார்புடையவர்களாக உருவாக்குவது போன்ற அம்சங்களை நிறைவு செய்ய வேண்டும்.

ஆனால் இன்றைய கல்வி நிறுவனங்கள் மதிப்பெண்களை அளவுகோலாகக் கொண்ட மனப்பாடக் கல்வியை வழங்குகின்றனவே தவிர எதிர்காலச் சமுதாயத்தினரின் சுயசிந்தனை வளர்ச்சிக்கும் சர்வதேச அளவில் போட்டியிடுவதற்கும் வழிவகை செய்யாமல் தரம் குறைந்திருப்பது வருத்தமளிக்கிறது.

தரமான கல்வி வழங்குவது என்பது குழப்பம் நிறைந்ததாக உள்ளது. காரணம், நம் நாட்டில் பாடத்திட்டம் – நடைமுறை வாழ்க்கைச் சூழல் ஆகியவற்றிற்கிடையே பெரும் இடைவெளி உள்ளது. மாணவர்களின் உள்ளுணர்வை வெளிப்படுத்த வாய்ப்பில்லை.

கல்வி என்பது வெறுமனே பொருளாதார முன்னேற்றத்திற்கு மட்டும் உதவும் காரணி அல்ல. வருங்காலச் சமுதாயத்தை வார்த்தெடுக்கும் ஒரு பண்பாட்டு மூலதனம் என்ற அளவில் உயர்கல்வியின் தரத்தை உயர்த்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது.

அரசின் தேவையற்ற குறுக்கீடும் அரசியல்வாதிகளின் தலையீடும் குறைக்கப்பட வேண்டும். உயர்கல்வி மேம்பாட்டிற்காக ஒதுக்கப்படும் நிதி முறையாகப் பயன்படுத்தப்பட வேண்டும். நிகழும் மாற்றங்களுக்கேற்ப பாடத்திட்டங்கள் வடிவமைக்கப்பட வேண்டும். நடைமுறை வாழ்க்கைக்கும் – பாடத்திட்டங்களுக்கும் இடையிலான இடைவெளி அறவே நீக்கப்பட வேண்டும்.

திறமையான, அர்ப்பணிப்புடன் பணியாற்றும் ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும். கல்விக் கட்டண விகிதம் ஒழுங்குபடுத்தப்பட வேண்டும்.

உயர்கல்வியில் முறையான, தெளிவான கல்விக் கொள்கை வகுக்கப்பட வேண்டும். கல்வித் தரம் தொடர்பான சுய மதிப்பீட்டு அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதும், அதனைச் சோதனைக்குட்படுத்துவதும் கட்டாயமாக்கப்பட வேண்டும்.

தரமான உயர்கல்வி மட்டுமே நம்மைச் சிந்திக்கவும், திறமையான வகையில் செயல்பட வைக்கவும் முடியும் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தரத்தை தாரக மந்திரமாகக் கொண்டு அனைத்து கல்வி நிறுவனங்களும் செயல்பட வேண்டும்.

உயர்கல்வித் துறையில் எண்ணற்ற சாதனைகள் படைக்கப்பட்டிருக்கின்றன. தகவல் தொழில்நுட்பக் கல்வியில் இந்திய இளைஞர்களின் திறமை உலக நாடுகளை வழிநடத்துகிறது. ஆனால் உயர்கல்வி தரத்தில் ஏற்பட்டுள்ள தேக்கநிலை, நீடித்துவரும் குழப்பங்கள் இவற்றையெல்லாம் பின்னுக்குத் தள்ளிவிடும் என அஞ்சப்படுகிறது.

எதிர்காலத்தில் உயர்கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை மேலும் உயரக்கூடும். அச்சூழலில் கல்வி நிறுவனங்களை நிறுவுவதும், மாணவர்கள் எண்ணிக்கையை உயர்த்துவதன் மூலம் முதலீடு செய்த பணத்தைத் திரும்ப எடுப்பதும் மட்டுமே தங்கள் தலையாய கடமை என்ற நிலையில் செயல்படக் கூடாது.

உயர்கல்வியின் தரம், மாணவர்களின் எதிர்காலம், சமூக முன்னேற்றம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டால் இந்தியாவில் உயர்கல்வி உண்மையான பயன்பாட்டுக் கல்வியாக விளங்க முடியும்.

உயர்கல்வித்தரமும், மாணவர்களின் திறனும், செயலூக்கமும் பன்னாட்டு அளவில் ஒரு சவாலாக இருக்க வேண்டுமெனில் உயர்கல்வி நிறுவனங்கள் தரமென்னும் விதையை தகுதியான நிலத்தில் விதைத்தாக வேண்டுமே தவிர களர்நிலத்தில் அல்ல!

Posted in Admissions, Analysis, Backgrounder, College, Divide, Education, Expensive, Impact, Instituition, Instructor, Needy, Op-Ed, Opinion, Poor, Professor, Rich, School, solutions, Student, Teacher, University, Wealthy | Leave a Comment »

It is either MBBS or BE – Decide whether to be a Doctor or Engineer – Ponmudi

Posted by Snapjudge மேல் மே 22, 2007

எம்.பி.பி.எஸ். அல்லது பி.இ.: பொன்முடி

சென்னை, மே 23: மருத்துவ சீட்டில் இடம் பெற்ற பிறகும் பி.இ. கவுன்சலிங்கில் பங்கேற்கும் சிலர் அந்த இடத்தில் சேராமல் விடுகிறார்கள். இனி அவ்வாறு செய்ய இயலாது என்று உயர் கல்வி அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

நிருபர்களிடம் அவர் செவ்வாய்க்கிழமை பேசியதாவது:

சில மாணவர்கள் மருத்துவ கவுன்சலிங்கில் இடம் கிடைத்த பிறகும் பொறியியல் படிப்புக்கான கவுன்சலிங்கிலும் பங்கேற்று, பின்னர் அதில் சேராமல் கைவிடுகிறார்கள். இதனால், அவர்களுக்கு ஒதுக்கிய இடங்கள் காலியாகிவிடுகின்றன.

கடந்த ஆண்டு ஒரு சில மாணவர்கள் அவ்வாறு செய்ததாக அரசின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டது.

இதைத் தடுக்கும் வகையில் எம்.பி.பி.எஸ். படிப்பில் இடம் கிடைத்த மாணவர்கள் பி.இ., கவுன்சலிங்கில் பங்கேற்றால், “பி.இ. சீட் கிடைத்த பின் எம்.பி.பி.எஸ். இடத்தை ஒப்படைப்பேன்’ என்று உறுதிமொழி எழுதித் தர வேண்டும்.

இதன் மூலம் அவர்கள் ஏதாவது ஒரு இடத்தில் மட்டுமே சேர இயலும். மேலும், எம்.பி.பி.எஸ். சீட் காலியாகாமல் பின்னர் நடைபெறும் கவுன்சலிங்கில் நிரம்பிவிடும்.

கல்லூரி ஆசிரியர் நியமனம்: கல்லூரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதில் சில நடைமுறைகள் உருவாக்கப்படுகின்றன. அவர்களை நிரந்தரப் பணியில் அமர்த்த ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்வு நடத்தும்போது சில நடைமுறைகள் பின்பற்றப்படும்.

கல்லூரிகளில் தற்போது கெüரவ ஆசிரியர்களாகப் பணியாற்றி வருவோரில்

  • 7 ஆண்டுகள் பணியாற்றுபவர்களுக்கு 15 மதிப்பெண் தரப்படும்.
  • பிஎச்.டி. முடித்தவர்களுக்கு 9 மதிப்பெண்;
  • எம்.ஃபில். முடித்து ஆசிரியர் பணித் தேர்வுகளை (ஸ்லெட், நெட்) எழுதி வெற்றி பெற்றிருந்தால் 6 மதிப்பெண்;
  • முதுநிலை மட்டும் முடித்து, ஸ்லெட், நெட் தேர்வுகளில் வெற்றிபெற்றிருந்தால் 5 மதிப்பெண்;
  • புத்தகங்கள், ஆய்வுகளைச் சமர்ப்பித்திருந்தால், 5 மதிப்பெண்;
  • நேர்காணலுக்கு 10 மதிப்பெண் தரப்படும்.
  • மொத்தம் 2,062 பணியிடங்களுக்கு ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் என்றார் அமைச்சர் பொன்முடி.

