இலங்கையின் வடக்கே தொடரும் மோதல்
![]() |
![]() |
விமான தாக்குதல் |
இலங்கையின் வடக்கே விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள கிளிநொச்சி மாவட்டம் வட்டக்கச்சி பகுதியில் ஞாயிற்றுகிழமை பிற்பகல் விடுதலைப் புலிகளின் உயர்மட்டத்தினர் சந்திப்பு நடத்தும் முக்கிய இடத்தின் மீது விமானக் குண்டு வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டதாகப் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்திருக்கின்றது.
இரணைமடுகுளத்திற்கு வடகிழக்கே சுமார் 8 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள வட்டக்கச்சி பிரதேசத்திலேயே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்திருக்கின்றது.
எனினும், வட்டக்கச்சி மக்கள் குடியிருப்பு பகுதியில் ஞாயிற்றுகிழமை மதியம் இரண்டு குண்டு வீச்சு விமானங்கள் இரண்டு தடவைகள் தாக்குதல் நடத்தியதாகத் கூறியிருக்கும் விடுதலைப் புலிகள் இந்தத் தாக்குதலில் வயோதிபர் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாகத் தெரிவித்திருக்கின்றனர்.
3 வீடுகள் தரைமட்டமாகியிருப்பதுடன் 15 வீடுகள் இந்தத் தாக்குதலில் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
இதற்கிடையில், மன்னார், வவுனியா, வெலிஓயா ஆகிய பிரதேசங்கள் அடங்கிய வன்னிக்களமுனைகளில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக இராணுவத்தினர் மேற்கொண்டு வரும் இராணுவ நடவடிக்கையில் சனிக்கிழமை இடம்பெற்ற மோதல்களில் 19 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டிருப்பதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.
இந்த மோதல்கள் குறித்து விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து தகவல்கள் எதுவும் உடனடியாக வெளியாகவில்லை.
இலங்கையின் வடக்கே மோதல் தொடர்கிறது
![]() |
![]() |
இலங்கை இராணுவத்தினர் |
இலங்கையின் வடக்கே விடுதலைப் புலிகளின் பிரதேசமாகிய வன்னிப்பகுதிக்கான ஒரேயொர நுழைவாயிலாகத் திகழும் ஓமந்தை சோதனைச்சாவடி இன்று சனிக்கிழமை நான்காவது நாளாக மூடப்பட்டிருந்த போதிலும், வன்னிப்பிரதேசத்தில் இருந்து அவசர மேல் சிகிச்சைக்கான 18 நோயாளிகள் இந்த சோதனைச்சாவடியின் ஊடாக வவுனியா மற்றும் அனுராதபுரம் வைத்தியசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்படுவதற்காக இராணுவத்தினரால் அனுமதிக்கப்பட்டுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.
இதேவேளை, வெலிஓயா பிரதேசத்தில் விடுதலைப் புலிகளுக்கு எதிராகத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் இராணுவ நடவடிக்கைகளில் அரச படையினர் விடுதலைப் புலிகளின் மைக்கல் தளம் எனப்படும் முக்கிய தளம் ஒன்றினை நேற்று கைப்பற்றியிருப்பதாகப் பாதுகாப்பு அமைச்சகம் இணையத்தள அறிக்கையொன்றில் தெரிவித்திருக்கின்றது. இந்த நடவடிக்கையின்போது விடுதலைப் புலிகளுடன் மூன்று தினங்களாக இடம்பெற்ற சண்டைகளில் குறைந்தது 17 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டிருக்கலாம் எனவும் பாதுகாப்பு அமைச்சகம் கூறியிருக்கின்றது,
எனினும் இது குறித்து விடுதலைப் புலிகளின் தரப்பிலிருந்து தகவல்கள் எதுவும் உடனடியாக வெளியாகவில்லை.
மன்னார், வவுனியா வெலிஓயா மற்றம் முகமாலை முன்னரங்க பகுதிகளில் நேற்று இடம்பெற்ற மற்றைய வெவ்வேறு தாக்குதல்களில் 37 விடுதலைப் புலிகளும், இராணுவச் சிப்பாய் ஒருவரும் கொல்லப்பட்டிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.
இதற்கிடையில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள கிளிநொச்சி, பரந்தன், முல்லைத்தீவு உட்பட்ட பல்வேறு பிரதேசங்களிலும் சனிக்கிழமை கரும்புலி தின வைபவங்கள் பரவலாக அனுட்டிக்கப்பட்டதாக வன்னித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மட்டக்களப்பில் பாதுகாப்பு அதிகரிப்பு
![]() |
![]() |
நாவலடியில் சோதனைச்சாவடி |
இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்தில் மீன்டும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப் படையினருக்கு மேலதிகமாக தற்போது இராணுவத்தினரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதால் சில இடங்களில் புதிதாக இராணுவ முகாம்களும் அமைக்கப்பட்டுள்ளன.வீதித் தடைகளும் நிரந்தர வீதிச் சோதனைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளதோடு, சந்தேகத்திற்கிடமான இடங்களில் சுற்றி வளைப்பு தேடுதல்களும் அங்கு இடம் பெற்று வருவதாக தகவல்கள் மூலம் தெரிகின்றது.
இம்மாவட்டத்தில் அண்மைக் காலங்களில் பாதுகாப்பு தரப்பினருக்கு எதிராக மேற்கொள்ளபடப்ட சில தாக்குதல்கள் மற்றும் விடுதலைப் புலிகளின் ஊடுருவலை தடுப்பதற்காகவே இந்த நடவடிக்கை என பாதுகாப்பு தரப்பு இது பற்றி கூறுகின்றது.
ஆனால் பொது மக்களைப் பொறுத்த வரை பாதுகாப்பு கருதி எடுக்கப்படும் இந்நடவடிக்கைகளினால் தமது அன்றாட நடவடிக்கைகள் பாதிக்கப்படுவதாகவும் இதனால் தங்களிடையே ஒரு அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.