கடலூர் மக்களவை தொகுதி பாமகவுக்கா?
Dinamani நிருபர்
கடலூர், மார்ச் 8: மக்களவைத் தேர்தலில், கடலூர் தொகுதியில் பாமக போட்டியிடுவது நிச்சயம் எனத் தெரிகிறது.
கடலூர் மக்களவைத் தொகுதி தொடக்கம் முதல் காங்கிரஸ் வசம் இருந்து வந்துள்ளது.
பி.ஆர்.எஸ். வெங்கடேசன் 3 முறை எம்.பி.யாக இருந்தார். ஒருமுறை அதிமுக வசமும் அதைத் தொடர்ந்து இருமுறை திமுக வசமும் இருந்துள்ளது.
ஆனால் இந்தத் தேர்தலில் அதிமுக அணியில் இருந்தாலும், திமுக அணியில் இருந்தாலும் கடலூர் மக்களவைத் தொகுதியைக் கேட்பதில் பாமக தலைமை உறுதியாக இருக்கிறது.
மாவட்ட ஒருங்கிணைந்த பாமக நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி, கட்சித் தலைமையை தொடர்ந்து வற்புறுத்தி வருகிறார்கள்.
தொகுதி மறுசீரமைப்பே இதற்கு முக்கியக் காரணியாக அமைந்து இருக்கிறது. முந்தைய தேர்தல்களில்
- கடலூர்,
- நெல்லிக்குப்பம்,
- பண்ருட்டி மற்றும்
- விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை,
- ரிஷிவந்தியம்,
- சங்கராபுரம்
ஆகிய சட்டப் பேரவைத் தொகுதிகள் கடலூர் மக்களவைத் தொகுதியில் இடம்பெற்று இருந்தன.
தேர்தல் ஆணையம் தொகுதி மறுசீரமைப்பு மேற்கொண்ட பின்,
- கடலூர்,
- பண்ருட்டி,
- நெய்வேலி,
- குறிஞ்சிப்பாடி,
- திட்டக்குடி,
- விருத்தாசலம்
ஆகிய சட்டப் பேரவைத் தொகுதிகளைக் கொண்டதாக கடலூர் மக்களவைத் தொகுதி மாறியிருக்கிறது.
சாதகமான நிலை
உளுந்தூர்பேட்டை, ரிஷிவந்தியம், சங்கராபுரம் தொகுதிகளில் வன்னிய சமூகத்தினர் மிகவும் குறைவாக இருந்ததால்தான், முந்தைய கடலூர் மக்களவைத் தொகுதியில் வன்னியர் அல்லாதோர் வெற்றிபெற முடிந்தது.
தற்போது அந்த 3 தொகுதிகளும் நீக்கப்பட்டு, நெய்வேலி, குறிஞ்சிப்பாடி, திட்டக்குடி தொகுதிகள் கடலூர் மக்களவைத் தொகுதியில் இணைக்கப்பட்டு இருப்பது, நிரந்தரமாக பாமகவுக்கு சாதகமான நிலையை ஏற்படுத்தி இருப்பதாக அக் கட்சியினர் தெரிவித்தனர்.
எனவேதான் கடலூர் மக்களவைத் தொகுதியை கேட்பதில், பாமக உறுதியாக இருப்பதாக அக் கட்சியினர் தெரிவித்தனர்.
வேட்பாளர் யார்?
பாமக சார்பில் கடலூர் தொகுதியில் போட்டியிட
- அன்புமணி ராமதாஸ்,
- திண்டிவனம் எம்.பி. தன்ராஜ்,
- காடுவெட்டி குரு,
- விருத்தாசலம் முன்னாள் எம்.எல்.ஏ. ஆர்.கோவிந்தசாமி
ஆகியோரின் பெயர்கள் அடிபடுகிறது. அன்புமணியைப் பொருத்தவரை ராஜ்யசபா உறுப்பினராக இன்னும் ஓராண்டு நீடிக்க முடியும். மேலும் கடலூர் தொகுதி வேட்பாளர் என்று ஆகிவிட்டால், மற்ற தொகுதிகளில் தேர்தல் பணி ஆற்றுவது சிரமம்.அதனால் அவர் போட்டியிட வாய்ப்பில்லை என்றே பாமகவினர் கூறுகின்றனர்.
திண்டிவனம் தொகுதி நீக்கப்பட்டு, விழுப்புரம் தனித் தொகுதியாக மாற்றப்பட்டு இருப்பதால் தற்போதைய எம்.பி. தன்ராஜ் அங்கு போட்டியிட வாய்ப்பில்லை.
எனவே அவருக்குக் கடலூர் தொகுதி ஒதுக்கப்படலாம் என்றும் பாமக முக்கிய நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். காடுவெட்டி குருவுக்கும் கடலூர் தொகுதி ஒதுக்க அதிக வாய்ப்பு இருப்பதாக அக் கட்சியினர் தெரிவிக்கின்றனர்.