புத்தபிக்குகள் குழுவுக்கு இலங்கை உயர்நீதிமன்றம் கண்டனம்
தனது விகாரையிலிருத்து இரவில் ஒலிபரப்பெருக்கி மூலம் ஒலிபரப்பி ஒலிமாசடைதல் நடவடிக்கையில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில் நீதிமன்ற விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பௌத்த மதகுரு ஒருவரை பிணையில் செல்ல அனுமதிக்கக்கோரி சக மதகுருமார் குழுவொன்று சமர்பித்திருந்த விண்ணப்பத்தினை இலங்கை உயர் நீதிமன்றம் இன்று நிராகரித்திருப்பதோடு, நீதிமன்றத்திற்கு அந்த சக மதகுருமார் குழு அபகீர்த்தி விளைவித்தனரென்றும் அவர்கள் மீது தனது கண்டனத்தையும் அதிருப்தியையும் வெளியிட்டிருகிறது.
 |
|
இலங்கை உயர்நீதிமன்றம் |
கொழும்பின் புறநகர்பகுதியான ராஜகிரியவில் அமைந்துள்ள பௌத்த விகாரையொன்றின் பன்னல பஞ்ஞாலோக தேரரே இவ்வாறு தனது விகாரையிலிருத்து இரவில் ஒலிபரப்பெருக்கி மூலம் ஒலிபரப்பினார் என்ற குற்றச்சாட்டின்பேரில் நீதிமன்ற விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கிறார். இந்த வழக்கினை பிரதம நீதியரசர் தலைமையிலான மூன்று உயர் நீதிமன்ற நீதிபதிகளின் மன்றே விசாரணை செய்தது.
உயர் நீதிமன்ற வட்டாரங்களின் தகவல்களின்படி, இவரது பிணை மனுவை இன்று விசாராணைக்கு எடுத்துக்கொள்ள பிரதம நீதியரசர் சரத் என் சில்வா உயர்நீதிமன்றத்திற்கு வருகைதந்தபோது பிணைமனுத்தாக்கல் செய்யவந்திருந்த சுமார் நூறு பௌத்தபிக்குகள் ஆசனத்திலிருந்து எழுந்துநிற்கவில்லை என்றும் இது நீதிமன்றத்திற்கு அபகீர்த்தியினை ஏற்படுத்தும் செயல் என்று கூறிய பிரதம நீதியரசர் இவர்களை நீதிமன்றக்கட்டிடத்திற்கு வெளியே சென்று மீண்டும் உள்நுழையும் படி அவர்களது சட்டத்தரணி மூலமாக அறிவுறுத்தல் விடுத்திருக்கிறார்.
ஆனால் பிரதம நிதியரசரின் இந்த அறிவுறுத்தலை இந்த பௌத்த பிக்குமார்கள் உதாசீனம் செய்தனர். இந்தச் செயல் உயர் நீதிமன்றத்திற்கும், நீதித்துறைக்கும் அபகீர்த்தியை ஏற்படுத்தும் செயலென்றும் இதனால் இவர்கள் சார்பில் முன்வைக்கப்படும் பிணை மனுவினை ஏற்க முடியாது என்று தெரிவித்த பிரதம நீதியரசர், பன்னல பஞ்ஞாலோக தேரரை எதிர்வரும் 15ம் திகதிவரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
வன்னி, யாழ் மோதல்களில் 36 புலிகள், 5 ராணுவத்தினர் பலி, 16 ராணுவத்தினர் காயம்
இலங்கையின் வடக்கே வன்னி மற்றும் யாழ்ப்பாணம் களமுனைகளில் வியாழக்கிழமை இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற மோதல்களில் முப்பத்தி ஆறு விடுதலைப் புலிகளும், ஐந்து இராணுவத்தினரும் உயிரிழந்துள்ளதாகவும், விடுதலைப் புலிகளின் எட்டு சடலங்கள் படையினரால் கைப்பற்றப்பட்டிருப்பதாகவும் இராணுவ தலைமையகம் தெரிவித்திருக்கின்றது.
வன்னிக் களமுனைகளில் கடும் சண்டைகள் இடம்பெற்றதாகவும், இதில் மேலும் பதினாறு படையினர் காயமடைந்திருப்பதாகவும்
இராணுவ தலைமையகம் தனது இணைய தள அறிக்கையொன்றில் கூறியிருக்கின்றது.
இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டுள்ள விடுதலைப் புலிகளின் சடலங்களில் நான்கு சடலங்கள் நேற்று மாலை வவுனியா வைத்தியசாலையில் கையளிக்கப்பட்டிருப்பதாகவும் இராணுவம் தகவல் வெளியிட்டிருக்கின்றது.
 |
|
இலங்கையின் வடக்கே கடும் மோதல்கள் தொடர்கின்றன |
இதற்கிடையில் வியாழக்கிழமை நள்ளிரவுடன் முடிவடைந்த 48 மணிநேர காலப்பகுதியில் சர்வதேச செஞ்சிலுவைக்குழுவினர் இராணுவத்தினரின் முப்பது சடலங்களை ஓமந்தை இராணுவ சோதனைச்சாவடியில் உள்ள படை அதிகாரிகளிடம் கையளித்திருப்பதாகத் தெரிவித்துள்ள இராணுவ தலைமையகம், கடந்த நான்கு தினங்களாக கிளிநொச்சி மாவட்டத்தின் அக்கராயன்குளம் பிரதேச களமுனைகளில் விடுதலைப் புலிகளுடன் இடம்பெற்ற உக்கிரச் சண்டைகளில் காணாமல் போயிருந்த படையினர் சிலரது சடலங்களும் இவற்றிலிருந்து அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும் கூறியிருக்கின்றது.
இரண்டாவது தொகுதியாக நேற்று மாலை ஓமந்தை படையதிகாரிகளிடம் சர்வதேச செஞ்சிலுவைக் குழுவினரால் கையளிக்கப்பட்டிருந்த பதினோறு சடலங்களும் அடையாளம் காண்பதற்காக அனுராதபுரம் மாவட்டம் பதவியா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும், அந்தச் சடலங்களில் பல உருக்குலைந்தும், சிதைந்தும் இருப்பதனால் உரிய இராணுவத்தினரை அடையாளம் காண்பதில் சிரமங்கள் ஏற்பட்டிருப்பதாகவும் இராணுவம் தனது இணைய தள அறிக்கையில் குறிப்பிட்டிருக்கின்றது.
வடபகுதி மோதல்களில் பலரை காணவில்லை என்று இலங்கை இராணுவம் கூறுகிறது
இலங்கையின் வடக்கே விடுதலைப் புலிகளுடன் நடக்கும் கடும் மோதல்களில் மேலும் 18 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவம் கூறுகிறது.
நாச்சிகுடாப் பகுதியில் இடம் இடம்பெற்றுவரும் மோதல்களில் பல இராணுவத்தினரை காணவில்லை என்றும் அவர்கள் விரைவில் தமது சக்காக்களுடன் இணைவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகவும் இராணுவத் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இருப்பினும் இவ்வாறு காணாமல் போயுள்ள இராணுவத்தினருக்கு என்ன நடந்திருக்கின்றது என்பது இன்னமும் உறுதி செய்யப்பட வேண்டியுள்ளது எனவும் இராணுவத் தலைமையகம் மேலும் தெரிவித்துள்ளது.
இதேவேளை நாகர்கோவில், முகமாலை போர் முனைகளில் மூன்று விடுதலைப் புலிகள் இராணுவத்தினரின் தாக்குதல்களில் பலியாகியுள்ளதாகவும் இராணுவம் கூறுகிறது.