ஜூலை 2 முதல் எம்.பி.பி.எஸ். கவுன்சலிங்

மருத்துவப் படிப்புகளுக்கான கவுன்சலிங் வரும் ஜூலை 2-ம் தேதி தொடங்கி, ஜூலை 8-ம் தேதி முடிவடைகிறது. அதன் பிறகே பொறியியல் படிப்புக்கான கவுன்சலிங் ஜூலை 9-ம் தேதி தொடங்கி, 15-ம் தேதி நிறைவடைகிறது.

இந்த இரு கவுன்சலிங் மூலம் மாணவர் சேர்க்கை பூர்த்தியான பிறகு தனியார் சுயநிதிக் கல்லூரிகளில் பி.இ., பி.டெக்., படிப்புகளுக்கான கவுன்சலிங் நடைபெறும். 25 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த நுழைவுத் தேர்வு நடத்தப்படாமலேயே மாணவர்கள் சேர்க்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.

——————————————————————————————-

சுமையாகலாமா கவுன்சலிங்?

பொறியியல் படிப்புகளில் மாணவர்களைச் சேர்க்க ஒற்றைச் சாளர முறையில் கலந்தாய்வு (கவுன்சலிங்) சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மட்டுமே நடைபெறும். எனினும், பொதுமக்கள் வலியுறுத்தினால், வெவ்வேறு மையங்களில் கலந்தாய்வை நடத்தவும் அரசு தயாராக இருக்கிறது என்று திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டார் உயர்கல்வி அமைச்சர் பொன்முடி.

சில பொறியியல் கல்லூரிகள் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களை லட்சக்கணக்கான ரூபாய்க்கு “விற்பனை’ செய்வது குறித்து யாராவது புகார் அளித்தால் நடவடிக்கை எடுப்போம் என்றும் கூறியுள்ளார். சில சமூகப் பிரச்சினைகளில் மக்கள்தான் புகார் தர வேண்டும், மக்கள்தான் வலியுறுத்த வேண்டும் என்று மக்களின் எண்ண ஓட்டத்தைப் புரிந்துகொள்ள அரசு காத்திருப்பதில்லை.

நுழைவுத் தேர்வு முறையை ரத்து செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் யாரும் தர்ணா நடத்தவில்லை. ஊர்வலம் போகவில்லை. கல்வியாளர்கள், அரசியல் தலைவர்கள் பல முறை வலியுறுத்தியதை ஏற்றுத்தானே அரசு தீவிரமாகப் பரிசீலித்து இந்த முடிவை எடுத்தது?

அதைப் போல், கலந்தாய்வு முறை குறித்தும், நன்கொடை குறித்தும் பத்திரிகைகள், அரசியல் பிரமுகர்கள் மூலம் வரும் புகார்களையே அடிப்படையாகக் கொண்டு அரசு நடவடிக்கை எடுக்கலாம்.

நுழைவுத் தேர்வு முறையை ரத்து செய்தபோது, கிராமப்புற மாணவர்களின் நலனுக்காக இந்த முடிவை எடுத்துள்ளதாக அரசு அறிவித்தது. அதை உறுதி செய்யும் வகையில், 65 ஆயிரம் பொறியியல் இடங்களுக்கு இதுவரை 87 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இது சில கேள்விகளை இப்போது எழுப்பியுள்ளது.

முன்பெல்லாம் 65 ஆயிரம் பி.இ., பி.டெக். இடங்களில் கலந்தாய்வு முடிந்த பின் கிட்டத்தட்ட 6 ஆயிரம் இடங்கள் காலியாகவே இருக்கும். இந்த முறை 87 ஆயிரம் பேர் 65 ஆயிரம் இடங்களுக்கு விண்ணப்பிப்பதால், கடும் போட்டி நிலவும். அதை அரசு எப்படிச் சமாளிக்கப் போகிறது?

ஒரே அண்ணா பல்கலைக்கழகம் இருந்த காலத்தில் நான்கு மையங்களில் கவுன்சலிங் நடைபெற்றது. தற்போது நான்கு அண்ணா பல்கலைக்கழகங்கள் இருக்கும்போது, ஒரே இடத்தில் மட்டும் கவுன்சலிங் நடத்துவதால் குழப்பம் நேராது என்று என்ன நிச்சயம்?

கிராமப்புற மாணவர்களுக்காக என்று கூறும் அரசு, விண்ணப்பப் படிவங்களின் விலையை ரூ.500 என்று நிர்ணயித்தது ஏன்? கலந்தாய்வுக் கட்டணத்தையும் ரூ.100 மட்டுமே குறைத்துள்ளது.

கலந்தாய்வு சென்னையில் மட்டுமே நடத்தப்படுவதால், தொலைதூரத்திலிருந்து வரும் மாணவர்களுக்கும் அவர்களுடன் வரும் பெற்றோர் அல்லது துணைக்கு வருபவரின் பஸ் கட்டணம் பாதியாகக் குறைக்கப்படும் என்று அரசு கூறியுள்ளது. அது மட்டும் பலன் தருமா, சென்னையில் தங்குவதற்கு சுமார் ரூ.2000 வரை செலவு ஆகும். இவையெல்லாம் அவர்களுக்கு நிதிச் சுமை இல்லையா?

ஏராளமானோர் பி.இ. இடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கு கம்ப்யூட்டர் சார்ந்த படிப்புகளில் மக்களுக்கு அதிகரித்து வரும் நாட்டமும் அதன் வேலைவாய்ப்புமே காரணம் என்பது தெரியும். ஆனால், ஆண்டுதோறும் பலரும் விழையாமல் இருக்கும் சிவில், மெக்கானிக்கல் படிப்புகளால் கிடைக்கும் வேலைவாய்ப்புகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த கல்வித் துறை என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது?

சிலசமயம் மருத்துவப் படிப்புகளில் இடம் கிடைத்த பிறகு, பொறியியல் படிப்புகளுக்கான கவுன்சலிங்கிலும் சில மாணவர்கள் பங்கேற்கிறார்கள். அதில் இடம் கிடைத்த பிறகு சேராமல், எம்.பி.பி.எஸ். படிப்பையே தக்க வைத்துக் கொள்கிறார்கள். இதனால், அவர்களுக்கு ஒதுக்கப்படும் பி.இ. சீட் காலியாகவே போய்விடுகிறது. இதைத் தவிர்க்க, எம்.பி.பி.எஸ். கிடைத்த மாணவர்கள் “பி.இ. கவுன்சலிங்கில் பங்கேற்றால், எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர மாட்டேன்’ என்று எழுத்து மூலம் உறுதி அளிக்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்படும் என்று அமைச்சர் அறிவித்துள்ளார். அது வரவேற்கத் தக்கதே.

கடந்த ஆண்டுகளைப் போல் பொறியியல் படிப்பில் மாணவர் சேர்க்கையில் வழக்கு, விவகாரம் என்று இதுவரை அதிக குழப்பம் இல்லை என்பது உண்மை. குழப்பம் மட்டுமன்றி, சுமையையும் தவிர்ப்பது அரசின் கடமை.

பொதுமக்களின் கூக்குரலுக்கும், வலியுறுத்தலுக்கும் காத்திராமல் கவுன்சலிங்கை குறைந்தது நான்கு மையங்களிலாவது நடத்த அரசே முன் வரவேண்டும். அதுதான் நல்லாட்சிக்கு அழகு!

————————————————————————————————-

அரசின் அலட்சியத்தால் 300 எம்பிபிஎஸ் இடங்கள் இழப்பு: ஜெயலலிதா குற்றச்சாட்டு

சென்னை, ஜூலை 6: தமிழகத்தில் 3 அரசு மருத்துவக் கல்லூரிகளில் இந்த ஆண்டு மாணவர்களைச் சேர்ப்பதற்கு இந்திய மருத்துவ கவுன்சில் அனுமதி வழங்க மறுத்துள்ளது. இதனால் 300 மருத்துவ இடங்களை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

“”மருத்துவர் ஆக வேண்டும் என மாணவர் சமுதாயம் தங்களின் நெடுநாளைய கனவுகளோடு இருக்கும் நிலையில் இத்தகைய அறிவிப்பு மாணவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

பெற்றோர் தங்களது பிள்ளைகளை மருத்துவராக உருவாக்கும் முயற்சிக்குத் திமுக அரசின் தவறான கொள்கை மற்றும் தெளிவற்ற தொலை நோக்குப் பார்வையே முட்டுக்கட்டை போட்டிருக்கிறது.

