முதுமையும்…இளமையும்..!
கோவை, ஏப்.3: “95 வயது மூத்த தலைவர் முதல் 28 வயது இளைஞர்கள் வரை மொத்தம் 787 பிரதிநிதிகள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டில் பங்கேற்றனர்.
கோவையில் ஆறு நாள்கள் நடைபெற்ற இம் மாநாட்டின் மூத்த பிரதிநிதி மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சமர் முகர்ஜி. கேரளத்தைச் சேர்ந்த கே.ஐஷபீர், எம்.சுவராஜ் இருவரும் பிரதிநிதிகளில் மிகவும் இளையவர்கள். மேற்கு வங்கத்தில் இருந்து வந்துள்ளமாணவர் ரித்ரபிரதா பானர்ஜி சிறப்பு அழைப்பாளர்களில் மிக இளையவர்.
மார்சிஸ்ட் “எம்.ஜி.ஆர்.’…: அதேபோல கட்சியில் நீண்ட நாள்களாகப் பணியாற்றி வரும் ஆர்.உமாநாத், இம் மாநாட்டில் பிரதிநிதியாகப் பங்கேற்றுள்ளார். சிபிஎம்மின் எம்ஜிஆர் என அழைக்கப்படும் இவர், 1939-ல் இருந்து கட்சிப் பணியாற்றி வருகிறார். இவரது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் கட்சிப் பணியில் இருக்கின்றனர்.
இவரது மனைவி பாப்பா உமாநாத் சட்டப் பேரவை உறுப்பினராக இருந்தவர். மார்க்சிஸ்ட் அகில இந்திய மாநாட்டில் மத்தியக் குழுவின் சிறப்பு அழைப்பாளராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர்களது மகள் உ.வாசுகி மத்தியக் குழு உறுப்பினராகவும், ஜனநாயக மாதர் சங்கத் தலைவியாகவும் உள்ளார்.
மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களான ஆர்.உமாநாத், என்.சங்கரய்யா இருவரும் இதுவரை நடந்துள்ள 19 அகில இந்திய மாநாடுகளில் ஒரு மாநாட்டைத் தவிர அனைத்து மாநாடுகளிலும் பங்கேற்றுள்ளனர். மூத்த தலைவர்களான சுர்ஜித், ஜோதிபாசு இருவரும் கோவை மாநாட்டில் மட்டும் தான் பங்கேற்கவில்லை. குறுகிய கால கட்சி அனுபவம் உள்ள தில்லியைச் சேர்ந்த ஷீபா பருக்கி மாநாட்டில் பிரதிநிதியாக பங்கேற்றுள்ளார்.
இம் மாநாட்டில் பங்கேற்ற 787 பிரதிநிதிகளில் 87 பேர் பெண்கள். கடந்த மாநாட்டை ஒப்பிடும்போது பெண் பிரதிநிதிகளின் எண்ணிக்கை 2 சதவீதம் உயர்ந்துள்ளது.