Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Posts Tagged ‘Amrutha’

Interview with Director Sasi

Posted by Snapjudge மேல் ஏப்ரல் 29, 2009

நல்ல திரைப்படம் எடுப்பதற்கு மெளனம் போதும்!
இயக்குநர் சசி

சொல்லாமலே’, ‘ரோஜாக்கூட்டம்’, ‘டிஷ்யூம்’, ‘பூ’ ஆகிய வெவ்வேறு களங்களைக் கொண்ட நான்கு படங் களை இயக்கியவர், இயக்குநர் சசி. எதையும் புதிதாக, இலக்கியச் சாய லோடு சொல்லவேண்டும் என்கிற துடிப்புக் கொண்டவர்; எளிமை யானவர். ‘சொல்லாமலே’ படத் துக்கு பல்வேறு முனைகளிலிருந்து விதவிதமாகத் தாக்குதல்கள் வந்தபோதும் கொஞ்சம்கூடப் பதறாமல் பொறுப்பாகத் தன் பக்கத்து நியாயத்தை எடுத்துச் சொன்னவர்.

சமீபத்தில் வெளியான இவருடைய ‘பூ’ படம் இவருடைய அடுத்த பட த்தைப் பற்றிய எதிர்பார்ப்பைக் கூட் டியிருக்கிறது. ‘பூ’ எழுத்தாளர் ச. தமிழ்செல்வனின் ‘வெயிலோடு போய்’ சிறுகதையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டிருந்தது. இதோ அம்ருதாவுக்காக தமிழ்த் திரை யுலகிற்கு மகுடம் சூட்டிய சசியுடன் நேர்காணல்.

பாலு சத்யா: ச. தமிழ்ச்செல்வனின் ‘வெயிலோடு போய்’ சிறுகதையை முதலில் எப்போது படிச்சீங்க?

சசி: நான் கல்லூரி முடிச்சிட்டு ஒரு அக்ரிகல்ச்சுரல் கம்பெனில வேலை செஞ்சுக்கிட்டு இருந்தேன். வேலை காரணமாக நிறைய கிராமங்களுக்குப் போக வேண்டியிருந்தது. அப்போது ஒரு பயணத்தில் படிச்ச புத்தகம்தான் கி.ரா. தொகுத்திருந்த ‘கரிசல் காட்டு சிறுகதைகள்.’ அதுல முதல் கதை ‘வெயிலோடு போய்.’ அதைப் படிச்சவுடனே எனக்குள்ள ஒரு பெரிய பாதிப்பை அது ஏற்படுத்திச்சு. என் நண்பன் ஒருத்தன்கிட்ட அந்தப் புத்தகத்தைக் குடுத்து அந்தக் கதைய படிக்கச் சொன்னேன். அவன், ‘அந்தக் கதையைப் படிச்சிட்டு நேத்து பூரா அழுதேன்’னு மறுநாள் வந்து சொன்னான். எனக்கு ஆச்சரியமாவும் சந்தோஷமாவும் இருந்தது. ஏன்னா, முதல் நாள் அந்தக் கதையைப் படிச்சுட்டு ராத்திரி பூரா நான் அழுதுக்கிட்டு இருந்தேன். எனக்கு பாதிப்பை ஏற்படுத்திய ஒரு படைப்பு, அதே பாதிப்பை இன்னொருத்தருக்கும் ஏற்படுத்தும் போது, இதை எல்லா ருக்கும் கொண்டுபோய் சேர்க்க முடியுங்கற நம்பிக்கை ஏற்பட்டுச்சு. அப்போதே எனக்கு டைரக்டராகணும் என்கிற எண்ணம் இருந்ததால், இந்தக் கதையைத்தான் முதல்ல படமாக பண் ணணும்னு நினைச்சேன். கதைல வர்ற மாரியோட மனசு, என் டைரக்டர் கனவை நோக்கி இன்னும் தூண்டிச்சு.

பாலு சத்யா: தமிழ்ச்செல்வன் வணிகப் பத்திரிகைகளுக்குத் தன் படைப்பைத் தருவதற்கே யோசிப்பவர். அவர் எப்படி இந்தக் கதையைப் படமாக்க அனுமதி கொடுத்தார்?

சசி: இந்தக் கதையை படமா பண்ணணும்ங்கற எண்ணம் இருந்தாலும், அதுக்கான உரிமை எதையும் நான் வாங்கல. பதினஞ்சு வருஷமா என் மனசுக்குள்ளயே வச்சிருந்தேன். இதை யாரும் படமா பண்ண மாட்டாங்கங்கற நம்பிக்கைதான் காரணம். ஒரு பெண்ணோட கதையை படம் பண்ணணும்னு இங்க யாரும் அவ்வளவு சீக்கிரம் நினைக்கறதில்ல. ‘டிஷ்யூம்’ படத்துக்கு முதல்ல நான் பண்ணியிருந்த திரைக்கதை எனக்குப் பிடிக்கல. பதினேழு நாளுக்கு அப்புறம் படப்பிடிப்பை நிறுத்திட்டேன். ‘இதை வேற மாதிரி செய்யணும்’னு எனக்கே தோணிச்சு. ஒரு கட்டத்துல ‘டிஷ்யூமை’ தொடரலாமா, அல்லது வேற கதை எதையாவது புதுசா செய்யலாமான்னுகூட யோசிக்க ஆரம்பிச்சுட்டேன். அப்போதான் வெயிலோடு போய் கதையை பற்றி, மறுபடியும் ரொம்ப நாளைக்கப்புறம் யோசிச்சேன். கதையோட உரிமையை முதல்ல வாங்கிடணும்னு என் உதவியாளர் மூர்த்தியுடன் சென்று தமிழ்ச்செல்வனை சந்திச்சேன். விஷயத்தைச் சொன்னதும் ரொம்ப ஆச்சரியமா பாத்தார். ‘என்னங்க கண்டிப்பா வேணுமா?’ன்னு கேட்டார். ‘ஆமாங்க வேணும். என்னை இந்தக் கதை ரொம்ப பாதிச்சிடுச்சு’னு சொன்னேன். ‘சரி எடுத்துக்கோங்க’ன்னு சொல்லிட்டார். ‘சார்… இந்த உரிமை…’ன்னு கேட்டேன். ‘அதெல்லாம் ஒண்ணும் வேணாங்க. நீங்க படம் பண்ணுங்க’ன்னு ரொம்ப சாதாரணமா சொன்னார். அந்த நேரத்தில் என்னால என்ன முடிந்ததோ அந்தத் தொகையை, ‘ரொம்ப சின்னத் தொகைதான் சார். என்னோட திருப்திக்காக நீங்க வாங்கித்தான் ஆகணும்’னு சொல்லி முன் பணமாகக் குடுத்து, அந்தக் கதையை வாங்கினேன்.