முறிகண்டிப் பகுதிக்குள் இராணுவம் முன்னேறியுள்ளதாகத் தகவல்
 |
|
வடக்கே கடும் மோதல்கள் இடம் பெறுகின்றன |
இலங்கையின் வடக்கே வன்னிப்பிரதேசத்தில் விடுதலைப் புலிகளின் கடும் எதிர் தாக்குதல்களுக்கு மத்தியிலும் இராணுவத்தினர் வன்னிப்பிரதேசத்தைத் தமது கட்டுப்பாட்டினுள் கொண்டு வருவதற்காக முன்னேறி வருவதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.
இத்தகைய முன்னேற்றத்தின் மேலும் ஒரு படியாக முறிகண்டி பொதுப்பிரதேசத்தினுள் இன்று இராணுவத்தினர் முன்னேறியிருப்பதாகவும் அந்தப் பகுதியில் இடம்பெற்ற மோதல்களின் பின்னர் 4 விடுதலைப் புலிகளின் சடலங்களைப் படையினர் கைப்பற்றியிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்திருக்கின்றது.
இது குறித்து கருத்து தெரிவித்த இராணுவத்தின் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார, இராணுவம் அக்கராயன்குளம் பகுதியில் ஏற்கனவே நிலைகொண்டிருப்பதாகவும், அக்கராயன்குளத்தின் தெற்கில் உள்ள முறிகண்டி பொதுப்பிரதேசத்தினுள் இராணுவம் இன்று முன்னேறியிருப்பதாகவும் கூறினார்.
எனினும் இது குறித்து விடுதலைப் புலிகளின் தரப்பிலிருந்து உடனடியாகத் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
வன்னிப் பகுதியில் பல பாடசாலைகள் திறக்கப்படவில்லை
 |
|
ஆளில்லா பாடசாலை |
இலங்கையில் இரண்டாம் தவணைக்கான பாடசாலை விடுமுறைக்காலம் முடிவடைந்து, மூன்றாம் தவணைக்காக இன்று கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன.
ஆயினும், இலங்கையின் வடக்கே போர்ப் பதட்டம் நிலவுகின்ற வன்னிப்பிரதேசத்தில் பாடசாலைகள் முழுமையாக இன்று ஆரம்பிக்கப்படவில்லை என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
வன்னிப்பிரதேசத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பாடசாலைகளும் சுமார் 40 ஆயிரம் வரையிலான மாணவர்களும் இடம்பெயர்ந்திருப்பதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.
வவுனியா மாவட்டத்தின் வடக்கு கல்வி வலயத்தில் 55 பாடசாலைகள் இடம்பெயர்ந்து கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் தஞ்சம் புகுந்திருப்பதனால் இந்தப் பாடசாலைகள் இன்று ஆரம்பமாகவில்லை என வவுனியா வடக்கு கல்வி வலயத்தின் கோட்டக்கல்விப் பணிப்பாளர் அருளம்பலம் வினாயகமூர்த்தி கூறுகின்றார்.
கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெயர்ந்துள்ள 2000 குடும்பங்கள் 32 பாடசாலைகளில் தங்க வைக்கப்பட்டிருக்கின்றார்கள் என்றும் இவர்களுக்கு மாற்றிடங்களில் வாழ்விட வசதிகள் செய்து கொடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்டிருக்கும் பணிகள் முடிவடைந்ததும் இந்தப் பாடசாலைகள் ஆரம்பமாகும் என்றும் கூறுகிறார் கிளிநொச்சி அரசாங்க அதிபர் என்.வேதநாயகன் அவர்கள்.
இது குறித்த மேலதிக விபரங்களை எமது வவுனியா செய்தியாளர் அனுப்பியுள்ள செய்திக்குறிப்பில் கேட்கலாம்.
பதுளைப் பகுதியில் பல சிறுவயதுப் பெண்கள் கர்பம்
 |
|
ஒரு இளம் கர்பிணி |
இலங்கையின் பதுளை மாவட்டத்தில் பாடசாலை செல்லும் மாணவ பருவத்துடைய சுமார் 30 இளவயது பெண்கள் கர்பமாக இருப்பதாகவும், இது அப்பகுதியில் ஒரு சமூகப் பிரச்சினையாக மாறிவருவதாகவும் பதுளை மாவட்ட அரசாங்க அதிபர் ரோஹண திசாநாயக்க பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.
பொருளாதாரச் சூழல் காரணமாக இவர்கள் பாடசாலைக்கு செல்வதில்லை என்பது மட்டுமல்லாமல், சிறுவயதிலேயே காதல் வயப்பட்டு மதுப்பழக்கத்துக்கும் அடிமையாவதும் கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
மேலும் பல வகையான ஊடகங்கள் மூலமும் இவர்கள் வழிதவறிச் செல்வதைக் காணக் கூடியதாகவும் இருப்பதாகவும் பதுளை மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.
இந்தப் பிரச்சினைக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்கும் நோக்கில் சுகாதர அமைச்சகம் மற்றும் இதர அரச நிறுவனங்கள், போலீசார் ஆகியோருடன் இணைந்து ஒரு செயல்திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாகவும் ரோஹன திசாநாயக்க கூறினார்.
இலங்கையின் வடக்கே கடும் மோதல்கள்: இருதரப்பிலும் பெரும் இழப்புகள் என்று அறிவிப்பு
இலங்கையின் வடக்கே இராணுவத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே தொடர்ந்து நடைபெற்று வரும் கடும் மோதல்களில் இருதரப்பிலும் பலத்த இழப்புகள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
செவ்வாய்கிழமை நடைபெற்ற மோதல்களில் மட்டும் 46 விடுதலைப் புலிகளும் 6 இராணுவத்தினரும் கொல்லப்பட்டுள்ளதாக இராணுவம் கூறுகிறது.
இதனிடையே திங்கள் மற்றும் செவ்வாய்கிழமை ஆகிய இருதினங்களில் இராணுவத்தரப்பில் குறைந்தது 75 பேர் கொல்லப்பட்டுள்ளதாக விடுதலைப் புலிகள் கூறுகிறார்கள்.
வடக்கே நடைபெறும் மோதல்களில் இறந்தவர்களின் உடல்கள் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் மூலமாக இருதரப்பினராலும் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
விடுதலைப் புலிகளின் 22 சடலங்களும், இராணுவத்தினரின் 19 சடலங்களும் தம்மிடம் ஒப்படைக்கப்பட்டதை சர்வதேச செஞ்சிலுவைக் குழுவின் அதிகாரியான சரசி வியேரட்ண தமிழோசையிடம் உறுதிப்படுத்தியுள்ளார்.
வன்னிப் பகுதியில் மனிதாபிமான உதவிகளுக்கு ஆதரவு அளிக்கத் தயார் என ஐ நா கூறுகிறது
 |
|
வன்னி மக்களுக்கு உதவ ஐ நா முன்வந்துள்ளது |
இலங்கையில் வடக்கே கடுமையான மோதல்கள் நடந்துவருகின்ற வன்னி பெருநிலப்பரப்பில் தங்கியிருப்போருக்கும், அங்கிருந்து வெளியேறுவோருக்கும் மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கு இலங்கை அரசாங்கம் மேற்கொள்ளக்கூடிய சகல முயற்சிகளுக்கும் முழுமையான ஆதரவினை வழங்க ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது.
இலங்கைக்கான ஐ.நாவின் அலுவலகம் புதன்கிழமையன்று விடுத்துள்ள செய்திக் குறிப்பொன்றிலேயே இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.
வன்னிப் பகுதியிலிருந்து பொதுமக்கள் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் நகர்வதற்கு இலங்கை அரசு நடவடிக்கைகள் எடுத்து வருவதாக அறிவித்துள்ளதையும் ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் வரவேற்றுள்ளது.