தமிழகத்தில் மாணவர்கள் அதிக அளவில் மருத்துவப் படிப்புப் படித்து சிறந்த மருத்துவர்களாகத் திகழ்ந்து மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் 2001 – 06 ஆண்டைய எனது ஆட்சிக் காலத்தில் தேனி, கன்னியாகுமரி மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களில் அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்குவதற்கு தேவையான நிதி ஒதுக்கப்பட்டது. அதற்கான பணிகளும் முடிக்கப்பட்டு மருத்துவக் கல்லூரிகள் தொடக்கி வைக்கப்பட்டன.

தற்போது திமுக அரசின் அலட்சியப் போக்கால் இந்த மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களைச் சேர்ப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இது மிகுந்த வேதனைக்குரிய விஷயம்.

என்னுடைய ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்ட மருத்துவக் கல்லூரிகள் அனைத்திலும் போதிய அடிப்படை வசதிகள், குறிப்பாக பேராசிரியர்கள், கட்டடங்கள் ஏற்படுத்தப்பட்டன. அதனை இந்திய மருத்துவ கவுன்சில் ஆய்வு செய்து

  • 2004-ல் கன்னியாகுமரி மருத்துவக் கல்லூரிக்கும்
  • 2005-ல் வேலூர் மருத்துவக் கல்லூரிக்கும்
  • 2006-ல் உச்ச நீதிமன்ற ஆணை மூலம் தேனி மருத்துவக் கல்லூரிக்கும் அனுமதி வழங்கப்பட்டன.

இந்த 3 மருத்துவக் கல்லூரிகள் எனது ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்டு கலந்தாய்வு முறையில் மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுப் பணியாற்றி வருகிறார்கள். அவ்வாறு பணிபுரியும் மருத்துவர்களுக்கு குறிப்பிட்ட காலம் வரை வேறு எங்கும் மாறுதல் அளிக்காமல் தொடர்ந்து அதே மருத்துவக் கல்லூரியிலேயே பணியாற்றும் வகையில் உரிய நடவடிக்கைகளை எடுத்திருந்தேன்.

ஆனால் திமுக ஆட்சியில் இந்த மருத்துவக் கல்லூரிகளில் பணிபுரியும் மருத்துவர்களிடம் கையூட்டுப் பெற்றுக்கொண்டு அவர்களுக்கு மாறுதல் அளிக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்த மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை ரத்து செய்யப்பட்டிருப்பதற்கு போதிய மருத்துவர்கள் இல்லாததுதான் முக்கிய காரணம் என்று இந்திய மருத்துவ கவுன்சில் தனது ஆய்வு அறிக்கையில் மிகத் தெளிவாகக் கூறியுள்ளது. எனவே திமுக அரசின் மெத்தனப் போக்கால் தமிழ்நாட்டில் இந்த ஆண்டு 300 மருத்துவர்கள் உருவாவதைத் தடுத்து நிறுத்தி அவர்களுடைய வாழ்க்கையில் பேரிழப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த 300 மருத்துவ இடங்களை இந்த ஆண்டே மீண்டும் பெறுவதற்கு அரசு உரிய நடவடிக்கைகளைப் போர்க்கால அடிப்படையில் எடுக்க வேண்டும். இல்லையெனில் இதற்கான முழுப் பொறுப்பையும் முதல்வர் கருணாநிதி ஏற்க வேண்டும்.”

Posted in Admissions, ADMK, AIADMK, Analysis, Anna, BE, Bribe, Bribery, BTech, Choice, City, College, Computer, Corruption, Counseling, Counselling, Dean, Decision, Doctor, DOTE, Education, Engg, Engineer, Engineering, Govt, Information, InfoTech, Instructor, IT, Jayalalitha, Jayalalithaa, Jeyalalitha, JJ, Kanniakumari, Kanniyakumari, Karunanidhi, Karunanidhy, Karunanidi, Karunanithi, kickbacks, MBBS, medical, Minister, MS, Needy, Op-Ed, Ponmudi, Poor, Professor, REC, Rich, Rural, School, seat, solutions, Students, Suburban, Teacher, Tech, Technology, Theni, University, Vellore, Velore, Village, Wealth, Wealthy | Leave a Comment »

‘There are no plans in the budget to solve the woes of the Farmers’ – Gurumurthy

Posted by Snapjudge மேல் மார்ச் 8, 2007

விவசாயிகளின் நெருக்கடியைத் தீர்க்க பட்ஜெட்டில் திட்டம் இல்லை: குருமூர்த்தி கோவை, மார்ச் 8: விலைவாசி உயர்வுக்கும் வேளாண் துறை சந்தித்து வரும் நெருக்கடிக்களுக்கும் தீர்வு காணும் திட்டம் எதுவும் மத்திய பட்ஜெட்டில் இடம்பெறவில்லை என்று கட்டுரையாளர் எஸ். குருமூர்த்தி கூறினார்.

இந்திய தொழில் வர்த்தக சபை சார்பில் கோவையில் புதன்கிழமை நடைபெற்ற மத்திய பட்ஜெட் குறித்த கூட்டத்தில் அவர் பேசியது:

இந்த பட்ஜெட்டில் தெளிவான அரசியல் பார்வை இல்லை. வேளாண் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் தந்துள்ளதுபோல நிதியமைச்சர் கூறியுள்ளார். வேளாண் விரிவாக்கத் திட்டங்களுக்குப் புத்துயிர் அளிப்பது போன்ற 7 அம்சங்கள் வெறும் அறிவிப்புகளாக மட்டுமே இடம் பெற்றுள்ளன.

கடன் சுமையைத் தாங்க முடியாமல் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் பிரச்சினை, வேளாண் துறையில் குறைந்து கொண்டே போகும் மூலதன உருவாக்க விகிதம், வேளாண் துறையில் அரசின் முதலீடு குறைந்து கொண்டே செல்லும் போக்கு, உணவு தானிய உற்பத்தியில் ஏற்பட்டுள்ள சரிவு ஆகியவை குறித்து பட்ஜெட்டில் முழுமையாக விளக்கவே இல்லை.

நாட்டின் பொருளாதாரத்துக்கு இன்று ஏற்பட்டுள்ள நெருக்கடியைப் பார்க்காமல் வெறும் ஆண்டுச் சடங்காக பட்ஜெட்டை மாற்றிவிட்டார்.

நீண்ட காலமாக புறக்கணிக்கப்பட்டு வந்த கிராமப்புற வளர்ச்சிக்கான திட்டம் எதுவும் அறிவிக்கப்படவில்லை. விலைவாசி உயர்வுக்கு நிதியமைச்சர் கூறும் காரணம் ஏற்கக் கூடியதாக இல்லை.

கிராமப்புற சமூக பாதுகாப்புத் திட்டமும் மழைநீர் சேகரிப்புத் திட்டமும் வரவேற்கத்தக்கவை. அதிலும் மழைநீர் சேகரிப்புத் திட்டம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொண்டுவந்த திட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

பட்ஜெட்டில் தெளிவான திட்டம் எதுவும் இல்லை. குழப்பமே அதிகம் காணப்படுகிறது.

நாட்டில் ரியல் எஸ்டேட் தொழிலில் மட்டும் கடந்த 2 ஆண்டுகளில் ரூ.4 லட்சம் கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. மாதந்தோறும் 10 சதவீதம் உயர்வு காணப்படுகிறது என்றார் குருமூர்த்தி.

உலகமயமாதல் பொருளாதாரப் பிரச்சினை மட்டுமல்ல: பத்திரிகையாளர் குருமூர்த்தி பேச்சு

சென்னை, மார்ச் 9: உலகமயமாதல் என்பது பொருளாதாரம் சார்ந்தது மட்டுமல்ல. பன்முகத் தன்மை கொண்டது என்று பத்திரிகையாளரும், ஆடிட்டருமான எஸ்.குருமூர்த்தி குறிப்பிட்டார்.

துரைப்பாக்கம் எம்.என்.எம். ஜெயின் பொறியியல் கல்லூரியில் “உலகமயமாதலும் எதிர்கொள்ள வேண்டிய உத்திகளும்’ என்ற தலைப்பில் தேசிய கருத்தரங்கு வியாழக்கிழமை நடைபெற்றது. அதில் குருமூர்த்தி ஆற்றிய சிறப்புரை:

உலகமயமாதல் பிரச்சினைக்கு உளவியல், பண்பாடு, அரசியல் எனப் பல பரிமாணங்கள் உண்டு. இப்பிரச்சினையை நிபுணர்களோ, வணிகர்களோ சரியாகப் புரிந்து கொள்ளவில்லை.