பாலு சத்யா: மலையாளத்தில் எழுத்தாளர் தகழியோட மூணு சிறுகதைகளைத்தான் அடூர் கோபாலகிருஷ்ணன் ‘நாலு பொண்ணுகள்’ படமா பண்ணியிருந்தார். ஏற்கெனவே, சத்யஜித்ரேவும் சிறுகதைகளைத் தழுவி படம் பண்ணியிருக்கிறார். ‘பூ’ படத்துக்கு, இந்த மாதிரி ஏதாவது படங்கள் தூண்டுதலாக இருந்ததா?

சசி: எனக்கு ‘மதிலுகள்’ தான் பெரிய தூண்டுதல். மத்த படங்களைவிட அதுலதான் அடூர் கோபால கிருஷ்ணனோட கொஞ்சம் வேகமான முகம் இருக்கும். அதோட அதுக்குள்ள ஒரு காதல் இருக்கும். மறக்கவே முடியாத ஒரு காதல். ரெண்டு பேருமே பார்த்துக்காத ஒரு காதல் கதை. கடைசியில ஒரு குச்சி மேல மேல போய்ட்டு வர்ற அந்த காட்சியை இன்னும் என்னால மறக்க முடியல.

பாலு சத்யா: ‘மதிலுகள்’ சிறுகதை இல்ல; அது ஒரு குறுநாவல்.

சசி: ஆமாம். புதுமைப்பித்தனோட ‘சிற்றன்னை’யை தழுவி மகேந்திரன் ‘உதிரிப்பூக்கள்’ எடுத்த மாதிரி. ஆனா, இன்னொருத்தர் இப்படி பண்ணியிருக்காங்க, நாமளும் அப்படிப் பண்ணுவோம்னு இல்ல; ‘பூ’ படத்துக்கான தூண்டுதல் முழுக்க முழுக்க ‘வெயிலோட போய்’ சிறுகதை என்னை பாதிச்சதில் இருந்து வந்தது என்பதுதான் உண்மை.

பாலு சத்யா: ஒரு நாவலை சினிமாவுக்கு ஏற்ற திரைக்கதையாக பண்ற தேகஷ்டமான விஷயம். கேரளாவுலயும் மேற்கு வங்காளத்துலயும் இந்த முயற்சியில வெற்றி பெற்றிருக்காங்க. ஆனாலும், அவற்றின் மேல விமர்சனங்களும் இருக்கு. ‘பதேர் பாஞ்சாலி’, ‘அபராஜிதா’வுல கூட விபூதி பூஷன் பந்தோபாத்யாவோட நாவலை முழுசா சத்யஜித்ரே கொண்டு வரலைங்கற மாதிரியான குறைகள் எல்லாம் இருக்கு. அப்படி இருக்கறப்போ, ஒரு சிறுகதையை திரைக்கதை பண்றது சாதாரண விஷயம் இல்ல. சிறுகதைல ஒரு சம்பவம், அதற்கான பின்புலம் மட்டும்தான் இருக்கும். நீங்க எப்ப ‘வெயிலோட போய்’ சிறுகதையை திரைக்கதையா வடிவமைச்சீங்க?

சசி: என்னைப் பொறுத்தவரைக்கும் படம் பண்றதுக்கு ஒரு சிறுகதை யேகூடத் தேவையில்ல. ‘வெயிலோட போய்’ சிறுகதை அஞ்சரைப் பக்கம் இருக்கு. ஒரு தூண்டுதல் கிடைக்கறதுக்கோ, அதுல ஒரு உயிர் இருக்குன்னு தெரிஞ்சிக்கறதுக்கோ அஞ்சரைப் பக்கம் தேவையில்ல. ரெண்டு பாத்திரங்களுக்கு இடையே இருக்கற மௌனம் போதும். அந்த மௌனத்துலருந்தேகூட கதையை எடுக்கலாம். அதை உணருகிற சக்தி, ஞானம் ஒரு படைப்பாளனுக்கு வேணும்; அவ்வளவுதான். ‘வெயிலோடு போய்’ சிறுகதையில ‘மாரி’ங்கற பாத்திரத்தைப் பற்றி, அதற்கான விவரணங்கள் மட்டும்தான் இருக்கும். அப்புறம் அவளது அம்மா மற்றும் அண்ணன்காரனோட உணர்வும் இருக்கும். எனக்கு மாரியோட உணர்வுகள்தான் வேணுங்கறப்போ அதுல சினிமாவுக்கு என்ன தடை இருக்குன்னு பார்த்தேன். மாரி, மாமன் மகனைக் காதலிக்கறா. சின்ன வயசுலருந்தே காதலிச்சுட்டு வர்றா. படம்னு வர்றப்போ ஒரு எதிர்மறை பாத்திரம், முக்கியப் பாத்திரம் வேணும் இல்லையா? அதுக்கு மாரியுடைய கனவையும், தங்கராஜ் அப்பாவோட கனவையும் வச்சுக்கிட்டேன். தங்கராஜோட அப்பா ஒரு மாட்டு வண்டிக்காரர். சுயமரியாதை உள்ள ஆளா, மரியாதையை எதிர்பார்க்கிற ஆளா காண்பிக்கப்பட்டுக்கிட்டே வந்து, மரியாதை பணத்தின் மூலமாத்தான் வருதுன்னு உணர்றாரு. ‘என் பையனை எஞ்சினியரிங் படிக்க வச்சிருக்கேன். அவன் சம்பாதிக்கிற பணத்தின் மூலமா எனக்கான மரியாதை கிடைக்கும்’ன்னு நினைக்கிறார். பையன் சொல்றான்: ‘நீங்க நினைக்கிற மாதிரி நான் கம்ப்யூட்டர் எஞ்சினியரிங் படிக்கல. மெக்கானிக்கல் எஞ்சினியரிங்தான் படிச்சிருக்கேன். எனக்கு சம்பளம் கம்மியாத்தான் கிடைக்கும்.’ உடனே அவர் உடைஞ்சு போறார். அவரோட கனவுக்கோட்டை தகர்ந்த பிறகு, அவருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வருது. அவரோட முதலாளி, தன் பையன் சரியில்லைங்கறதால இவரோட மகனை மருமகனா ஆக்கிக்க விரும்பறார்; தன்னோட சொத்தை காப்பாத்திக்கறதுக்கு. அப்போ பையனுக்கும் அவருக்கும் முரண்பாடு வருது. இப்படி நான் ஒவ்வொரு கனவையும் வளத்துக்கிட்டே போறேன். மாரியோட கனவு எப்படி நேர்மையானதாகவும் உறுதியானதாகவும் இருந்ததோ, அதே மாதிரி தங்கராஜ் அப்பாவோட கனவும் நியாயமானதா இருக்கும். இந்த ரெண்டு கனவும் சந்திச்சுக்குற புள்ளிதான் தங்கராஜ். அவனுக்குப் பணக்காரப் பொண்ணும் தேவையில்ல; மாரி மாதிரி பொண்ணும் தேவையில்ல. படிச்ச, கம்ப்யூட்டர் ஆபரேட் பண்ணத் தெரிஞ்ச ஒரு சராசரிப் பொண்ணுதான் அவனுக்குத் தேவை. இந்த மூன்று புள்ளியும் எப்படி இணையுது, அதுக்கப்புறம் என்ன நடக்குதுங்கறதுதான் கதை. எனக்கு இந்த கரு கிடைச்சதுமே இது போதும், படத்துக்கான எல்லாம் கிடைச்சிடுச்சுன்னு முடிவு பண்ணிட்டேன். அதனாலதான் ஒரு படத்துக்கு மௌனம் போதும்னு சொல்றேன்.

