அது ‘அந்த’ டார்ச்சர்-நயனதாரா புது குண்டு!
ஐ.பி.எல்லின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகிகள் சிலரது ‘தனிப்பட்ட எதிர்பார்ப்புகளுக்கேற்ப’ நடந்து கொள்ள நான் மறுத்து விட்டதாலேயே என்னை டிஸ்மிஸ் செய்து அசிங்கப்படுத்த முயற்சிக்கின்றனர் என நயனதாரா பகீர் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தூதர்களாக முன்னணி நட்சத்திரங்கள் விஜய் மற்றும் நயனதாரா நியமிக்கப்பட்டனர். இதற்காக விஜய்க்கு ரூ.1 கோடியும், நயனதாராவுக்கு ரூ.40 லட்சமும் சம்பளமாக வழங்க இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் ஒப்பந்தம் போட்டது. இதில் நயனதாராவுக்கு ரூ.20 லட்சம் அட்வான்ஸாக வழங்கியிருந்தனர்.
ஆரம்பத்தில் அணியை அறிமுகப்படுத்தும் நிகழ்சிகளில் பங்கேற்ற நயனதாரா, பின்னர் ரஜினியின் குசேலன் ஷூட்டிங்குக்காக ஹைதராபாத் சென்றுவிட்டார். இடைவிடாத படப்பிடிப்பு காரணமாக படப்பிடிப்புத் தளத்திலேயே மயங்கி விழுந்தார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அதற்கு அடுத்த நாளே சென்னையில் அவர் தூதராக இருந்த சென்னை அணி பங்கேற்கும் மேட்ச். ஒப்பந்தப்படி இந்த மேட்சின்போது, வீரர்களை உற்சாகப்படுத்தவும், ரசிகர்களை உற்சாகப்படுத்தவும் தூதரான நயனதாரா வந்திருக்க வேண்டும். ஆனால் விஜய் மட்டும் வந்து தனியாகக் கையாட்டிக் கொண்டிருந்தார். உடல்நிலையைக் காரணம் காட்டி நயனதாரா வரவில்லை.
அடுத்த நாளே அவரை தூதர் பொறுப்பிலிருந்து நீக்கிவிட்டதாக இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவன பங்குதாரரும், ஏவி.எம்.பாலசுப்பிரமணியனின் மகனுமான குருநாத் மெய்யப்பன் அதிரடியாக அறிவித்தார். நயனதாரா தங்களை ஏமாற்றிவிட்டதாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.
இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் நயனதாராவுக்கு முன்பணமாகக் கொடுத்த ரூ.20 லட்சத்தில் 15 லட்சத்தைத் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்றும் அதற்காக அவருக்கு லீகல் நோட்டீஸ் அனுப்பப்படும் என்றும் அறிவித்திருந்தார். அதன்படி சில தினங்களுக்கு முன் நயனதாராவுக்கு லீகல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இந்நிலையில் தன்னை குருநாத் மெய்யப்பன் வேண்டுமென்றே அசிங்கப்படுத்துவதாக நயனதாரா குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது;
என்னை இந்த தூதர் பொறுப்பிலிருந்து நீக்கியது அவசர குடுக்கைத்தனமானது. முறையற்றது. ஒப்பந்தத்தை மீறி செயல்பட்டதற்காக நியாயமாக நான்தான் அவர்கள் மீது புகார் கொடுத்திருக்க வேண்டும்.
நியாயமான காரணங்களுக்காக, மேட்சின்போது வராமல் போவது இருபக்கமும் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிபந்தனைகளுள் ஒன்று. நான் மருத்துவமனையில் இரு தினங்கள் தங்கியதற்கான சான்றிதழ்கள் என்னிடம் உள்ளன. என்னை நீக்கியதற்கு இதுவல்ல காரணம். அது ‘வேறு பின்னணி’… என்கிறார் நயனதாரா.
அவர்கள் ‘என்ன எதிர்பார்த்தார்கள்’ என்பது ஒரு திரைப்பட நடிகையாக எனக்கும் தெரியும். ஆனால் நான் அப்படிப்பட்ட ஆள் இல்லை. இதற்கு மேலும் சட்டம், காண்ட்ராக்ட் என்ற பெயரில் என்னைத் தொந்தரவு செய்தால் நானே சட்டத்தின் உதவியை நாட வேண்டியிருக்கும் என்று எச்சரித்துள்ளாராம் நயன்.
கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதை இதுதானா?