நம் நாட்டில் ஏற்பட்ட சில பொருளாதார மாற்றங்களுக்கு உலகமயமாதல்தான் காரணம் என்றும் சித்திரிக்கப்படுகிறது. அது சரியல்ல. உண்மையில் தொழில் நிறுவனங்களின் மீது அரசு கொடுத்த அழுத்தம் தளர்த்தப்பட்டதே காரணம்.

மேலை நாடுகளில் வலிமையான அரசு உண்டு. வலிமையற்ற சமுதாயம் உள்ளது. இந்தியாவில் வலிமையற்ற அரசு இருக்கிறது. ஆனால், நம் சமுதாயம் வலிமையானது.

இந்தியாவில் பண்பாட்டின் அடிப்படையிலான சமுதாயமே உலகமயமாதலை எதிர்கொண்டு வெற்றி பெறப் போகிறது.

சில ஆண்டுகளுக்கு முன்பு வரையில் வெளிநாடுகளில், குறிப்பாக அமெரிக்காவில் தங்கிய இந்தியர்கள் இந்தியாவைப் பழித்துக் கொண்டிருந்தனர்.

போக்ரனில் அணு ஆயுத சோதனையை இந்தியா நடத்தியது உலக நாடுகளை உலுக்கிவிட்டது. அதன் விளைவாக ஜப்பான் உள்பட அனைத்து நாடுகளும் இந்தியாவிலிருந்து பொருளாதார ரீதியில் மிரட்டின.

அதுவரை இந்தியாவைப் பழித்துக் கொண்டிருந்த வெளிநாடு வாழ் இந்தியர்களிடமிருந்து மொத்தம் 58 லட்சம் டாலர் அளவுக்கு முதலீடு வந்து குவிந்தது.

ஒவ்வொரு நாட்டுக்கும் மென் சக்தி என்றும் வன் சக்தி என்றும் உண்டு. நாட்டின் வளமை, கல்வியறிவு, அறிவியல் வளர்ச்சி ஆகியவை மென் சக்தி. ஆனால், ராணுவ வலிமை, படைபலம் என்பது வன் சக்தி.

மென் சக்தி அபரிதமாக உள்ள ஜப்பானுக்கு உலக அளவில் போதிய மரியாதை கிடைக்காததற்கு வன்சக்தி இல்லாததே காரணம் என்றார் குருமூர்த்தி.

கருத்தரங்கைத் தொடங்கி வைத்த இந்தோ ஜப்பான் தொழில் வர்த்தக சபைத் தலைவர்என்.கிருஷ்ணசாமி: உலகமயமாதல் என்பது நம் நாட்டுக்குப் புதிதல்ல. பல ஆயிரம் ஆண்டுகளாகவே “வசுதேவ குடும்பகம்’ என்ற கோட்பாடு இதைத்தான் வலியுறுத்துகிறது.

உலகமயமாதலை எதிர்கொள்ள கல்வி முறையில் மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும். மாணவர்களுக்குக் கதவுகளைத் திறந்துவிட வேண்டும்.

உலகமயமாதலின் பாதிப்பைத் தவிர்க்க வேண்டுமானால், நாடுகள் நீங்கி, நாம் அனைவரும் உலகப் பிரஜைகளாக வேண்டும் என்றார்.

கருத்தரங்கை ஒட்டி, கல்லூரியின் மேலாண்மையியல் ஆய்வுத் துறை தயாரித்த மலரை கல்லூரிச் செயலர் ஹரிஷ் எல்.மேத்தா வெளியிட்டார். முன்னாள் டி.ஜி.பி. ஸ்ரீபால் பங்கேற்றார்.

கல்லூரி முதல்வர் வி.கே.ஆர்.ஜெயசிங் தலைமை வகித்தார். மேலாண்மையியல் துறைத் தலைவர் கே.எஸ். மீனாட்சி சுந்தரம் வரவேற்றார். துணைப் பேராசிரியர் ரூபி செல்வின் நன்றி கூறினார்.

முரசொலி மாறனின் உறுதி

“”தோஹா மாநாட்டில் உலக வர்த்தக சபை முன் வைத்த தீர்மானங்களை இந்தியாவின் சார்பில் பங்கேற்ற அப்போதைய தொழில் அமைச்சர் முரசொலி மாறன் ஏற்கவில்லை.

அத்தீர்மானத்தை வடிவமைத்தவர் யார் என்று கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளிக்க உலக வர்த்தக சபையினர் திணறினர். வளரும் நாடுகளைப் பாதிக்கும் அத்தீர்மானத்தில் கையெழுத்திட முரசொலி மாறன் உறுதியாக மறுத்து விட்டார்.

இறுதியில் அமெரிக்கா மெüனமாக தீர்மானத்தைத் திரும்பப் பெற்றது. மாறனுடன் எனக்குப் பல சில முரண்பட்ட கொள்கைகள் இருந்தாலும் அவர் காட்டிய உறுதி மிகவும் பாராட்டத்தக்கது. அதுதான் இந்தியாவின் வலிமை” என்றார் குருமூர்த்தி.

வரி விலக்குகள் படிப்படியாக வாபஸ் பெறப்படும்: ப.சிதம்பரம் அறிவிப்பு

புதுடெல்லி, மார்ச்.8-

இந்திய தொழில் கூட்டமைப்பின் தேசிய கவுன்சில் சார்பில் மத்திய பட்ஜெட் பற்றிய கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது.

இதில் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் கலந்து கொண்டு பட்ஜெட் அம்சங்கள் பற்றி பேசினார். அப்போது வரி விலக்குகளை அரசு படிப்படியாக வாபஸ் பெறும் என்று அறிவித்தார்.

அவர் கூறியதாவது:-

வரி விலக்குகள் காரணமாக 2006-007-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் ரூ.2 லட்சத்து 35 ஆயிரத்து 191 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது. ஒவ்வொரு வகைக்கு வழங்கப்படும் வரி விலக்கும் ஆய்வு செய்யப்படும் என்று பிரதமர் கூறி இருக்கிறார். எனவே வரி விலக்குகள் படிப்படியாக வாபஸ் பெறப்படும். எந்தெந்த வகைக்கு வழங்கப்படும் வரி விலக்குகளை விலக்கிக் கொள்ளலாமோ அந்த வரி விலக்குகளை அரசு வாபஸ் பெறும்.

என்றாலும் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி, அறிவுசார் துறைகள், மூத்த குடிமக்கள் தொடர்பான வரிவிலக்குகள் நீடிக்கும்.

ஆபத்து மிகுந்த தொழில்களில் செய்யப்படும் முதலீடுகளுக்கு வரிவிலக்கு அளிக்கும் பிரச்சினையில் எந்தெந்த தொழில்கள் மீதான முதலீடு என்பது பற்றி முடிவு செய்ய வேண்டியது அரசாங்கம்தான்.

வேளாண்மை துறைக்கு பட்ஜெட்டில் முன்னுரிமை அளிக்கப்பட்டு உள்ளது. வேளாண்மை பொருட்களின் இறக்குமதியால் அவற்றின் சப்ளை அதிகரித்து விலை குறையும். என்றாலும் வேளாண்மை பொருட்களின் உற்பத்தியை பெருக்குவதுதான் இதற்கு நீண்டகால தீர்வு ஆகும். எனவே நெல், கோதுமை, பருப்பு வகைகள், சமையல் எண்ணை ஆகியவற்றின் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

ஐ.டி.ஐ. நிறுவனங்களை நவீனப்படுத்துவதில் அரசு உறுதியாக இருக்கிறது. இதற்காக ரூ.750 கோடி ஒதுக்கப்பட்டு இருக்கிறது. ஐ.டி.ஐ. நிறுவனங்களை நவீனமாக்கும் முயற்சியில் அரசுடன் தொழில் துறையினரும் இணைந்து செயல்பட வேண்டும்.

இவ்வாறு நிதி மந்திரி ப.சிதம்பரம் கூறினார்.

உற்பத்தி வரி மற்றும் சேவை வரியை இணையதளம் மூலம் செலுத்தும் முறையை தொடங்கி வைத்து ப.சிதம்பரம் பேசுகையில் கூறியதாவது:-

பொருளாதார வளர்ச்சி 8.5 முதல் 9 சதவீதம் என்ற அளவில் உள்ளது. உற்பத்தி வளர்ச்சியும் இரு இலக்கமாக உள்ளது. ஆனால் அந்த அளவுக்கு உற்பத்தி வரி வசூல் வளர்ச்சி விகிதம் அமையாதது ஆச்சரியமாக உள்ளது. கம்பெனிகளின் வருமான வரி, சேவை வரி வசூல் அதிகரித்த அளவுக்கு உற்பத்தி வரி வசூல் உயரவில்லை. உற்பத்தி வரி ஏய்ப்பு நடைபெறுவது கவலை அளிப்பதாக உள்ளது. இந்த நிலை நீடித்தால் அது நீண்டகால போக்கில் கம்பெனிகளை பாதிப்பதாக அமையும். கம்பெனிகள் உற்பத்தி வரியை குறித்த காலத்தில் முறைப்படி செலுத்த வேண்டும். இது நல்ல தொழில் அணுகுமுறை ஆகும்.

