வன்னி மோதல்களால் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்துள்ளதாக விடுதலைப்புலிகள் கூறுகிறார்கள்
இலங்கையின் வடக்கே விடுதலைப் புலிகளுக்கு எதிராக அரச படைகள் மேற்கொண்டுள்ள இராணுவ நடவடிக்கை காரணமாக ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் வன்னிப் பிரதேசத்தில் இடம்பெயர்ந்துள்ளதாக விடுதலைப் புலிகளின் சமாதானச் செயலகம் தெரிவித்திருக்கின்றது.
வன்னிப்பிரதேசத்தின் மீது விதிக்கப்பட்டுள்ள பல்வேறு தடை நடவடிக்கைகளினால், இடம்பெயர்ந்துள்ள மக்களுக்குத் தேவையான அவசர நிவாரண உதவிகளை வழங்குவதில் உள்ளுர் மற்றும் சர்வதேச தொண்டு நிறுவனங்களும் பிரச்சினைகளை எதிர்நோக்கியிருப்பதாகவும் விடுதலைப் புலிகளின் சமாதானச் செயலகம் கூறியிருக்கின்றது.
இடம்பெயர்ந்துள்ளவர்களில் 35,000 பேர் முன்பள்ளிகளுக்குச் செல்லும் சிறுவர்கள் உள்ளிட்ட மாணவர்கள் என்றும், இடப்பெயர்வு காரணமாக மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
அரசாங்கம் வன்னிப் பிரதேசத்தில் பொருட்களுக்கான தட்டுப்பாட்டைச் செயற்கையாக ஏற்படுத்தியிருப்பதனால், இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு உடனடி தேவையாகிய உணவுப் பொருட்களைக் கூட வழங்க முடியாத நிலையேற்பட்டிருப்பதாகவும், அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
வன்னிப் பிரதேசத்திற்குத் தேவையான அத்தியாவசிய பொருட்களை அப்பகுதிக்குக் கொண்டு செல்வதில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள் காரணமாக அங்குள்ள பெரும் எண்ணிக்கையிலான இடம்பெயர்ந்த மக்களுக்கான அவசர நிவாரண உதவிகளைச் செய்வதில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளதுடன், பற்றாக்குறையும் நிலவுவதாகவும் அங்குள்ள அரச அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.
கறுப்பு ஜூலையின் கால் நூற்றாண்டு- சிறப்புப் பெட்டகம்
இலங்கையில் 1983 ஆம் ஆண்டு கலவரம் நிகழ்ந்து 25 ஆண்டுகள் கடந்துவிட்டன.
ஆனால், அதனால் ஏற்பட்ட பாதிப்புகளும், இழப்புகளும் பாதிக்கப்பட்ட தமிழர்களின் மனதில் ஆறாத வடுக்களாகப் பதிந்துவிட்டன.
இந்த நிலையில், அந்த நிகழ்வுகளை திரும்பிப் பார்ப்பதுடன், அதன் விளைவுகள் குறித்தும், இலங்கையில் இன ஐக்கியத்துக்காக எடுக்கப்படக்கூடிய முயற்சிகள் குறித்தும் ஆராயும் பெட்டகத்தின் முதலாவது பகுதியை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.