புதுப்பிக்கப்பட்ட நாள்: 15 மே, 2008
கிழக்கு மாகாண முதல்வராகப் பதவியேற்றார் பிள்ளையான்
இலங்கையின் கிழக்கு மாகாண சபை முதல்வராக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்த பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் வெள்ளிக்கிழமை மாலை பதவியேற்றிருக்கிறார். நிதி, திட்டமிடல், சட்டம்-ஒழுங்கு, மாகாண சபை நிர்வாகம், புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் பல துறைகளுக்கு பிள்ளையான் பொறுப்பேற்றுள்ளார்.
வேறு மூன்று அமைச்சர்களும் இந்த வைபவத்தில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளனர்.
துரைரட்ணம் நவரத்தின ராஜா வரதன் விவசாயம், கிராமிய கைத்தொழில் அபிவிருத்தி மற்றும் மீன்பிடி அமைச்சராகியுள்ளார்.
கல்வி கலாச்சாரம், காணி அபிவிருத்தி மற்றும் போக்குவரத்து போன்ற துறைகளுக்கான அமைச்சராக விமலவீர திஸ்ஸநாயக பதவியேற்றார்.
மீரா சாஹிப் உதுமான் லெப்பே வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசனம் போன்ற துறைகளுக்கு பொறுப்பேற்றார்.
பிள்ளையான் தலைமையிலான அரசுக்கு ஆதரவளிக்க முஸ்லிம் உறுப்பினர்கள் மூவர் மறுப்பு
இதனிடையே, கிழக்கு மாகாணசபைக்கு பிள்ளையான் அவர்கள் முதல்வராக நியமிக்கப்படுவதற்கு, ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து வெற்றி பெற்ற மூன்று முஸ்லிம் உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள்.
எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, ஏ.எஸ்.ஜவாஹர் சாலிஹ் மற்றும் எம்.எஸ்.சுபேர் ஆகியோர் கிழக்கு மாகாண சபை ஆளுநருக்கு எழுதியுள்ள கடித்தத்தில் தாங்கள் மூவரும் தனியொரு குழுவாக செயல்படப்போவதாக குறிப்பிட்டுள்ளனர்.
தங்கள் குழுவுக்கு ஹிஸ்புல்லாவே செயலர் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
பிள்ளையான் தலைமையில் அமைகின்ற அரசுக்கு தங்களுடைய ஆதரவு கிடையாது என்று தமிழோசைக்கு வழங்கிய செவ்வியில் ஹிஸ்புல்லா குறிப்பிட்டார்.
சுழற்சி முறையில் தமிழ் முஸ்லிம் இனங்களிலிருந்து முதலமைச்சர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று கூறப்படுகின்ற யோசனையில் தனக்கு உடன்பாடு இருந்தாலும், அதிக பிரதிநிதிகளைப் பெற்றிருப்பது முஸ்லிம்கள் என்பதால் தன்னையே முதலில் முதல்வராக நியமிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து ஒருவர் முஸ்லிமாகும் நிலை வந்தால் அதனை தான் முழுமையாக ஆதரிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கை கடற்படையினரின் தாக்குதல்களில் இந்திய மீனவர்கள் சிக்கிக்கொள்ளும் விவகாரம்: வெளியுறவுத்துறையை அணுகி மீனவர்கள் முறையிட வேண்டுமென உச்சநீதிமன்றம் உத்தரவு
இந்தியா இலங்கைக்கு இடையிலான கடல்பரப்பில் மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படை தொடர்ந்து தாக்குதல் நடத்துவதாகவும், இதிலிருந்து தங்களுக்குப் பாதுகாப்பு அளிக்க இந்திய நடுவணரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியும், இந்திய உச்சநீதிமன்றத்தில் தமிழக கடலோர விசைப்படகு மீனவர் நல சங்கம் வெள்ளியன்று வழக்கு ஒன்றைத் தொடர்ந்துள்ளது.
அது தொடர்பாக உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவில் மீனவர்கள் முதலில் இந்திய வெளியுறவுத் துறையிடம் இவ்விவகாரத்தை முறையிட்டு நடவடிக்கை கோரவேண்டும் என்று கூறியுள்ளது.
நீதிமன்றத்தில் வைக்கப்பட்ட கோரிக்கை குறித்தும், உச்சநீதிமன்ற உத்தரவு குறித்தும், தமிழக கடலோர விசைப்படகு மீனவர் நல சங்கத்தின் பொதுச் செயலர் போஸ் தமிழோசைக்கு வழங்கிய செவ்வியை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.
கொழும்பு தற்கொலைத் தாக்குதலில் 9 பேர் பலி
இலங்கையின் தலைநகர் கொழும்பில் இன்று நடந்த தற்கொலைக் குண்டுத்தாக்குதல் ஒன்றில், குறைந்தது 8 பொலிஸ்காரர்களும், இரண்டு பொதுமக்களும், தற்கொலையாளியும் உட்பட 11 பேர் கொல்லப்பட்டதாக இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நகரின் சன சந்தடி மிக்க வணிகப் பகுதியில், பொலிஸாரின் பஸ் ஒன்றுடன், தற்கொலையாளி தனது மோட்டார் சைக்கிளை மோதி வெடிக்கவைத்ததாக, இராணுவத்தின் சார்பில் பேசவல்ல ஒருவர் தெரிவித்துள்ளார்.
பொலிஸார் உட்பட 90 க்கும் அதிகாமனோர் இதில் காயமடைந்ததாக, வைத்தியசாலை மற்றும் பொலிஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.
விடுதலைப்புலிகளால் நடத்தப்பட்ட கோழைத்தனமான தாக்குதல் என்று கூறி ஜனதிபதி மஹிந்த ராஜபக்ஷ இதனைக் கண்டித்துள்ளார்.
இது குறித்து விடுதலைப்புலிகள் தரப்பில் இருந்து உடனடியாக கருத்துக்கள் எதுவும் வெளிவரவில்லை.