இந்த நிதி ஆண்டில் உற்பத்தி வரி வசூல் ரூ.1 லட்சத்து 17 ஆயிரத்து 266 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டு இருக்கிறது. உற்பத்தி வரி வசூலில் கூடுதல் கவனம் செலுத்தப்படும்.

இவ்வாறு நிதி மந்திரி ப.சிதம்பரம் கூறினார்.

“மத்திய விற்பனை வரி 3 ஆண்டுகளில் ரத்தாகும்’

புதுதில்லி, மார்ச் 10: மத்திய விற்பனை வரி (சிஎஸ்டி) விதிப்புமுறையை ரத்து செய்யும் நோக்கிலான மசோதா மக்களவையில் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மத்திய விற்பனை வரி 4 கட்டங்களாக மூன்று ஆண்டுகளுக்குள் முழுவதுமாக ரத்து செய்யப்படும்.

இதையடுத்து “ஒருங்கிணைந்த பொருள்கள் மற்றும் சேவைகள் வரி (ஜிஎஸ்டி) மசோதாவை’, 2010- ஏப்ரல் 1-ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய வழியேற்படும்.

“1956 சிஎஸ்டி சட்டத்தை’ திருத்தும் நோக்கில் இந்த வரிவிதிப்பு சட்ட (திருத்த) மசோதா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சிஎஸ்டி வரிவிதிப்பு அடுத்த ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி மூன்றிலிருந்து 2 சதவீதமாக குறைக்கப்படும்; அதற்கு அடுத்த ஆண்டு (2009) இரண்டிலிருந்து ஒரு சதவீதமாகவும், 2010 மார்ச் 31-ம் தேதி முழுவதுமாகவும் ரத்து செய்யப்படும். மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் வெள்ளிக்கிழமை மக்களவையில் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறியதாவது:

சிஎஸ்டி வரிவிதிப்பு முறையை நீக்க வேண்டும் என்ற யோசனை 10 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளது. மத்திய, மாநில அரசுகள் பலமுறை கூடி ஆலோசித்து ஒருமித்த கருத்தை எட்டிய பிறகே இதை செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த பால், எண்ணெய், உரம் விலையை குறைக்க நடவடிக்கை: ப.சிதம்பரம்

புதுதில்லி, மார்ச் 10: நாட்டில் நிலவும் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துவதற்காக, பால், எண்ணெய்வித்துக்கள் மற்றும் உரம் விலையை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

நாட்டில் பணவீக்க விகிதம் 5-5.5 சதவீதமாக இருக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

ஆனால், கடந்த பிப்ரவரி 24-ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் பணவீக்க விகிதம் முந்தைய 6.05 சதவீதத்திலிருந்து 6.10 சதவீதமாக அதிகரித்தது.

இந்நிலையில், ரிசர்வ் வங்கியின் மத்திய வாரிய உறுப்பினர்களுடனான பட்ஜெட்டுக்குப் பிந்தைய ஆலோசனைக் கூட்டம் சிதம்பரம் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்துக்குப் பிறகு நிருபர்களிடம் சிதம்பரம் கூறியது:

பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காக தானிய மற்றும் பருப்பு வகைகள் மீது கவனம் செலுத்தப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. எண்ணெய்வித்துக்கள் மற்றும் உரத்தின் விலையையும் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரிசர்வ் வங்கியின் மத்திய வாரிய உறுப்பினர்கள் தெரிவித்தனர். அவர்களின் கருத்துகள் கவனத்தில் கொள்ளப்படும்.

பணவீக்க விகிதத்தை கட்டுப்படுத்த வேண்டியது அவசியம் என்றார் அவர்.

விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தும் விதத்தில், வெண்ணெய் எடுக்கப்பட்ட பால் பவுடர் ஏற்றுமதிக்கு கடந்த மாதம் அரசு தடைவிதித்தது குறிப்பிடத்தக்கது.

========================================================

விளைநிலம் காப்போம்

சிறப்புப் பொருளாதார மண்டலம் பற்றிய அறிவிப்புகளும், இதற்கு விளைநிலங்கள் ஒதுக்கப்படக்கூடாது என்ற எதிர்வினைகளுமாக பரபரப்படைந்திருக்கும் இவ்வேளையில், வேளாண் அறிஞர் எம்.எஸ். சுவாமிநாதன் ஒரு யோசனையை முன்வைத்துள்ளார்: “சிறப்பு வேளாண்மை மண்டலங்கள் அமைக்கப்பட வேண்டும்’.

வளமான நிலங்களைப் பாதுகாக்கவும், உற்பத்தியைப் பெருக்கவும் இது அவசியமான ஒன்று. பல லட்சம் ஏக்கர் விளைநிலங்களை நகர் விரிவாக்கம் மற்றும் தொழில் வளர்ச்சிக்காக இழந்துவிட்ட இன்றைய நிலையிலும்கூட, காப்பாற்றப்பட வேண்டிய விளைநிலங்கள் இன்னமும் இருக்கவே செய்கின்றன.

சிறப்பு வேளாண்மை மண்டலம் அமைக்கப்பட வேண்டும் என்ற யோசனை கொஞ்சம் காலதாமதமானது என்றாலும் மிக அவசியமானது. விவசாய நிலங்களைக் குறைந்த விலையில் வாங்கி, அவற்றை விவசாயப் பட்டியலிலிருந்து நீக்கி, மனைகளாக மாற்றுவதற்கு அங்கீகாரம் பெற்று, பல நூறு மடங்கு லாபம் சம்பாதிக்கும் நிலைமை உள்ளவரையிலும், விவசாய நிலங்களைக் காப்பாற்றுவது எளிதல்ல.

முதல்கட்டமாக, மாவட்ட வாரியாக தற்போது வேளாண்மை நிலம் எவை என்பதை அரசு அறிவிக்க வேண்டும். வேளாண்மை நிலங்கள் குறித்த விவரங்களை மாவட்டம், ஊர், கிராமம், சர்வே எண் விவரங்களுடன் இணைய தளத்தில் வெளியிட்டு இந்த நிலங்கள் குடியிருப்புகளாகவோ தொழிற்கூடங்களாகவோ மாறும் வாய்ப்பே இல்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

இத்தகைய வெளிப்படையான அறிவிப்பு இருந்தால், அரசு அறிவிக்கும் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் கூட விளைநிலத்தில் அமையாத நிலைமை உருவாகும். நகர் விரிவாக்கம் என்ற பெயரில் விளைநிலங்கள் மறையாமல் இருக்க உதவும்.

இந்தியாவில் வேளாண்மை முக்கியப் பங்கு வகிக்கிறது. 60 சதவீதம் பேர் வேளாண்மைத் தொழில்களை நம்பி வாழ்கின்றனர். இருந்தபோதிலும் வேளாண்மை பற்றிய தெளிவு அரசிடம் இல்லை. விவசாயிகளும் ஆர்வம் இழந்தவர்களாக இருக்கின்றனர்.

தொழில் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் தருவதற்குத்தான் எந்த அரசும் ஆர்வம் காட்டுகிறது. சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் பற்றிய அறிவிப்புகளை வெளியிடும் ஆர்வம், அக்கறை வேளாண்மைக்கு காட்டப்படுவதில்லை.

இன்றைய மிகப்பெரிய சோகம், இரண்டு தலைமுறைகளாக பாரம்பரிய விவசாயத்தை முற்றிலுமாக மறந்துவிட்ட இளம் தலைமுறை விழிபிதுங்கிக் கிடக்கிறது. இயற்கை வேளாண்மையில் மீண்டும் ஈடுபட மனத்தளவில் ஆசை இருந்தாலும், பாரம்பரிய விவசாயம் குறித்த அனுபவ அறிவோ, வழிவழித் தகவல்களோ இல்லாமல் இன்றைய இளம் விவசாயிகள் தயங்கிக் கொண்டிருக்கின்றனர்.