புலிகளுக்கும் கோரிக்கை
 |
|
இடம் பெயர்ந்த நிலையில் ஒரு குடும்பம் |
பொதுமக்கள் சகல தருணங்களிலும் ஓரிடத்திலிருந்து இன்னோரிடத்திற்குச் சுதந்திரமாக செல்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என்ற விடயம் பற்றி தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பினரிடமும் ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் தனது அவசரமான கரிசனையை வெளியிட்டுள்ளதாகவும் கொழும்பிற்கான ஐ.நா அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஆயுத நெருக்கடியில் சம்பந்தப்பட்ட மக்கள் தொடர்பான சர்வதேச கடப்பாடுகளின்படி, தாம் எங்கெங்கே உதவிகளையும் பாதுகாப்பினையும் தேடவேண்டும் என்பதனை மக்களே தனிப்பட்டரீதியிலும் சுதந்திரமாகவும் தேர்வு செய்ய அனுமதிப்பது என்பது மிகமுக்கியமானது என்பதனையும் ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் அறிக்கை கோடிட்டு காட்டியுள்ளது.
‘மல்லாவியை கைப்பற்றியது இலங்கை இராணுவம்’
இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள விடுதலைப் புலிகளின் கேந்திர முக்கியத்துவம் மிக்க மல்லாவி நகரப்பகுதியை இலங்கை இராணுவத்தினர் செவ்வாயன்று முழுமையாகக் கைப்பற்றியிருப்பதாக இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்திருக்கின்றது.
பல வாரங்களாக விடுதலைப் புலிகளின் கடும் எதிர்த்தாக்குதல்களுக்கு மத்தியிலும் இராணுவத்தினர் முன்னேறிச் சென்று மல்லாவி நகரப்பகுதியைக் கைப்பற்றியிருப்பதாகவும், கடந்த மாதம் 22ஆம் திகதி துணுக்காய் பகுதியைக் கைப்பற்றியதன் பின்னர் இராணுவத்தினர் அடைந்துள்ள முக்கிய வெற்றியாக இதனைக் கருதுவதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.
மல்லாவி கைப்பற்றப்பட்டது குறித்து விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து தகவல்கள் எதுவும் உடனடியாக வெளியாகவில்லை.
ஆயினும் கிளிநொச்சி மாவட்டம் நாச்சிக்குடா பகுதியில் முன்னேற்ற முயற்சியில் ஈடுபட்ட இராணுவத்தினரை எதிர்த்து நேற்று பிற்பகல் 2 மணிமுதல் இன்று அதிகாலை 2 மணிவரையில் தாங்கள் நடத்திய கடும் தாக்குதல்களில் 34 இராணுவத்தினர் கொல்லப்பட்டிருப்பதாகவும், கொல்லப்பட்டவர்களில் 7 சடலங்களும் இராணுவ தளபாடங்களும் தங்களால் கைப்பற்றப்பட்டிருப்பதாகவும் விடுதலைப் புலிகள் அறிவித்திருக்கின்றனர்.
எனினும், கிளிநொச்சி மாவட்டம் நாச்சிக்குடா உட்பட்ட வன்னிக்களமுனைகளில் நேற்று இடம்பெற்ற மோதல்களில் 44 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டிருப்பதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது. நாச்சிக்குடா பகுதியில், விடுதலைப் புலிகளுடன் கடும் மோதல்கள் இடம்பெற்றதாகவும், முன்னேற்ற முயற்சியில் ஈடுபட்டுள்ள இராணுவத்தினருக்கு ஆதரவாக விடுதலைப் புலிகளின் நிலைகள் மீது இன்று அந்தப் பகுதியில் விமானக்குண்டுத்தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் கூறியிருக்கின்றது.
இதற்கிடையே இலங்கையின் கிழக்கே அப்பாறை மாவட்டத்தில் பொத்துவில்- பாணமை வீதியில் விடுதலைப்புலிகள் நடத்திய தாக்குதலில் இலங்கை பாதுகாப்புப் படையை சேர்ந்த இருவர் கொல்லப்பட்டதாக அங்கிருந்துவரும் செய்திகள் கூறுகின்றன.
இலங்கையில் இராணுவத்திலிருந்து தப்பியோடியவர்களுக்கு தண்டனை
 |
|
பிரிகேடியர் உதய நாணயக்கார |
இலங்கை இராணுவத்திலிருந்து தப்பியோடிய முன்னூறுக்கும் மேற்பட்டோருக்கு தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. இதில் 106 பேர் செவ்வாய்கிழமை தண்டிக்கப்பட்டுள்ளதாகவும், புதன்கிழமையன்று மேலும் 199 பேர் தண்டிக்கப்படுவார்கள் என்றும் பாதுகாப்பு அமைச்சின் செய்திக் குறிப்பு ஒன்று தெரிவிக்கிறது.
இராணுவத்தில் இருந்து தப்பி ஒடியவர்கள் மீண்டும் தங்களுடைய ராணுவ ரெஜிமெண்டுகளுக்கே வந்து சரணடையக் கூடிய ஏற்பாடுகளை செய்யப்பட்டிருந்ததாகவும், ஆனால் அவர்கள் சரணடையாததன் காரணமாக இராணுவமும் போலீசாரும் அவர்களைக் கைதுசெய்து இராணுவ சட்ட நடைமுறைகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.
இராணுவத்தில் இருந்து தப்பியோடியவர்களை தண்டிப்பது இது முதல் முறையல்ல என்றாலும் கிட்டத்தட்ட 300 பேர் ஒரே நேரத்தில் தண்டிக்கப்படுவது இது தான் முதல் முறை என்றும் பிரிகேடியர் உதய நாணயகார தமிழோசையிடம் தெரிவித்தார்.
இராணுவத்தில் இருந்து தப்பி ஒடியவர்கள் தங்களுடைய ரெஜிமெண்களுக்கு வந்து சரணடைந்தால் அவர்களை வரவேற்கப்படுவார்கள் என்றும் பிரிகேடியர் தெரிவித்தார்.
இன்று தண்டிக்கப்பட்டவர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இராணுவத்தில் இருந்து ஒடியவர்கள் என்றும் அவர் கூறினார்.
மல்லாவியின் முக்கால்வாசியை கைப்பற்றியதாக இலங்கை இராணுவம் அறிவிப்பு
இலங்கையின் வடக்கே விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்லாவி பிரதேசத்தின் முக்கால் வாசிப்பகுதியை தாம் கைப்பற்றியுள்ளதாக இலங்கை இராணுவம் இன்று அறிவித்துள்ளது.
இதுகுறித்து கூறிய இலங்கை இராணுவத்தின் சார்பில் பேசவல்ல பிரிகேடியர் உதய நாணயக்கார அவர்கள், கடந்த ஒருவாரமாக நடத்தப்பட்ட வெற்றிகரமான இராணுவ நடவடிக்கையின் மூலம் இது நிகழ்த்தப்பட்டிருப்பதாகக் கூறினார்.
மல்லாவி ஒரு சிறிய நகரந்தானே, அதில் முக்கால் வாசியைப் பிடித்ததாகக் கூறுகிறீர்களே என்று கேட்டதற்கு பதிலளித்த, பிரிகேடியர் உதய நாணயக்கார, அது ஒரு பெரிய நகரம், அங்கு மல்லாவி ஆதார வைத்தியசாலை சில வங்கிகள், பீங்கான் தொழிற்சாலை, பெரிய வெதுப்பகம் மற்றும் புலிகளின் முக்கிய அலுவலகம் ஒன்று ஆகிய அனைத்தும் அங்கு இருக்கின்றன என்று கூறினார்.