பாலு சத்யா: தமிழ்ச்செல்வன் படத்தைப் பாத்துட்டு என்ன சொன்னார்?

சசி: நான் படம் முடிஞ்சு வெளில வரும்போது பாத்தேன்; அவர் கண்ணுல கண்ணீர் வந்துக்கிட்டு இருந்துது. ‘என்னோட சிறுகதையை கௌரவப்படுத்திட்டீங்க; என்னை கௌரவப்படுத்திட்டீங்க. இனிமே இது என்னுடைய மாரி இல்ல. நம்முடைய மாரி’ன்னு சொன்னார். பெரிய வார்த்தை சார் அது. நான் இந்தப் படத்தை பண்றப்போ, இது மக்கள்ட்ட எந்த அளவுக்கு வரவேற்பைப் பெறப் போகுதுன்னு கவலப்படல. எனக்கு இருந்த ஒரே குறிக்கோள், ஒரு படைப்பாளி என்னை பாதிச்சிருக்கார்; அந்தப் படைப்பாளியை நான் எந்த விதத்துலயும் அசிங்கப்படுத்திடக் கூடாது; அவரை எந்த விதத்துலயும் குறைச்சு மதிப்பிட்டிடக்கூடாது; அவ்வளவுதான். இந்தப் படம் நல்லா வரலைன்னா, அது நான் ச. தமிழ்ச்செல்வன்ங்கற படைப்பாளிக்குப் பண்ற துரோகம். அதுனால, இந்தப் படத்தால் எந்த விதத்துலயும் யாரும் அவரை குறைச்சு மதிப்பிட்டுடக்கூடாது; அவருக்கு இந்தப் படத்துல திருப்தி வரணுங்கறதுலதான் ரொம்பக் குறியா இருந்தேன். அதுல நூறு சதவிகிதம் வெற்றி அடைஞ்சுட்டேன்ங்கறதுதான் என்னோட சந்தோஷம்.

பாலு சத்யா: மோகமுள் படத்தையும் சொன்னாங்க, படிச்ச மாதிரி இல்ல படம்னு. அது மாதிரி ‘பூ’வைப் பற்றி யாராவது…?

சசி: இதுவரைக்கும் எத்தனையோ பேர் இந்தப் படத்தைப் பாராட்டி இருக்காங்க. ஆனா, ஒரே ஒருத்தர்கூட குறையா சொல்லலை. அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் படத்தைப் பாத்துட்டு சொன்னார்: ‘படத்தைப் பாத்துட்டு மறுபடியும் போய் நான் ‘வெயிலோடு போய்’சிறுகதையைப் படிச்சேன். மாரி எங்க உக்காரணும்னு நினைச்சேனோ, அந்த இடத்துலதான் அவங்க உக்காந்தாங்க. நீங்க பண்ணினது மிகச் சரியானது. எப்பிடி சார் எழுத்துக்கு நடுவுல போய் கேமராவை வச்சீங்க?’ எனக்கு கிடைத்த மிகப் பெரிய அங்கீகாரமா நான் இதை நினைக்கிறேன்.

பாலு சத்யா: இலக்கியத்துக்கும் சினிமாவுக்கும் ஒரு உறவு இருக்கு, இல்லியா? அதைத்தானே நீங்க படமாக்கியிருக்கீங்க?

சசி: ஆமா, கண்டிப்பா. சினிமாவை மட்டுமே பாத்து படம் பண்ற இயக்குநர்கள் நிறைய பேர் வந்திருக்காங்க. ஆனா, என்னால அப்படி முடியாது. எனக்கு, கத்துக்கறதுக்காக சினிமா பாக்கறது முக்கியம். அதே சமயம், இயல்பா இருக்கணும். இதுல ஏதாவது ஒரு விஷயம் போய், என் ஆழ்மனசுல இருக்கும். அதே மாதிரி தான் இலக்கியமும். நான் சின்ன வயசுலருந்தே படிச்ச புத்தகங்களோட தாக்கம் எனக்குள்ள இருக்கு. படிப்பு என் படைப்புக்கு ரொம்ப ரொம்ப உதவியா இருக்குது. அதனோட செழு மைக்கும் அழகுக்கும் அடிப்படையா இருக்கறது இலக்கியம்தான். படிக்கறது, பாக்கறது, கவனிக்கறது, யோசிக்கறது… இது எல்லாமே சினிமா சார்ந்த ஒரு படைப்பாளனுக்கு ரொம்ப முக்கியம்.

பாலு சத்யா: ‘சொல்லாமலே’, ‘டிஷ்யூம்’, ‘ரோஜாக்கூட்டம்’ போன்ற படங்களுக்கு நீங்க படிச்ச இலக்கியம் எப்படி உதவி இருக்கு?

சசி: என்னுடைய எந்தப் படமும் இலக்கிய பாதிப்பு இல்லாம வந்ததே கிடையாது. ஏதாவது ஒரு காட்சியில, ஏதாவது ஒரு வசனத்துல, ஏதாவது ஒரு கோணத்துல இலக்கியம் அடிநாதமா உதவியிருக்கு. இலக்கிய வாசிப்பால் சேர்ந்த அழகியல் மறைமுகமா என் படைப்புல வந்துக்கிட்டு இருக்கு. அது வெளியில சொல்லமுடியாத ஒரு விஷயம். இதையெல்லாம் படிச்சதுனால இப்படி பண்ணியிருக்கேன்னு யார்கிட்டயும் சொல்லமுடியாது. வெளிப்படையா சொல்ற மாதிரியும் சில விஷயங்கள் இருக்கு.

பாலு சத்யா: உங்களைப் பத்தி, உங்க குடும்பப் பின்னணியையும் நீங்க சினிமாவுக்கு வந்ததையும் பத்திக் கொஞ்சம் சொல்லுங்களேன்.

