Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Posts Tagged ‘Reporter’

Pa Raghavan’s Terrorist & Extremist Organizations series – Root of all Evils

Posted by Snapjudge மேல் ஏப்ரல் 17, 2008

மாயவலை #200
குமுதம் ரிப்போர்ட்டர்
பா ராகவன்
17.04.08 தொடர்கள்

இன்றைய தேதியில் உலகில் தீவிரமாக இயங்கிக்கொண்டிருக்கும் இயக்கங்கள் என்று 42 இயக்கங்களைச் சொல்லலாம். அவற்றுள் இருபத்தாறு இயக்கங்கள் மத்தியக் கிழக்கைச் சேர்ந்தவை. சிறியதும் பெரியதுமாக. வீரியம் மிக்கதும் வீரியம் குறைந்ததுமாக. எட்டு இடதுசாரி இயக்கங்கள். ஐந்து வலது சாரி இயக்கங்கள். ஒன்றிரண்டு உதிரிகள்.

இவை அனைத்தைக் குறித்தும் ஏராளமான புத்தகங்கள் இருக்கின்றன. இணையத்தில் பல கட்டுரைகள் இருக்கின்றன. அமெரிக்க உளவுத்துறையின் தளத்தில் ஒவ்வொன்றினைக் குறித்தும் நீண்ட அறிமுகமும் ஜாதகமும் ராகு கேது இடங்களும் இன்னபிறவும் பிரசுரிக்கப்பட்டிருக்கின்றன. சம்பந்தப்பட்ட இயக்கங்களில் சில தங்களுக்கென்று இணைய தளங்கள் அமைத்து தமது கொள்கை கோட்பாடுகளைப் பட்டியலிட்டிருக்கின்றன. அல் காயிதா போன்ற சூப்பர் ஸ்டார் இயக்கங்களுக்கென பல ரசிகர் மன்றங்களே இருக்கின்றன. வெளியார் நுழையமுடியாத றிணீssஷ்ஷீக்ஷீபீ றிக்ஷீஷீtமீநீtமீபீ தளங்களில் இவர்கள் பேசிக்கொள்கிறார்கள். விவாதம் செய்கிறார்கள். ஆவணங்களைப் பரிமாறிக்கொள்கிறார்கள்.

தீவிரவாதம் தனது அடுத்த பரிமாணத்தை இணையத்தில் பெற்றிருக்கிறது. ஒருசில மின்னஞ்சல் முயற்சிகளில் இன்றைக்கு எந்த ஓர் இயக்கத்தையும் அணுகிவிட முடியும். அதிர்ஷ்டம் இருந்தால் அவற்றின் முக்கியஸ்தர்களுடனேயே நேரடியாகப் பேசவும் முடியும். பல மாத தாடியுடன் அழுக்கு ஆடையில் காட்டுப்பகுதிகளில் துப்பாக்கி ஏந்தி அலைந்து திரியும் தீவிரவாதிகளின் காலம் மலையேறிவிட்டது. இது தொழில்நுட்ப உலகம். தீவிரவாதம் ஒரு தொழில்நுட்பமாகிவிட்டது. அந்த இயக்கங்களின் தலைவர்கள் கோட் சூட் அணிந்து லேப் டாப்பில் திட்டங்களை வகுக்கிறார்கள். சாட்டிலைட் டெலிபோனும் இண்டர்நெட்டும் இன்ன பிறவும் சர்வசாதாரணம்.

அரசாங்கத்தை நம்பிப் பலனில்லை என்ற முடிவுக்கு வந்த பெரும் தொழிலதிபர்கள், இவர்களுக்கு ஆண்டுத் தவணையாகப் பல கோடிக்கணக்கில் அள்ளிக் கொடுக்கிறார்கள். அரசு கொடுக்காத பாதுகாப்பை இந்த இயக்கங்கள் அளிக்கும் என்கிற நம்பிக்கை. மத்தியக் கிழக்கு தேசங்களில் செயல்படும் ஒவ்வோர் இயக்கத்துக்கும் குறைந்தது நூறு நிறுவனங்களாவது ஆண்டுதோறும் பெரிய அளவில் நன்கொடைகள் அளிக்கின்றன. மிரட்டிப் பெறப்படும் நன்கொடைகளல்ல இவை. தாமாகவே விருப்பப்பட்டு அளிக்கப்படுபவை. மிரட்டல் மூலமும் பெறப்படுவதுண்டு. ஆனால், இன்றைய தேதியில் அப்படிப் பெறப்படும் தொகை பெருமளவுக் குறைந்துவிட்டது.