விடுதலைப்புலிகளின் பகுதிகளில் இருந்து பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்கான வழிகள் பற்றிய அரசாங்க அறிவிப்பு குறித்துக் கேட்டதற்கு பதிலளித்த பிரிகேடியர் உதய நாணயக்கார அவர்கள், தற்போதைக்கு பொதுமக்கள் வவுனியாவுக்கு வரவேண்டுமானால், ஏ 9 பாதையூடாகத்தான் வரவேண்டும் என்றும், ஆனால், தற்போது தாம் பாதுகாப்பான வழி ஒன்றை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், அவை பூர்த்தியானதும் அதுபற்றிய விபரங்கள் அறிவிக்கப்படும் என்றும் கூறினார்.
வட இலங்கையில் தொடரும் மோதல்கள்
 |
|
இடம்பெயரும் மக்கள்(ஆவணப்படம்) |
இலங்கையின் வடக்கே விடுதலைப்புலிகளுக்கும், இலங்கை இராணுவத்தினருக்கும் இடையில் மிகவும் மும்முரமான மோதல்கள் இடம்பெறும் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற எறிகணைத்தாக்குதல்களில் சிவிலியன் ஒருவர் கொல்லப்பட்டதாக வவுனியாவில் இருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.
வவுனியா ஓமந்தைக்கு வடக்கே ஏ9 வீதியில் உள்ள கனகராயன்குளம் பகுதியில் ஞாயிறு மாலை இடம்பெற்ற எறிகணைத் தாக்குதலில் 53 வயதுடைய சிவிலியன் ஒருவர் கொல்லப்பட்டிருப்பதாக விடுதலைப் புலிகள் தெரிவித்திருக்கின்றனர். இந்த எறிகணைத் தாக்குதலை இராணுவத்தினரே நடத்தியிருப்பதாகவும் விடுதலைப் புலிகள் குற்றம் சுமத்தியிருக்கின்றனர்.
ஆனால், இதனை இராணுவத்தினர் மறுத்திருக்கிறார்கள்.
இராணுவ சடலங்களைக் கையளித்ததாக புலிகள் அறிவிப்பு
வன்னிக் களமுனைகளில் கொல்லப்பட்ட இராணுவத்தினரின் 4 சடலங்கள் சர்வதேச செஞ்சிலுவைக்குழுவினரின் ஊடாக இராணுவத்தினரிடம் நேற்று ஞாயிற்றுக்கிழமை கையளிக்கப்பட்டிருப்பதாகவும் விடுதலைப் புலிகள் கூறியிருக்கின்றனர்.
இதனிடையே, வன்னிப்பகுதியில் தற்போது பெய்யத் தொடங்கியுள்ள மழை காரணமாக வீதியோரங்களில் கொட்டில்களிலும் பொது இடங்களிலும் தங்கியுள்ள இடம்பெயர்ந்த மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக வன்னித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இடம்பெயர்ந்த மக்களை இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள வவுனியா பிரதேசத்திற்குள் வருமாறு பாதுகாப்பு அமைச்சு அறிவித்திருப்பதாகத் தெரிவித்திருக்கின்ற போதிலும், அந்த அழைப்பையேற்று எவரும் வவுனியா அல்லது மன்னார் இராணுவ கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்குள் வந்ததாக தகவல்கள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை.
பதுங்கு குழிகளை அமைக்குமாறு புலிகள் வலியுறுத்தல்
அதேவேளை, வன்னிப்பகுதியில் இருக்கின்ற மக்கள் எறிகணை வீச்சுக்களில் இருந்து தம்மைத் காத்துக்கொள்வதற்காக பதுங்குகுழிகளை அமைத்து அவற்றில் தங்கியிருக்குமாறு விடுதலைப்புலிகள் அமைப்பின் அரசியல் பிரிவின் சார்பில் வெளியிடப்பட்டதாகக் கூறப்படும் அறிக்கை ஒன்று கோருகிறது.
அனைத்து இடங்களிலும் பதுங்குகுழிகள் அமைக்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகின்ற அந்த அறிக்கையில், எறிகணைவீச்சுக்கள் மற்றும் வான் தாக்குதல் நிகழும் சந்தர்ப்பங்களில் உடனடியாகவே மக்கள் பதுங்குகுழிகளில் பாதுகாப்புத் தேட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே, இலங்கையின் வடக்குக் களமுனைகளில் நேற்று இராணுவத்தினர் விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடத்திய பல்வேறு தாக்குதல்களில் 42 விடுதலைப்புலிகளும், 6 இராணுவத்தினரும் கொல்லப்பட்டுள்ளதாக இராணுவ தலைமையகம் தெரிவித்திருக்கின்றது. இந்த மோதல்களில் 17 படையினர் காயமடைந்திருப்பதாகவும் இராணுவம் கூறியிருக்கின்றது.
எனினும் வவுனியா பாலமோட்டை, குஞ்சுக்குளம் பகுதியில் மும்முனைகளில் முன்னேறுவதற்கு முயன்ற இராணுவத்தினர் மீது விடுதலைப் புலிகள் கடும் எதிர்த்தாக்குதல்களை நடத்தியதாகவும், இதில் 12 படையினர் கொல்லப்பட்டிருப்பதாகவும் விடுதலைப் புலிகள் அறிவித்திருக்கின்றனர்.
இலங்கை கிளிநொச்சியில் எறிகணை தாக்குதலில் பொதுமக்கள் பலி
இலங்கையின் வடக்கே கிளிநொச்சி மாவட்டம் புதுமுறிப்பு என்னுமிடத்தில் சனிக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற எறிகணை தாக்குதலில், குழந்தைகள் உட்பட 5 சிவிலியன்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், மேலும் 3 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சம்பவம் கிளிநொச்சி நகரில் இருந்து சுமார் 4 கிலோ மீ்ட்டர் தொலைவில் இடம்பெற்றிருப்பதாகக் கூறியிருக்கும் விடுதலைப் புலிகளின் சமாதான செயலகம், பொதுமக்கள் மீதான இந்த எறிகணை தாக்குதலை இராணுவத்தினரே நடத்தியிருப்பதாகக் குற்றம் சுமத்தியிருக்கின்றது.
இந்த குற்றச்சாட்டுக்கான பதிலை இலங்கை இராணுவத்தினரிடம் இருந்த பெற முடியவில்லை.
மன்னார் மாவட்டம் மடு பிரதேசத்தில் உள்ள பரப்புக்கடந்தான் பகுதியிலிருந்து இடம்பெயர்ந்து கிளிநொச்சி புதுமுறிப்பு பகுதியில் தஞ்சமடைந்திருந்த இடத்திலேயே இநத அசம்பாவித சம்பவம் நடைபெற்றிருப்பதாகப் பாதிக்கப்பட்டவர்கள் கூறுகின்றார்கள்.
பலியானவர்களின் உடல்கள் தற்போது கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருப்பதாக கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
கொழும்பு குண்டுவெடிப்பில் 45 பேர் காயம்
 |
|
கொழும்பு குண்டுவெடிப்பு |
இலங்கையின் சனசந்தடி நிறைந்த கொழும்பு புறக்கோட்டை பகுதியில் சனிக்கிழமை மதியம் இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவமொன்றில் 45 பேர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
இந்தச் சம்பவம் குறித்துக் கருத்துவெளியிட்ட புறக்கோட்டை பொலிசார், இன்று சுமார் 12.15 மணியளவில் புறக்கோட்டைப் பாதையோரத்தில் அரசமரதடிப்பகுதிக்கு சற்றுத்தொலைவில் அமைந்துள்ள கடிகாரம் விற்கும் சிறிய கடையொன்றில் இந்த குண்டுவெடிப்பு இடம்பெற்றதாகத் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவத்தில் காயமடைந்த சுமார் 45 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும், இவர்களில் ஒரு சிலருக்கே பாரிய காயங்கள் ஏற்பட்டிருப்பதாகவும், அந்த வைத்தியசாலையின் விபத்துக்கள் சேவைப் பணிப்பாளர் டாக்டர் அனில் ஜயசிங்க தெரிவித்தார்.