இத்தகைய சிறப்பு வேளாண்மை மண்டலங்கள் அமைக்கப்படும்போது அவற்றுக்கு அளிக்கப்படும் சலுகைகள் பாரம்பரிய விவசாயத்தை ஊக்கப்படுத்துவதாக அமைய வேண்டும்.

வேளாண்மை நிலங்கள் வேறு பயன்பாட்டுக்குப் போகாமல் காப்பதுபோலவே, இந்த மண்ணுக்கே உரித்தான பாரம்பரிய விதைகளை மீட்டெடுத்து, அவற்றை மீண்டும் பரவலாக விளைவிக்கும் முயற்சிகள் தேவையாக இருக்கின்றன. தாவர விதைகள் மற்றும் செடிகொடிகளைக் கொண்டு எளிய முறையில் பூச்சிவிரட்டிகள் தயாரிக்கும் முறை, எரு தயாரிக்கும் பாரம்பரிய முறைகளை மீண்டும் நம் வயல்களில் புகுத்த வேண்டிய அவசியம் இன்று ஏற்பட்டுள்ளது. அந்தந்த நிலத்தில் விளையக்கூடிய பயிர்களைப் பயிரிடுவதும், அந்த நிலத்திற்கு அருகில் கிடைக்கும் பொருளையே உரமாக மாற்றும் பாரம்பரிய வழிமுறைகளை மேற்கொள்வதும் மட்டுமே இன்றைய வேளாண்மையின் செலவைக் குறைத்து, விவசாயிக்கு ஓரளவாகிலும் வருவாய் கிடைக்கச் செய்யும்.

வானிலை, மண்வளம், பயிர் வளர்ச்சி, நீர் பயன்பாடு என எல்லாவற்றிலும் தகவல்தொழில்நுட்பம் புகுந்துவிட்டது. பாரம்பரிய விவசாயத்தை மீட்டெடுக்கவும் தகவல்தொழில்நுட்பம் உதவும்.

=================================================
மேலும் 50 உழவர் சந்தைகள்: அமைச்சர் அறிவிப்பு

சென்னை, ஏப். 4: புதிதாக 50 உழவர் சந்தைகள் ரூ. 12.5 கோடியில் இந்த நிதியாண்டில் தொடங்கப்படும் என்று சட்டப்பேரவையில் வேளாண் துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.

வேளாண் மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்கு பதிலளித்து அமைச்சர் வெளியிட்ட அறிவிப்புகள்:

உழவர் சந்தைக்கு என நிரந்தரப் பணியாளர்கள் நியமனம் செய்யப்படுவார்கள். அதிமுக ஆட்சி காலத்தில் மூடப்பட்ட 28 உழவர் சந்தைகள் புதுப்பிக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. அறுவடைக்குப் பின் விளை பொருளை நேர்த்தி செய்யும் தொழில்நுட்ப பயிற்சி ரூ. 50 லட்சம் செலவில் 10 ஆயிரம் விவசாயிகளுக்கு அளிக்கப்படும்.

வட்டி குறைப்பு: விவசாயிகளுக்கான பொருளீட்டுக் கடன் தொகைக்கு வட்டி 8 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாகக் குறைக்கப்படும். பொருளீட்டு கடன் அதிகபட்சமாக ரூ. 50 ஆயிரத்திலிருந்து ரூ. 1 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்காக ரூ. 25 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

ரூ. 2.75 கோடியில் 100 உலர் களங்கள் அமைக்கப்படும். சிறு, குறு விவசாயிகள் உற்பத்தி செய்யும் தோட்டக்கலை மூலிகைப் பயிர்கள் மற்றும் மலைப் பயிர்களை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் விற்பனை செய்ய தனி சந்தைப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. ஏற்றுமதி மண்டலங்களில் மேம்படுத்தப்பட்ட நாற்றங்கால்கள் அமைக்கப்படும்.

வேளாண் பல்கலையில் ரூ. 50 கோடியில் வசதிகள்: மத்திய பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ள ரூ. 50 கோடி நிதியைக் கொண்டு தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தில் உலகத் தரம் வாய்ந்த பரிசோதனை ஆய்வுக் கூடம் உள்பட பல்வேறு அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும்.

சென்னை நந்தனத்தில் வேளாண்மை பள்ளியாகச் செயல்பட்டுக் கொண்டிருந்ததை ஆங்கிலேயர்கள் கோவைக்கு மாற்றம் செய்தனர். இவ்வாறு மாற்றப்பட்டு 100 ஆண்டுகள் ஆனதையொட்டி வேளாண் பல்கலைக்கழகத்தில் நூற்றாண்டு கட்டடம் ரூ. 5 கோடியில் கட்டப்படும்.

தருமபுரியில் வேளாண் அறிவியல் மையம்: இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் 100 சதவீத நிதி உதவியுடன் தருமபுரி மாவட்டத்தில் பாப்பாரப்பட்டி கிராமத்தில் வேளாண்மை அறிவியல் மையம் ரூ. 1 கோடி 10 லட்சம் செலவில் அமைக்கப்படும். இம் மையத்தில் விவசாயிகள், பண்ணை மகளிர், இளைஞர்களுக்கு வேளாண் தொழில்களில் பயிற்சி அளிக்கப்படும்.

தமிழகத்தில் 28 மாவட்டங்களில் 560 ஹெக்டேர் பரப்பில் ரூ. 5.56 கோடியில் துல்லிய பண்ணை திட்டம் செயல்படுத்தப்படும்.

தேசிய தோட்டக்கலை திட்டத்தின் மூலமாகவும் நுண்ணீர் பாசன திட்டத்தின் மூலமாகவும் 390 ஹெக்டரில் ரூ. 4 கோடியில் துல்லிய பண்ணைத்திட்டம் விரிவுபடுத்தப்படும்.

ஏற்றுமதிக்கு உகந்த வாழையில் 150 ஹெக்டேர் பரப்பில் ரூ. 2 கோடியில் துல்லியப் பண்ணை அமைக்க தேசிய தோட்டக் கலை வாரியத்தின் மூலம் மத்திய அரசின் ஒப்புதல் பெற்று செயல்படுத்தப்படும்.
=================================================
வேளாண் துறை இரண்டு அடுக்காக மாற்றப்பட்டு சீரமைக்கப்படும்: அமைச்சர்

சென்னை, ஏப். 4: வேளாண் துறையில் மூன்று அடுக்கு முறை மாற்றப்பட்டு இரண்டு அடுக்கு முறை செயல்படுத்தப்படும். அனைத்து காலி பணியிடங்களும் நிரப்பப்பட்டு மறுசீரமைப்பு செய்யப்படும் என்று சட்டப் பேரவையில் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.

வேளாண்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்குப் பதிலளித்து அமைச்சர் வெளியிட்ட அறிவிப்புகள்:

நவீன தொழில்நுட்பங்கள் விவசாயிகளுக்கு விரைவில் சென்றடையவும் ஒரே இடத்தில் கிடைத்திடவும் வேளாண் துறை, தோட்டக்கலைத் துறை, வேளாண்மை விற்பனைத்துறை, விதைச்சான்று துறை ஆகிய துறைகளின் விரிவாக்கப் பிரிவுகளை ஒருங்கிணைத்து விவசாயிகள் ஒன்றிய அளவில் அனைத்து தகவல்களையும் பெற ஏற்பாடு செய்யப்படும்.

அதன் பொருட்டு தற்போது தாலுகா அளவில் பணியாற்றி வரும் பணியாளர்களின் பணி நிலை பாதிக்காதவாறு ஒன்றிய அளவில் பணி நியமனம் செய்யப்படுவார்கள்.

நிர்வாகம் மாவட்ட அளவிலிருந்து ஒன்றிய அளவில் நேரடியாகச் செயல்படும்.

பயணப்படி உயர்வு: வேளாண் துறையில் பணிபுரியும் உதவி வேளாண் அலுவலர்களுக்கு 1996-ம் ஆண்டு முதல் நிரந்தர பயணப்படி மாதம் ஒன்றுக்கு ரூ. 140 வழங்கப்பட்டு வருகிறது. தற்போது போக்குவரத்து கட்டணங்கள் மற்றும் எரிபொருள் செலவினங்கள் உயர்ந்துள்ள நிலையில் பயணப்படியை உயர்த்த கோரிக்கை விடுத்துள்ளனர். முதல்வருடன் கலந்து பேசி நல்ல முடிவு எடுக்கப்படும்.

