அம்பாறையில் இரு போலீசார் கொலை
![]() |
![]() |
அம்பாறை நகர் |
இலங்கையின் கிழக்கே அம்பாறை மாவட்டம் கல்முனை நகரப் பகுதியில் இன்று காலை இரண்டு பொலிஸ்காரர்கள், அடையாளம் தெரியாத ஆட்களினால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்கள்.
சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் இவர்கள் இருவரும், கல்முனை நீதிமன்றத்துக்கு கடமையின் நிமித்தம் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த வேளையில், தரவை பிள்ளையார் கோயிலுக்கு அருகாமையில், மற்றுமொரு மோட்டார் சைக்கிளில் வந்த துப்பாக்கி தாரிகளினால் சுடப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பில் விடுதலைப்புலிகள் மீதே பொலிஸார் தமது சந்தேகத்தை வெளிப்படுத்தியுள்ளனர். கிழக்கு மாகாண சபைத் தேர்தலுக்குப் பின்னர், அதாவது கடந்த 40 நாட்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 7 பேரும், அம்பாறை மாவட்டத்தில் இரண்டு பேருமாக மொத்தம் 9 பொலிஸார் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே, திருகோணமலை மாவட்டம், மூதூர் மணற்சேனை என்னும் இடத்தில், விடுதலைப்புலிகள் அமைப்பின் உளவுப் பிரிவைச் சேர்ந்த ஒருவரைத் தாம் சுட்டுக்கொன்றதாக இலங்கை பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.
அந்தப்பகுதியில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டை ஒன்றின்போது, கொல்லப்பட்டவர், விடுதலைப்புலிகளின் திருகோணமலை மாவட்டத்துக்கான தென்பிராந்திய புலனாய்வுப் பிரிவுத் தலைவரான, தங்கன் என்று அழைக்கப்படும் சௌந்திரராஜன் என்று இலங்கை பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.