புலிகள் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலிருந்து மக்களை வெளியேறச் சொல்லும் பிரசுரங்களை கிளிநொச்சியில் வீசியுள்ளனர் விமானப் படையினர்
இலங்கையின் வடபகுதியில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலிருக்கும் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களை அங்கிருந்து வெளியேறுமாறு கோரும் துண்டுப் பிரசுரங்களை இலங்கையின் விமானப் படையினர் வானிலிருந்து வீசத்துவங்கியுள்ளனர். இறுதிப்போர் என்று நம்பப்படும் தாக்குதலுக்கு முன்பாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
இரவு நேரத்தில் ஹெலிகாப்டர் ஒன்று கிளிநொச்சி நகரப்பகுதியில் தாழப்பறந்து ஆயிரக்கணக்கான இந்த துண்டுப்பிரசுரங்களை வீசியதாக, புலிகளின் கட்டுப்பாட்டிலிருக்கும் கிளிநொச்சியிலிருக்கும் பொதுமக்கள் சிலர் தெரிவித்தனர்.
தமிழில் எழுதப்பட்டிருக்கும் இந்த துண்டுப்பிரசுரங்களில், விடுதலைப்புலிகள் மிகப்பெரிய தோல்விகளை சந்தித்து வருவதாகவும், எனவே பொது மக்கள் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களை விட்டு அரசு கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கு செல்வதன் மூலம் தங்களின் உயிர்களை பாதுகாத்துக் கொள்ளலாம் என்றும் கூறப்பட்டிருக்கிறது.
இவை குறித்த மேலதிக தகவல்களை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.
மட்டக்களப்பு சிறையில் குண்டுவெடிப்பு
 |
|
மட்டக்களப்பு சிறை |
இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் 5 பேர் உட்பட 7 கைதிகள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்
ஈ.பி.டி.பி. உறுப்பினர்கள் தனியாக வைக்கப்பட்டிருந்த சிறைக் கூடத்திற்குள் இக்குண்டுவெடிப்பு இடம்பெற்றுள்ளதாகக் கூறும் பொலிசார், அங்கு மேற்கொள்ளப்பட்ட தேடுதலின்போது மற்றுமொரு கைக்குண்டு வெடிக்காத நிலையில் கண்டெடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கின்றனர்.
இச்சம்பவத்தைக் கைதிகள் தப்பியோடுவதற்கான முயற்சியாகவே தாம் சந்தேகிப்பதாகக் கூறும் சிறைச்சாலை அத்தியட்சகரான லால் விக்கிரமசிங்க, சிறைச்சாலைக்குள் குண்டுகள் எப்படி கொண்டு வரப்பட்டன என்பது இதுவரை கண்டறியப்படவில்லை என்கிறார்.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் இந்த சம்பவத்துடன் தொடர்புபட்டிருப்பதாக ஈ.பி.டி.பி குற்றம்சுமத்துகின்றனர். ஆனால் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அதனை மறுத்துள்ளனர்.
நளினி விடுதலையை எதிர்ப்பது ஏன்? – தமிழக அரசு விளக்கம்
 |
|
நளினி – பழைய படம் |
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று 14 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்துவரும் நளினி விடுதலை செய்யப்படுவதற்கு எதிரான ஆட்சேபணைகளை தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றின் மூலம் விளக்கியிருக்கிறது.
ஆயுட்தண்டனை என்பதை பொதுவாக 14 ஆண்டுகள் என்ற ரீதியில் புரிந்துகொண்டு, தண்டனை பெற்றவர்களை விடுதலை செய்வது வழக்கமாக இருந்து வருவதை சுட்டிககாட்டி, நளினி விடுதலை கோரி மனுதாக்கல் செய்தார்.
மாநில ஆலோசனை வாரியம் முதற்கட்டத்தில் அவரது கோரிக்கையினை நிராகரித்தது. அந்நிராகரிப்பை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் நளினி மனுச்செய்தார்.
இந்நிலையில் தமிழக அரசு ஆலோசனை வாரியத் தீர்ப்பில் தனக்கு முழு உடன்பாடுதான் என்றும், நளினி விடுதலையை கோரப்போவதில்லை என்றும் கூறியது. அது குறித்த விளக்கமான மனு இன்று தாககல் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்த மேலதிக விபரங்களை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்க்லாம்.
இன்று நீதிபதி நாகமுத்து முன் நளினியின் மனு பரிசீலனைககு வந்தபோது விளக்கமான மனுவினை தமிழக அரசு தாக்கல் செய்தது.
திருகோணமலை துறைமுகத்தில் விடுதலைப் புலிகளின் விமானம் குண்டுவீசியுள்ளது
இலங்கையின் கிழக்கே திருகோணலை துறைமுகத்தை இலக்குவைத்து விடுதலைப் புலிகளின் விமானம் செவ்வாய் இரவு ஒரு தாக்குதலை நடத்தியிருந்தது.
விடுதலைப் புலிகளின் விமானம் ஒன்று இரண்டு குண்டுகளை வீசி விட்டுச் சென்றதில் சிலர் கொல்லப்பட்டதாகவும், பல படையினர் காயமடைந்ததாகவும் ஊடகங்கள் சில செய்திகள் வெளியிட்டாலும், உயிரிழப்புகள் ஏற்படவில்லை என்று இலங்கை அரசு கூறுகிறது.
இந்த தாக்குதல் குறித்து இலங்கை இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார கருத்து வெளியிடுகையில், “விடுதலைப் புலிகளின் ஒரு விமானம் திருகோணமலை துறைமுகப் பகுதியில் இரண்டு குண்டுகளை வீசியது. இரண்டு குண்டுகளும் வெடித்தன. இதில் பத்து கடற்படையினர் காயமடைந்தனர். ஆனால் கப்பல் தளத்தில் உள்ள கட்டிடங்களுக்கு எவ்வித சேதமும் இல்லை” என்றார்.
“சிறிய விமானத்தில் வந்து குண்டுகளை வீசுவது என்பது பெரிய அச்சுறுத்தல் கிடையாது. விடுதலைப் புலிகளின் நோக்கம் நாட்டு மக்களை பீதியடையச் செய்வதுதான்.ஆனால் இந்த தாக்குதல்களில் அவர்கள் இலக்குகளை அழிக்கமுடியவில்லை.” என்றும் அவர் குறிபிப்பிட்டார்
அவர் தெரிவித்த பிற கருத்துகளை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.
வட இலங்கையில் கடும் மோதல்கள் நீடிக்கின்றன
 |
|
இலங்கை படையினர் |
இலங்கையின் வடக்கே விடுதலைப் புலிகளுக்கு எதிராக இராணுவத்தினர் மேற்கொண்டுள்ள தாக்குதல் நடவடிக்கைகளில் குறைந்தது 32 விடுதலைப் புலிகளும் 2 இராணுவத்தினரும் கொல்லப்பட்டிருப்பதாகவும் மேலும் 16 இராணுவத்தினர் காயமடைந்திருப்பதாகவும் இலங்கையின் படைத்துறைத் தகவல்கள் தெரிவித்திருக்கின்றன.