அங்கக நடைமுறைகள் கடைப்பிடித்து உற்பத்தி செய்யப்படும் வேளாண் பொருட்களுக்கு சான்று அளிக்கும் வகையில் தற்சமயம் இயங்கி வரும் வேளாண்மை விதைச் சான்று துறையானது “விதை மற்றும் அங்கக சான்றளிப்பு துறை’ என பெயர் மாற்றம் செய்யப்படும்.

அங்கக வேளாண்மை சான்றிதழ் பயிற்சி பெறவும் அதற்கென ஒரு தனிப் பிரிவு தொடங்கவும் தில்லியில் உள்ள அபிடா நிறுவனத்தில் பயிற்சி பெற உயர் அலுவலர்களை அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.

தரிசு நில மேம்பாடு: சிறு, குறு விவசாயிகளுக்குச் சொந்தமான பட்டா தரிசு நிலங்களை 50 ஏக்கருக்கு மேல் ஒரு தொகுப்பாக உள்ள இடங்களில் நிலத்தின் உரிமையாளர்கள் கூட்டாகச் சேர்ந்து கோரிக்கை வைத்தால் அரசு தரிசு நில மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் விவசாயத்துக்கு ஏற்ற நிலமாக சீர் செய்து கொடுக்கப்படும்.

அதோடு தேவையான அளவு நிலத்தடி நீரும், சாதகமான புவியியல் நிலையும் இருக்கும் இடங்களில் நீர் ஆதாரங்களை உருவாக்கி கொடுத்து தோட்டக்கலை பயிர் சாகுபடி செய்ய மானிய உதவிகள் வழங்கப்படும். நிலத்தடி நீர் போதுமான அளவு இல்லாத தொகுப்பு நிலங்களில் மரப் பயிர்கள் நடவுசெய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

=================================================

வேளாண்மைத் துறை வளர்ச்சிக்கு ரூ. 25 ஆயிரம் கோடி திட்டம்: பிரதமர் அறிவிப்பு

புதுதில்லி, மே 30: வேளாண்மைத் துறை வளர்ச்சிக்கு ரூ. 25 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டத்தை பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்துள்ளார்.

புதுதில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேசிய வளர்ச்சி மன்றக் கூட்டத்தில் நிறைவுரையாற்றிய போது பிரதமர் மன்மோகன் சிங் இத் திட்டத்தை அறிவித்தார்.

வேளாண்மைத் துறையின் அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக அடுத்த 4 ஆண்டுகளில் இந் நிதி வழங்கப்படும் என்றார்.

இது குறித்து அவர் மேலும் பேசியது:

வேளாண்மைத் துறை வளர்ச்சியை கருத்தில் கொண்டு அடுத்த 4 ஆண்டுகளில் மத்திய அரசு இந் நிதியை வழங்கும். இது தொடர்பான திட்டத்தை அடுத்த இரு மாதங்களில் திட்டக் குழு மற்றும் மத்திய வேளாண்மை அமைச்சகம் இறுதி செய்யும்.

வேளாண்மைத் துறை அன்றாடம் சந்தித்து வரும் பிரச்னைகளைத் தீர்க்க மாநில அரசுகளை ஊக்குவிக்கும் வகையில் இத் திட்டம் இருக்கும்.

கோதுமை, நெல், தானியங்கள் போன்றவற்றின் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் உணவுப் பாதுகாப்பு இயக்கம் விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. உணவு தானியப் பொருள்களுக்காக வெளிநாடுகளைச் சார்ந்திருக்கும் நிலையை குறைக்கும் நோக்கிலும் இத் திட்டம் அறிவிக்கப்படவுள்ளது.

கடுமையான முடிவுகள் எடுத்து அதை தீவிரமாக அமல்படுத்தினால் மட்டுமே வேளாண்மைத் துறையில் 4 சதவீத வளர்ச்சியை அடைய முடியும்.

தகுதியான அனைத்து விவசாயிகளுக்கும் கடன் கிடைக்க நிதி அமைச்சர் ப. சிதம்பரம் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்றார் பிரதமர் மன்மோகன் சிங்.

முன்னதாக, தேசிய வளர்ச்சி மன்றக் கூட்டத்தில் அடுத்த 4 ஆண்டுகளுக்குள் கோதுமை உற்பத்தியை 80 லட்சம் டன்களாகவும், நெல் உற்பத்தியை 1 கோடி டன்களாகவும், தானிய உற்பத்தியை 20 லட்சம் டன்களாகவும் உயர்த்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

உணவு பாதுகாப்பு இயக்கம்: மன்மோகன் சிங் யோசனை

பற்றாக்குறை காரணமாக அண்மையில் கடுமையாக விலை உயர்ந்த கோதுமை, நெல், தானியங்கள் மற்றும் உணவு எண்ணெய் ஆகியவற்றின் உற்பத்தியை அதிகரிக்க உணவுப் பாதுகாப்பு இயக்கத்தைத் தொடங்கலாம் என பிரதமர் மன்மோகன் சிங் யோசனை தெரிவித்தார்.

புதுதில்லியில் செவ்வாய்க்கிழமை நடந்த 53-வது தேசிய வளர்ச்சி மன்றக் கூட்டத்தில் இது குறித்து அவர் மேலும் பேசியது:

வேளாண்மை உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எந்தவகையில் உதவி செய்யலாம் என்பதை வரையறுக்க திட்டக்குழு உரிய பரிந்துரைகள் அளிக்கலாம் என்றார்.

கூட்டத்தில் மத்திய வேளாண்மை அமைச்சர் சரத் பவார், திட்டக் குழுத் துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா உள்ளிட்டோர் பேசினர்.

மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சர் அர்ஜுன் சிங், நிதி அமைச்சர் ப. சிதம்பரம், திட்டத்துறை இணை அமைச்சர் எம்.வி. ராஜசேகரன், திட்டக் குழு உறுப்பினர் செயலர் ராஜீவ் ரத்னா ஷா, மாநில முதல்வர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

11-வது ஐந்தாண்டு திட்ட காலத்திற்கான வேளாண்மைக் கொள்கைகளை வகுப்பது தொடர்பாக இக் கூட்டம் நடைபெற்றது.

—————————————————————————————–
வேளாண்மைத் துறை மானியங்களை குறைக்க வேண்டும்: சரத்பவார் குழு பரிந்துரை

புதுதில்லி, மே 30: வேளாண்மைத் துறையை மேம்படுத்த மானியங்களைக் குறைக்க வேண்டும் என மத்திய அமைச்சர் சரத் பவார் தலைமையிலான துணைக் குழு பரிந்துரைத்துள்ளது.

தில்லியில் செவ்வாய்க்கிழமை பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடந்த தேசிய வளர்ச்சி மன்றக் கூட்டத்தில் முன் வைக்கப்பட்ட பரிந்துரைகளில் பயிர் இன்சூரன்ஸ் திட்டத்தில் மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

பரிந்துரையில் மேலும் கூறியிருப்பது:

நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும்

வேளாண்மைத் துறைக்கு மாநில அரசுகள் அளித்து வரும் நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும். பாசனத் திட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும். உணவுப் பதப்படுத்தல் துறையில் உள்ள தடைகளை நீக்க வேண்டும்.

வேளாண் மண்டலங்கள்

வேளாண்மைக் கடன் வசதியை மேம்படுத்தவும், கடன் வசூலை விரைவு படுத்தவும் சிறப்பு மையங்கள் கொண்ட மண்டலங்களை நாடு முழுவதும் அமைக்க வேண்டும். கடன் வசூலிப்பு மையங்களின் தலைவர்களாக சுயேச்சையான அதிகாரிகளை நியமிக்க வேண்டும். குறிப்பாக ஓய்வு பெற்ற நீதிபதிகளை நியமிக்கலாம்.

இன்சூரன்ஸ் திட்டத்தில் புதிய அணுகுமுû

தற்போது நடைமுறையில் உள்ள பயிர் இன்சூரன்ஸ் திட்டத்தில் புதிய அணுகுமுறைகளை கொண்டு வர வேண்டும். அதிக வருவாய் கிடைக்க வாய்ப்பில்லாத பயிர்களை இத் திட்டத்தில் இருந்து நீக்க வேண்டும்.

4 சதவீத வளர்ச்சி

11-வது ஐந்தாண்டுத் திட்டத்தில் பொருளாதார வளர்ச்சி வீதம் 9 சதவீதமாக இருக்கும் நிலையில், வேளாண்மைத் துறையின் வளர்ச்சி வீதம் 4 சதவீதமாக இருக்க வேண்டும். அதற்கு தேவையான நடவடிக்கைகளை உடனடியாக தொடங்க வேண்டும்.

