Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Two Indian fishermen killed: Sri Lanka Navy denies shooting the Indian Citizens

Posted by Snapjudge மேல் ஜூலை 13, 2008

இலங்கை கடற்படையினரின் தாக்குதலில் இரு தமிழக மீனவர்கள் பலி

தமிழகத்தின் நாகப்பட்டினம் மாவட்டம் ஆற்காட்டுத் துறை கிராமத்தைச் சேர்ந்த இரண்டு மீனவர்கள் இலங்கை கடற்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூடு காரணமாக உயிரிழந்ததாகவும், மூன்றவது மீனவர் படுகாயமடைந்ததாகவும் அப்பகுதி மீனவர்கள் கூறுகின்றனர்.

இது குறித்து நாகப்பட்டிணம் ஆற்காட்டுத் துறை மீனவர் தலைவர் மயில்வாகனன் அவர்கள் கூறும் போது, சேது சமுத்திர திட்டத்திற்கான அகழ்வு பணிகள் நடைபெற்ற இடத்தில் மீனவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்ததாகவும், அப்போது அங்கு வந்த இலங்கை படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இருவர் கொல்லப்பட்டு ஒருவர் காயமடைந்ததாக கூறினார்.

இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து தமிழக மீன் வளத் துறை அமைச்சர் கே பி பி சாமி அவர்களைத் தொடர்பு கொண்டு கேட்ட போது, இந்த சம்பவம் இந்திய எல்லையில் நடைபெற்றது போல தெரிகிறது என்றும், இருந்தாலும் இதனை விசாரணை மூலம் உறுதிப்படுத்த வேண்டியிருப்பதாகவும் கூறினார். கடந்த இரண்டாண்டு ஆண்டுகளில் இது போல பல சம்பவங்கள் இலங்கை படையினரால் நடத்தப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த சம்பவம் குறித்து இலங்கை அரசின் விளக்கத்தைப் பெற சென்னையில் உள்ள இலங்கைத் துணைத் தூதர் பி எம் அம்சா அவர்களைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, இது குறித்த கேள்விகளுக்கு தற்போது தம்மால் பதில் கூற முடியாது என்றும்- ஒரு விளக்கத்தை மட்டுமே அளிக்க முடியும் என்றும், இந்த சம்பவம் தொடர்பான செய்திகள் குறித்து விசாரிக்கப்படுகின்றது என்ற விளக்கத்தை மட்டுமே அளிக்க முடியும் என்றும் அவர் கூறினார்.

இது குறித்த மேலதிக தகவல்களை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


புதிய குடியேற்ற இடங்களை நிராகரித்துள்ளனர் சம்பூர் மக்கள்

இடம்பெயர்ந்தோர்
இடம்பெயர்ந்தோர்

இலங்கையின் கிழக்கே திருகோணமலை மாவட்டம் சம்பூர் பிரதேசம் உயர் பாதுகாப்பு வலயம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களை இறால்குழியிலும், சின்னகக்குளத்திலும், குடியமர்த்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இவ்விடங்களை ஐ.நா.வின் அகதிகளுக்கான உயர் ஸ்தானிகராலயத்தின் வழித்துணையுடன் நேரில் சென்று பார்வையிட்ட சம்பூர் பிரதேச குடியிருப்பாளர்கள் நிராகரித்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.

சம்பூர் பிரதேசத்தைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடந்த 2 வருடங்களுக்கு மேலாக மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்த அகதிகளாக தங்கியிருக்கின்றார்கள்.

மூதூர் கிழக்கு இடம் பெயர்ந்தோர் நலன்புரிச் சங்கத்தின் தலைவரான குமாரசாமி நாகேஸ்வரன், புதிய குடியேற்றத்திற்காக அடையாளம் காணப்பட்டுள்ள இடம், மக்கள் வாழ்வதற்கோ, தொழில் செய்வதற்கோ, சம்பூர் பிரதேசத்துடன் ஒப்பிடும் போது பொருத்தமற்றது என்றார்.

