தென்னாப்பிரிக்காவில் குடியேற்றக்காரர்கள் மீதான தாக்குதல்கள் நீடிக்கின்றன
![]() |
![]() |
வீதியில் கிடக்கும் சடலத்தை தூக்கும் பொலிஸ்காரர் |
தென்னாப்பிரிக்காவில் குடியேறி சமூகத்தினருக்கு எதிரான தாக்குதல்கள் நீடித்துவருகின்ற நிலையில் அந்நாட்டில் வாழும் ஆயிரக்கணக்கான வெளிநாட்டவர் காவல் நிலையங்களிலும், தேவாலயங்களிலும் தஞ்சம் அடைந்துள்ளனர்.
ஒரு வாரத்துக்கு முன்பு ஆரம்பித்த இந்த வன்முறையில் இதுவரையில் குறைந்தது 20 பேர் கொல்லப்பட்டிருப்பதாக பொலிசார் கூறுகின்றனர்.
இந்தத் தாக்குதல்கள் மற்ற இடங்களுக்கும் பரவுகின்ற ஆபத்து தற்போது ஏற்பட்டிருப்பதாக தென்னாப்பிரிக்க செஞ்சிலுவைச் சங்க தலைவர் தெரிவித்துள்ளார்.
தென்னாப்பிரிக்க மக்களுக்கு கிடைக்கக்கூடிய வேலைவாய்ப்புகளை வெளிநாட்டவர்கள் தட்டிப்பறிக்கிறார்கள் என்ற எரிச்சலுணர்வினால் இந்த வன்முறை தூண்டப்பட்டுள்ளது.
சுமார் ஆறாயிரம் பேர் தங்களது வீடுகளை விட்டு வெளியேறும் நிலை உருவாகியிருப்பதாக எல்லைகளற்ற மருத்துவர்கள் என்ற தொண்டு நிறுவனம் கூறுகிறது.
புதுப்பிக்கப்பட்ட நாள்: 19 மே, 2008
தென்னாப்பிரிக்காவில் குடியேற்றக்காரர்களுக்கு எதிராக வன்முறை
![]() |
![]() |
தென்னாப்பரிக்க காவல்துறையினர் |
தென்னாப்பிரிக்கத் தலைநகர் ஜோஹன்னஸ்பர்கின் ஏழ்மையான பகுதிகளில் ஆப்பிரிக்க குடியேற்றக்காரர்களுக்கு எதிராக அலையலையாக நடத்தப்பட்ட தாக்குதல்கள் தற்போது நகரின் மற்ற இடங்களுக்கும் பரவியுள்ளது.
கிளீவ்லேண்ட் என்ற ஒரு புறநகர்ப் பகுதியில் நேற்றிரவு நடந்த கலவரத்தில் குறைந்தபட்சம் ஐந்து பேர் அடித்தோ அல்லது உயிருடன் எரித்தோ கொல்லப்பட்டுள்ளார்கள். ஐம்பதுக்கும் அதிகமானவர்கள் கத்திக்குத்து மற்றும் துப்பாக்கி குண்டுக் காயங்களுடன் மருத்துவமனைகளுக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்.
பெரும்பாலும் ஜிம்பாப்வே குடியேற்றக்காரர்களை இலக்குவைத்து ஒரு வார காலமாக நடந்துள்ள இந்தத் தாக்குதல்கள் தென்னாப்பிரிக்காவை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
இனவெறி காலத்தில் நடந்த வன்முறையோடு இதனை ஒப்பிட்டும் சில தலைவர்கள் கருத்துவெளியிட்டுள்ளனர்.
தென்னாபிரிக்காவில் குடியேறியவர்களுக்கு எதிரான வன்செயல்கள்
![]() |
![]() |
பலர் கைது செய்யப்பட்டுள்ளனர் |
தென்னாப்பிரிக்காவில் வெளிநாட்டிலிருந்து வந்து அங்கு குடியேறியவர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. தற்போது வன்செயல்கள் ஜோஹனன்ஸ்பேர்க் நகருக்கு அண்மித்த பகுதிகளுக்கும் பரவியுள்ளது.
இதன் காரணமாக 13,000 பேர் தங்களது வீடுகளிலிருந்து வெளியேறியுள்ளனர் என்றும், காவல் நிலையங்கள் மற்றும் உள்ளூராட்சி சபையின் அரங்குகள் ஆகியவற்றில் தஞ்சம் புகுந்துள்ளனர் எனவும் உள்ளூர் அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அந்தப் பகுதிகளுக்கு விஜயம் செய்த அரசாங்க அமைச்சர்கள் சரியான ஆவணங்கள் உள்ள எந்த ஒருவரும் தமது நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட மாட்டார்கள் எனத் தெரிவித்துள்ளனர்.
எனினும் சட்டங்கள் சரியான முறையில் கடுமையாக அமல் படுத்தப்படும் எனவும் அவர் கூறினார்.
பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு கூடுதல் காவல்துறையினரும் அவர்களுக்கு அனுசரணையாக ஹெலிகாப்டர்களும் அனுப்பப்பட்டுள்ளன.