சசி: நான் பொறந்தது மேட்டூர். அங்க ஏழாம் கிளாஸ் வரைக்கும் படிச்சேன். அப்பா ஒரு பவர் லூம் வீவர். ஒரு மில்லுல வேலை பாத்துக்கிட்டு இருந்தவர், வயித்து வலி காரணமா அந்த வேலையை விட்டுட்டு, சேலத்துக்கு வந்து ஒரு மளிகைக் கடை வச்சார். எனக்கு ரெண்டு தம்பி, ரெண்டு தங்கச்சிங்க. நாங்க முதல் தலைமுறையா படிக்கற குடும்பம். ப்ளஸ்டூ வரைக்கும் சேலம் குகை ஹைஸ்கூல்ல படிச்சேன். பிறகு அஞ்சல் வழியில் டிகிரி படிச்சேன். அப்புறம் ஒரு அக்ரிகல்ச்சுரல் கம்பெனில எனக்கு வேலை கிடைத்தது. அங்க ஒரு நாலு வருஷம் போச்சு. அப்போ நான் எழுதின, என்னோட முதல் சிறுகதையை ஆனந்த விகடன்ல சிறப்புச் சிறுகதையா போட்டாங்க. அது எனக்குப் பெரிய அங்கீகாரம். ஒரு தைரியம் வந்துடுச்சு. அந்த சந்தர்ப்பத்துல ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’ வந்தது. படத்தைப் பாத்துட்டு வந்து என்னோட நகத்தை கட் பண்ணினேன்; புத்தக அலமாரியை சுத்தமா அடுக்கி வச்சேன். ஒரு நல்ல சினிமா என்னை சந்தோஷப்படுத்துது; என்னை நல்லவனா வச்சிருக்குது. அதனால என்னோட இலக்கு சினிமாதான்னு முடிவு பண்ணினேன். அதுக்கப்புறம்தான் ‘வெயிலோடு போய்’ படிச்சேன். இந்த மாரியை உலகம் பூரா கொண்டு போகணும்ங்கற வெறி வந்தது. நான் இயக்குநராக முயற்சி பண்றேன்னவுடனே எங்க அப்பாவுக்கு ஒரு பயம் வந்துச்சு. அவர் கேட்டார்: ‘அடுத்த மாசம் வாடகையை யாரு குடுப்பாங்க?.’ அப்படிக் கேட்டுட்டாலும் பையனுக்கு உதவணுங்கற எண்ணம் அப்பாவுக்கு இருந்தது. ‘நான் பாத்துக்கறேன். நீ போய்ட்டு வா’ன்னு என் தம்பி சொன்னான். சென்னைக்கு வந்து, எல்லா சினிமாக்காரர்களுக்கும் இருப்பது போல் ஒரு நீண்ட போராட்டத்துக்கு பிறகு, இயக்குநர் வஸந்த்கிட்ட உதவி இயக்குநரா ஆயிட்டேன். பொதுவா டைரக்டர்ங்க எல்லாருமே இப்பிடி பண்ணணும், அப்படி எடுக்கணும்னு கனவுகளோடதான் சினிமாவுக்கு வருவாங்க. ஆனா, சினிமா உலகம் வேற மாதிரி இருக்கும். நீங்க நினைக்கிற சினிமாவுக்கும் இங்க இருக்கறதுக்கும் அவ்வளவு வித்தியாசம் இருக்கு. இந்த சினிமா உங்களை கன்னத்துல அறையும்; பொல்யூட் பண்ணும். ஆனாலும், இன்றைக்கு வரைக்கும் நான் என் அடையாளத்தை இழக்காம இருக்கறதுக்கு வஸந்த் சார் ஒரு காரணம். அவர் காரணமாகத்தான் நான் இன்னும் அழகியலோட, நல்ல படம் பண்ணணுங்கற தாக்கத்தோட இருக்கேன். அவருக்குப் பிறகு, டைரக்டர் பாக்யநாதன்கிட்ட ‘என்றும் அன்புடன்’ படத்துல பணியாற்றினேன். அதுக்கப்புறம் கதிர் சார்கிட்ட ‘உழவன்’ படத்துல வேலை பார்த்தேன். அப்போ என் தங்கச்சி கல்யாணத்துக்கு என் அப்பா பணம் கேக்கறார். உன்னுடைய பங்கா நீ ஒரு தொகையைக் குடுக்கணும். தம்பிங்களை மட்டும் செலவு செய்யச் சொல்றது நல்லா இல்லன்னு சொன்னார்.

பாலு சத்யா: தம்பி என்ன வேலை பாத்துக்கிட்டு இருந்தார்?

சசி: அவர் ஒரு எலக்ட்ரிக்கல் காண்ட்ராக்டர். அப்போ கட்டாயமா நான் ஏதாவது ஒரு படத்துல கமிட் பண்ணியே ஆகணுங்கற சூழல். நான் பாக்கறதுக்கு ரொம்பச் சின்னப் பையன் மாதிரி இருப்பேன். அதனால, யார் கதை கேட்டாலும் என்னதான் கதை சொன்னாலும் இவன் படம் பண்ணமாட்டான்னுதான் நினைப் பாங்க. அதனாலயே கண்ணாடி போட ஆரம்பிச்சேன். அப்போ சௌத்ரி சார் தான் இளைஞர்களுக்கு படம் பண்ற வாய்ப்பைக் குடுத்துக்கிட்டு இருந்தார். ‘லவ் டுடே’ பாலசேகரன் என்னை சௌ த்ரி சார்கிட்ட கூட்டிட்டுப் போனார். கதையை சொல்லி முடிச்சதும், நீங்க படம் பண்ணுங்கன்னு சொல்லிட்டார். இதுதான் சினிமாவுக்கு வந்த கதை.

பாலு சத்யா: ‘சொல்லாமலே’ படத் தைப் பத்தி, காதலுக்காக நாக்கை எல்லாம் வெட்டிக்கணுமான்னு ஒரு கருத்து இருக்கே?

சசி: ஒருவரை உண்மையா நேசிச்சோம்னா, அவரை ஏமாத்த முடியாது; அது உண்மையாத்தான் இருக்க வைக்குதுங்கறதைதான் நான் இந்தப் படத்துல சொல்லியிருக்கேன். சரி, காதலை விட்டுடுவோம். ஒரு ஆசிரியர், அவர்கிட்ட ஒரு பையன் வந்து சேர்றான். ஏதோ ஒரு காரணத்துக்காக, அவர்கிட்ட அவன் ஊமை ன்னு நடிச்சிக்கிட்டு இருக்கான். கடைசியில அவரோட உண்மையான அன்பு புரிஞ்சு போய், அப்போ தன் நாக்கை கட் பண்ணிக்கிட்டான்னு வச்சுக்கோங்களேன். அப்போ இதுல எந்தவிதமான தப்பும் தெரிஞ்சிருக்காது. காதல்னு சொன்னவுடனேதான் உங்களுக்குத் தவறாப்படுது. குரு பக்திக்கும் காதலுக்கும் எந்த வித்தியா சமும் கிடையாது. ரெண்டுமே ஒரே மாதிரியான உறவு முறைதான்.