மானியங்களை குறைக்க வேண்டும்

உலக வர்த்தக அமைப்பின் வேளாண்மைத் துறை சார்ந்த கொள்கையைப் பின்பற்றி, மானியங்களை குறைக்க வேண்டும். மானியமாக அளிக்கப்பட்டு வரும் நிதியை ஆராய்ச்சி, விரிவாக்கப் பணிகள், அடிப்படைக் கட்டமைப்பு வசதி மற்றும் வேளாண்மை இன்சூரன்ஸ் போன்ற திட்டங்களுக்குப் பயன்படுத்தலாம்.

உற்பத்தி குறைவுக்கு கவலை

கடந்த 10 ஆண்டுகளாக வேளாண்மைத் துறையில் உற்பத்தி குறைந்து கொண்டே வருவது கவலையளிக்கிறது. புதிய விளைநிலங்களை அதிகரிக்கவும் வாய்ப்பு இல்லாத நிலையில், உற்பத்தியும் குறைந்து வருவது நாட்டின் உணவு பாதுகாப்புக்கு ஆபத்தானது.

1980-களில் 3.1 சதவீத வளர்ச்சியில் இருந்த கோதுமை உற்பத்தி 1990-களில் 1.83 சதவீதமாகவும், 2004-05-ம் ஆண்டில் 0.11 சதவீதமாகவும் உள்ளது. அதே போல் அரிசி உற்பத்தியும் கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது என்று துணைக் குழுவின் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

————————————————————————————————-

உழவுக்கு வஞ்சனை!
June 1, 2007 Dinamani Editorial

விவசாயத்திலிருந்து நாட்டின் மொத்த உற்பத்திக்கான பங்களிப்பு கடந்த சில ஆண்டுகளாகவே 2%-க்கும் குறைவாக இருப்பதால் இம் முறை அரசின் முழுக் கவனமும் அத்துறை மீது திரும்பியிருக்கிறது. ஏற்கெனவே ஒதுக்கியிருக்கும் நிதியுடன் கூடுதலாக ரூ. 25,000 கோடி ஒதுக்க மத்திய அரசு தயார், மாநிலங்கள் தங்களுடைய சூழல், தேவைகளுக்கேற்ப திட்டங்களைத் தீட்டி எங்களை அணுகினால் போதும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கும், நிதியமைச்சர் ப.சிதம்பரமும் தில்லியில் கூடிய தேசிய வளர்ச்சிமன்றக் கூட்டத்தில் சமீபத்தில் கூறியிருக்கிறார்கள்.

கைப்புண்ணுக்குக் கண்ணாடி தேவையில்லை. விவசாயத்தின் “”உண்மையான பிரச்னைகளை”த் தீர்க்க யாருக்கும் மனது இல்லை. இப்போது விவசாயம் லாபகரமான தொழில் இல்லை. 15 ஏக்கருக்கும் குறைவாக நிலம் வைத்திருப்பவர்கள்தான் அதிகம். ஜமீன்தாரி முறையை ஒழிக்கக் கொண்டுவரப்பட்ட நில உச்சவரம்பு சட்டம் இப்போது விவசாய உற்பத்திக்கே உச்சுருக்காக இருக்கிறது. விவசாய நிலங்கள் பாகப்பிரிவினை காரணமாக, பல துண்டுகளாகச் சுருங்குவதால் திட்டமிட்ட வகையிலோ, கட்டுப்படியாகும் வகையிலோ சாகுபடிகளை மேற்கொள்ள முடிவதில்லை. பருப்பு வகைகள், சிறு தானியம், எண்ணெய் வித்துகள் சாகுபடி குறைந்ததற்கு இது முக்கிய காரணம்.

நேரடி நெல் விதைப்புக்கும், நாற்று நடுவதற்கும், அறுவடைக்கும் இப்போது இயந்திரங்கள் வந்துவிட்டன. அவற்றை வாடகைக்கு வாங்கித்தான் விவசாயிகள் பயன்படுத்துகின்றனர். விவசாய வேலைக்கு இப்போது கூலி ஆள்கள் கிடைப்பதில்லை. அருகில் உள்ள தொழிற்பேட்டையில் மாதம் 1,500 ரூபாய் சம்பளத்துக்கு (ஒரு நாளைக்கு 50 ரூபாய் கூலி!) எவர்சில்வர் டப்பாவில் “டிபன்’ எடுத்துச் செல்லும் கலாசாரம் கிராமத் தொழிலாளர்களிடையே பரவி வருகிறது. (தஞ்சை டெல்டா போன்ற பகுதிகள் விதிவிலக்காக இருக்கலாம்.) “”விவசாயத்தை நம்பினால் பிழைக்க முடியாது, இது நிரந்தரமான தொழில் அல்ல” என்ற எண்ணம் எல்லோருக்கும் ஏற்பட்டுவிட்டது.

கரும்பு பயிரிட்டால் காசு அள்ளலாம் என்பதெல்லாம் பொய்யாய், பழங்கதையாகி வருகிறது. “”சர்க்கரை ஆலையில் கரும்பை வெட்ட அனுமதி தரவில்லை, காய்ந்த கரும்பை விவசாயிகள் தீ வைத்துக் கொளுத்தினார்கள்” என்ற செய்திகள் ஏன் வருகின்றன?

விவசாய இன்சூரன்ஸ் திட்டம் என்பது, விவசாயத்தை மக்கள் அனைவரும் கைவிட்ட பிறகுதான் நல்ல நிலையில் அமலுக்கு வரும் என்று தோன்றுகிறது.

விவசாயிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்ய எல்லா இடுபொருள்களும் கடன் வசதியும் ஒரே இடத்தில் கிடைக்கும் என்று தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். விவசாய விளைபொருள்களைச் சேமித்துவைக்க கிடங்குகள், குளிர்பதன கிடங்குகள் போன்றவற்றைக் கட்டித்தரும் திட்டம் இன்னமும் ஏட்டளவிலேயே இருக்கின்றன.

உழவர் சந்தை திட்டம் ஓரிரு இடங்களில் மட்டுமே துடிப்பாகச் செயல்படுகிறது. கால்நடை வளர்ப்பு, பால் பெருக்கம் போன்ற திட்டங்கள் மக்களுடைய சுய முயற்சியாலும், ஊக்கத்தாலும் மட்டுமே நடைபெறுகிறது. அரசு தரப்பில் முனைப்பு காணப்படுவதில்லை. தரிசு நிலங்களில்கூட காட்டாமணக்கு, கருவேலம் சாகுபடிதான் கண்ணில்படுகிறது.

விவசாயத்தை வளப்படுத்துவது எப்படி என்று விவசாயிகளைத் தவிர “”நிபுணர்கள்” கூடிப்பேசி முடிவெடுப்பதால் இன்னமும் அந்தத்துறை திணறிக் கொண்டிருக்கிறது.

எதை எடுத்தாலும் இறக்குமதி என்கிற முடிவு எடுப்பதும், வெளிநாட்டிலிருந்து எப்போது கப்பல் வரும், மக்களின் பசி தீரும் என்கிற நிலைமை ஏற்படுவதும் ஒரு நாட்டின் சுதந்திரத்துக்கும் இறையாண்மைக்கும் ஆபத்து. உணவு உற்பத்தியில் தன்னிறைவு இல்லாத எந்தவொரு நாடும் முழுமையான பாதுகாப்புடன் இருப்பதாகக் கருத முடியாது. விவசாயத்துக்காகச் செலவிடப்படும் மானியம், நாட்டின் பாதுகாப்புக்காகவும், பொருளாதாரத்தின் ஸ்திரத்தன்மைக்காகவும் செலவிடப்படும் அடிப்படைச் செலவு என்றுதான் கருத வேண்டும்.

விவசாயத்தை வஞ்சனை செய்து தொழில்வளத்தைப் பெருக்குவது தேசத்துக்கே செய்யும் வஞ்சனை!

Posted in Agriculture, Allocation, Analysis, Biz, BJP, Bonds, Budget, Business, Central Sales Tax, Chidambaram, Commerce, CST, Dharmapuri, Doha, Economy, Exports, Farmers, Farming, Finance, Funds, Garden, Globalization, GST, Gurumurthy, Instructor, Interest, Japan, Loans, Maran, Murasoli, Options, Plan, Planning, Professor, Rates, RSS, Sales Tax, SEZ, Small Biz, solutions, Subsidy, Teacher, University, Water | 1 Comment »