சார்க் மாநாடு கொழும்பில் ஆரம்பம்
![]() |
![]() |
சார்க் சின்னம் |
தெற்காசிய நாடுகளின் பிராந்திய ஒத்துழைப்புக்கான சார்க் அமைப்பின் உச்சமாநாடு அதிகாரிகள் மட்டத்திலான கூட்டத்துடன் ஞாயிறன்று தொடங்கியுள்ளது.
அதிகாரிகளின் கூட்டத்துக்கு பின்னர் வெளியுறவு அமைச்சர்களின் கூட்டம் நடக்கும். அதன் பின்னர் சார்க் நாடுகளின் தலைவர்கள் பங்குபெறும் சந்திப்பு ஆகஸ்ட் மாதம் இரண்டாம் மற்றும் முன்றாம் தேதிகளில் நடைபெறவுள்ளன.
சார்க் நாடுகளுக்கிடையே உணவுப் பாதுகாப்புக் கையிருப்பு, சார்க் நிதியம் ஏற்படுத்துதல் மற்றும் மின்வலு பரிமாற்றம் குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட இருக்கிறது.
மாநாட்டின் நிகழ்ச்சித் திட்டம் குறித்து கொழும்பிலிருந்து எமது செய்தியாளர் கருணாகரன் வழங்கும் செய்திக் குறிப்பினை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.
வட இலங்கையில் மோதல்கள் நீடிக்கின்றன
![]() |
![]() |
இலங்கை சிப்பாய் |
இலங்கையின் வடக்கே வவுனியா, மன்னார் களமுனைகளில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக இராணுவத்தினர் மேற்கொண்டு வரும் இராணுவ நடவடிக்கைகளில் 13 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் மாங்குளத்தில் இருந்து மன்னார் மாவட்டத்தில் உள்ள வெள்ளாங்குளத்தை நோக்கிச் செல்லும் வீதியை நோக்கி முன்னேறும் இராணுவத்தினர், மல்லாவிக்கு அருகில் தமது படை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.
முல்லைத்தீவு மாவட்டம் துணுக்காய் பிரதேசத்தில் உள்ள கல்விளான் பகுதியைச் சுற்றி வளைக்க முயன்ற இராணுவத்தினரை எதிர்த்து, குட்டிமூலை என்னுமிடத்தில் விடுதலைப் புலிகள் நடத்திய முறியடிப்புத் தாக்குதலில் 25 இராணுவத்தினர் கொல்லப்பட்டிருப்பதாகவும் மேலும் 40 படையினர் காயமடைந்துள்ளதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்திருக்கின்றனர்.
இந்த மோதல்களில் விடுதலைப் புலிகள் தரப்பில் 4 பேர் கொல்லப்பட்டிருப்பதாகவும் விடுதலைப் புலிகள் கூறியிருக்கின்றனர்.
முல்லைத்தீவு மாவட்டம் வவுனிக்குளம் களமுனையில் கொல்லப்பட்டு இராணுவத்தினரால் வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டிருந்த விடுதலைப் புலிகளின் 30 சடலங்களில் 19 சடலங்கள் ஞாயிறன்று சர்வதேச செஞ்சிலுவைக் குழுவினரின் ஊடாக விடுதலைப் புலிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக படைத்தரப்பினர் தகவல் வெளியிட்டிருக்கின்றனர்.
இதனிடையில் மாந்தை மேற்கு, துணுக்காய் பிரதேசங்களில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக இராணுவத்தினர் மேற்கொண்டு வரும் இராணுவ நடவடிக்கைகள் காரணமாக இடம்பெயர்ந்துள்ள பெரும் எண்ணிக்கையிலான பொதுமக்கள் கிளிநொச்சி மாவட்டத்தின் வன்னேரிக்குளம், அக்கராயன் போன்ற பிரதேசங்களை நோக்கி நகர்ந்து பாடசாலைகள், பொது இடங்கள் மற்றும் மரநிழல்களின் கீழ் தஞ்சமடைந்திருப்பதாகவும், இவர்களுக்கான அவசர நிவாரணப் பணிகள் பெரும் சிக்கல்களுக்கு மத்தியிலேயே மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.
பாடசாலைகளில் இடம்பெயர்ந்து வந்தவர்கள் தங்கியிருப்பதனால், இப்பிரதேசத்தில் உள்ள பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகள் முழுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கல்வித்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.
மீன் பிடித் தடைகளை அகற்ற திருகோணமலை மீனவர்கள் முதலமைச்சரிடம் வேண்டுகோள்
![]() |
![]() |
முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் |
திருகோணமலை மாவட்டத்தில் மீன் பிடிப்பதில் விதிக்கப்பட்டுள்ள தடைகள் அகற்றப்பட வேண்டுமென அம்மாவட்ட மீனவர்கள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனைச் சந்தித்து முறைப்பாடு செய்துள்ளனர்.
மீன்பிடிக்க விதிக்கப்பட்ட நேரக் கட்டுப்பாட்டின் விளைவாக தாங்கள்
பெரும் சிரமங்களை அனுபவித்துவருவதாக இந்தப் பிரதேச மீனவர்கள் கவலை தெரிவித்துவருகின்றனர்.
தங்கள் நாளாந்த வாழ்க்கையினைக்கூட நடத்த முடியாது துன்பம் அடைவதாகவும் இவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
குறிப்பாக தற்போது விதிக்கப்பட்ட மீன்பிடிப்பதற்கான நேரக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுதாங்கள் சுதந்திரமாக மீன் பிடிக்க அனுமதிக்கப்பட வேண்டும் எனவும் இவர்கள் முதலமைச்சரைக் கோரியுள்ளனர்.
சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்துப் பேசி இதற்கான
தீர்வினைக் காண்பதாக முதலமைச்சர் இவர்களுக்கு
உறுதியளித்துள்ளார்.