பாலு சத்யா: திரைக்கதை முழுவதையும் நீங்களே எழுதிடுவீங்களா?

சசி: ஆமாம். இதுக்கு முன்னாடி நான் எடுத்த மூணு படங்களுக்கும் கதை, திரைக்கதை, வசனம் எல்லாமே நான்தான் எழுதினேன். சில இடங்கள்ல கதை லாக் ஆகி நிக்கும். அப்போ, உதவியாளர்களுடன் விவாதிப்பேன். ஒரு கதாபாத்திரம் தவறான கோணத்துல போய்க்கிட்டு இருக்கோன்னு பாக்கறதுக்காக டிஸ்கஸன் வச்சுக்குவேன்.

பாலு சத்யா: பூ படத்தைப் பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க?

சசி: இது மக்களுக்கான சினிமா. மாரியோட மனசை நிறையா பேர்கிட்ட கொண்டுபோய் சேக்கணுங்கறதுக்காகவே நிறைய விஷயங்கள்ல சமரசம் பண்ணிக்கிட்டு தான் எடுத்திருக்கேன். பாலச்சந்தரின் ‘கல்கி’ படத்துக்கு அப்புறம் ரொம்ப நாள் கழிச்சு வர்ற, பெண்ணைப் பத்தின படம் இது. திருமணமான ஒரு பெண், தன்னுடைய பழைய காதலை அசைபோடுற மாதிரி இதுவரைக்கும் வந்ததே இல்லைன்னுதான் நினைக்கறேன். மாரி எந்த கலாசார குறைவும் இல்லாத, அப்பழுக்கில்லாத பெண். அந்தப் பெண்ணோட மனசு எல்லாருக்கும் போய்ச்சேரும் அப்படிங்கற நம்பிக்கை எனக்கு இருக்கு. மக்கள்கிட்ட வரவேற்பு இருக்குன்னுதான் நினைக்கறேன்.

Posted in Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , | 1 Comment »

Fiction by Annadurai: Lit Review by Imaiyam

Posted by Snapjudge மேல் ஏப்ரல் 29, 2009

அண்ணாதுரை சிறுகதைகள்
இமையம்

இலக்கியம் என்னுடைய பிரச்னையல்ல; வாழ்இக்கைதான் என்னு டைய பிரச்னை. வாழ்க் கையில் இன்பத்தைப் பெருக்க வேண்டும்; வேதனையைக் குறைக்க வேண்டும். இதுதான் என் இறுதி லட்சியம். ஒரு தெளிவான சமூகக் குறிக்கோள் உள்ள எழுத்தாளன் நான். இந்தச் சமூக உறவுதான் என்னை எழுதவைக்கிறது”

– அண்ணாதுரை நாவல் வடிவத்தைப் போலவே சிறு கதை வடிவமும் ஆங்கில இலக்கிய வாசிப்பின் வழியே தமிழுக்கு பெறப்பட்டதுதான். தமிழில் இவ் வடிவத்தின் முன்னோடியாக வ. வெ.சு.ஐயரைக் குறிப்பிடலாம்.

ஐயரை அடுத்து பி.எஸ்.இராமையா, கு.ப.ராஜகோபாலன், ந.பிச்சமூர்த்தி, புதுமைப்பித்தன். சி.சு.செல்லப்பா, கா. சிவத்தம்பி, இளங்கோவன், சிதம்பர சுப்ரமணியன், பி.எம்.கண்ணன், மௌனி போன்றவர்கள் சிறுகதைகளை மட்டுமல்லாமல் பரி சோதனை ரீதியிலான கதைகளையும் எழுதினார்கள்.

அடுத்து இவர்களுடைய வரிசையில் கு.அழகிரிசாமி, லா.ச.ராமாமிர்தம், தி.ஜானகிராமன் போன்றவர்களும் சிறுகதை வடிவத்தை தமிழில் வளப்படுத்தினார்கள். இந்த எழுத்தாளர்கள், சிறுகதையின் வடிவத்திற்கும் உள்ளடக்கத்திற்கும் மொழிக்கும் நடைக்கும் பரிசோதனைக்கும் முன்னுரிமை தந்து எழுதியவர்கள். பெரும்பாலும் இவர்கள் தனிமனித சிக்கல், புலம்பல், குழப்பம், குடும்ப உறவுகளுக்கிடையிலான மோதல்களையே பிரதானப்படுத்தி எழுதினார்கள்.

ஒருவகையில் இவர் கள் அனைவரையும் ஆச்சாரத்தை கடைப்பிடித்து மிகவும் ஆச்சாரமான முறையில் எழுதிய எழுத்தாளர்கள் எனலாம்.

இவர்கள் எழுதிய அதே காலக் கட்டத்தில் தமிழகத்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள், பல எழுத்தாளர் களையும் சிந்தனையாளர்களையும் போராட்டக்காரர்களையும் உருவாக் கியது. இவர்களை காலமும் சமூகமும் உருவாக்கிய எழுத்தாளர்கள் என்று சொல்லலாம். சித்தாந்தங்களின் அடிப்படையிலும் இயக்கங்களின் கொள்கை அடிப்படையிலும் இவர்கள் எழுதினார்கள்.

சமூகத்தில் நிலவிய மூடப்பழக்க வழக்கங்கள் மற்றும் பரம்பரை தொழில்களுக்கு எதிராக கருத்துப் பிரசாரம் செய்யவேண்டிய – கிட்டத்தட்ட கலகம் செய்யவேண்டிய -சூழலில் இவர்கள் இருந்தார்கள். இப்படி இனம், மொழி, திராவிட இயக்கச் சிந்தனைகள், பழமைக்கு எதிரான குணம், அறியாமை, மடமை, மூடப்பழக்க வழக்கங்களுக்கு எதி ரான நிலைப்பாட்டுடன் எழுத வந்த வர்களில், முக்கியமானவராகவும் முதன்மையானவராகவும் பேரெழுச்சியை உருவாக்கியவராகவும் இருந்தவர் அண்ணாதுரை.

இவரது எழுத்து தமிழகத்தில் ஒரு இயக்கமாக வளர் ந்தது. ஒரு புதியவகை எழுத்து இயக்கத் தை மட்டுமல்ல, ஒரு அரசியல் இயக்கத்தையும் உருவாக்கியது. அண்ணாவினுடைய எழுத்து தமிழ் மொழியில், தமிழ்ச் சமூக வாழ்வில் பாய்ச்சலான பெரிய மாற்றத்தை உருவாக்கியது என்பது வரலாறு.

அந்த வரலாறு எளிதில் அழிக்கக்கூடிய வரலாறாக இல்லை. அவருடைய எழுத்தின் தாக்கம் இன்றும் இருக்கிறது.