வவுனியா, முல்லைத்தீவு, வெலிஒயா மற்றும் யாழ்ப்பாணம் கிளாலி பகுதிகளில் இடம்பெற்ற மோதல்களில் இந்த உயிரிழப்புக்கள் ஏற்பட்டிருப்பதாக அரச தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
முல்லைத்தீவு மாவட்டம் துணுக்காய்க்கு வடக்கிலும் இராணுவத்தினர் தமது பகுதிக்குள் முன்னேறுவதற்கு மேற்கொண்ட முயற்சி முறியடிக்கப்பட்டிருப்பதாகக் கூறியுள்ள விடுதலைப் புலிகள், இங்கு இடம்பெற்ற சண்டைகளில் கொல்லப்பட்ட இராணுவச் சிப்பாய் ஒருவரின் சடலத்தையும் ஆயுதத் தளபாடங்களையும் தாங்கள் கைப்பற்றியிருப்பதாகவும் தெரிவித்திருக்கின்றனர்.
இதற்கிடையில் முல்லைத்தீவு மாவட்டம் துணுக்காய் புத்துவெட்டுவான் பகுதியில் நடத்தப்பட்ட கிளேமோர் கண்ணிவெடி தாக்குதலில் சிவிலியன் ஒருவர் கொல்லபட்டுள்ளதாகவும், மேலும் 3 பேர் காயமடைந்துள்ளதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்திருக்கின்றனர்.
திருகோணமலை கடற்படைத்தளத்தின் மீது விடுதலைப்புலிகள் விமானத்தாக்குதல்
இலங்கையின் கிழக்கே திருகோணமலை கடற்படை தளத்தின் மீது செவ்வாய்கிழமை இரவு 9.20 மணியளவில் விடுதலைப்புலிகளின் விமானங்கள் குண்டு வீச்சுத்தாக்குதலை நடத்தியதாக அங்கிருந்துவரும் செய்திகள் கூறுகின்றன.
இந்தத் தகவலை உறுதி செய்துள்ள இலங்கை அரசின் பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம், கடற்படைத்தளத்தின் மீது இரண்டு குண்டுகளை வீசிய பின்னர் விடுதலைப்புலிகளின் விமானங்கள் அங்கிருந்து சென்றுவிட்டதாக தெரிவித்துள்ளது.
இருப்பினும் அந்தத்தாக்குதல்கள் தோல்வியில் முடிந்ததாகவும் பாதுகாப்பு அமைச்சகத்தின் இணையத்தளம் கூறியுள்ளது.
அதேவேளை, திருகோணமலை துறைமுகப் பகுதியில் ஒரு பெரிய குண்டு வெடிப்புச் சத்தம் கேட்டதாகவும், அதனையடுத்து துப்பாக்கி வேட்டுக்கள் மற்றும் பீரங்கி வேட்டுக்கள் ஆகியன தொடர்ந்து வெடித்ததாகவும் திருகோணமலை வாசிகள் கூறுகின்றனர்.
இந்தச் சம்பவத்தில் காயத்துக்கு இலக்கான கடற்படையினர் குறைந்தது 10 பேர் திருகோணமலை அரசினர் மருத்துவமனையில் சிகிச்சைக்கென அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தத் தாக்குதலையடுத்து தாக்குதல் நடத்திய விடுதலைப் புலிகளின் விமானங்களை தேடியழிப்பதற்காக வன்னி பிரதேசத்துக்கு விமானப் படையின் குண்டு வீச்சு விமானங்கள் சென்று வந்ததாக வடபகுதியிலிருக்கு கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விமானப் படையின் இந்த வான்வழித் தாக்குதல்களினால் ஏற்பட்ட சேத விபரங்கள் உடனடியாக வெளியாகவில்லை.
கிழக்கிலங்கை பல்கலைக்கழக பாதுகாப்பு பொலிஸாரிடம்
 |
|
கிழக்கு பல்கலைக்கழகம் |
இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் பல்கலைக்கழகங்களின் பாதுகாப்பு பொலிஸாரின் கீழ் கொண்டுவரப்பட்டதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கிழக்கு பல்கலைக்கழகத்தில் கடந்த வாரம் சிங்கள மாணவரொருவர் ஆயுததாரிகளினால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தையடுத்து, கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து பல்கலைக்கழகங்களின் பாதுகாப்பும் இன்று முதல் பொலிசாரின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் நேற்றுக் கூட்டிய கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் பேரிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பொலிஸாரால் தங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகங்கள் தெரிவிக்கின்றன.
இதன் பிரகாரம் கிழக்கு பல்கலைக்கழகத்தில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரின் கீழ் 60 பொலிஸாரை உள்ளடக்கிய பொலிஸ் காவல் நிலையமொன்று புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ளது
பல்கலைக்கழகத்திற்குள் பிரவேசிக்கும் சகலரும் இனிமேல் சோதனையின் பின்பே நுழைய அனுமதிக்கப்படுவார்கள் என இப் புதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி பொலிஸ் அதிகாரியொருவர் குறிப்பிட்டார்
இப்புதிய பாதுகாப்பு நடைமுறையின் கீழ் மட்டக்களப்பு கிழக்கு பல்கலைக்கழகம் மற்றும் அதன் திருகோணமலை வளாகம் அம்பாறை தென் கிழக்கு பல்கலைகழகம் ஆகியவற்றின் பாதுகாப்பை இன்று முதல் பொலிஸார் பொறுப்பேற்றூள்ளதாக அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வட இலங்கை மோதல்களில் 7 இராணுவத்தினர் பலியானதாக பாதுகாப்பு அமைச்சு கூறுகிறது
 |
|
இலங்கை இராணுவத்தினர் |
இலங்கையின் வடக்கே வன்னிப் பகுதி மோதல்களில் இலங்கை இராணுவத்தினர் 7 பேர் கொல்லப்பட்டதாகவும், மேலும் 18 சிப்பாய்கள் காயமடைந்ததாகவும் இலங்கை பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம் தெரிவித்துள்ளது.
அதேவேளை, தமது படையினர் அங்கு தொடர்ந்து முன்னேறி வருவதாகவும், விடுதலைப்புலிகள் தரப்பில் 18 பேர் கொல்லப்பட்டதாகவும் பாதுகாப்பு அமைச்சு கூறியுள்ளது.
முல்லைத்தீவின் மேற்கு முனை, கிளிநொச்சியின் தென்பகுதி, நாச்சிக்குடா, முல்லைத்தீவு கிழக்கு, ஆண்டான்குளம் ஆகிய இடங்களில் பல மோதல் மற்றும் தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்றதாகவும் இலங்கை பாதுகாப்பு அமைச்சு தனது இணைய அறிக்கையில் கூறியுள்ளது.
இருந்தபோதிலும், இவை குறித்து விடுதலைப்புலிகளின் கருத்துக்களை உடனடியாகப் பெறமுடியவில்லை.
இலங்கை கிழக்கு பல்கலைக்கழக சிங்கள மாணவர்கள் வேறு பல்கலைக்கழகங்களுடன் இணைப்பு
இலங்கையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ள கிழக்கு பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் சிங்கள மாணவர்களை வடக்கு கிழக்கிற்கு வெளியேயுள்ள வேறு பல்கலைக்கழகங்களுடன் தற்காலிகமாக இணைக்க உயர் கல்வி அமைச்சு முடிவெடுத்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை பல்லைக்கழக வளாகத்திற்குள் சிங்கள மாணவரொருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தையடுத்து ஏற்பட்டுள்ள பாதுகாப்பு தொடர்பான அச்ச நிலையையடுத்தே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இப் படுகொலைச் சம்பவமானது துரதிர்ஷ்டவசமானது என பி.பி.சி தமழோசைக்கு கூறிய உயர் கல்வி அமைச்சரான பேராசிரியர் விஸ்வ வர்ணபால, அங்கு பாதுகாப்பு தொடர்பான பிரச்சினை இருப்பதாகவும், இதன் காரணமாகவே பெற்றோர்களால் முன் வைக்கப்பட்ட கோரிக்கைகளின் பேரில் தற்காலிகமாக இம் மாணவர்களை வேறு பல்கலைக்கழகங்களுடன் இணைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடுகின்றார்.