தவிர்க்க முடியாத தொந்தரவுகளை ஏற்று வாழப் பழகும் அடிப்படை மனித குணாதிசயமன்றி இது வேறில்லை. ஒரு கட்டத்தில் இது தொந்தரவு என்பதே மறந்து அல்லது மரத்துப் போய்விடும் போலிருக்கிறது. மனிதன் பழக்கங்களின் அடிமை.

ஈ.டி.ஏ.வுக்கு ஐரோப்பிய தொழில் நிறுவனங்கள் நிதியளிக்கின்றன என்றால் ஹிஸ்புல்லாவுக்கு இரானிலும் லெபனானிலும் உள்ள நிறுவனங்கள் அள்ளிக்கொடுக்கின்றன. ஹமாஸ§க்கு அனைத்து மத்தியக் கிழக்கு தேசங்களிலும் உதவி புரியும் நிறுவனங்கள் உண்டு. அவர்களே வசூலில் ஈடுபட்டுக் குவித்ததும் உண்டு. அல் காயிதாவுக்கு உலகம் முழுதும் ஏஜெண்டுகள். உலகம் முழுதும் வருமான வாய்ப்புகள். ஜமா இஸ்லாமியாவுக்குத் தென்கிழக்கு தேசங்கள் அனைத்திலும் பணம் விளைகிறது. காஷ்மீர் இயக்கங்களுக்கு பாகிஸ்தான் உதவுகிறது. எல்லா இயக்கங்களுக்கும் ஏதாவது ஒரு கட்டத்தில் அமெரிக்கா உதவுகிறது.

தீவிரவாதம் என்பது அதிருப்தியில் பிறக்கும் குழந்தை. போதாமைகளின் விளைவு. வெறுப்பு மற்றும் விரக்தியின் விபரீத விளைவு. இல்லாமை, ஏழைமை, கல்விக்குறைபாடு, வேலைவாய்ப்பின்மை போன்ற எளிய காரணங்களுக்குள் இதனை வரையறுத்துவிட முடியாது.

அவையும் காரணங்களே. ஆனால் ஓரெல்லை வரை மட்டும்தான். அடிப்படையில் சுதந்திர தாகமும் வேகமும், அதற்காக உயிரையும் கொடுக்கத் துணியும் மனோநிலையும் கைவரப்பெற்றவர்கள்தான் போராளிகளாகிறார்கள். போராளியாக மலரும் பொழுதில் அற்ப வெற்றிகளிலும் எளிய சுகங்களிலும் மனம் பறிகொடுத்து, இலக்கு மாறியவர்கள் தீவிரவாதிகளாகத் தேங்கிப் போகிறார்கள்.

இந்த வகையில் ஒரு தாவூத் இப்ராஹிமையோ சார்ல்ஸ் சோப்ராஜையோ நம்மால் தீவிரவாதி என்றுகூடச் சொல்ல முடியாது. அவர்கள் வெறும் கிரிமினல்கள்.

இந்தத் தொடரில் மேற்சொன்ன நாற்பத்திரண்டு இயக்கங்களில் அதி முக்கியமாக கவனித்தாக வேண்டிய சில இயக்கங்களைப் பற்றி விரிவாகப் பார்த்திருக்கிறோம். இந்த இயக்கங்கள் ஒன்றுக்கு ஒன்று எவ்வாறு தொடர்பு கொண்டிருக்கின்றன, எப்படி இயங்குகின்றன, என்ன லட்சியத்தை முன்வைத்துத் தமது செயல்பாடுகளை வகுத்துக்கொண்டிருக்கின்றன என்பதையெல்லாம் கண்டோம். ஒவ்வோர் இயக்கத்தின் செயல்பாட்டுக்கும் பின்னால் இருந்து இயக்குகின்ற அந்தந்த தேசங்களின் அரசியல் சூழலையும் பார்த்தோம்.

என்ன புரிந்துகொண்டோம்?

ஸ்திரமற்ற அரசியல் சூழலும் அச்சுறுத்தல்களும் மேலாதிக்கமும் புறக்கணிப்பும் அதன் விளைவான துக்கமும் அரசாங்கங்களுக்கு எதிராக மக்களை ஆயுதமேந்தச் செய்கின்றன. ஒரு மறுமலர்ச்சியை உத்தேசித்தே பெரும்பாலான போராளி இயக்கங்களும் தீவிரவாத அமைப்புகளும் தமது பயணத்தைத் தொடங்குகின்றன.

வசதி மற்றும் வாய்ப்புகளைப் பொறுத்து அவர்களுடைய லட்சியம் நிறைவேறுவதும் தோல்வியுறுவதும் அமைகிறது. சமயத்தில் சில புத்திசாலித்தனமான முடிவுகளும்.