இடம் பெயர்ந்துள்ள குடும்பங்கள் விருப்பத்திற்கு மாறான இடங்களில் மீளக் குடியமர்த்தப்பட மாட்டார்கள் என மீள் குடியேற்றத்துறை அமைச்சரான ரிசாத் பதியுதீன் தெரிவித்தார்.


மன்னார் மற்றும் முல்லைத்தீவில் இருந்து 1400 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இடம்பெயர்வு

இலங்கையின் வடக்கே வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக அரச படைகள் மேற்கொண்டுள்ள இராணுவ நடவடிக்கைகள் காரணமாக இது வரையில் 1400க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்களில் இருந்து இடம்பெயர்ந்து கிளிநொச்சி மாவட்டத்தில் தஞ்சமடைந்துள்ளதாக கிளிநொச்சி செயலகப் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே மன்னார் மாவட்டத்தில் இருந்து இடம்பெயர்ந்து வந்துள்ள 600க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 2500க்கும் மேற்பட்டவர்கள் கிளிநொச்சி மாவட்டத்தின் ஜெயபுரம், முழங்காவில், கரியாலை நாகபடுவான் பகுதிகளில் இருப்பதாக கிளிநொச்சி செயலகம் தெரிவித்திருக்கின்றது.

மன்னார் மாவட்டத்தில் தற்போது தீவிரமடைந்துள்ள மோதல் நிலைமைகளினால் முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய், மாந்தை கிழக்கு உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளில் இருந்து, இந்த மாதத்தில் மாத்திரம் 800 குடும்பங்களசை; சேர்ந்த 3500க்கும் மேற்பட்ட பொதுமக்கள், இடம்பெயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தக் குடும்பங்கள் கிளிநொச்சி மாவட்டத்தின் அக்கராயன், ஸ்கந்தபுரம் பகுதிகளுக்கு வந்துள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவிக்கின்றார்.

தொடர்ந்து நடைபெற்று வரும் இடம்பெயர்வுகள் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் உணவு வழங்கல் அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளது இது குறித்த செய்திகளை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


இலங்கையில் மொபைல் தொலைபேசி பயன்பாட்டாளர்களுக்கு புதிய நடைமுறைகள்

பயன்பாட்டாளர்களுக்கு புதிய நடைமுறைகள்
பயன்பாட்டாளர்களுக்கு புதிய நடைமுறைகள்

இலங்கையில் தேசிய பாதுகாப்புக் காரணங்களை முன்னிறுத்தி மொபைல் தொலைபேசி பயன்பாட்டாளர்களுக்கு மிகவும் இறுக்கமான நடைமுறைகளை இலங்கைத் தொலை தொடர்பு சீராக்கல் ஆணைக்குழு அறிவித்திருக்கிறது.

இது தொடர்பாக, இலங்கை தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில், மொபைல் தொலைபேசியை பாவிக்கும் ஒரு வாடிக்கையாளர், அந்த “சிம் கார்ட்” (Subscriber Identity Module) இணைப்பினை வழங்கிய நிறுவனத்தினால் வழங்கப்பட்ட உரிமைச் சான்றிதழை எப்போதுமே வைத்திருக்க வேண்டும் எனவும், மற்றமொரு நபரின் சிம்கார்டை பயன்படுத்தக் கூடாது என்றும் தொலைத் தொடர்புகள் சீராக்கல் ஆணைக்குழு வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தியிருக்கிறது.

பொறுப்பற்ற முறையில் தொலைபேசி இணைப்புக்களை பயன்படுத்துவோரால் நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்களைக் குறைத்துக்கொள்வதற்கும், சட்டரீதியற்ற நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் நோக்கங்களின் அடிப்படையிலேயே
இந்த புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டதாகத் தொலைத் தொடர்புகள் சீராக்கல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.


தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் முதல்முறையாக சிங்கள மாணவர்கள் சேர்ப்பு

தென்கிழக்கு பல்கலைக்கழகம்
தென்கிழக்கு பல்கலைக்கழகம்

இலங்கையில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள சகல பல்கலைக்கழகங்களிலும் எதிர் வரும் கல்வியாண்டு சிங்கள மாணவர்களை அனுமதிப்பது என பல்கலைக்கழ மானிய ஆணைக்குழு எடுத்துள்ள தீர்மானத்தையடுத்து மட்டக்களப்பிலுள்ள கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு 41 சத வீதமும் அம்பாறையிலுள்ள தென் கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு 27 சத வீதமும் சிங்கள மாணவர்கள் தெரிவாகியுள்ளனர்.

கிழக்கு பல்கலைக்கழத்திற்கு தெரிவாகியுள்ள 743 பேரில் தமிழர் – 358,சிங்களவர்கள் – 306 ,முஸ்லிம்கள் – 79 என்றும், தென் கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியுள்ள 518 பேரில் முஸ்லிம்கள் – 361 ,சிங்களவர்கள் 140 ,தமிழர்கள் – 17 என இந்த எண்ணிக்கை அடங்குவதாக பல்பலைக்கழக நிர்வாகங்கள் தெரிவிக்கின்றன.

முஸ்லிம் மாணவர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட தென்கிழக்கு பல்கலைக்கழக வரலாற்றில் சிங்கள மாணவர்கள் தெரிவாகியிருப்பது இதுவே முதற் தடவையாகும்.

இது தொடர்பாக அப்பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் கலாநிதி ஹுசேன் இஸ்மாயில் மற்றும் உயர் கல்விப் பிரதி அமைச்சர் மயோன் முஸ்தபா ஆகியோர் வெளியிட்ட கருத்துக்களளைத் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


இந்திய அரசு சோள ஏற்றுமதிக்கு தடை விதித்து இருப்பதால் இலங்கையில் கோழிப் பண்ணை தொழில் பாதிப்பு

கோழிப்பண்ணை தொழில் பாதிப்பு
கோழிப்பண்ணை தொழில் பாதிப்பு

இந்திய அரசு சோள ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளதால், இலங்கையில் கோழிப் பண்ணைத் தொழில் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த ஏற்றுமதி தடை கால்நடைத் துறைக்கும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவிலிருந்து சோள இறக்குமதி நின்று போயுள்ளதால் கோழித் தீவன உற்பத்தி இலங்கையில் பெரும் வீழ்ச்சியை சந்திக்கிறது என்று அகில இலங்கை கோழிப்பண்ணை சங்கம் கவலை வெளியிட்டுள்ளது.

இது குறித்து அரசு என்ன நடவடிக்கை எடுக்கிறது என்று இலங்கையின் கால்நடை துறைக்கான பிரதி அமைச்சர் அப்துல் பாயிஸ் அவர்கள் பிபிசி தமிழோசையிடம் கருத்து தெரிவிக்கும் போது, தாங்கள் இது தொடர்பாக இந்திய அதிகாரிகளிடம் உடனடியாக தொடர்பு கொண்டு சோள ஏற்றுமதி தொடர்வதற்கான வழிவகைகளை ஆராயவிருப்பதாகவும், அதே சமயம் உள்நாட்டிலேயே சோள உற்பத்தியை அதிகரிக்கும் நடவடிக்கைகளை தாங்கள் எடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.

தமிழக மீனவர்கள் தாக்கப்படும் விவகாரம் தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து தாக்கப்படும் விவகாரம் குறித்து விவாதிக்க திமுகவின் உயர்நிலைக் குழு கூட்டம் கூட்டப்பட்டிருக்கிறது.

இது குறித்து திமுகவின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில், எல்லை தாண்டி மீன்பிடிக்கின்றனர் என்பதை சாக்காக வைத்து, தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்படுகின்றனர், இக்கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு மத்திய அரசை வற்புறுத்த மாநில அளவில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்துவது குறித்து முடிவெடுக்க உயர்நிலைக் குழு கூட்டம் எதிர்வரும் ஜூலை 17ஆம் நாள் நடைபெறும் எனக் கூறியிருக்கிறார்.

