“தசாவதாரம் படத்தில் மத உணர்வு காட்சிகள் இல்லை’: நீதிமன்றத்தில் தணிக்கை குழு பதில்
சென்னை, மே 13: “தசாவதாரம்’ படத்தில் மத உணர்வை தூண்டக்கூடிய காட்சிகள் இல்லை. அப்படத்தை நன்கு தணிக்கைக்கு உட்படுத்திய பின்னரே “யு’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது என உயர் நீதிமன்றத்தில் தணிக்கைக்குழு தெரிவித்துள்ளது.
“தசாவதாரம்’ என்ற தலைப்பை யாரும் காப்புரிமை செய்யவில்லை என்பதால் அதனை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை என இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார் தாக்கல் செய்த பதில் மனுவில் கூறியுள்ளார்.
“ஆஸ்கார் பிலிம்ஸ்’ தயாரித்து, கே.எஸ்.ரவிக்குமார் இயக்கி கமலஹாசன் நடித்த “தசாவதாரம்’ படத்தை வெளியிட எதிர்ப்பு தெரிவித்து சுவாமி கோவிந்த ராமானுஜ தாசா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
மத உணர்வை தூண்டும் காட்சிகள் படத்தில் இடம் பெற்றுள்ளன. இவற்றை நீக்கிய பின்னரே தசாவதாரம் படத்தை வெளியிட வேண்டும். “தசாவதாரம்’ என பெயர் வைக்கவும் தடை விதிக்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.
இதுதொடர்பாக தணிக்கை குழு மண்டல அலுவலர் பாபு ராமசாமி உயர் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை பதில் மனு தாக்கல் செய்துள்ளார். அதன் விபரம்:
“தசாவதாரம்’ என்ற தலைப்பு ஏன், எப்படி? இந்து மத நம்பிக்கைக்கு எதிராக உள்ளது என்பதை மனுதாரர் விளக்கவில்லை. இந்த தலைப்பு சினிமா ஒளிப்பதிவு சட்டத்தை மீறுவதாக இல்லை. இதற்கு முன் “நவராத்திரி’, “கல்கி’, என்ற பெயரிலும் படங்கள் வெளியாகி உள்ளன.
சைவத்திற்கும், வைஷ்ணவத்திற்கும் இடையே மோதல்கள் ஏற்படுவது போன்ற காட்சிகள் படத்தில் இல்லை. பிரணவ மந்திரத்தின் மேல் கமலஹாசன் ஏறுவது போன்றோ, பகவத் கீதையை கிழிப்பது போன்றோ காட்சிகள் இல்லை. அதற்கு சான்றிதழும் வழங்கப்படவில்லை.
சைவத்தின் மீது பற்றுடைய இரண்டாம் குலோத்துங்க சோழன் எப்படி வைஷ்ணவத்தையும் சார்ந்து இருந்தான் என்பது தொடர்பான காட்சிகளே இடம் பெற்றுள்ளன. இதன் அடிப்படையில் படத்திற்கு “யு’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. ராமானுஜர் வேடத்தில் கமல் நடிக்கவில்லை. ரங்கராஜன் நம்பி என நடித்துள்ளார்.
படம் குறித்த தகவலை முழுமையாக அறியாமல், கற்பனையாக குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன.
இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் பதில் மனு:
“தசாவதாரம்’ படத்தை தகுதி வாய்ந்த அமைப்பு பார்த்த பின்னரே அதற்கு “யு’ சான்றிதழ் வழங்கியுள்ளது. படத்தை பார்க்காமல் அதன் ஒரு சில காட்சிகளை மட்டும் பார்த்து விட்டு வழக்குப் போட்டுள்ளனர். இது கேலிக்கூத்தானது.
12-ம் நூற்றாண்டின் வரலாற்று அடிப்படையில் படம் எடுக்கப்பட்டுள்ளது. இதில் சமய மோதல் காட்சிகள் இல்லை. “தசாவதாரம்’ தலைப்பு தவறாக பயன்படுத்தவில்லை. இத் தலைப்பிற்கு யாரும் காப்புரிமை பெறவில்லை. எனவே தலைப்பை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை
படத்தின் கதை ராமானுஜர் வாழ்க்கைப் பற்றியோ அல்லது ஸ்ரீரங்கம் கோயிலைப் பற்றியதோ இல்லை. ராமானுஜரை, ஸ்ரீரங்கநாதர் சிலையுடன் கட்டி கடலில் வீசுவது போன்ற காட்சிகள் இல்லை.
எனவே தணிக்கை குழுவால் “யு’ சான்றிதழ் அளிக்கப்பட்ட காட்சிகளை நீக்கவேண்டியதில்லை. கருத்து சுதந்திரம் தடுக்கப்படக்கூடாது. படத்திற்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.
ரிலீஸ் தேதி முடிவாகவில்லை:
நீதிபதிகள் எம்.சத்யநாராயணன். ராஜசூர்யா அடங்கிய விடுமுறை கால பெஞ்ச் முன் “தசாவதாரம்’ பட வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது படம் வெளியாகும் தேதி முடிவாகி விட்டதா? என நீதிபதிகள் கேட்டனர். இன்னும் முடிவாகவில்லை என தெரிவித்ததால் அடுத்த வாரத்திற்கு வழக்கை தள்ளி வைத்தனர். இதனால் “தசாவதாரம்’ படம் மே 15-ம் தேதி வெளியாவது தள்ளி போகிறது.