இலங்கையின் வடக்கே தொடரும் மோதல்
 |
|
இலங்கை இராணுவத்தினர் |
இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மற்றும் வெலிஓயா பிரதேச போர்முனைகளில் ஞாயிற்றுகிழமையன்று விடுதலைப் புலிகளுக்கு எதிராக இராணுவத்தினர் மேற்கொண்ட தாக்குதல்களில் 11 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும் 16 இராணுவத்தினர் காயமடைந்திருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.
கிளிநொச்சி மாவட்டத்தின் நாச்சிக்குடா பிரதேசத்தில் ஞாயிறு காலை 6 மணிமுதல் பிற்பகல் 4 மணிவரையில் இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கடும் மோதல்கள் இடம்பெற்றதாகவும், இதன்போது 4 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டிருப்பதாகவும் 10 இராணுவத்தினர் காயமடைந்திருப்பதாகவும் இந்தப் பிரதேசத்தில் வேறோரிடத்தில் கண்ணிவெடிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தபோது 3 இராணுவத்தினர் காயமடைந்துள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் கூறியிருக்கின்றது.
முல்லைத்தீவு மாவட்டம் துணுக்காய் பிரதேசத்தில் இடம்பெற்ற மோதல்களில் 4 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும் மேலும் 3 இராணுவத்தினர் காயமடைந்திருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் குறிப்பிட்டிருக்கின்றது.
இலங்கையில் மாகாண சபைத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வெற்றி
 |
|
மக்களுக்கு கிடைத்த வெற்றி – இலங்கை ஜனாதிபதி |
இலங்கையின் சபரகமுவ மற்றும் வடமத்திய மாகாணங்களில் சனிக்கிழமை இடம்பெற்ற மாகாணசபைத் தேர்தல்களில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக்
கூட்டமைப்பு வெற்றி பெற்று இரண்டு மாகாணசபைகளிலும் தனது ஆட்சி அதிகாரத்தை தக்கவைத்துக்கொண்டிருக்கிறது.
ஞாயிற்றுகிழமை தேர்தல் செயலகத்தினால் வெளியிடப்பட்ட தேர்தல் முடிவுகளின் பிரகாரம், இருமாகாணங்களிலுமாக மொத்தமுள்ள 77 இடங்களில் 45 இடங்களை ஆளும் கூட்டணி கைப்பற்றியுள்ளது. வெற்றி பெறும் கட்சிக்கும் வழங்கப்படும் போனஸ் இடங்களும் இதில் அடங்கும். ஆளும் கூட்டணி பெற்ற மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 7,80,246.
இதேவேளை, பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி மொத்தம் 29 இடங்களையும், ஆளும் கூட்டணியின் முன்னாள் பங்காளிக் கட்சியான ஜே.வி.பி. 38,425 வாக்குகளை மாத்திரம் பெற்று மூன்று இடங்களையும் மட்டும் பெற்றன.
இந்தத் தேர்தலில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி தோல்விபெற்றிருக்கின்ற போதிலும், கடந்த மாகாணசபைத் தேர்தல் முடிவுகளுடன் ஒப்பிடும் போது, இம்முறை அந்தக் கட்சி நான்கு மேலதிக இடங்களை பெற்றுள்ளது.அதேவேளை, ஆளும் கட்சி நான்கு இடங்களை இழந்திருக்கிறது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
இந்தத் தேர்தல் வெற்றி குறித்துக் கருத்துவெளியிட்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராகபக்ஷ, இந்தத் தேர்தல் வெற்றியானது நாட்டுமக்கள் அனைவரிற்கும் கிடைத்தவெற்றியென்றும், இந்த வெற்றியானது பயங்கரவாதத்திற்கு எதிராகக் கடுமையான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள பாதுகாப்புப் படையினருக்கு அளவிடமுடியாத சக்தியினையும், ஊக்கத்தினையும் வழங்கும் என்றும் தெரிவித்திருக்கிறார்.
இலங்கையின் மட்டக்களப்பில் தேசிய நல்லிணக்க செயலகம்
 |
|
செயலகம் திறப்பு |
இலங்கையில் மூவினங்களும் வாழும் கிழக்கு மாகாணத்தில், மாகாண முதலமைச்சரின் கீழ் அமையவிருக்கும் மாகாண மற்றும் மாவட்ட ரீதியிலான இன நல்லிணக்கச் செயலகத்தின் முதலாவது செயலகத்தை, மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் ஞாயிற்றுகிழமை மட்டக்களப்பில் ஆரம்பித்து வைத்தார்
மாவட்டத்தின் பல பாகங்களிலுமிருந்து சமய, சமூக தலைவர்கள் உட்பட பல்வேறு பிரமுகர்கள் முன்னிலையில் இதனை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய மாகாண முதலமைச்சர், காணி, மீள் குடியேற்றம், தொழில் மற்றும் கல்வி உட்பட பல்வேறு விடயங்களில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு ஏற்றுக் கொள்ளக் கூடிய தீர்வொன்றை அரசியலுக்கு அப்பால் காண்பதே இச்செயலகத்தின் நோக்கம் என்றார்.
மூவினங்களையும் சேர்ந்தவர்கள் மாவட்ட மற்றும் மாகாண ரீதியாக செயல்படவிருக்கும் இந்த இன நல்லிணக்கச் செயலகத்தில் அங்கம் வகிப்பார்கள் என்றும், முதலமைச்சரின் செயலகத்தில் இதற்கென தனியான நிறைவேற்றுப் பணிப்பாளரொருவர் நியமிக்கப்ப்டுள்ளார் என்றும் இங்கு தெரிவிக்கப்பட்டு இது பற்றிய விளக்கமும் அளிக்கப்பட்டது.
இலங்கையின் வடக்கில் தொடரும் மோதல்
 |
|
இலங்கை இராணுவத்தினர் |
இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு கிளிநொச்சி மாவட்டங்களிலும் வெலிஓயா பிரதேசத்திலும் விடுதலைப்புலிகளுக்கு எதிராகத் தொடரும் இராணுவ நடவடிக்கைகளில் சனிக்கிழமை இடம்பெற்ற மோதல்களில் 28 விடுதலைப் புலிகளும் 3 இராணுவத்தினரும் கொல்லப்பட்டிருப்பதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவி்த்திருக்கின்றது. இந்த மோதல்களில் மேலும் 16 இராணுவத்தினர் காயமடைந்திருப்பதாக இராணுவம் கூறியிருக்கின்றது.
வவுனியா பாலமோட்டை – கிளிநொச்சி வன்னேரிக்குளம் பிரதேசத்தில் இராணுவத்தினருக்கு எதிராக விடுதலைப் புலிகள் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் நடத்திய எதிர்த்தாக்குதல்களில் 6 இராணுவத்தினர் கொல்லப்பட்டிருப்பதாக விடுதலைப் புலிகள் தெரிவித்திருக்கின்றனர்.
இதற்கிடையில் யாழ்குடாநாட்டில் வலிகாமம் வடக்கு பகுதியில் உள்ள இராணுவ உயர் பாதுகாப்பு வலயத்தில் அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த 833 இடம்பெயர்ந்த குடும்பங்களை மீளக்குடியமர்த்துவது என இந்த விடயம் தொடர்பாக ஆராய்ந்து உச்ச நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள உயர் மட்டக்குழு முடிவு செய்துள்ளது.