அண்ணாவுக்கு மேடைப் பேச்சாளர், அரசியல் தலைவர், நாடக ஆசிரியர் என்று பல முகங்கள் உண்டு. மற்ற முகங்களைவிட சிறுகதை ஆசிரியர் என்ற முகம் மிகவும் முக்கியமானது என்று நான் நினைக்கிறேன்.

1934 முதல் 1966 வரையிலான காலத்தில் அவர் மொத்தம் நூற்று பதிமூன்று சிறுகதைகளை எழுதியுள்ளார்.

11-12-1934இல் வெளிவந்த ‘கொக்கரக்கோ’ அண்ணாவின் முதல் சிறுகதை.

14-01-1966இல் வெளிவந்த ‘பொங்கல் பரிசு’ அவருடைய கடைசி சிறுகதை.

கொக்கரக்கோ என்பது தமிழ்ப் பண்பாட்டில், கலாச் சாரத்தில், நம்பிக்கையை மையப் படுத்துவது; பொங்கல் என்பது மகிழ்ச்சியை, ஆனந்தத்தை, கொண் டாட்டத்தை, நிறைவை மையப்படுத் துவது. அண்ணா, சிறுகதைகளை கொக் கரக்கோவில் ஆரம்பித்து பொங்கல் பரிசில் முடித்துள்ள ஒற்றுமை இயற்கையாக அமைந்த ஆச்சரியம்.

அண்ணாவுக்கு ஒரு நோக்கம் இருந்தது; அந்த நோக்கத்திற்காகத்தான் அவர் எழுதினார். கறுப்பினப் போராளி மார்ட்டின் லூதர் கிங், “எனக்கொரு கனவு இருக்கிறது” என்று சொன் னதுபோல, “எனக்கொரு நோக்கம் இருக்கிறது, லட்சியம் இருக்கிறது” என்று அண்ணா சொன்னார். தமிழ்ச் சமூகத்தை இருட்டிலிருந்து வெளிச்சத் திற்குக் கொண்டு வரவேண்டும் என்பது அண்ணாவின் லட்சியம்; சமூகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வான முரண்பாட்டை ஒழிக்க வேண்டும் என்பது அவருடைய கனவு.

இதனடிப் படையில் வாழ்விற்கான உரிமையையும் அதற்கான வேட்கையையும் முன் னிறுத்தியே அவர் எழுதினார். தமிழ்ச்இசமூகம் மகிழ்ச்சியை, கொஇண்இடாட்இடத்தை இழந்ததற்கான கார ணங்கள் என்ன, அவற்றை அடை வதற்கான வழிவகைகள் என்ன என்று தன் சிறுகதைகளில் அவர் ஆராய்ந்தார். ஒரு எழுத்தாளனுடைய நோக்கம்தான் அவன் எழுத்துக்கு வலிமையான பலமாக அமைகிறது.

இந்த வலிஇமைஇதான் எழுத்தினுடையவும் எழுத்இதாளஇனுடையவும் மேன்மையாக அமைஇ கிறது.அரை நூற்றாண்டு காலம் முடி ந்துஇவிட்ட பிறகும், இன்றும் நாம் அண்ணாவினுடைய சிறுகதைகளைப் பற்றி பேசுவதற்குக் காரணம் அக் கதைகளினுடைய வலிமையும் மேன்மையும்தான்.

கருத்தைப் பரப்புவதற்காக, பிரசாரம் செய்வதற்காக எழுதப்பட்டதுதான் அண்ணாவினுடைய சிறுகதைகள் அனைத்தும். அவருடைய இயக்க செயற்பாடுகளில் ஒன்றாகத்தான் அவருக்கு எழுத்தும் இருந்தது. ஆனால், பிரசாரத்திற்காக எழுதப்பட்டி ருந்தாலும் அவருடைய கதைகள், சிறுகதைகளுக்குரிய எல்லாக் குணங்களையும் கொண்டிருக்கின்றன என்பதை மறுக்க முடியாது.

குழப்பமில்லாத தெளிவான நடை, குறிப்பாக உணர்த்துதல், நுட்பமான சித்தரித்தல், எள்ளல், அங்கதம், ஒப்பீடு, நகைச்சுவை, உருவக, கவிதை குணம் கொண்ட வாக்கியமைப்புகள் என்று அனைத்துக் கூறுகளும் நிறைந் திருப்பதை இன்றும் காணமுடியும். அரை நூற்றாண்டு காலத்திற்கு மேலாகியும் அவருடைய கதைகளை எளிதாக படிக்க முடிகிறது; ரசிக்க முடிகிறது என்பதோடு அக்கதைகள் இக்காலத்திற்கும் பொருத்தமானதாக, தேவையானதாக இருக்கிறது என்பது ஆச்சரியமான விசயம்.

அண்ணா, கதை எழுத ஆரம்பித்த காலத்திலும் எழுதிக் கொண்டிருந்த காலத்திலும் நான்கு விதமான கதை எழுதும் போக்குகள் இருந்தன. தனி மனித பிரச்னைகள், சிக்கல்கள், பிடுங்கல்கள், மனப்போரட்டங்கள், உளவியல் பிரச்னைகள்; குடும்ப உறவுகளுக்கிடையிலான மோதல்கள், சிடுக்குகள், விரக்தி, நம்பிக்கையின்மை, மனக்குழப்பங்களை, சீர்குலைவு களை பதிவு செய்வது என்று ஒரு பிரிவினர் இருந்தனர், இவ் வகையான எழுத்துகளையே இலக்கியமாக இலக்கியவாதிகள் அங்கீகாரம் செய்தனர்.

தனிமனித பிரச்னைகளையும் சமூகப் பிரச்னை களையும் அப்பட்டமாக பதிவு செய் வதுதான் எழுத்தாளனின் வேலை; அதில் குறுக்கீடு செய்வதோ, விமர்சனம் செய்வதோ அல்ல என்பது மற் றொரு பிரிவினர்களுடைய போக்கு. மதுவிலக்கு, தீண்டாமை ஒழிப்பு, கதர் இயக்கம், நாட்டுப்பற்று, விடுதலைப் போராட்டம், தேசிய இயக்கம், காந்திய சிந்தனைகளின் அடிப்படையில் எழுதுவது மூன்றாவது பிரிவினருடைய எழுத்து வகை.

நடைமுறை சமூக வாழ்வில் இருக்கக்கூடிய அசலான பிரச்னைகளையும் பிரச்னைகளுக் கான காரணங்களையும் அதற்கான தீர்வுகளையும் முன் வைத்து எழுதி யவர்கள் நான்காவது வகையினர். அண்ணா, நான்காவது வகையைச் சார்ந்த எழுத்தாளர்.