இராமேஸ்வரம் மீனவர்கள் கடந்த 9 நாட்களாக மீன்பிடிக்கச் செல்லாமல் தங்களது எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர். இண்டு தினங்களுக்கு முன்பு வேதாரண்யம் பகுதி மீனவர்கள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கின்றனர், ஞாயிறன்றும்கூட துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டு நாகை மீனவர்களை இலங்கை கடற்படையினர் மிரட்டியதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

தேமுதிக தலைவர் நடிகர் விஜயகாந்த் இராமேஸ்வரத்தில் பெரும் ஆர்ப்பாட்டடத்தை ஞாயிறன்று நடத்தியிருக்கிறார். தொடர்ந்து அஇஅதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா, தமிழக அரசு மெத்தனமாக இருக்கிறது என கண்டன அறிக்கை வெளியிட்ட வண்ணம் இருக்கிறார்.

நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆதரிக்குமாறு கோரும் காங்கிரசிடம் பல்வேறு கட்சிகளும் பல்வேறு அழுத்தங்களைக் கொடுத்துவரும்போது, மீனவர்கள் பிரச்சினைக்காக ஏன் திமுக இன்னும் அழுத்தமாக குரல்கொடுக்கக்கூடாது என கேள்விகள் பல தரப்புகளிலிருந்தும் எழும் பின்னணியிலேயே திமுக கூட்டம் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மீனவர்கள் தாக்கப்படும் பிரச்சினை தொடர்வதன் அடிப்படைக் காரணங்கள் குறித்து திருவனந்தபுரத்திலிருந்து இயங்கும் தென்னிந்திய மீனவர் கூட்டுறவு அமைப்புகளின் சம்மேளனத்தில் கடல்வள மேலாண்மை துறை இயக்குநரும் இலங்கைக்கு இந்த பிரச்சினை குறித்து ஆராய சென்றுவந்தவருமான டாக்டர் பி.சுப்ரமணியன் வழங்கிய செவ்வியை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.


கொழும்பு புறநகர்ப் பகுதியிலிருந்து பாதுகாப்பு காரணங்களுக்காக குடிமக்கள் வெளியேற்றம்

இலங்கை முஸ்லிம்கள் – கோப்புப் படம்

இலங்கைத் தலைநகர் கொழும்பில் கொம்பெனித் தெருவில் வசிக்கும் பல நூறு குடும்பங்களை பாதுகாப்பு காரணங்களைக் காட்டி இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் வெளியேற சொல்லியிருப்பதாக இலங்கை ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நடவடிக்கை ஏன் என்பது குறித்து இலங்கை நகர அபிவிருத்தி அதிகாரசபையின் செயலர் பிரதாப் ராமானுஜன் தமிழோசையில் கருத்து வெளியிடுகையில், சார்க் மாநாடு நடைபெறவிருக்கும் நிலையில், தலைநகரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக்கப்படுகின்றன என்றும் கொம்பெனித் தெரு பகுதியானது அதி உயர் பாதுகாப்பு வலய பகுதிக்குள் வருகின்றபடியால் அங்கிருப்பவர்களை வெளியேற்ற வேண்டிய ஒரு சூழல் உருவாகியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

கொம்பெனித் தெருவில் கட்டப்பட்டுள்ள வீடுகள், ரயில்வே துறைக்கு சொந்தமான நிலத்தில் முறையான அனுமதியின்றி கட்டப்பட்ட வீடுகள் என்றும், இங்கு வசிப்பவர்களுக்கு மாற்றிடத்தில் வீடுகள் கட்டித்தருகின்ற பணி நடந்துவருவதாகவும் அவர் தெரிவித்தார்.

தற்போது கொம்பெனித் தெருவில் வசிக்கும் மக்களுக்கு மாற்றிடத்தில் கட்டப்பட்டுவரும் நிரந்தர வீடுகள் கிடைக்கும் வரையில், அவர்கள் தாங்களாக பார்த்துச் செல்லும் வீட்டுக்கு வாடகை கொடுப்பதில் அரசாங்கம் உதவி செய்யும் என்றும், அல்லது அரசாங்கம் அமைத்துள்ள தற்காலிக குடியிருப்பில் அவர்கள் தங்கலாம் என்றும் ராமானுஜம் கூறினார்.


பின்னூட்டமொன்றை இடுக