தொண்ணூறுகளில் பாலஸ்தீன விடுதலை இயக்கத் தலைவர் யாசர் அராஃபத் ஆயுதங்களுக்கு ஓய்வு கொடுத்து கொஞ்சம் பேசிப்பார்க்கலாம் என்று முடிவு செய்திராவிட்டால், பி.எல்.ஓ.வும் ஹமாஸ§ம் பிறகு ஆட்சி அதிகாரத்தின் வாசலுக்கு வந்து சேர்ந்திருக்க முடியாது என்பதை இங்கே நினைவுகூரலாம். அராஃபத்தின்மீது ஆயிரம் விமர்சனங்கள் வைக்கப்பட்டாலும் அவரது அந்த முடிவு செயல்படுத்தப்படாது போயிருந்தால், இன்றைக்குவரை பாலஸ்தீனில் முஸ்லிம்கள் தீராப்பிரச்னையுடன்தான் காலம் தள்ள வேண்டியிருந்திருக்கும்.

இப்போது பிரச்னையில்லை என்பதல்ல விஷயம். முன்னளவுக்கு அதன் தீவிரம் இல்லை என்பதுதான் கவனிக்கப்படவேண்டியது.

யோசித்துப் பார்த்தால், அல் காயிதாவுக்கு மட்டும்தான் ஒரு குறிப்பிட்ட தேசம் என்றில்லாமல் உலகு தழுவிய பிரச்னையின்பால் அக்கறையும் ஆர்வமும் இருக்கிறது. மற்ற இயக்கங்களின் நோக்கம் எல்லாம் தத்தமது தேச எல்லையுடன் முடிவடைந்துவிடக்கூடியவை. பாலஸ்தீன் ஒரு சுதந்திர, தனி தேசமாக இஸ்ரேலின் இடையூறே இல்லாத தேசமாக ஆகிவிட்டால், பாலஸ்தீன் போராளி இயக்கங்களுக்கு அதன்பின் என்ன வேலை? தனி ஈழம் அமைந்துவிட்டால் எல்.டி.டி.ஈ. எதற்காகப் போராடவேண்டும்? பாஸ்க் தேசம் உருவாகிவிட்டால், ஈ.டி.ஏ.வின் பணி என்ன?

அல் காயிதாவையே கூட இந்தவகையில், மத்தியக் கிழக்கிலிருந்து அமெரிக்கா முற்றிலும் வெளியேறிவிட்டால் செயல்பட விஷயமில்லாத இயக்கமாகச் சொல்லிவிட முடியும். அல்லது சர்வதேச முஸ்லிம் மக்களுக்கு எதிராக அத்தேசத்தின் நடவடிக்கைகள் நிறுத்தப்படுமானால், அல் காயிதா செயல்பட என்ன அவசியம் இருக்கிறது?

தொன்னைக்கு நெய்யும் நெய்க்குத் தொன்னையும் ஆதாரம். மாயவலையின் முதல் கண்ணியைத் தேடிக்கொண்டிருப்பதைக் காட்டிலும் முழுக்கண்ணியையும் பிணைக்கும் ஆதாரப்புள்ளியை ஆராய்வதே சாலச்சிறந்தது.

ஒரு காலத்தில் வல்லரசு என்பது கையிலிருந்த பணத்தைக் கொண்டு தீர்மானிக்கப்பட்ட பதவியாக இருந்தது. பிறகு அதுவே, ஆயுத பலத்தின் அடிப்படையில் கணிக்கப்பட்டது. இன்றைக்குத் தொழிலும் வர்த்தகமும் ஆட்சியின் ஸ்திரத்தன்மையும் தேசத்தின் கட்டுக்கோப்பும் அதனைத் தீர்மானித்துக்கொண்டிருக்கின்றன. இந்தியாவுக்கும் சீனாவுக்கும் சர்வதேச அரங்கில் உள்ள கவனத்தையும் முக்கியத்துவத்தையும் நினைவு கூர்ந்து இதனைப் புரிந்துகொள்ளலாம். திபெத் விஷயத்தில் என்னதான் அதன் நியாயங்கள் உலகு முழுமைக்கும் புரிந்தாலும் சீனாவுக்கு எதிராக ஏன் யாரும் ஒருவார்த்தை பேச பயப்படுகிறார்கள்? யோசிக்கலாம். யோசிக்கத்தான் வேண்டும்.

நவீன உலகில் ஆயுதமேந்திப் போராடுபவர்களுக்கு நீதி கிடைப்பதற்கான வாய்ப்புகள் வெகு சொற்பம் என்பது உலகம் முழுதும் பல இடங்களில் அடிக்கடி நிரூபணமாகியபடியேதான் இருக்கிறது. இது பேச்சுவார்த்தைகளின் காலம். நல்லுறவுகளின் காலம். புரிந்துகொள்ளல் மற்றும் விட்டுக்கொடுத்தலின் காலம். வளர்ச்சிக்கு எதிரான எந்த ஒரு செயல்பாடும் எடுபடாது என்பதே நவீன யுகத்தின் தாரக மந்திரமாக இருந்துவருகிறது.