சமூகத்தை முன்னேற்றுவதற்கு, விமர்சனம் செய்வதற்கு – முக்கியமாக பிரசாரம் – செய்வதற்கான கருவியாகவும் தன்னுடைய கருத்தை, சிந்தனையை, எண்ணத்தை பரப்புவதற்கு தகுந்த ஆயுதமாகவும்தான் கலைப் படைப் புகளை அண்ணா கருதினார்; இதே நோக்கத்திலேயே சிறுகதை என்ற வடிவத்தை பயன்படுத்தினார்.

அதோடு, இலக்கியம் மக்களுக்கானது, அது மக்களைச் சென்று சேர வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். சமூகத்தின் மீதான தன்னுடைய விமர்சனத்தை சிறுகதைகளின் வழியே செய்தார். தேவையான இடங்களில் விமர்சனத்தைக் கடுமையாகவும் வைத்தார். அவர் வாழ்வை நான்கு சுவர்களுக்குள் காணவில்லை; மாறாக தெருவில் கண்டார்.

இதனால், அண்ணா கதைகள் சராசரியான கதைகளாக இல்லாமல் கலகக் குரலாக இருந்தது. முதல் கதையிலிருந்து கடைசி கதை வரை இந்தக் கலகக் குரல் ஒலித்துக்கொண்டே இருந்தது. ஏனென்றால் வாழ்வினுடையதும் சமூகத்தினுடையதுமான நெருக் கடிகளில் இருந்து உருவானது அவருடைய சிறுகதைகள்.

அண்ணாவினுடைய சிறுகதைகளின் மையமான கரு – மூட நம்பிக்கைகளுக்கு எதிரான கருத்துப் பிரசாரம்; சாதியப் பிரச்னைகளுக்கு, மத மோதல்களுக்கு, சமயப் பூசல்களுக்கு, புராண இதிகாசக் கட்டுக் கதைகளுக்கு, பெண்ணுரிமை, வரதட்சணை கொடுமைக்கு எதிரானது; குருட்டுத்தனத்திற்கு, பழமைக்கு எதிரானது; சமூகத்தின் மேல் அடுக்கில் இருப்பவர்கள் சமூகத்தின் கீழ் அடுக்கில் இருப்பவர்கள் மீது செலுத்திய குரூரமான ஒடுக்குமுறைக்கு, சித்ர வதைக்கு எதிரானது. சமூக மேம்பாடும் சமூகத்தில் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவதும்தான் அவருடைய மொத்தக் கதைகளின் சாரமும் நோக்கமுமாக இருக்கிறது.

அண்ணா, தமிழ் மரபின் பிரதிநிதி என்பதால் தமிழ் வாழ்வுக் குறித்த மதிப்பீடுகளே அவருடைய கதைகள் என்றும் சொல்லலாம்.

அண்ணாவினுடைய 113 சிறு கதைகளையும் மொத்தமாக படித்து முடிக்கும் போது, அவருடைய பரந்துட்ட அறிவு வீச்சு நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. அதோடு அவர் தொடாத விசயங்கள் எதுவுமில்லை என்பதும், ஒரு கதையினுடைய சா யலை மற்றொரு கதையில் காண முடியாது என்பதும், அவருடைய எழுத்தின் மேன்மைக்கு சான்றாக இருக்கிறது.

  • மூட நம்பிக்கைகளுக்கு எதிராக ‘பரிசு’ என்ற கதையையும்;
  • சாதிகள் இந்த மண்ணில் எவ்வளவு ஆழமாக வேர் ஊன்றியிருக்கிறது என்பதற்கு ‘சிங்கள சீமாட்டி‘ (1939) என்ற கதையையும்;
  • மதப்பூசல்களுக்கு எதிராக ‘மதுரைக்கு டிக்கட் இல்லை’ (1945) என்ற கதையையும்;
  • பேய் பிசாசு போன்ற கட்டுக்கதைகளுக்கு எதிராக ‘யார் மீது கோபித்துக் கொள்வது’ (1955) என்ற கதையையும்;
  • மாந்திரிகத்தினால் ஏற்படும் கேடுகளுக்கு எதிராக ‘விழுப்புரம் சந்திப்பு’ (1965) என்ற கதையையும் எழுதியுள்ளார்.
  • முதலாளித்துவத்தின் சுரண்டல் போக்குகளை, கோரச் செயல்பாடுகளை பல்வேறு நிலைகளிலிருந்தும் ஆராய்ந்து ‘செவ் வாழை’ (1949),
  • ‘ரொட்டித்துண்டு’,
  • ‘பக்த பக்காத் திருடன்’ (1950)
  • ‘பூபதியின் ஒரு நாள் அலுவல்’ (1946)
  • ‘பொய் – லாப நஷ்டம்’ (1945)
  • ‘நாடோடி’ (1945)
  • ‘உடையார் உள்ளம்’ (1966) போன்ற சிறுகதைகளையும் எழுதியுள்ளார்.
  • இந்த நாட்டில் வரத ட்சணை கொடுமையினால் எத்தனை பெண்களுடைய வாழ்க்கை சீர்கெட்டுப் போகிறது என்பதற்கு ‘சோணாச்சலம்’ (1947) என்ற கதையை எழுதியுள்ளார்.
  • பெண்களும் மனித உயிர்களே; அவர் களுக்கும் சகல உரிமைகளோடு வாழ்வ தற்கு உரிமை உண்டு என்பதோடு பெண்கள் படும் அல்லல்களை துன்பங் களை விவரிக்கும் விதமாக
  • ‘வாலிப விருந்து’,
  • ‘சுடு மூஞ்சி’ (1946),
  • ‘கன்னி விதவையானாள்’ (1961) ஆகிய கதைகளை எழுதியுள்ளார்.
  • இந்த மண்ணில் ஏற்பட்டுள்ள, ஏற்படுகிற சகல விதமான மூடத் தன ங்களுக்கும், சமயப்பூசல்களுக்கும், ஏமாற்று வேலைகளுக்கும், கட்டுக்கதைகளுக்கும், கீழ்மைத் தனங்களுக்கும், மோசடி கபட நாடகங்களுக்கும் பிராமணியமே அடிப்படையான காரணம் என்பதைத் தோலுரித்து காட்டும் விதமாக
  • ‘அறுவடை’ (1955),
  • ‘பேரன் பெங்களூரில்’,
  • ‘மேலதிகாரி’ (1956),
  • ‘சொல்வதை எழுதேண்டா’ (1946) ஆகிய சிறுகதைகளை எழுதியுள்ளார்.
  • காதல் என்ற பெயரால் நடக்கும் மோசடிக்கும், கபட நாடகத்திற்கும் ஆளாகி அவதிப்படும் பெண்களுடைய வாழ்வை சித்தரிக்கும் விதமாக
  • ‘தங்கத்தின் காதலன்’ (1939),
  • ‘புரோகிதனின் புலம்பல்’,
  • ‘அவள் மிகப் பொல்லாதவள்’ (1939) போன்ற கதைகளை எழுதியுள்ளார்.
  • பணக்காரர்களுடைய ஏழைகளின் மீதான அன்பு, இரக்கம் பச்சாதாபம் என்பதெல்லாம் நாடகமே என்பதை ‘இரு பரம்பரைகள்’ (1946) என்ற கதையில் காட்டுகிறார்.
  • பெண்களுடைய உரிமைக்காகவும் வாழ்விற்காகவும் குரல் கொடுப்பதோடு பெண்ணிய நோக்கில்
  • ‘அவள் விபச்சாரியானாள்’ (1946)
  • ‘வழுக்கி விழுந்தவள்’ (1965) ஆகிய கதைகளை எழுதியுள்ளார்.
  • வரலாறுகளையும் வரலாற்றில் நடந்து ள்ள மோசடிகளையும், ஏமாற்று சித்து வேலைகளையும் தர்க்கப்பூர்வமாக ஆராய்ந்து
  • ‘புலிநகம்’ (1946),
  • ‘பிடி சா ம்பல்’ (1947),
  • ‘திருமலை கண்ட திவ்விய ஜோதி’ (1952),
  • ‘தஞ்சையின் வீழ்ச்சி’,
  • ‘வெளியூரில் கொலம்பசு’ போன்ற கதைகளை எழுதிஇயுள்ளார்.
  • உளவியல் சா ர்ந்த கதைகளான
  • ‘ராஜபார்ட் ரங்கத்துரை பாகவதத்’ (1948),
  • ‘மரத்துண்டு’ போன்றவற்றையும் எழுதினார்