இலங்கையில் வெடிகுண்டுக்கான சாதனங்கள் மற்றும் வெடிகுண்டு கண்டெடுப்பு
 |
|
கைப்பற்றப்பட்ட இலத்திரனியல் சாதனங்கள் |
இலங்கையில் தலைநகர் கொழும்பின் புறக்கோட்டை பகுதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயமொன்றிலிருந்து தற்கொலையங்கிக்குப் பயன்படுத்தக்கூடிய பொருட்கள் மற்றும் இலத்திரனியல் சாதனைக்களைக் கண்டுபிடித்திருப்பதாக கொழும்பு பொலிசார் தெரிவித்திருக்கின்றனர்.
கொழும்பு புறக்கோட்டை ஓல்கோட் மாவத்தையில் அமைந்துள்ள புனித பிலிப்ஸ் கிறிஸ்தவ தேவாலய வளவினுள் இருந்து சுமார் 19 டெட்டோனேட்டர்கள், 23 ஆளிகள் போன்ற பொருட்கள் கைப்பற்றப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தற்கொலைக்குண்டு அங்கியொன்றினை பொருத்துவதற்காக இவை கொண்டுவந்து மறைத்துவைக்கப்பட்டிருக்கலாம் என அவர்கள் சந்தேகம் வெளியிட்டிருக்கின்றனர்.
இது தொடர்பில் இதுவரை யாரும் கைதுசெய்யப்பட்டதாகத் தெரியவில்லை.
இதேவேளை, இலங்கையின் மத்திய மலைநகரமான கண்டியின் புறநகர்ப் பகுதியான பலகொல்லவில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் குழுவொன்று வீடொன்றின் அருகிலிருந்த மணல்மேடு ஒன்றிலிருந்து சுமார் ஒரு கிலோ எடையுள்ள வெடிகுண்டு ஒன்றைக் கண்டெடுத்துள்ளது.
அக்குண்டு செயலிழக்கம் செய்யப்பட்டுள்ளது.
துணுக்காய், உயிலங்குளம், அக்கராயன்குளம் ஆகியவற்றைக் கைப்பற்றியிருப்பதாக இலங்கை இராணுவம் கூறுகிறது
இலங்கையின் வடக்கில் முல்லைத்தீவு மாவட்டம் மாங்குளத்திற்கு மேற்கே உள்ள துணுக்காய், அதனை அண்டிய உயிலங்குளம் மற்றும் அக்கராயன்குளம் பிரதேசத்தின் தென்பகுதி ஆகியவற்றை இராணுவத்தினர் வெள்ளியன்று விடுதலைப் புலிகளிடமிருந்து கைப்பற்றியிருப்பதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.
துணுக்காய் நகரப் பகுதியை இராணுவத்தினர் கைப்பற்றியதையடுத்து இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சரத் பொன்சேகா, இராணுவ தலைமையகத்தின் முக்கிய இராணுவ அதிகாரிகளுடன் வவுனியாவில் உள்ள வன்னிப் பிராந்திய ஆயுதப்படைகளின் தலைமையகத்திற்கு விஜயம் செய்துள்ளார். முக்கிய களமுனை இராணுவ தளபதிகளுடன் அவர் கலந்துரையாடியுள்ளதாகவும் இராணுவம் தெரிவித்திருக்கின்றது.
துணுக்காய் நகரப் பகுதியை இராணுவத்தினர் கைப்பற்றியிருப்பது பற்றி விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து உடனடியாகத் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
வட இலங்கை மோதல் நிலவரம் குறித்த மேலதிக விபரங்களை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.
இலங்கை கிழக்கு பல்கலைக்கழக்கத்தில் சிங்கள மாணவர் சுட்டுக் கொலை
இலங்கையில் மட்டக்களப்பு மாவட்டம் வந்தாறுமூலையில் கிழக்கு பல்கலைக்கழக சிங்கள மாணவர் ஒருவர் அடையாளம் தெரியாத ஆயுததாரிகளினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
கொல்லப்பட்டவர் வர்த்தக முகாமைத்துவ பீடத்தில் இறுதியாண்டு கல்வி பயிலும் மாணவரான பசன் சமரசிங்க என பொலிசார் தெரிவிக்கின்றனர்.
பல்கலைக்கழக சமூகத்தை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள இந்தச் சம்பவம் காரணமாக அங்கு கல்வி பயிலும் சிங்கள மாணவர்களிடையே பாதுகாப்பு தொடர்பான அச்ச நிலை மீண்டும் ஏற்பட்டுள்ளதாக பல்லைக்கழக நிர்வாகம் கூறுகின்றது.
 |
|
பல்கலைக் கழகத்திலிருந்து வெளியேறும் சிங்கள மாணவர்கள் |
மறு-அறிவித்தல் வரும்வரை பல்கலைக்கழகத்தின் அனைத்து விரிவுரைகளும் இடைநிறுத்தப்படவேண்டும் என்றும் மாணவர்கள் தத்தமது வீடுகளுக்கு திரும்புமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் மற்றும் இராணுவ பாதுகாப்புடன் சிங்கள மாணவர்கள் குருநாகல் வரை விசேட வாகனங்களில் அனுப்பிவைக்கப்டப்டுள்ளார்கள்.
இச்சம்பவத்தையடுத்து பல்கலைக்கழகத்திற்கு விஜயம் செய்த கிழக்கு மாகாண முதல்வர் சிவநேசத்துரை சந்திரகாந்தன், சிங்கள மாணவர்களையும் நிர்வாகத்தினரையும் சந்தித்து உரையாடினார். சிங்கள மாணவர்களின் பாதுகாப்பு குறித்து அவர் தெரிவிக்கும் கருத்துகளை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.
மௌலவி ஆசிரியர்களை நியமிக்க இலங்கை அரசு மீண்டும் முயற்சி
இலங்கையில் அரசாங்கப் பாடசாலைகளில் சேவையாற்றுவதற்கு சுமார் 15 வருடங்களின் பின்பு மௌலவி ஆசிரியர்களை நியமிக்க அரசாங்கம் முடிவுசெய்து அதற்கான விண்ணப்பங்களை கோரியுள்ளது.
இஸ்லாம் பாடம் கற்பிப்பதற்கு முக்கியமான நியமனம் என கருதப்படும் இந்நியமனம் தொடர்பாக முஸ்லிம் அரசியல்வாதிகளினாலும் அமைப்பகளினாலும் நீண்ட காலமாக வலியுறுத்தப்பட்டு வந்தபோதிலும் தற்போது தான் இது தொடர்பான அறிவித்தலை அரசாங்கம் விடுத்துள்ளது.
இஸ்லாம் என்பது அரபு மொழியுடன் தொடர்புடையது என்பதால், அரபு மொழியை உச்சரிக்கக் கூடியவர்களே அப்பாடத்தை கற்பிக்க வேண்டும் என ஜாமியத்துல் உலமா சபைகளின் பொதுவான கருத்தாகும்.
மௌலவி அல்லாத ஏனைய பாட ஆசிரியர்கள் இஸ்லாம் கற்பிப்பதால், அரபு மொழியை சரியாக உச்சரிக்க தவறுவதாக கூறும் அரபு மொழி உதவிக் கல்விப் பணிப்பாளர்களில் ஒருவரான ஏ.எல்.எம்.முபாரக் மௌலவி.
இதன் காரணமாக பரீட்சை பெறுபேறுகள் கூட பாதிக்கப்படுகின்றது என்கிறார்.
ஆயிரத்திற்கும் மேற்பட்ட மௌலவி ஆசிரியர் வெற்றிடங்கள் நிலவுகின்ற போதிலும் சுமார் 425 ஆசிரியர்களுக்கான விண்ணப்பங்களே கோரப்பட்டுள்ளதாக இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்க செயலாளரான எம்.அனஸ் சுட்டிக் காட்டுகின்றார்.