இதனை முழு விழிப்புணர்வுடன் புரிந்துகொள்ளவேண்டியது காலத்தின் கட்டாயமாகியிருக்கிறது. சண்டையிட்டுக்கொண்டு சோவியத் யூனியனிலிருந்து பிரிந்த தேசங்களையும் சண்டையிட்டுக்கொண்டிருந்த ஐரோப்பிய தேசங்கள் தமக்குள் பொதுவாக ஒரு நாணயத்தையே உருவாக்கிக்கொண்டு வாழ்வதையும் இங்கே ஒப்பிட்டுப் பார்க்கலாம். யார் வளர்கிறார்கள்? யார் தேங்குகிறார்கள்?

அந்தந்த தேசங்களின் சூழலும் பிரச்னையும் வேறு வேறு என்பதை மறுக்க முடியாது. ஆனால், ஒவ்வொரு காலத்துக்குமென்று ஆதாரமாகச் சில வாழ்வியல் சூத்திரங்கள் இயல்பாக அமைந்துவிடுகின்றன. புறக்கணிக்க முடியாத, புறக்கணிக்கக்கூடாத சூத்திரங்கள். அது மீறப்படும்போதுதான் பிரச்னைகள் பூதாகாரமாகிவிடுகின்றன. உலகில் போர்களும் தீவிரவாதச் செயல்பாடுகளும் தலையெடுக்கின்றன. அவற்றில் சிலர் குளிர் காய்கிறார்கள். அதைப் புரிந்துகொள்ளாமல் இயக்கங்கள் மேலும் மேலும் படுகுழியில் விழுகின்றன.

இதற்குமேல் பேச இதில் என்ன இருக்கிறது? முடித்துக் கொள்ளலாம்.

இருநூறு இதழ்களாக இதனை ஆர்வம் குறையாமல் வாசித்து, அவ்வப்போது கருத்துத் தெரிவித்து வந்திருக்கும் வாசகர்களுக்கு நன்றி கூறவேண்டிய தருணம் இது. உலகம் முழுவதிலுமிருந்து இந்தக் காலகட்டத்தில் எனக்கு வந்த கடிதங்களும் மின்னஞ்சல்களும் ஏராளம்.

ஒரு கட்டத்தில் சில வாசகர்களே தமக்குத் தெரிந்த தீவிரவாத இயக்கங்கள் குறித்தும் அவற்றின் செயல்பாடுகள் குறித்தும் நான் மறந்த காரணத்தால் விடுபட்ட செய்திகள், தகவல்கள் குறித்தும் எனக்கு எடுத்துச் சொல்லி உதவத் தொடங்கினார்கள். இந்த அனுபவம் மிகவும் புதிது. அனைவருக்கும் நன்றி. பெயர் குறிப்பிட்டு மாளாத நூற்றுக்கணக்கான முகமறியாத நண்பர்களின் உதவியின்றி இந்தத் தொடர் இத்தனை பெரிய அளவில் வளர்ந்து நிறைவடையச் சாத்தியமில்லை.

இத்தொடரில் இடம்பெற்ற மிக மிக முக்கியமான இரண்டு ஆவணங்கள் அல் காயிதாவின் பயிற்சிக் கையேடு மற்றும் தாலிபன்களின் சட்டப்புத்தகம் இரண்டையும் எனக்கு அனுப்பியவர் சவூதி அரேபியாவில் வசிக்கும் நண்பர் ஜாஹிர் ஹ§ஸைன்.

‘ஜெருசலேம் போஸ்ட்’ இதழின் செய்தியாளர்கள் இருவரும் ‘வாஷிங்டன் போஸ்ட்’ இதழில் பணிபுரியும் உதவியாசிரியர் ஒருவரும் (இவர்கள் யாவரும் வலைப்பதிவுகளின்மூலம் அறிமுகமானார்கள்) அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் அரசுகள் தொடர்பான பல விஷயங்களை விவாதித்துத் தெளிவுபெற உதவியாக இருந்தார்கள்.

அனைத்துக்கும் மேலாக, இத்தனை நீண்ட, சீரியஸான தொடரைப் பொறுமையுடன் வாசித்து அவ்வப்போது கருத்துச் சொல்லி, என்னை ஊக்குவித்த வாசகர்களுக்கு நன்றியைச் சொல்லவேண்டுமா என்ன? அது என்றுமிருப்பது.

Posted in Govt, Politics, Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , | Leave a Comment »