கரு, அமைப்பு, நோக்கம், உள்ளடக்கம், வெளிப்பாட்டுத்திறன், ஆளுமை, மொழி போன்றவற்றை வைத்து அண்ணா சிறுகதைகளை மூன்று வகைகளாகப் பிரிக்க முடியும். தொடக்ககாலக் கதைகள் பசி, வறுமை, நோய், அறியாமை, சாதி மற்றும் பொருளாதார ரீதியிலான ஏற்றத் தாழ்வுகள், உழைப்பு மற்றும் பொருளாதாரச் சுரண்டல்கள் போன்ற பிரச்னைகளை நேரிடையாகவும் அப்பட்டமாகவும் பேசியதோடு அதற் கானத் தீர்வுகளையும் முன்வைக் கின்றன.

பொதுவாக தமிழ் இலக்கிய உலகம் பிரச்னைகளையும் பிரச்னைகள் உருவாவதற்கான காரணிகளையும் ஆராயும். ஆனாலும், முடிவை வாசகனுடைய தீர்மானத்திற்கு விட்டு விடும். இதற்கு நேர்மாறான குணத் தை அண்ணாவினுடைய தொடக்கக்கால கதைகள் கொண்டிருப்பது கவனத்திற்குரியது.

இடைக்காலக் கதைகள் பிரச்னைகளை விரிவாகவும் ஆழமாகவும் ஆராய்ந்து, தீர்வை முன் வைப்பதற்குப் பதிலாக விவாதத் தையும் தர்க்கத்தையும் முன்வைத்தன. கடைசிக்காலக் கதைகளில் கருவுக்கு மட்டும் முக்கியத்துவம் தராமல் வடிவம், செய்நேர்த்தி, சொல்முறை, நுட்பம், செறிவு ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

இக்கால கதைகளில் முதிர்ச்சியையும் தேர்ச்சியையும் காண முடிகிறது. இதே காலத்தில்தான் ஓப்பீட்டு முறையிலான கதைகளையும் எழுதியுள்ளார். ஒரு எழுத்தாளனுடைய வாழ்க்கையில் வளர்ச்சிப் படிநிலைகள் தவிர்க்க முடியாதவை; இந்த வளர்ச்சிப் படி நிலைகள்தான் அந்த எழுத்தாளனுடைய எழுத்தின் வலிமையைக் காட்டுகிறது என்ற கோட்பாடு அண்ணாவின் கதைகளுக்கு மிகச்சரியாகப் பொருந்துகிறது.

மரபுகளை உதறித்தள்ளி புதிய மரபுகளை உருவாக்கிய சிறுகதைகள் அண்ணாவினுடையது. திரித்துக் கூறுதல், சுற்றி வளைத்துப் பேசுதல் என்பது அண்ணாவின் சிறுகதைகளில் காண முடியாத ஒன்று.

சிறுகதைக்குரிய எல்லா குணங்களும் சிறப்பாக இருந் தும், ஆச்சாரமான இலக்கிய விமர்சகர்கள் அவரது சிறுகதைகளை கொள் கை முழக்கங்களாக பார்த்ததின் விளைவு அவருடைய கதைகள் பர வலாகாமலேயே போய்விட்டது.

நம் முடைய விமர்சகர்கள் ஒரு படைப்பை அதனுடைய தரத்தை வைத்து மதிப்பிடாமல், அந்த படைப்பை எழுதிய எழுத்தாளனுடைய சாதி, சார்ந்துள்ள கட்சி, அவனுடைய பின்னணி போன்றவற்றை வைத்தே மதிப்பிடுகிறார்கள் என்பதால் நிகழ்ந்த துயரம் இது. ஆனால், விமர்சகர்களால் உதவாக்கரை என்று ஒதுக்கப்பட்ட அண்ணாவின் சிறுகதைககள்தான் இன்று அதிகமாகப் பேசப்படுகின்றன.

அண்ணாவுக்கு தெளிவான நோக்கம் இருந்தது; அந்த நோக்கத்திலும் லட்சி யத்திலும் இருந்துதான் அவருடைய சிறுகதைகள் உருப்பெற்று வந்தன. இந்நிலையில் ஆய்ந்து அண்ணா வினுடைய சிறுகதைகளை மதிப்பிட வேண்டும்.

அண்ணா எந்தெந்த பிரச் னைகள் தீரவேண்டும், ஒழிக்கப்பட வேண்டும் என்று எழுதினாரோ அந்தப் பிரச்னைகள் இன்றுவரை ஒழி ந்தப்பாடில்லை. சாதிக்கொடுமை, தீண்டாமை, பசி, பிணி, வறுமை, அறியாமை, பொய்மை, போலித்தனம், சமயப்பூசல், இளமை மணம், காதலுக்குத்தடை, தெய்வத்தின் பெயரால் ஏற்பட்ட கட்டுக்கதைகள், புராண – இதிகாசப் புரட்டுகள் இந்த மண்ணில் இருக்கும்வரை; சூழ்ச்சியின் பிடியில் தமிழ்ச் சமூகம் சிக்கி தவிக்கும் வரை; பிரச்னைகள் மடிவதற்குப் பதிலாக வேகம் பெற்று வளர்ந்து கொண்டிருக்கின்ற வரை; அண்ணாவினுடைய சிறுகதைகளும் இருக்கும்.

Posted in Politics, Tamil, Tamil Nadu | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , | 2 Comments »